Books



சமீபத்தில் நான் படித்த ஒரு அருமையான புத்தகம் இது.  நண்பர் திருமலைராஜனுக்கு நன்றி.

ஜெயிக்க வேண்டும் —  இந்த உந்துதல் மனதில் எழாத மனிதர்கள் எவருமே இருக்க முடியாது.  ஆனால் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வெற்றியைத் தேடித் தந்து விடாது.  அதற்கு முறையாக — திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும்.  அதிலும் உடனே வெற்றி கிட்டாமல் தோல்விகள் ஏற்படக் கூடும்.  அவற்றையும் துணிவுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து உழைக்க வேண்டும்.

இதன் ஆசிரியர் ஔரங்கசீப் தனது முன்னுரையில் கூறுகிறார்…
ஒன்பது துறைகளைத் தேர்ந்தெடுத்து,  ஒவ்வொன்றிலும் முன்னணியிலுள்ள தமிழர்களின் பட்டியலைத் தயாரித்தோம்.   இரண்டாவது கருத்துக்கே இடமில்லாத அளவு வெகு நிச்சயமாகச் சாதித்தவர் என்று ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமாயிருந்தது.

ஒன்பதே வாரங்களில் இது முடிந்து விட்டபோது, ‘என் நிறுத்தி விட்டீர்கள் ?’  என்று தான் சண்டை போட்டார்கள்.  விளையாட்டுத் துறையிலிருந்து யாரும் பேசாதது பற்றியும்,  மொத்தத் தொகுப்பிலும் ஒரு பெண் கூட இல்லாதது பற்றியும் சிலர் சுட்டிக் காட்டினார்கள்.

இவற்றுக்குப் பிரத்தியேகக் காரணங்கள் ஏதுமில்லை.  இயல்பாக விடுபட்டுப் போயின;  அவ்வளவுதான்.

இந்தச் சாதனையாளர்களின் வாழ்கையைக் கூர்ந்து பார்த்தபோது எனக்குத் தோன்றியவை இவை…
  1. யாருமே தான் தேர்ந்தெடுத்த துறையைக் காதலிக்கத் தவறவில்லை.
  2. ஒரே சமயத்தில் யாருக்கும் இரு ஆர்வங்கள் இருக்கவில்லை.
  3. அத்தனை பேரும் கர்ம யோகிகளாயிருக்கிறார்கள்.
  4. கலையைக் கொச்சைப் படுத்தாத பேராண்மை மிக்கவர்களாயிருக்கிறார்கள்.
  5. வெற்றி எத்தனை தொலைவில் இருந்தாலும் எட்டிப் பறிக்கும் வெறியை இறுதி வரை விடாமல் வைத்திருக்கிறார்கள்.  சோதனைகளில் துவண்டு போவதில்லை.
  6. கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வற்றாமல் வைத்திருக்கிறார்கள்.
  7. சாதித்து விட்டோம் என்கிற நிறைவு இதுவரை இவர்களுக்கு ஏற்படவே இல்லை.

இந்த ஒரு வரி பதிப்பீடுகளை நீங்கள் இவர்களது வாழ்வனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் .  வெற்றியின் சூட்சுமம் புலப்படக் கூடும்.

ஜெயித்த கதை சொல்பவர்கள்….

பிரபஞ்சன் – எழுத்தாளர்
வை.கோ.  – அரசியல்வாதி
பத்மவாசன் – ஓவியர்  (இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில்….)
ஜெயேந்திரா – விளம்பரப்பட இயக்குனர்
பழனிபாரதி – பாடலாசிரியர்
பார்த்திபன் – திரைப்பட இயக்குனர்
சுகி சிவம் – சமயச் சொற்பொழிவாளர்
ரா.கி. ரங்கராஜன் – பத்திரிகையாளர்
விஜய்சிவா (கர்நாடக இசைக் கலைஞர்)

உங்களுக்கு ஒரு சுவையான தகவல்.  மதி நிலையம் வெளியீடாக 1999 –ம் ஆண்டு  ஔரங்கசீப் என்ற புனைபெயரில் எழுதியவர் வேறு யாரும் இல்லை.  எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.ராகவன் தான்.


தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன.  ஐயர் என்ற சொல் சங்க காலத்தில் ‘தலைவர்’ என்ற பொருளில் தான் பயின்று வந்தது.  இன்று அது கேலி வார்த்தையாகிவிட்டது.
‘அந்தணன்’ என்ற சொல்லும் அப்படி காலப்போக்கில் பொருள் மாறி வந்துள்ளது.  திருக்குறள் ‘அறவாழி அந்தணன்’  என்று கடவுளைக் குறிக்கிறது.  மற்றொரு குறளில்,  ‘அந்தணர் என்போர் அறவோர்  மற்றெவ்வுயிர்க்கும்  செந்தண்மை பூண்டொழுகலால்’  என்று எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்துபவர்களை அந்தணர் என்றது.

— சுஜாதா (வாரம் ஒரு பாசுரம்)

அந்தணர் என்போர் அறவோர்மற்  றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
— எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்களை மட்டும் ‘அந்தணர்’ என்று உயர்த்தலாம்.

திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது.


சரித்திர நாவல்கள் பதிவுகளுக்கு வந்த மறுமொழிகளில் டணாய்க்கன் கோட்டை பற்றி சிலர் குறிப்பிட்டிருந்தனர். நானோ இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. யாராவது அறிமுகப்படுத்தி வையுங்களேன் என்று கேட்டிருந்தேன். ரீடர் என்பவர் இதைப் பற்றி அம்ருதா என்ற இணைய இதழில் வந்திருந்தது என்று சொல்லி ஒரு மறுமொழி எழுதி இருந்தார். ஃபான்ட் பிரச்சினையால் அம்ருதா இதழை படிக்க முடியவில்லை. அதனால் எனக்கு இதை எழுதியது ரீடரா, இல்லை இமையம் என்பவரா, இது அம்ருதா இதழிலிருந்து எடுக்கப்பட்டதா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எப்படி இருந்தாலும் அம்ருதா இதழ், மற்றும் ரீடருக்கு நன்றி! மிக அருமையான அறிமுகம். நாவலைப் படிக்க வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்துகிறது. நாவல் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை முன்னூறு ரூபாய். ஓவர் டு ரீடர்!

அம்ருதா சுட்டி 1, அம்ருதா சுட்டி 2

டணாயக்கன் கோட்டை – இமையம்

1956ல் ‘நவ இந்தியா’ இதழில் தொடராக வெளிவந்து வாசகர்கள் கவனத்தைப் பெதும் தன் பக்கம் ஈர்த்ததோடு, ராஜாஜி, மு.வரதராசனார், ஜி.டி.நாயுடு போன்றவர்களால் போற்றப்பட்ட நாவல் ‘டணாயக்கன் கோட்டை’. இந்நாவல் தமிழில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 1959லேயே மொழியாக்கம் செய்யப்பட்டு, மிக முக்கியமான பத்திரிகைகளில் தொடராக வெளி வந்துள்ளது. கன்னட, மலையாள வாசகர்களிடத்திலும் சிறந்த மதிப்பைப் பெற்றுள்ளது இந்நாவல். நாவல் வெளிவந்து சரியாக அரை நூற்றாண்டுக் காலம் முடிந்துவிட்டது. இப்பொழுதும் இந்த நாவலைப் படிக்கும்போது, தற்காலத்தில் எழுதப்பட்டது போல அவ்வளவு ஈர்ப்புடையதாகவும், பல விதங்களில் சுவாரசியம் மிகுந்ததாகவும் இருக்கிறது. இதற்குக் காரணம் கதையின் தளமும், கதை சொன்ன விதமும்தான். இ. பாலகிருஷ்ண நாயுடு, தேர்ந்த கதை சொல்லியாக இருந்திருக்கிறார் என்பதற்கு ‘டணாயக்கன் கோட்டை’ நாவலே சாட்சியாக இருக்கிறது.

