Religionதமிழ்மணம் நட்சத்திர பதிவர் பதிவு 1

முதலில் ஹிந்துத்துவம் என்ற வார்த்தையே தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஹிந்துத்துவம் என்றால் ஹிந்துக்களின் மத, பண்பாட்டு சூழல் என்று பொருள் வருகிறது. நான் ஒரு ஹிந்து. மனப்பூர்வமாக கடவுளை வழிபடுபவன். கோவில்கள் என் உள் மனதில் பதிந்தவை. மகாபாரதமே உலகின் சிறந்த இலக்கியம் என்று நினைப்பவன். (ராமாயணத்துக்கு இரண்டாவது இடம்). ஆனால் இன்று பரவலாக பொருள் கொள்ளும் விதத்தில் நான் ஹிந்துத்துவவாதி இல்லை.

சரி பார்ப்பனீயம் என்ற வார்த்தை பிரயோகம் தவறானது என்றே ஒத்துக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிக்கும் கூட்டம் ஒன்று இங்கே அலைகிறது. இதில் இன்னொரு வார்த்தை பிரயோகத்தைப் பற்றி பேசப் புகுந்தால் ஹனுமார் வால் மாதிரி நீளும். இப்போதைக்கு பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அர்த்தத்திலேயே – காலம் காலமாக ஹிந்துக்கள் விட்டுக்கொடுத்து வந்திருக்கிறார்கள், இந்த அநியாயத்தை சமன்படுத்த ஹிந்துக்கள் கட்டுக்கோப்பாக, ஒரு அமைப்பினால் வழி நடத்தப்பட வேண்டும் – இனி மேல் பேசுவோம்.

நான் சிறு வயதிலிருந்து கண்ட ஹிந்து மதம் மிக சிம்பிள். என் அம்மாவுக்கு பக்தி அதிகம். கோவில் குளம் என்றால் பித்து. காலையில் கந்த சஷ்டி கவசம் சொன்னால்தான் காப்பி கிடைக்கும். என் அம்மாவின் அதிகமான பக்தியால் டீனேஜ் காலத்தில் என் rebellion கொஞ்சம் உக்ரம். கடவுள் நியாயமானவர் என்றால் கோவிலுக்கு போய் ஜால்ரா அடித்தால்தான் எனக்கு நல்லது செய்வாரா? நான் அயோக்கியத்தனம் செய்தாலும் கோவிலுக்கு போனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா? நான் படிக்காமல் தேங்காய் உடைத்தால் எனக்கு அதிக மார்க் வந்துவிடும் என்றால் அது கஷ்டப்பட்டு படித்தவனுக்கு அவர் துரோகம் செய்வதாக ஆகாதா? எனக்கு எது வேண்டும், எது நல்லது என்று கடவுளுக்கு தெரியாதா? அப்படி தெரியாவிட்டால் அவர் கடவுள்தானா? அப்புறம் நான் பிரார்த்தனை செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? வல்ல பூதத்தையும் வலாஷ்டிக பேய்களையும் நான் கேட்காமலே அவர் ஓட்ட வேண்டாமா?

அப்புறம் காலம் போகப் போக பிரார்த்தனை என்பது கடவுளுக்கு தேவை இல்லை, பக்தனுக்குத்தான் தேவை என்று புரிந்துகொண்டேன். பிரார்த்தனை செய்தாலும் ஹிந்துதான், செய்யாவிட்டாலும் ஹிந்துதான் என்ற நிலை எனக்கு பிடித்திருந்தது. உனக்கு எது சரியோ, அதை செய், அதுவே உனக்கு மதம், அதுவே உன் ஆன்மிகம் என்று ஹிந்து மதத்தில்தான் இருக்கிறது என்று தோன்றியது. தென்னாடுடைய சிவனை வணங்குபவனும் ஹிந்து; கற்பூரம் நாறுமோ என்று யோசிப்பவளும் ஹிந்து; ஆத்தாடி மாரியம்மா என்று பாடுபவனும் ஹிந்து; பலி கொடுப்பவனும் ஹிந்து; வாடின பயிரை கண்டபோது கூட வாடுபவனும் ஹிந்து; கல்லால் அடிக்கும் சாக்கிய நாயனாரும் ஹிந்து. பெருந்திருவே கறுப்பண்ணா என்று லா.ச.ரா. குடும்பத்தினர் ஒரு highbrow கடவுளையும் lowbrow கடவுளையும் ஒரே நேரத்தில் கூப்பிடுகிறார்கள். அது அவர்களுக்கு சரியாக இருக்கிறது. கடமையை செய், கடவுளைப் பற்றி கவலைப்படாதே என்று கிருஷ்ணனே கீதையில் சொல்கிறான்! கடவுளும் நாமும் ஒன்று என்ற அத்வைதம்; இல்லை இரண்டு என்று விசிஷ்டாத்வைதம்; இந்த ஒன்று, இரண்டு, மூன்று கவலை எல்லாம் வேண்டாம், ராம நாமம் போதும்; எந்த எழவும் வேண்டாம், வேலையை பாரும் ஓய், கடவுளாவது மண்ணாவது என்று சொல்லும் சார்வாகன் – உங்களுக்கு எது சரிப்படுகிறது? அந்த ஹிந்து மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! நான் எடுத்துக் கொண்ட ஹிந்து மதம் எனக்கு பர்சனலான மதம். அது எனக்கு மட்டும்தான். என் குடும்பத்துக்கு கூட இல்லை.

