Tamil Nadu Temples
பாலகுமாரனுக்கு ராஜராஜ சோழன், தஞ்சாவூர் பெரிய கோவில் என்றால் ஒரு பித்து உண்டு. உடையார் புத்தகம் வருவதற்கு முன்பே அவரது பல புத்தகங்களில் இது தெரியும்.

அவருடைய தளத்தில் அவர் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதைப் பற்றி உள்ளம் உருகி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதைப் பற்றி விவரித்து எல்லாம் நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. அங்கேயே போய் படித்துக் கொள்ளுங்கள்!

பாலகுமாரன் பதிவைப் பார்த்தேன், அடுத்த நாள் இந்த ஹிந்து கட்டுரை கண்ணில் பட்டது. டாக்டர் நாகசாமியின் ஒரு உரையைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

ராஜராஜ சோழன் 407 தளிச்சேரி பெண்டுகளுக்கு (நாட்டியம் ஆடுபவர்கள்) வீடு, நிலம் வழங்கியது, வீட்டின் அட்ரஸ், (ஏறக்குறைய பட்டா) அடுத்த வாரிசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முறை, பாடுபவர்கள், உடுக்கை அடிப்பவர்கள், வீணை வாசிப்பவர்கள், மத்தளம் வாசிப்பவர்கள், சங்கு ஊதுபவர்கள், கணக்கு வழக்கு பார்ப்பவர்கள், துணி வெளுப்பவர்கள், தைப்பவர்கள், எல்லா நடனங்களையும் மேற்பார்வை பார்ப்பவர்கள் அத்தனை விஷயங்களையும் கோவிலில் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறாராம். டாக்டர் நாகசாமி இந்த நானூறு தளிச்சேரி பெண்டுகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி அதை முதல்வர் கருணாநிதி வெளியிட்டாராம்.

சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்கள்!

அப்புறம் தமிழ் ஹிந்து தளத்திலும் ஒரு அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. அதே தளிச்சேரி பெண்டுகள், அவர்கள் வாழ்க்கை முறை, என்ன வட்டிக்கு அந்த காலத்தில் பணம் கிடைத்தது என்று பல விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். கட்டாயமாக படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பதிவுகள்:
பாலகுமாரனின் பதிவு
தஞ்சை பெரிய கோவில் ஓவியங்கள் – ஆர்வியின் பதிவு, ஹிந்து கட்டுரை
இந்திரா காந்தி சென்டரில் எல்லா ஓவியங்களும் (பாதிக்கு மேலான ஓவியங்கள் மங்கிவிட்டிருக்கின்றன. ஆனால் மிச்ச ஓவியங்களை தவறவிடாதீர்கள்.)
பெரிய கோவில் பற்றி ஒரு தளம்

ஹிந்து கட்டுரை
டாக்டர் நாகசாமி

தமிழ் ஹிந்து கட்டுரை


ஒரு காலத்தில் வாரப் பத்திரிகைகளிருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட பழைய தொடர்கதைகள் பல உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் புழங்கும். எனக்கு அந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது ஒட்டிக் கொண்டு வந்திருக்கும் மிச்ச பக்கங்களை படிப்பது பிடிக்கும். அப்படிதான் நான் சில கோவில் ஓவியங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் சில்பி என்ற பெயர் தெரியாது. (பெயர் தெரிந்த முதல் ஓவியர் ஜெயராஜ்தான்.) யாரோ வரைந்திருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான். சமீபத்தில் வரலாறு.காம் என்ற தளத்தில் சில்பியை பற்றிய சில கட்டுரைகளைப் பார்த்தபோது பழைய ஞாபகங்கள் வந்தன. அங்கே சில்பியின் வாழ்க்கை, சில்பியின் கோட்டோவியங்கள், சில்பியைப் பற்றி ஒரு அறிமுகம் என்று மூன்று கட்டுரைகளைப் பார்த்தேன்.

(விகடனுக்கும் பசுபதிக்கும் வரலாறு.காம் தளத்துக்கும் நன்றி!) உதாரணத்துக்காக அங்கிருந்து ஒரு ஓவியத்தை இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன். அதில் எத்தனை நுணுக்கம்? ஒரு புகைப்படத்தில் கூட இப்படி ஒரு எஃபெக்டை கொண்டு வருவது கஷ்டம். (படத்தை கிளிக்கினால் பெரிய சைஸ் ஓவியம் தெரியும்.)

ராஜன் உபயத்தில் இந்த சிற்பத்தின் புகைப்படமும் கிடைத்திருக்கிறது. இது ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உள்ள ஒரு சிற்பமாம்.