திப்பு சுல்தானின் காலம் 10.11.1750 முதல் 4.5.1799 வரை ஆக இருந்தாலும், இந்நாவலில் திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலத்தின், பதினேழு ஆண்டுகள் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் திப்பு சுல்தானுடைய வரலாற்றை, அரசாட்சி முறையை சொல்வது போல தோற்றம் தந்தாலும், நாவலின் மையம் அதுவல்ல. மைசூர் ராஜ்ஜியத்தில் பதினேழு ஆண்டு காலம் நடந்த அரசியல் நடவடிக்கைகள், போர்கள், படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள், சமூக மாற்றங்கள் ஆகிய அனைத்தையும் விவரிக்கிறது நாவல்.

திப்பு சுல்தானின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசாட்சி, நிர்வாகம், போர், ஆங்கிலேயரிடம் வீழ்தல் என்பதெல்லாம் நாவலின் ஒரு பகுதி மட்டுமே. நாவலில் பல கிளைக்கதைகள் வருகின்றன. குறிப்பாக டணாயக்கன் கோட்டை பாளையக்காரர்களான பாலராஜா, தேவராஜா என்பவர்களுடைய கதை அவற்றில் ஒன்று. புலியைப் பிடித்த வீரம்மா என்பவளின் கதை, மதவெறியன் பீர் ஜட்டா, ராணி லட்சுமி அம்மிணி, வெள்ளையர்களின் சூழ்ச்சி, திவான் மீர் சடக் என்று அடுக்கடுக்கான பல கிளைக் கதைகளை தன்னுள் கொண்டுள்ளது நாவல். இப்படியான பல கிளைக் கதைகள் நம்முடைய புராண, இதிகாச, ஐதீகக் கதைகளை நினைவூட்டுகின்றன. கிளைக் கதைக்குள்ளேயே பல கிளைக் கதைகள்; அக்கதைக்குரிய மனிதர்களும், அவர்களுடைய உலகமும் மிக நேர்த்தியான முறையில் விவரிக்கப்பட்டுள்ள விதம் மலைப்பையும், வியப்பையும் தருகிறது. மறந்து விடக்கூடிய பாத்திரங்கள் என்று நாவலில் ஒன்று கூட இல்லை.

நாவல் முழுவதும் பல அசாதாரணங்கள் நிறைந்து கிடக்கின்றன. அசாதாரண சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் நாவலை கட்டமைத்த விதத்தில், கதை சொன்ன விதத்தில், கதையைச் சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், மொழியின் எளிமையால், அசாதாரணங்களும் சாதாரண நிகழ்வுகளாக, நம்பும்படியாக இருக்கின்றன. அசாதாரணங்கள் நாவலின் போக்கில், கதையின் போக்கில் கரைந்து, வாசகர்கள் கவனத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறது. இந்தக் குணத்தால், இது வரை தமிழில் எழுதப்பட்டுள்ள எல்லா வரலாற்று நாவல்களைக் காட்டிலும், இந்த நாவலுக்கு தனித்த சிறப்பான இடம் உண்டு. அதே மாதிரி நாவலாசியருக்கும் உண்டு. வரலாற்றை மட்டுமே பதிவு செய்யாமல் வரலாற்றில் இடம் பெற்ற பாத்திரங்களின் உள் மன உண்மைகளையும், வேட்கைகளையும் ஆராய்ந்து சார்பற்ற நிலையில் எழுதப்பட்டுள்ளதால், தமிழ் நாவல்களின் இலக்கிய வரலாற்றிலும் இந்த நாவலுக்கு முக்கிய இடம் உண்டு.

வரலாற்றில் நடந்த எல்லாப் போர்களும், படையெடுப்புகளும் பேராசையாலும், பதவி, அதிகாரம், ஒடுக்குதல் என்று தமது வல்லமையை நிரூபிக்க நடந்தவைகளே. வரலாறு நெடுகிலும் இது வரை நடந்த போர்களில், படையெடுப்புகளில், ஆக்கிரமிப்புகளில் ஒன்றைக் கூட, நன்மைக்கும் தீமைக்கும் எதிராக நடந்தவை என்று நம்மால் அடையாளப் படுத்த முடியாது. இதை நிரூபிக்கும் விதமாகத்தான் ‘டணாயக்கன் கோட்டை’ நாவல் இருக்கிறது.

இந்நாவலில், அதிகாரத்திற்காக நடைபெறும் சூழ்ச்சிகளும், தந்திரங்களும், நயவஞ்சகங்களும், கயமைத்தனங்களும், உடன்படிக்கைகளும் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக நம்ப வைத்து ஏமாற்றுதல், மோசடி செய்தல், துரோகம் செய்தல், சூது, கபடம், உறவாடிக் கெடுத்தல், பலியாதல், பலி கொடுத்தல், ராஜ விசுவாசம், ராஜதுரோகம், சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி என்று அடுக்கடுக்காக நடக்கிறது. அதோடு; கொலை, கொள்ளை, சூறையாடுதல், பெண் மோகம், ராஜபோகம், ஆட்சிக் கவிழ்ப்புகள், அதற்கான யுக்திகள் என்று விவக்கப்படுகிறது.

திப்பு சுல்தானின் ஆட்சி வீழ்ச்சிக்குக் காரணமாக இவ்வளவு காரியங்கள் நடக்கின்றன. இந்தக் காயங்களைத்தான் நாவல் மையப்படுத்துகிறது. திப்பு சுல்தானின் வீழ்ச்சியையோ, வெள்ளையன் ஆக்கிரமிப்புப் பற்றியோ நாவல் பேசவில்லை. அதிகார மாற்றம் நிகழ்வதற்குக் காரணிகளாக இருந்தவை பற்றி மட்டுமே பேசுகிறது. அதையும் சுவாரசியத்துடன் பேசுகிறது. இதுதான் இந்நாவலின் மிகப் பெரிய பலம்.

அதிகாரத்திற்காகவும் பேராசையாலும் நடக்கும் போரில் ஆயிரம் ஆயிரமாக மனிதர்கள் பலியாகிறார்கள்; பலி கொடுக்கப்படுகிறார்கள். போரில் மதிப்பு வாய்ந்தது மனித உயிர்களல்ல; வெற்றி என்ற சொல் மட்டும்தான். ஒரே ஒரு மனிதனுடைய ஆசைக்காகவும், அதிகாரத் தேவைக்காகவும்தான் ஆயிரம் ஆயிரமாக மனிதர்கள் பலியாகிறார்கள். பலியாக்கப்படுகிறார்கள். அந்த ஒரு மனிதனுடைய ஆசையும், அதிகாரத்தை நோக்கிய விழைவும் நேர்மையானதாக இல்லை. வார்த்தைகளுக்கும் ஆணைகளுக்கும் இருக்கும் மரியாதை, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மனித உயிர்களுக்கு இல்லை என்பதைத்தான் இது வரை நடந்த எல்லாப் படையெடுப்புகளும் போர்களும், உறுதி செய்கின்றன.

