Writings



அயோத்தி தீர்ப்பை படிக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறேன், ஆனால் பல ஆயிரம் பக்கத்தில் இருக்கிறதாம். இதை டவுன்லோட் செய்வதற்குள்ளேயே தாவு தீர்ந்துவிடும், படிப்பது எப்போது? ஒரு மாறுதலுக்காக இந்த பதிவு…

டிஸ்க்ளைமர்: ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா என்று கூட தெரியாது. சங்கநிதி என் கற்பனைப் பாத்திரம் மட்டுமே. இந்த டுமீல் செய்திகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு குழந்தைகளை கிண்டல் செய்கிறாயா பாதகா என்று கிளம்பிவிடாதீர்கள்!

துக்ளக்கும் அவர்கள் ஸ்டைலை காப்பி அடிப்பதற்காக என்னை மன்னிக்கட்டும்!

ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்

நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.

கலை நிகழ்ச்சி:
நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.

முகத்திலே பரு
முளைக்காத சிறு உரு
ஆனாலும் கருவிலே திரு
அதற்கு காரணம் –
கலைஞர் என்ற கற்பகத் தரு
சளைக்காமல் போட்ட எரு!
உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு –
என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!

இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.

கலைஞர் கேள்வி பதில்:
கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?

ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.

பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?

குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.

பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?

சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.

இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?

கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.

கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.

ஜெயலலிதா கருத்து:
இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.

விஜயகாந்த் பேட்டி:
இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

ராமதாஸ் கருத்து:
கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.

சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.

துக்ளக் தலையங்கம்:
குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.

கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!

டி. ராஜேந்தர் பேட்டி:
வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.

ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:
சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அழகிரி குமுறல்:
என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.

கொசுறு செய்தி:
ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்

தொடர்புடைய பதிவுகள்:
ஒண்ணரை பக்க நாளேடு: அழகிரி vs. ஸ்டாலின்
ஒண்ணரை பக்க நாளேடு – 2009 நாடாளுமன்றத் தேர்தல்
சுப்பிரமணிய சாமி – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 5
டி. ராஜேந்தர் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
சரத்குமார் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3
ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம் – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2
கார்த்திக் கட்சி – 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1
தமிழ் நாட்டு கட்சிகள்


சமீபத்தில் நான் படித்த ஒரு அருமையான புத்தகம் இது.  நண்பர் திருமலைராஜனுக்கு நன்றி.

ஜெயிக்க வேண்டும் —  இந்த உந்துதல் மனதில் எழாத மனிதர்கள் எவருமே இருக்க முடியாது.  ஆனால் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வெற்றியைத் தேடித் தந்து விடாது.  அதற்கு முறையாக — திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும்.  அதிலும் உடனே வெற்றி கிட்டாமல் தோல்விகள் ஏற்படக் கூடும்.  அவற்றையும் துணிவுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து உழைக்க வேண்டும்.

இதன் ஆசிரியர் ஔரங்கசீப் தனது முன்னுரையில் கூறுகிறார்…
ஒன்பது துறைகளைத் தேர்ந்தெடுத்து,  ஒவ்வொன்றிலும் முன்னணியிலுள்ள தமிழர்களின் பட்டியலைத் தயாரித்தோம்.   இரண்டாவது கருத்துக்கே இடமில்லாத அளவு வெகு நிச்சயமாகச் சாதித்தவர் என்று ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமாயிருந்தது.

ஒன்பதே வாரங்களில் இது முடிந்து விட்டபோது, ‘என் நிறுத்தி விட்டீர்கள் ?’  என்று தான் சண்டை போட்டார்கள்.  விளையாட்டுத் துறையிலிருந்து யாரும் பேசாதது பற்றியும்,  மொத்தத் தொகுப்பிலும் ஒரு பெண் கூட இல்லாதது பற்றியும் சிலர் சுட்டிக் காட்டினார்கள்.

இவற்றுக்குப் பிரத்தியேகக் காரணங்கள் ஏதுமில்லை.  இயல்பாக விடுபட்டுப் போயின;  அவ்வளவுதான்.

இந்தச் சாதனையாளர்களின் வாழ்கையைக் கூர்ந்து பார்த்தபோது எனக்குத் தோன்றியவை இவை…
  1. யாருமே தான் தேர்ந்தெடுத்த துறையைக் காதலிக்கத் தவறவில்லை.
  2. ஒரே சமயத்தில் யாருக்கும் இரு ஆர்வங்கள் இருக்கவில்லை.
  3. அத்தனை பேரும் கர்ம யோகிகளாயிருக்கிறார்கள்.
  4. கலையைக் கொச்சைப் படுத்தாத பேராண்மை மிக்கவர்களாயிருக்கிறார்கள்.
  5. வெற்றி எத்தனை தொலைவில் இருந்தாலும் எட்டிப் பறிக்கும் வெறியை இறுதி வரை விடாமல் வைத்திருக்கிறார்கள்.  சோதனைகளில் துவண்டு போவதில்லை.
  6. கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வற்றாமல் வைத்திருக்கிறார்கள்.
  7. சாதித்து விட்டோம் என்கிற நிறைவு இதுவரை இவர்களுக்கு ஏற்படவே இல்லை.

