MathippeedukaLநாதசுர சக்கரவர்த்தி, தோடி ராகத்தில் மிகவும் பிரபலமானவர் என்ற செய்தியறிந்த ஒரு பெரும் பணக்காரர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை சந்தித்து, தனது மகள் கல்யாணத்தில் தாங்கள் வந்து வாசிக்க வேண்டுமென்று மிகவும் கேட்டுக்கொண்டார். டி.என்.ஆர் கல்யாணக் கச்சேரிகளில் வாசிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் வந்தவரிடம் ஒரு பெரும் தொகையை கேட்டார். “தாங்கள் எவ்வளவு கேட்டாலும் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டார். கல்யாணத்தில் டி.என்.ஆர் பல மணி நேரங்கள் தனது புகழ் பெற்ற தோடி ராகத்தை வாசித்து முடித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மணமகளின் தந்தை, டி.என்.ஆரின் அருகில் வந்து, “தாங்கள் தோடி ராகத்தில் வாசிப்பதில் புகழ் பெற்றவராச்சே, அந்த ராகத்தை வாசியுங்கள்” என்று கேட்டார்.

டி.என்.ஆருக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது. பக்கத்தில் ஒத்து ஊதிக்கொண்டிருந்தவரைப் பார்த்து கடின சொற்களில், “தோடி ராகம் வாசிக்கும் நாதசுரத்தை எடுத்து வா, எடுத்து வா என்று பலமுறை சொன்னேனே, ஏன் எடுத்து வரவில்லை?” என்று சொல்லி, கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார் (மணமகளின் தந்தை, அந்த கோடீஸ்வரரை அறைவதற்குப் பதிலாக, ஒத்து ஊதுபவரை அறைந்தார் என்பதை நீங்கள் என்னும் புரிந்து கொள்ளாமலா இருப்பீர்கள்?).

மிகவும் பயத்துடன் பெண்ணின் தகப்பனார், “அவரைக் கோபிக்காதீர்கள், அடுத்த முறை வரும்போது தோடி ராகம் வாசிக்கும் நாதசுரத்தை எடுத்து வந்தால் போச்சு” என்று பணிவாக டி.என்.ஆரிடம் சொன்னார்.
       —–திரு. எஸ்.எம். உமர் எழுதிய கலைமாமணி என்ற நூலிலிருந்து

நண்பர் கோபால் அனுப்பிய பதிவு.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கோபால் பக்கங்கள்


காந்தி

காந்திக்கு நோபல் பரிசு ஏன் கிடைக்கவில்லை என்று கேட்காதவர் கிடையாது. இதைப் பற்றி நோபல் கமிட்டியின் விளக்கத்தை இங்கே காணலாம். சுருக்கமாக: காந்தியை அவர்கள் ஒரு இந்தியத் தலைவராகத்தான் பார்த்திருக்கிறார்கள். அறுபதுகள் வரைக்கும் நாடுகள் என்ற எல்லையைத் தாண்டி சேவை செய்தவர்களுக்கே அவர்கள் நோபல் சமாதானப் பரிசை வழங்கி இருக்கிறார்கள்.

ஜெயமோகன் நோபல் கமிட்டியின் விளக்கத்தைப் பற்றி இங்கே விவரமாக எழுதி இருக்கிறார்.

நோபல் பரிசால் காந்திக்கு பெரிய கவுரவம் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால் நோபல் பரிசுக்கு பெரிய கவுரவம் கிடைத்திருக்கும், அதை அவர்கள் தவறவிட்டது துரதிருஷ்டமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
நோபல் கமிட்டியின் விளக்கம்
ஜெயமோகனின் பதிவு


விமலின் ஒரு மறுமொழியை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு விமல்!

ஒரு முறை, உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் சோ. அதன் பின், எதனாலோ அவர் தலைமுடி உதிர ஆரம்பித்து, தலை மொட்டை ஆகி விட்டது.

முடி இல்லாத குறையை மறைக்க பம்பாயிலிருந்து ஒருவர் 800 ரூபாய்க்கு விக் செய்து வந்து கொடுத்தார். அதை தலையில் மாட்டி, கண்ணாடி முன் நின்று பார்த்தார் சோ. சுற்றி இருந்தவர்கள், “ரொம்ப இயற்கையாக இருக்கிறது!” என்று பாராட்டினார்கள்.