கவனிக்கவும், ஹிந்து மதத்தில் நிராகரிக்க வேண்டிய கூறுகள் இல்லை என்று நான் வாதிடவில்லை. நான் யோசித்து இந்த இந்த கூறுகளை நிராகரிக்கிறேன், இந்த இந்த கூறுகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் நான் ஹிந்து மதம் என்னை தள்ளி வைக்காது. அட கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொன்னவரே ஹிந்துவாக வாழ்ந்து மறைந்தபோது நமக்கென்ன? ஆனால் குரானின்/பைபிளின்/டோராவின்/கிரந்த் சாஹிபின் இந்த கூறுகளை நான் ஏற்கவில்லை என்று ஒரு முஸ்லிமோ, கிருஸ்துவனோ, யூதனோ, சீக்கியனோ சொன்னால் அது மத விரோதம் (என்று நினைக்கிறேன்.)

எங்கோ ஒரு கவிதை படித்தேன் – தமிழ்தான் என் உயிர்மூச்சு, ஆனால் அதை பிறர் மேல் விடமாட்டேன் என்று. அதைப் போல உங்கள் மத நம்பிக்கை உங்களோடு இருக்கவேண்டும். அது ஹிந்து மதத்தில்தான் சுலபம் என்று நினைக்கிறேன். இப்படி வேறு எதிலும் – குறிப்பாக யூத, கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் இப்படி பெர்சனல் மதம் என்பது முடியாது. புகழ் பெற்ற 10 commandments-ஐ பாருங்கள். முதல் ஐந்தோ ஆறோ என்னை கும்பிடு, வேறு யாரையாவது கும்பிட்டால் உதைப்பேன் என்ற ரேஞ்சில்தான் இருக்கும். எது சரி, எது தவறு என்று நிர்ணயிப்பது புனிதப் புத்தகங்களும், குருமார்களும்தான். மார்ட்டின் லூதர் போப் சரியில்லை என்று சொன்னால் அவருக்கு அபாயம்தான். அவர் தப்பிக்க ஒரே வழி அவரே இன்னொரு கிளை மதத்தின் குரு ஆவதுதான்.