இந்த ஒரு வரி பதிப்பீடுகளை நீங்கள் இவர்களது வாழ்வனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் .  வெற்றியின் சூட்சுமம் புலப்படக் கூடும்.

ஜெயித்த கதை சொல்பவர்கள்….

பிரபஞ்சன் – எழுத்தாளர்
வை.கோ.  – அரசியல்வாதி
பத்மவாசன் – ஓவியர்  (இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில்….)
ஜெயேந்திரா – விளம்பரப்பட இயக்குனர்
பழனிபாரதி – பாடலாசிரியர்
பார்த்திபன் – திரைப்பட இயக்குனர்
சுகி சிவம் – சமயச் சொற்பொழிவாளர்
ரா.கி. ரங்கராஜன் – பத்திரிகையாளர்
விஜய்சிவா (கர்நாடக இசைக் கலைஞர்)

உங்களுக்கு ஒரு சுவையான தகவல்.  மதி நிலையம் வெளியீடாக 1999 –ம் ஆண்டு  ஔரங்கசீப் என்ற புனைபெயரில் எழுதியவர் வேறு யாரும் இல்லை.  எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.ராகவன் தான்.


தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன.  ஐயர் என்ற சொல் சங்க காலத்தில் ‘தலைவர்’ என்ற பொருளில் தான் பயின்று வந்தது.  இன்று அது கேலி வார்த்தையாகிவிட்டது.
‘அந்தணன்’ என்ற சொல்லும் அப்படி காலப்போக்கில் பொருள் மாறி வந்துள்ளது.  திருக்குறள் ‘அறவாழி அந்தணன்’  என்று கடவுளைக் குறிக்கிறது.  மற்றொரு குறளில்,  ‘அந்தணர் என்போர் அறவோர்  மற்றெவ்வுயிர்க்கும்  செந்தண்மை பூண்டொழுகலால்’  என்று எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்துபவர்களை அந்தணர் என்றது.

— சுஜாதா (வாரம் ஒரு பாசுரம்)

அந்தணர் என்போர் அறவோர்மற்  றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
— எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்களை மட்டும் ‘அந்தணர்’ என்று உயர்த்தலாம்.

திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது.



பொதுவாக எனக்கும் கவிதைகளுக்கும் கொஞ்சம் தூரம். ஆனால் இந்த இரண்டு கவிதைகளையும் ரசித்தேன். முடிந்தால் ஒரு கட்டைக்குரலில் கற்பனை செய்துகொள்ளுங்கள்!

தலைவரார்களேங்….
தமிழ்ப் பெருமக்களேங்… வணக்கொம்
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பை
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித் தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோம் நாம்”

‘‘வண்ணாரப்பேட்ட கிள சார்பில் மாலெ”

‘‘வளமான தாழிழர்கள் வாடலாமா?
கண்ணாளா போருக்குப் போய் வா என்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொக வாழ்வய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பொனக்குவ்யல் காண்போமின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரி மதி படைத்தோரை ஒழிப்போம் வாரிர்

தலைவரார்களேங்
பொதுமக்களேங் நானின்னும்
யிரு கூட்டம் பேசவிருப்பதால்
விடய் பெறுகிறேன் வணக்கொம்

இன்னுமிருவர் பேச இருக்கிறார்கள் அமைதி… அமைதி

இன்னும் ஒன்று:

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர் மேல் அதை விட மாட்டேன்

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு


ஜெனோவின் டைகாட்டமியில் என் வலது ஆள்காட்டி விரல் சிக்கியிருந்தது. இடது கையில் காஃபி. முக்கால் டம்ளர் மிச்சமிருந்த்து. டிஸ்போஸபில் பேப்பர் கப்.  மூக்கு கண்ணாடி வழியாக வானத்தைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். வானத்தில் வெகு தூரத்தில் என் காஃபி தெரிந்தது. இதை குடிக்க வேண்டுமென்றால் இதில் பாதியை  முதலில் குடிக்க வேண்டும், அந்தப் பாதியை குடிக்க வேண்டுமென்றால் அந்தப் பாதியில்
பாதியை முதலில் குடிக்க வேண்டும். அந்தப் பாதியில் பாதியை குடிக்கவேண்டுமென்றால் அந்தப் பாதியில் பாதியில் பாதியை குடிக்க வேண்டும். அந்தப் பாதியில் பாதியில் பாதியில் பாதியில்…எந்தப் பாதியைய்
பற்றி இப்ப நினைக்கிறோம்? இரண்டாவது வந்ததா? மூன்றாவது பாதியா? குழம்புகிறதே…எதுவாக இருந்தால் என்ன? இப்பொழுது காஃபி குடிக்க வேண்டும். ச்ச்ச்ச…காஃபி குடிப்பது இவ்வளவு கஷ்டமா?

