Srilankan tamilsபுலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரின் இறுதிப் பகுதியில் நடந்தது இனப் படுகொலை என்று கருதுபவர்களில் நானும் ஒருவன். இத்தனைக்கும் நான் புலிகளை தீவிரமாக எதிர்ப்பவன்.

ஐ.நா. இன்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு பக்கங்கள், நான் முழுதுமாக படிக்கவில்லை.

இலங்கை அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டியவையே என்று ஐ.நா. கூறுவது மகிழ்ச்சி தருகிறது. இந்த மாதிரி சம்பவங்களை பூசி மெழுகாமல் பிற்காலத்தில் இப்படி நடப்பது குறையலாம். எங்கெங்கோ அகதிகளாக கஷ்டப்படும் இலங்கை சகோதர சகோதரிகளுக்கு கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும். ஐ.நா.வுக்கு ஒரு ஷொட்டு!


இந்த தளத்துக்கு வருபவர்களுக்கு அனேகமாக ரதியை தெரிந்திருக்கும். ரதி புலம் பெயர்ந்த ஈழத் தமிழர். தீவிர புலி எதிர்ப்பாளனான எனக்கும், தீவிர புலி ஆதரவாளரான அவருக்கும் சில பல புள்ளிகளில் இசைவு உண்டு, பல சில புள்ளிகளில் இல்லை. அப்படி இருந்தும் நாங்கள் இணையம் மூலம் இணைந்த நண்பர்கள்தான். இணையத்தில் வேறுபாடுகளை நாகரீகமாக அணுகும் வெகு சிலரில் அவரும் ஒருவர். அவருடைய (குறைவான) எழுத்துக்களில் ஈழத் தமிழர்களின் வலி தெளிவாகத் தெரியும். அவர் நிறைய எழுத வேண்டும், ஈழத் தமிழர்களின் வலியை ஆவணப்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்களில் நானும் ஒருவன்.

வினவு தளத்தில் ஈழத் தமிழர்களின் நிலையைப் பற்றி ஒரு தனிப்பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் ஒரு சீரிஸ் எழுதி இருக்கிறார். (பல மாதங்களுக்கு பிறகு இதற்கு லிங்க் தேட வினவு தளத்துக்கு போக வேண்டி இருந்தது. 😦 ) முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள். ரதி இப்போது சுயமாக ஒரு ப்ளாக் ஆரம்பித்திருக்கிறார். போய்ப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம்

தொடர்புடைய பதிவுகள்:
இந்த தளத்தில் ரதியின் பதிவு


பிரபாகரன்

இன்னும் சிலர் பிரபாகரன் இருக்கிறார் என்று சொன்னாலும் இப்போது இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன் பேரையும் போட்டு அம்மன் பேரையும் நீக்கி இருக்கிறது. தடா நீதிபதி தட்சிணாமூர்த்தி

The case against the absconding accused A1 Prabhakaran and A2 Pottu Amman, alias Shanmuganathan Sivasankaran, is hereby dropped and the charges against them ordered abated

என்று கூறி இருக்கிறார்.

இரண்டு ஆச்சரியங்கள்.

  1. இன்னுமா ராஜீவ் கேஸ் நடக்கிறது? (ஒரு வேளை தீர்ப்பில் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று இருந்து அதை இப்போது நீக்கி இருக்கிறார்களோ?)
  2. சி.பி.ஐ. ரிப்போர்ட் வர இவ்வளவு நாளா?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம்

தொடர்புடைய சுட்டி: என்டிடிவி செய்தி


இலங்கை-புலிகள் போர் பற்றி ஒரு இலங்கை ராணுவ தளத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு excerpt:

A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombo for urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams.