சில்பி விகடனில் பணி புரிந்திருக்கிறார். ஊர் ஊராகப் போய் அங்குள்ள கோவில்களை – கோவில் என்றால் மூலவர் உற்சவர் கோபுரம் மட்டுமில்லை – எந்த மூலை முடுக்கில் அவரை ஒரு சிற்பம் கவர்ந்தாலும் அதை வரைவார். தென்னாட்டு செல்வங்கள் என்று ஒரு தொடர் வந்ததாம். அது பூரா இவர் ஓவியங்கள்தானாம். இங்கே இருக்கும் ஓவியம் கூட அந்த தொடரில் வந்ததுதானாம்.

எனக்கு ஓவியத்தின் கலை நுணுக்கம் எல்லாம் தெரியாது. ஓவியம் பிடித்திருக்கிறது இல்லை என்பது பார்த்த நொடியில் படுவதோடு சரி. அதன் பின்னால் இருப்பது க்யூபிசமா, சர்ரியலிசமா, பாயிண்டிலிசமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் இது பார்ப்பதை அப்படியே பிரதி எடுக்க முயற்சி என்பது தெரிகிறது. என் கண்ணில் சிறந்த ஓவியம், ஆனால் ஓவியக் கலைஞர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. டாக்டர் ருத்ரன் மாதிரி யாராவது என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!

சிற்பியின் ஓவியங்களின் பிரின்ட் எங்காவது இன்னும் கிடைக்கிறதா? இணையத்தில் பார்க்க முடியுமா? “தென்னாட்டு செல்வங்கள்” தொடர் புத்தகமாக கிடைக்கிறதா? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்!

பிற்சேர்க்கை: ஸ்ரீனிவாஸ் இரண்டு ஓவியங்களை அனுப்பி இருக்கிறார். இடது பக்கம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். அதற்கு அடுத்தபடி இருப்பது திருவாலங்காடு சிவன் கோவில். அவருக்கு நன்றி!

சில்பியின் பாணி, தரம் போன்றவை என் போன்ற பாமரனுக்கு மட்டும்தான் பிடிக்குமா இல்லை ஓவியர்களும் கலை விமர்சகர்களும் அதை உயர்ந்த ஓவியம் என்று கருதுகிறார்களா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. டாக்டர் ருத்ரன் நல்ல ஓவியர், எனக்குத் தெரிந்த ஒரே ஓவியர். அவரைக் கேட்டேன் – அவர் வார்த்தைகளில்:

சில்பி ஒரு மேதை மட்டுமல்ல, மகான். அப்படி வரைவது வெறும் திறமையாக எனக்குப் படுவதில்லை, அது அருள், வரம்.

சில்பியின் ஓவியங்களை லக்ஷ்மி எனும் விமர்சகரும் பார்வதி கலைக்கூடத்தின் உரிமையாளரும் ஒரு நூலாக்க சில வருடங்களுக்கு முன் முயன்றார்கள். சில்பியின் குடும்பத்தினர் ஒத்துவரவில்லை என்று சொல்லப்பட்டது.
விகடனுக்கு அப்புறம் மணியனின் இதயம் பேசுகிறது இதழில் சில்பி வரைந்து வந்தார். அவற்றுள் காந்திமதியும் அபிராமியும் அற்புதம்.

ரகுவீரதயாள் திருப்பதி ஐயங்கார் என்பவர் “தென்னாட்டு செல்வங்கள்” தொடரின் சில பகுதிகளை தொகுத்திருக்கிறார். ஸ்ரீனிவாஸ் அவற்றுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். இருவருக்கும் நன்றி! இரண்டு பகுதிகள் நெட்டில் கிடைக்கின்றன. முதல் பகுதி தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பற்றியது. இரண்டாம் பகுதி திரிபுவனம் கோவிலைப் பற்றியது.

தொடர்புடைய பக்கங்கள்:
சில்பி – ஒரு அறிமுகம்
சில்பியின் கோட்டோவியங்கள்
சில்பியின் வாழ்க்கை வரலாறு
வரலாறு.காம் தளம்