தலைக்கு மேல் நின்ற எலக்ட்ரானிக் போர்ட் திடீரென்று விழித்துக் கொண்டு “டிரெய்ன் அரைவிங்” என்று அனைந்து அனைந்து அறிவித்து கொண்டிருந்தது. நான் காஃபி குடிப்பது பற்றிய சிந்தனையை தற்காலிகமாக
கைவிட்டுவிட்டு, அடையாளத்துக்காக ஆள்காட்டிவிரலை 27வது பக்கத்தில் மேலும் பத்திரப்படுத்திக் கொண்டேன். லேப்டாப்பின் சுமையால் தோளில் இருந்து உடம்பின் குறுக்காக ஓடிய வார் மெதுவாக நழுவி வந்து கழுத்தை நெருக்கியது. புத்தகம் வைத்திருந்த கையின் பெருவிரலால் வாரை மீண்டும் தோள் பட்டைக்கு கொண்டு வர முயன்ற போது புத்தகத்தின் பைண்டிங் மூலை கண்ணத்தை அறுத்தது.வரிசை பரபரப்பாகியது.  முன்னால் மூன்று பேர் தான். இன்று சீட் கிடைக்கும். பின்னால் ஒரு முப்பது பேர் இருந்தனர். அவர்கள்  ஏற வேண்டுமென்றால் நான் முதலில் ஏற வேண்டும். நான் ஏறவேண்டுமென்றால் என் முன்னால் நிற்ப்பவர் ஏற…ச்சேய்…என்ன இது? நான் ஜெனோ இல்லயே! அப்புறம் என்ன?

சத்தமில்லாமல் ட்ரெய்ன் வழுக்கிக் கொண்டு நின்றது. வாசல் துல்லியமாக மஞ்சளிலில் கறுப்பு பெயிண்ட் அடித்து பார்வையற்றவர்களுக்காக போட்டிருந்த டெக்ஸ்ஷர்ட் ஸர்பேஸ் முன் வந்து நின்றது. ஹிஸ்ஸ் எனற மெலிதான ஓசையோடு  கதவுகள் வழிவிட்டது. க்யூ ஜெனோவின் டைகாட்டமி பற்றி அக்கறையேயில்லாமல் அலட்சியமாக அவருடைய ”ஆரமப” சிக்கலை தாண்டியிருந்தது. நானும் உந்தப்பட்டு காலியாக இருந்த சீட்டுகளில் எதை பிடிப்பது என்று ஒரு கணம் திணறிவிட்டு ஒரு ஜன்னலோர சீட்டில் போய் முடிந்தேன். பத்தே வினாடியில் ஹிஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் கதவுகள் ஜோடி ஜோடியாக மீண்டும் சேர்ந்து கொண்டன. மெலிதான ஒரு உந்தல் உடம்பை தாக்கியது. அவ்வளவுதான்.அதன் பிறகு ட்ரெயின் நகர்கிறது என்பது அவசரமாக பின்னோக்கி செல்லும் வெளிப்புறக் காட்சிகள் மூலம் மட்டுமே ஊர்ஜிதமாகியது.

பதினோறாவது ஸ்டேஷனில் இறங்கவேண்டும். கண்ணை மூடிக்கொண்டேன். அதற்குள் காஃபியை குடித்துவிட்டால் கப்பை தூக்கி எறிந்துவிடலாம். ஜெனோவும், லேப்டாப்பும் தான். ஈஸி. பிரின்ஸ்டன்.
மாணவர்கள். கேள்விகள். எக்ஸ்ட்ரீமா பாயிண்ட்ஸில் சில இன்று எதிர் பார்க்கப்படவேண்டிய ஒன்று. நியூட்டன்-லெய்ப்னிட்ஸ் பற்றி பேசிவிடவேண்டும். அப்புறம் டிஅலெம்பர்ட், அப்புறம் டெல்ட்டா-எப்ஸலான், எக்ஸாம்பிள்ஸ், எக்சர்சைஸ், அடுத்தவாரமாவது டிரைவேடிவ்ஸ் தொட்டுவிடவேண்டும். எல்லாம் தான் ஹைஸ்ஸ்கூலில் படித்திருப்பார்களே? பிறகு நமக்கென்ன தலையெழுத்தா? ட்ரெய்னின் வேகம் குறைந்தது.  எப்பொழுது இரண்டாம் வருடத்திற்கு நம்மை புரொமோட் செய்வார்களோ!
அடுத்த ஸ்டேஷன். ஹிஸ்ஸ்ஸ்…தபதபதபதப…..ஹிஸ்ஸ்ஸ்ஸ்…மீண்டும் வேகம். இந்த ட்ரெய்ன் இல்லையென்றால் நமக்கு கஷ்டம் தான். எவ்வளவு ஸ்மூத். காஃபி கொட்டிவிடுமென்ற கவலையே
தேவையில்லை.