ஆனாலும், சோ விக்கை கழற்றி எறிந்து விட்டார்.

“என் தலை மொட்டையாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே ! எதற்காக நான் அதை மூடி மறைத்து, ஏமாற்ற வேண்டும் ? உருவத்திற்கும் எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம்? இனி, நான் இப்படியே மொட்டைத் தலையோடுதான் இருப்பேன்” என்று சொல்லி, அப்படியே இருக்க “முடி”(:-)வெடுத்து விட்டார்.

அவர் எண்ணத்திலும் உண்மை இருந்தது. எதற்கு, யாரை , ஏன், ஏமாற்ற வேண்டும் ?

தகவல் விகடனிலிருந்து வந்தது என்று செல்லப்பையன் சுட்டிக் காட்டுகிறார். அவருக்கும், விகடனுக்கும் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: சோ ராமசாமி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு
சோவின் தைரியம் பற்றி நல்லதந்தி
துக்ளக் பிறந்த கதை, இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதை பதிவு


நாலைந்து நாளைக்கு முன்னால்தான் திரு விஸ்வநாதன் கக்கனை சந்தித்தேன். சுப்ரமணிய சாமியும் அவரும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். சாதாரணமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது.

விஸ்வநாதன் கக்கன் மறைந்த காங்கிரஸ் தலைவரான கக்கனின் தம்பி. சுப்ரமணிய சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சிக்கு இவர்தான் செயலாளராக இருந்தார். சென்னை ஹை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணன் காங்கிரஸ், காமராஜ் என்று போனால் இவர் ஆர்எஸ்எஸ், ஹிந்துத்வா என்று கொஞ்சம் வேறு திசையில் போயிருக்கிறார். ஏதோ ஒரு வாயில் நுழையாத பேர் சொல்வார்களே, சர்சங்க்சாலக் என்ற மாதிரி, அந்த பொறுப்பில் ஆர்எஸ்எஸ் பிரசாரகராக இருந்திருக்கிறார். காஞ்சி சங்கர மடத்திடம் ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதிக்கு கொஞ்சம் நெருக்கமானவர் போலிருக்கிறது. ஜெயேந்திரர் விசிட் அடித்த தலித் கிராமங்கள், கோவில்களில் இவருடைய தும்பைப்பட்டி கிராமமும் ஒன்று, அனேகமாக முதல் கிராமம் இதுதான். ஹிந்துத்வத்தில் ஆழமான நம்பிக்கை உடையவர். ஹிந்து முன்னணி துணைத்தலைவராக எல்லாம் இருந்திருக்கிறார். 2006 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார், வெற்றி பெறவில்லை. அவருடைய குடும்பத்தில் நிறைய கலப்புத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. அவரே அப்படி மணந்துகொண்டவர்தாம். இங்கே தன் மகளையும் மருமகனையும், புதிதாக பிறந்திருக்கும் பேரனையும் பார்க்க வந்தவர் இப்படி இறந்துபோனது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அவருடைய கொள்கைகள் – குறிப்பாக ஹிந்துத்வா ஆதரவு எனக்கு இசைவானதில்லை. ஆனால் அவருக்கு அதில் முழு நம்பிக்கை இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஹிந்து மதத்தின் ஒரு மோசமான கூறை நேரடியாக அனுபவித்தவர் எப்படி ஹிந்துத்வா ஆதரவாளராக மாறினார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் சாவகாசமாக உட்கார்ந்து அவருடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதையும் தள்ளிப் போடாதீர்கள்!

அவருடைய குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.

