டைம் பத்திரிகையின் இன்னொரு லிஸ்ட். இந்தியாவிலிருந்து இந்திரா காந்தி, மதர் தெரசா இரண்டு பேர்.

ஆச்சரியப்படுத்திய நல்ல தேர்வுகள்:

  1. Silent Spring என்ற புத்தகத்தால் பசுமை இயக்கத்துக்கு (Green Movement) பெரிய உந்துதல் கொடுத்த ரேச்சல் கார்சன்
  2. கருத்தடை பெண்கள் உரிமை என்று போராடிய, கருத்தடை மாத்திரை கண்டுபிடிக்க உந்துதலாக இருந்த மார்கரெட் சாங்கர்
  3. புகழ் பெற்ற anthropologist மார்கரெட் மீட்
  4. பெண்களின் உடை அலங்காரத்தை மாற்றிய கோகோ சானல் (பெல்பாட்டங்களைப் படைத்தவர் இவர்தானாம். சானல் நம்பர் ஃ பைவ் இவர் உருவாக்கிய வாசனை திரவியம்தானாம்)

ஆச்சரியப்படுத்திய (இவர்களால் என்ன மாறிவிட்டது?) தேர்வுகள்:

  1. வாசனைத் திரவியங்களை உருவாக்கிய எஸ்டி லாடர்
  2. பாடகிகள் அரேதா ஃபிராங்க்ளின், மடோனா
  3. எழுத்தாளர் வர்ஜினியா வுல்ஃப் (நான் படித்ததில்லை)
  4. மார்த்தா ஸ்டூவர்ட் (வீட்டுப் பொருள்களை வியாபாரம் செய்பவர்)
  5. சமையல் கலை மாதிரி புத்தகம் எழுதிய ஜூலியா சைல்ட் (சமீபத்தில் வந்த ஜூல்ஸ் அண்ட் ஜூலியா படம் இவரை வைத்துதான்)

சம்பிரதாயத் தேர்வுகள்:

  1. இந்திரா காந்தி
  2. மதர் தெரசா
  3. முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர்
  4. முன்னாள் இஸ்ரேல் அதிபர் கோல்டா மேயர்
  5. முன்னாள் ஃபிலிப்பைன்ஸ் அதிபர் கோரஜான் அக்வினோ
  6. ஹில்லரி கிளிண்டன்
  7. தற்போதைய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்
  8. மா-சே-துங்கின் மனைவியும், சீனாவில் பல ஆயிரம் பேர் இறப்பதற்கு காரணமாக இருந்த “கலாச்சாரப் புரட்சியின்” சிற்பியும் ஆன ஜியாங் க்விங் (நிழல் தலைவர்)
  9. முன்னாள் அமெரிக்க அதிபர் ரூசவெல்டின் மனைவி எலியனார் ரூசவெல்ட் (நிழல் தலைவர்)
  10. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாண்ட்ரா டே ஓ’கானர்
  11. பஸ்ஸில் வெள்ளையருக்கான சீட்டை விட்டு எழுந்திருக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்து அமெரிக்க கறுப்பர்களின் சமூக நீதிப் போராட்டத்துக்கு ஒரு symbolic வடிவம் கொடுத்த ரோசா பார்க்ஸ்
  12. சமூக சேவைக்காக நோபல் பரிசு வென்ற ஜேன் ஆடம்ஸ்
  13. டிவி ஸ்டார் ஓப்ரா வின்ஃப்ரே
  14. விஞ்ஞானி மேரி க்யூரி

விட்டுப் போனவர்: பெண் உரிமைகளுக்கு போராடிய பத்திரிகையாளர் க்ளோரியா ஸ்டைனம். இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை.


எப்போதுமே சட்டம் வேலை செய்யாத இடங்களைப் பற்றி பெரிதாக கூக்குரல் இடுகிறோம். மாறுதலுக்காக சட்டம் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு கேஸ், நீதிபதி சின்ஹாவைப் பற்றி இந்த பதிவு.

இந்திரா காந்தி 71 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். அது பங்களாதேஷ் போர் முடிந்திருந்த காலம். அவர் வெற்றி பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஆனால் அந்த தேர்தலில் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ராஜ்நாராயன் அவர் மேல் ஒரு கேஸ் போட்டார். அந்த கேசும் 4 வருஷத்துக்குள் முடிந்துவிட்டது. விசாரித்தவர் ஜஸ்டிஸ் சின்ஹா. நாட்டின் பிரதமருக்கு எதிராக தைரியமாக தீர்ப்பளித்தார் சின்ஹா.

சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் அப்பீல் செய்து இந்திரா காந்தி வென்றார். ஆனால் அதற்குள் அவசர நிலை பிரகடனம் நடந்தது, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெயிலில், பிறகு தேர்தல், இந்திராவின் வீழ்ச்சி, என்று நாட்டின் சரித்திரமே மாறிவிட்டது.