அர்த்தமற்றுப் போன உயிர்ப் பலிகள், ஆயிரம் ஆயிரமாக கொன்று குவித்தாலும் தணியாத கோபம், வெறி, த்திரம், பகை, ஆவேசம், துவேஷம், காலத்திற்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறு மாறும் உடன்படிக்கைகள், நம்ப வைத்து நாடகமாடி ஏமாற்றுதல்; காட்டிக் கொடுத்தல் இவைகள்தான் அரசாக, அரச நீதியாக, அரசாட்சியாக வரலாறு நெடுக நடந்துள்ளது. இவற்றைத்தான் ‘டணாயக்கன் கோட்டை’ நாவலிலும் பார்க்கிறோம்.

நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வெள்ளப் பெருக்கின்போது ஆற்றைக் கடப்பதற்கான வழிமுறை, கிணற்றுக்குள்ளிருக்கும் குகைக் கோவிலிருந்து கோட்டைக்கு நூலேணி மூலம் செல்லுதல், கோவில் கருவறையில் குழந்தை வளருதல், சுரங்கப் பாதைகள், கோட்டைகளின் அமைப்பு முறை என்று, வரக் கூடிய விவரிப்புகள் பிரமாண்டமானதாக இருக்கிறது. அதே மாதி காரியங்களைச் செய்வதில் அக்கால மனிதர்களுக்கு இருந்த சாதுர்யம், மதிநுட்பம், சமயோசித புத்தி என்று பல அம்சங்கள், வாசகர்கள் மனத்தை ஈர்க்கிறது. அதோடு அக்காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கவழக் கங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக ஒற்றுமை, இனவேற்றுமை, சமயம் சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் அழகுற பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நாவலில் வரக்கூடிய முக்கிய கதாபாத்திரங்களான திப்பு சுல்தான், ராணி லட்சுமி அம்மிணி, வீரம்மா, வீராஜி, திவான் மீர் சடக், யாசின்கான், சல்லிவன், சுல்தானா பஃருன்னிஸா பேகம், பாலராஜா, தேவராஜா மற்றும் சிறு கதாபாத்திரங்களான மாஸ்தி, சோலைக்கிளி, சீதம்மா, ஈஸ்வ, குன்னம்மா, அலமேலு, ரங்கம்மா போன்ற கதாபாத்திரங்களும் நாவலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள்.

நாவலில் தேவையற்ற பாத்திரம் என்றோ, தேவையற்ற ஊளைச் சதைப்பகுதி என்றோ சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு மிகவும் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட சிறந்த நாடகக் காட்சி போல, நாவலின் ஒவ்வொரு பகுதியும் அமைந்துள்ளது.

ஒவ்வொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் எப்போதும் சதி, சூழ்ச்சி, நயவஞ்சகம் மட்டுமே இருப்பதில்லை. இவற்றோடு சேர்த்து மதமும், அதனுடைய மூட நம்பிக்கைகளும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதைத்தான் திப்பு சுல்தானின் கடைசி நாள் நிகழ்ச்சி காட்டுகிறது.

‘டணாயக்கன் கோட்டை’ நாவலில் வரக்கூடிய எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் மோசடிப் பேர்வழிகளாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கிறார்கள். திப்பு சுல்தான் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இருக்கிறான். அதனால்தான் வெல்ல முடியாத ‘மைசூர் புலி’ என்ற திப்புசுல்தானின் ஆட்சி, மிக எளிதாக வீழ்ச்சியுறுகிறது. இந்தியர்களே வெள்ளையர்களுக்கு யானை மீதும், குதிரை மீதும், தங்கம், வைரம் என்று மூட்டை மூட்டையாக ஏற்றி விட்டு, இந்திய மன்னர்களை ஆட்சியை விட்டு நீக்கிய அவலத்தின் ஒரு பகுதியை இந்நாவலில் காண்கிறோம். உலகெங்குமிருந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும், அதிகார விழைவால், காட்டிக் கொடுத்ததால் மட்டுமே வீழ்ந்து விடவில்லை. உலகில், என்று துப்பாக்கியும், பீரங்கிக் குண்டும் கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றே பிராந்தியம் சார்ந்த, வட்டாரம் சார்ந்த குறுநில மன்னர்களின் ஆட்சி வீழ்வதற்கான அத்தியாயம் தொடங்கியது.

மிகப் பெரிய ராஜ்ஜியங்கள் துப்பாக்கியாலும், பீரங்கிக் குண்டுகளாலும்தான் நிர்மாணிக்கப்பட்டது. பிராந்திய ஆயுதங்களான வில், அம்பு, ஈட்டி, எரிவாணம் போன்றவைகள் துப்பாக்கியின் முன், பீரங்கியின் முன் செயலிழந்து போயின. ஒரு வகையில் யுத்தத் தயாரிப்பு சம்பந்தமான விஞ்ஞானம்தான் எல்லா நாடுகளையும் அடிமைப்படுத்தியது.

திப்பு சுல்தான் வெள்ளையர் முன் தோற்றுப்போகவில்லை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் முன்தான் தோற்றுப்போனான். உலகில் அடிமைப்பட்ட ஒவ்வொரு நாடும் விஞ்ஞானத்தால்தான் அடிமைப்பட்டது. இந்தியாவும் அதனால்தான் அடிமைப்பட்டது என்பதை மிகவும் நேர்த்தியான முறையில் ‘டணாயக்கன் கோட்டை’ நாவல் சொல்கிறது.

பல விதங்களில் மிக முக்கியமான நாவலாக இருக்கிற இந்த நாவலில், திருக்குறளை மேற்கோள் காட்டியிருப்பது, பாம்பாட்டிச் சித்தர் பற்றிய குறிப்புகள், பரிமேலழகர் உரை குறித்த பகுதி, நாவலின் இடையிடையே வரக் கூடிய கதைச் சுருக்கம் போன்ற பகுதிகள்தான் நாவலுக்குச் சரிவைத் தருகின்றன. இந்தக் குறைபாடுகளையெல்லாம் மீறி, நாவல், வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விடுகிறது.

‘டணாயக்கன் கோட்டை’ நாவலை வெளியிட்ட ‘அம்ருதா’ பதிப்பகம் பாராட்டுக்குயதாக இருக்கிறது. திப்பு சுல்தானின் உருவப்படம், ஸ்ரீகிருஷ்ண ராஜ உடையான் படம், திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்கள், மைசூர் ராஜ்ஜிய வரைபடம், ஸ்ரீரங்கப்பட்டண வரைபடம், ஹைதர் அலியால் பாதுகாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட இந்துக் கோவில்களின் படம், சிம்மாசனத்தை அலங்கக்கும் தெய்வீகப் பறவையின் படம், புலியின் படம், திப்பு சுல்தான் கொல்லப்பட்ட இடம், அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று பலவற்றை வண்ணத் தாளில் அச்சிட்டு, நாவலின் பக்கங்களுக்கிடையே சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இக்காரியம் நாவலுக்கு கனம் சேர்த்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள்
தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள்
இன்னும் சில சிபாரிசுகள்
கோவி. மணிசேகரன் என்ன ஆனார்?
சாண்டில்யனைப் பற்றி ஒரு அலசல், சாண்டில்யன்
கல்கி



அறுசுவை அரசு நடராஜன் தொடர்கிறார் …..
இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது.   திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று.    ஒரு குழந்தையும் பிறந்து விட்டது.   என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை.    வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது.   வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’   என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.

இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய்,  மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.  இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன்.   பெரியவரை தரிசனம் செய்தேன்.   என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல்  அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி!   இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம்.  இங்கேயே தூங்குங்கள்.  நாளை போய்க் கொள்ளலாம்!’   என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல….  கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட  எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம்.  பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால்,  தூக்கம் நன்றாக வந்தது.

காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம்.  புது வேட்டியும்,  புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி,  அதை எங்களிடம் கொடுத்து  உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.
https://i0.wp.com/3.bp.blogspot.com/_WRTfA9x_seg/StHjVredajI/AAAAAAAABYs/cbkmwJg-BFc/s320/maha_periyava_014s%5B1%5D.jpg
உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும்,  எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார்.  ‘போ!  எல்லாம் சரியாயிடும்! ‘   என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.   என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது.   ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம்.  தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது.  வெற்றி நிச்சயம் கிடைக்கும்’  என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.   கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு,  மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர்.    அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.   ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது,  ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா….  இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே…  முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’  என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து  பார்த்தும் சல்லிக்காசு இல்லை.   என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன்.  காதில் தோடு தெரிந்தது.   அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது)  கொண்டு போனேன்.   பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன….  லட்டு செய்ய முடிஞ்சுதா?  ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’   என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை.    ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே….  அதுவே போதும்’   என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்)  அன்று  லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன்.  லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது…   இன்று எங்கள் குடும்பம் முழுவதும்  மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால்,  அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை  — நிறைவுற்றது

தொடர்புடைய பதிவுகள்:சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”


கல்யாண சமையல் சாதம்
ஆசிரியர்: ‘அறுசுவை அரசு’ நடராஜன்
விலை INR:180
ISBN NO. 978-81-8476-013-2
பதிப்பு 3
அறுசுவை அரசு நடராஜன் கூறுகிறார்…..
ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம்.   எனக்கு மட்டுமல்ல…   என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!
[FXCD0033-1.jpg]
காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’  (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான்.   அந்த நாளின் போது,  நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று,  ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து,  லட்டுகள் செய்து,  கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம்.  இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.
https://i0.wp.com/3.bp.blogspot.com/_WRTfA9x_seg/StHjVredajI/AAAAAAAABYs/cbkmwJg-BFc/s320/maha_periyava_014s%5B1%5D.jpg
இந்த சாதாரண சமையல்காரன்,  ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து  ‘இதோடு எல்லாம் போதும்’  என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில்,  நம்பிக்கை கொடுத்து,  “நீ நன்றாகத்தான் இருப்பாய்’  என்று அபயக்கரம் நீட்டிய அந்த மாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.

கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது  சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது.  மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார்.  தினந்தோறும்  மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில்  அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும்.    இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும்.  மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர்.  அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்)   உட்பட நாலைந்து பேர் இருந்தனர்.  என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.

ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள்.  படுவெயிட்டாக இருக்கும்.  இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது,   கூடைக்குள்ளிருந்து  மிச்சம் மீதி சாம்பார்,  ரசம், பாயசமெல்லாம்  காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும்.   அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும்.   ‘எச்சில்’   என்று தோன்றாது.   பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி,  இறைவனால்  கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!

இப்படி இலைக்கூடையைக்   கொண்டுபோய் கொட்டிய கையோடு,  காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும்,  அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!

சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர்  அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார்.  இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான்.  அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி.  தானே கடை கடையாக ஏறி இறங்கி,  வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.

‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’   என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும்,  மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான்.  தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது,  சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன்,  இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’  என்று பெரியவர் கேட்பார்.

‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’  என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார்.  (இந்த அன்னதான சிவன் பேரிலேயே  பெரிய கமிட்டி போட்டு,  பல பெரிய மனிதர்கள் சேர்ந்து  ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள்.  அந்த ‘டிரஸ்ட்’  இப்போது  இருக்கிறதா எனத் தெரியவில்லை).

பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை  — இறுதிப் பகுதி அடுத்த பதிவில்……

தொடர்புடைய பதிவுகள்:சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”


கல்யாண சமையல் சாதம்
ஆசிரியர்: ‘அறுசுவை அரசு’ நடராஜன்
விலை INR:180
ISBN NO. 978-81-8476-013-2
பதிப்பு 3

செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் அளிக்கும் யோசனை வழக்கமாக நாம் கேட்டறிந்ததுதான். ஆனால், அறுசுவை அரசு நடராஜனிடம் போய்விட்டால் போதும்… வயிற்றுக்கும் செவிக்குமாக சேர்த்து அவரே அளித்துவிடுவார் பல்சுவை விருந்து!

கைமணம் போலவே பேச்சிலும் அத்தனை சுவாரஸ்யம்… செரிமானம்!

சமையல் குறிப்புத் தொடர் ஒன்றை எழுதும்படிக் கேட்டுத்தான் விகடன் நிருபர் அவரைச் சந்தித்தார். பேச்சோடு பேச்சாக, பூணூல் கல்யாணம் தொடங்கி அறுபதாம் கல்யாணம் வரை தான் கேடரிங் பொறுப்பேற்ற சுப விசேஷங்களில் சந்தித்த அனுபவங்களை அவர் சொல்லச் சொல்ல… சமையல் குறிப்புத் தொடர் தானாகவே ஒரு மினி வாழ்க்கைக் குறிப்புத் தொடராக மலர்ந்தது.

அழுகிற குழந்தைக்குக் கல்யாண மண்டபத்திலேயே தூளி கட்டித் தாலாட்டியதில் தொடங்கி, தாலி கட்டும் நேரத்தில் முறைத்துக்கொண்டு போன சம்பந்தியின் மனதைக் குளிரவைத்து, கெட்டி மௌம் கொட்ட வைத்தது வரையில்… ஒரு சமையல் கலைஞரின் பாத்திரத்தைத் தாண்டி உரிமையோடு அவர் தலையிட்டுத் தீர்த்துவைத்த பிரச்னைகள் பற்றி விகடனில் வெளியானபோது… இன்னொரு வாஷிங்டனில் திருமணமாகவே அவற்றைப் படித்து ருசித்தார்கள் வாசகர்கள்.

சமையல் குறிப்புகள் எல்லாம் சம்பவ சுவாரஸ்யங்களுக்குப் பலம் சேர்க்கும் சைடு டிஷ்களாக மாறிப் போயின!

நடராஜன் தனது ஆரம்ப வாழ்வில் பட்ட அவமானங்களையும், அனுபவித்த துன்பங்களையும் வெளியில் சொல்லத் தயங்கியதேயில்லை. மாறாக, கரண்டியை நம்பினோர் கைவிடப்படார் என்ற புதுமொழிக்கு அடையாளமாக எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வருவதற்கு இந்த நளபாகம் தனக்கு எப்படியெல்லாம் கை கொடுத்தது என்பதைச் சொல்வதில் அவருக்கு மிகுந்த பெருமை!