பிற்சேர்க்கை: ஃபோட்டோ சுட்டி கொடுத்த ரீச்விநோவுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரும் சுப்ரமணிய சாமி
கக்கன்


ஆலயப் பிரவேசப் புகழ் வைத்யநாத ஐயர் பற்றி முன்னாள் அமைச்சர் கக்கன் எழுதியதை எங்கே பார்த்தேன் என்று கூட நினைவில்லை. ஆனால் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

வைத்யநாத ஐயர் அந்தக் கால காங்கிரஸ்காரர். 1939-இல் அவர் ஆறு “தாழ்ந்த” ஜாதிக்காரர்களை அழைத்துக்கொண்டு போய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்தார். அந்த ஆறு பேரில் கக்கனும் ஒருவர். ஆறு பேரில் ஐந்து பேர் தலித்கள், ஒருவர் சாணார். (சாணாரும் நாடாரும் ஒன்றுதானா?) வைத்யநாத ஐயருக்கு இதனால் கடும் எதிர்ப்பு. அடி உதை கூட விழுந்ததோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சண்டாளர்களை கோவிலுக்கு கூட்டிப் போய் கோவிலின் புனிததத்தை கெடுத்தானே பாவி என்று கும்மிப்பாட்டு எல்லாம் எழுதி அமோகமாக விற்றிருக்கிறதாம். இன்றைக்கு ஃப்ளெக்ஸ் போர்டு மாதிரி அன்றைக்கு கும்மிப்பாட்டு போலிருக்கிறது!

ஐயர் 1890-இல் பிறந்தவர். உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு ஜெயிலுக்கு போனவர். உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் போலீஸ் அவரை அடித்து துவைத்துவிட்டார்களாம். குடுமி, பூணூல், பஞ்சகச்சம் என்று இருப்பாராம். காமராஜ்-ராஜாஜி கோஷ்டிகள் என்று தமிழக காங்கிரஸ் இருந்தபோது இவர் ராஜாஜி கோஷ்டி. காங்கிரசிலிருந்து விலகி இருந்த ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வர விரும்பியபோது அதற்காக தீவிரமாக பாடுபட்டு காமராஜோடு சண்டை போட்டு இதை சாதித்தவர்களில் இவரும் ம.பொ.சி.யும் முக்கியமானவர்கள்.

எந்தப் பதவியும் – எம்.எல்.ஏ., எம்.பி. என்று – வகித்த மாதிரி தெரியவில்லை. கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளை கக்கனுக்கு விட்டுக் கொடுத்தாரோ என்னவோ. கக்கனுக்கும் இவருக்கும் அப்பா-பிள்ளை போன்ற உறவு இருந்திருக்கிறது. ஹரிஜன ஜாதியில் பிறந்த கக்கன்தான் இவருக்கு இறுதி சடங்குகளையே செய்தாராம்!

உண்மையிலேயே ஜாதி பார்க்காதவர் போலிருக்கிறது. முப்பதுகளிலேயே வீட்டு சமையல் அறையில் ஹரிஜன்கள் சாதாரணமாக புழங்கினார்கள் என்று கக்கன் சொல்கிறார். ஆச்சரியமான விஷயம். எழுபதுகளில் கூட சமையல் அறை மடி ஆசாரம், அங்கே பிற ஜாதியினர் வரக்கூடாது என்று சொல்லும் பிராமணக் குடும்பங்களை பார்த்திருக்கிறேன்.

ஓவர் டு கக்கன்!

அரிஜனங்களின் தந்தை

பி.கக்கன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம். பெரியவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். மதுரையின் வீதிதோறும் கூட்டம் போட்டு, அரிஜன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசினார்கள். ”அரிஜனங்கள் ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டால் இந்து மத தர்மமே சீர்குலைந்து போய்விடும்; அதனால் அவர்களை ஆலயப் பிரவேசம் செய்ய அனுமதிக்கக்கூடாது; அதுவும், வைத்தியநாதய்யர் போன்ற ஒரு ஜாதி இந்துவின் தலைமையில் அந்தக் காரியம் நடக்க அனுமதிக்கவே கூடாது” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எங்களுக்கெல்லாம் உள்ளூர சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆலயப் பிரவேச தினத்தன்று எங்கே பெரிய சச்சரவும், தகராறும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் வைத்தியநாதய்யரோ, அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.

குறிப்பிட்ட தினத்தன்று ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்தது.

