இது எங்கள் நோட்டிஸ் போர்ட்.

ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார்.

எங்கள் தளங்கள்

ப்ளாக்
அவார்டா கொடுக்கறாங்க?
கூட்டாஞ்சோறு
சிலிகான் ஷெல்ஃப்

இந்தத் தளத்தில் இது வரை வந்த கட்டுரைகள் ஆர்வி, பக்ஸ், சேதுராமன், உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் கூட்டு முயற்சி. பிறருடைய நல்ல படைப்புகள் சிலவற்றையும் மீள் பதிவு செய்துள்ளோம்.சேதுராமன் அவர்கள் தற்போது எங்கள் நினைவில் மட்டுமே இருக்கிறார்.

ஆர்வி எழுதிய அம்மாவுக்கு புரியாது சிறுகதை உரையாடல் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. போட்டியை நடத்திய பைத்தியக்காரன், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு நன்றிகள்!

பக்சின் மகள் பிருந்தா எழுதிய கவிதை பரிசு பெற்றிருக்கிறது. பரிசு விவரங்கள், இடுகையில்.


எனக்கு ஏன் திடீரென்று நாட்டு நடப்பு பற்றி எல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றி இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. சரி என் ஆசையை நானே முறித்துக் கொள்வானேன்!

நெல்லை கண்ணன் மோடியைப் பற்றியோ அமித் ஷாவைப் பற்றி சோலிய முடிங்க என்றெல்லாம் பேசியது எனக்கு கொஞ்சமும் வியப்பாக இல்லை. அங்கே நாலு பேர் கைதட்டுவார்கள் என்று நினைத்திருப்பார். அதற்கப்புறம் மருத்துவமனையில் போய் உட்கார்ந்து கொண்டது, தலைமறைவானது எதுவும் ஆச்சரியப்படுத்தவில்லை.

ஆனால் கைது செய்ய வேண்டிய அளவுக்கெல்லாம் நெ. கண்ணன் வொர்த் இல்லை. ஏதோ கைதட்டல் கிடைக்கும் என்று நினைத்து சவடால் பேச்சு, அவ்வளவுதான். இவரை எல்லாம் பொருட்படுத்தி, பேப்பரில் பேரெல்லாம் வரச்செய்து, நாலு போலீஸ்காரர்கள் நேரத்தை வீணடிக்கத்தான் வேண்டுமா என்று தோன்றுகிறது. (இன்னொரு பக்கம் இப்படி எல்லாம் செய்தால்தான் அடுத்த வாய்ச்சொல் வீரர் அடக்கி வாசிப்பார் என்றும் தோன்றுகிறது.) ஆனால் பாருங்கள், இன்னும் இரண்டு வருஷம் கழித்து எவனாவது மாட்டினால் என்னைப் பார்த்து மோடியே பயந்துவிட்டார் என்று உதார் விட்டாலும் விடுவார்!

கண்ணனை நான் ஒரு முறை நண்பன் வீட்டில் கூட்டத்தோடு கோவிந்தாவாக சந்தித்திருக்கிறேன். அடுத்த முறை தவிர்த்துவிட வேண்டும் என்று சில நிமிஷத்திலேயே தோன்ற வைத்துவிட்டார். ஜாதியே மனிதனின் குணத்தை தீர்மானிக்கிறது என்று சந்தித்த இரண்டாவது நிமிஷம் சொன்னார். ஐயருங்க அளவுக்கு படிப்பு வராது, பிள்ளைமார்ங்க உசத்தி என்றெல்லாம் பேசிக் கொண்டே போனார். My jaw literally dropped. அதை கவனித்துவிட்டாரோ என்னவோ நீங்க என்ன நினைக்கிறீங்க என்று குறிப்பாக என்னை வேலை மெனக்கெட்டு கேட்க வேறு கேட்டார். மரியாதைக்காக நான் ஆமாம் போடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ. எனக்கு சபை இங்கிதம் எல்லாம் குறைவு. நான் மறுத்துப் பேச என் மேல் கொஞ்சம் கடுப்பாகிவிட்டார். நான் கிளம்பும் வரைக்கும் அந்தக் கடுப்பைக் காட்டினார்.

நண்பன் வீட்டிலிருந்து உடனடியாகக் கிளம்ப முடியாமல் முக்கால் மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். அந்த முக்கால் மணி நேரத்தில் 40 நிமிஷம் இவரே தன் வீரப் பிரதாபங்களைப் பற்றி மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார். ஐயருங்களுக்குத்தான் படிப்பு வருமாம், ஆனால் இவர் பரம்பரையே தமிழைக் கரைச்சுக் குடிச்சவங்களாம், எப்படி இவருக்கு மட்டும் படிப்பு வந்ததோ தெரியவில்லை.

இவர் தலைமையில் நண்பர்கள் ஏதோ நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது, நானும் தலையைக் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆளை விடுங்கடா சாமி என்று ஓடிவிட்டேன். நிகழ்ச்சியிலும் ஏதோ குட்டையைக் குழப்பினார் போலிருக்கிறது, அழைத்த நண்பர்களும் அப்புறம் அய்யோ அம்மா அம்மம்மா என்று அலுத்துக் கொண்டார்கள்.

வெற்று சவடால்தான் என்றாலும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய பேச்சு. இதை எல்லாரும் உட்கார்ந்து கேட்டார்கள் என்பது அதை விட கண்டிக்க வேண்டிய விஷயம். ஒரு வேளை என்னையும் பிற நண்பர்களையும் போல captive audience-ஓ? ஒருவர் பேசும்போது வாயை மூடுயா என்று ‘நாகரிகம்’ இல்லாமல் எப்படி கத்துவது என்று தயங்கினார்களோ?

தவறு என்று நினைப்பவர்கள் – குறிப்பாக முஸ்லிம்கள், ஹிந்துத்துவம்/பாஜக எதிர்ப்பாளர்கள் – இப்போதாவது இது தவறான பேச்சு, கண்டிக்கப்பட வேண்டிய பேச்சு என்பதை கட்டாயம் பதிவு செய்யுங்கள்! பாஜக ஆதரவாளர்கள் சொல்வதை விட எதிர்ப்பாளர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்வது முக்கியம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு


(This is a Muthukrishnan post)

அரசியல் செய்திகளில் அம்மாவிற்கும் தங்கைக்கும் ஆர்வம் இல்லாமல் போய் பல நாட்களாகின்றன. அம்மாவிற்கு இவையெல்லாம் எப்போதும் இப்படி தான் நடக்கிறது என தோன்றிவிட்டது, தங்கையை பொறுத்த வரை பெத்த ரெண்டு வானர கூட்டத்த மேய்ச்சு, ஸ்கூலுக்கு அனுப்புறதே தினந்தோறும் நடக்கும் ஒரு நுண்ணரசியல் சதிராட்டம் என்ற நிலையில் யார் வந்தா என்ன, யார் வராட்டா என்ன என்ற ஒரு நினைப்பு தான்.