ருசிக்கும்போது இருக்கும் பிரமிப்பும் பிரமாண்டமும், அவர் தரும் சமையல் குறிப்புகளில் இருக்காது. யாரும் பளிச்செனப் புரிந்துகொண்டு, நறுக்கென சமைக்கிற வகையில் மிக எளிமையாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார். தொடராக வந்தபோது விகடனில் இடம்பெற்ற சமையல் குறிப்புகளுக்கு மேலும் விவரம் சேர்த்து, இந்தப் புத்தகத்துக்காக அவற்றை ஸ்பெஷல் ரெஸிப்பிகளாக அளித்திருக்கிறார்.

“டேய் நடராஜா!   நிச்சயம் நீ நன்னாயிருப்பே !”  என்று காஞ்சி மாமுனிவரிடம் இவர் வாஞ்சையான ஆசி பெற்ற சந்தர்ப்பங்கள் உண்டு.   காஞ்சி முனிவருடனான இவரது அனுபவங்களை  நாம் அடுத்த  பதிவில் காணலாம்.


தேவன் பற்றி…

8.9.1913ல் திருவிடைமருதூரில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். மகாதேவன். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தில் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, நிர்வாக ஆசிரியரானவர். 23 ஆண்டுகள் விகடனில் பணியாற்றிய தேவன், நகைச்சுவைக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்தவர். மே 5, 1957 அன்று தம்முடைய 44ம் வயதில் காலமானார்.

அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை.

கிழக்கு பதிப்பகம் பற்றி….
https://i0.wp.com/thoughtsintamil.blogspot.com/images/personal/badri_p2.jpg
தரமான நல்ல புத்தகங்களை சர்வதேசத் தரத்தில் வெளியிடுவதே கிழக்கு பதிப்பகத்தின் நோக்கம். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல. அது ஓர் இயக்கம். New Horizon Media Private Limited நிறுவனத்தின் ஓர் அங்கமான கிழக்கு பதிப்பகம், தமிழில் இலக்கியம், கலை, அறிவியல், அரசியல், சமூகம், வரலாறு, மானுடவியல், வாழ்க்கை, கேளிக்கை எனப் பல்வேறு துறைகள் சார்ந்த ஆழமும் அக்கறையும் மிக்க படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும். உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே சமரசமற்ற, உயர்தரத்தைப் பேண விரும்புகிறது கிழக்கு.

கிழக்கு  வெளியிட்டுள்ள தேவனின் புத்தகங்கள்….

கோமதியின்  காதலன்

அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.

கோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.

நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி. வாசித்துப் பாருங்கள். சுவாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். வார்த்தைகளைக் கொண்டல்ல; வருடிக்கொடுக்கும் தென்றலைக் கொண்டு இந்நாவலை தேவன் எழுதிஇருப்பதை உணர முடியும்.

சி.ஐ.டி  சந்துரு

‘சி.ஐ.டி. சந்துரு’, முதல் வரி தொடங்கி கடைசி வரி வரைக்கும் குறையாத விறுவிறுப்புடன் வாசகர்களைக் கட்டிப்போடும்  சுவாரசிய-மான துப்பறியும் நாவல். தேவனுக்கே உரித்தான ஓட்டமான நடை, அழுத்தமான வசனங்கள் இந்த நாவலின் சிறப்பு. சாகசம், சாமர்த்தியம், சவால் என பக்கத்துக்குப் பக்கம் எகிறும் எதிர்பார்ப்பு  புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாது.

ஸ்ரீமான்  சுதர்சனம்

வாழ்க்கையின் சிக்கலான தருணங்களைக்கூட நகைச்சுவையாகச் சொல்லும் தேவனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று ஸ்ரீமான் சுதர்சனம்.

குடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் -இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது? குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்?

ஸ்ரீமான் சுதர்சனமாக அவன் படும் கஷ்டங்களும், குடும்பத்தினரிடம் மாட்டிக் கொண்டுபடும் அவஸ்தைகளும் தேவனின் நடையில் ஹாஸ்யமாக வந்து விழுகின்றன.

பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்.

விகடனில் 23 ஆண்டுகள் பணியாற்றிய தேவனின் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி.சந்துரு’ ஆகியவை முக்கியப் படைப்புகள்.அவருடைய நகைச்சுவைக் கதைகளில் மிகவும் பிரபலமானவை, ‘கோமதியின் காதலன்’,   ‘கல்யாணி’,   ‘மிஸ் ஜானகி’.

துப்பறியும் சாம்பு

‘துப்பறியும் சாம்பு’வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை! கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கு மல்லவா? அந்த மாதிரி சாம்புவின் காதுகள் துருத்திக்கொண்டு இருக்கும். கண்கள், ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக்கொண்டிருக்கும்.

இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுதான் சாம்புவின் தோற்றம்.துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை,பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.சாம்பு என்னும் இந்தக் குருவி உட்கார்ந்தால், பனம்பழம் மட்டுமல்ல, பனைமரமே விழுந்துவிடும்.

ராஜத்தின்  மனோரதம்

வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல.அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது.

வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்டஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாறவேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல்,மணல், ஜல்லியை விட அதிகமான அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தியிருக்கிறார் தேவன்.

நிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால் இந்த புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது!

லஷ்மி கடாட்சம்

தேவன் நாவல்களில் ‘லக்ஷ்மி கடாட்சம்’ தனித்துவமானது. மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் இந்நாவலில் காணலாம். நட்புக்கு வேங்கடாசலம், பெருந்தன்மைக்கு கோவிந்தன், குரூரத்துக்கு நடராஜப் பிள்ளை, கபடத்துக்கு சாரங்கபாணி, மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும் தேவனின் சாதனை ஆச்சரியமானது.

கல்யாணி
See  full size image

ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்த போது, அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன். -கல்கி

தேவனின் கதைகளை ஒன்று விடாமல் படித்தவன் நான். அவர் ஒரு தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவர் உரைநடையின் சரளமும் துடுக்கும், தொடர்கதை அத்தியாயங்களில் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன். அவரை இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான். -சுஜாதா.

மாலதி

சீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின் பதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ!

டாக்டர், திருடன், காதலன், காதலி, பில் கலெக்டர் என்று இவர் எடுத்துக்கொள்ளும் கேரக்டர்கள் அனைவரும் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள் ஒருமுறை புகுந்து வெளியே வரும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஜொலிக்கிறார்கள்.

மணிமணியாக மின்னும் அத்தனை கதைகளையும் நகைச்சுவை என்னும் பிரமாதமான இழையில் கோத்திருக்கிறார் தேவன்.

காலத்தைக் கடந்து நிற்கும் எழுத்தாளராக தேவன் நீடிப்பது ஏன் என்பதற்கான விடைகளுள் இந்நூல் முக்கியமானது.

