ReadingVettupuliஇந்த புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்தை இங்கே படித்தேன். தமிழ்மகன் என்பவர் எழுதி இருக்கிறார். எழுத்தாளர், சினிமா, டிவிக்கும் எழுதியவர் போலிருக்கிறது.

என் சிறுவயதில் வெட்டுப்புலி தீப்பெட்டி இல்லாத வீடே தமிழ்நாட்டில் எங்கும் இருந்திருக்காது. அதுதான் நன்றாக பற்றிக் கொள்ளும் என்றெல்லாம் சொல்வது நினைவிருக்கிறது. அது என்ன யாரோ புலியை வெட்டப் போகிறானே என்றெல்லாம் ஒரு யோசனையும் தோன்றியதில்லை. தமிழ் மகனுக்கு தோன்றி இருக்கிறது. அது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஓவியம் என்று ஒரு premise வைத்துக் கொள்கிறார். இவர் கதையின் ஹீரோக்கள் யார் அந்த வீரன் என்று விவரம் சேகரிக்க செல்கிறார்கள். அதை வைத்து ஒரு நூறு வருஷமாக தமிழகத்தில் நடப்பதை எழுதி இருக்கிறாராம். அறிமுகம் படிக்க தூண்டுகிறது.

எனக்கு புத்தகங்களை புரட்டிப் பார்த்து வாங்கினால்தான் திருப்தி. இங்கே சிலிகான் வாலி மக்கள் யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய சுட்டிகள்: வெட்டுப்புலி புத்தக அறிமுகம்


Pudhumaipithan

தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத்தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களிடையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

புதுமைப்பித்தன் மாதிரி ஒரு ஜீனியஸ் மறைந்ததற்கே நாலு வரி ஆபிச்சுவரிதான் வந்திருக்கிறது! எழுத்தாளன் “செத்த பிறகு சிலை வைக்காதீர்” என்று எழுதியவருக்கே ஞாபகச் சின்னமாம்! அவருக்கு ஆவி உலகத்தில் தெரிந்திருந்தால் இந்த irony-ஐ மிகவும் ரசித்திருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்:படிப்பு

தொடர்புடைய பக்கம்: புதுமைப்பித்தனும் சந்திரபாபுவும்


Devan5.5.57-இல் தேவன் இறந்தபோது அவர் விகடன் ஆசிரியர். அவரது மறைவைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறார்கள்.

விகடனின் மகத்தான நஷ்டம்!

சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர் பேனாவிலே பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயிர் பெற்றுச் சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண்டிருக்கையில், அவர்களைப் படைத்த பிரமன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட ஸ்ரீ தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந்நாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டுத் தமிழிலும் இப்படிப் புதுமைக் கருத்துக்களுடன் எழுத முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள்.

தேவன் அவர்களின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கே ஈடு செய்ய முடியாதது என்றால், விகடனுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி எப்படி எழுதுவது? அவருடைய அற்புதமான கதைகளை, எழுத்துக் கோக்கும்போதே படித்துக் களித்த ஆனந்த விகடன் கம்பாஸிடர்கள் அத்தனை பேரும் இன்று அழுது கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர் குழாம் அலறித் துடிக்கிறது. கடமை உணர்ச்சியும், அன்பும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் நற்குணமும் படைத்த உத்தமமான நிர்வாக ஆசிரியரை இழந்து விகடன் கண்ணீர் வடிக்கிறான். 5.5.57 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு, தேவன் தேவனாகி விட்டார். அவர் பூத உடம்பு மறைந்து விட்டது. புகழுடம்புடன் ஆனந்த விகடன் வாசகர்களின் உள்ளங்களில் குடி புகுந்துவிட்டார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு->தேவன் பக்கம்


கோபால் தேவன் பற்றி எழுதி இருக்கும் பதிவு. கோபாலின் இன்ஸ்பிரேஷன் தேவன்தானாம்.
துப்பறியும் சாம்பு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தமிழ் கொஞ்சம் ததிங்கினத்தொமாக இருக்கும் என் பெண்ணுக்கு கூடப் பிடித்திருக்கிறது. பாதி சாம்பு கதைகளை நான் சொல்லி அவள் கேட்டிருக்கிறாள்.
ஜஸ்டிஸ் ஜகன்னாதனில் “குற்றவாளி” ஈஸ்வரன் என்று எழுதி இருக்கிறார். ஈஸ்வரன் டிஃபென்ஸ் வக்கீல் என்று நினைவு. சரியாக நினைவிருப்பவர்கள் சொல்லலாம்.
ஓவர் டு கோபால்!

Devanஎழுத்தாளர் தேவன் (மகாதேவன்) மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் (5, மே – 1957) ஓடிவிட்டன என்றாலும் அவர் எழுத்துக்கள் மட்டும் என்றும் மக்கள் மனதை விட்டு மறையவே மறையாது. மகாகவி பாரதி போல குறைந்த வயதே தேவன் பூமியில் இருந்தாலும் நிறைந்த சாதனையை தமிழ் எழுத்துலகுக்குக் கொடையாக தந்துவிட்டு வானுலகம் சென்றவர். ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராக சேர்ந்து படிப்படியாக ஆசிரியராக உயர்ந்து சாதனை படைத்த இந்த மாபெரும் எழுத்தாளர் தனது 44ஆம் வயதிலேயே மறைந்து போனது தமிழுக்கும் தமிழ் எழுத்துக்கும் ஒரு பெரிய சோகம்.

எளிமையான நகைச்சுவை (தேவன் வார்த்தையில் ‘ஹாஸ்ய ரஸம்’) என்பது தேவனுக்கு கை வந்த கலை. அவரை சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, நாட்டின் அன்றைய நிலை, மக்களின் பேச்சு வழக்கு, பழகும் விதம் இவை எல்லாமே அவர் கதைகளில் மிக நேர்த்தியாகவும் வாசகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும்படியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.

மிஸ்டர் வேதாந்தம், மிஸ் ஜானகி, கல்யாணி, ஜஸ்டிஸ் ஜகன்னாதன், ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, இன்னும் எத்தனையோ புதினங்கள் மூலம் தேவனின் எழுத்துக்கள் தமிழுலகத்தில் நீண்ட நெடுங்காலம் நிலைத்து இருக்கும். அந்தக் காலத்தில் ஆங்கில மோகம் பிடித்து ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்ட வர்க்கத்தினரை, தன் இயல்பான நகைச்சுவை சேர்த்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் தேவன்.

என் எழுத்துகளுக்கு ஆத்திசூடி தேவன் எழுத்துகள்தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். தேவனின் புதினங்கள் மட்டுமல்ல அவர் எழுதிய சிறு கதைகளும் கட்டுரைகளிலும் அவர் கைவண்ணம் அதிகமாகவே ரசிக்கலாம்.

1947 ஆம் ஆண்டில் வெளிவந்த தேவனின் ‘கோபம் வருகிறது‘ கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா? (தேவன் எழுதிய சீனுப்பயல் கதைத் தொகுப்பில் இருந்து.)

மனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்றிருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. ‘முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்’ என்பது பிரசித்தமான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. “ஸார்! நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது போல் இருக்கிறதே!” என்று ஞாபகமூட்டினால் போதும்: “பிடி சாபம்! இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்?” என்று கோபித்துக் கொண்டு விடுவார்.
எனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக் கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, ‘நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன். இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை” என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. “சரி சரி சீக்கிரம் இலையைப் போடு. நான் ஆபீசுக்குப் போகிறேன்!” என்பேன்.
ராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.
‘இவ்வளவு நன்றாக சிசுருஷைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்’ என்று கூட நான் அவளைக் கேட்டுக் கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.
நானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் ‘சவரம் செய்து கொண்ட தினங்களில்’ அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.
கோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் – அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா?
பெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.
நான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான். கோபம்தான் அந்தக் கத்தி.
கோபித்துக் கொள்ளாதீர்கள். கட்டுரை இங்கே முடிந்து விட்டது.

தேவனுக்கு பெரிய புகழ் பெற்றுத் தந்தவை என்னவோ அவர் ஆனந்தவிகடனில் தொடராக எழுதிவந்த புதினங்கள்தான். இந்தக் கால திரைப்படத்தில் ‘ஃப்ளாஷ்பாக்’ காட்சிகள் என்பார்களே, அதைப் புதினங்களில் எனக்குத் தெரிந்து முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் தேவன் ஒருவரே. மிகப் புதுமையான முறையில் தொடர்களின் காட்சி எழுதப்படும்போது, வாசகர்கள் இயல்பாக ஒன்றிவிடுவது இயற்கைதான். மிஸ் ஜானகி என்ற ஒரு புதினத்தில் எந்த இளம் எழுத்தாளரும் பால பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டிய அளவுக்கு கதையமைப்பையும், உவமைகளையும் உருவாக்கியிருப்பது அவர் கதை எழுதும் திறனுக்கு ஒரு சான்று.

தேவன் புதினங்களை சற்று மேலோட்டம் விடுவோமே.
தேவன் நாவல்களில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். சிறிய கதாபாத்திரம் ஒவ்வொன்றிலும் கூட தேவனின் கைவண்ணத்தை ஆங்காங்கே காணலாம். இதோ கல்யாணி புதினத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தைப் பற்றி தேவன் சொல்வதைப் பார்ப்போம்:

கும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் ‘டிஸ்பென்ஸரி’ என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது ‘நெட்டுருப்’ பாடம்.
மாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பார் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.
ஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக ‘டிஸ்பென்ஸரிக்குள்’ பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே ‘டக் டக்’ கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன் பின் அறைக் கதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் ‘விருதா’ கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.
‘சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார்! நாம் கை வெச்ச உடனே ஆளு ‘க்ளோஸ்’ ஆகும் – நமக்கு கெட்ட பேரு! இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா? போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ. நம்ம ஆலந்தூர் ‘கோண்டு’! உங்களுக்குத் தெரியுமே ஸார்! சினிமாவெல்லாம் ‘ஆக்ட்’ பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம். வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட். ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா! மெல்ல ‘கோண்டு’ மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா ‘பீட்டிங்’ – ‘அம்மாமார்களே! இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம். சித்தெ பொறுத்துக்குங்கோ! இன்னேன். ஒரு ‘கிளிஸரைன்’ இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டு போகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் ‘கோண்டு’ வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமான்னு கேழ்க்கிறான்’ என்பார்.
எதிரில் உட்கார்ந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.
ஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்ய ரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்’ என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்!
எல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. ‘ஒன்றுமில்லை! பயப்படாதே! நீ தெரிந்து கொண்டு என்ன லாபம்? நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு! சாப்பிடு பார்க்கலாம் போ’ என்பார். அந்த ஆசாமி போன உடனே, ‘ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே. காலப்பிங் டி.பி – நான் என்ன செய்யறது? ஏன்? யார்தான் என்ன செய்யமுடியும்?” என்பார். அவர் பேச்சில் நிஜ கலப்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? சதா தமாஷாக இருக்கும்!

தேவன் இந்த டாக்டரைப் பற்றி கதையில் முன்கூட்டியே கதாநாயகன் நண்பன் மூலமாக நமக்கு அறிமுகம் செய்கிறார் – எப்படி என்று படியுங்களேன்:

பி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ? ஆள் க்ளோஸ்! தம்பி.. பேஷண்ட் ஃபட். ஆஸாமி ஃபினிஷ்! கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற பெயரை ஒரு பெரிய கதைக்கு (2 பாகங்கள்) தலைப்பாகக் கொடுத்தாலும் அதன் கதாநாயகன் மட்டும் அந்த ஜஸ்டிஸ் இல்லைதான். ஆனால் கோர்ட் அதாவது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தக் கதையின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுவார் தேவன். அவர் இந்தக் கதை எழுதிய காலக்கட்டத்தில் கோர்ட்டுகளில் ஜூரர் சிஸ்டம் உண்டு போலும். அதாவது வெவ்வேறு வகையில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள ஏழு அல்லது ஒன்பது நபர்களை ஜூரர்களாக தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பெரிய கிரிமினல் வழக்கிலும் நியமிப்பார்கள். அந்த ஜூரர்களின் மெஜாரிட்டி முடிவின் படி ‘கனம்’ நீதிபதி தீர்ப்பு சொல்லுவார். இதற்கு அப்பீல் கிடையாது. (வழக்குகளும் விரைவாக முடிக்கப்பட்டு முடிந்தவரை நல்ல நியாயமும் கிடைக்கச் செய்யும் வழிமுறை இது)
ஜஸ்டிஸ் ஜகன்னாதன் புதினத்திலும் இப்படி ஒரு கேஸ். கொலை வழக்கு. கொலை செய்தவராக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் இருக்கும் ‘ஈஸ்வரன்’ ( நடுவயதுக்காரர், ஏறத்தாழ கதாநாயகன்) பாத்திரத்தை நல்லவராகவே கதை முழுவதும் சுட்டிக்காட்டி வருகிறார் தேவன். ஆனால் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சாட்சிகள் இவை அனைத்தும் ஈஸ்வரனுக்கு எதிராகவே கோர்ட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சி ஒன்று ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமே உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.
அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் இப்படி பேசுகிறார்.
“பிடிச்சுகிச்சு”
அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.
“என்ன பிடிச்சுகிச்சு?”
மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தைய்யா பதில் சொல்லுவார்.
“நேத்து ராத்திரி மொட்டை மாடில படுத்தேனா? ஒரே பனியா? அதான் பிடிச்சுகிச்சு.” என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.
சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி.
இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது அவர் கதைகளை படித்த பலருக்குத் தெரிந்ததுதான்.