நீ அடிக்கிறாப்போல அடி, நான் அழறாப்போல அழறேன் என்கிற மாதிரி இருக்கிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம்

தொடர்புடைய சுட்டி: முழு கட்டுரை


கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னா தான் இலங்கைக்கு போய் வந்த அனுபவம் பற்றி இட்லிவடை தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த இன்ஸ்டால்மெண்டில் இலங்கைத் தமிழர்கள் நிலை பற்றி எழுதி இருக்கிறார். இது பூரா பூரா anecdoctal பதிவு மட்டுமே. அது தெரியுமா இது தெரியுமா என்று ஆரம்பிக்காதீர்கள். ஆனால் கட்டாயமாக படியுங்கள்! ஓர் excerpt:

ராணுவம் சண்டையின்போது பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடத்தியதும் உண்மை. அதேபோல இயக்கமும் சிறுவர்களையும் பொது மக்களையும் கேடயமாகப் பயன்படுத்தியதும் உண்மை என்றார். ராணுவம் பயன்படுத்திய குண்டு பாஸ்பரஸ் குண்டுகள். ஒரு குண்டை எறிந்தால், அது ஒன்பது குண்டாகப் பிரிந்து தாக்குமாம். மேலே பட்டால் அந்த இடமே ரணமாகிக் கொப்பளித்துவிடுமாம். (ஒருவித புன்னகையுடன், இதை சப்ளை செய்தது உங்கட இந்தியாதான் என்றார்.)

மட்டகிளப்பிலிருந்து கேம்புக்கு தப்பிப்பதைத் தடுக்க, இயக்கம் பல்வேறு யுத்திகளைச் செயல்படுத்தியதாம். அதில் ஒன்று, அங்கே இருக்கும் ராணுவத்தவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள் என்பது. ஆனால் அப்படி நடந்தது குறைவுதான் என்றார். உடனே அப்படி நடக்கவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, நடந்தது என்றும் சொன்னார். ஆனால் புலிகள் சொன்ன அளவு நடக்கவில்லை என்றார். சட்டென, உங்கட ஐபிகேஎஃப் செய்ததைவிடக் குறைவுதான் சிங்களவர்கள் செய்தது என்றும் சொன்னார். ஐபிகேஎஃப்பும் எல்லா இடங்களிலும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் சில இடங்களில் மிக மோசமாக நடந்துகொண்டது என்றும் சொன்னார்.

செஞ்சோலை படுகொலை பற்றிச் சொன்னார். பள்ளியில் படிக்கும் சிறார்களை இரு நாள் பயிற்சிக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது இயக்கம். பயிற்சி கொடுத்தால் நிச்சயம் ராணுவம் அழிக்கும் என்று தெரிந்தே இதைச் செய்தார்கள். ராணுவத்துக்கு பயிற்சி பெறுவது பள்ளி சிறார்களா எனத் தெரியுமா தெரியாதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. முதல் குண்டு விழவும், பயிற்சி அளித்தவர்கள் சிறார்களை ஓடிச் சென்று வண்டியில் ஏறச் சொன்னார்கள். பயந்து போன பிள்ளைகள் வண்டியில் ஏறவும் வண்டியிலும் குண்டு விழுந்தது. படுகொலை ராணுவம் செய்ததுதான் என்றாலும், பயிற்சிக்கென அழைத்துச் சென்றது இயக்கம்தான் என்றார்.

கறுப்பு வெள்ளை என அடித்துவிடும் விஷயம் இல்லை இது. எல்லாருமே குற்றவாளிகள்தான் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. புலிகளுக்கு வாழ்வா சாவா பிரச்சினை, கேடயமாக இருந்து கூட நாலு தமிழர்கள் செத்தாலும் இயக்கம் வாழ வேண்டும் என்று நினைத்திருக்கலாம். இலங்கை அரசுக்கும் “போருக்கு” முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டிய கட்டாயம், விரும்பி சேர்ந்த புலிகளுக்கும் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்ட புலிகளுக்கும் இடையே வித்தியாசம் பார்ப்பது கஷ்டம், அதனால் எல்லாரையும் அடிப்போம் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் நடுவில் புகுந்து இந்த பாஸ்ஃபரஸ் குண்டு சப்ளை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன இந்தியாவுக்கு? புலிகளை ஒழிப்பது strategically important என்று யாரோ ஒரு ஃபாரின் ஆஃபீஸ் பாபு தீர்மானித்திருக்கிறார்!

