இவர் 1500+ (சிறு) அணைகளை கட்டி இருக்கிறார், கிட்டத்தட்ட பனிரண்டாயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இவர் என்ன சூப்பர்மேனா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

இல்லை. ப்ரேம்ஜிபாய் படேல் உங்களையும் என்னையும் போலத்தான். பல வருஷங்களாக பணம், குடும்பம், வேலை, தொழில் என்று இருந்தவர்தான். ஆனால் அவர் உங்களையும் என்னையும் போல கனவு கண்டுகொண்டே இருக்கவில்லை; சே நாட்டில எல்லாம் மோசம்பா என்று அலுத்துக் கொள்வதோடு நிற்கவில்லை. அவர் அடி மனதில் ஒரு தீ கனன்றுகொண்டே இருந்திருக்கிறது. எழுபதுகளில் மரம் நடுவோம் என்று இறங்கி இருக்கிறார். தன சொந்த கிராமத்தில் மரம் நடும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அவர் தானே மரங்களை நடவில்லை, ஆள் வைத்து நட்டிருக்கிறார். அப்புறம் அடுத்த கிராமம், அதற்கடுத்த கிராமம் என்று முயற்சி பெரிதாகிக் கொண்டே போயிருக்கிறது.

சௌராஷ்டிரா, கட்ச் பிரதேசங்கள் (குஜராத் மாநிலம்) கொஞ்சம் வறட்சியானவை. தண்ணீர் கொஞ்சம் கஷ்டம்தான். வீணாகும் நதி நீரை சேகரிக்க சின்ன சின்ன அணைகள் கட்ட ஆரம்பித்திருக்கிறார். அது இப்போது 1500+ அளவில் நிற்கிறது.

எஞ்சினியரிங் innovations-உம் உண்டு. நாம் எல்லாம் சாதாரணமாக ஒரு நேர்கோடு போன்ற அனைகளைத்தான் பார்த்திருப்போம். இவர் வட்ட வடிவில் கட்டலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார். விதைகளை ஒரு blower மூலம் “நடுகிறார்”.

இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த ஹிந்து கட்டுரை, அவரது விருட்ச பிரேம் சேவா ட்ரஸ்ட் தளம் ஆகியவற்றை பார்க்கலாம்.

இவரைப் பற்றி படித்தபோது எனக்கு தோன்றியது இதுதான். There is power in dreaming; but there is even more power in starting. நமக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். இதைப் படித்தவுடன் நீங்கள் உங்கள் கனவுகளில் ஏதோ ஒன்றுக்கு முதல் படி எடுத்து வைத்தீர்களானால் எனக்கு ஜன்ம சாபல்யம் கிடைக்கும். அப்படி முதல் படி எடுத்து வைக்க நினைத்தால் நீங்கள் இரண்டு காரியம் செய்ய வேண்டும்.

  1. இந்த மறுமொழியைப் படித்தவுடன் ஆம் இந்த ஆட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று மறுமொழி எழுத வேண்டும்.
  2. இன்று நீங்கள் ஏதோ ஒரு கனவின் முதல் படியை எடுத்து வைக்க வேண்டும், என்ன செய்தீர்கள் என்று 24 மணி நேரத்துக்குள் மறுமொழி எழுத வேண்டும்.

யார் யாரெல்லாம் இந்த ஆட்டத்துக்கு வருகிறீர்கள்? நாலைந்து பேராவது வந்துடுங்கப்பா/ம்மா! என்னை தனியா தவிக்க விட்டுடாதீங்க! ஏனென்றால் நான் ஆடப் போகிறேன், என் அடுத்த பதிவு என் முதல் படி பற்றித்தான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஹிந்து கட்டுரை
விருட்ச பிரேம் சேவா ட்ரஸ்ட் தளம்

என் முதல் படி