மிஸ்டர் வேதாந்தம் என்றொரு புதினம். தேவன் ‘ஆனந்த விகடன்’ ஏறத்தாழ ஆசிரியராக 15 வருடங்கள் பணி புரிந்தவர். தன் பத்திரிகை தொழில் சம்பந்தப்பட்ட கதையாகவே ‘மிஸ்டர் வேதாந்தம்’ புதினத்தை வெளியுலகுக்குக் காட்டினாரோ என்னவோ. இந்தக் கதையின் நாயகன் வேதாந்தம் ஒரு வளரும் எழுத்தாளன். ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரிடம் தன் எழுத்துக்களைப் பிரசுரிக்கும்படி கோருவான்.

‘ஸார், நீங்க படிச்சுப் பார்த்துட்டு நல்லா இருந்தா உங்கப் பத்திரிகைல பிரசுரம் பண்ணுங்க ஸார். நான் ரொம்ப நல்லாவே எழுதியிருக்கேன் ஸார்.”
அதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் நிதானமாக சொல்லுவார்.
‘எல்லாம் சரிப்பா. நீ நல்லாவே எழுதியிருக்கே. ஆனா பாரு, எங்களது என்னவோ பிரபல பத்திரிகை. அதனால நீ என்ன பண்றே, முதல்ல அங்க இங்க எழுதி பிரபலமாயிட்டு அப்பறமா இங்கே வா. அப்ப நீ ஒரு குப்பையை எழுதிக் கொடு, அத அப்படியே நாங்க எங்க பத்திரிகைல பிரசுரிக்கிறோம். அதுவரைக்கும் நீ எத்தனை நல்லா எழுதினாலும் அது குப்பைக்கூடைக்குத்தான் போகும்.”

தேவனின் இந்த வார்த்தைகள் இன்றைக்கும் சத்தியமான நிலையில் நிலைத்து நிற்கின்றன. பிரபல பத்திரிகைகளும் இன்றளவிலும் அவர் வார்த்தைகளை அப்படியே காப்பாற்றுகின்றன.

துப்பறியும் சாம்பு
1950-60களில் துப்பறியும் சாம்புவை தெரியாதவர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என நினைக்கிறேன். அவ்வளவு பாப்புலர். இப்போது கூட தேவனின் பெயரை வைத்து ஏதாவது பேசினால், துப்பறியும் சாம்பு தேவன்தானே என்று சடக் கென நம் மக்கள் கூறுவர். தேவனின் சித்திரக்கதைகளாக வெளிவந்த ‘துப்பறியும் சாம்பு’வை பின்னாளில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நாகேஷ் தத்ரூபமாக நமக்கு காட்டினார். அதன்பின் ஏராளமான நாடகங்களில் சாம்புவின் கதை மேடையேறியது. காத்தாடி ராமமூர்த்தி 1980களில், தொலைக்காட்சி தொடர் மூலம் சிறிது காலத்திற்கு சாம்புவின் புகழை தமிழுலகத்தில் பரப்பினார்.
தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான ‘துப்பறியும் சாம்புவுக்கு தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது ‘துப்பறிவதுதான்’. இதுதான் தேவனின் எழுத்து மகத்துவம்.
தேவனே தன் கதாநாயகனான துப்பறியும் சாம்புவை முதலில் எப்படி அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.

நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.
‘விளாம்பழம்’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்.

தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னாளில் ரொம்பவுமே புகழ் பெற்று தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும்.
எல்லாமே சின்ன சின்னக் கதைகள். எல்லாமே படிக்கத் தெவிட்டாத தேன் துளிகளைக் கொண்ட கதைகள். ஒவ்வொரு கேஸிலும் சாம்புவுக்கு அதிருஷ்ட தேவதை எப்படியோ சமயத்தில் வந்து உதவுவது நம்பும்படியாகவே அமைத்திருப்பார் தேவன். இது எழுத்தாளரின் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியத்தை எல்லாக் கதைகளிலும் காண்பித்திருக்கிறார் தேவன்.
‘முந்திரிப் பருப்பு – பருப்புத் தேங்காய்’ என்றொரு கதை. இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ராவ்சாகிப் நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.
ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண். எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிறது.
‘விடு அதை’ தர்மாம்பாள் அதட்டுகிறாள்.
‘நீதான் விடு’ இது சாம்பு.
இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ‘ஆஹா! என்ன ஆச்சரியம்! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடித்துவிட்டார். இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்.’ என்றும் கூவுகிறார்.
அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள். ‘நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார். அவர் மந்திரவாதியோ இட்சிணியோ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்!’

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தேவன் எழுத்துக்களைப் பற்றி இங்கே எழுதும்போது ‘கோபம் வருகிறது’ என்ற கட்டுரையில் ஆரம்பித்தேன். இனியும் யாருக்காக கோபம் வந்தால் உடனே தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ படியுங்கள். கோபமெல்லாம் பறந்துவிடும்.

ராஜத்தின் மனோரதம் என்ற ஒரு புத்தகம். ஒரு சாதாரண மனிதன் வீடு கட்டுவது எப்படி என்பதை ஒவ்வொரு அங்குலமாக நம் கண் முன்னே அரங்கேற்றியிருப்பார். அற்புதமான எழுத்து.

தேவன் எழுத்துலகில் ஜாம்பவான் என்று சொல்வதற்கு அவரின் எழுத்துத் திறன் மட்டும் காரணம் இல்லை. பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர் என்று பல முகங்கள் கொண்டவர். பழகுவதற்கு மிக எளிய மனிதராகவே கடைசி மூச்சு வரை இருந்தார். தமிழ் எழுத்துலகம் நிச்சயமாக தேவனால் மிகப் பெரிய புகழ் பெற்றது என்றே சொல்லலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு->தேவன் பக்கம், நண்பர்கள்->கோபால் பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள்:
கிழக்கு பதிப்பகம் மறுவெளியீடு செய்திருக்கும் தேவனின் புத்தகங்கள்
தேவனின் “கோமதியின் காதலன்”
எழுத்தாளர் தேவன் பற்றி சுஜாதா

பிற்சேர்க்கை: டோண்டு இங்கே சாம்புவையும் சி.ஐ.டி. சந்துருவையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.


சரித்திர நாவல்கள் பதிவுகளுக்கு வந்த மறுமொழிகளில் டணாய்க்கன் கோட்டை பற்றி சிலர் குறிப்பிட்டிருந்தனர். நானோ இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. யாராவது அறிமுகப்படுத்தி வையுங்களேன் என்று கேட்டிருந்தேன். ரீடர் என்பவர் இதைப் பற்றி அம்ருதா என்ற இணைய இதழில் வந்திருந்தது என்று சொல்லி ஒரு மறுமொழி எழுதி இருந்தார். ஃபான்ட் பிரச்சினையால் அம்ருதா இதழை படிக்க முடியவில்லை. அதனால் எனக்கு இதை எழுதியது ரீடரா, இல்லை இமையம் என்பவரா, இது அம்ருதா இதழிலிருந்து எடுக்கப்பட்டதா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எப்படி இருந்தாலும் அம்ருதா இதழ், மற்றும் ரீடருக்கு நன்றி! மிக அருமையான அறிமுகம். நாவலைப் படிக்க வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்துகிறது. நாவல் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை முன்னூறு ரூபாய். ஓவர் டு ரீடர்!