கடந்த வருடம் லோக் சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கையில் வீட்டில் தான் இருந்தேன். எதிர்பாராத அரசியல் திருப்பத்தை முகநூல் நண்பர்களிடன் ஆன்லைனில் பேசி ஆர்வத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் வீட்டில் ஒரு சலனமும் இல்லை, முதல் ஆச்சரியத்திற்க்கு பிறகு. மல்லி பொடி அரைக்கணும், தேங்காய் உரிக்காணும், உங்க அப்பா காலைல 11 மணிக்கு முன்னாடி வந்து சாப்பிட்டா எனக்கு அடுத்த வேலய பாக்கலாம் என வேலை போய்கொண்டிருந்தது. அதற்கு மேல் அரசியலுக்கும், சமூக நிகழ்வுகளுக்கும் ஒரு சராசரி வீட்டில் உள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைத்துக் கொண்டேன். அப்பா தினமும் நியூஸ் பார்ப்பதால் தினசரி செய்திதாள் வாங்குவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிவிட்டது. நான் ஊருக்கு போகும் போது எனக்காக வாங்கி வருவார். அவர் மேலோட்டமாக வாசித்து வைத்துவிடுவார்.
வாட்ஸ் ஆஃப் தங்கை என்னிடம் பிள்ளைகளுக்கு பல்லு விழுந்த போட்டோ, அவர்கள் legoவில் செய்த பொம்மைகள் செய்த படம், தினசரி அழுத்தத்தை போக்க என்னை வம்பிற்கிழுத்து நக்கல் emoticons அனுப்புவதற்கான ஒரு சேவை மட்டுமே என உபயோகித்து வருகிறாள், கடந்த இரு வருடங்களாக.
நேற்று காலை வேலைக்கு வந்தவுடன் அவளிடமிருந்து தொலைக்காட்சியில் திரு.அப்துல் கலாம் அவர்கள் காலமான செய்தியை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பினாள். அந்த படத்தை பார்த்தவுடன் இனம் புரியாத தனிமை கொஞ்ச நேரம் மனதை அப்பிக் கொண்டது. பிறகு தான் அதைக் குறித்து அவள் எதுவும் பேசவில்லை என்றும் உறைத்தது. அந்த படம் மட்டும் தான், வேறு ஒரு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை. ஒரு அவசர பகிர்தல், பிறகு மௌனம் என்று தோன்றியது. நான் இருந்த மனநிலையில் அப்படி ஒரு அதீதமான  நோக்கத்தை அவளின் செய்கைக்கு கொடுத்தேனா என தெரியவில்லை. ஆனால் இது முதல் முறை என என்னால் சொல்ல முடியும்.
அன்றைய தினம் வேலையில் ஓடி, இரவு அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன். அந்த நேரத்தில் திரு கலாம் மனதில் ஓரத்தில் போய்விட்டார். முகநூலை திறக்கும் போது பார்க்கும் நண்பர்களின் பதிவுகளின் மூலம் நியாபகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தார் ஆனால் விலகிக் கொண்டும் இருந்தார். அம்மாவிற்கு உடல்நிலை தற்காலிகமாக சரியில்லை. இப்போ எப்படி இருக்கு உடம்பு என நான் கேட்டவுடன் அவரிடமிருந்து வந்த பதில், “பெரியவர் போயிடாருடா”. எனக்கு அந்த வார்த்தையிலிருந்து நூலை பிடித்து புரிந்து கொள்ள ஒரு கணம் எடுத்தது. இதுவரை அரசியல் செய்திகளை, தலைவர்களை குறிக்கையில் ஒரு அக்கறையின்மை இன்றி அம்மா பேசியதில்லை (ராஜீவ் காந்தியை தவிர, அது என்றும் நிலைத்திருக்கும் குற்றவுணர்வு என தோன்றுவதுண்டு…) திரு. கலாம் எப்படி காலமானார் என எனக்கு தெரியாததை சொல்லி கொடுப்பதை போல செய்திகளை சொன்னார்கள். சமீபத்தில் குடும்பத்தின் மூத்த பெரியவர் ஒருவர் இறந்து விட்டார். தலை சீவிக் கொண்டிருக்கும் போது அப்படியே உட்கார்ந்து உயிர் பிரிந்துவிட்டது. அம்மாவிற்கு அவர் தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருந்தவர் எனலாம். அவருடைய இறப்பையும், திரு. அப்துல் கலாம் இன் இறப்பையும் ஒன்றின் அடுத்து ஒன்றாக வைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அளவில் நல்ல விதத்தில் இருவரும் போய் சேர்ந்த்தார்கள். தான் நம்பும் ஒரு தெய்வம் தன் இருப்பை நிறுவிச் சென்றது போன்ற ஒரு நிகழ்தல். பெரியவர் வழியாக இன்னொரு பெரியவரிடம் மனதளவில் அணுகி சென்ற ஒரு தருணம்.
திரு. அப்துல் கலாம் ஜனாதிபதியாக பத்விக்காலத்தை முடித்த பிறகு அவரைக் குறித்த எந்த செய்தியும், வீட்டின் தினசரி அவசரகதியின் திரையை கிழித்து உள்ளே வந்ததாக எனக்கு தினைவில்லை. மேன்மக்களை குறித்து செய்திகள் வந்தாலும் சரி, பேசப்படாவிட்டாலும் சரி ஏதோ ஒரு வழியில் அவர்களை மனிதர்கள் உணர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் இழப்பை தங்களுடைய இழப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
அம்மா இன்னொன்றும் சொன்னார்கள். அப்பா இன்று காலை கடைக்கு சென்று செய்திதாளை வாங்கி முழுவதும் வாசித்துக் கொண்டிருந்தார்.
முகின்.

One of my favorite exercises is choosing an all time XI.

One of my fundamental problems with one day cricket is that it is really hard for me to remember matches. Only a few matches stick in mind – like Kapil against
Zimbabwe, or Sachin vs Shoaib. It is easier to retain an overall impression of how people performed rather than individual performances.

Anyway, here goes.

Openers:
Sachin takes up a slot. Ganguly, Sehwag, Srikkanth, Sidhu are all contenders for the other slot. Saurabh is my choice. A left-right combination is always good, and Dada is a little too slow for other slots. Srikkanth is a pioneer, but his record is not too good. Dada is better than Sidhu any day. Dada vs Sehwag is a tough choice. Sehwag’s explosive power at the top, even if doesn’t last beyond the first ten overs, is always welcome. But my choice for the opener is Dada.

One, two and three downs:
Kohli and Yuvi take two slots. Gambhir, Azhar, Dravid, Jadeja, and Raina are all candidates for the other slot. I choose Kohli at 3, Yuvi at 4, and Dravid at 5. Dravid played a great role as a finisher for 2-3 years until the 2003 world cup and he provides stability against tough bowling. Azhar would be the main backup – despite his tarnished record.

Four and Five downs:
Dhoni is #6, wicketkeeper and captain. Dravid can keep in an emergency. For #7, I choose Sehwag. Sehwag will really be a floater. We have always lacked firepower at lower middler order positions and Sehwag will provide it. And anyway his average innings lasts only 40-50 balls. Between Sachin, Saurabh, Sehwag, Yuvi, and Kohli we can squeeze in 10-15 overs.

Bowlers:
Kapil, Zak, Kumble And Sri. Bajji is too defensive, but will be the spin backup. Prabhakar/Prasad/Agarkar will provide pace backups.

So the team is: Sachin, Saurabh, Kohli, Yuvi, Dravid, Dhoni, Sehwag, Kapil, Sri, Kumble and Zak. Reserves are: Azhar, Raina, Prabhakar, Agarkar and Bhajji.