தெய்வாதீனமாக எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை. ஆலயப் பிரவேசம் முடிந்து அனைவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது, வழியில் நின்றிருந்த ஒரு பெரியவர் வைத்தியநாதய்யரைப் பார்த்து, ”நீர்தான் அரிஜனாகிவிட்டீரே! உமக்குப் பூணூல் எதற்கு?” என்று சத்தம் போட்டுக் கோபமாகக் கூறினார்.

ஐயர் அவர்கள் ஒன்றுமே பேசாமல் சிரித்துக்கொண்டார்.

முப்பது, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, ஜாதிக் கொடுமை தீவிரமாக இருந்த நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே வைத்தியநாதய்யர் வீட்டுக்குள் அரிஜனங்கள் சர்வ சுதந்திரமாகப் போய் வரமுடியும். வீட்டுச் சமையலறை வரையில் கூட சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

அவரைப் போல்தான் அவரது மனைவியாரும், அரிஜன மக்களின் நன்மைக்காக உழைத்தவர்.

அய்யரிடம் பண உதவியும், மற்ற உதவிகளும் பெற்றுப் படித்த அரிஜன மக்களில் பலர் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள். நான் பொதுப் பணியில் ஈடுபட்டு, பிற்பாடு அரசியல் உலகத்துக்கு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரே வைத்தியநாதய்யர் அவர்கள்தான்.

அரிஜன சேவையை விட வைத்தியநாதய்யருக்குப் பிடித்த பொதுச் சேவை வேறு எதுவும் இல்லை. அதனால்தான் அவரை ‘அரிஜனங்களின் தந்தை’ என்று போற்றுகிறார் கள்.

அவர் மறைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்யக்கூடிய இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.

கக்கன் இன்றும் நேர்மையான அரசியல்வாதிக்கு உதாரணமாகச் சொல்லப்படுபவர். காங்கிரஸ் காலத்தில் மந்திரியாக இருந்தவர். இறக்கும்போது வசதிக் குறைவினால் அரசு மருத்துவமனையில்தான் அட்மிட் செய்தார்கள். எம்.பி., மந்திரி, எதிர்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ. என்று பல பதவிகள் வகித்த பின்னும் இந்த நிலை!

இது கக்கனின் நூற்றாண்டு. இவர், ஐயர் போன்றவர்களுக்கு ஒரு unbiased biography வந்தால் நன்றாக இருக்கும். unbiased ஆக இருப்பது முக்கியம். உதாரணமாக கக்கன் நேர்மையான அரசியல்வாதி, சரி. நல்ல நிர்வாகியா? அவரை ஒரு டோக்கன் ஹரிஜனாக காங்கிரசில் வைத்திருந்தார்களா? இதற்கெல்லாம் உண்மையான பதில் அதில் இருப்பது அவசியம். நம்மூரில் biography என்றால் புகழ்ந்து எழுத வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது!

கக்கன், ஐயர் இருவருக்கும் அரசு தபால் தலை வெளியிட்டிருக்கிறது.

பிற்சேர்க்கை: எழுத்தாளர் இரா. முருகன் தந்த தகவல் – திரு வைத்தியநாதய்யரின் மகளும் மருமகன் திரு ஸ்தாணுநாதனும் சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் எங்கள் பலமாடிக் குடியிருப்பில் இருந்தார்கள். எளிமையான நல்ல மனதுக்காரர்கள். திரு.ஸ்தாணுநாதன் ரயில்வே போர்ட் அங்கத்தினராகவும் அதற்கு முன் மத்திய ரயில்வேயில் உயர்ந்த பதவியிலும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் இவர்கள் சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்தியாலத்தை நிர்வகித்து வருகிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
வைத்யநாத ஐயர் பற்றிய விக்கி குறிப்பு
கக்கன் பற்றிய விக்கி குறிப்பு


எம்.எஸ். பற்றி டி.ஜே.எஸ். ஜார்ஜ் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் – “MS – A Life in Music”. ஜெயமோகன் இதைப் பற்றி எழுதிய பதிவிலிருந்துதான் தெரிய வந்தது.

எம்.எஸ்.