ஜஸ்டிஸ் சின்ஹா இரண்டு வருஷத்துக்கு முன்தான் இறந்திருக்கிறார். யாரும் பெரிதாக கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார் – என் கடமையைத்தான் செய்தேன் என்று தமிழ் சினிமா கிளிஷே ஒன்றை உண்மையாக செய்தவர் அவர்.

அவரைப் பற்றி முன்னாள் அமைச்சர் சத்தியப் பிரகாஷ் மாளவியா இங்கே எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டி: சத்ய பிரகாஷ் மாளவியாவின் அஞ்சலி


இது தொடர் பதிவின் இறுதிப் பகுதி. அவரை சந்தித்த அனுபவம் பற்றி இங்கே; அவருடன் சிதம்பரம் கோவிலைப் பற்றி விவாதித்தது இங்கே; அவரது இன்றைய அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி இங்கே.

சுப்ரமணிய சாமி ஒரு சுவாரசியமான மனிதர். பொருளாதாரத்தில் நிபுணர். வக்கீலுக்குப் படித்தாரோ என்னவோ, ஆனால் சட்டத்தைப் பற்றி நிறைய தெரிந்தவர். இந்திய அரசியலில் அவர் வெறும் fringe மனிதராக இருந்தாலும், அத்தனை பேரிடமும் inside track இருக்கிறது. எமர்ஜென்சி காலத்திலிருந்து ஒவ்வொரு பெரிய அரசியல் மாற்றத்தின் உள்குத்து வேலைகள் அத்தனையும் அவருக்கு தெரிந்திருக்கும். அவர் on the record, off the record ஆக சொல்லும் பல விஷயங்களை மனிதர் சும்மா சென்செஷனுக்காக ஏதோ சொல்கிறார் என்று புறம் தள்ளினாலும், இந்திய அரசியலில் அவர் சொல்வதை விட நம்பமுடியாத விஷயங்கள் நடந்திருக்கின்றன.

ஆனால் அவர் எமர்ஜென்சி காலத்தில் “சாகசம்” புரிந்திருக்கிறார். அப்போது அவர் எம்.பி. அவரை கைது செய்ய வாரன்ட் இருக்கிறது. மனிதர் நேராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பேசிவிட்டு விமானம் ஏறி அமேரிக்கா சென்றுவிட்டார்! எமர்ஜென்சியை எதிர்த்தவர்களில் முக்கியமான ஒருவர். ஜனதா கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் founder member-களில் ஒருவர். இப்போதும் அந்த ஜனதா கட்சி லெட்டர்பாடிலாவது இருக்கிறது. அதற்கு இவர்தான் தலைவர்.

மொரார்ஜி காலத்தில் இவருக்கு மந்திரி பதவி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. மொரார்ஜியோடு முதலில் ஏதோ தகராறு இருந்திருக்கிறது. அப்புறம் சரியாகிவிட்டது என்று சொல்கிறார். ஆனாலும் அந்த கசப்பில்தான் இவர் விரும்பியது கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. மொரார்ஜி நீ இன்னும் சின்னப் பையன், (அப்போது முப்பத்தாறு முப்பத்தேழு வயது இருக்கும்) துணை மந்திரி பதவி வேண்டுமானால் தருகிறேன் என்றாராம். அது இவருக்கு அவமானமாக இருந்திருக்கிறது, அதனால் மறுத்துவிட்டாராம்.

அப்புறம் இந்திரா அலை, ராஜீவ் அலை, வி.பி. சிங் அலை என்று அலை அடித்துக் கொண்டே இருந்தது. இவர் சில சமயம் எம்.பி.யாக ஜெயித்திருக்கிறார். இஸ்ரேலுடன் அதிகார பூர்வமான உறவு, இந்திய-சீன உறவை முன்னேற்றுதல் இரண்டும் இவருக்கு pet projects என்று தெரிகிறது. மானசரோவர் ஏரிக்கு இந்தியர்கள் யாத்திரை போக சீன அரசை சம்மதிக்க வைத்திருக்கிறார். வி.பி. சிங்கை சந்திரசேகர் கவிழ்த்ததற்கு இவர்தான் சூத்திரதாரியாம். சந்திரசேகர் காபினெட்டில் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது இவர்தான் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய மூல காரணமாம்.

அதற்கப்புறம் இந்திய அரசியலில் marginalise செய்யப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவோடு சேர்ந்து வாஜ்பேயி அரசை கவிழ்த்தது ஒன்றுதான் இந்த கால கட்டத்தில் இவரது அரசியல் “சாதனை.” இப்போது சட்டம் ஒன்றே ஆயுதம்.