என் பதிவுகளில் – குறிப்பாக சாமியார்கள், ஆன்மிகம் பற்றி எழுதும் பதிவுகளில் – சாமியார் புரிந்த அற்புதம் என்றால் ஒரு இளக்காரம் தெரியத்தான் செய்கிறது. என்னைப் பொறுத்த வரையில் மனித வாழ்க்கை என்பதே பெரிய அற்புதம். இதற்கு மேலும் அற்புதங்களைப் புரிந்து – செங்கடலைப் பிரித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க மழை பொழிய வைத்து, தீக்குளிக்க வைத்து அதன் பின் பூணூல் போட்டு சிதம்பரம் கோவிலில் நுழைய வைத்து, ஒரே நேரத்தில் பெங்களூரிலும் திருவண்ணாமலையிலும் காட்சி அளித்து கடவுள் தன் இருப்பை நமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் என்ற கருத்தாக்கத்துக்கு என்ன தேவை என்றே என் தர்க்க அறிவுக்கு புலப்படவில்லை. (இருந்தாலும் நான் கோவிலுக்குப் போவதையும் சாமி கும்பிடுவதையும் விடுவதற்குமில்லை. உணர்வு ரீதியாக கடவுள் என்ற ஊன்றுகோலின் அவசியம் எனக்கு இருக்கிறது, அப்படி இருப்பதில், இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்வதில் எல்லாம் எனக்கு எந்த கூச்சநாச்சமும் இல்லவும் இல்லை.) உலகில் நடக்கும் எல்லாவற்றையும் அறிவு, தர்க்கம், இயற்கையின் விதிகள் இவற்றின் மூலம் அறிவதையே விரும்புகிறேன். நம் தொன்மங்கள் யாவும் – ராமாயணம், மகாபாரதம், திருப்பாணாழ்வார், சோகாமேளர், பத்ராசல ராமதாசர் இன்னும் பலப்பல – இயற்கை விதிகளுக்கு உட்பட்டு நடந்த உண்மை நிகழ்ச்சிகளின் மேல் எழுப்பப்பட்ட புனைவுகளே என்று நான் கருதுகிறேன். பத்ராசல ராமதாசரின் மாமன்மார்கள் கோல்கொண்டா சுல்தானின் அரசவையில் முக்கிய அமைச்சர்கள், அவர்களுக்காகத்தான் – ஒரு வேளை அவர்கள் பாக்கி வரியைக் கட்டி இருக்கலாம் – ராமதாசர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும், ராமனும் லக்ஷ்மணனும் சுல்தானுக்கு பாக்கி வரியைக் கட்டி இருக்கமாட்டார்கள்.

ஆனால் நம் அறிவுக்கும் தர்க்க ஞானத்துக்கும் மீறிய சங்கதிகள் உலகில் உண்டு. ஒரு மண் புழுவால் ரிலேடிவிட்டி தியரியை புரிந்து கொள்ள முடியுமா? நமக்கு அதிசயமாகத் தெரியும் நிகழ்ச்சிகளும் (நம்மால் புரிந்து கொள்ள முடியாத) விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கலாம். இதை நான் உணர்ந்தாலும், நம்மிடம் இருக்கும் கருவியைத்தானே பயன்படுத்த முடியும்? ஒரு அதிசய நிகழ்ச்சி என்றால் அங்கே முதலில் Occam’s Razor கோட்பாட்டை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். நித்யானந்தா திருவண்ணாமலையிலும் பெங்களூரிலும் ஒரே நேரத்தில் இருந்தார் என்று சாரு நிவேதிதா சொன்னால் சாரு கப்சா விடுகிறார் என்ற விளக்கம் நித்யானந்தா இயற்கை விதிகளை மீறி இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் இருந்தார் என்பதை விட ஏற்கக் கூடியதாக இருக்கிறது. ஏசு உயிர்த்தெழுந்தார் என்றால் முதலில் அவர் இறந்தாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சும்மா கல்லறை பக்கம் தூங்கிவிட்டு எழுந்து வருபவரைப் பார்த்து உயிர்த்தெழுந்தார் என்று கதை கட்டிவிட்டார்கள் என்ற சாத்தியம் முதலில் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டிருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது இயற்கை விதிகளுக்கு முரணாக இருக்க வேண்டிய தேவை இல்லை.

அப்புறம் பாருங்கள் இந்த சாமியார் அற்புதம் புரிந்தார் என்று சொல்பவர்கள் அனேகரும் அது தன் நண்பனுக்கு நடந்தது, சித்தப்பாவின் மச்சினிக்கு நடந்தது என்றுதான் சொல்கிறார்கள். தனக்கு நடந்தது என்று சொல்பவர்கள் குறைவு. அப்படி தனக்கு நடந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கும் தற்செயல் உள்ளிட்ட சாதாரண விளக்கங்கள் இருக்கலாம். அப்படி தனக்கு நடந்ததாக சொல்லி, வேறு எந்த சுலபமான விளக்கமும் தர முடியாவிட்டால் மட்டுமே அற்புதம், அதிசயம் என்று ஒரு நிகழ்ச்சியை விவரிக்கலாம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.

ஆனால் என் வாழ்விலும் என்னால் விளக்க முடியாத ஒரு அதிசய நிகழ்ச்சி உண்டு. இது என் சொந்த அனுபவம், என் அத்தையின் மாப்பிள்ளையின் பெரியப்பாவுக்கு ஏற்பட்ட அனுபவம் அல்ல.

இது நடந்து ஒரு இருபது வருஷம் இருக்கலாம். எம்.டெக். முடித்துவிட்டு வேலையில் சேரும் முன் ஆறேழு வாரம் இடைவெளி. என் நண்பன் அரவிந்த கிருஷ்ணனைப் பார்க்க (சேலத்தின் அருகே இருக்கும்) ஆத்தூர் போயிருந்தேன். அவன் அப்போது தியானம், கியானம் என்றெல்லாம் மும்முரமாக இருந்தான். நானோ அப்போதெல்லாம் (இப்போதும் கூட) பிரார்த்தனை என்பது தனிப்பட்ட விஷயம், கூட்டு பஜனை, பிரார்த்தனை இத்யாதியின் ஒரே பயன் ஓசியில் கிடைக்கும் சுண்டல்தான் என்று நினைத்தவன்/நினைப்பவன். இவன் என்னை வலுக்கட்டாயமாக ஒரு தியானக் கூட்டத்துக்கு இழுத்துக் கொண்டு போனான். நான் எத்தனையோ சொல்லிப் பார்த்தேன் – நான் தியானம் கியானம் எல்லாம் பண்ணும் டைப் இல்லை, அங்கே வந்து அடக்க முடியாமல் சிரித்துவிட்டால் உனக்குத்தான் பிரச்சினை என்று பயமுறுத்திக் கூடப் பார்த்தேன். அப்படிப்பட்ட ஆட்களைத்தான் எங்கள் குரு விரும்புகிறார் என்று அவன் என்னை விடாக்கண்டனாக இழுத்துக் கொண்டு போய்விட்டான்.

அங்கே போனால் ஒரு பதினைந்து இருபது பேர் ஒன்றாக உட்கார்ந்து தியானம் செய்யப் போகிறார்கள். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்ததோ என்னவோ நினைவில்லை. நானும் தலையெழுத்தே என்று கோஷ்டி கானம் பாட உட்கார்ந்தேன். இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் புள்ளியில் focus செய், அதை மட்டும் தனியாக உணரப் பார், நீ சரியாக concentrate செய்தால் உனக்கு ஒரு அனுபவம் ஏற்படும் என்று சொன்னார்கள். என்ன அனுபவம் என்று விவரமாக சொன்னார்களா என்று நினைவில்லை, அப்படி சொன்னது அரவிந்த கிருஷ்ணன்தானா என்றும் நினைவில்லை. ஒரு பத்து நிமிஷம் அப்படி செய்து பார் என்று சொன்னார்கள். நானும் முயற்சி செய்தேன். இரண்டு மூன்று நிமிஷங்களில் என் புருவங்களின் மத்தியில் குறுகுறு என்ற ஒரு உணர்ச்சி – யாரோ நகத்தை வைத்து சுரண்டுவது போல, கொஞ்சம் வெப்பமாக உணர்ந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் அது தொடர்ந்து கொண்டே இருந்தது. தியானம் முடிந்த பிறகும் அந்த உணர்ச்சி தொடர்ந்தது.