தஞ்சாவூர் பெரிய கோவில் – சில்பியின் ஓவியங்கள்
திரிபுவனம் கோவில் சித்திரங்கள்


பத்தூர் என்ற ஊரில் உள்ள ஆலயத்தின் நடராஜர் சிலை ஒன்று திருட்டுப் போய் விட்டது. லண்டனில் அது கண்டுபிடிக்கப்பட்டு, அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்தியாவிலிருந்து சாட்சி சொல்வதற்காக நான் அனுப்பப்பட்டேன். கோர்ட்டில் வாதங்கள் நடந்தது. இது உங்கள் நாட்டிற்குத்தான் சொந்தமானது என்று எப்படிக் கூறுகிறீர்கள் என்று நீதிபதி பல குறுக்குக் கேள்விகளைக் கேட்டார். நம்மிடம் அப்போது அதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. இருந்தாலும் நான் நமது கல்வெட்டுச் சான்றுகளையும், கோயில் பற்றிய அறிவையும், நமது பண்பாடு, கலைகள் பற்றியும் நீதிபதியிடம் விளக்கிக் கூறினேன். இது நம் நாட்டைச் சேர்ந்ததுதான் என்பதை மற்ற ஆலயங்கள், சிலைகளை ஒப்பிட்டுக் காட்டி நிரூபித்தேன். அதைக் கேட்ட அந்நாட்டு நீதிபதி மிகவும் வியந்து என்னைப் பாராட்டினார். Unparalleled Expert in this field என்று அவர் தன் தீர்ப்பில் என்னைப்பற்றி எழுதினார். உடனடியாகச் சிலையை நம்மிடம் ஒப்படைக்கத் தீர்ப்புக் கூறினார். ஆனால் எதிர்த்தரப்பினர் பிரபுக்கள் சபையில்மேல்முறையீடு செய்தனர். அதில் இருந்த மூன்று முதிர்ந்த நீதிபதிகள், இதில் விவாதிக்க ஏதுமில்லை, சாட்சியங்கள் எல்லாம் மிக வலுவாக உள்ளன என்று கூறி வழக்கை ஏற்க மறுத்து விட்டனர். பின்னர் வழக்கு ப்ரிவி கவுன்சிலுக்குப் போனது. அந்த நீதிபதியும் இந்த வழக்கு நடந்த விதம் மிகச்சரி, இனி இதில் விவாதிக்க ஏதுமில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். நடராஜரும் நம் ஊருக்குத் திரும்ப வந்தார்.

டாக்டர்  இரா. நாகசாமி


டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமிழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்டசோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர். இவர் மேற்கொண்ட மாமல்லபுரம் பற்றிய ஆராய்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர். இவரது கட்டுரைகளை உலக அளவில் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்த்து யுனெஸ்கோ பதிப்பித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருதத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மத்திய அரசின் பல கலை, பண்பாட்டுக் குழுக்களில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். உலக நாடுகள் பலவற்றிலும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தமிழகத்தின் பண்டைச் சிறப்பை, நாகரிகத்தை உலகுக்குச் சான்றுகளோடு அடையாளம் காட்டியவர். பார்க்க: tamilartsacademy.com

நன்றி – தென்றல் மாத இதழ்  (ஆகஸ்ட் 2010)

http://www.tamilonline.com/thendral/


கோபாலின் இன்னொரு பதிவு. உ.வே.சா.வின் நினைவுகளை எல்லாம் எங்கே தேடிப் பிடித்தாரோ தெரியவில்லை. சுவாரசியமாக இருக்கிறது.

தட்டச்சு செய்து அளித்தவர் : திருமதி கீதா சாம்பசிவம்

Marudhu Brothersசிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கி வந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவனவற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர் மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், சமயத்திற்கேற்பப் பாடப் பெற்ற பல தனிப் பாடல்களும் அங்கங்கே வழங்கி வருகின்றன. சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில் திருட்டுப் பயம் முதலியன கிடையா. அவருடைய ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.

அவர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்குட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள் விதிப்படி காலத்தில் நடந்து வரும் வண்ணம் வேண்டியவற்றைச் செய்து வந்தார். பல தலங்களில் அவர் திருப்பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவ தானமாக நிலங்களை அளித்திருக்கின்றார். முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முக்கிய ஸ்தலமாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து படித்துறைகள் கட்டுவித்தனர். அக்குளம் மருதாபுரி என்று அவர் பெயராலேயே வழங்கும். அதனைச் சூழ அவர் வைத்த தென்னமரங்களிற் சில இன்றும் உள்ளன. குன்றக்குடிமலைமேற் சில மண்டபங்களைக் கட்டியிருக்கின்றனர். அவை கட்டப்பட்ட பொழுது மிக உயர்ந்த சாரங்கள் அமைக்கப் பட்டன. அவற்றில், மேலே உள்ளது மருதபாண்டியரால் அமைக்கப்பட்ட சாரம். கீழ்ச்சாரம் வெங்களப்ப நாயக்கர் என்னும் ஒரு ஜமீன்தாரால் அதற்கு முன் கட்டப்பட்டது. அவற்றைக் குறித்து, “மேலைச்சாரம் எங்களப்பன், கீழைச்சாரம் வெங்களப்பன்” என்னும் பழமொழி ஒன்று அந்தப் பக்கத்தில் வழங்கி வருகிறது.