“எம்.எஸ்ஸின் முகம்தான் ஒரு மங்கலமான பிராமண குடும்பத் தலைவியின் முகம்” என்று ஜெயமோகனின் நண்பர் சொன்னாராம். என் சிறு வயதில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இன்னும் அப்படித்தான் தோன்றுகிறது. அவரது வகிட்டுக்கு அருகே கொஞ்சமாக பறக்கும் முடியைப் பார்க்கும்போது மனதில் சின்ன சந்தோசம் பிறக்கும். காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று தோன்ற வைத்த முகம்.

எனக்கு ஒரு பதிமூன்று பதினான்கு வயது இருக்கும்போது என் பெரியம்மாதான் எம்.எஸ். தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர், இன்று பிராமணத்தி என்று எல்லாரும் நினைக்கிறார்கள் என்று சொன்னார். அதற்கப்புறம் “Who cares?” என்று கேள்வியும் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு முன் பிராமணர்களை என்னால் முகத்தை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அதற்கப்புறம் பார்ப்பவர்கள், பழகுபவர்கள் என்ன ஜாதி என்று எப்போதாவது தோன்றுவது கூட அழிந்தே போய்விட்டது. தெரிந்துகொண்டு என்ன பண்ணப் போகிறேன்? Who cares?

முதல் அதிர்ச்சி மறைந்த பிறகு எம்.எஸ். மீது மரியாதை அதிகரித்தது. 1916இல் பிறந்த பெண்களில் பிராமணத்திகளுக்காவது சாதனை செய்ய கொஞ்சூண்டு சான்ஸ் உண்டு. ஒரு தேவதாசியின் மகளுக்கு என்ன சான்ஸ் இருக்கிறது? அவரை என்றாவது பார்த்தால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியே ஆக வேண்டும் என்று தோன்றியது. அவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் சதாசிவத்தின் மீதும் மரியாதை உண்டாகியது.

GNB, MS in Sakunthalaiஜெயமோகன் அவரது பதிவில் குறிப்பிடும் சில விஷயங்கள் எம்.எஸ். மீது இருக்கும் பிம்பத்தை கொஞ்சம் தாக்குகின்றன. சதாசிவத்துடன் 4 வருஷம் மணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்திருக்கிறாராம். அப்போது சதாசிவத்தின் முதல் மனைவி உயிரோடு இருந்திருக்கிறார். நடுவில் ஜி.என்.பி.யோடு கொஞ்ச காலம் தொடர்பு இருந்திருக்கிறதாம். தொடர்பு உடல் ரீதியானதுதானா என்று தெளிவாக தெரியவில்லை. சமூகத்தில் தான் தேவதாசியாக கருதப்படக்கூடாது, ஒரு குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற உறுதி அவரை வழி நடத்தி இருக்கிறது.

சதாசிவத்தின் மனைவி ஆன பிறகு அவருக்கு இன்று சமூகத்தில் இருக்கும் பிம்பம் உருவாக ஆரம்பித்திருக்கிறது. இந்த பிம்பத்துக்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. குடும்பத்தலைவி. முதல் தாரத்தின் பெண்களை தன் பெண்களாகத்தான் வளர்த்தார். பிராமண ஜாதிக்குள் தன்னை பர்ஃபெக்டாக பொருத்திக்கொண்டார். அவரது இசைத் திறன், சதாசிவத்தின் மார்க்கெட்டிங், திரைப்படங்கள் எல்லாம் அவரை கர்நாடக சங்கீதத்தின் ராணியாக மாற்றின.

எம்.எஸ்சை விட வசந்தகுமாரிக்கும் பட்டம்மாளுக்கும் நல்ல குரல் என்று சொல்பவர்கள் உண்டு. எனக்கும் எம்.எல்.விக்கு எம்.எஸ்சை விட நல்ல குரல் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் எம்.எஸ்ஸின் குரலில் இருக்கும் simplicity வேறு குரல்களில் இல்லை.