அரவிந்த கிருஷ்ணன் மிகவும் excite ஆகிவிட்டான். இப்படி முதல் இரண்டு மூன்று நிமிஷங்களிலேயே ஏற்படுவது மிக அபூர்வமாம். குருவிடம் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன், உனக்கு தீட்சை கொடுப்பார் என்று சொன்னான். அவன் குரு பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் (ஏத்தாப்பூர்?) இருந்தார். குடும்பஸ்தர். அரசு கால்நடை மருத்துவராக வேலை பார்த்தார் என்று நினைவு. அவர் பேரையும் மறந்துவிட்டேன். அடுத்த நாளோ என்னவோ பஸ்ஸில் போனோம். மிகவும் அழகான கிராமம். அவர் வீடு கொஞ்சம் பெரியது. பணக்காரரோ இல்லையோ, ஓரளவு வசதியானவர்தான். வீட்டுக்கு எதிரில் கூரை வேய்ந்து தியானம் செய்பவர்களுக்காக பெரிய மண்டபம் மாதிரி இருந்தது. தீட்சை கொடுக்க வேண்டுமென்றால் சாதாரணமாக ஒரு மாதம்(?) தியானம் செய்து பழக வேண்டும், அப்போதுதான் தர முடியும் என்று சொன்னார். அரவிந்த கிருஷ்ணன் இவன் வெளியூர்க்காரன், வேலையில் சேர ஹைதராபாத் வேறு போக வேண்டும், ஒரு மாதம் கழித்து வருவது கஷ்டம், இரண்டு நிமிஷத்திலேயே அந்த உணர்வு வந்துவிட்டது என்றெல்லாம் சொன்னான். எனக்கோ தீட்சை கொடுத்தால் சந்தோஷம், கொடுக்காவிட்டால் அதை விட சந்தோஷம் என்ற மனநிலைதான். அவர் அரவிந்த கிருஷ்ணன் முகத்துக்காக அரை மனதோடு எனக்கு தீட்சை கொடுத்தார். தீட்சை கொடுப்பது என்றால் அவர் ஒன்றும் மந்திரம் மாயம் செய்யவில்லை. உனக்கு தீட்சை கொடுக்கிறேன், நீ தினமும் காலை மாலை இரண்டு முறை பத்து நிமிஷம் உன் புருவத்தின் மத்தியில் இருக்கும் அந்த புள்ளியை உணரப் பார் என்று சொன்னார், அவ்வளவுதான். ஒரு வாரம் கழித்து என்னை வந்து பார் என்று சொன்னார்.

எனக்கு அந்த உணர்வு போகவே இல்லை. எப்போதும் கொஞ்சம் சூடாக இருக்கும், யாரோ சுரண்டுவது போலவே இருக்கும். நின்றால், நடந்தால், சாப்பிட்டால், படித்தால், காலைக்கடன் கழித்தால், எப்போதும் இருக்கும். முழிப்பு இருக்கும் ஒவ்வொரு கணமும் நான் அந்த வெப்பத்தையும் குறுகுறு என்பதையும் உணர்ந்தேன். நான் அன்றைக்கு அங்கிருந்து கிளம்பி வேறு நண்பர்களைப் பார்க்கப் போனேன். இரண்டு மூன்று நாளாயிற்று, இந்த உணர்வு நிற்கவே இல்லை. எனக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது. தியானம் செய்வதை நிறுத்திவிட்டேன். அப்படியும் அந்த உணர்வு போகவில்லை. எப்படியாவது இதை நிறுத்த வேண்டும் என்று முயற்சித்தேன், ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வாரக் கெடுவுக்கு முன்னாலேயே நண்பனுடன் அவர் முன்னால் போய் நின்றேன். எனக்கு இந்த மாதிரி இருக்கிறதே என்று கேட்டேன். அவர் நீ இன்னும் தயாராகவில்லை என்று சொல்லி, என் தீட்சையை வாபஸ் வாங்கினார். அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த உணர்ச்சி இருந்தது. ஆனால் மெதுமெதுவாக குறைந்துகொண்டே போனது.

இது psychosomatic நிகழ்ச்சி என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் அவ்வளவுதான் என்று எனக்கே இன்னும் கூட முழு நம்பிக்கை வரவில்லை. இன்றிருக்கும் தெளிவு அன்றிருந்தால் அந்த உணர்வை நிறுத்த எல்லாம் முயற்சித்திருக்க மாட்டேன். மீண்டும் அப்படி என்னால் உணர முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. எனக்கு அது இன்று ஒரு பெரிய regret ஆகத்தான் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நமக்குத் தெரிந்த அறிவியல், தர்க்கம் ஆகியவற்றை மீறிய விஷயங்கள் உண்டு என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்பட்டது. ஆனால் அறிவியலையும், தர்க்கத்தையும் விட சிறந்த கருவிகள் என்னிடம்/நம்மிடம் இல்லை, அதனால் அவற்றை வைத்துத்தான் எல்லாவற்றையும் எடை போட வேண்டி இருக்கிறது. யாராவது மந்திரம், மாயம் என்றால் நம்பாதீர்கள் என்றுதான் நான் சொல்வேன். எனக்கு நடந்தது என்றால் பேசுங்கள் – என் நண்பனின் நண்பனுக்கு நடந்தது, என் சித்தப்பா கேட்ட கதை என்று வருவதெல்லாம் கட்டுக்கதை இல்லை என்று நினைக்க நமக்கு எந்த முகாந்தரமும் இல்லை.

அரவிந்த கிருஷ்ணனுடன் டச் விட்டுப்போய்விட்டது. அந்த குருவின் பேர் தெரியவில்லை. அந்த கிராமத்தின் பேர் ஏத்தாப்பூர் என்று நினைக்கிறேன், ஆனால் சரியாகத் தெரியவில்லை. உங்கள் யாருக்காவது தெரியுமா?


இந்தப் பக்கம் வந்து பல காலம் ஆகிவிட்டது. இதையும் தொடர வேண்டும் என்று ஆசைதான். முடியுமா என்றுதான் தெரியவில்லை. பார்ப்போம்!

நண்பர் திருமலைராஜன் அமெரிக்காவில் உடல் இந்தியாவில் உயிர் என்று வாழ்பவர். பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர். (நான் ஹிந்துத்துவ எதிர்ப்பாளன் என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன்.) பல மாதங்களாகவே தன் கணிப்பை நண்பர் குழுவுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். இது வரை இரண்டு மூன்று தேர்தல்களில் (2011 தமிழகத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நினைவு வருகிறது) அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன், ஓவர் டு ராஜன்!