அம்ருதா சுட்டி 1, அம்ருதா சுட்டி 2

டணாயக்கன் கோட்டை – இமையம்

1956ல் ‘நவ இந்தியா’ இதழில் தொடராக வெளிவந்து வாசகர்கள் கவனத்தைப் பெதும் தன் பக்கம் ஈர்த்ததோடு, ராஜாஜி, மு.வரதராசனார், ஜி.டி.நாயுடு போன்றவர்களால் போற்றப்பட்ட நாவல் ‘டணாயக்கன் கோட்டை’. இந்நாவல் தமிழில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 1959லேயே மொழியாக்கம் செய்யப்பட்டு, மிக முக்கியமான பத்திரிகைகளில் தொடராக வெளி வந்துள்ளது. கன்னட, மலையாள வாசகர்களிடத்திலும் சிறந்த மதிப்பைப் பெற்றுள்ளது இந்நாவல். நாவல் வெளிவந்து சரியாக அரை நூற்றாண்டுக் காலம் முடிந்துவிட்டது. இப்பொழுதும் இந்த நாவலைப் படிக்கும்போது, தற்காலத்தில் எழுதப்பட்டது போல அவ்வளவு ஈர்ப்புடையதாகவும், பல விதங்களில் சுவாரசியம் மிகுந்ததாகவும் இருக்கிறது. இதற்குக் காரணம் கதையின் தளமும், கதை சொன்ன விதமும்தான். இ. பாலகிருஷ்ண நாயுடு, தேர்ந்த கதை சொல்லியாக இருந்திருக்கிறார் என்பதற்கு ‘டணாயக்கன் கோட்டை’ நாவலே சாட்சியாக இருக்கிறது.

திப்பு சுல்தானின் காலம் 10.11.1750 முதல் 4.5.1799 வரை ஆக இருந்தாலும், இந்நாவலில் திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலத்தின், பதினேழு ஆண்டுகள் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் திப்பு சுல்தானுடைய வரலாற்றை, அரசாட்சி முறையை சொல்வது போல தோற்றம் தந்தாலும், நாவலின் மையம் அதுவல்ல. மைசூர் ராஜ்ஜியத்தில் பதினேழு ஆண்டு காலம் நடந்த அரசியல் நடவடிக்கைகள், போர்கள், படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள், சமூக மாற்றங்கள் ஆகிய அனைத்தையும் விவரிக்கிறது நாவல்.

திப்பு சுல்தானின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசாட்சி, நிர்வாகம், போர், ஆங்கிலேயரிடம் வீழ்தல் என்பதெல்லாம் நாவலின் ஒரு பகுதி மட்டுமே. நாவலில் பல கிளைக்கதைகள் வருகின்றன. குறிப்பாக டணாயக்கன் கோட்டை பாளையக்காரர்களான பாலராஜா, தேவராஜா என்பவர்களுடைய கதை அவற்றில் ஒன்று. புலியைப் பிடித்த வீரம்மா என்பவளின் கதை, மதவெறியன் பீர் ஜட்டா, ராணி லட்சுமி அம்மிணி, வெள்ளையர்களின் சூழ்ச்சி, திவான் மீர் சடக் என்று அடுக்கடுக்கான பல கிளைக் கதைகளை தன்னுள் கொண்டுள்ளது நாவல். இப்படியான பல கிளைக் கதைகள் நம்முடைய புராண, இதிகாச, ஐதீகக் கதைகளை நினைவூட்டுகின்றன. கிளைக் கதைக்குள்ளேயே பல கிளைக் கதைகள்; அக்கதைக்குரிய மனிதர்களும், அவர்களுடைய உலகமும் மிக நேர்த்தியான முறையில் விவரிக்கப்பட்டுள்ள விதம் மலைப்பையும், வியப்பையும் தருகிறது. மறந்து விடக்கூடிய பாத்திரங்கள் என்று நாவலில் ஒன்று கூட இல்லை.

நாவல் முழுவதும் பல அசாதாரணங்கள் நிறைந்து கிடக்கின்றன. அசாதாரண சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் நாவலை கட்டமைத்த விதத்தில், கதை சொன்ன விதத்தில், கதையைச் சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், மொழியின் எளிமையால், அசாதாரணங்களும் சாதாரண நிகழ்வுகளாக, நம்பும்படியாக இருக்கின்றன. அசாதாரணங்கள் நாவலின் போக்கில், கதையின் போக்கில் கரைந்து, வாசகர்கள் கவனத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறது. இந்தக் குணத்தால், இது வரை தமிழில் எழுதப்பட்டுள்ள எல்லா வரலாற்று நாவல்களைக் காட்டிலும், இந்த நாவலுக்கு தனித்த சிறப்பான இடம் உண்டு. அதே மாதிரி நாவலாசியருக்கும் உண்டு. வரலாற்றை மட்டுமே பதிவு செய்யாமல் வரலாற்றில் இடம் பெற்ற பாத்திரங்களின் உள் மன உண்மைகளையும், வேட்கைகளையும் ஆராய்ந்து சார்பற்ற நிலையில் எழுதப்பட்டுள்ளதால், தமிழ் நாவல்களின் இலக்கிய வரலாற்றிலும் இந்த நாவலுக்கு முக்கிய இடம் உண்டு.

வரலாற்றில் நடந்த எல்லாப் போர்களும், படையெடுப்புகளும் பேராசையாலும், பதவி, அதிகாரம், ஒடுக்குதல் என்று தமது வல்லமையை நிரூபிக்க நடந்தவைகளே. வரலாறு நெடுகிலும் இது வரை நடந்த போர்களில், படையெடுப்புகளில், ஆக்கிரமிப்புகளில் ஒன்றைக் கூட, நன்மைக்கும் தீமைக்கும் எதிராக நடந்தவை என்று நம்மால் அடையாளப் படுத்த முடியாது. இதை நிரூபிக்கும் விதமாகத்தான் ‘டணாயக்கன் கோட்டை’ நாவல் இருக்கிறது.

இந்நாவலில், அதிகாரத்திற்காக நடைபெறும் சூழ்ச்சிகளும், தந்திரங்களும், நயவஞ்சகங்களும், கயமைத்தனங்களும், உடன்படிக்கைகளும் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக நம்ப வைத்து ஏமாற்றுதல், மோசடி செய்தல், துரோகம் செய்தல், சூது, கபடம், உறவாடிக் கெடுத்தல், பலியாதல், பலி கொடுத்தல், ராஜ விசுவாசம், ராஜதுரோகம், சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி என்று அடுக்கடுக்காக நடக்கிறது. அதோடு; கொலை, கொள்ளை, சூறையாடுதல், பெண் மோகம், ராஜபோகம், ஆட்சிக் கவிழ்ப்புகள், அதற்கான யுக்திகள் என்று விவக்கப்படுகிறது.