உலகத்தில் எல்லா இடத்திலேயும் மெட்ரொ ட்ரெயின்கள். எல்லாம் ஒரே மாதிரி. எங்கே இருருக்கிறோம் இப்போது? பாஸ்டனா? நியூ ஜெர்ஸியா? சிங்கப்பூரா? பெர்லீனா? அல்லது லண்டனா? ச்சே..விஸிட்டிங்
புரொபஸர் பாடு பரவாயில்லை. நான் வெகேஷன் ஸ்பாட் ஃபில் பண்ணுவதற்க்காகவே பிறந்திருப்பேணோ? ஒரே ஒரு வாரத்திற்க்காக மட்டும் பாரிஸில் வொர்க் பண்ணியிருக்கிறேன். ஒரு மூன்று மாதமாவது வேண்டும். ஆமாம். இனி மேல் மூன்று மாதத்திற்கு குறைவாக ஒத்துக்கொள்ளக் கூடாது. இந்தியாவிலும் இப்படி இருக்கக்கூடாதா? ஸ்மூத் டிரெயின்…வேர்க்காமல் விறுவிறுக்காமல்…அப்படி மட்டுமிருந்துவிட்டால்  பெர்ம்மாக போய்விடலாம். அப்பா, அம்மாவுடன் திவ்ய தேசம் போகலாம். சரவண பவனில் இட்லியும் மெதுவடையும் சாப்பிடலாம். மாதம் ஒரு முறை ஸ்ரீரெங்கத்திற்கும், திருப்பதிக்கும் மாற்றி மற்றி போய் பகவானிடம் நியூட்டன் லெய்பினிட்ஸூக்கு செய்தது நியாயமா என்று கேட்கலாம்….

”ஸ்ர், ஸ்டேஷன் ஆகயா” – ஃபஸ்ட் இயர் ஸ்டூடெண்ட் மிட்டர் சிங் ல்லையா இவன்? இவன் பிரின்ஸ்டனில் என்ன…ச்சேய்…தூங்கிவிட்டேனா? நான் எங்கேயிருக்கிறேன்? மிட்டர் சிங் என் லேப்டாப்பை
எடுத்துக் கொண்டான். நான் ஆறிப்போன காஃபியை எடுத்துகொண்டேன். அவனும் நானும் பரபரத்து வெளியே குதித்தோம். பின்னால் ஹிஸ்ஸ்ஸ்… திரும்பிப்பார்த்த போது ட்ரெயின் அங்கு இல்லை. எல்க்ட்ரானிக் போர்ட்களில் “ட்ரெய்ன் லீவிங்” மறைந்து ”பல்பஙாஷ்” என்று தோன்றியது

சற்றே நிதானமானேன். இது என்ன? கனவா? அப்போ பிரின்ஸ்டன்? வெளியே நடந்தோம்.

”மிஸ்டர். சீனிவாசன், என்ன இன்றைக்கு இறங்கவேண்டிய ஸ்டேஷனில் கரெக்டா இறங்கிட்டீங்க போலிருக்குதே. பிரின்ஸ்டனை விட்டு வந்த இந்த இரண்டு மாதத்தில் இது இரண்டாவது முறை.”, கேட்டு கொண்டே ஸ்டிவன்ஸ் காலேஜ் பஸ்ஸிர்க்காக காத்துக் கொண்டிருந்த என்னுடனும் மிட்டர்சிங்குடனும் சேர்ந்துக் கொண்டார் ”லாஸ்ட் எபிகிராஃப்ஸ் ஆஃப் சோலாஸ்” பற்றி பேச தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த ஹிஸ்டரி விஸிட்டிங் புரொஃபெஸர் பத்மநாபன்.

கையிலிருந்த ஜெனோ என்னைப்பார்த்து புன்முறுவல் செய்வது போலிருந்தது. ஆறிப்போன காஃபி மேலும் ஆறிக்கொண்டிருந்தது.