அக்காலத்தில் ஜனங்கள் மருதபாண்டியரை, ‘எங்களப்பன்” எனச் சொல்லிவந்தனரென்பதனாலேயே அவருடைய உத்தமகுணங்க்ளும் அவர் பால் இருந்த அன்பும் புலப்படும். காளையார் கோவிலிலுள்ள மிகப் பெரிதான யானைமடு என்னும் தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து நாற்புறமும் படித்துறை கட்டுவித்தார். அந்த ஸ்தலத்தில் கோபுரமும் கட்டுவித்தார். அப்பொழுது மிக்க தூரத்திலிருந்து செங்கற்கள் வரவேண்டி யிருந்தன. அதற்காக வழி முழுவதும் சில அடிகளுக்கு ஒவ்வொரு மனிதராக நிற்க வைத்து ஒருவர் கை மாற்றி ஒருவர் கையிற் கொடுக்கும்வண்ணம் செய்து செங்கற்களை வரவழைத்தனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு அவல் கடலை முதலிய உணவுகளையும் தண்ணீரையும் அடிக்கடி கொடுத்து அவர்களுக்குக் களைப்புத் தோன்றாமல் செய்வித்தார்.

காளையார் கோவிலுக்குத் தேர் ஒன்று மிகப் பெரியதாக அமைக்கவேண்டுமென்று அவர் கருதித் தக்க சிற்பிகளை வருவித்து வேண்டியவற்றையெல்லாம் சேகரித்து முடித்தார். அத்தேரின் அச்சுக்கு ஏற்றதாக ஒரு பெரிய மரம் கிடைக்கவில்லை. பல இடங்களுக்குச் செய்தி அனுப்பி விசாரித்து வந்தார். அப்பொழுது அவருடைய ஆட்சிக்குட்பட்ட திருப்பூவணத்தில் வையை ஆற்றிற்குத் தென்கரையில் ஆலயத்துக்கு எதிரில் மிகப் பழையதும், பெரியதுமாக மருதமரம் ஒன்று இருப்பதாக அறிந்தார். அதனை அச்சுக்கு உபயோகப்படுத்தலாமென்றெண்ணி, உடனே அதனை வெட்டி அனுப்பும்படி அங்கே உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினார்.

அதனைப் பெற்ற அதிகாரிகள், அவ்வாறே செய்ய நினைந்து வேண்டிய வேலையாட்களை ஆயுதங்களுடன் வருவித்து மரத்தை வெட்டத் தொடங்கினார்கள். அப்பொழுது, அதனைக் கேள்வியுற்று அத்தலத்தில் திருப்பூவணநாதருக்குப் பூசை செய்து வருபவர்களுள் ஒருவராகிய புஷ்பவனக் குருக்களென்னும் பெரியோர், “அந்த மரத்தை வெட்டக் கூடாது” என்று ஓடி வந்து தடுத்தார். “ராஜாக்கினைக்கு மேலேயோ உம்முடைய ஆக்கினை?” என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் அதனை வெட்டும்படி வேலைக்காரர்களை ஏவினார்கள். அதைக் கண்ட குருக்கள் ஆத்திரம் மிக்கவராகி, “மகாராஜா மேல் ஆணை! நீங்கள் இந்த மரத்தை வெட்டக் கூடாது!” என்று மீட்டும் தடுத்தார். அவ்வாறு ஆணையிட்டு மறித்ததனால் அவர்கள் அஞ்சி வெட்டுதலை நிறுத்திவிட்டு உடனே அச்செய்தியை மருத பாண்டியருக்குத் தெரிவித்தார்கள்.

அதனை அறிந்த மருத பாண்டியர், “ஸ்ரீ காளீசுவரருடைய திருத்தேருக்காக நாம் வெட்டச் சொல்லியிருக்கும்பொழுது அதைத் தடுக்கலாமோ? அவ்வளவு தைரியத்தோடு தடுத்ததற்கு என்ன காரணம் இருக்கக் கூடும்?? நாமே நேரிற் போய் இதை விசாரித்து வர வேண்டும்” என்றெண்ணித் தமது பரிவாரங்களுடன் சென்று திருக்கோயில் வாயிலில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கினார். கோவில் அதிகாரிகள் மரியாதைகளோடு வந்து அவரைக் கண்டனர். பாண்டியர் விபூதி குங்குமப் பிரஸாதங்களைப் பெற்று அணிந்து கொண்டார்.