திப்பு சுல்தானின் ஆட்சி வீழ்ச்சிக்குக் காரணமாக இவ்வளவு காரியங்கள் நடக்கின்றன. இந்தக் காயங்களைத்தான் நாவல் மையப்படுத்துகிறது. திப்பு சுல்தானின் வீழ்ச்சியையோ, வெள்ளையன் ஆக்கிரமிப்புப் பற்றியோ நாவல் பேசவில்லை. அதிகார மாற்றம் நிகழ்வதற்குக் காரணிகளாக இருந்தவை பற்றி மட்டுமே பேசுகிறது. அதையும் சுவாரசியத்துடன் பேசுகிறது. இதுதான் இந்நாவலின் மிகப் பெரிய பலம்.

அதிகாரத்திற்காகவும் பேராசையாலும் நடக்கும் போரில் ஆயிரம் ஆயிரமாக மனிதர்கள் பலியாகிறார்கள்; பலி கொடுக்கப்படுகிறார்கள். போரில் மதிப்பு வாய்ந்தது மனித உயிர்களல்ல; வெற்றி என்ற சொல் மட்டும்தான். ஒரே ஒரு மனிதனுடைய ஆசைக்காகவும், அதிகாரத் தேவைக்காகவும்தான் ஆயிரம் ஆயிரமாக மனிதர்கள் பலியாகிறார்கள். பலியாக்கப்படுகிறார்கள். அந்த ஒரு மனிதனுடைய ஆசையும், அதிகாரத்தை நோக்கிய விழைவும் நேர்மையானதாக இல்லை. வார்த்தைகளுக்கும் ஆணைகளுக்கும் இருக்கும் மரியாதை, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மனித உயிர்களுக்கு இல்லை என்பதைத்தான் இது வரை நடந்த எல்லாப் படையெடுப்புகளும் போர்களும், உறுதி செய்கின்றன.

அர்த்தமற்றுப் போன உயிர்ப் பலிகள், ஆயிரம் ஆயிரமாக கொன்று குவித்தாலும் தணியாத கோபம், வெறி, த்திரம், பகை, ஆவேசம், துவேஷம், காலத்திற்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறு மாறும் உடன்படிக்கைகள், நம்ப வைத்து நாடகமாடி ஏமாற்றுதல்; காட்டிக் கொடுத்தல் இவைகள்தான் அரசாக, அரச நீதியாக, அரசாட்சியாக வரலாறு நெடுக நடந்துள்ளது. இவற்றைத்தான் ‘டணாயக்கன் கோட்டை’ நாவலிலும் பார்க்கிறோம்.

நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வெள்ளப் பெருக்கின்போது ஆற்றைக் கடப்பதற்கான வழிமுறை, கிணற்றுக்குள்ளிருக்கும் குகைக் கோவிலிருந்து கோட்டைக்கு நூலேணி மூலம் செல்லுதல், கோவில் கருவறையில் குழந்தை வளருதல், சுரங்கப் பாதைகள், கோட்டைகளின் அமைப்பு முறை என்று, வரக் கூடிய விவரிப்புகள் பிரமாண்டமானதாக இருக்கிறது. அதே மாதி காரியங்களைச் செய்வதில் அக்கால மனிதர்களுக்கு இருந்த சாதுர்யம், மதிநுட்பம், சமயோசித புத்தி என்று பல அம்சங்கள், வாசகர்கள் மனத்தை ஈர்க்கிறது. அதோடு அக்காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கவழக் கங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக ஒற்றுமை, இனவேற்றுமை, சமயம் சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் அழகுற பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நாவலில் வரக்கூடிய முக்கிய கதாபாத்திரங்களான திப்பு சுல்தான், ராணி லட்சுமி அம்மிணி, வீரம்மா, வீராஜி, திவான் மீர் சடக், யாசின்கான், சல்லிவன், சுல்தானா பஃருன்னிஸா பேகம், பாலராஜா, தேவராஜா மற்றும் சிறு கதாபாத்திரங்களான மாஸ்தி, சோலைக்கிளி, சீதம்மா, ஈஸ்வ, குன்னம்மா, அலமேலு, ரங்கம்மா போன்ற கதாபாத்திரங்களும் நாவலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள்.

நாவலில் தேவையற்ற பாத்திரம் என்றோ, தேவையற்ற ஊளைச் சதைப்பகுதி என்றோ சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு மிகவும் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட சிறந்த நாடகக் காட்சி போல, நாவலின் ஒவ்வொரு பகுதியும் அமைந்துள்ளது.

ஒவ்வொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் எப்போதும் சதி, சூழ்ச்சி, நயவஞ்சகம் மட்டுமே இருப்பதில்லை. இவற்றோடு சேர்த்து மதமும், அதனுடைய மூட நம்பிக்கைகளும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதைத்தான் திப்பு சுல்தானின் கடைசி நாள் நிகழ்ச்சி காட்டுகிறது.

‘டணாயக்கன் கோட்டை’ நாவலில் வரக்கூடிய எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் மோசடிப் பேர்வழிகளாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கிறார்கள். திப்பு சுல்தான் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இருக்கிறான். அதனால்தான் வெல்ல முடியாத ‘மைசூர் புலி’ என்ற திப்புசுல்தானின் ஆட்சி, மிக எளிதாக வீழ்ச்சியுறுகிறது. இந்தியர்களே வெள்ளையர்களுக்கு யானை மீதும், குதிரை மீதும், தங்கம், வைரம் என்று மூட்டை மூட்டையாக ஏற்றி விட்டு, இந்திய மன்னர்களை ஆட்சியை விட்டு நீக்கிய அவலத்தின் ஒரு பகுதியை இந்நாவலில் காண்கிறோம். உலகெங்குமிருந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும், அதிகார விழைவால், காட்டிக் கொடுத்ததால் மட்டுமே வீழ்ந்து விடவில்லை. உலகில், என்று துப்பாக்கியும், பீரங்கிக் குண்டும் கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றே பிராந்தியம் சார்ந்த, வட்டாரம் சார்ந்த குறுநில மன்னர்களின் ஆட்சி வீழ்வதற்கான அத்தியாயம் தொடங்கியது.

மிகப் பெரிய ராஜ்ஜியங்கள் துப்பாக்கியாலும், பீரங்கிக் குண்டுகளாலும்தான் நிர்மாணிக்கப்பட்டது. பிராந்திய ஆயுதங்களான வில், அம்பு, ஈட்டி, எரிவாணம் போன்றவைகள் துப்பாக்கியின் முன், பீரங்கியின் முன் செயலிழந்து போயின. ஒரு வகையில் யுத்தத் தயாரிப்பு சம்பந்தமான விஞ்ஞானம்தான் எல்லா நாடுகளையும் அடிமைப்படுத்தியது.