ஹ. பிரசன்னாவின் நண்பர் மேலும் சொல்கிறார் –

பிரபாகரன் இறந்த அன்று எப்படி உணர்ந்தீர்கள் என்றேன். சட்டென அவர் இறந்துட்டதா இன்னும் தெரியலையே என்றார். பின்னர், 3 மாத காலம் நடந்த சண்டையின் வெறுப்பில் பிரபாகரன் மீது கடும் கடுப்பில் இருந்தோம். ஆனால் அவர் இறந்ததாகச் சொன்ன அன்று ரொம்ப வருத்தப்பட்டோம் என்றார். இனி ஏதேனும் பிரச்சினைகள் என்றால் என்ன செய்வது என்றும் தோன்றியதாகச் சொன்னார். ஆனால் இலங்கை ராணுவம் அவரது உடல் போன்ற ஒன்றையும், அவரது முகம் போன்ற ஒன்றையும் வைத்து பொய் சொல்லிவிட்டதாகச் சொன்னார். உண்மை என்றால் ஏன் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

சிரிசபாரத்தினம் இறந்த நாளிலிருந்து பிரபாகரனுக்கு எதிர்ப்பு நிலை எடுப்பவன் நான். ஆனால் ஹ. பிரசன்னாவின் நண்பர் சொல்வது போலத்தான் நானும் பிரபாகரனின் மரணச் செய்தி கேட்டபோது வருத்தப்பட்டேன். ஈழத் தமிழர்களுக்கு இருந்த பெரும் பாதுகாப்பு அரண் தகர்ந்துவிட்டது என்று தோன்றியது. ஆனால் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று என்னால் நம்பமுடியவில்லை.

இனி மேலாவது விடிவு வந்தால் சரி.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
ஹரன் பிரசன்னாவின் பதிவு
பிரபாகரன் மறைவு?
பிரபாகரன் – ஒரு மதிப்பீடு


வாசிப்பு அனுபவம் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியாதது என்று எனக்கு தோன்றுகிறது..ஆனாலும், ஒரு சிறுகதை தந்த வாசிப்பு அனுபவம் என்ன என்பதை இந்தப் பதிவில் எழுத முயற்சி செய்யப் போகிறேன்.

பல வருஷங்களுக்கு முன் விகடனில் பாரதியார் நூற்றாண்டை முன்னிட்டு பல எழுத்தாளர்கள் பாரதியின் வரிகளை வைத்து கதை எழுதினார்கள். எனக்கு இன்னும் ஞாபகம் இருப்பது சுஜாதா எழுதிய ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற கதைதான்.

அவர் எடுத்துக்கொண்ட வரி “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்”. ஒரு இலங்கை தமிழ் நூலகத்தில் புத்தகங்கள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. இதை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை.

ஏதோ ஒரு கருத்தரங்கமோ என்னவோ. அமைச்சர் வருகிறார். “தமிழறிஞர்” ஒருவர் – பல பதவி கனவுகளில் இருப்பவர் – சிறப்புரை. அப்போது அவருக்கு தெரிந்த ஒரு ஈழத் தமிழன் – அவன் குடும்பம் கலவரத்தில் அழிந்துவிட்டது – ஒரு லட்சம் புத்தகங்கள், ஒரு நூலகம், ஒரு அறிவு சொத்து, ஒரு mob -ஆல் எரிக்கப்பட்டதை பற்றி இங்கே யாருக்கும் தெரியவில்லை, எடுத்து சொல்ல வேண்டும் என்று ஆவேசத்தோடு இருக்கிறான். அவன் குடும்பம் அழிந்ததை விட இதுதான் முக்கியமான விஷயமாக படுகிறது, இது யாருக்கும் தெரியவில்லையே, தெரிந்தவர்களும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆவேசத்தில் இருக்கிறான். “தமிழறிஞர்” சபையில் அமைச்சர் முன்னால் எல்லாம் சுமுகமாக இருக்க வேண்டும், அமைச்சர் embarass ஆனால் தன் பதவிக் கனவு என்னாகுமோ என்ற பயத்தில் என்று போலீசை வைத்து அவனை அப்புறப்படுத்திவிடுகிறார்.