மிஸ்டர்  வேதாந்தம்

செல்வச் செழிப்பில் வளர்ந்த வேதாந்தம், திடீரென்று வரும் சரிவு-களால் உருவாகும் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் காதலுக்கும் இடையே சந்திக்கும் சவால்கள்தான் எத்தனை! வேண்டாத மனிதர்கள் உருவாக்கும் பிரச்னைகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்து, காதலி செல்லத்தைக் கைப்-பிடிக்கிறான் வேதாந்தம்.

இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் ‘மிஸ்டர் வேதாந்தம்’  தொலைக்காட்சித் தொடராகவும் வந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது.

ஜஸ்டிஸ்  ஜகந்நாதன்  |  

தேவன் நாவல்களில் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கறிஞர்களின் வாதப் பிரதிவாதங்-களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மகத்தான வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் அல்லையன்ஸ் பதிப்பகம் ‘தேவ’னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது.  (டாக்டர் ருத்ரன் அளித்த தகவலுக்கு நன்றி)

உடுமலையில் கிடைக்கும் மற்றும் சில  தேவனின் புத்தகங்கள்….

அப்பளக்கச்சேரி  |  

கமலம்  சொல்கிறாள்  |  

சின்னஞ்சிறு கதைகள்  |  

சீனுப்பயல்  |  

சொன்னபடி கேளுங்கள்  |  

ஜாங்கிரி சுந்தரம்  |  

பல்லிசாமியின் துப்பு  |  

பார்வதியின் சங்கல்யம்  |  

பெயர்போன புளுகுகள்  |  

போக்கிரி மாமா  |  

மல்லாரி  ராவ் கதைகள்  |  

விச்சுவுக்கு கடிதங்கள்  |  

தொடர்புடைய பதிவுகள்: தேவன் பற்றி சுஜாதா


திருவருட்செல்வர் ‘  படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சாரியாள்‘  தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….

‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘  மீது மதிப்பும்,  பக்தியும் உண்டு.   அதற்கு ஒரு காரணம் உண்டு.  அது ஒரு முக்கியமான சம்பவம்.  ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக,  சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது.  அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.  அந்தமடம்,  கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

https://i0.wp.com/www.indiadivine.org/content_images/1/7/paramacharya-01.jpg
நான், எனது தாயார்,  எனது தந்தையார்,  எனது மனைவி நான்கு பேரும் சென்றோம்.  சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள்.  நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.  காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென லைட்டெல்லாம்  அணைந்துவிட்டது.  அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு,  மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார்.  மெல்லக் கீழே உட்கார்ந்து,  கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.  ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார்.  ‘ஆமாங்கய்யா!  நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்.  என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.

அப்போது அவர்,  “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.  திருப்பதி சென்றிருந்தேன்.  அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது.  யானை நன்றாக இருக்கிறதே  யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கொடுத்தது‘  என்றார்கள்.  திருச்சி சென்றிருந்தேன்.  அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன்.  அங்கும் யானை மாலை போட்டது.  யானை அழகாக இருக்கிறது.  யானை யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.  தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன்.  அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள்.  ‘இது யாருடையது ?’  என்றேன்.    ‘சிவாஜி கணேசன்  கொடுத்தது‘ என்றார்கள்.  நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.  அவர்கள் பப்ளிசிடிக்காக  சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.

“ஆனால்,  யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்.  அந்த மனசு உனக்கிருக்கிறது.  ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.  அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்”  என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.  அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ?  எத்தனை அனுக்கிரஹம்!   எண்ணிப் பாருங்கள்.”

ஒரு வேளை,  இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம்.    பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.   எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .








லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

அண்மையில் மறைந்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை பற்றி 10-4-66 அன்று விகடனில் வந்த கட்டுரை. விகடனுக்கு நன்றி! “புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய் சிரிப்பு” மாதிரி எழுதுவது quaint ஆக இருக்கிறது.

அவரை பற்றி நான் எழுதிய ஒரு முந்தைய பதிவு இங்கே. கானா பிரபு மறுபதிவு செய்த அவரது இன்னொரு பேட்டி இங்கே. காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி இங்கே.

ஹரிஜன நிதிக்காக, பணமும் நகைகளும் வசூல் செய்துகொண்டு இருந்தார் காந்தியடிகள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் எல்லோரிடமும், தாழ்த்தப்பட்ட மக்களை உய்விப்பதற்காக அந்த மகாத்மாவின் கரம் தாழும். புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கண்டவர்கள் எல்லோரும் தங்களிடமிருக்கும் நகைகள் அனைத்தையுமே தயங்காமல் கழற்றிக் கொடுத்துவிடுவார்கள்.

அன்றும் காந்தியடிகள் கரம் நீட்டிக்கொண்டிருந்தார். கான்வென்ட் பள்ளியிலிருந்து பள்ளிக்கூட டிரஸ்ஸிலேயே வந்திருந்த சிறுமி ஒருத்தி, மந்திரத்தால் கட்டுண்டவள் போல் தன் கையிலிருந்த வளைகளைக் கழற்றி மகாத்மாவிடம் கொடுத்துவிட்டாள்.

மறுநாள், மகாத்மா அந்தப் பெண்ணை அழைத்து, “நேற்று நீ வெள்ளி வளையைக் கழற்றிக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டாயே!” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே! எல்லோரும் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தவுடன், என்னையும் மீறி நான் என் கையிலிருந்ததைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள் சிறுமி.

“அதெல்லாம் தெரியாது. அதற்குப் பிராயச்சித்தமாகப் பவுன் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்” என்றார் காந்திஜி. அந்தச் சிறுமி, மகாத்மாவின் கட்டளைப்படி பவுன்களைக் கொண்டு போய்க் கொடுத்து, அவரது பாராட்டுதல்களையும் ஆசிகளையும் பெற்றார்.

மகாத்மாவின் ஆசிகளை மட்டுமா? நேருஜி, பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற பல பெரும் தலைவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர் அந்தப் பெண். ஒரு மாபெரும் தியாகியின் அரவணைப்பில் வளர்ந்தவர். தேசபக்தியும் சுதந்திர வேட்கையும் அவருடைய உடன்பிறப்புகள்.

அவர்தான் – தீரர் எஸ்.சத்திய மூர்த்தியின் மகளான திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.

கேரள நாட்டுக் கோட்டையம் பகுதிக்குச் சென்று, திருமதி லக்ஷ்மியைப் பற்றி விசாரித்தால், அவருடைய அரும்பணிகளின் சிறப்பு நன்கு புரியும். அங்கே ‘பிளாண்டராக’ இருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லக்ஷ்மி, பங்கு பெற்றிராத சமூக ஸ்தாபனங்களே இருக்க முடியாது. தமது இல்லத்திலேயே பெண்களுக்காக இலவச மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார் அவர். ‘ஸ்டேட் சோஷல் வெல்ஃபேர் கமிட்டி’ ஒன்றின் தலைவராகப் பணியாற்றுகிறார். மாகாண குடும்பக் கட்டுப்பாடு திட்டக் கல்வி ஆசிரியராக இருக்கிறார். இவை தவிர, கூட்டுறவு இயக்கங்களிலும் தொண்டாற்றுகிறார்.