திப்பு சுல்தான் வெள்ளையர் முன் தோற்றுப்போகவில்லை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் முன்தான் தோற்றுப்போனான். உலகில் அடிமைப்பட்ட ஒவ்வொரு நாடும் விஞ்ஞானத்தால்தான் அடிமைப்பட்டது. இந்தியாவும் அதனால்தான் அடிமைப்பட்டது என்பதை மிகவும் நேர்த்தியான முறையில் ‘டணாயக்கன் கோட்டை’ நாவல் சொல்கிறது.

பல விதங்களில் மிக முக்கியமான நாவலாக இருக்கிற இந்த நாவலில், திருக்குறளை மேற்கோள் காட்டியிருப்பது, பாம்பாட்டிச் சித்தர் பற்றிய குறிப்புகள், பரிமேலழகர் உரை குறித்த பகுதி, நாவலின் இடையிடையே வரக் கூடிய கதைச் சுருக்கம் போன்ற பகுதிகள்தான் நாவலுக்குச் சரிவைத் தருகின்றன. இந்தக் குறைபாடுகளையெல்லாம் மீறி, நாவல், வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விடுகிறது.

‘டணாயக்கன் கோட்டை’ நாவலை வெளியிட்ட ‘அம்ருதா’ பதிப்பகம் பாராட்டுக்குயதாக இருக்கிறது. திப்பு சுல்தானின் உருவப்படம், ஸ்ரீகிருஷ்ண ராஜ உடையான் படம், திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்கள், மைசூர் ராஜ்ஜிய வரைபடம், ஸ்ரீரங்கப்பட்டண வரைபடம், ஹைதர் அலியால் பாதுகாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட இந்துக் கோவில்களின் படம், சிம்மாசனத்தை அலங்கக்கும் தெய்வீகப் பறவையின் படம், புலியின் படம், திப்பு சுல்தான் கொல்லப்பட்ட இடம், அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று பலவற்றை வண்ணத் தாளில் அச்சிட்டு, நாவலின் பக்கங்களுக்கிடையே சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இக்காரியம் நாவலுக்கு கனம் சேர்த்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள்
தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள்
இன்னும் சில சிபாரிசுகள்
கோவி. மணிசேகரன் என்ன ஆனார்?
சாண்டில்யனைப் பற்றி ஒரு அலசல், சாண்டில்யன்
கல்கி


Dick Francisஎனக்கு பிடித்த த்ரில்லர் எழுத்தாளர்களில் டிக் ஃபிரான்சிசும் ஒருவர். சமீபத்தில் – போன ஃபெப்ரவரியில்தான் இறந்து போனார். அவரது சமீபத்திய புத்தகம் இப்போது வந்திருக்கிறது, அதைப் படிக்கும்போதுதான் தெரிந்தது.

ஃபிரான்சிஸ் முதலில் குதிரைப் பந்தய ஜாக்கியாக இருந்தார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் குதிரைகளை ஓட்டி இருக்கிறார். ரிடையர் ஆனதும் மெதுமெதுவாக எழுதத் தொடங்கினார். நல்ல த்ரில்லர்களை எழுதி இருக்கிறார். எல்லாமே குதிரைப் பந்தய பின்னணி கொண்டவை. ஹீரோக்களுக்கும் ரேஸ் உலகத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும். சில சமயம் ஹீரோ அவரைப் போலவே ஜாக்கிதான், ஆனால் குதிரை வாங்க கடன் தரும் பாங்க் அதிகாரி, குதிரைகளை வரையும் ஓவியர், குதிரைகள் பற்றி எழுதும் எழுத்தாளர், குதிரை சொந்தக்காரருக்குத் தெரிந்த நடிகர், குதிரைப் பந்தய நிகழ்ச்சிகளுக்கு மது விற்கும் ஒருவர், சமையல்காரர், குதிரைகளை ஏற்றிக்கொண்டு போகும் வண்டிகள் வைத்திருப்பவர், ரேஸ் கோர்ஸ்களுக்கு இடையே விமானம் ஓட்டுபவர் என்று பலதரப்பட்டவர்கள் ஹீரோவாக வருவார்கள். கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்கள். எல்லாவற்றையுமே படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

அவரது ஹீரோக்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். Low-key, competent; தன்னை, தன் பலங்களை, பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டவர்கள். எந்த விதமான போலித்தனமும் இல்லாதவர்கள். Strong ethical core உடையவர்கள். உறுதியானவர்கள். அடுத்தவர்களின் தவறுகளை புரிந்து கொள்பவர்கள், சுலபமாக மன்னிப்பவர்கள். அடுத்தவர்களை பழி வாங்குவது, பதிலுக்கு பதில் கொடுப்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான் இவர்களுக்கு; காரியம் நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் வலுத்த focus உடையவர்கள். நல்லது நடந்தால் போதும், வில்லன்கள் தண்டிக்கப்படாமல் தப்பித்தாலும் சரி. எல்லா நாவலிலும் ஒரு சீனில் பயங்கர அடி வாங்குவார்கள், ஆனால் அந்த அடி அவர்களை பின்வாங்க வைக்காது. எனக்கு இந்த மாதிரி ஹீரோக்கள் பிடிக்கும் என்பது இவர் புத்தகங்களை படித்த பின்தான் தெரிந்தது. 🙂

ஒரே ஒரு புத்தகம் படிக்க விரும்புகிறீர்களா? Forfeit படியுங்கள். ஹீரோ ஒரு பத்திரிகையாளர். குதிரை ரேஸ் பந்தயத்தில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் வில்லன்கள். இவரை பல விதமாக மிரட்டிப் பார்ப்பார்கள், எதுவும் நடக்காது. கடைசியில் அவரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து அவர் மனைவியை கொல்வதாக மிரட்டுவார்கள். மிக பிரமாதமான சீன் அது. அந்த மாதிரி ஒரு சீன் எழுத வந்தால் நன்றாக இருக்கும்.

சிட் ஹாலி நாவல்கள் ஒரு நாலு இருக்கும். ஹாலி ஒரு முன்னாள் ஜாக்கி. குதிரைப் பந்தய விபத்தில் ஒரு கை போய்விடும். பிறகு ப்ரைவேட் டிடக்டிவாக மாறுவார். Odds Against , Whiphand இரண்டும் நல்ல நாவல்கள். Under Orders, Come to Grief இரண்டும் படிக்கலாம்.

எனக்கு கிட் ஃபீல்டிங் நாவல்கள் இரண்டும் பிடிக்கும். ஃபீல்டிங் ஒரு ஜாக்கி. Breakin மற்றும் Bolt. நன்றாக எழுதி இருப்பார்.

Nerve எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு நாவல். ஒரு ஜாக்கிக்கு நல்ல காலம் பிறக்கும். அப்போது ஒரு சிறு விபத்து. அதற்குப் பிறகு எந்த ரேசிலும் அவர் ஜெயிக்கமாட்டார். அவர் பயந்துவிட்டார் என்று ஒரு வதந்தி பரவும்.

நினைவு வரும் மற்ற நாவல்கள் – Banker, Enquiry, Bonecrack, High Stakes, Danger, Hot Money, Decider.