சுஜாதாவின் மிக சிறந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இதற்கு அவர் வேறு வரிகளை – உதாரணமாக “சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதற்கண்டும் சிந்தை இரங்காரடி” சொல்லி இருக்கலாம். இந்த வரிகளில் உள்ள வஞ்சப் புகழ்ச்சிதான், sarcasm-தான் இந்த சிறுகதையை உயர்த்துகின்றன.

25 -30 வருஷம் கழித்தும் இந்த கதை மறக்கவில்லை. ஏனென்றால் சுஜாதா ஸ்கூல் பையனுக்கு சொல்வது போல பார்த்தாயா இது எவ்வளவு பெரிய அநியாயம் என்று சொல்வதில்லை. சிங்களத் தீவுக்கு பாலம் என்று சொல்வதில் இருக்கும் sarcasm சுர்ரென்று உரைக்கிறது. அதே நேரத்தில் இது ஒரு propaganda கதைதான். இதில் இருப்பது art இல்லை, craft-தான். இந்த கதை எந்த தருணத்தை நோக்கி முன்னே போகிறதோ – அந்த தமிழறிஞரின் சுயநலம் – என்பது உங்களை ஐயோ என்று அலற வைக்கும் தருணம் இல்லை, மனிதனின் சுயநலம் இவ்வளவு கேவலமானதா என்று நம்மை நாமே வெறுக்கும் தருணமும் இல்லை. அலற வைக்கும் தருணம் நூலகம் எரிக்கப்பட்டதுதான். சாவுகளை கேட்டு மனம் மரத்து போயிருந்த காலம் அது. அப்போதெல்லாம் பேப்பரை திறந்தால் பஞ்சாபில் நாலு பேர் சாவு என்று செய்தி வராத நாளே கிடையாது. அந்த சமயத்தில் வேறொரு விதமான கொடுமை, உலக சரித்திரத்தில் மிக அபூர்வமாகவே நடந்திருக்கும் கொடுமை, உங்கள் கண் முன்னால் வைக்கப்படுகிறது. அந்தக் கட்டத்தில் அடப் பாவிகளா என்று மனதுக்குள் ஒரு கூக்குரல். இன்னும் ஓரிரு பக்கம் போனபின் அந்த தமிழறிஞரை பார்த்து அடச்சீ என்று ஒரு அருவருப்பு. பிறகு சிங்களத் தீவுக்கு பாலம் என்று சொல்லி இருக்கும் வரிகளை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து முகத்தில் ஒரு சுளிப்பு. மனதில் எழுந்த அந்த கூக்குரல் இந்த சிறுகதையின் பலம் மட்டுமல்ல, பலவீனமும் கூட. அது இந்த கதையின் க்ளைமாக்சைக் கூட dominate செய்கிறது.

படிக்க வேண்டிய கதை, மறக்கக் கூடாத துயரம் என்று சொல்லத் தோன்றுகிறது. படிக்க வேண்டிய கதை என்று நிறுத்தாமல் துயரத்தைப் பற்றியும் பேசுவதுதான் இந்த கதையின் தோல்வி. ஆனால் அதைத்தான் சுஜாதா விரும்பி இருக்க வேண்டும். இது எழுத்தாளனின் வெற்றி.

ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. நினைத்து பாருங்கள், இது நம் அனைவரின் செல்வம். எரித்தவனுக்கும் இந்த செல்வம் சொந்தம். எரித்ததால் அவனுக்கு எந்த லாபமும் இல்லை. லும்பத்தனம், அவ்வளவுதான்.

இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்திருப்பார்கள். இன்னும் சிந்தை இரங்காதவர்கள் அநேகம். அப்படி இறந்தவர்களை அந்த “அறிஞர்” போல சுய லாபத்துக்காக அரசியல் ஆக்கும் கும்பல்தான் இன்னும் தமிழ் நாட்டில் மலிந்து கிடக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
உயிர்மையில் வந்த ஒரு கட்டுரை
இந்த கதையைப் பற்றி தமிழ் பேராசிரியர் அ. ராமசாமி
கொளுத்தப்பட்ட ஜாஃப்னா நூலகம்
இந்த வாரம் சிறுகதை வாரம்


இந்த தளத்தில் அடிக்கடி எழுதும் ரதி தன் அனுபவங்களை ஒரு பதிவாக எழுத ஆரம்பித்திருக்கிறார். கட்டாயமாக படியுங்கள்.

வினவு தளத்தை பற்றி எனக்கு பல விமர்சனங்கள் உண்டு, ஆனால் அவர்கள் மீது கொஞ்சம் மரியாதையும் உண்டு. தீவிர புலி எதிர்ப்பாளர்கள் அங்கே கொஞ்சம் அதிர்ச்சி அடையலாம்.


ஹிந்துவில் ஜூலை நான்கு அன்று வந்திருக்கிறது.

சுட்டி அளித்த சேதுராமனுக்கு நன்றி! விகடனில் வேறு மாதிரி எழுதுகிறார்கள், சேதுராமன் விகடன்காரர்கள் சென்சேஷனுக்காக அப்படி செய்கிறார்கள் என்று கருதுகிறார். இது சும்மா வெளிநாட்டவர்களுக்கு காண்பிக்கும் ஷோவா, இல்லை நிஜம்தானா? உண்மையிலேயே நிலை என்ன என்று சொல்லக் கூடியவர்கள் யாராவது இணையத்தில் எழுதுகிறார்களா?


சில மறுமொழிகளை பார்த்ததும் எழுந்த எண்ணங்கள் – பத்து பாயிண்ட்கள்:

1. இன்றைய நிலையில் இலங்கை அரசுக்கு உட்பட்ட ஈழம் என்பதுதான் ப்ராக்டிகல்.

2. நான் தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்று நம்புபவனில்லை. நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி. விடிந்தால் சரி. கஷ்டங்கள் தீர்ந்தால் சரி. தேசங்களை பிரிக்கும் கோடுகள் எல்லாம் செயற்கையானவை.

3. நான் பேசுவது லாஜிக். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அநேகம் பேர் ஏதோ ஒரு விதத்தில் இழப்பை சந்தித்தவர்கள். இலங்கையில் இந்த போரில் ஐம்பதாயிரம் பேராவது இறந்திருப்பார்கள் என்று சொல்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். காயம் பட்டவர்களுக்கு சிங்களர்களோடு ஒன்றாக ஒரு நாளும் வாழ முடியாது, தனி ஈழம் மட்டுமே தீர்வு என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர்களின் இழப்பு கடந்த காலம். அவர்கள் நிலை காம்புகளில் வாழும் தமிழர்களின் நிலையை விட பல மடங்கு பெட்டர்.

4. இன்றைய முக்கிய பிரச்சினை புலம் பெயர்ந்த தமிழர்கள், அவர்களின் இழப்புகள் இல்லை – இலங்கையில் வாழும் அகதிகளாகிவிட்ட தமிழர்கள்தான், அவர்கள் கஷ்டங்கள்தான் மிக முக்கியம். புலம் பெயர்ந்த தமிழர்களின் காயங்களுக்காக பழி வாங்குவதை விட, அவர்களுக்கு ஆறுதல் தேடுவதை விட, இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை மாறுவது மிக முக்கியம். அது நடந்த பிறகுதான் அடுத்ததை யோசிக்க வேண்டும்.

5. புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை கஷ்டம்தான். ஆனால் புலிகளால் இழப்பை சந்தித்தவர்களும் தமிழர்களில் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் புலிகள் கூடவே கூடாது என்று நினைக்கத்தான் செய்வார்கள். நாம் அனைவரும் கடந்த கால கசப்புகளை தாண்டி செல்ல வேண்டிய நேரம் இது.