மகாராஷ்டிரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, கேரளத்தில் வாழ்க்கைப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி, தற்போது ‘புஸ்தக சங்கம்’ (Book venture) ஒன்றைத் துவக்கி, சிறப்பான இலக்கியப் பணி ஆற்றிவருகிறார். இதற்கு, சென்னையில் ஒரு பெரிய புஸ்தகக் கம்பெனியை வைத்து நடத்தி வரும் இவருடைய கணவர், பேராதரவு தந்து வருகிறார்.

“என் கணவருக்குப் புத்தகங்கள் மீதுதான் முதல் காதல். நான் கூட இரண்டாவது பட்சம்தான்” எனக் கூறும் திருமதி லக்ஷ்மி, இந்தப் புத்தகசங்கத்தின் வளர்ச்சிக்காக, இதுவரை முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சொந்தப் பணத்தைச் செலவழித்துள் ளார்.

“இந்தியாவிலுள்ள படித்த தமிழ்ப் பெண்களில் 500 பேர் எனக்கு உதவி செய்தால், இந்தக் கிளப்பை வெற்றிகரமாக நடத்திவிடுவேன் நான். ஆளுக்கு ஆறு மெம்பர்களைச் சேர்த்துத் தந்தால், மூவாயிரம் மெம்பர்கள் கிடைத்துவிடுவார்கள். அது போதும் எனக்கு” என்கிறார்.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள 500 பெண்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்! கண்டிப்பாகக் கிடைப்பார்கள்.

“காந்தியடிகளை முதன்முதலாக எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டபோது, சிறிது நேர யோசனைக்குப் பின்னர், “சரியாக நினைவில்லை. ஆனால், பல முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பு உண்டு அவருக்கு. என்னை ஹிந்தியில் கடிதம் எழுதச் சொல்லுவார். நான் எழுதும் ஹிந்திக் கடிதத்திலுள்ள பிழைகளையெல்லாம் திருத்தி, அவற்றைத் திருப்பி அனுப்புவார். தாமே கைப்பட விலாசம் முதற்கொண்டு எழுதுவார். அவரிடம் நான் கவனித்த பெரிய விஷயம், அவருடைய போட்டோகிராபிக் மெமரி! நமது பெரியவாளைப் பற்றிச் சொல்வோமே, அதே போன்ற ஞாபக சக்தி உடையவர் அவர்” என்றார்.

நமது சுதந்திரப் போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ள மகத்தான தொண்டினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் கூடவே நிழல் போல இருந்து வந்த திருமதி லக்ஷ்மியிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால், அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்த தேச பக்தியையும், தியாக உணர்வையும் பற்றிய சிறப்பான விளக்கம் கிடைக்கும்.

காமராஜ் அவர்களைப் பற்றிக் கேட்ட போது, “திருவல்லிக்கேணி வீட்டுக்கு வருவார் அவர். அவர் அதிகமாகப் பேசியே கேட்க முடியாது. அப்பாவிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை. அப்பாவும் காமராஜ் அவர்களின் ஆற்றலை நன்கு அறிந்து வைத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை காமராஜ் அவர்களிடம் நான் இரண்டு சிறப்பான குணங்களைக் கவனித்து வருகிறேன். பழங்காலத் தலைவர்களையும் தியாகிகளையும் மறக்காத குணம். பதவிக்கு ஆசைப்படாத மனம். இந்த இரண்டுதான்! அவர் வகித்த பதவிகள் எல்லாம் வற்புறுத்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டவை. டி.ஸி.ஸி. தலைவர் பதவியை அப்பா அவரிடம் வற்புறுத்திதான் ஏற்றுக்கொள்ள வைத்தார். ‘நீ தலைவனாக இரு; நான் காரியதரிசியாக இருக்கிறேன்’ என்றார் அப்பா. ஒரு முறை தலைவராக இருந்தவர், காரியதரிசியாக உழைக்க முன் வந்தார் என்றால், காமராஜ் அவர்களின் ஆற்றலை அப்பா எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது தெரிகிறதல்லவா?” என்றார் லக்ஷ்மி.

ஒருமுறை, காமராஜ் அவர்களின் கல்யாணத்தைக் காணவென்று ஆயிரம் மைல் பிரயாணம் செய்தார் திருமதி லக்ஷ்மி. ஆமாம்! புவனேஸ்வர் காங்கிரஸில், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை காமராஜ் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் திருமதி லக்ஷ்மி.

“எங்கள் காமராஜுக்கு அதுதானே திருமணம்! அந்த ‘காடி’யை அவர் அலங்கரிக்கப் போகும் கண்கொள்ளாக் காட்சியைக் காண, நானும் என் கணவரும் புவனேஸ்வரம் போனோம். உழைப்பும் நேர்மையும் கௌரவிக்கப்பட்ட மகத்தான காட்சியைக் கண்டுவிட்டு வந்தோம்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் திருமதி லக்ஷ்மி.

சென்னை மேல்சபையில் அங்கத்தினர் பதவி வகிக்கும் திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஒரு காலத்தில் பல பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், நன்றாக வீணை வாசிப்பார்.

பெண்கள் முன்னேற்றம், தமிழ் இலக்கிய வளர்ச்சி இவை இரண்டிலும்தான் தற்போது இவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அன்றைக்கு 30000 ரூபாய் என்றால் இன்றைக்கு மூன்று கோடி பெறும் என்று நினைக்கிறேன். வீட்டை அடகு வைத்து இத்தனை பணத்தை போட்டிருக்கிறார். உண்மையான புத்தக காதல்!

திருமலை ராஜன் புண்ணியத்தில் சமீபத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அபிதா புத்தகத்தை படித்தேன். என்ன அருமையான புத்தகம்! நான் இங்கே லா.ச.ரா.வின் எழுத்தை சொல்லவில்லை, புத்தகத்தின் அட்டை, பேப்பர், பைண்டிங் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். உலகத் தரம் வாய்ந்த புத்தகம் வெளியீடு. இன்றைக்கு கூட இப்படி புத்தகங்கள் வருவதில்லை. யாராவது பழைய வாசகர் வட்டம் (நல்ல கண்டிஷனில் உள்ள) வெளியீடுகளை விற்பதாக/கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஆளுமைகள்

தொடர்புடைய பிற பதிவுகள்
வாசகர் வட்டம் உருவாக்கி நேர்த்தியான புத்தகங்களை பதிப்பித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (Lakshmi Krishnamoorthi)
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி


நான் தினமணி கதிரில் இருந்த போது ஒரு நாள் வித்வான் லட்சுமணன் எனக்கு போன் செய்து,  “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.  எம்.ஜி.ஆர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்.  தாங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும்”  என்று கூறி,  தேதி நேரம் இடம் மூன்றையும் குறிப்பிட்டார்.  அவர் விருப்பப்படியே நான் சத்யா ஸ்டுடியோவுக்குப் போய் எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.

அன்று எம்.ஜி.ஆர் அவர்களின் அன்னையின் நினைவு நாள்.

“வருடா வருடம் என் அன்னையின் நினைவு நாளன்று நான் மிகவும் விரும்பும் ஒருவரை அழைத்து அவருக்குப் பாயசம் தருவேன்.  இந்த ஆண்டு உங்களுக்கு!”   என்று பாயசத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார்.  பிறகு அவர் மதிய உணவுக்கு உள்ளே சென்ற போது கூடவே என்னையும் அழைத்துச் சென்று பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

“ஆனந்த விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்?’   என்று நான் எழுதும் கட்டுரைத் தொடரைப் படிக்கிறீர்களா ?”  என்று கேட்டார்.  இரண்டொரு வாரம் மட்டுமே படித்ததாகச் சொன்னேன்.