MS, Sathasivamபொய்யான பிம்பங்கள் எப்போதுமே மறுக்கப்படவேண்டியவை. சதாசிவத்தின் மனைவி ஆன பிறகு அவரது பிம்பத்துக்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவர் ஒரு uber-பிராமணத்தியாக மாறிவிட்டார். (இங்கே நான் பிராமணத்தி என்று சொல்வது வெறும் சடங்கு, சம்பிரதாயம், சமூகத்தில் இருக்கும் மதிப்பு மட்டுமே. அவர் ஜாதி பார்த்தாரா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. சதாசிவம் பிராமணர்களுக்கு மட்டும் உதவி செய்தார் என்று ஜார்ஜ் சொல்கிறாராம்.) திருமணத்துக்கு முன் அவரது வாழ்க்கை ஒரு “மங்களகரமான” வாழ்க்கை இல்லை, ஆனால் ஆசைகளும், நிராகரிப்புகளும், அவமானங்களும், இசையும் நிறைந்த ஒரு வாழ்க்கை.

அவர் மேல் இருக்கும் மரியாதை எனக்கு இன்னும் அதிகம் ஆகி இருக்கிறது. எத்தனை கஷ்டங்களை, அவமானங்களை, அன்றைய சமூக அநீதிகளை, அவலங்களைத் தாண்டி, தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்! எம்.எஸ். மீது ஒரே ஒரு குறைதான் சொல்ல முடியும். அவர் தன் பிறப்பு, காதல்கள் ஆகியவற்றை புதைத்திருக்க வேண்டியதில்லை. அதையும் தைரியமாக வெளியே சொல்லி இருக்கலாம். ஆனால் இது இன்றைய விழுமியங்களை வைத்து சொல்லப்படும் குறை. மேலும் சதாசிவத்தின் மாரக்கெட்டிங்குக்கு இந்த உண்மைகள் இடைஞ்சலாக இருந்திருக்கும்.

எம்.எஸ். பதிவுக்கு வந்த பல கடிதங்களில் திரும்பி திரும்பி ஒன்றே ஒன்றுதான் சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை இப்போது வெளியே சொல்லி அவரது பிம்பத்தை உடைப்பானேன் என்று. என் கண்ணில் பிம்பம் உடையவில்லை, இன்னும் மகத்தானதாகத்தான் ஆகி இருக்கிறது. பெரியோரைப் போற்றுவோம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகன் பதிவு – MS: A Life in Music


லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

அண்மையில் மறைந்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை பற்றி 10-4-66 அன்று விகடனில் வந்த கட்டுரை. விகடனுக்கு நன்றி! “புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய் சிரிப்பு” மாதிரி எழுதுவது quaint ஆக இருக்கிறது.

அவரை பற்றி நான் எழுதிய ஒரு முந்தைய பதிவு இங்கே. கானா பிரபு மறுபதிவு செய்த அவரது இன்னொரு பேட்டி இங்கே. காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி இங்கே.

ஹரிஜன நிதிக்காக, பணமும் நகைகளும் வசூல் செய்துகொண்டு இருந்தார் காந்தியடிகள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் எல்லோரிடமும், தாழ்த்தப்பட்ட மக்களை உய்விப்பதற்காக அந்த மகாத்மாவின் கரம் தாழும். புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கண்டவர்கள் எல்லோரும் தங்களிடமிருக்கும் நகைகள் அனைத்தையுமே தயங்காமல் கழற்றிக் கொடுத்துவிடுவார்கள்.

அன்றும் காந்தியடிகள் கரம் நீட்டிக்கொண்டிருந்தார். கான்வென்ட் பள்ளியிலிருந்து பள்ளிக்கூட டிரஸ்ஸிலேயே வந்திருந்த சிறுமி ஒருத்தி, மந்திரத்தால் கட்டுண்டவள் போல் தன் கையிலிருந்த வளைகளைக் கழற்றி மகாத்மாவிடம் கொடுத்துவிட்டாள்.

மறுநாள், மகாத்மா அந்தப் பெண்ணை அழைத்து, “நேற்று நீ வெள்ளி வளையைக் கழற்றிக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டாயே!” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே! எல்லோரும் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தவுடன், என்னையும் மீறி நான் என் கையிலிருந்ததைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள் சிறுமி.