அவரது ஜனதா கட்சி தளத்தில் அவர் காமராஜ், இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் முதல் பல தலைவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். Of course, எல்லா கட்டுரைகளிலும் இவருடைய திறமை, நல்ல மனது ஆகியவற்றை அந்த தலைவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். வாஜ்பேயியோடு மட்டும் எப்போதும் கொஞ்சம் கசப்பு உண்டு போலிருக்கிறது. இருந்தாலும் மிகவும் சுவாரசியமான கட்டுரைகள். முடிந்தால் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சுப்ரமணிய சாமியை சந்தித்தேன்
சுப்ரமணிய சாமியுடன் விவாதம்
சாமியின் அரசியல்

ஜனதா கட்சி தளத்தில் சுப்ரமணிய சாமியின் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகள்


சோ ராமசாமி

சோ ராமசாமி

இன்று தற்செயலாக நெருக்கடி நிலை பற்றி டோண்டு ராகவன் எழுதிய ஒரு பதிவை பார்த்தேன். சோ நெருக்கடி நிலையின்போது இந்திரா காந்திக்கு ஜால்ரா அடிக்கவில்லை என்று தெரியும். ஆனால் இவ்வளவு விவரங்கள் தெரியாது. அவர் எழுதியதிலிருந்து:

அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.

இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.

….

பத்திரிகை தணிக்கை முறை மிகவும் கடுமையாக்கப்பட்டது. சில காலம் வெளியிடப்படாமல் வைத்திருந்த துக்ளக்கை சோ அவர்கள் மறுபடி வெளியிட்டார். பத்திரிகை தணிக்கை அதிகாரிகளை நன்றாக ஏய்த்தார்.

….

1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்? 1976-ல் வந்திருக்க வேண்டிய பொது தேர்தலை இந்திரா காந்தி ஓராண்டுக்கு தள்ளி வைத்தார். இந்த அக்கிரமம் முன்னாலும் நடக்கவில்லை, அதற்கு பின்னாலும் தற்சமயம் வரை நடக்கவில்லை.

….

1977-ல் பத்திரிகை தணிக்கை முறை தேர்தலுக்கு முன்னோடியாக விலக்கப்பட்டது. அப்போது சோ அவர்கள் சீரணி அரங்கில் ஒரு மீட்டிங் வைத்தார். தணிக்கை முறை தமாஷ்கள் பலவற்றை அவர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவற்றை சோ அவர்கள் மேற்கோள் காட்ட, அது தணிக்கை அதிகாரியால் தடுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் நன்றாக நிலை கொண்டுள்ளதாக ஒரு இந்திரா காங்கிரஸ் தலைவர் உளறியதை சோ அவ்ர்கள் அப்படியே மாறுதலின்றி செய்தியாகப் போட இது ரொம்ப ஓவர், தேவையில்லாத கிண்டல் என்று தணிக்கை அதிகாரி நீக்கினார். அதை சோ அவர்கள் கூறியபோது மெரினா கடற்கரையே சிரிப்பலைகளில் மூழ்கியது. அப்போதுதான் மேலே கூறியபடி இந்திரா காந்தியை வெறுமனே பெயரிட்டு அழைத்ததையும் பிரதமர் என்று குறிப்பிடாததையும் கூறினார். இன்னொரு சிரிப்பலை.

ஒரு பத்திரிகையாளராக இந்த சமயத்தில்தான் சோ மிக அதிகமாக பிரகாசித்திருக்கிறார்.

தொடர்புடைய பிற பதிவுகள்:
சோ – ஒரு மதிப்பீடு
சோவை பற்றி நல்லதந்தி
முகமது பின் துக்ளக் – என் விமர்சனம்
முகமது பின் துக்ளக் – விகடன் விமர்சனம்


பிரபாகரன்

பிரபாகரன்

பிரபாகரனின் குறைகள் என்னவென்றுதான் பல நாளாக கத்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவர் நிறைகளே இல்லாத மனிதர் இல்லை. புலிகளின் நோக்கங்களும் தவறானவை இல்லை.

எண்பதுகளில் பிரபாகரன் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு சில ஆயிரம் பேர் கொண்ட படை இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். லாஜிஸ்டிக்சுக்கு தமிழக ஆதரவு இன்றியமையாததாக இருந்தது. எம்ஜிஆரும், கலைஞரும், ராவும், இந்திராவும் ராஜீவும் அவர்கள் பின்னால் நின்றிராவிட்டால் கஷ்டம்தான்.

ஒரு பக்கம் பலம் வாய்ந்த ஒரு எதிரி; இன்னொரு பக்கம் தான் சொன்னபடி நடக்க வேண்டும் என்று மிரட்டும் அதிக பலம் வாய்ந்த “நண்பன்”. நண்பனின் ஆதரவுக்காக தன்னை போன்ற பலரிடம் பலத்த போட்டி. சுய பலம் கம்மி. பலம் என்று ஒன்றுதான் இருந்தது – தன் குறிக்கோளை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத தன்மை. ஒரு நல்ல தலைவனுக்கு அது அவசியம்.