6. இந்த நிலையில் இந்தியாவுக்கு கடமை இருக்கிறது. இந்தியத் தமிழர்களுக்கு கடமை இருக்கிறது. இலங்கை அரசுக்கு இத்தனை நாள் வால் பிடித்தாகிவிட்டது. இலங்கை அரசு ஜெயித்தாகிவிட்டது. இனப் படுகொலைக்கு சின்ன அளவிலாவது இந்தியாவும் உதவி செய்தாகிவிட்டது. இலங்கை அரசை ஐ.நா. கண்டிக்க விடாமல் உதவி செய்தாகிவிட்டது. இப்போது ராஜபக்சே மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய காலம்.

7. காம்ப் தமிழர்களுக்கு உதவுதல், செஞ்சிலுவை சங்கம், வாலண்டியர்கள் சுலபமாக காம்ப்களுக்கு செல்தல், காம்பில் உள்ள குடும்பங்களை இணைத்தல், காம்பில் உள்ளவர்களுக்கு உணவு+உடை+மருத்துவம்+கல்வி, தமிழர்கள் வீடு திரும்புதல், போரில் ஈடுபட்டவர்களுக்க் பொது மன்னிப்பு, தமிழர்களுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் கிடைக்க வைப்பது, முதலில் இவற்றுக்கெல்லாம் வெளிப்படையான டைம் டேபிளை அறிவித்தல் இதற்கெல்லாம் ராஜபக்சே மீது அழுத்தம் இருக்க வேண்டும்.

8. இத்தனை நாள் சும்மா இருந்தோம, சரித்திரம் அதற்கே நம்மை – இந்திய அரசை – எல்லாம் மன்னிக்குமா தெரியாது. ஆனால் புலிகள், இந்தியாவில் நுழைந்து ஒரு முன்னாள் பிரதமரையே கொன்றவர்கள், எந்த விதத்திலும் பயனடையக் கூடாது என்று நினைத்தோம் என்று ஒரு சாக்காவது சொல்லலாம். அது சரியோ தவறோ, ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது. இனி அதுவும் இல்லை. இப்போதும் நாம், இந்திய அரசு சும்மா இருந்தால் சரித்திரம் நம்மை எந்த நாளும் மன்னிக்காது. இதற்கான அழுத்தத்தை, ஆக்க பூர்வமான முயற்சிகள் இப்போதே ஆரம்பித்தாக வேண்டும். ஏற்கனவே கால தாமதம் ஆகிவிட்டது.

9. தேஷமிண்டே மட்டி காது, மனுஷ்யலு என்றார் பிரபல தெலுகு கவிஞர் ஸ்ரீ ஸ்ரீ. (தேசம் என்றால் மண் இல்லை, மனிதர்கள் என்று அர்த்தம்) இந்திய அரசு என்றால் நாம்தான். மன்மோகன் சிங் மட்டும் இல்லை. குறைந்த பட்சம் உங்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு நம் கவலைகளை சொல்ல முயற்சிக்கலாம். பிரபல தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள பிரபல பத்திரிகைகளான டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டெக்கான் க்ரானிகில், இந்தியா டுடே, வீக், போன்றவை என்னதான் சொல்கின்றன என்பதை தமிழர்களுக்கு சொல்ல முயற்சிக்கலாம். தமிழகத்துக்கு வெளியே என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்தால்தான் அவர்களை influence செய்ய முடியும். நிறைய பேருக்கு இலங்கை என்றால் புலிகள்தான், ராஜீவ் கொலைதான். அதற்கு மேலும் பிரச்சினை இருக்கிறது என்று தெரிய வைக்கும் பொறுப்பு தமிழர்களுடையது. அவர்களுக்கு தெரியவில்லை என்றால் தவறு அவர்களுடையது இல்லை, நம்முடையது. நம் கண்ணோட்டத்தையே ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருந்தோம் என்றால் மேலே எப்படி செல்வது? முடிந்தால் ஆங்கிலத்தில் பிளாக் எழுதலாம். (யார் படிப்பார்கள் என்பது அடுத்த விஷயம்) ஸ்டாலின், இன்றைய வெளிநாட்டு உறவு உதவி மந்திரி சஷி தரூர் போன்றவர்களின் தளங்களில் மாய்ந்து மாய்ந்து எழுதலாம். ஆக்க பூர்வமாக வேறு என்ன செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்களேன்! நானும் அதை வைத்தே இன்னும் இரண்டு மூன்று பதிவு ஓட்டி விடுகிறேன்!