பல மாதங்களுக்கு முன்பாகவே நான் மோடி பிரதமர் வேட்ப்பாளாரக அறிவிக்கப் பட்டால் பிஜேபி 252 இடங்களை வெல்லும் என்று சொல்லியிருந்தேன். டிசம்பம் மாதம் தேர்தல் முடிந்த தருணத்தில் என் நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொண்டது கீழ்க்கண்ட கணிப்பு. ஆனால் டிசம்பருக்குப் பிறகு ஏராளமான சாக்கடை யமுனையில் ஓடி விட்டது. கெஜ்ரிவால்களின் ஆம் ஆத்மி காமெடி நாடகம் ஒரு மண்டல காலம் அமர்க்களமாக நடந்து முடிந்து விட்டிருக்கிறது. மோடி மீதான குற்றச்சாட்டுக்கள் மீது தீர்ப்பு வந்துள்ளது. அவரும் நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள் மூலமாக பல லட்சம் மக்களுடன் நேரடியாக உரையாடி வருகிறார். பல கட்சிகளும் மோடியின் மீதான தங்களது தீண்டாமை அரசியலை வசதியாக மறந்து போய் நாளைய கூட்டணிக்குத் தயாராகி வருகிறார்கள். அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற பாஜக இது வரை காலூன்றாத மாநிலங்களில் கூட மோடிக்கு என்று ஒரு ஓட்டு வங்கி உருவாகி வருகிறது. நான் டிசம்பர் மாதம் பகிர்ந்து கொண்ட கீழ்க்கண்ட கணிப்பைத்தான் இப்பொழுது பல்வேறு மீடியாக்களின் கணிப்புகளும் சொல்லி வருகின்றன. ஆனால் எனது தற்பொழுதைய கணிப்பு பி ஜே பி கூட்டணிக்கு 304 சீட்டுகள் கிடைக்கும் என்பது.

டிசம்பர் 8 அன்று நான் எழுதியது:
———————————————————-

இப்பொழுதுள்ள நிலையிலான ஒரு கணக்கு ஒன்று. இந்தக் கணக்குக் கூடுவதோ குறைவதோ அடுத்த ஆறு மாதங்களில் நடப்பதை வைத்து இருக்கிறது. இது இப்பொழுதைய கணக்கு மட்டுமே: இதில் உபி, பீஹார், ஜார்க்கண்ட், ஆந்திரா, மஹராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்கள் கிட்டினால் 280-304 வரை உயரலாம். 252 என்றால் மீதியுள்ள 30 இடங்களுக்கு ஜெயா, மம்தா, பட்நாயக் ஆகியோரிடம் காவடி எடுக்க வேண்டி வரும். ஜெயா, மம்தா இருவரும் நம்ப முடியாதவர்கள். அந்த நிலை ஏற்படாமல் இருக்க உபி, மஹராஷ்ட்ரா, பீஹார் ஆகியவற்றின் எண்ணிக்கையை 30 இடங்களுக்கு அதிகரிக்க வேண்டும். சிவசேனா பிரதர்ஸின் காலில் விழுந்தாவது சேர்த்து வைக்க வேண்டும், எடியூரப்பாவை இணைக்க வேண்டும் மற்றவை ஆண்டவன் கையில்.

Issues and Risks:
உபியில் முலயம்+காங்கிரஸ் அல்லது காங்கிரஸ்+ மாயா கூட்டணி
மஹராஷ்ராவில் தாக்கரே கஸின்ஸ் தகறாறுகள்
பீஹாரில் நிதிஷ்+காங்கிரஸ் கூட்டணி

ஆந்திர பிரதேசம் –    10 ( நாயுடுவின் கூட்டணியுடன் இது 20 ஆக அதிகரிக்கலாம் குறைய வாய்ப்பில்லை)
அருணாச்சல்               1 (கூட்டணி)
அஸ்ஸாம்                      7 (கூட்டணியுடன்)
பீஹார்                        20
சட்டிஸ்கர்                    6
கோவா                         2
குஜராத்                      23
ஹரியானா                    7 (கூட்டணியுடன்)
ஹிமாச்சல்                    7 (HP + Some NE states)
ஜம்மு                             2
ஜார்க்கண்ட்                  8
கர்நாடகா                    18 (எடியுடன்)
மபி                                27
மஹராஷ்ட்ரா               25 (2 தாக்கரேக்களின் கூட்டணியுடன் )
வட கிழக்கு                     2 (கூட்டணியுடன்)
ஒரிசா                              5
பஞ்சாப்                           9 (கூட்டணியுடன்)
ராஜஸ்தான்                   24
தமிழ்நாடு                         2 (கூட்டணியுடன்)
உ பி                               30
யூனியன் பிரதேசங்கள்    3
டெல்லி                            7
உத்தரகாண்ட்                 5
மேற்கு வங்கம்                 2
__________________
மொத்தம்                     252

ராஜன் வடகிழக்கு மாநிலங்களை இரண்டு முறை கணக்குப் போட்டிருப்பது போலத் தெரிகிறது. ஹிமாசல் மற்றும் சில வடகிழக்கு மாநிலம் என்றும் ஒரு வரி இருக்கிறது, வடகிழக்கு மாநிலங்கள் என்றும் ஒரு வரி இருக்கிறது. ஹிமாசலில் இருப்பதே நாலு தொகுதிதான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மோடி அலை வீசுகிறதா? 250 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லுமா? 300 வரை கூட போகக்கூடுமா? ஓட்டுப் போடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்


நண்பர் ராஜனின் அஞ்சலி. என் வருத்தத்தை இங்கே தெரிவித்திருக்கிறேன்.

Malarmannan

தங்களுக்குச் சரியென்று படும் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் சொல்லக் கூடிய இரு பெரும் ஆளுமைகள் இந்த வாரம் மறைந்து விட்டார்கள். இருவரும் எனக்கு இணையம் மூலமாக அறிமுகமாகி நெருக்கமானவர்கள். என் மீது மிகுந்த பிரியத்துடனும் வாஞ்சையுடனும் பழகிய பெரியவர்கள். இந்திய தேசீயத்திற்கும், இந்து மதத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் இவர்கள் இருவரது மறைவும் மாபெரும் இழப்பாகும். ஆம், டோண்டு ராகவன் மறைவின் பொழுது பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எனக்குக் கீழ்க்கண்ட மடலை இரு தினங்களுக்கு முன்பாக அனுப்பியிருந்தார். அதில் அவர் சொன்னது

பிறந்துவிட்ட எவரும் ஒரு சந்தர்ப்பத்தில் மரணம் அடைந்தே தீர வேண்டும். அது சாசுவதமானது. தமது பணியைச் சரியாகச் செய்து முடித்த பிறகே நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார். நாமும் அவருக்கு நல்ல முறையில் விடை கொடுப்போம்.

ஆம் அதையே நாம் மலர்மன்னன் அவர்களுக்கும் செய்ய வேண்டும். ஒரு பத்திரிகையாளராக, கால் என்னும் இலக்கிய இதழின் ஆசிரியராக, இலக்கியவாதியாக, பேச்சாளராக, தொண்டராக, இந்த்துத்துவ அரசியலின் களம் இறங்கி செயல் பட்ட ஒரு துணிவான வீரராக,ஒரு அமைப்பாளராக பன்முகங்களிலும் தொடர்ந்து செயல் பட்டு தன் கடமைகளை முழுமையாகச் செயல் படுத்தி விட்டு விடை பெற்றிருக்கிறார் மலர் மன்னன் அவர்கள். தமிழ் இணையம் வந்த பிறகு அதன் மூலமாக தன் கருத்துக்களை பல்லாயிரக்கணக்கான தமிழர்களிடம் கொண்டு சென்ற ஒரு சிறந்த சிந்தனையாளர் மலர்மன்னன். ஆனந்த விகடனில் பரிசு பெற்ற சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார் மலர்மன்னன். அவரது ஆரிய சமாஜம், தி.மு.க. உருவாகியது ஏன்? நாயகன் பாரதி, வந்தே மாதரம் ஆகிய நூல்கள் முக்கியமானவை. திண்ணை இணைய இதழ் மூலமாகவும், தன் நூல்கள் மூலமாகவும் திராவிட இயக்கங்களின் பொய் முகங்களைக் கிழித்தவர் மலர்மன்னன். வஹாபி இஸ்லாமின் பயங்கரவாத முகத்தைத் தொடர்ந்து விமர்சித்து எச்சரித்து வந்தவர். தமிழக சமூக, அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பும் எந்தவொரு மாணவருக்கும் அவரது நூல்கள் உறுதுணையாக இருக்கும். மலர்மன்னன், டோண்டு ராகவன் போன்ற பன்முக ஆளுமை படைத்த அறிஞர்களை இனி அரிதாகவே தமிழ் சூழலில் காண முடியும்.