அப்பால், “கோயிற் காரியங்கள் குறைவின்றி நடந்து வருகின்றனவா?” என்று விசாரித்தார். பின்பு, அவர்களை நோக்கி, ” இங்கே உள்ள குருக்களில் ஒருவர், வையைக் கரையிலுள்ள மரத்தை வெட்டக் கூடாதென்று தடுத்ததாகக் கேள்விப்பட்டோம். நம்முடைய கட்டளையைத் தடுத்த அவர் யார்? இப்பொழுது அவர் எங்கே உள்ளார்?” என்று கேட்டார். அவர்கள், “இதோ, இப்பொழுதுதான் மகாராஜா அவர்களுக்குப் பிரஸாதங்கள் கொடுத்துவிட்டு அவ்விடத்துக்கு அஞ்சி மதுரைக்குப் போய்விட்டார். இவ்வளவு நேரத்திற்குள் வெகு தூரம் போயிருப்பார்.” என்று நடுநடுங்கிச் சொன்னார்கள்.

புஷ்பவனக் குருக்கள், தாம் செய்த செயலால் தமக்கு என்ன துன்பம் வருமோவென்றஞ்சி, மருத பாண்டியருடைய அதிகாரத்துக்குட்படாத இடத்திற்குப் போகவேண்டுமென்று கருதி, முன்னரே ஸித்தம் செய்து வைத்திருந்த வண்டியில் ஏறி, மதுரை போய்ச் சேர்ந்துவிட்டார்.

மருத பாண்டியர், உடனே மதுரைக்குச் சென்ற குருக்களுக்கு ஓரபய நிருபம் எழுதுவித்து அதைக் காட்டி அவரை அழைத்துவரும்படி ஒருவரை அனுப்பினா. அபய நிருபம் என்பது, பழைய காலத்தில் குற்றவாளிகளுக்கேனும், அஞ்சி ஓடி ஒளித்த பகைவர்களுக்கேனும், “நீங்கள் அஞ்ச வேண்டாம்; இங்கே வந்தால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது” என்று அரசர்களால் அவர்களுக்குள்ள பயத்தைப்போக்குவதற்காக எழுதப்படுவது.

அந்நிருபத்தைப் பெற்ற புஷ்பவனக்குருக்கள் திருப்பூவணம் வந்து மருதபாண்டியர் முன்னே நடுக்கத்தோடு நின்றார். பாண்டியர் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு அவரை இருக்கச் சொல்லி, “நீர்தாம் அந்த மரத்தை வெட்டக் கூடாது என்று சொன்னவரோ?” என்று கேட்டார்.

குருக்கள்: ஆமாம், மகாராஜா!

பாண்டியர்: காளையார் கோயில் தேருக்கு உபயோகித்தற்காக நாம் அதை வெட்டச் சொல்லியிருக்கும்போது நீர் தடுக்கலாமா??

குருக்கள்: அதற்குத் தக்க காரணங்கள் இருந்தமையால்தான் அப்படிச் செய்தேன்.

உடனிருந்த அதிகாரிகளும் ஊராரும் பிறரும் மருத பாண்டியர் குருக்களை என்ன செய்து விடுவாரோவென்றும் குருக்கள் தாம் செய்த குற்றத்திற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறாரோவென்றும் அஞ்சி அவ்விருவர்களுக்கும் இடையே நடந்த சம்பாஷணையை ஆவலோடு கவனித்து வந்தார்கள்.

பாண்டியர்: என்ன காரணங்கள் இருக்கின்றன? அஞ்சாமற் சொல்லும்.

குருக்கள்: இந்த ஸ்தலம் மிகவும் சிறந்தது; பழமையானது; மதுரைச் சுந்தரேசுவரர் பொன்னணையாளுக்காக இரசவாதம் செய்த இடம். இறந்து போன ஒருவனுடைய எலும்பு இத்தலத்தில் வையையாற்றிற் போட்ட பொழுது புஷ்பமாக ஆயிற்று. அதனால் இது புஷ்பவன காசி என்று பெயர் பெறும். இந்த ஸ்தலத்தை மிதிக்க அஞ்சி நாயன்மார் மூவரும் வையைக்கு வடகரையிலேயே இருந்து தரிசனம் செய்து கொண்டு சென்றார்கள். அதற்கு அறிகுறியாக வடகரையில் அம்மூவர்களுக்கும் ஆலயம் உண்டு. இவை போன்ற பெருமைகளால் ஒரு யாத்திரை ஸ்தலமாகவே இவ்வூர் இருந்து வருகிறது. அயலூரிலிருந்து எவ்வளவோ ஜனங்கள் நாள்தோறும் வந்து வந்து வையையில் ஸ்நானம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்லுகிறார்கள். வையையில் எப்பொழுதும் நிறைய ஜலம் ஓடுவதில்லை. கோடைக் காலத்தில் வடகரை ஓரமாகத் தான் கொஞ்சம் ஜலம் ஓடும். அப்பொழுது அங்கே சென்று ஸ்நானம் செய்து வருபவர்கள் மணலில் நடந்து துன்பமுற்று வெயிலின் கொடுமையை ஆற்றிக் கொள்வதற்கு இந்த மருத மரத்தின் கீழிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வது வழக்கம். இந்த மரம் எவ்வளவோ நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஜனங்கள் நிழலுக்காக இதன் கீழ் இருக்கலாம்.

மருத பாண்டியர், இங்ஙனம் குருக்கள் கூறும் காரணங்களைக் கேட்டுக் கொண்டே வந்தார்; அவை பொது ஜனங்களின் நன்மையைக் கருதியவை என்பதை அறிய அறிய அவருடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்துகொண்டே வந்தது. பின்னும் கூர்ந்து கேட்கலாயினர்.

“மகாராஜாவுக்கு, இந்த மரத்தினால் ஜனங்களடையும் பெரும் பயன் தெரிந்திருந்தால் இப்படிக் கட்டளை பிறந்திராது என்று எண்ணினேன். இந்த மரத்தை வெட்டிவிட்டால், அயலூர்களிலிருந்து, பிரார்த்தனைகளைச் செலுத்தும்பொருட்டு, ஸ்நானம் செய்துவிட்டு வரும் கர்ப்ப ஸ்திரீகளும், குழந்தைகளோடும் பிராயம் முதிர்ந்தவர்களோடும் வரும் பக்தர்களும், பிறரும் வெயிற்காலத்தில் மிக்க துன்பத்தை அடைவார்கள். அக்கரையிலிருந்து வருபவர்களும் வெயிலில் வந்த இளைப்பை ஆற்றிக் கொள்ள இடமில்லாமல் தவிப்பார்கள். மகாராஜா நினைத்தால் இந்த ஸமஸ்தானத்தில் எவ்வளவோ மரங்கள் கிடைக்கக் கூடும். இந்த ஒரு மரந்தான் இருக்கிறதென்பதில்லை, இந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு மகாராஜாவின் ஞாபகம் வரும். இது பல ஜனங்களுடைய தாபத்தைப் போக்கி அவர்களுள்ளங் குளிரச் செய்து நிழலளித்து மகாராஜாவைப் போல் விளங்கி வருகின்றது. அன்றியும் மற்றொரு முக்கியமான விஷயந்தான் என்னுடைய மனத்தில் அதிகமாகப் பதிந்திருக்கின்றது. இந்த அருமையான மரம் மகாராஜாவுடைய பெயரைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றது. இந்த மரம் நெடுங்காலம் இருக்கவேண்டுமென்பதே, மகாராஜாவின் க்ஷேமத்தையே குறித்து ஸந்நிதியில் அர்ச்சனை செய்துவரும் எனது பிரார்த்தனை. இதை வெட்டலாமா?” என்று கூறிக் குருக்கள் நிறுத்தினார்.

பக்கத்தில் நின்ற யாவரும் தம்மையே மறந்து, “ஹா!ஹா!” என்று தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். “மகாராஜாவினுடைய பெயரைத் தாங்கிக் கொண்டு இது நிற்கின்றது” என்று சமயோசிதமாக அவர் சொல்லிய வாக்கியமானது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் உருக்கத்தையும் உண்டாக்கிவிட்டது.

பராமுகமாகக் கேட்டுக் கொண்டு வந்த மருத பாண்டியர் முகமலர்ந்து நிமிர்ந்து குருக்களைப் பார்த்தார். அவருடைய உள்ளம் குருக்களுடைய நல்லெண்ணத்தை அறிந்து கொண்டது. உண்மையான அன்பே அவரை அவ்வாறு தடுக்கச் செய்ததென்பதை அவர் உணர்ந்து, “சரி; நீர் செய்தது சரியே! உமக்கு நம் மேல் உள்ள விசுவாசத்தையும் பொது ஜனங்களின் மேல் உள்ள அன்பையும் கண்டு சந்தோஷிக்கிறோம்.” என்று கூறினார்.