அந்த கனவுக்கு பின்னால் பல இலங்கை தமிழர்கள் வந்தார்கள். அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். தான் பட்ட காயங்களுக்கு அவர் மட்டுமே பழி வாங்க முடியும் என்று நினைத்தார்கள். அவர் சொன்னால் உயிரையும் கொடுக்க சித்தமாக இருந்தார்கள் – கொடுத்தார்கள்.

இலங்கை தமிழர்கள் மட்டும் இல்லை, இந்தியத் தமிழர்களுக்கும் அவர் ஹீரோவாகத்தான் இருந்தார். ராஜீவ் கொலை வரைக்கும அவரை எதிர்த்து கருத்து சொல்லும் தமிழர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து சோ ராமசாமி ஒருவர்தான் அவரை எதிர்த்து கூப்பாடு போட்டார். சோவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மிக குறைவு. யாரும் இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எம்ஜிஆரின் ஆதரவு அவருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது. கலைஞருக்கு நிச்சயமாக எம்ஜிஆர் ஆதரிக்கும் மனிதர் என்பது மனக்குறையாக இருந்திருக்கும் – ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ள முடியாத நிலை. அவரது வழக்கமான வாய்ச்சொல் வீரம் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டது. IPKF-ஐ எதிர்த்து ஸ்டேட்மென்ட் எல்லாம் விட்டார். பாண்டி பஜாரில் துப்பாக்கியால் சுட்டால் என்ன, பத்மநாபா செத்தால் என்ன, பிரபாகரனின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டேதான் போனது. (பகத் சிங் அபுல் கலாம் ஆசாத்தை கொன்றால் அவரை கொண்டாடுவோமா என்ன?) அவரை விட்டால் ஈழத் தமிழர்களுக்கு வேறு கதி இல்லை என்ற இமேஜ் வளர்ந்துகொண்டே போனது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

அவருக்கு இந்தியாவிலிருந்து ஏற்பட்ட முதல் பின்னடைவு ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம். அது நல்ல விஷயம் என்பது என் உறுதியான கருத்து. அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே நிறைவேறி இருந்தால் இன்றைக்கு அளவுக்கு விஷயம் மோசமாக போயிருக்காது. ஆனால் இலங்கை தமிழர்களும் புலிகளும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று காரண்டி கொடுக்க ராஜீவ் யார்? இந்தியா யார்? ராஜீவுக்கு நோபல் பரிசு கனவு இருந்திருக்க வேண்டும், ஜெயவர்த்தனாவுக்கு குஷியாக இருந்திருக்கும். அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்த்தன மாட்டிவிட்டுவிட்டார்.

கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால், தன் ஈகோவை மறந்து செயல்பட்டிருந்தால், பிரபாகரன்தான் இலங்கைக்கு உட்பட்ட ஈழத்தின் பெரும் தலைவரகா வந்திருப்பார். ஆனால் அப்போதே பிரபாகரனுக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு, இதெல்லாம் நடக்காத விஷயம் என்று உறுதியாக தோன்றி இருக்க வேண்டும். அவரது சிந்தனை தவறு என்று சொல்வதற்கில்லை, மிக ஆழமான காயங்களை சுமந்தவர் அவர். ஒப்பந்தம் நடக்க ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் பெருமூச்சு விடலாம், ஆனால் காயங்களை நான் சுமக்கவில்லை. நெருப்பு எப்படி சுடும் என்று தீக்குளித்தவனுக்குத்தான் தெரியும். சிங்களர்களை நம்ப முடியாது என்று பிரபாகரன் நினைத்திருந்தால் அது ஆச்சரியம் இல்லை. ஒப்பந்தத்தால் இந்தியா பட்ட நஷ்டங்களுக்கு நான் ராஜீவைதான் பொறுப்பாக்குவேன், பிரபாகரனை அல்ல.

சக போராளிகளை கொல்வது பாட்டுக்கு நடந்துகொண்டேதான் இருந்தது. சிரிசபாரத்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம் என்று ஒரு பெரிய லிஸ்ட். அதை பற்றி எதிர்கருத்து தெரிவித்தவர்கள் மிக கம்மி. அந்த தைரியத்தில்தானோ என்னவோ, ராஜீவை கொல்ல ஆள் அனுப்பினார். அது பெரிய முட்டாள்தனம். கொஞ்சம் கூட அறிவில்லாத செயல். இந்திய தமிழர்களின் ஆதரவு ஒரே நாளில் முக்கால்வாசி கரைந்துவிட்டது. ஒரு தாக்குதலால் தன் இயக்கத்துக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கத் தெரிய வேண்டும். அது தெரியாத பிடிவாதக்காரரால் இயக்கத்தை காப்பாற்றுவது கஷ்டம்தான்.