மிகத் தீவீரமான கருத்துடையவர் என்பதினால் பலருக்கும் அவரிடம் ஒரு வித அச்சம் இருந்திருக்கலாம். அவர் மீது பலருக்கும் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் எந்த நிலையிலும் கண்ணியத்தையும், பண்பையும் மரியாதையையும் தவற விடாத ஒரு பண்பாளர். அன்னாருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது மகளுக்கும் குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருத்தத்துடன்
ச.திருமலைராஜன்


நண்பர் ராஜனோடு என்னுடைய condolences-ஐயும் பதிவு செய்து கொள்கிறேன். ஓவர் டு ராஜன்!

dondu_raghavanதமிழ் எழுத்துறுக்கள் வளர்ச்சியுற்று 2000 வரை ஆங்கிலத்தில் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருந்த தமிழ் இணையர்கள் மெல்ல மெல்ல தமிழில் தட்டச்சு செய்து அதே ஆரிய, திராவிட, பிராமண, அபிராமண, இடஒதுக்கீட்டுச் சண்டைகளைத் தாய் மொழியாம் தமிழ் மொழியிலும் தொடர்ந்து கொண்டிருந்தனர். இண்டஸ் சிவிலைஷேஷன், ஃபோரம் ஹப் போன்ற ஆங்கிலக் குழுமங்களில் தொடர்ந்த சண்டைகள் யாகூ குழுமங்களில் தமிழில் தொடர ஆரம்பித்தன. ஏராளமான தமிழ் குழுமங்கள் தமிழ் ஃபாண்ட்டுகளை நிறுவிக் கொண்டு உருவாயின. சொக்கன், இரா.முருகன், பா.ராகவன், எல்லே.ராம், பசுபதி போன்றோர் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த ராயர் காப்பி கிளப் என்ற யாகூர் குழுமமே தமிழில் எனக்கு அறிமுகமான இரண்டாவது குழுமமாக இருந்தது. அதற்கு முன்பாக திண்ணை விவாதக் களம் என்றொரு விவாத மேடையை மட்டும் அமைத்துத் தந்திருந்தது. ராயர் காப்பி கிளப்பில் தமிழ் கூறும் நல்லுலகின் இயல்பான பாரம்பரிய அரசியல் சண்டைகள் குறைவாகவும் இலக்கியம் இன்ன பிற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. தொடர்ந்து அகத்தியம், மரத்தடி போன்ற குழுமங்களும் அதே போல முக்கியமான தமிழ் குழுமங்களாக இயங்கிக் கொண்டிருந்தன. அந்தக் காலக் கட்டங்களில் பிராமணர்கள் பலரும் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்டோ அல்லது முற்போக்கு வேடங்களை தரித்துக் கொண்டோ அல்லது புனைப் பெயரில் தன்னை ஒரு பிராமண ஜாதி அல்லாத ஆள் போல வேடம் போட்டுக் கொண்டோ எழுதத் தலைப்பட்டனர். அப்படியே அடையாளம் வெளியே தெரிய நேரிட்டு விட்ட பல பிராமண இணைய எழுத்தாளர்களும் கூட பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலும் தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைக் கூடச் சொல்லாமலோ அல்லது சுயஜாதி வெறுப்பின் மேலிட்டு எதிர்மறையாகவோ தங்கள் கருத்துக்களைச் சொல்லி வந்தனர். இட ஒதுக்கீடு, இஸ்ரேல் ஆதரவு, ஆரிய திராவிட மாயயை, கருணாநிதியின் வெறுப்பு அரசியல், ஜெயலலிதா பற்றிய விமர்சனம், தேசீயவாதம், பா ஜ க ஆதரவு நிலைப்பாடு, வலதுசாரி ஆதரவு வாதங்கள், அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல், இஸ்லாமிய வஹாபிய பயங்கரவாதம் போன்று கடந்த பத்தாண்டில் உள்ளூர் முதல் உலகளாவிய அளவு வரையில் நடந்த எந்தவொரு முக்கியமான பிரச்சினைகளிலும் தங்கள் பிறந்த ஜாதியை ஜாக்கிரதையாகக் கருத்தில் கொண்டு அரசியல் சரியான கருத்துக்களை மட்டுமே சிந்தனையாளர்கள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட பெரும்பான்மையான இணைய கருத்தாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். தான் பிராமண ஜாதியில் பிறந்து விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காகவும் அதனாலேயே தங்களை முத்திரை குத்தி அவமானப் படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்திலும், தன்னை ஒரு முற்போக்காளனாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற போலி கவுரவம் கருதியும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஆதரிப்பது முதல் கருணாநிதி, வீரமணி போன்றோரின் இன வெறுப்பு அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை வரை கூசாமல் இவர்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த பேடித்தனமான செயற்கையான போலித்தனமான போக்குகளைக் கண்டு கடுமையான வெறுப்பும் சலிப்பும் அடைந்திருந்த வேளையிலேயே தமிழ் இணைய உலகில் ஒரு வித்தியாசமான மனிதராக, ஒரு துணிவான வீரனாக, தன் நெஞ்சறியும் உண்மையை மறைக்காமல் தனக்குச் சரியென்று தோன்றிய கருத்துக்குக் கடும் எதிர்ப்புக்கள், மிரட்டல்கள் வந்தாலும் பணியாமல் தன் நிலையையை உரக்கச் சொல்லிய ஒரு மாமனிதன் டோண்டு ராகவன் ஐயங்கார். ஐயங்கார் என்று தன்னை அழைத்துக் கொள்வதில் அவருக்கு எந்தவிதமான ஜாதீய நோக்கும் இருந்தது கிடையாது. இணையத்திலும் பொதுவிலும் தன்னை ஜாதிய எதிர்ப்பாளர் என்றும் முற்போக்கு என்றும் அடையாளப் படுத்திக் கொண்டு கடும் ஜாதி அபிமானத்துடன் செயல் பட்ட பல்வேறு போலி முற்போக்காளர்கள் நடுவில் உண்மையான முற்போக்குச் சிந்தனடையுடையவராக அறிமுகமானார் டோண்டு ராகவன் அவர்கள்.