த்ரில்லர் பிடிக்க விரும்புவர்கள் நிச்சயமாக படித்துப் பாருங்கள்! படித்தவர்கள் உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தளங்கள், சுட்டிகள்:
டிக் ஃபிரான்சிசின் தளம்
நியூ யார்க் டைம்ஸ் ஆபிச்சுவரி


“நடந்தாய் வாழி காவேரி” புத்தகத்தை சாரதா வாங்கிய அனுபவமும் சுவையாக இருக்கிறது. வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் நேராக வாங்கி இருக்கிறார். பதிவின் நீளம் கருதி இதை தனியான பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு சாரதா!

இந்நூல் என்னை வந்தடைந்த கதை (போரடிக்காவிட்டால் படியுங்கள்)…

நான் திருமணத்துக்கு முன் ‘லார்ஸன் அண்ட் டூப்ரோ’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னை அண்ணா சாலையிலுள்ள ‘தேவநேயப்பாவாணர் அரசு மத்திய நூலக’த்தில் உறுப்பினர் அட்டை மூலம் நூல்கள் எடுத்துச் சென்று படிப்பது வழக்கம். அப்படி ஒரு முறை பார்த்துக் கொண்டு வந்தபோது, இடையிடையே புகைப்படங்களுடன் கூடிய ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற தலைப்பிட்ட தடிமனான புத்தகம் கண்ணைக் கவர, எடுத்து சில வரிகளைப் படித்தபோது மனதைக் கவரவே, உறுப்பினர் அட்டை மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கத் துவங்கியதும் அதில் கரைந்து மூழ்கிப் போனேன். திருப்பிக் கொடுக்க வேண்டிய ஒரு வாரத்துக்குள் மூன்று முறை படித்துவிட்ட எனக்கு, இது என்னிடம் இருக்க வேண்டிய புத்தகம் என்று தோன்றவே, பதிப்பகத்தின் பெயரைக் குறித்துக் கொண்டு திருப்பியளித்துவிட்டேன். அன்றிலிருந்து தினமும் மாலை பெரிய புத்தகக் கடைகளில் ஏறி இறங்கினேன். பூங்கா நகரிலுள்ள சி.எல்.எஸ். புத்தகக்கடை, அண்ணா சாலை ஹிக்கின்பாதம்ஸ் உள்பட பெரிய புத்தகக் கடைகள் எதையும் விடவில்லை. ஆனால் இந்த புத்தகம் கிடைக்கவில்லை (அதில் ஒரு சின்ன லாபம். நான் பல நாள் தேடிக் கொண்டிருந்த வேறு சில புத்தகங்கள் கிடைத்தன).

அலுவலகத்தில் என்னோடு பணியாற்றிய நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, நேரடியாக பதிப்பகத்துக்கே போய்க் கேட்டுப் பாரேன் என்றார். தி.நகர் தணிகாச்சலம் செட்டி சாலையிலுள்ளது என்றதும் அவருக்கு உற்சாகம். அதன் அருகிலுள்ள ராஜா தெருவில்தான் அவர் வீடு. நானும் வருகிறேன் என்று வந்தார். கதவிலக்கம் தெரியாததால் நடந்து போய்க்கொண்டிருந்தோம். வழியில் தமிழ்வாணன் அவர்களின் மணிமேகலைப் பிரசுரம் தென்பட்டது. ‘இவங்களும் பதிப்பாளர்களாதலால் இவங்க கிட்டே கேட்டுப் பார்’ என்று உள்ளே அனுப்பினார். அலுவலகத்தில் ஒருவர் மட்டும் இருந்தார். சுற்றிலும் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ‘வாங்கம்மா என்ன புத்தகம் வேணும்?’ என்றார், கனிவோடு. ‘இல்லீங்க சார், நான் இங்கே புத்தகம் வாங்க வரலை. புக்வெஞ்ச்சர் பப்ளிகேஷன்ஸ் எங்கே இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?’ அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை சட்டென்று எழுந்து வாசலுக்கு வந்தவர், ‘இப்படியே நேரா போனீங்கன்னா இந்தி பிரச்சார் சபா வரும். அதுக்கு எதிரில் ‘வாசகர் வட்டம்’ அப்படீன்னு ஒரு போர்டு போட்டிருக்கும். அதுதாம்மா’ ஆகா என்ன கனிவு என்ன அக்கறை. தமிழ்வாணன் இந்த விற்பனையாளரை எங்கே பிடித்தார்? இவருடைய கனிவுக்காகவே அடுத்த முறை மணிமேகலைப் பிரசுரம் வந்து ஏதாவது புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நண்பருடன் நடந்தேன். (அதன் பின் இன்னொரு நாள் அங்கு சென்று இரண்டு புத்தகங்கள் வாங்கியது வேறு கதை).

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

அவர் சொன்ன போர்டு தென்பட்டது வாசலில் காம்பவுண்டுக்குள் மரங்கள் நிறைந்த அழகான வீடு. கண்ணாடியணிந்த, பார்த்தாலே மதிக்கத் தக்க ஒரு அம்மா வந்து விசாரிக்க, ‘நடந்தாய் வாழி காவிரி’ புத்தகம் வேண்டும் என்றோம். ‘உட்காருங்க’ என்று சொன்னதோடு வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்களடங்கிய லிஸ்ட் ஒன்றையும் தந்துவிட்டு உள்ளே சென்றார். எங்கள் இருவரையும் தவிர இன்னொரு நடுத்தர வயதைக் கடந்த ஆள் மட்டும் இருந்தார். ‘எவ்வளவு கனிவா பேசுறாங்க’ என்று நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, அந்த இன்னொரு ஆள் சொன்னார் ‘இவங்கதான் தியாகி சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமியம்மா’. இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் மூழ்கினேன். எவ்வளவு சிம்பிளா இருக்காங்க..!!. அவங்க புத்தகத்தோடு அறையிலிருந்து வெளியில் வந்தபோது என்னையறியாமல் எழுந்து நின்று கைகூப்பினேன் ‘நீங்க யாருன்னு எனக்கு இப்போதான் தெரியும்’ என்று சொன்னதும் அழகான சிறிய புன்னகையோடு ‘உட்காருங்க’ என்று சொல்லிவிட்டு பில் போட ஆரம்பித்தார். இப்போது நினைத்தாலும், லட்சுமியம்மா அவர்களை அன்று பார்த்த தோற்றம் மனதில் நிழலாடுகிறது.

சமீபத்தில் ஹிந்துவில் பெண் பதிப்பாளர்களைப் பற்றி ஒரு கட்டுரையில் லக்ஷ்மியைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு quote:

We were not good at marketing. If people burn their fingers, we burnt our arm!