ஆனால் காப்பாற்றினார். பெரும் அளவுக்கு இந்திய ஆதரவு கரைந்துபோனாலும், தாக்கு பிடித்தார். இலங்கை அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். தனி ஈழம் என்று ஒரு நாடு உருவாகவில்லையே தவிர significant நிலப் பரப்பை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். ஆனால் சர்வ தேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டார். புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவில், பணத்தில், இன்னும் தமிழ் நாட்டில் எஞ்சி இருந்த ஆதரவில் சமாளித்தார்.

அவர் மீது எனக்கு பலமான எதிர்ப்பு கருத்துகள் இருக்கின்றன. ஆனால் அவர் மறைவு ஈழத்தமிழர்களுக்கு நஷ்டம் என்றே கருதுகிறேன். அவர் உயிரோடு இருக்க மாட்டாரா என்ற நப்பாசை எனக்கு கொஞ்சம் இருந்தது, ஆனால் இப்போது புலிகளே சொல்லிவிட்டார்கள்.

பெரும் லட்சிய வேகம் உள்ளவர், வீரர், கொண்ட கொள்கையை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர். ஆனால் எதிர்ப்பு காட்டும் ஒவ்வொருவரையும் வஞ்சம் வைத்து அழிக்கும் தன்மையும், சக போராளிகளை, சொந்த சகோதரர்களை அதிகாரத்துக்காக கொல்லும் கயமையும், எங்கேயோ இருக்க வேண்டிய ஒரு தலைவனை வீழ்த்திவிட்டன. அவர் சைமன் பொலிவர் போன்று, கரிபால்டி போன்று சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவர். இப்படி முடிந்தது பெரிய துரதிருஷ்டம். ஆனால் எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும், பல ஈழத் தமிழர்களுக்கு இழப்பு ஏற்படுத்தி இருந்தாலும், அவர் ஈழத் தமிழர்களுக்கு ஹீரோதான். ஈழத் தமிழர்களுக்காக உண்மையிலேயே கடைசி வரை போராடியவர் என்பதை என்னை போன்ற எதிர்ப்பாளர்களும் மறுக்க முடியாது.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு


ரதி என்ற நண்பரோடு இணைய தளத்தில் சில சண்டைகள் போட்டிருக்கிறேன். ரதி புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர். புலிகளின் தீவிர ஆதரவாளர். அவரது வாழ்க்கை அனுபவங்களை பற்றி அவர் எதார்த்தமாக சொன்ன சில விஷயங்களை வைத்து பார்க்கும்போது அவரது அந்த தேர்வு புரிந்து கொள்ளக்கூடியதுதான். நானோ புலம் பெயர்ந்த தமிழன். ஒரு 25 வருஷங்களாக புலிகள், குறிப்பாக பிரபாகரன் ஃபாசிஸ்ட் என்று நினைப்பவன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதும், வேறு வேறு perspective-கள் இருப்பதும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தானே! ஆனால் எங்கள் இருவருக்கும் ஒரு விஷயத்தில் முழு உடன்பாடு இருக்கிறது – இப்போது இலங்கையில் நடப்பது genocide, இந்தியா இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது.

ஆனால் ரதி நான் மதிக்கும் இணைய நண்பர்களில் ஒருவர். இணைய தளத்தில் பதிவு எழுதுவதின் பெரிய பலனே ரதி, சேதுராமன், டோண்டு, சாரதா, நல்லதந்தி, சுபாஷ், முரளி, சூர்யா, அரை டிக்கெட், போன்ற பலரோடு ஏற்பட்ட பழக்கம்தான்.

காங்கிரஸ்தான் இலங்கை தமிழர்களை பொறுத்த வரை நல்ல சாய்ஸ் என்ற பதிவு ரதிக்கு உடன்பாடு இல்லாதது. அவரை நான் கேட்டிருந்தேன் – ஒரு இலங்கைத் தமிழர் என்ற முறையில் யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள் என்று. அவர் அளித்த பதில் மிக அருமையாக இருந்தது. அதை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு ரதி!

//தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//

அரசியல், கட்சிகள், அரசியல் தலைவர்கள் என்ற கருத்தியல் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் உள்ளது என்பது என் கருத்து. அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும், வாக்காளர்களும் தொண்டர்களும் பகதர்களாக மட்டும் இருப்பதால் அரசியல்வாதிகள் அவர்களை பகடைக்காய்களாக வைத்து பரமபதம் ஆடுகிறார்கள். ஆட்சியில் உட்கார்ந்தவுடன் தங்கள் சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். பக்தர்களை மறந்துவிடுகிறார்கள், அடுத்த தேர்தல் வரும்வரை. இதற்கு இந்தியாவும்/தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வோடும் கலந்துவிட்டது.

ஆனாலும், நான் எந்த இந்தியா/தமிழ்நாடு கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ அபிமானி கிடையாது. அது கூட எங்கள் ஈழப்பிரச்சனையை வைத்து இவர்கள் அரசியல் நடத்துவதால் தான். அதுபோக, தமிழ்நாட்டு தமிழர்களுக்காவது உண்மையாக இருக்கிறார்களா? அதுவுமில்லை.