மருத மரம் வெட்டப்படாமல் நின்றது. குருக்கள் அச்சம் நீங்கினார். காளையார் கோயில் தேருக்கு வேறொரு மரம் அச்சு ஆயிற்று.

சிறுவயல் ஜமீன்தாராக இருந்த முத்துராமலிங்கத் தேவரவர்களும், குன்றக்குடி மடத்தில் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப்பிள்ளையவர்களும் இந்த வரலாற்றை எனக்குச் சொன்னார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்

பிற்சேர்க்கை: டோண்டு உ.வே.சா. வாழ்க்கையிலிருந்து இன்னொரு சம்பவத்தை இங்கே “கள்ளா வா புலியைக் குத்து” என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். சீவக சிந்தாமணியில் ஒரு வரி அவருக்கு புரியவில்லையாம், யாரோ ஒருவர் தற்செயலாக சொன்னது அவருக்கு மூளையில் பலப் எரிந்திருக்கிறது! அவருடைய தேடல் எவ்வளவு ஆழமானது என்று நன்றாகப் புரிகிறது


Chola Frescoதஞ்சாவூர் பெரிய கோவிலின் சோழர் கால ஓவியங்கள் புகழ் பெற்றவை. பார்ப்பது கஷ்டம்தான், சாதாரணமாக அனுமதி கிடைப்பதில்லை. என் அதிர்ஷ்டம், என் உறவினர் டாக்டர் நாகசாமி எங்களை அழைத்துக் கொண்டு போய் காட்டினார். ஓவியங்கள் நிறையவே மங்கிப் போய்விட்டன. வெளிச்சம் வேறு கொஞ்சம் குறைவுதான். ஆனால் மறக்க முடியாத ஒரு அனுபவம். உயிருள்ள வண்ணங்கள்; ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள் கொஞ்சம் இந்த ஸ்டைலில் இருக்கும்.

அந்த ஓவியங்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்று ஹிந்துவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. மறைந்து கிடந்த இந்த ஓவியங்களை கோவிந்தசாமி என்ற அண்ணாமலை பலகலைக்கழக ஆசிரியர் தற்செயலாக கண்டுபிடித்திருக்கிறார். சோழ கால ஓவியங்கள் கிடைக்குமா என்று அவர் தேடிக் கொண்டிருந்திருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். பிறகு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி உட்பட்ட பலரும் வந்து பார்த்து இவை சோழர் காலத்தவையே என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்கள்!

பின்னால் சேர்க்கப்பட்டது: நண்பர் தங்கவேல் இந்த ஓவியங்களை கோவிலூர் மடாதிபதியாக இருந்த நாச்சியப்பன் ஃபோட்டோ எடுத்த கதைக்கு ஒரு சுட்டி தந்திருக்கிறார். அவரும் தன் தளத்தில் தஞ்சை கோவிலைப் பற்றி ஒரு நல்ல பதிவு எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>வரலாறு

தொடர்புடைய சுட்டிகள்:
ஹிந்து கட்டுரை
பெரிய கோவில் பற்றி ஒரு தளம்
இந்திரா காந்தி சென்டரில் எல்லா ஓவியங்களும் (பாதிக்கு மேலான ஓவியங்கள் தெளிவாக இல்லை, மங்கிவிட்டிருக்கின்றன. ஆனால் மிச்ச ஓவியங்களை தவறவிடாதீர்கள்.)


சில நாட்கள் கழித்து, அவரது தம்பி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். கோயிலில் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதன் விவரம் அதில் இருந்தது. அதன் சாரம் பின்வருமாறு…
‘… ஸ்ரீரங்கமும் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளாகிய நம்பெருமாளைச் சேவிக்கும்போதும், நம்மை ஒருவித பரவசமான மனநிலைக்கு ஏன் ஆட்படுத்துகின்றன என்று அந்த உணர்வுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கப் பல சமயம் நினைத்தது உண்டு. மற்ற திவ்ய தேசங்களில் இல்லாமல், ஏன் ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்தகைய உணர்வு வருகிறது என்று நானும் என் சகோதரனும் (ரங்கராஜன்) அன்று பேசிக்கொண்டோம். யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழவைக்கிறது? பிறப்பணுவிலேயே சொந்த ஊர், மொழி உணர்வு எல்லாம் வந்துவிடுகிறதோ?