தமிழ் இணைய உலகம் யாகூ போன்ற குழுமங்களில் இருந்து வெளியேறி ப்ளாக் ஆரம்பிக்கத் துவங்கிய காலகட்டத்தில் டோண்டு ராகவனின் பளாக் தமிழ் வலையுலகத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றது. அவர் சொல்லும் கருத்துக்களை ஏற்கலாம், ஏற்காமல் போகலாம், வெறுக்கலாம், பாராட்டலாம் ஆனால் தமிழ் இணைய உலகில் புழங்கிய எவருமே அவரைக் கடந்தே செல்ல வேண்டி வந்தது. ஒரு பொறியாளராக தன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு தனக்குப் பிடித்தமான நெருக்கமான மொழி பெயர்ப்பு தொழிலில் மும்முரமாக இயங்கி வந்த ராகவன் ஓய்வு காலத்தில் தன் பொழுதுகளை கழிப்பதற்காகத் தேர்ந்தெடுத்த ஊடகம் அவரது வலைப்பக்கமாக அமைந்து விட்டது. ஓய்வுக்காலப் பொழுதுபோக்குக்காக அவர் துவக்கிய வலைப்பக்கம் அவரது கடைசி மணித் துளி வரையிலும் அவரை ஆக்ரமித்திருந்தது. இரு கோடுகள் தத்துவம் போல சில பிரச்சினைகளில் இருந்து விலகி வேறு சில சச்சரவுகளிலும் பிரச்சினைகளிலும் அவரை அவர் தேர்ந்தெடுத்த வலைப்பக்கம் மூழ்க அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சொந்தப் பிரச்சினைகள் ஆனாலும் அவரது கருத்துக்களினால் அவர் எதிர் கொள்ள நேரிட்ட கடுமையான வெறுப்புக்களும், துரோகங்களும், மிரட்டல்களும், கை விடப்படல்களும் ஆனாலும் சரி எதற்கும் அஞ்சாமல் துணிவாக எதிர் கொண்ட ஒரு நிஜமான அஞ்சா நெஞ்சன் டோண்டு ராகவன் அவர்கள். தமிழ் இணைய உலகில் வேறு எவரும் எதிர் கொண்டிராத கடுமையான வெறுப்பையும், ஜாதி வெறியையும், ஆபாசமான தாக்குதல்களையும், கொலை மிரட்டல் உட்பட விடப்பட்ட கடுமையான மிரட்டல்களையும் அவரளவுக்குச் சந்தித்தவர் இன்னொருவர் இருக்க முடியாது. பலவீனமான இதயம் கொண்டவர்கள் அந்தத் தாக்குதல்கள் ஏற்படுத்திய பாதிப்பிலேயே நெஞ்சழுத்தம் ஏற்பட்டு எப்பொழுதோ உயிரிழந்திருப்பார்கள். அவர் மட்டும் அல்லாது அவரது மனைவியும், மகளும் கூட கடுமையான ஆபாச தாக்குதல்களுக்கு இரையானார்கள். தன்னை எப்பொழுதும் ஒரு இளைஞனாகவே கருதி வந்த டோண்டு எதிர் கருத்துக் கொண்டோரையும் தன்னைக் கடுமையாக வசைபாடிய பலரையும் கூட அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்தே நட்புறவு பேணவே செய்தார். அவர்களில் பலரிடமும் எச்சரிக்கையாக இருக்குமாறும் விலகியிருக்குமாறும் நான் பல முறை எச்சரித்த பொழுதும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்து வந்தார். அவர் நம்பி நட்பாகப் பழகிய சிலரே அவரைப் பற்றிய சொந்தத் தகவல்களை அவரைத் தாக்கி வந்த ஆபாச மிருகங்களுக்கு ஒற்று சொன்னார்கள். இன்று அதே நபர்கள் அவருக்கு அஞ்சலியும் செலுத்துகிறார்கள்.

டோண்டு ராகவன் அவர்களுடன் எனக்கு எப்பொழுது தொடர்பு ஏற்பட்டது என்பதை நான் பழைய மடல்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அனேகமாக 2003/04ம் வருடமாக இருக்கக் கூடும். அவர் வலைப்பதிவு துவங்கிய பின்னரே அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இணையம் மூலமாக நான் பெற்ற அற்புதமான நட்புக்களில் ஒருவர் டோண்டு ராகவன். நான் சென்னை வரும் பொழுது அவரைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தார். நான் சென்னை வாசி அல்ல என்றும் நான் திருச்செந்தூர் அருகே ஒரு கிராமத்திலேயே அனேகமாகத் தங்குவேன் என்றும் சொல்லிய பொழுது அந்த ஊர் குறித்து விசாரித்து அறிந்தார். திடீரென்று எனது சொந்தக் கிராமமாகிய தென் திருப்பேரை என்ற ஊரின் பெயர் அவரை வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தது. அங்கு நான் செல்ல வேண்டும் எப்படிச் செல்வது போன்ற விபரங்களைக் கேட்டு மடல் அனுப்பியிருந்தார். அங்கு செல்லும் விபரங்களைக் குறித்துச் சொல்லி எங்கள் இல்லத்தில் தங்கிக் கோவில்களுக்குச் சென்று வரும்படி ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருந்தேன். தனது அன்றாட சந்திப்புக்களையும், உரையாடால்களையும் சம்பந்தப்பட்ட நண்பர்களின் அனுமதியின்றியே உடனுக்குடன் தன் வலைப்பக்கத்தில் பதிந்து விடுவது அவரது வழக்கமாக இருந்து வந்தது. ஆகையால் அவர் என் வீட்டுக்குச் சென்று வந்த விபரத்தை உறுதியாக எழுதி விடுவார் என்பதை எதிர்பார்த்தபடியால் ஒரு நிபந்தனையாக என்னைப் பற்றிய விபரம் எதையும் நீங்கள் சென்று வந்த பின்பு எழுதப் போகும் பயணக் குறிப்பில் எழுதக் கூடாது என்று கட்டாயமாகத் தெரிவித்திருந்தேன். அந்த நிபந்தனையின் பேரிலேயே அவருக்கு ஒரு பயணத் திட்டம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன். தென் திருப்பேரை கிராமத்தில் அமைந்திருந்த மகரநெடுங்குழைக்காத பெருமாளிடம் அவர் என்ன வேண்டினாரொ, அதில் என்ன பலித்ததோ தெரியவில்லை அல்லது அந்தக் கோவிலும் அந்தப் பெருமானும் ஏதோ ஒரு விதத்தில் அவரை மிக ஆழமாகக் கவர்ந்திருக்க வேண்டும். அன்றிலிருந்து அங்கு சென்று வந்த தினத்தில் இருந்து அந்தக் கோவிலின் மீது அவருக்கு ஒரு தீராக் காதல் ஏற்பட்டு விட்டது. திருநெல்வேலி தாமிரவருணிக் கரையில் அமைந்திருக்கும் நவ திருப்பதிகளில் ஒன்றாகிய தென் திருப்பேரை கோவிலும் அதன் பெருமாளின் பெயரும் அப்பகுதியினருக்கும் அங்கு சென்று வரும் வைணவ பக்தர்களுக்கும் அன்றி வேறு எவருக்கும் அதிகம் தெரியாதிருந்த நிலையில் தன் வலைப்பக்கத்தில் அடிக்கொரு முறை என் அப்பன் மகர நெடும் குழைக்காதரின் அருளால் என்று எழுதியதன் மூலமாக உலகின் பல்வேறு மூலையில் இருந்து அவர் பதிவைப் படிக்கும் ஆயிரக்கணக்கானோரிடம் மகரநெடுங்குழைக்காதரைக் கொண்டு சேர்த்தவர் டோண்டு ராகவன். அதற்கு மூல காரணமாக அதே மகரநெடுங்குழைக்காதர் என்னைப் பணித்திருந்தார் போலும். இன்று கடவுளையே நம்பாத நாத்திகர்களும், மாவோயிஸ்டுகளும் கூடக் கைக்கொள்ளும் ஒரு வாசகமாக அந்த பிரார்த்தனை மாறி விட்டிருக்கிறது. தென் திருப்பேரை சென்று வந்த டோண்டு ராகவன் அந்த தரிசனம் தந்த பரவசத்தில் முதலில் செய்த காரியமே எனக்கு அளித்த வாக்குறுதியை மீறியதுதான். ஆம் சென்று வந்த விபரங்களையும் என் வீட்டு முகவரி என் உறவினர்களின் பெயர்கள் அவருக்கு அளிக்கப் பட்ட உபசரிப்புகள் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் தன் வலைப்பக்கத்தில் பதிந்து விட்டார். அதற்காக எனது கோபங்களை அவர் பொருட்படுத்தவேயில்லை. இன்னும் பல தருணங்களிலும் கூட நான் எதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொல்லி அளிக்கும் தகவல்களை அவர் பிடிவாதமாக உடனுக்குடன் பதிந்தே வந்தார். அதன் காரணமாக நான் ஊருக்கு வரும் தகவல்களைக் கூட அவருக்குச் சொல்லாமல் தவிர்த்து வந்தேன். இருந்தும் நான் ஊரில் இருக்கும் தகவலை அறிந்து ஒரு முறை சென்னையில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்து விட்டார். நான் அன்று ஊரில் இல்லாத சூழலில் என்னைப் பார்க்காமலேயே ஆனால் அவருக்கு மிகவும் பிடித்தமான குழைக்காதரை தரிசித்து விட்டுச் சென்னை திரும்பினார். அவர் மீது என்ன கோபம் ஏற்படுத்தினாலும் தன் வாஞ்சையினாலும் அன்பினாலும் ஒரு ஃபோன்காலில் என்னைக் குளிர்வித்து விடுவார். என்னை விட என் உறவினர்களிடம் நெருக்கமாக அவர் இருந்து வந்தார். ஒரு முறை அவர் மீதும் என் மீதும் ஆபாசத் தாக்குதல்கள் நடத்தி போர்னோ சைட்டுகளை உருவாக்கி அதில் எங்கள் பெயர்களையும் புகைப்படங்களையும் இட்டு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த மூர்த்தி நான் பேசுவதாக அவரிடம் ஃபோன் செய்து என்னைப் போல நடித்து அவரிடம் இருந்து பல விஷயங்களைக் கறந்து அதை தன் தாக்குதல்களுக்கு பயன் படுத்திக் கொண்டான். அதன் பிறகு அவரை அழைத்து எங்களுக்குள் பரிமாறிக் கொள்ள அவருக்குப் பிடித்த என் மாமாவின் மகளின் பெயரை ஒரு சங்கேதவார்த்தையாகப் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்தோம். இப்படி இணையத்தில் துவங்கிய நட்பு இணையம் தாண்டி எங்கள் வீடு வரை நீண்ட ஒரு நட்பாக அமைந்திருந்தது.