10. நீங்கள் புலிகளை முழு மூச்சாக ஆதரிப்பவராக இருந்தாலும் இப்போதைக்கு அடக்கி வாசிப்பது நல்லது. சாம பேத தான தண்டம் என்று சொல்வார்கள். தண்டம் இப்போது தோற்றுவிட்டது. பேத தானத்துக்கு இப்போது வழி இல்லை. சாமம் (நல்ல விதமாக பேசி பார்ப்பது) மட்டும்தான் இப்போதைக்கு மிச்சம் இருக்கும் வழி.

பின் குறிப்பு: விகடன் பொதுவாக புலிகள் ஆதரவு நிலை எடுத்திருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால் நான் மீள்பதிவு செய்த விகடன் கட்டுரை இலங்கை அரசுக்கு உட்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகள் என்ற நிலையில்தான் பேசுகிறது. இனி செய்ய வேண்டியவை என்று குறிப்பிடப்பட்டிருப்பவை இலங்கை அரசு செய்ய வேண்டியவையே. இலங்கை அரசுக்கு இவற்றை செய்ய இந்திய அரசு பிரஷர் கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு government-in-exile அமைக்க முயற்சிப்பதை தவறு என்று கூட சொல்கிறது. தனி ஈழம் வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு


சமீபத்திய விகடனில் வந்த கட்டுரை. விகடனுக்கு நன்றி! இந்த கட்டுரை முக்கியமானது என்று நினைப்பதால் இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். எழுதியவர் பேர் ப. திருமாவேலன். அவருக்கும் நன்றி! ஓவர் டு விகடன்!

கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

’30 ஆண்டு காலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்து விட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வ தேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். ‘ஐந்தாம் யுத்தம்’ கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று ‘தமிழீழத்தில்’ தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.

அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்….

1. ‘கூடாரங்களைப் பிரியுங்கள்!’
ஈழத் தமிழரின் இன்றைய பெயர், ‘கூடார மக்கள்’. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண்டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், ‘இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்’ என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள். கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது சிங்கள அரசு. ‘கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். ‘பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு’ என்று சொல்லிவிட்டார்கள். ‘இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்’ என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!

2. காணவில்லை… காணவில்லை!
ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன. இதில் பெண்களும் சிறுவர்களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!

3. வெள்ளை அறிக்கை
நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்தவர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேதமானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?
முதல்கட்டமாக… பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!

4. பொதுமன்னிப்பு
“படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!” – இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. “வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!

5. ஏதாவது ஒரு நிவாரணம்
போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளை கொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள். ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!

6. பயமற்ற சூழ்நிலை
‘இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை’, ‘பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்’ என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணுவத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட்டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்களுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!

7. யாழ்ப்பாணம்
ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டுகளாக இருக்கும் யாழ்ப்பாணம், ‘எமர்ஜென்ஸி’ பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப்பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!

8. கொழும்பு
எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக்கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!

9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்
புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்
இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேரடியாகப் பார்க்க யாரையும் அனுமதிக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக்கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்க வைத்தால் மட்டுமே அங்கு உள்ளவர்களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.

“20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்” என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று!

இதை படிக்கும்போது மனம் மிக கனக்கிறது. மேலே எதுவும் எழுதப் பிடிக்கவில்லை.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு

அடுத்த பக்கம் »