அதற்கான காரணம், ‘இந்தப் பெருமாளைச் சேவிக்கும்போது, நம் தாய் – தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பெருமாளின் மூலம் பார்க்கிறோம்’ என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான். கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறிய படிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். பெருமாளை நன்றாகச் சேவிக்கும்போது அந்த திவ்யமங்கள ரூபத்தில் எங்கள் தாய் – தந்தையரைப் பார்க்கும்படியும் ரங்கராஜனிடம் சொன்னேன். அவனும் ‘ஆம், அதுதான் உண்மை’ என்று ஆமோதித்தான். அந்த உண்மையை அறிந்ததால்தான் இங்கு வந்து பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் ஆர்வம் மேலோங்கியதாகச் சொன்னான்.

சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் போன கதையை தேசிகன் எழுதி இருந்தார். இந்த வரிகள் மனதை தொட்டன. சாமி பூதம் எல்லாம் உண்மையில் ஆசாமிதான் – நம் பாட்டன் முப்பாட்டன்தான்!

இதற்கு மேலும் எழுதி மனதில் இருக்கும் நெகிழ்ச்சிக்கு கோனார் நோட்ஸ் போட விருப்பம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவு: சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் போன நிகழ்ச்சி


ரெகுலராக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். முயற்சியாவது செய்ய வேண்டாமா?

அர்த்தநாரீஸ்வரர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். பாதி ஆண் பாதி பெண் உருவம் – சிவன் தன் உடலில் ஒரு பாதியில் உமையாக காண்பிப்பார். (சங்கரன் கோவிலில் பாதி சிவன் பாதி நாராயணனாக சங்கரநாராயணன் என்ற கோலத்தில் பார்க்கலாம்.)

அர்த்தநாரி உருவத்தில் உள்ள சூரியனை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? நான் கேள்வி கூடப்பட்டதில்லை. சாதாரணமாக நவகிரகங்கள் நடுவில் நிற்கும் சூரியன்தான் பிரபலம். சூரியனுக்கு எனக்கு தெரிந்து கோனார்க்கில் புகழ் பெற்ற கோவில் இருக்கிறது; தமிழ் நாட்டில் சூரியனார் கோவில் என்ற சின்ன ஊரில் ஒரு கோவில் இருக்கிறது. இந்த லிங்கை பாருங்கள்!

இது டாக்டர் நாகசாமி எழுதிய தவம் செய்த தவம் என்ற புத்தகத்தில் ஒரு கட்டுரை. டாக்டர் நாகசாமியை பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். வரலாற்று அறிஞர் – குறிப்பாக கல்வெட்டுகள், நாணயங்கள், சோழர் கால கலை (சிற்பம், ஓவியம்) ஆகியவற்றில் உலக அளவில் மதிக்கப்படும் நிபுணர். அவர் எழுதிய தவம் செய்த தவம் புத்தகம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது. இந்த புத்தகத்தில் பல அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள் பற்றி அவர் எழுதி இருக்கிறார். மேலே உள்ளது ஒரு சாம்பிள்தான்.

டாக்டர் நாகசாமி காஞ்சி மடத்தை – குறிப்பாக மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களை பெரிதும் மதிப்பவர். இவரே ஒரு பெரிய ஸ்காலர். இவருக்கு சில விஷயங்களை சந்திரசேகரர் விளக்கி இருக்கிறாராம். திடீரென்று அந்த புத்தகத்தை போய்ப் பார், இந்த கல்வெட்டைப் பார் என்றெல்லாம் டாக்டர் நாகசாமியிடம் சொல்வாராம். எனக்கு காஞ்சி மடத்தை பற்றி என்ன நினைப்பு என்று நிறைய எழுதிவிட்டேன். ஒரு மடாதிபதிக்கு இந்த மாதிரி வரலாறு, தத்துவம், புத்தகங்கள் ஆகிய விஷயங்களை பற்றி ஆராய வாய்ப்பு அதிகம் என்று எழுதி இருந்தேன், அதை சந்திரசேகரர் மிக அருமையாக செய்திருக்கிறார் போல இருக்கிறது.

கல்வெட்டு, வரலாறு மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: இந்திய வரலாறு, படிப்பு, ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
டாக்டர் நாகசாமி, அவரது எழுத்துக்கள் நிறைந்த தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி, அவர் பதித்த வீரை கவிராஜ பண்டிதரின் தமிழ் ஸௌந்தர்ய லஹரி

அதர்வ வேதம் பற்றி மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமிகள்
அபிவாதயே – பிராமணர்களின் சுய அறிமுகம் பற்றி மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமிகள்

காஞ்சி மடம் பற்றி என் கருத்து
மடம் எல்லாம் வேஸ்டா?

அடுத்த பக்கம் »