தமிழ் இணைய உலகின் வரலாறு எழுதப் படுமானால் அது டோண்டு ராகவனைத் தவிர்த்து விட்டு எழுதப் பட முடியாது. இன்று இணையத்தில் பல பிராமண பதிவர்களும் துணிந்து அவர்கள் மீது திணிக்கப் பட்ட தங்கள் சொந்த ஜாதியின் மீதான சுயவெறுப்பையும் மீறி தங்களுக்குச் சரியென்று தோன்றும் கருத்துக்களைச் சொல்வதற்கு உந்து சக்தியாக இருந்தவர் டோண்டு ராகவன், கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்காகக் கடுமையாகக் குரல் கொடுத்த ஒரு போராளி. அவர் மீது விமர்சனங்கள் இருக்கலாம். தன் சொந்தப் பிரபால்யத்திற்காக எந்தவொரு பிரச்சினையையும் தனக்காக விளம்பரப் படுத்திக் கொள்பவர் என்று அவர் தொடர்ந்து வசை பாடப் பட்டார். சோ குறித்தும் துக்ளக் குறித்தும் இஸ்ரேல் குறித்தும் யூதர்கள் குறித்தும் பால்ஸ்தீனப் பிரச்சினை குறித்தும் தனது கருத்துக்களை எவ்விதத் தயக்கமும் இன்றி துணிந்து பதிந்து வந்தவர் டோண்டு ராகவன். எந்தவொரு இஸ்ரேலிய யூதரை விடவும் மேலான ஒரு யூதப் போராளியாக இருந்தவர் டோண்டு ராகவன். தி ஹிந்து நாளிதழின் நிருபரனா நரசிம்மன் என்பவரின் மகனான ராகவன் தந்தையிடமிருந்து மொழிப் புலமையையும் அபாரமான நினைவுத் திறனையும் கொண்டிருந்தார். எப்பொழுது நடந்த சம்பவத்தையும் கூட சமீபத்தில் 1963ல் என்று ஆரம்பித்துத் துல்லியமான நினைவுத் திறனுடன் சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர் அவர். அந்த அபாரமான நினைவுத்திறனே அவரை பல மொழிகளிலும் சரளமாக கற்றுக் கொள்ள வைத்தது. ஜெர்மன், ஃப்ரெஞ்ச், உருது, ஹிந்தி என்று பன்மொழியிலும் சரளமாக பேசவும் எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆற்றல் உள்ளவராக விளங்கினார். பன்மொழித் திறனும் துணிவும் நினைவாற்றலும் அனைத்திற்கும் மேலாக அவரது கம்பீரமான ஆளுமையும் உயரமும் அவரிடம் அவரைக் கடுமையாகத் தாக்கியவர்களிடமும் கூட ஒரு வித பயம் கலந்த மரியாதையை ஏற்படுத்தியது. இவர் நிச்சயம் ஒரு ரா உளவாளியாகவோ மொசாட் அல்லது சி ஐ ஏ வின் கூலியாகவோ இருக்க வேண்டும் என்று அச்சப் பட்டு அதை இணையத்தில் வதந்தியாகவும் பரப்ப ஆரம்பித்தனர். ஆனால் அவர் என்றுமே தன்னை ஒரு மொழிபெயர்ப்பாளனாகவே அடையாளப் படுத்தி வந்தார். அவர் பதிந்திருக்கும் ஆயிரக்கணக்கான பதிவுகளும் பின்னூட்டங்களும் எதிர்காலத்தில் தமிழ் நாட்டின் வரலாற்றைப் படிக்க விரும்பும் எந்தவொரு மாணவனுக்கும் பல பயனுள்ள சமூக, வரலாற்று, அரசியல் செய்திகளை அளிக்கக் கூடிய ஆவணமாக அமையக் கூடும். அவரது வலைப்பதிவை எவரேனும் பாதுகாக்க முடியும் என்றால் அவசியம் செய்யப் பட வேண்டிய ஒரு ஆவணமாக அது அமையக் கூடும்.

அவர் ஆச்சாரியன் திருவடி அடைந்து விட்டார். அவர் அனுதினமும் துதித்து வந்த மகரநெடுங்குழைக்காதனுடன் நிச்சயம் கலந்து விட்டிருப்பார். அங்கிருந்தாலும் கூட அவர் போராடியவற்றுக்க்காக அவரது அப்பன் மகரநெடுங்குழைக்காதனுடன் போராடிக் கொண்டிருப்பார் என்பது உறுதி. அவர் எனக்கு பல பாடங்களையும் படிப்பினைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். என் வாழ்க்கையின் மறக்க முடியாத ஆளுமைகளில், இனிய நண்பர்களில், ஒரு முன்னோடிகளில் ஒருவர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு அவரும் நானும் வணங்கும் மகரநெடும் குழைக்காதர் அமைதியையும் மன நிம்மதியையும் அளிக்கட்டும்.

பிரார்த்தனைகளுடன்
ச.திருமலைராஜன்