இந்த ஹிந்துத்துவவாதிகள் என்ன சொல்கிறார்கள்? ஹிந்துக்களே ஒன்றுபடுங்கள், முஸ்லிம்கள் முகம்மதுவின் கார்ட்டூனைப் போட்டால் கொந்தளிக்கிறார்கள், சல்மான் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ய வைக்கிறார்கள், நீங்கள் ஏன் எம்.எஃப். ஹுசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தால் சுரணை கெட்டுப் போய் பேசாமல் இருக்கிறீர்கள், நீங்களும் ஒரு மதத் தலைவர்/அமைப்பு பின்னால் ஒன்றுபடுங்கள் என்று கூக்குரலிடுகிறார்கள். முட்டாள்கள் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்கிறார்கள், அதை இந்த அரசும் ஓட்டு அரசியலுக்காக ஏற்கிறது, இது அயோக்கியத்தனம், இதை தடுக்க நீங்களும் முட்டாள்களாக மாறி ஹுசேனுக்கு எதிராக போராடுங்கள் என்பது ஒரு பேச்சா! இவர்களது தீர்வு என்பது நாம் ராமனை/கிருஷ்ணனை வழிபட்டுக் கொண்டே முஸ்லிம்கள் போல நம் மதம் “அங்கீகரிக்கப்பட்ட” வழியில் செல்ல வேண்டும் என்பதுதான். முல்லாவுக்கு பதிலாக சங்கராச்சாரியார்களை, மற்ற சாமியார்களை வைத்துக் கொள்வோம் என்கிறார்கள். இப்படி நான் முருகனை வழிபட்டுக் கொண்டே நம்ம குருநாதர் இந்த புத்தகத்தை ஏற்கிறாரா, இந்த ஓவியத்தை ஒத்துக் கொள்கிறாரா, கோவிலில் தேவாரம் பாடுவது அவருக்கு சரியாக படுகிறதா என்று என் சொந்த யோசனையை விட்டுவிட்டு ஒரு சாயிபாபாவோ, சங்கராச்சாரியாரோ, ஆர்.எஸ்.எஸ்.சோ காட்டும் வழியில்தான் போக வேண்டும் என்றால் அதற்கு பேசாமல் அல்லா பக்கமே போய்விடலாம். எதற்காக நான் முருகனை வணங்கும் முஸ்லிமாக, கிருஷ்ணனை வணங்கும் கிருஸ்துவனாக மாற வேண்டும்?

போலி மதசார்பின்மையை எதிர்த்து போராடுகிறேன் என்று ஆரம்பித்தார்கள். ஓட்டு வேண்டுமென்றால் ஹிந்துக்கள் கட்டுகோப்பான ஒரு அமைப்பாக இருந்தால்தான் முடியும் என்று தெரிகிறது. அதனால் உனக்கு நாங்கள் முல்லாவாக இருக்கிறோம் என்று முடித்திருக்கிறார்கள்.

என் கடவுள் துர்கையா, அல்லாவா, ஏசுவா, புத்தரா, அப்படி எதுவுமே இல்லையா என்று நான் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். உங்கள் முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதமே – என் விஷயத்தில் மூக்கை நீட்டாத வரையில்.

பின்குறிப்பு: கல்லூரி காலத்தில் எனக்கு நாலைந்து நெருங்கிய முஸ்லிம் நண்பர்கள் உண்டு. அவர்கள் யாரும் அல்லா முல்லா என்று அலையவில்லை. முகமது ஃபர்ஹாத் ஜாமாவுக்கு எனக்குத் தெரிந்ததை விடவும் அதிகமாக ஹிந்து மதத்தைப் பற்றி அப்போது தெரியும். ஒரு நாளும் அவன் சல்மான் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று சொல்லமாட்டான். இந்த பதிவைப் பொறுத்த வரை ஹிந்துத்துவவாதிகளின் கூற்றான முஸ்லிம்களை மத அமைப்பு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை ஒரு வாதத்துக்காக (மட்டும்) முழு உண்மை என்று வைத்துக் கொண்டு எதிர்வாதம் செய்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு


சாதாரணமாக நான் தமிழ் ஓவியா போன்ற பதிவர்களை அவாய்ட் செய்துவிடுவேன். ஒரு ஜாதி மீது வெறுப்பையே தன் கொள்கையாக கொண்டு எழுதுபவர்களைப் படிப்பது எனக்குத்தான் நேர விரயம். ஆனால் கண்ணில் எதேச்சையாக பட்ட அவருடைய ஒரு பதிவிலிருந்து ஒரு பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

திருவண்ணாமலைக்கு பிச்சைப் பார்ப்பானாக ஓடி வந்த வெங்கட்ரமணன் இந்த நாட்டில் ரமண ரிஷியாகி, கோடிக்கணக்கில் சேர்த்த சொத்துகளை சகோதரனுக்கு எழுதி வைக்கவில்லையா?

சந்நியாசிக்கு வாரிசு ஏது என்று நீதி மன்றம் கேட்ட கேள்விக்கு, நான் சந்நியாசம் வாங்க வில்லையே! என்று அந்தர்பல்டி அடிக்கவில்லையா?

இது உண்மையா? ரமண ஆசிரமம் என்ற அமைப்பைப் பற்றி சொல்கிறார் என்று நினைக்கிறேன், அது அவரது சகோதரருக்கு சட்டப்படி ரமணரால் எழுதி வைக்கப்பட்டதா? அதற்காக ரமணர் கோர்ட் படி ஏறி இப்படி சாட்சி சொன்னாரா? யாருக்காவது தெரியுமா?