(டெல்லி மெட்ரோ ட்ரெய்ன் உலகத் தரத்துடன் இயங்குகிறது என்று Newyork Times ல் வந்த செய்தியால் இன்ஸ்பைர் ஆகியதால் வந்த விளைவே இந்தக் கதை)

தொடர்புடைய சுட்டிகள்

Newyork Times News

The New York Times



அறுசுவை அரசு நடராஜன் தொடர்கிறார் …..
இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது.   திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று.    ஒரு குழந்தையும் பிறந்து விட்டது.   என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை.    வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது.   வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’   என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.

இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய்,  மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.  இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன்.   பெரியவரை தரிசனம் செய்தேன்.   என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல்  அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி!   இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம்.  இங்கேயே தூங்குங்கள்.  நாளை போய்க் கொள்ளலாம்!’   என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல….  கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட  எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம்.  பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால்,  தூக்கம் நன்றாக வந்தது.

காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம்.  புது வேட்டியும்,  புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி,  அதை எங்களிடம் கொடுத்து  உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.
https://i0.wp.com/3.bp.blogspot.com/_WRTfA9x_seg/StHjVredajI/AAAAAAAABYs/cbkmwJg-BFc/s320/maha_periyava_014s%5B1%5D.jpg
உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும்,  எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார்.  ‘போ!  எல்லாம் சரியாயிடும்! ‘   என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.   என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது.   ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம்.  தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது.  வெற்றி நிச்சயம் கிடைக்கும்’  என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.   கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு,  மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர்.    அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.   ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது,  ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா….  இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே…  முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’  என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து  பார்த்தும் சல்லிக்காசு இல்லை.   என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன்.  காதில் தோடு தெரிந்தது.   அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது)  கொண்டு போனேன்.   பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன….  லட்டு செய்ய முடிஞ்சுதா?  ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’   என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை.    ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே….  அதுவே போதும்’   என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்)  அன்று  லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன்.  லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது…   இன்று எங்கள் குடும்பம் முழுவதும்  மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால்,  அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை  — நிறைவுற்றது

தொடர்புடைய பதிவுகள்:சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”


nullClick Here Enlarge

உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை.    சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது.   வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.

ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.

திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.

அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.

ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.

அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.

அவர் குமுதத்தில் எழுதிய ‘ரத்தத்தின் நிறம் சிவப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.

‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.

ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.

சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.

எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பை யும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.

மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் _ கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.

null

உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு  ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.

தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.

நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.

அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.

நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.

குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.

குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.

சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.

ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.

இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..

( நன்றி: குமுதம் 12.3.2008 )


கல்யாண சமையல் சாதம்
ஆசிரியர்: ‘அறுசுவை அரசு’ நடராஜன்
விலை INR:180
ISBN NO. 978-81-8476-013-2
பதிப்பு 3
அறுசுவை அரசு நடராஜன் கூறுகிறார்…..
ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம்.   எனக்கு மட்டுமல்ல…   என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!
[FXCD0033-1.jpg]
காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’  (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான்.   அந்த நாளின் போது,  நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று,  ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து,  லட்டுகள் செய்து,  கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம்.  இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.
https://i0.wp.com/3.bp.blogspot.com/_WRTfA9x_seg/StHjVredajI/AAAAAAAABYs/cbkmwJg-BFc/s320/maha_periyava_014s%5B1%5D.jpg
இந்த சாதாரண சமையல்காரன்,  ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து  ‘இதோடு எல்லாம் போதும்’  என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில்,  நம்பிக்கை கொடுத்து,  “நீ நன்றாகத்தான் இருப்பாய்’  என்று அபயக்கரம் நீட்டிய அந்த மாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.

கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது  சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது.  மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார்.  தினந்தோறும்  மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில்  அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும்.    இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும்.  மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர்.  அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்)   உட்பட நாலைந்து பேர் இருந்தனர்.  என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.

ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள்.  படுவெயிட்டாக இருக்கும்.  இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது,   கூடைக்குள்ளிருந்து  மிச்சம் மீதி சாம்பார்,  ரசம், பாயசமெல்லாம்  காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும்.   அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும்.   ‘எச்சில்’   என்று தோன்றாது.   பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி,  இறைவனால்  கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!

இப்படி இலைக்கூடையைக்   கொண்டுபோய் கொட்டிய கையோடு,  காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும்,  அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!

சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர்  அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார்.  இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான்.  அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி.  தானே கடை கடையாக ஏறி இறங்கி,  வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.

‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’   என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும்,  மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான்.  தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது,  சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன்,  இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’  என்று பெரியவர் கேட்பார்.

‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’  என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார்.  (இந்த அன்னதான சிவன் பேரிலேயே  பெரிய கமிட்டி போட்டு,  பல பெரிய மனிதர்கள் சேர்ந்து  ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள்.  அந்த ‘டிரஸ்ட்’  இப்போது  இருக்கிறதா எனத் தெரியவில்லை).

பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை  — இறுதிப் பகுதி அடுத்த பதிவில்……

தொடர்புடைய பதிவுகள்:சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”


கல்யாண சமையல் சாதம்
ஆசிரியர்: ‘அறுசுவை அரசு’ நடராஜன்
விலை INR:180
ISBN NO. 978-81-8476-013-2
பதிப்பு 3

செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் அளிக்கும் யோசனை வழக்கமாக நாம் கேட்டறிந்ததுதான். ஆனால், அறுசுவை அரசு நடராஜனிடம் போய்விட்டால் போதும்… வயிற்றுக்கும் செவிக்குமாக சேர்த்து அவரே அளித்துவிடுவார் பல்சுவை விருந்து!

கைமணம் போலவே பேச்சிலும் அத்தனை சுவாரஸ்யம்… செரிமானம்!

சமையல் குறிப்புத் தொடர் ஒன்றை எழுதும்படிக் கேட்டுத்தான் விகடன் நிருபர் அவரைச் சந்தித்தார். பேச்சோடு பேச்சாக, பூணூல் கல்யாணம் தொடங்கி அறுபதாம் கல்யாணம் வரை தான் கேடரிங் பொறுப்பேற்ற சுப விசேஷங்களில் சந்தித்த அனுபவங்களை அவர் சொல்லச் சொல்ல… சமையல் குறிப்புத் தொடர் தானாகவே ஒரு மினி வாழ்க்கைக் குறிப்புத் தொடராக மலர்ந்தது.

அழுகிற குழந்தைக்குக் கல்யாண மண்டபத்திலேயே தூளி கட்டித் தாலாட்டியதில் தொடங்கி, தாலி கட்டும் நேரத்தில் முறைத்துக்கொண்டு போன சம்பந்தியின் மனதைக் குளிரவைத்து, கெட்டி மௌம் கொட்ட வைத்தது வரையில்… ஒரு சமையல் கலைஞரின் பாத்திரத்தைத் தாண்டி உரிமையோடு அவர் தலையிட்டுத் தீர்த்துவைத்த பிரச்னைகள் பற்றி விகடனில் வெளியானபோது… இன்னொரு வாஷிங்டனில் திருமணமாகவே அவற்றைப் படித்து ருசித்தார்கள் வாசகர்கள்.

சமையல் குறிப்புகள் எல்லாம் சம்பவ சுவாரஸ்யங்களுக்குப் பலம் சேர்க்கும் சைடு டிஷ்களாக மாறிப் போயின!

நடராஜன் தனது ஆரம்ப வாழ்வில் பட்ட அவமானங்களையும், அனுபவித்த துன்பங்களையும் வெளியில் சொல்லத் தயங்கியதேயில்லை. மாறாக, கரண்டியை நம்பினோர் கைவிடப்படார் என்ற புதுமொழிக்கு அடையாளமாக எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வருவதற்கு இந்த நளபாகம் தனக்கு எப்படியெல்லாம் கை கொடுத்தது என்பதைச் சொல்வதில் அவருக்கு மிகுந்த பெருமை!

ருசிக்கும்போது இருக்கும் பிரமிப்பும் பிரமாண்டமும், அவர் தரும் சமையல் குறிப்புகளில் இருக்காது. யாரும் பளிச்செனப் புரிந்துகொண்டு, நறுக்கென சமைக்கிற வகையில் மிக எளிமையாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார். தொடராக வந்தபோது விகடனில் இடம்பெற்ற சமையல் குறிப்புகளுக்கு மேலும் விவரம் சேர்த்து, இந்தப் புத்தகத்துக்காக அவற்றை ஸ்பெஷல் ரெஸிப்பிகளாக அளித்திருக்கிறார்.

“டேய் நடராஜா!   நிச்சயம் நீ நன்னாயிருப்பே !”  என்று காஞ்சி மாமுனிவரிடம் இவர் வாஞ்சையான ஆசி பெற்ற சந்தர்ப்பங்கள் உண்டு.   காஞ்சி முனிவருடனான இவரது அனுபவங்களை  நாம் அடுத்த  பதிவில் காணலாம்.