“இப்போது உங்களை அழைத்தது எதற்குத் தெரியுமா ?”

“தெரியாது.”

“”உங்கள் தினமணி கதிரில் நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதப் போகிறேன்.”

“அதற்கென்ன,  தாராளமாகச் செய்யுங்கள்.  ஆனால் ஒரு சின்ன நிபந்தனை.  உங்கள் கேள்வி பதில் பகுதியை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடும் உரிமை எனக்கு உண்டு.  நான் சொல்லும் வரை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.  நீங்களாகவே நிறுத்தி விடக் கூடாது”  என்றேன்.


“அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை.  அதில் நான் தலையிட மாட்டேன்”  என்று  எம்.ஜி.ஆர் உறுதி அளித்தார்.

கதிரில் இரண்டு மூன்று வாரங்கள் விளம்பரம் செய்தேன்.  அதன் பலனாய் அலுவலகத்துக்கு வந்து குவிந்த வாசகர்களின் கேள்விகளை சாக்குப் பையில்தான்  மூட்டை மூட்டையாகக் கட்டிவைக்க வேண்டியதாயிற்று.  ஒரு தனி மனிதரின் பதிலுக்காக அப்போது வந்த கடிதங்களின் எண்ணிக்கை அளவுக்கு என் பத்திரிகை வாழ்வில் நான் எங்கும் கண்டதில்லை.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 14 -ம் தேதி பெரம்பூரில் ஒரு சபாவின் ஆதரவில் நான் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தை திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழு நடத்தியது.  அன்றைய நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் தலைமை தாங்கினார்.   அந்தக் கதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார்கள்.  நான் வருவதாகச் சொல்லியிருந்த போதிலும் போக முடியாதபடி இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

ரொம்ப நாளாகவே காமராஜ் அவர்கள் என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அன்று பார்த்து வருவதாகத் தகவல் அனுப்பி விட்டார்.  அவர் வருவதை நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதியதால் சபாக்காரர்களுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதி அனுப்பி விட்டேன்.  “தமிழகத்தின் ராக்பெல்லரான திரு. எம்.ஜி.ஆர் அவர்களே விழாவுக்கு வரும்போது பிறகென்ன ?” என்று நகைச்சுவையாக அதில் எழுதியிருந்தேன்.  விழாவின்போது என் கடிதத்தை  மைக்கில் படித்து விட்டார்கள்.  காமராஜ் வீட்டுக்கு வருவதால்தான் நான் வரவில்லை என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரிந்து விட்டது.  ஆனால் அது பற்றி அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

See  full size image
ஆகஸ்ட் 14 -ம் தேதி இரவு எட்டரை மணிக்கு என் வீட்டுக்கு வந்த காமராஜ் மறுநாள் காலை 3 -30  மணிக்குத்தான், அதாவது ஆகஸ்ட் 15 -ம் தேதிதான் திரும்பிப் போனார்.

Cho Ramaswamy

என் அழைப்பின் பேரில் அன்று ‘சோ’ வும் என் வீட்டுக்கு வந்திருந்தார்.  நாங்கள் இருவரும் அன்று இரவு நாட்டு நடப்பு பற்றி திரு. காமராஜ் அவர்களோடு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்புறமும் எம்.ஜி.ஆர். பதில்கள் கதிரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.  அவர் தம்முடைய பதில்கள் சிலவற்றில் சோ அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார்.  நான் அவற்றைப் பிரசுரிக்கவில்லை.  அரசியல் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் சோவும் என்னைப்போல் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதால் அவரைத் தாக்கி எழுதும் பதில்களை என் பத்திரிகையில் வெளியிடுவது முறையல்ல என்று எனக்குத் தோன்றியது.  எனவே எம்.ஜி.ஆர். ‘சோ’வைத் தாக்கி எழுதியிருந்த பதில்களை மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றைப் பிரசுரித்து வந்தேன்.

நாலைந்து வாரங்கள் கழித்து வித்வான் லட்சுமணன் என்னிடம் வந்தார்.  “எம்.ஜி.ஆர்.எழுதும் பதில்களில் சிலவற்றை நிறுத்தி விடுகிறீர்களே,  எல்லாவற்றையுமே வெளியிட்டால் தேவலை” என்றார்.

“சோ வைத் தாக்கி எழுதும் பதில்களைத்தானே சொல்கிறீர்கள்?  அவற்றை நான் பிரசுரிப்பதற்கில்லை.  மன்னிக்க வேண்டும்”  என்றேன்.  “இல்லை,  எம்.ஜி.ஆர். எதிர்பார்க்கிறார்.  அதெல்லாம் அவருடைய கருத்துதானே ?  எல்லாவற்றையும் போட்டு விடுங்களேன்” என்றார்.  வித்வான் லட்சுமணனின் தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது.

இது பற்றி நானும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று எனக்குத் தோன்றியதால் வித்வானிடம்,  “நான் எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பேசட்டுமா?” என்று கேட்டேன்.

“ரொம்ப நல்லது”  என்றார் வித்வான்.

அதன்படி எம்.ஜி.ஆரை ஒரு நாள் சந்திக்கப் போயிருந்தேன்.

கோடம்பாக்கம் ஸ்டூடியோ ஒன்றில் அவர் இருந்தார்.  ஏதோ சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.  நான் போய் ஒரு மணி நேரமாகியும் எம்.ஜி.ஆர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை.  பார்த்துவிட்டுப் பேசாமலேயே இருந்தார்.  நானாக வலியச் சென்று பேசியபோது ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.  ஏதோ கோபம் என்று மட்டும் புரிந்து கொண்டேன்.  எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.  ஆனாலும் அரைமணி நேரம் பொறுமையோடு உட்கார்ந்து ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்புறம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் ஷூட்டிங் கலைந்த பிறகும் அவர் என்னிடம் பேசத் தயாராயில்லை என்பது தெரிந்தது.  “இங்கே இவரை ஏன் பார்க்க வந்தோம்”  என்று எனக்கு நானே நொந்து கொண்டேன்.    கடைசியில், “நான் போய் வருகிறேன்”  என்று சொல்லி விடை பெற்றுக் கொண்ட போதுகூட  அவர்,  “எதற்காக வந்தீர்கள்?  ஏன் போகிறீர்கள்?”  என்று என்னிடம் எதுவுமே  கேட்கவில்லை.

என் மீது எம்.ஜி.ஆர்.  கோபமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் கோபம் எதனால் என்பது விளங்கவில்லை.  இரண்டு காரணங்களுக்காக அவர் கோபப் பட்டிருக்க வேண்டும்.  ஒன்று அவரைவிட நான் காமராஜருக்கு முக்கியத்துவம் தந்து அவர் தலைமை வகித்த நடக்க நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்ததாயிருக்கலாம்.  அல்லது ‘சோ’ பற்றி அவர் எழுதிய பதில்களைப் பிரசுரிக்காமல் விட்டதா யிருக்கலாம்.  இவை இரண்டில் எது அவருக்குக் கோபமூட்டியது என்பது அவருக்குத் தான் தெரியும்.

அடுத்த பக்கம் »