ரமணர் தன ஆசிரமத்தை தன சகோதரன் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் ஆச்சரியம் ஒன்றுமில்லை. என் போன்ற “சாமியார் எதிர்ப்பாளர்களுக்குக்” கூட அதில் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் நான் சந்நியாசி இல்லை என்று சொல்லி இருந்தால் அது பெரும் வியப்பளிக்கும்!

பிற்சேர்க்கை: ரமணர் தீட்சை வாங்கவில்லை, அவர் சந்நியாசி இல்லை ஆனால் ரிஷி என்று பலரும் மறுமொழி எழுதி இருக்கிறீர்கள். “சந்நியாசிக்கு வாரிசு ஏது” என்ற கேள்வி சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். அந்த கேள்வி ரமணர் தீட்சை பெற்றுக்கொண்டாரா, அவரது குரு யார் என்பதை விசாரிக்க கேட்கப்பட்டது அல்ல. ரமணர் ஆன்மீகவாதி ஆயிற்றே, அவருக்கு லௌகீகம் உண்டா, சொத்து, சொத்து நிர்வாகம், சொத்துக்கு வாரிசுகள் என்றெல்லாம் கவலையும் பொறுப்பும் உண்டா, இல்லை அதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாதவரா என்ற அர்த்தத்தில் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு ரமணர் ஆமாம், எனக்கு லௌகீகம் உண்டு என்று பதில் அளித்திருக்கிறார்.

அதில் தமிழ் ஓவியா நினைப்பது போல தவறு ஒன்றும் இல்லை. மடங்களுக்கும் ஆசிரமங்களுக்கும் பெரியார் ட்ரஸ்டுக்கும் அந்த அளவில் லௌகீகம் உண்டுதான். ஆசிரமம் நம்பிக்கையானவர்கள் கண்ட்ரோலில், நல்லவர்கள் கண்ட்ரோலில் இருக்க வேண்டும், அதற்கு தகுதியானவர், அப்படி பொறுப்பெடுத்து செய்யக்கூடியவர், நான் உரிமையோடு சொல்வதை கேட்டு நடக்கக்கூடியவர் என் பூர்வாசிரம சகோதரன் என்று ரமணர் நினைத்திருந்தால் அதில் என்ன தவறு? ஆனால் ரமணர் அதை எல்லாம் பற்றி கவலைப்படாதவர், லௌகீக அக்கறை இல்லாத ஆன்மீகவாதி என்று எனக்கு ஒரு impression இருந்தது. அந்த impression தவறு என்று தெரிந்துகொண்டேன். மேலும் வாசி என்பவர் சகோதரன் மட்டுமல்ல, சகோதரன் வழி குடும்பத்தினருக்கும் காலம் காலமாக அந்த உரிமை உண்டு என்று ரமணர் உயில் எழுதியதாக சொல்கிறார். இதற்கும் தான் சம்பாதித்த சொத்துகள் தன குடும்பத்தினருக்கு போக வேண்டும் என்று நினைக்கும் ஒரு சாதாரண குடும்பஸ்தனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ரமணர் அடுத்த பொறுப்பாளர் என் பூர்வாசிரம சகோதரன் என்று உயில் எழுதுவது வேறு, பொறுப்பாளருக்கான தகுதி என் பூர்வாசிரம சகோதரன் சந்ததியில் பிறந்திருக்க வேண்டும் என்று உயில் எழுதுவது வேறு. அப்படி அவர் எழுதி இருந்தால் அதை ரமணர் பூர்வாசிரம பந்தத்திலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை என்று காட்டுவதாகவே நான் பொருள் கொள்கிறேன்.

விருட்சம் கொடுத்த ஐடியாவால் ரமணாசிரமம் தளத்தில் தேடிப் பார்த்தேன். அங்கிருந்து:

It was his younger brother, Sri Niranjanananda Swami, who oversaw the construction of buildings and the growth of the Ashram. He became its sarvadhikari or manager. As the Maharshi became more widely known, donations flowed in and a whole complex of buildings arose.

The sarvadhikari died in January, 1953 and his son, T. N. Venkataraman, took over the management of the Ashram as President. In 1994, T. N. Venkataraman retired and, as enjoined by Bhagavan’s will, entrusted his eldest son, V. S. Ramanan, to serve as the Ashram President.