சாவி கூறுகிறார்……… (பழைய கணக்கு)

1942  ஆகஸ்ட் எட்டு.  ‘வெள்ளையனே வெளியேறு’  என்று குரல் கொடுத்த காந்திஜி பம்பாயில் கைது செய்யப்பட்டு எங்கேயோ அழைத்துச் செல்லப்பட்டார்.  அவரை அடுத்து, நேருஜி, படேல், ஆசாத்,  காமாராஜ்,  சத்தியமூர்த்தி எல்லாருமே கைது செய்யப்பட்டார்கள்.   நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பு!     அதே சமயம் இரண்டாம் உலகப் போரும் நடந்து கொண்டிருந்ததால் ஊரடங்குச் சட்டம்,  இருட்டடிப்பு என்று நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

See  full size image

காந்திஜி கைதானதும்  அங்கங்கே தலைமறைவாயிருந்த காங்கிரஸ்காரர்கள்,  ‘மகாத்மா இதைச் செய்யச் சொன்னார்.  அதைச் செய்யச் சொன்னார்’  என்று எதையாவது சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நான் அப்போது வேலை வெட்டி ஏதுமின்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன்.   நாட்டுப் பற்று மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது.    ‘காந்திஜி தண்டவாளத்தைப் பெயர்க்கச் சொன்னார்.   தந்திக் கம்பிகளை வெட்டச் சொன்னார்.  தபாலாபீசைக் கொளுத்தச் சொன்னார்’   என்று ரகசியமாக வெளியாகிக் கொண்டிருந்தன.    பாரத தேவி ராமரத்னம்   ரகசியமாக எனாக்குச் சில துண்டுப் பிரசுரங்களை அனுப்பி  அவற்றை மற்றவர்களுக்கு விநியோகிக்கும்படிச் சொல்லி அனுப்பினார்.

ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த எனக்கு இது மேலும் வெறியூட்டியது.   தேச விடுதலைக்கு எதையாவது செய்தாக வேண்டும்.  விடுதலைப் போரில் குதித்தாக வேண்டும் என்ற தீவிரம் ரத்தத்தைச் சூடாக்கியது.   தந்திக்கம்பி அறுப்பது,  தண்டவாளம் பெயர்ப்பது,  இதெல்லாம் நான் மட்டும் தனியாகச் செய்யக் கூடிய காரியமாய்த் தோன்றவில்லை.   எனவே,  பக்கத்தில் உள்ள மண்ணடி  போஸ்ட் ஆபீசைக் கொளுத்தி விடுவது என்று முடிவு செய்தேன்.   ஒரு தீப்பெட்டியுடன் அங்கு போனேன்.   பெட்டியுள்ள எல்லாத் தீக்குச்சிகளையும் ஒன்று சேர்த்துப் பற்ற வைத்தேன்.   டக்கென்று தபால் பெட்டியினுள் அவ்வளவையும் போட்டதும் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது.    உள்ளே இருக்கும் கடிதங்கள் பற்றிக் கொண்டு பெரிதாகி எரிந்து அந்த போஸ்ட் ஆபீசே தீக்கிரையாகப்  போகிறது.  நான் பெரிய ஹீரோவாகப் போகிறேன் என்று எனக்குள்ளாகவே கற்பனை செய்து கொண்டேன்.    சில நிமிடங்களுக்குப் பிறகு,   தபால் பெட்டிக்குள்ளிருந்து வெறும் புகை மட்டுமே வந்தபோது பெரும் ஏமாற்றமாயிருந்தது.    இருந்தாலும் என் வீரத்தை வெளியுலகுக்குப் பிரகடனப் படுத்திவிட வேண்டும் என்ற ஆவலில் அருகாமையிலுள்ள செக்குமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போன் செய்தேன்.

“போலீஸ் ஸ்டேஷனா ?  இங்கே மண்ணடி போஸ்ட் ஆபீசுக்குத் தீ வைத்துவிட்டேன்.   உடனே வாருங்கள்”  என்றேன்.

“யார் நீ ?”   என்று கேட்டது செக்குமேடு.

“நான் ஒரு காங்கிரஸ்காரன்.  தபாலாபீஸுக்கு எதிரிலேயே காத்திருக்கிறேன்.   உடனே வாருங்கள்.  கதர்ச்சட்டை அணிந்திருப்பேன்”   என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வான் ஒன்று வந்து நின்றது.   அதிலிருந்து பரபரப்போடு இறங்கிய போலீசார்  இரண்டு பேர்  சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நேராக என்னிடம் வந்து,  “நீதான் போன் செய்தாயா ? ”  என்று கேட்டார்கள்.   “ஆமாம்”  என்றேன்.   என்னை அப்போதே கைது செய்து அந்த வேனிலேயே ஏற்றிச் சென்றார்கள்.    ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் கேஸ் எழுதிக் கொண்டார்கள்.    அதில் நான் கையெழுத்துப் போட்டதும்  மசால் தோசை வாங்கிக் கொடுத்தார்கள்.