தேசிய அளவில் இந்தியாவில் எந்த கட்சியாவது ஒட்டு மொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?பெரும்பாலும் சாதி அல்லது வேறு ஏதோ ஒரு விடயத்தை ஒவ்வொரு மாநிலமும் அதன் கட்சியும் முன்னிலைப்படுத்துகின்றன. மாநில அளவில் கட்சிக்களுக்கிடையில் குத்துச்சண்டை போடாத குறையாக ஆட்சி நடத்துகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்த எந்த கட்சியும் தேசிய அளவில் கிடையாது. இதில் நான்/நாங்கள் எந்த கட்சியை நம்புவது. அது தவிர, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்துக்காவது ஈழத்தமிழனில் அக்கறையுள்ளதா? தேசிய அளவில் எந்த கட்சியாவது ஈழத்தமிழன் பிரச்சனையை பேசுகிறதா?

ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதாவது மாற்றம் கொண்டுவந்தால் அல்லது அதற்கு எந்த கட்சியாவது ஆதரவளித்தால் அதன் பிறகு பார்க்கலாம். இன்னும் இந்திராவின் காலத்தில் உருவாக்கிய வெளிநாட்டுக்கொள்கையின் அடிப்படையிலேயே ஈழப்பிரச்சனையை அணுகினால் எந்த கட்சியையும் நாங்கள் எப்படி நம்புவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடிப் பெறவேண்டும் என்ற நிலைதான் எங்களுக்கு. இந்தியா எங்களுக்கு விடுதலையை பெற்றுதரும் என்று நம்ப ஈழத்தமிழன் முட்டாளும் அல்ல. இருந்தாலும், ஈழத்தமிழனின் இன‌ப்படுகொலைக்கு துணை போகாத, எங்கள் ஈழவிடுதலையை தங்கள் தேசிய நலனுக்காக நசுக்க நினைக்காத எந்த கட்சியும் எனக்கு சம்மதம். அப்படி ஒர் தேசிய அளவிலான கட்சி இந்தியாவில் உள்ளதா?

ரதி சொல்வது மாதிரி இந்திரா காலத்திலிருந்து நமது அணுகுமுறை மாறத்தான்வில்லை. இந்தியாவின் நலனுக்காக ஈழத் தமிழரை ஒரு pawn ஆக கருதும் மனநிலைதான் உள்ளது. இந்திரா போராளிகளை வைத்து இந்தியாவை தெற்கு ஆசிய வல்லரசாக ஆக்க நினைத்தார். ராஜீவ் அதை தொடர்ந்தார் – ஆனால் அகலக் கால் வைத்துவிட்டார். புலிகளின் சம்மதம் இல்லாமல் அவர் போட்ட ஒப்பந்தம் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தியது. (அதற்கு காரணம் புலிகளின் ஃபாசிஸ்ட் மனநிலை, புலிகளை அற்பமாக ராஜீவ் நினைத்தது) ராஜீவ் மரணத்துக்கு பிறகோ புலிகளை அடக்க எத்தனை தமிழர் செத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை இருக்கிறது.

ரதியோடு எனக்கு எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தபோதும் இந்த கருத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.


kamarajar
என் கண்களில் தமிழ் நாட்டின் தலை சிறந்த தலைவர் இவர்தான்.

உண்மையில் இது மிக ஆச்சரியமான விஷயம். அவர் மெத்தப் படித்தவர் இல்லை. தமிழில்தான் சுலபமாக பேச முடியும். (ஆங்கிலமும் ஹிந்தியும் பேச வராததால்தான் பிரதமர் பதவியை ஒதுக்கினார் என்று சிலர் சொல்கிறார்கள்.) பணக்காரர் இல்லை. கோவிலுக்குள் நுழைய முடியாத கீழ் ஜாதிக்காரர். (வைத்தியநாத ஐயர் மீனாட்சி கோவிலுக்குள் அழைத்து போனவர்களில் இவரும் இருந்தாரோ? இல்லை கக்கன் மட்டும்தானா? இவர் இல்லை என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் கக்கன் உள்ளிட்ட ஐந்து தலித்களும், ஷண்முக நாடாரும் இருந்தார்களாம். அப்போது தலித்களுக்கும், நாடார்களுக்கும் மீனாக்ஷி கோவிலில் நுழைய அனுமதி இல்லை. இது பற்றிய மேல் விவரங்களை இங்கே காணலாம்.) சிறந்த பேச்சாளரோ, எழுத்தாளரோ இல்லை. எம்ஜிஆர், அண்ணா, ஏன், கலைஞர் போலக் கூட மக்களை கவரக் கூடிய எதுவும் அவரிடம் இல்லை. அவரை விட சிஎஸ், ஆர்வி போன்றவர்கள் சிறந்த நிர்வாகிகள். அவரே பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமையாக மாறினாலும், காங்கிரஸ் தலைமையிடம் – காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்றவர்களிடம் – அவருக்கு ராஜாஜி மாதிரி செல்வாக்கு எல்லாம் இருந்ததில்லை. அவர் பெரியார் மாதிரி புரட்சி எதுவும் செய்ய முயசிக்கவில்லை.