அவரது பூர்வாசிரம சகோதரனின் சந்ததியினரே ஆசிரம நிர்வாகிகளாக இருந்து வந்திருக்கிறார்கள் என்றும் இது ரமணரின் உயிலில் எழுதப்பட்டிருக்கும் விதி என்றும் தெளிவாகத் தெரிகிறது.

தகவல் கொடுத்த எல்லாருக்கும் – வாசி, பாஸ்கரன், விருட்சம் எல்லாருக்கும் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

தொடர்புடைய சுட்டி:
தமிழ் ஓவியாவில் எழுதப்பட்டிருப்பது
ரமணாசிரமம் சுட்டி


மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். நம்பிக்கையை லாஜிக் மூலம் நிறுவுவது வீண் வேலை, வெட்டியாகத்தான் பேச வேண்டி இருக்கும், நிறுத்திக் கொள்வோமே என்று சொல்லிப் பார்த்தேன், இன்னும் ஜெஹோவா vs சுடலைமாடன் பதிவில் வைஷ்ணவம் vs ஹிந்து மதத்தின் பிற கூறுகள், கிருஸ்துவம் vs பிற மதங்கள் ஆகியவற்றைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிற்கவில்லை. சரி நானும் என் பங்குக்கு குட்டையை குழப்புகிறேன்.

ஹிந்து மதத்தில் எனக்குப் பிடித்த கூறு அதன் பன்முகத்தன்மைதான். (ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை, அது பல “மதங்களின்” இணைப்பு என்று யாராவது ஆரம்பிக்காதீர்கள். பல நூறு வருஷங்களாக ஹிந்து மதம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்கு முன்பும் பல நூறு வருஷங்கள் பல வைணவம், சமணம், சைவம், கௌமாரம், காணாபத்யம், சாக்தம், கபாலிகம், மூத்தார் வழிபாடு, இயற்கை வழிபாடு என்று பல “மதங்கள்” – ஆனால் ஒன்றுகொன்று தொடர்புள்ளவை – இருந்தன.) மதம் என்பது ஒரு பர்சனல் விஷயம், உனக்கு எது சரிப்படுகிறதோ அதை நீ கடைப்பிடிக்கலாம், உருவ வழிபாடா, சடங்குகளா, கர்ம யோகமா, நாத்திகமா, சங்கீத பஜனையா, நாமாவளியா, கணவனை வழிபடுவதா, அம்மா/அப்பா வழிபாடா, எது உனக்கு ஒத்து வருகிறதோ அதை செய் என்ற ஒரு அடிப்படை இந்த மதத்தில் எப்போதும் இருந்து வருகிறது. இன்றும் கூட ஹிந்து மதக் “கோட்பாடுகள்” அனைத்தும் optional guidelines மட்டுமே. கீதையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஹிந்துவாக இருக்கலாம். கோவிலுக்கு போகாவிட்டாலும் ஹிந்துவாக இருக்கலாம். வேதங்களை நிராகரித்தாலும் ஹிந்துவாக இருக்கலாம். தேவாரத்தை, திவ்யப் பிரபந்தத்தை, விபூதியை, நாமத்தை, குங்குமத்தை, அய்யா வைகுண்டரை, சங்கராச்சாரியாரை, குன்றக்குடி அடிகளாரை, மேல்மருவத்தூர் சாமியாரை யாரை வேண்டுமானாலும் ஏற்கலாம்/நிராகரிக்கலாம், உங்கள் ஹிந்து அடையாளத்துக்கு எந்த பாதிப்பும் வராது.

ஆபிரகாமிய மதங்களில் எனக்கு பிடிக்காத கூறும் அதன் “My way or the highway” அடிப்படைதான். என்னை வழ்படுபவர்களுக்கு சொர்க்கம், வழிபடாதவர்களுக்கு நரகம் என்று ஒரு கடவுள் சொல்வது என்னுடைய கடவுள் கருத்தாக்கத்தில் ஒரு இழிவான செயல். ஒரு ஜட்ஜ் என்னை your honor என்று சொல்பவர்களுக்கு விடுதலை, சொல்லாதவர்களுக்கு தண்டனை என்று சொன்னால் அவரது நீதி பரிபாலனத்தைப் பற்றி என்ன நினைப்போம்? என்னுடைய கடவுள் நீதியை, மனிதனின் ஒழுக்கத்தை, நல்ல செயல்களை ஊக்குவிப்பவர். கருணையே நிறைந்த ஒரு தாயைப் போன்றவர். அவர் சில குற்றவாளிகளை மன்னித்து தண்டனை தராமல் இருக்கலாம். ஆனால் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று பாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தால், மனித குலத்துக்கு தரும் டென் கமான்ட்மென்ட்சில் பாதி என்னை வழிபடு, அடுத்தவனை வழிபடாதே என்றே இருந்தால், அது என் கண்ணில் ஒரு மாற்று குறைவாகத்தான் தெரிகிறது.

