நண்பர் ராஜனோடு என்னுடைய condolences-ஐயும் பதிவு செய்து கொள்கிறேன். ஓவர் டு ராஜன்!

dondu_raghavanதமிழ் எழுத்துறுக்கள் வளர்ச்சியுற்று 2000 வரை ஆங்கிலத்தில் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருந்த தமிழ் இணையர்கள் மெல்ல மெல்ல தமிழில் தட்டச்சு செய்து அதே ஆரிய, திராவிட, பிராமண, அபிராமண, இடஒதுக்கீட்டுச் சண்டைகளைத் தாய் மொழியாம் தமிழ் மொழியிலும் தொடர்ந்து கொண்டிருந்தனர். இண்டஸ் சிவிலைஷேஷன், ஃபோரம் ஹப் போன்ற ஆங்கிலக் குழுமங்களில் தொடர்ந்த சண்டைகள் யாகூ குழுமங்களில் தமிழில் தொடர ஆரம்பித்தன. ஏராளமான தமிழ் குழுமங்கள் தமிழ் ஃபாண்ட்டுகளை நிறுவிக் கொண்டு உருவாயின. சொக்கன், இரா.முருகன், பா.ராகவன், எல்லே.ராம், பசுபதி போன்றோர் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த ராயர் காப்பி கிளப் என்ற யாகூர் குழுமமே தமிழில் எனக்கு அறிமுகமான இரண்டாவது குழுமமாக இருந்தது. அதற்கு முன்பாக திண்ணை விவாதக் களம் என்றொரு விவாத மேடையை மட்டும் அமைத்துத் தந்திருந்தது. ராயர் காப்பி கிளப்பில் தமிழ் கூறும் நல்லுலகின் இயல்பான பாரம்பரிய அரசியல் சண்டைகள் குறைவாகவும் இலக்கியம் இன்ன பிற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. தொடர்ந்து அகத்தியம், மரத்தடி போன்ற குழுமங்களும் அதே போல முக்கியமான தமிழ் குழுமங்களாக இயங்கிக் கொண்டிருந்தன. அந்தக் காலக் கட்டங்களில் பிராமணர்கள் பலரும் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்டோ அல்லது முற்போக்கு வேடங்களை தரித்துக் கொண்டோ அல்லது புனைப் பெயரில் தன்னை ஒரு பிராமண ஜாதி அல்லாத ஆள் போல வேடம் போட்டுக் கொண்டோ எழுதத் தலைப்பட்டனர். அப்படியே அடையாளம் வெளியே தெரிய நேரிட்டு விட்ட பல பிராமண இணைய எழுத்தாளர்களும் கூட பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலும் தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைக் கூடச் சொல்லாமலோ அல்லது சுயஜாதி வெறுப்பின் மேலிட்டு எதிர்மறையாகவோ தங்கள் கருத்துக்களைச் சொல்லி வந்தனர். இட ஒதுக்கீடு, இஸ்ரேல் ஆதரவு, ஆரிய திராவிட மாயயை, கருணாநிதியின் வெறுப்பு அரசியல், ஜெயலலிதா பற்றிய விமர்சனம், தேசீயவாதம், பா ஜ க ஆதரவு நிலைப்பாடு, வலதுசாரி ஆதரவு வாதங்கள், அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல், இஸ்லாமிய வஹாபிய பயங்கரவாதம் போன்று கடந்த பத்தாண்டில் உள்ளூர் முதல் உலகளாவிய அளவு வரையில் நடந்த எந்தவொரு முக்கியமான பிரச்சினைகளிலும் தங்கள் பிறந்த ஜாதியை ஜாக்கிரதையாகக் கருத்தில் கொண்டு அரசியல் சரியான கருத்துக்களை மட்டுமே சிந்தனையாளர்கள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட பெரும்பான்மையான இணைய கருத்தாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். தான் பிராமண ஜாதியில் பிறந்து விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காகவும் அதனாலேயே தங்களை முத்திரை குத்தி அவமானப் படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்திலும், தன்னை ஒரு முற்போக்காளனாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற போலி கவுரவம் கருதியும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஆதரிப்பது முதல் கருணாநிதி, வீரமணி போன்றோரின் இன வெறுப்பு அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை வரை கூசாமல் இவர்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த பேடித்தனமான