“அதெல்லாம் தெரியாது. அதற்குப் பிராயச்சித்தமாகப் பவுன் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்” என்றார் காந்திஜி. அந்தச் சிறுமி, மகாத்மாவின் கட்டளைப்படி பவுன்களைக் கொண்டு போய்க் கொடுத்து, அவரது பாராட்டுதல்களையும் ஆசிகளையும் பெற்றார்.

மகாத்மாவின் ஆசிகளை மட்டுமா? நேருஜி, பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற பல பெரும் தலைவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர் அந்தப் பெண். ஒரு மாபெரும் தியாகியின் அரவணைப்பில் வளர்ந்தவர். தேசபக்தியும் சுதந்திர வேட்கையும் அவருடைய உடன்பிறப்புகள்.

அவர்தான் – தீரர் எஸ்.சத்திய மூர்த்தியின் மகளான திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.

கேரள நாட்டுக் கோட்டையம் பகுதிக்குச் சென்று, திருமதி லக்ஷ்மியைப் பற்றி விசாரித்தால், அவருடைய அரும்பணிகளின் சிறப்பு நன்கு புரியும். அங்கே ‘பிளாண்டராக’ இருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லக்ஷ்மி, பங்கு பெற்றிராத சமூக ஸ்தாபனங்களே இருக்க முடியாது. தமது இல்லத்திலேயே பெண்களுக்காக இலவச மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார் அவர். ‘ஸ்டேட் சோஷல் வெல்ஃபேர் கமிட்டி’ ஒன்றின் தலைவராகப் பணியாற்றுகிறார். மாகாண குடும்பக் கட்டுப்பாடு திட்டக் கல்வி ஆசிரியராக இருக்கிறார். இவை தவிர, கூட்டுறவு இயக்கங்களிலும் தொண்டாற்றுகிறார்.

மகாராஷ்டிரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, கேரளத்தில் வாழ்க்கைப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி, தற்போது ‘புஸ்தக சங்கம்’ (Book venture) ஒன்றைத் துவக்கி, சிறப்பான இலக்கியப் பணி ஆற்றிவருகிறார். இதற்கு, சென்னையில் ஒரு பெரிய புஸ்தகக் கம்பெனியை வைத்து நடத்தி வரும் இவருடைய கணவர், பேராதரவு தந்து வருகிறார்.

“என் கணவருக்குப் புத்தகங்கள் மீதுதான் முதல் காதல். நான் கூட இரண்டாவது பட்சம்தான்” எனக் கூறும் திருமதி லக்ஷ்மி, இந்தப் புத்தகசங்கத்தின் வளர்ச்சிக்காக, இதுவரை முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சொந்தப் பணத்தைச் செலவழித்துள் ளார்.

“இந்தியாவிலுள்ள படித்த தமிழ்ப் பெண்களில் 500 பேர் எனக்கு உதவி செய்தால், இந்தக் கிளப்பை வெற்றிகரமாக நடத்திவிடுவேன் நான். ஆளுக்கு ஆறு மெம்பர்களைச் சேர்த்துத் தந்தால், மூவாயிரம் மெம்பர்கள் கிடைத்துவிடுவார்கள். அது போதும் எனக்கு” என்கிறார்.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள 500 பெண்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்! கண்டிப்பாகக் கிடைப்பார்கள்.

“காந்தியடிகளை முதன்முதலாக எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டபோது, சிறிது நேர யோசனைக்குப் பின்னர், “சரியாக நினைவில்லை. ஆனால், பல முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பு உண்டு அவருக்கு. என்னை ஹிந்தியில் கடிதம் எழுதச் சொல்லுவார். நான் எழுதும் ஹிந்திக் கடிதத்திலுள்ள பிழைகளையெல்லாம் திருத்தி, அவற்றைத் திருப்பி அனுப்புவார். தாமே கைப்பட விலாசம் முதற்கொண்டு எழுதுவார். அவரிடம் நான் கவனித்த பெரிய விஷயம், அவருடைய போட்டோகிராபிக் மெமரி! நமது பெரியவாளைப் பற்றிச் சொல்வோமே, அதே போன்ற ஞாபக சக்தி உடையவர் அவர்” என்றார்.