இது என் கருத்து; கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள், கந்தர்வன் போன்ற தீவிர வைஷ்ணவர்கள் வேறு மாதிரி நினைக்கலாம். அது அவர்கள் உரிமை. அவர்கள் எனக்கு வேறு கருத்து இருக்கும் உரிமையை அங்கீகரித்தால் அது போதும்.

மதமாற்றம் பற்றி ஒரு சில எண்ணங்கள் – மதமாற்ற பிரசாரம் சட்டப்படி சரிதான். அடுத்தவர் வழிபடும் கடவுள்களை தூற்றவும், தாழ்த்தி பேசவும் எல்லாருக்கும் – மிஷனரிகளுக்கு, முல்லாக்களுக்கு, கந்தர்வன் போன்ற வைஷ்ணவர்களுக்கு – சட்டப்படி உரிமை இருக்கத்தான் செய்கிறது. கருத்துரிமை என்ற உயர்ந்த லட்சியத்துக்காக நாம் கொடுக்க வேண்டிய விலை இது. ஆனால் அது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஒரு தனிப்பட்ட மனிதன் நான் கிறிஸ்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று ஒரு மதப் பிரசாரகரிடம் கேட்டால் பைபிளைப் பற்றி எடுத்து சொல்லலாம், குரானைப் பற்றி பேசலாம், கீதையைப் பற்றி விளக்கலாம், தயானந்த சரஸ்வதியின் கோட்பாடுகளைப் பற்றி பேசலாம். எனக்கு பைபிள் படிக்கத் தோன்றியபோது கிருஸ்துவ நண்பர்கள் கொடுத்தார்கள். நான் அப்படி இப்படி என்று என் “குதர்க்க” கேள்விகளைக் கேட்டால் சில சமயம் பொறுமையாக பதில் சொன்னார்கள், சில சமயம் எரிந்து விழுந்தார்கள், சில சமயம் “டேய் இதைப் பத்தி இப்படி பேசினால் சண்டைதான் வரும்” என்று எச்சரித்தார்கள். ஆனால் யாரும் கிருஸ்துவ மதம் உயர்ந்தது, கிருஷ்ணன் மதம் தாழ்ந்தது என்று பேசவில்லை. நானாகப் போய் மதம் மாற வேண்டும் என்று கேட்டிருந்தால் நிச்சயம் உதவி செய்திருப்பார்கள். ஆனால் அவர்களாக என்னை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதுவே சரியான அணுகுமுறை.

“உலகமெல்லாம் சென்று சீஷர்களை உருவாக்குங்கள்” என்ற வரியைப் பிடித்துக் கொண்டு அதை மத மாற்றப் பிரசாரத்துக்கு லைசன்சாக எடுத்துக் கொண்டால் அடுத்தவர்கள் மனம் புண்படத்தான் புண்படும். அதைப் பற்றி கவலை இல்லை, சட்டப்படி எனக்கு இருக்கும் உரிமையை நான் அனுபவிக்க விரும்புகிறேன் என்று சொன்னால் தடுக்க முடியாது. ஆனால் அப்படி பிரச்சாரம் செய்யும் மனிதர்களைப் பற்றி அநேகமான அடுத்த மதத்தினருக்கு நல்ல எண்ணமும் உருவாகப் போவதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

தொடர்புடைய பதிவுகள்: ஜெஹோவாவும் சுடலைமாடனும்


சந்திரசேகரேந்திர சரஸ்வதி பதிவு சில நண்பர்கள் மனதை புண்படுத்திவிட்டது. அதனால் நினைவு இருக்கும்போதே ஜாக்கிரதையாக ஒரு Disclaimer கொடுத்துவிடுகிறேன். இது எவர் மனதையும் புண்படுத்த எழுதப்பட்டதில்லை. பழைய ஏற்பாட்டை (Old Testament) தெய்வத்தின் வரலாறாக மதிப்பவர்களுக்கு இது irreverent ஆகத் தெரியலாம். எனக்கு பழைய ஏற்பாடு இலக்கியம்+வரலாறு+legend மட்டுமே என்பதை முடிந்தால் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

பழைய ஏற்பாடு மிக சுவாரசியமான புத்தகம். யூத, கிருஸ்துவ, இஸ்லாமியர்களின் புராணங்கள் என்று சொல்லலாம். இஸ்லாமியர்களின் version சில வேறுபாடுகள் உடையது.