செயற்கையான போலித்தனமான போக்குகளைக் கண்டு கடுமையான வெறுப்பும் சலிப்பும் அடைந்திருந்த வேளையிலேயே தமிழ் இணைய உலகில் ஒரு வித்தியாசமான மனிதராக, ஒரு துணிவான வீரனாக, தன் நெஞ்சறியும் உண்மையை மறைக்காமல் தனக்குச் சரியென்று தோன்றிய கருத்துக்குக் கடும் எதிர்ப்புக்கள், மிரட்டல்கள் வந்தாலும் பணியாமல் தன் நிலையையை உரக்கச் சொல்லிய ஒரு மாமனிதன் டோண்டு ராகவன் ஐயங்கார். ஐயங்கார் என்று தன்னை அழைத்துக் கொள்வதில் அவருக்கு எந்தவிதமான ஜாதீய நோக்கும் இருந்தது கிடையாது. இணையத்திலும் பொதுவிலும் தன்னை ஜாதிய எதிர்ப்பாளர் என்றும் முற்போக்கு என்றும் அடையாளப் படுத்திக் கொண்டு கடும் ஜாதி அபிமானத்துடன் செயல் பட்ட பல்வேறு போலி முற்போக்காளர்கள் நடுவில் உண்மையான முற்போக்குச் சிந்தனடையுடையவராக அறிமுகமானார் டோண்டு ராகவன் அவர்கள்.

தமிழ் இணைய உலகம் யாகூ போன்ற குழுமங்களில் இருந்து வெளியேறி ப்ளாக் ஆரம்பிக்கத் துவங்கிய காலகட்டத்தில் டோண்டு ராகவனின் பளாக் தமிழ் வலையுலகத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றது. அவர் சொல்லும் கருத்துக்களை ஏற்கலாம், ஏற்காமல் போகலாம், வெறுக்கலாம், பாராட்டலாம் ஆனால் தமிழ் இணைய உலகில் புழங்கிய எவருமே அவரைக் கடந்தே செல்ல வேண்டி வந்தது. ஒரு பொறியாளராக தன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு தனக்குப் பிடித்தமான நெருக்கமான மொழி பெயர்ப்பு தொழிலில் மும்முரமாக இயங்கி வந்த ராகவன் ஓய்வு காலத்தில் தன் பொழுதுகளை கழிப்பதற்காகத் தேர்ந்தெடுத்த ஊடகம் அவரது வலைப்பக்கமாக அமைந்து விட்டது. ஓய்வுக்காலப் பொழுதுபோக்குக்காக அவர் துவக்கிய வலைப்பக்கம் அவரது கடைசி மணித் துளி வரையிலும் அவரை ஆக்ரமித்திருந்தது. இரு கோடுகள் தத்துவம் போல சில பிரச்சினைகளில் இருந்து விலகி வேறு சில சச்சரவுகளிலும் பிரச்சினைகளிலும் அவரை அவர் தேர்ந்தெடுத்த வலைப்பக்கம் மூழ்க அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சொந்தப் பிரச்சினைகள் ஆனாலும் அவரது கருத்துக்களினால் அவர் எதிர் கொள்ள நேரிட்ட கடுமையான வெறுப்புக்களும், துரோகங்களும், மிரட்டல்களும், கை விடப்படல்களும் ஆனாலும் சரி எதற்கும் அஞ்சாமல் துணிவாக எதிர் கொண்ட ஒரு நிஜமான அஞ்சா நெஞ்சன் டோண்டு ராகவன் அவர்கள். தமிழ் இணைய உலகில் வேறு எவரும் எதிர் கொண்டிராத கடுமையான வெறுப்பையும், ஜாதி வெறியையும், ஆபாசமான தாக்குதல்களையும், கொலை மிரட்டல் உட்பட விடப்பட்ட கடுமையான மிரட்டல்களையும் அவரளவுக்குச் சந்தித்தவர் இன்னொருவர் இருக்க முடியாது. பலவீனமான இதயம் கொண்டவர்கள் அந்தத் தாக்குதல்கள் ஏற்படுத்திய பாதிப்பிலேயே நெஞ்சழுத்தம் ஏற்பட்டு எப்பொழுதோ உயிரிழந்திருப்பார்கள். அவர் மட்டும் அல்லாது அவரது மனைவியும், மகளும் கூட கடுமையான ஆபாச தாக்குதல்களுக்கு இரையானார்கள். தன்னை எப்பொழுதும் ஒரு இளைஞனாகவே கருதி வந்த டோண்டு எதிர் கருத்துக் கொண்டோரையும் தன்னைக் கடுமையாக வசைபாடிய பலரையும் கூட அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்தே நட்புறவு பேணவே செய்தார். அவர்களில் பலரிடமும் எச்சரிக்கையாக இருக்குமாறும் விலகியிருக்குமாறும் நான் பல முறை எச்சரித்த பொழுதும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்து வந்தார். அவர் நம்பி நட்பாகப் பழகிய சிலரே அவரைப் பற்றிய சொந்தத் தகவல்களை அவரைத் தாக்கி வந்த ஆபாச மிருகங்களுக்கு ஒற்று சொன்னார்கள். இன்று அதே நபர்கள் அவருக்கு அஞ்சலியும் செலுத்துகிறார்கள்.

டோண்டு ராகவன் அவர்களுடன் எனக்கு எப்பொழுது தொடர்பு ஏற்பட்டது என்பதை நான் பழைய மடல்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அனேகமாக 2003/04ம் வருடமாக இருக்கக் கூடும். அவர் வலைப்பதிவு துவங்கிய பின்னரே அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இணையம் மூலமாக நான் பெற்ற அற்புதமான நட்புக்களில் ஒருவர் டோண்டு ராகவன். நான் சென்னை வரும் பொழுது அவரைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தார். நான் சென்னை வாசி அல்ல என்றும் நான் திருச்செந்தூர் அருகே ஒரு கிராமத்திலேயே அனேகமாகத் தங்குவேன் என்றும் சொல்லிய பொழுது அந்த ஊர் குறித்து விசாரித்து அறிந்தார். திடீரென்று எனது சொந்தக் கிராமமாகிய தென் திருப்பேரை என்ற ஊரின் பெயர் அவரை வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தது. அங்கு நான் செல்ல வேண்டும் எப்படிச் செல்வது போன்ற விபரங்களைக் கேட்டு மடல் அனுப்பியிருந்தார். அங்கு செல்லும் விபரங்களைக் குறித்துச் சொல்லி எங்கள் இல்லத்தில் தங்கிக் கோவில்களுக்குச் சென்று வரும்படி ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருந்தேன். தனது அன்றாட சந்திப்புக்களையும், உரையாடால்களையும் சம்பந்தப்பட்ட நண்பர்களின் அனுமதியின்றியே உடனுக்குடன் தன் வலைப்பக்கத்தில் பதிந்து விடுவது அவரது வழக்கமாக இருந்து வந்தது. ஆகையால் அவர் என் வீட்டுக்குச் சென்று வந்த விபரத்தை உறுதியாக எழுதி விடுவார் என்பதை எதிர்பார்த்தபடியால் ஒரு நிபந்தனையாக என்னைப் பற்றிய விபரம் எதையும் நீங்கள் சென்று வந்த பின்பு எழுதப் போகும் பயணக் குறிப்பில் எழுதக் கூடாது என்று கட்டாயமாகத் தெரிவித்திருந்தேன். அந்த நிபந்தனையின் பேரிலேயே அவருக்கு ஒரு பயணத் திட்டம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன். தென் திருப்பேரை கிராமத்தில் அமைந்திருந்த மகரநெடுங்குழைக்காத பெருமாளிடம் அவர் என்ன வேண்டினாரொ, அதில் என்ன பலித்ததோ தெரியவில்லை அல்லது அந்தக் கோவிலும் அந்தப் பெருமானும் ஏதோ ஒரு விதத்தில் அவரை மிக ஆழமாகக் கவர்ந்திருக்க வேண்டும். அன்றிலிருந்து அங்கு சென்று வந்த தினத்தில் இருந்து அந்தக் கோவிலின் மீது அவருக்கு ஒரு தீராக் காதல் ஏற்பட்டு விட்டது. திருநெல்வேலி தாமிரவருணிக் கரையில் அமைந்திருக்கும் நவ திருப்பதிகளில் ஒன்றாகிய தென் திருப்பேரை கோவிலும் அதன் பெருமாளின் பெயரும் அப்பகுதியினருக்கும் அங்கு சென்று வரும் வைணவ பக்தர்களுக்கும் அன்றி வேறு எவருக்கும் அதிகம் தெரியாதிருந்த நிலையில் தன் வலைப்பக்கத்தில் அடிக்கொரு முறை என் அப்பன் மகர நெடும் குழைக்காதரின் அருளால் என்று எழுதியதன் மூலமாக உலகின் பல்வேறு மூலையில் இருந்து அவர் பதிவைப் படிக்கும் ஆயிரக்கணக்கானோரிடம் மகரநெடுங்குழைக்காதரைக் கொண்டு சேர்த்தவர் டோண்டு ராகவன். அதற்கு மூல காரணமாக அதே மகரநெடுங்குழைக்காதர் என்னைப் பணித்திருந்தார் போலும். இன்று கடவுளையே நம்பாத நாத்திகர்களும், மாவோயிஸ்டுகளும் கூடக் கைக்கொள்ளும் ஒரு வாசகமாக அந்த பிரார்த்தனை மாறி விட்டிருக்கிறது. தென் திருப்பேரை சென்று வந்த டோண்டு ராகவன் அந்த தரிசனம் தந்த பரவசத்தில் முதலில் செய்த காரியமே எனக்கு அளித்த வாக்குறுதியை மீறியதுதான். ஆம் சென்று வந்த விபரங்களையும் என் வீட்டு முகவரி என் உறவினர்களின் பெயர்கள் அவருக்கு அளிக்கப் பட்ட உபசரிப்புகள் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் தன் வலைப்பக்கத்தில் பதிந்து விட்டார். அதற்காக எனது கோபங்களை அவர் பொருட்படுத்தவேயில்லை. இன்னும் பல தருணங்களிலும் கூட நான் எதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொல்லி அளிக்கும் தகவல்களை அவர் பிடிவாதமாக உடனுக்குடன் பதிந்தே வந்தார். அதன் காரணமாக நான் ஊருக்கு வரும் தகவல்களைக் கூட அவருக்குச் சொல்லாமல் தவிர்த்து வந்தேன். இருந்தும் நான் ஊரில் இருக்கும் தகவலை அறிந்து ஒரு முறை சென்னையில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்து விட்டார். நான் அன்று ஊரில் இல்லாத சூழலில் என்னைப் பார்க்காமலேயே ஆனால் அவருக்கு மிகவும் பிடித்தமான குழைக்காதரை தரிசித்து விட்டுச் சென்னை திரும்பினார். அவர் மீது என்ன கோபம் ஏற்படுத்தினாலும் தன் வாஞ்சையினாலும் அன்பினாலும் ஒரு ஃபோன்காலில் என்னைக் குளிர்வித்து விடுவார். என்னை விட என் உறவினர்களிடம் நெருக்கமாக அவர் இருந்து வந்தார். ஒரு முறை அவர் மீதும் என் மீதும் ஆபாசத் தாக்குதல்கள் நடத்தி போர்னோ சைட்டுகளை உருவாக்கி அதில் எங்கள் பெயர்களையும் புகைப்படங்களையும் இட்டு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த மூர்த்தி நான் பேசுவதாக அவரிடம் ஃபோன் செய்து என்னைப் போல நடித்து அவரிடம் இருந்து பல விஷயங்களைக் கறந்து அதை தன் தாக்குதல்களுக்கு பயன் படுத்திக் கொண்டான். அதன் பிறகு அவரை அழைத்து எங்களுக்குள் பரிமாறிக் கொள்ள அவருக்குப் பிடித்த என் மாமாவின் மகளின் பெயரை ஒரு சங்கேதவார்த்தையாகப் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்தோம். இப்படி இணையத்தில் துவங்கிய நட்பு இணையம் தாண்டி எங்கள் வீடு வரை நீண்ட ஒரு நட்பாக அமைந்திருந்தது.

தமிழ் இணைய உலகின் வரலாறு எழுதப் படுமானால் அது டோண்டு ராகவனைத் தவிர்த்து விட்டு எழுதப் பட முடியாது. இன்று இணையத்தில் பல பிராமண பதிவர்களும் துணிந்து அவர்கள் மீது திணிக்கப் பட்ட தங்கள் சொந்த ஜாதியின் மீதான சுயவெறுப்பையும் மீறி தங்களுக்குச் சரியென்று தோன்றும் கருத்துக்களைச் சொல்வதற்கு உந்து சக்தியாக இருந்தவர் டோண்டு ராகவன், கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்காகக் கடுமையாகக் குரல் கொடுத்த ஒரு போராளி. அவர் மீது விமர்சனங்கள் இருக்கலாம். தன் சொந்தப் பிரபால்யத்திற்காக எந்தவொரு பிரச்சினையையும் தனக்காக விளம்பரப் படுத்திக் கொள்பவர் என்று அவர் தொடர்ந்து வசை பாடப் பட்டார். சோ குறித்தும் துக்ளக் குறித்தும் இஸ்ரேல் குறித்தும் யூதர்கள் குறித்தும் பால்ஸ்தீனப் பிரச்சினை குறித்தும் தனது கருத்துக்களை எவ்விதத் தயக்கமும் இன்றி துணிந்து பதிந்து வந்தவர் டோண்டு ராகவன். எந்தவொரு இஸ்ரேலிய யூதரை விடவும் மேலான ஒரு யூதப் போராளியாக இருந்தவர் டோண்டு ராகவன். தி ஹிந்து நாளிதழின் நிருபரனா நரசிம்மன் என்பவரின் மகனான ராகவன் தந்தையிடமிருந்து மொழிப் புலமையையும் அபாரமான நினைவுத் திறனையும் கொண்டிருந்தார். எப்பொழுது நடந்த சம்பவத்தையும் கூட சமீபத்தில் 1963ல் என்று ஆரம்பித்துத் துல்லியமான நினைவுத் திறனுடன் சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர் அவர். அந்த அபாரமான நினைவுத்திறனே அவரை பல மொழிகளிலும் சரளமாக கற்றுக் கொள்ள வைத்தது. ஜெர்மன், ஃப்ரெஞ்ச், உருது, ஹிந்தி என்று பன்மொழியிலும் சரளமாக பேசவும் எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆற்றல் உள்ளவராக விளங்கினார். பன்மொழித் திறனும் துணிவும் நினைவாற்றலும் அனைத்திற்கும் மேலாக அவரது கம்பீரமான ஆளுமையும் உயரமும் அவரிடம் அவரைக் கடுமையாகத் தாக்கியவர்களிடமும் கூட ஒரு வித பயம் கலந்த மரியாதையை ஏற்படுத்தியது. இவர் நிச்சயம் ஒரு ரா உளவாளியாகவோ மொசாட் அல்லது சி ஐ ஏ வின் கூலியாகவோ இருக்க வேண்டும் என்று அச்சப் பட்டு அதை இணையத்தில் வதந்தியாகவும் பரப்ப ஆரம்பித்தனர். ஆனால் அவர் என்றுமே தன்னை ஒரு மொழிபெயர்ப்பாளனாகவே அடையாளப் படுத்தி வந்தார். அவர் பதிந்திருக்கும் ஆயிரக்கணக்கான பதிவுகளும் பின்னூட்டங்களும் எதிர்காலத்தில் தமிழ் நாட்டின் வரலாற்றைப் படிக்க விரும்பும் எந்தவொரு மாணவனுக்கும் பல பயனுள்ள சமூக, வரலாற்று, அரசியல் செய்திகளை அளிக்கக் கூடிய ஆவணமாக அமையக் கூடும். அவரது வலைப்பதிவை எவரேனும் பாதுகாக்க முடியும் என்றால் அவசியம் செய்யப் பட வேண்டிய ஒரு ஆவணமாக அது அமையக் கூடும்.

அவர் ஆச்சாரியன் திருவடி அடைந்து விட்டார். அவர் அனுதினமும் துதித்து வந்த மகரநெடுங்குழைக்காதனுடன் நிச்சயம் கலந்து விட்டிருப்பார். அங்கிருந்தாலும் கூட அவர் போராடியவற்றுக்க்காக அவரது அப்பன் மகரநெடுங்குழைக்காதனுடன் போராடிக் கொண்டிருப்பார் என்பது உறுதி. அவர் எனக்கு பல பாடங்களையும் படிப்பினைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். என் வாழ்க்கையின் மறக்க முடியாத ஆளுமைகளில், இனிய நண்பர்களில், ஒரு முன்னோடிகளில் ஒருவர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு அவரும் நானும் வணங்கும் மகரநெடும் குழைக்காதர் அமைதியையும் மன நிம்மதியையும் அளிக்கட்டும்.

பிரார்த்தனைகளுடன்
ச.திருமலைராஜன்