நமது சுதந்திரப் போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ள மகத்தான தொண்டினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் கூடவே நிழல் போல இருந்து வந்த திருமதி லக்ஷ்மியிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால், அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்த தேச பக்தியையும், தியாக உணர்வையும் பற்றிய சிறப்பான விளக்கம் கிடைக்கும்.

காமராஜ் அவர்களைப் பற்றிக் கேட்ட போது, “திருவல்லிக்கேணி வீட்டுக்கு வருவார் அவர். அவர் அதிகமாகப் பேசியே கேட்க முடியாது. அப்பாவிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை. அப்பாவும் காமராஜ் அவர்களின் ஆற்றலை நன்கு அறிந்து வைத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை காமராஜ் அவர்களிடம் நான் இரண்டு சிறப்பான குணங்களைக் கவனித்து வருகிறேன். பழங்காலத் தலைவர்களையும் தியாகிகளையும் மறக்காத குணம். பதவிக்கு ஆசைப்படாத மனம். இந்த இரண்டுதான்! அவர் வகித்த பதவிகள் எல்லாம் வற்புறுத்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டவை. டி.ஸி.ஸி. தலைவர் பதவியை அப்பா அவரிடம் வற்புறுத்திதான் ஏற்றுக்கொள்ள வைத்தார். ‘நீ தலைவனாக இரு; நான் காரியதரிசியாக இருக்கிறேன்’ என்றார் அப்பா. ஒரு முறை தலைவராக இருந்தவர், காரியதரிசியாக உழைக்க முன் வந்தார் என்றால், காமராஜ் அவர்களின் ஆற்றலை அப்பா எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது தெரிகிறதல்லவா?” என்றார் லக்ஷ்மி.

ஒருமுறை, காமராஜ் அவர்களின் கல்யாணத்தைக் காணவென்று ஆயிரம் மைல் பிரயாணம் செய்தார் திருமதி லக்ஷ்மி. ஆமாம்! புவனேஸ்வர் காங்கிரஸில், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை காமராஜ் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் திருமதி லக்ஷ்மி.

“எங்கள் காமராஜுக்கு அதுதானே திருமணம்! அந்த ‘காடி’யை அவர் அலங்கரிக்கப் போகும் கண்கொள்ளாக் காட்சியைக் காண, நானும் என் கணவரும் புவனேஸ்வரம் போனோம். உழைப்பும் நேர்மையும் கௌரவிக்கப்பட்ட மகத்தான காட்சியைக் கண்டுவிட்டு வந்தோம்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் திருமதி லக்ஷ்மி.

சென்னை மேல்சபையில் அங்கத்தினர் பதவி வகிக்கும் திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஒரு காலத்தில் பல பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், நன்றாக வீணை வாசிப்பார்.

பெண்கள் முன்னேற்றம், தமிழ் இலக்கிய வளர்ச்சி இவை இரண்டிலும்தான் தற்போது இவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அன்றைக்கு 30000 ரூபாய் என்றால் இன்றைக்கு மூன்று கோடி பெறும் என்று நினைக்கிறேன். வீட்டை அடகு வைத்து இத்தனை பணத்தை போட்டிருக்கிறார். உண்மையான புத்தக காதல்!

திருமலை ராஜன் புண்ணியத்தில் சமீபத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அபிதா புத்தகத்தை படித்தேன். என்ன அருமையான புத்தகம்! நான் இங்கே லா.ச.ரா.வின் எழுத்தை சொல்லவில்லை, புத்தகத்தின் அட்டை, பேப்பர், பைண்டிங் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். உலகத் தரம் வாய்ந்த புத்தகம் வெளியீடு. இன்றைக்கு கூட இப்படி புத்தகங்கள் வருவதில்லை. யாராவது பழைய வாசகர் வட்டம் (நல்ல கண்டிஷனில் உள்ள) வெளியீடுகளை விற்பதாக/கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஆளுமைகள்

தொடர்புடைய பிற பதிவுகள்
வாசகர் வட்டம் உருவாக்கி நேர்த்தியான புத்தகங்களை பதிப்பித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (Lakshmi Krishnamoorthi)
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி

அடுத்த பக்கம் »