சரி,  இப்போது நாம் மசால் தோசை மற்றும் அதன் பக்க வாத்தியங்களான  கொத்தமல்லிச் சட்னிதக்காளிச் சட்னிபுதினாச் சட்னி மற்றும்  உருளைக் கிழங்கு மசாலா செய்வது எப்படி என்பது பற்றி நமது ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்….   தாளிக்கும் ஓசை  (http://mykitchenpitch.wordpress.com/)
மசால் தோசை
தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 3 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு

கொத்தமல்லிச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி அல்லது புதினாச் சட்னி
உருளைக் கிழங்கு மசாலா.

masala-dosai1.JPG

செய்முறை:

  • அரிசிகளைத் தண்ணீரில் ஊறவைக்கவும். உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தைத் தனியாக ஊறவைக்கவும்.
  • நான்கு மணி நேரம் ஊறியபின் அரிசி பருப்புகளை தனித் தனியாக மிக மென்மையாக நுரை ததும்ப அரைத்து எடுக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துவைத்து, முழு இரவும் பொங்க விடவும்.
  • தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை நடுவில் ஊற்றி, மெல்லிதாக வட்டமாகப் பரத்தவும்.
  • தோசையைச் சுற்றியும் நடுவிலும் எண்ணை விட்டு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
  • நன்றாக முறுகலாக வெந்ததும், திருப்பிப் போடவும்.
  • இந்தப் பக்கத்தை சில நொடிகள் மட்டும் வேகவைத்து மீண்டும் திருப்பிவிடவும்.
  • நடுவில் மேலே குறிப்பிட்டுள்ள சட்னிகளில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் எடுத்து வட்டமாகப் தேய்த்து,
  • அதன்மேல் உருளைக் கிழங்கு மசாலா ஒரு கரண்டி வைத்து மூடிப் பரிமாறவும்.

masala-dosai2.JPG

* சப்பாத்தி, பூரி, தோசைக்கு தனியாகத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது சற்று தளர்வாக இருக்கவேண்டும்.

இந்தக் குறிப்பில் சொல்லியிருப்பதுபோல் தோசையின் உள்ளே வைப்பதென்றால் மிகவும் இறுக்கமாக, தண்ணீர்ப் பசை இல்லாதவாறு மசாலா இருக்குமாறு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

கொத்தமல்லிச் சட்னி

தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி – ஒரு கட்டு
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை –  1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு –  1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க –  எண்ணை, கடுகு,

செய்முறை:

  • கொத்தமல்லியை ஆய்ந்து, நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய கொத்தமல்லியோடு, எல்லாப் பொருட்களையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணையைச் சூடாக்கி கடுகு தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

தக்காளிச் சட்னி
தேவையான பொருள்கள்:

தக்காளி – 5
தேங்காய்த் துருவல் –  3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
உளுத்தம் பருப்பு –  1 டேபிள்ஸ்பூன்
புளி –  சிறிதளவு
பூண்டு –  4 பல்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை –  சிறிது (நறுக்கியது)
தாளிக்க – எண்ணை, கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

செய்முறை:

  • சிறிது எண்ணையில் பருப்பு, மிளகாய் இரண்டையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் தக்காளியையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி நன்கு வதங்கியபின் புளி, பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.
  • வதக்கியவற்றை தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

புதினாச் சட்னி

தேவையான பொருள்கள்:

புதினா – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 4 (விரும்பினால்)
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணை – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு –  தேவையான அளவு

செய்முறை:

  • புதினாவை, இலைகளை மட்டும் ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும்.
  • இஞ்சி, புதினாவைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
  • மிக்ஸியில் வதக்கிய கலவை, உப்பு, புளி, உரிந்த சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து கெட்டியாக அரைத்து உபயோகிக்கவும்.

உருளைக் கிழங்கு மசாலா.

தேவையான பொருள்கள்:

உருளைக் கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் (பெரியது) – 4
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:

  • உருளைக் கிழங்கை வேகவைத்து, உரித்து, உதிர்த்தோ, சிறு துண்டுகளாக நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை பொடியாகவும் பச்சை மிளகாயை குறுக்கே நீளவாக்கிலும் அரிந்துகொள்ளவும்.
  • வெங்காயத்தைப் பொடியாக, ஆனால் நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • தொடர்ந்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும்.
  • நிறம் மாறக் கூடாது.
  • வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • கொஞ்சம் தளர்வான கூட்டாக, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* ஒட்டாமல் தண்ணீர் அதிகமாகி விட்டால், சிலர் கடலைமாவு கரைத்து விடுவார்கள். சுவையைக் கெடுக்கும்.

கொஞ்சம் அதிலிருக்கும் உருளைக் கிழங்கையே எடுத்து மசித்து விட்டுக் கொதிக்க விடலாம்.

சூடாக இருப்பதை விடவும், ஆறியதும் கூட்டு அதிகமாக இறுகும் என்பதை நினைவில் வைக்கவும்.

அடுத்த பக்கம் »