அவருடைய ரகசியம் இதுதான் – மக்களுக்கு/கட்சிக்கு எது நல்லது, அதை எப்படி செய்வது என்று ஓயாமல் சிந்திக்கும் குணம். அந்த சிந்தனைகளை செயல்படுத்தும்போது வரக்கூடிய இடையூறுகளை தாண்டியே தீர வேண்டும் என்ற வெறி.

அவர் மந்திரிகளுக்கு சொன்ன அறிவுரை இதுதானாம் – “பிரச்சினைகளிடமிருந்து ஓடக் கூடாது. பிரச்சினையை சமாளிக்க ஒரு சின்ன முயற்சியாவது எடுங்கள். மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்”. அற்புதமான அறிவுரை. அவரும் அதை கடைப்பிடித்திருக்கிறார்.

இதனால் அவர் குறைகள் இல்லாத மாமனிதர் என்று அர்த்தமில்லை. ராஜாஜியை அமுக்க அவர் 42-54 கால கட்டத்தில் செய்த முயற்சிகள், அவரோடு போட்ட சண்டைகள் அவருக்கு பெருமை சேர்ப்பதில்லை. ராஜாஜிக்கும் பெருமை சேர்ப்பதில்லை என்பதும் உண்மைதான். அவர் கர்வி இல்லை, ஆனால் தொண்டர்களை அணுக விட்டதில்லை. ஏதாவது உதவி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான். சோவே கூட அவர் மற்ற தமிழக் தலைவர்களை வளரவிடவில்லை, தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா ராஜினாமா செய்து பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு முதலமைச்சரின் உள்ளக் குமுறல் என்று குமுதத்திலோ விகடனிலோ ஒரு கட்டுரை வந்தது. எப்படி தலைவர் தன்னை முழுமையாக நம்பவில்லை, சுதந்திரமாக இயங்க விடவில்லை, தலைவர் ஒரு சூப்பர் முதலமைச்சராக நடந்து கொள்கிறார் என்று முதல்வர் வருத்தப்படுகிறார். அது பக்தவத்சலம் காமராஜை பற்றி வருத்தப்பட்டது, பன்னீர்செல்வம் ஜெவை பற்றி அல்ல. தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் செய்தது தவறு. அவர் குறைகள் உள்ள மாமனிதர்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு போயிருக்கிறார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு ஸத்யாக்ரஹத்தில் பங்கேற்றிருக்கிறார். சத்யமூர்த்தியின் அணுக்க சீடர். கொஞ்ச நாள் அவர் தமிழ் நாடு காங்கிரஸில் தலைவராகவும் காமராஜ் செயலாராகவும் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர் தலைவர், அவர் செயலாளர். 🙂 சத்தியமூர்த்தியின் மறைவுக்கு பின்னால், ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னால் இவர் தமிழ் நாட்டு காங்கிரஸின் ஜீவ நாடி ஆகிவிட்டார். அவரால் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வருவதற்கு கூட பல முட்டுக்கட்டைகள் போட முடிந்தது.

அவரது பலங்களில் அவருடைய எளிமையான பின்புலமும் ஒன்று. அவருடைய மதிய உணவுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் ராஜாஜிக்கும் ஒரே குறிக்கோள்தான். அரசியல் நிர்ணய சட்டத்தில் சொன்னபடி எல்லாருக்கும் கல்வி என்பதை விரைவாக நிறைவேற்றுவது. இரண்டு பேருக்கு ஒரே பிரச்சினைதான். கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறைவாக இருக்கிறது. ராஜாஜி கண்ட தீர்வு பகுதி நேரக் கல்வி. (திராவிட இயக்கத்தினர் குலக் கல்வி என்று அழைத்த இந்த திட்டத்தை பற்றி மேலும் விவரங்கள் இங்கே) பகுதி நேரக் கல்வி என்பது சிறந்த நிர்வாக முடிவு. அதனால் கல்வி அறிவு செலவு அதிகம் ஆகாமல் அதிகரித்திருக்கும். ஆனால் அது ஒரு bean counter’s logical, cold hearted தீர்வு. காமராஜ் கண்ட தீர்வில் செலவு அதிகம்தான். ஆனால் அந்த பணம் well spent என்று அவரது படிக்காத ஏழை மனதுக்கு மட்டும்தான் புரியும். ஜீனியஸ் என்றே சொல்லக் கூடிய ராஜாஜிக்கு அந்த தீர்வு எப்போதும் தோன்ற வாய்ப்பில்லை.

விவசாயம், மின்சாரம், தொழில் பேட்டிகள் அமைப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தினார். அரசு விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆர்வியும் இதை குறிப்பிட்டு சொல்கிறார்.