நான் பழைய ஏற்பாட்டை முதல் முறையாக படித்தபோது எனக்கு ஒரு பதினாறு வயது இருக்கலாம். எனக்கு எப்போதுமே இந்த புராணம், இதிகாசம் எல்லாம் படிப்பதில் விருப்பம் உண்டு. மகாபாரதத்தில் பெரிய பித்தே உண்டு. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்தேன். ஆங்கில புத்தகத்தில் begat என்ற வார்த்தையை முதல் முறையாக பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

நான் புதிய ஏற்பாட்டை முழுமையாக படித்தத்தில்லை. ஆனால் பழைய ஏற்பாட்டின் கடவுளுக்கும் (ஜெஹோவா), புதிய ஏற்பாட்டின் கடவுளுக்கும் எக்கச்சக்க வித்தியாசம்! புதிய ஏற்பாட்டில் தேவ குமாரன் ஏசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்கிறார்; ஆனால் பழைய ஏற்பாட்டின் ஜெஹோவாவிடம் (ஏசுவின் அப்பா என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இந்த பாச்சா எல்லாம் பலிக்காது. அவர் மிக கடுமையானவர். அவரிடம் வைத்துக் கொண்டால் தீர்த்துவிடுவார். தன்னை வழிபடும் யூதர்களை எகிப்திலிருந்து மீட்க ஒவ்வொரு எகிப்தியனின் முதல் ஆண் குழந்தையை கொல்லத் தயங்கவே மாட்டார். சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தன, ஜெஹோவாவின் வலிமையை காண்பிக்க அப்பாவி குழந்தைகளை கொல்வது சரியா என்று யாரும் கேட்கக் கூடாது. அவருக்கு நான்-வெஜ்தான் பிடிக்கும் போல, அதனால் ஏபல் ஆட்டை பலி கொடுப்பதை ஏற்றுக் கொள்வார், ஆனால் உழவன் கெய்னின் படையலை ஏற்க மாட்டார். கெய்ன் கடுப்பாகி தம்பி ஏபலை கொன்றுவிடுவான். எனக்கென்னவோ கொலையில் ஜெஹோவாவுக்கு பங்கிருப்பதாகத்தான் தோன்றுகிறது!

அவருடைய முடிவுகள் ஏன் எடுக்கப்படுகின்றன என்று அவரை வழிபடுபவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியமே இல்லை. சும்மா போகிற போக்கில் ஆபிரகாமின் சந்ததியினர் மட்டுமே தமக்கு பிடித்தமானவர் என்று சொல்வார். அப்புறம் யூதர்கள் என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட்டுவிடுவார். மிச்ச பேர் எல்லாம் ஏன் பிறப்பிலேயே பாபாத்மாவா? அப்படி பிறவியிலேயே பாபாத்மாக்களை ஏன் படைத்தார்? (நம்மூர் ஜாதி மாதிரி இல்லை?) ஜெஹோவா என்னை துதியுங்கள், என்னை துதியுங்கள் என்று எப்போதும் யூதர்கள் பின்னாலேயே மட்டும் ஓடுவார், மற்ற மனிதர்கள் “போலிக்” கடவுள்களை கும்பிட்டால் அவருக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை. அல்லா காஃபிர்களை படைக்கவும் படைக்கிறார், அப்புறம் காஃபிர்களுக்கு நரகத்தையும் விதிக்கிறார்போல!

நம்மூரில் சுடலைமாடன் பயமுறுத்துவார், எனக்கு படையல் வைக்காவிட்டால் கிராமத்தை அழித்துவிடுவேன், மழை பெய்யாது, ஊரில் வியாதி வரும் என்றெல்லாம் பூசாரி மேல் ஏறி சொல்வார். ஜெஹோவாவும் அந்த மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் – மாடன் அடுத்த தெய்வங்களுக்கு படையல் வைப்பதை தடுப்பதில்லை. ஜெஹோவா எனக்கு மட்டும்தான் படையல் என்று பிடிவாதம் பிடிக்கிறார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி