Tamil Nadu Politicsகலைஞர்-ஜெயலலிதா கூட்டணி

நம் நிருபரின் ஸ்கூப்!

தற்போதைய கூட்டணியின் துணைக் கட்சிகள் தரும் தலைவலி தாங்க முடியாமல் கலைஞர் தானே ஜெயலலிதாவுக்கு ஃபோன் போட்டாராம். ஆளுக்குப் பாதி சீட், முதல் இரண்டரை வருஷம் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி, அடுத்த இரண்டரை வருஷம் கலைஞரோ ஸ்டாலினோ முதல்வர், நாடாளுமன்றத்தில் அதிமுக அழகிரியின் தலைமையில் செயல்படும், அதிமுக எம்பி தம்பிதுரை ஜேபிசியில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவார், ஜேஜே டிவியை ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு மாற்றிக் கொடுப்பது என்ற ஃபார்முலாவை இருவரும் ஒத்துக்கொண்டுவிட்டார்களாம்.

ஜூவி ரிப்போர்ட்:

கழுகாருக்கு நாம் வேர்க்கடலையும் வெள்ளரிக்காயும் போட்ட ஒரு கப் ரசம் சுடச்சுட கொடுத்தோம். அதை என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று குபுக் குபுக் என்று குடித்துவிட்டு நமக்கு நியூஸ் கொடுக்க ஆரம்பித்தார்.

சிபிஐ அடக்கி வாசிப்பது என்பது நடக்காத விஷயம், கனிமொழி ஜெயிலுக்கு போவதை தடுக்க முடியாது என்று கலைஞருக்கு ரகசியத் தகவல் வந்ததாம். 63 சீட்டும் கொடுத்து ஜெயிலுக்கு போவதா என்று ராஜாத்தி அம்மாள் போர்க்கொடி உயர்த்தினாராம். அடுத்த குறி தான்தான் என்று தயாளு அம்மாளும் கவலைப்பட்டாராம். கலைஞருக்கு நிம்மதியே இல்லையாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே பெட்டர் என்ற முடிவுக்கு வந்தாராம். ஜெயலலிதாவும் ஒத்துக்கொண்டாராம். ஆனால் யார் முதல்வர் என்பதுதான் இழுபறி பிரச்சினையாக இருந்ததாம். தான் முதல்வர் ஆகாவிட்டால் கூட்டணி இல்லை என்று ஜெ உறுதியாக சொல்லிவிட்டாராம். பிறகு முதல் இரண்டரை வருஷம் ஜெயலலிதா முதல்வர், பிறகு கலைஞரின் உடல்நிலையைப் பொறுத்து கலைஞரோ ஸ்டாலினோ முதல்வர் ஆவார்கள் என்று ஒப்பந்தம் போட்டார்களாம்.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி இல்லை என்று தெரிந்ததும் அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி அனைவரும் இந்த திட்டத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டுவிட்டார்களாம். பேராசிரியர் அன்பழகனின் அபிப்ராயத்தை யாரும் கேட்காவிட்டாலும் அவர் தானும் இந்த திட்டத்தை ஆமோதிக்கிறேன் என்று தெரிவித்தாராம். ஸ்டாலினை சமாதானப்படுத்த அவருக்கு ஜேஜே டிவி கொடுக்கப்படுகிறதாம்.

திமுக, அதிமுக தலைவர்களின் ரியாக்ஷன்:

துரைமுருகன் கலைஞரின் அரசியல் சாணக்கியத்துக்கு இது ஒரு உதாரணம் என்று பேட்டி கொடுத்தார். நீங்கள் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தீர்கள் என்று சொல்கிறார்களே, இதனால் கூட்டணியில் குழப்பம் வராதா என்று கேட்டதற்கு சேலை நன்றாக இருக்கிறதே, என் மனைவிக்கும் ஒன்று வாங்கிக் கொடுக்கலாமே, விலை என்ன என்று விலைச்சீட்டை பார்க்க முயன்றதை விஷமிகள் திரித்துவிட்டார்கள் என்று அவர் விளக்கினார்.

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சிவமும் சக்தியும் இணைந்த பிறகு அவர்களை யாராலும் வெல்ல முடியாது என்று சென்னை நகரம் முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார். இதனால் கலைஞர் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும், அதை சசிகலாவே நேரடியாக சென்று விளக்கம் அளித்து தீர்த்து வைக்க வேண்டி இருந்ததாகவும் தெரிகிறது.

அதிமுகவில் ஜெயலலிதாவைத் தவிர வேறு தலைவர்கள் இல்லாததால் எந்த ரியாக்ஷனும் இல்லை.

கலைஞர் பேட்டி

நிருபர்: ஜெயலலிதா உங்கள் பரம எதிரியாயிற்றே?
கலைஞர்: அன்புத் தங்கை ஜெயலலிதா பெரியாரின் பேத்தி; அண்ணாவின் தங்கை; எம்ஜிஆரின் – சரி அதை விட்டுவிடுவோம். இந்த உண்மையை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்.
நிருபர்: இத்தனை நாள் எதிர்த்த அதிமுகவுடன் எப்படி கூட்டணி?
கலைஞர்: தமிழர் நலம் காக்க யார் முன்வந்தாலும் நாங்கள் அவர்களோடு கூட்டணி வைக்க தயங்கவே மாட்டோம்.
நிருபர்: தமிழர் நலம் என்றால்?
கலைஞர்: இது கூடவா தெரியவில்லை? ராசா போன்ற அடிமட்ட தலித் தோழர்கள், கனிமொழி போன்ற நாடார் குல திலகங்கள்தான் தமிழர்கள்.
நிருபர்: அமைச்சர்கள் ராஜினாமா எப்போது?
கலைஞர்: அவர்களாக போ என்று சொன்னால் போய்விட வேண்டியதுதான். எங்களைப் பொறுத்த வரையில் மன்மோகன் சிங் எங்கள் மனம் கவர்ந்த தலைவரே. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டின்படி செயல்படவே விரும்புகிறோம்.
நிருபர்: ஏறகனவே காங்கிரசுடன் சட்டசபைத் தேர்தலுக்கு அமைத்திருந்த கூட்டணி ஏன் உடைந்தது?
கலைஞர்: முதலில் 48 சீட் என்றார்கள். சரி என்றோம், உடனே 50, 55, 58, 60, 63 என்று அவர்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மாறிக்கொண்டே போனது. இப்படி மாற்றிக்கொண்டே போவது கூட்டணி தர்மம் இல்லை என்று அமைச்சர்கள் ராஜினாமா செய்யவும் தயாரானார்கள். இருந்தாலும் அவர்கள் கேட்ட 63 சீட்டை தர ஒத்துக் கொண்டோம். பிறகு அவர்கள் மீதும் தங்கள் நிலையை மாற்றினால்? கூட்டணியில் தொடர அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்துகொண்டோம்.
நிருபர்: மீண்டும் மாற்றினார்களா? இப்போது எவ்வளவு கேட்டார்கள்?
கலைஞர்: 35

ஜெயலலிதா பேட்டி:

நிருபர்:டான்சி கேசில் உங்களுக்கு குடைச்சல் தந்தவரோடு இப்போது எப்படி கூட்டணி வைத்தீர்கள்?
ஜெ: டான்சி போன்ற விவகாரங்களே எங்களுக்கு குடைச்சல்; ஆனால் கலைஞரோ ஸ்பெக்ட்ரம் போன்றவற்றை அனாயாசமாக சமாளிக்கிறாரே! கலைஞர் போன்ற அனுபவசாலியிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, நாம் தமிழ்நாட்டு அளவில்தான் புழங்குகிறோம், இந்தியா மிகப் பெரியது என்பதை உயிர்த்தோழி சசிகலாவும் எடுத்துச் சொன்னார். அதனால்தான்.
நிருபர்: அதிமுக போட்டியிடும் இடங்களை அறிவித்துவிட்டீர்கள். அதில் பல இன்றைய திமுக எம்எல்ஏக்களின் தொகுதி ஆயிற்றே?
ஜெ: 234-ம் எங்களுக்குத்தான், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

மூன்றாவது அணி உதயம்!

இன்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்ஃபோன்ஸ், ஜெயந்தி நடராஜன் மற்றும் பலரும் சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். ஆறு மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு அன்னை சோனியாவின் முடிவுப்படியும் தந்தை ராகுலின் முடிவுப்படியும் நடப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று கார்த்தி சிதம்பரம் நிருபர்களுக்குத் தெரிவித்தார். ராகுல் தந்தை, சோனியா அன்னை என்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டவுடன் இந்த தலைவர்கள் மீண்டும் சோனியாவை எப்படி அழைக்க வேண்டும், ராகுலை எப்படி அழைக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் முடிவு தெரியவில்லை.

லேட் நியூஸ்! காங்கிரஸ், விஜயகாந்த், ராமதாஸ், வைக்கோ, திருமா, கம்யூனிஸ்டுகள் ஓரணியில் திரண்டனர்!

பல கட்சிகளும் இப்போது ஒரே அணியில் இருப்பதால் இங்கி பிங்கி பாங்கி முறையில் தொகுதிகளைப் பிரித்துக் கொள்ளப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசுக்கு கிடைக்கும் தொகுதிகளை ஜி.கே. வாசன், தங்கபாலு, சிதம்பரம், மற்றும் பலர் இங்கி பிங்கி பாங்கி முறையில் பிரித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் மட்டுமே உள்கட்சி ஜனநாயகம் இருக்கிறது என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம் என்று தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையும், விஜயகாந்த் வீராவேசமும்

இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்காது என்று விஜயகாந்த் அறிவித்தார். எல்லாருக்கும் கரண்டை தொட்டால் ஷாக்கடிக்கும், என்னைத் தொட்டால் கரண்டுக்கே ஷாக்கடிக்கும், அப்படி ஷாக்கடிப்பதை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ் நாட்டின் மின்சாரத் தேவையை தீர்ப்பேன் என்று அவர் நேற்று கொருக்குப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் எல்லாருக்கும் தினமும் இரண்டு வேளை ஒரு டம்ளர் பால், மற்றும் ஒரு ஸ்பூன் காப்பிப்பொடி, ஒரு ஸ்பூன் சர்க்கரை இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக வீட்டுக்கு ஒரு மாடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. விஜயகாந்த் வீட்டுக்கு ஒரு மாடு, அதில் தானே தினமும் பால் கறந்து காப்பி கலந்து எல்லாருக்கும் ஊட்டியும் விடுவேன் என்று அறிவித்திருக்கிறார்.

கார்த்திக் தலைமையில் மூன்றாவது அணி!

கார்த்திக் இன்று தன் தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்று தெரிவித்தார். எங்கெல்லாம் போட்டி இடுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் லண்டன், பாரிஸ், டோக்கியோ தொகுதிகளில் போட்டி இடுவதாக அறிவித்தார்.

டி. ராஜேந்தர் இன்று ஆ டண்டணக்கா, ஆ டனக்குனக்கா, நான் உனக்குக் கொடுக்கறேன் பேட்டி, தேர்தலில் இல்லை போட்டி என்று அறிவித்தார். சிம்புவை நமது நிருபர் பேட்டி கண்டபோது அப்பா இப்போது வேர் இஸ் தி பார்ட்டி என்று தேடிக் கொண்டிருப்பதாகவும், கிடைத்தவுடன் அடுத்த தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்தார். எப்போது கிடைக்கும் என்று கேட்டதற்கு, We அதை hide பண்ணி வச்சிருக்கோம், my dad ஈசியா கண்டுபிடிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

தீப்பொறி ஆறுமுகம் அரசியலிலிருந்து விலகுகிறார்!

புரட்சித் தலைவியையும் திட்டக்கூடாது, கலைஞரையும் திட்டக்கூடாது என்றால் நான் வணக்கம் என்ற ஒரு வார்த்தையை தவிர என்னதான் பேசுவது என்று கண்ணீர் விட்ட தீப்பொறி ஆறுமுகம் அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை விட்டுள்ளார். கூட்டணி உடையும்போது யார் நல்ல டீல் கொடுக்கிறார்களோ அங்கே சேர்ந்து கொள்வேன் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். வெற்றிகொண்டான் கொடுத்து வச்சவர், இந்த மாதிரி சிக்கல் வருவதற்கு முன்னாலேயே போய்விட்டார் என்று தன் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.

Advertisements

(இதன் ஒரு பகுதி மீள்பதிவு)

சமீபத்தில் மலேசியா வாசுதேவன் மரணம் அடைந்தார். பெரும் பாடகர். சாதித்தவர். அவரை பற்றி பேசுவதற்கு நல்ல விஷயங்கள் தான் நமக்கு கிடைக்கிறது. யூலஜி ஒன்றும் யதார்தத்திற்கு புறம்பாக இருக்கப் போவதில்லை. ஆனால் யூலஜி என்பது புகழ்ந்து சொல்ல வேண்டிய ஒன்று என்ற ஒரே காரணத்திற்க்காக உண்மைக்கு புறம்மபான விஷயங்களை கூறுவது சந்தர்பத்தை பயன்படுத்தி  சமூகத்தை மூளைச் சலவை செய்வதற்கு ஒப்பான அறமற்ற செயல். அரசியல் ஆதாயங்களுக்காக அந்த காலத்திலிருந்து இன்று வரை கட்சிகள் யூலஜியை ஒரு கருவியாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் இங்கிருந்து துவங்கலாம். ஒரு செயலை எல்லோரும் நல்ல விஷயத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தேர்தல் என்பதும் கெட்டவிஷயம். தேர்தல் முடிந்த பின்னரும் வரும் முடிவுகளும் கெட்ட சமபவம் தான். அடுத்த ஐந்து ஆண்டுகளும் கெட்ட சமபவங்கள் தான். நல்ல காலம், ஐந்து ஆண்டுகள் கெட்ட காலம் முடிந்து அடுத்த கெட்ட காலத்திற்கு உண்டான சமபவங்கள் துவங்கிவிடும். அதனால் மரணம் என்ற ஒரு சமபவத்தோடு தொடர்புடைய ஒன்று இந்த தேர்தல் களத்திற்கு பொருத்தமான ஒன்றே. (சில புரட்சிக் கட்சிகள் தேய்பிறை, வளர்பிறை, ஜாதகம்,  எல்லாம் பார்த்து பார்த்து முடிவுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. நாம் எதிர் திசையில் செல்வோம்)

கெட்ட சமபவங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், கொஞ்சம் துணிவுடன் தான் அதை எதிர்கொள்வோமே என்ற ஒரு எண்ணமே ஒழிய இதைப் படித்த பின்னர் நாமெல்லாம் கிளம்பி மக்களை மனம் திருத்தி மகாத்மா காந்திகளை சட்ட சபைக்கு அனுப்புவோம் என்ற நப்பாசையெல்லாம் கிடையாது.

இது ஜெயகாந்தன் அண்ணாவிற்கு அளித்த யூலஜி

(பை த வே, ஜெயகாந்தன் திமுகவையும், அண்ணாவையும் இங்கே குறிப்பிட்டிருந்ததால் மற்ற கட்சிகளும் தலைவர்களும் அப்படியில்லை என்று நம்பி விடவேண்டாம்.  காம்ராஜ் கூறியது போல் அனைத்துக் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்)

ஓவர் டு ஜெயகாந்தன்

”இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.

அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு…

ஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்…

காலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.

இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…

அரசியல்வாதிகள் – அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் – அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.

‘எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை…

கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் ?

அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.

ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.

பண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் ?

எந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது….

என்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ‘ – என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.”

– ஜெயகாந்தன்  (ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்)

(இட்லிவடை தளத்தில் வேறொரு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. நன்றி)


ஸ்பெக்ட்ரம் ராஜா ஒரு ப்ளாக் நடத்துகிறார். கடைசி அப்டேட் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பாவம் அவரும் எவ்வளவு நேரம்தான் சமாளிக்க முடியும்? மாபெரும் வெற்றி, ஜாமீன் கிடைத்துவிட்டது என்று வேண்டுமானால் எழுதலாம்.

இன்று விஸ்வாமித்ரா இட்லிவடை தளத்தில் ராஜா கைது வெறும் கண்துடைப்பு, எல்லாவற்றுக்கும் சோனியாவே காரணம் என்று அவரது ஸ்டைலில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்!


இன்று ஸ்பெக்ட்ரம் ராசா கைது செய்யப்பட்டார்.

ஒரு லெவலைத் தாண்டிவிட்டால் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. எந்த முதலமைச்சரும் ஜெயிலுக்கு போனதில்லை. ஆதாரங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் சரி, அப்படித்தான். எனக்கு அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பியவர் யாரென்று தெரியாது, ஆனால் பணத்தை பாங்கில் போட்டுக் கொண்டேன் என்று சொன்னவர் கூட தப்பிவிடுகிறார். ராசாவும் அந்த லெவலைத் தாண்டிவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். அவர் தண்டிக்கப்பட்டால்தான் ஆச்சரியம். ஆனால் இவ்வளவு தூரம் வந்ததே எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நாட்டில் இன்னும் கொஞ்சம் நீதி இருக்கிறது என்று தோன்றுகிறது.

சுப்ரமணிய சாமிக்கும், ரிபோர்டர் கோபிக்கும் நன்றி!


நான் வினவு பக்கம் போய் ரொம்ப நாளாச்சு. இன்றைக்கு தெரியாத்தனமாக ஜெயமோகன், சூப்பர்லின்க்ஸ் வழியாக அங்கே போய்விட்டேன். “இந்து ராம் – ராஜபக்சே உரையாடல்” என்று ஒரு பதிவு. அங்கிருந்து ஒரு excerpt :

இராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிசுக‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான். அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன்

இராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது. நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.

இதற்கப்புறம் படிப்பதை நிறுத்திவிட்டேன். ராம் இவர்கள் கண்ணில் அப்பாவி மக்களின் கல்லறைகளில் பேரை எழுதி வரலாற்றில் இடம் பிடிக்கிறாரா இல்லையா என்பது ஒரு பக்கம்; அதுதான் உண்மையான பிராமணனின் இலக்கணம் என்று அடுத்த வரி வருகிறது பாருங்கள், இவர்கள்தான் ஜாதியை ஒழித்து புரட்சி பண்ணி உப்மா கிண்டப் போகும் தன்மான சிங்கங்கள் என்று தெளிவாகத் தெரிகிறது!


2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நண்பர் திருமலை ராஜனும் நண்பர் பாலாஜியும் நடத்திய ஒரு ப்ரோக்ராமைப் பற்றி எழுதி இருந்தோம். இப்போது அந்த ப்ரோக்ராமை இன்டர்நெட்டில் கேட்கலாம். இரண்டு பகுதிகளாக இருக்கிறது. பகுதி ஒன்று இங்கே, பகுதி இரண்டு இங்கே.


(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெருத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.

பேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.

நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது.  இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின்  ஆதரவும் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரியைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரியாதையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.

இன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம் நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.  தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜெண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.

இதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜாதி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.

இருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.

ஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவும் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னும் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை  நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு  நேரான  வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை  நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்தை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளிப்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.

சந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ஆகவே உமா ஷங்கர்   ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

(முற்றும்)

தொடர்புடைய பிற பதிவுகள்

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags

அடுத்த பக்கம் »