எதிரிகளையும் அணைத்து செல்லும் பக்குவம் அவரிடம் இருந்தது. முதல்வர் போட்டிக்கு அவரை எதிர்த்து போட்டி இட்ட சிஎஸ்தான் அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சிஎஸ், ஆர்வி, கக்கன், பக்தவத்சலம் போன்ற திறமைசாலிகளை அவர் அரவணைத்து சென்றார். அதே நேரத்தில் அவர் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை. மொரார்ஜியை அவர் அடக்கிய விதம் சூப்பர். கலைஞரால் கூட இப்படி செய்திருக்க முடியாது.

காமராஜ் திட்டம் எல்லாம் போட அவரால்தான் முடியும். பதவி ஆசை அவருக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்கு ராஜாஜி ஒரு வீக்னெஸ். அங்கே அவரது பெருந்தன்மை, நல்ல குணங்கள் வெளிப்படவில்லை. சத்தியமூர்த்திக்கு பதிலாக ராஜாஜியை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக காந்தி – முதல்வராக ஆக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு, ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொள்ளாமல் காங்கிரசை விட்டு விலகியதும் தீவிரம் அடைந்தது. 46-இல் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழையக் கூடாது என்று காமராஜ் பெரிதும் முயன்றார். கட்சி அவரது கண்ட்ரோலில் இருந்தாலும், ராஜாஜிக்கு கணிசமான ஆதரவு இருந்தது – மேலிடத்து சப்போர்ட்டும் இருந்தது. அதனால் ராஜாஜி காமராஜை மீறி உள்ளே நுழைந்தார். ராஜாஜி மத்திய அரசாங்கத்துக்கு போய்விட்டதால் சண்டை இன்னும் பெரிதாக வெடிக்கவில்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் சில உள்குத்து வேலைகள் செய்திருக்கிறார். காமராஜ் படத்தில் அவர் ஒரு விழாவில் ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதாக காட்டுகிறார்கள்.

தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் கோட்டை விட்டுவிட்டார். கேரளாவில் இருந்தாலென்ன, தமிழ் நாட்டில் இருந்தாலென்ன, இரண்டும் இந்தியாதானே என்று அவர் நினைத்திருக்க வேண்டும். பிராந்திய உணர்ச்சிகள் இவ்வளவு தீவிரமாக வளரும் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அவருடைய அலட்சியத்துக்கு தமிழர்கள் இன்றும் ஒரு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மிக பெரிய தோல்வி இந்திரா காந்திதான். அவர் தோளில் நின்று பிரதமரான இந்திரா அவரையே யார் என்று கேட்டது அவரை நிலை குலைய செய்திருக்க வேண்டும். அறுபதுகள் காங்கிரசுக்கு நல்லதாக இல்லை. சீனாவோடு சண்டை, ஹிந்தி எதிர்ப்பு, வேலை இல்லா திண்டாட்டம், பொதுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருந்த அதிருப்தி, சோஷலிசத்தின் குறைகள் வெளிப்பட ஆரம்பித்தது எல்லாம் அவரை புரட்டி போட்டுவிட்டன. Indira usurped his socialistic plank. ராஜ மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயம், என்றெல்லாம் ஆரம்பித்தது உண்மையான சோஷலிஸ்ட்டான அவரை வலது சாரி தலைவராக காட்டியது – அவருக்கு மிஞ்சிய கூட்டாளிகள் எல்லாம் வலது சாரி நிஜலிங்கப்பா, மொரார்ஜி, எஸ்.கே.பாட்டில், சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள்தான். A great irony.

முதல்வர் பதவியில் இருந்து விலகிய நாளிலிருந்து அவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல மத்தியிலும் மாநிலத்திலும் இயங்க முயன்றார். மத்தியில் வெற்றி பெற்றவர் மாநிலத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது மத்தியிலும் அவர் தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. 67-இல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஜெயித்திருந்தால் இந்திராவால் அவரை அவ்வளவு சுலபமாக உதறி இருக்க முடியாது. 71-இலோ பங்களாதேஷ் போர் இந்திராவுக்கு அமோக வெற்றி தந்தது. காமராஜ் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவர் ஒரு மாநில அளவு தலைவர் அவ்வளவுதான். அவ்வளவு பெரிய தலைவருக்கும் sell-by-date கடந்து விட்டது.

இன்று ஒரு காமராஜ் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. கம்யூனிசம், சோஷலிசம், காபிடலிசம், போன்ற இசங்களை விட நல்ல தலைவர்கள் ஏதோ ஒரு இசத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது. கன்சர்வேடிவ் ராஜாஜி, சோஷலிஸ்ட் காமராஜ் இருவருமே நல்ல முதல்வர்கள்தானே!

அவரைப் போன்ற ஒரு தலைவர் இந்தியாவின் வரப்பிரசாதம்.