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:

தி. ஜானகிராமன் + சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” – சாரதா அறிமுகம் செய்கிறார்
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய பதிவுகள்:
வாசகர் வட்டம் உருவாக்கி நேர்த்தியான புத்தகங்களை பதிப்பித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (Lakshmi Krishnamoorthi)
சமீபத்திய ஹிந்து கட்டுரை
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
விகடனில் அளித்த இன்னொரு பேட்டி
காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி
சாரதாவின் பிற பதிவுகள்:
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம்

சாரதாவுக்கு அறிமுகம் தேவை இல்லை. அவருடைய சினிமா விமர்சனங்களை அவார்டா கொடுக்கறாங்க தளத்தில் ஏற்கனவே பதிப்பித்திருக்கிறேன். தி. ஜானகிராமன் மற்றும் சிட்டி இணைந்து எழுதிய travelogue – பயண நூல் – “நடந்தாய் வாழி காவேரி” தமிழில் எழுதப்பட்ட பயண அனுபவங்களிலேயே மிகச் சிறந்தது எனக் குறிப்பிடப்படும் புத்தகம். தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக் கரையோரமாக பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும் எழுதியிருக்கிறார்கள். இது வாசகர் வட்டம் பதிப்பித்த புத்தகம். இப்போது காலச்சுவடு மறுபதிப்பு செய்திருக்கிறதாம். இதற்கு சாரதா எழுதிய மதிப்புரை கீழே.

Thi. Janakiraman

Chittiசென்னை தி.நகர் ‘வாசகர் வட்டம்’ குழுமத்தைச் சேர்ந்த திருவாளர்கள் சிட்டி, மற்றும் தி.ஜானகிராமன் இணைந்து எழுதிய இது போன்ற அற்புத நூலுக்கு மதிப்புரை எழுதும் தகுதியெல்லாம் எனக்கு வந்துவிடவில்லையாதலால், இதை மதிப்புரை எனக் கொள்ள வேண்டாம். நூலைப் படித்து வியந்த (வியக்கும்) ஒரு வாசகி/ரசிகையின் எண்ணத்தில் உருவான சில வரிகள் எனக் கொள்ளலாம். இந்நூல் என்னை வந்தடைந்ததே ஒரு சுவையான கதையென்றாலும், அதை பின்னூட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நேரடியாக உள்ளே.

முன்பு வெளிநாட்டு பயணக் கட்டுரைகள் என்றாலே விரும்பிப் படிக்கும் ஆர்வம் கொண்ட எனக்கு சிறிது காலத்திலேயே அவை கிட்டத்தட்ட ஒரே நோக்கில் (தமிழில்: ஸ்டீரியோடைப்) பயணித்து சலிப்பைத் தருகின்றனவோ என்று தோன்றத் துவங்கிவிட்டது. பிரம்மாண்டமான விமான நிலையங்கள், உயரமான கட்டிடங்கள், கட்டுரையாளர் உணவகங்களில் சைவம் கிடைக்காமல் அவதிப்பட்டது, அங்குள்ள தமிழ்க் குடும்பங்களின் ஆதரவு, உபசாரம் மற்றும் உதவிகள், அவற்றுக்கு நன்றிக்கடனாக அவர்களைப் பற்றி சில வரிகள் அல்லது சில பக்கங்கள் (உதவியின் அளவைப் பொறுத்து), இப்படியாக சலிப்பைத் தந்த வேளையில், தமிழ்நாட்டுக்குள்ளேயே (மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில்) பயணித்து எழுதப்பட்ட, வழக்கமான வரைமுறைகளை மீறி, சரியாகச்சொன்னால் அவற்றுக்கு அப்பாற்பட்டு, கையில் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாத அளவுக்கு ஒரு தேர்ந்த நாவலையும் தோற்கடிக்கும் சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ எனும் இந்நூலின் துவக்கமே அருமை.

சில இடங்களின் வர்ணனைகள் நூல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை சார்ந்தது, இப்போது மாறியிருக்கலாம். ‘மாயவரத்தின் பிரதான சாலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் ஒரு மண் சாலையில் ஒரு கைகாட்டி ‘காவேரிப்பட்டினம்’ என்று காட்டிக் கொண்டிருக்க அது சோழர்களின் துறைமுகமான ‘காவிரி புகும் பட்டினம்’ செல்லும் சாலையெனத் தெரிகிறது. ஒரு காலத்தில் துறைமுகத்திலிருந்து தலைநகர் உறையூர் செல்ல அமைக்கப்பட்ட நேர் சாலை இப்போது மணல் சாலையாக, இரு பக்கமும் கருவேல மரங்கள் தோரணம் கட்டி நிற்க, சிள்வண்டுகளை இரைய விட்டிருக்கிறது’ என்ற துவக்கமே நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. காவிரியை, தலை முதல் கால் வரை நேரில் கண்டு ரசிக்கும் ஒரு பயணம் மேற்கொண்டால் என்ன என்று தோன்றியதாகச் சொல்லும் நூலாசிரியர்கள், ‘செயற்கைக் கோள்கள் சந்திரனையும் சுக்கிரனையும் வலம் வந்துகொண்டிருக்கும் இந்த விஞ்ஞான யுகத்தில் இதென்ன விபரீத எண்ணம்?’ என்று தோன்றியதையும் ஒப்புக் கொள்கிறார்கள். சென்னையிலிருந்து தனி வாகனத்தில் நண்பர்கள் சிலருடன் புறப்படும் அவர்கள் நேராகச் செல்வது சீரங்கப்பட்டணத்துக்கு. அதிலிருந்து காவிரிக் கரையூடாகவே செல்லும் அவர்கள் குடகு மலையை அடைந்து, மெர்க்காராவில் தலைக் காவிரியிலிருந்து, பயணித்து வருவதாக சம்பவம்.

ஆனால் அதை அவர்கள் வரி வரியாக விளக்கும் முறையில், நாம் நூலைப் படிப்பதாகத் தெரியாது. அந்த வாகனத்தின் முன்வரிசையில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டே வருவதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அங்கங்கே வரம்பு மீறாத இயல்பான நகைச்சுவை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும். தலைக்காவிரியை நோக்கிப் போகும்போது, ‘சித்தாப்பூர் என்னும் ஊரில் வர்ணா பாம்புகள் அதிகம்’ என்று ஒரு புத்தகத்தில் படித்துவிட்டு பயந்துகொண்டே அந்த ஊருக்குள் நுழைய, வர்ணாவும் இல்லை பாம்பும் இல்லை. வர்ணம் அடித்த வீடுகளும் கடைகளும் தென்பட, காருக்கு தீனி வாங்கும் இடத்தில் அங்கிருந்தவனிடம் வர்ணா பாம்பு எங்கே என்று கேட்க, அவன் பேந்த பேந்த விழித்துவிட்டு, தான் பிறந்ததிலிருந்து ஒரு பாம்பைக் கூட அங்கு பார்த்ததில்லை என்றும், பாம்பாட்டியின் கூடையில்தான் பார்த்திருப்பதாகவும் விளக்கும் இடம் ஒரு உதாரணம். அதைப் படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மெர்க்காராவில் மேகமூட்டங்களுக்கு மத்தியில் நுழைந்து பயணம் செய்யும்போதும், திடீரென பிடித்துக் கொள்ளும் மழையில் நனைந்து கொண்டே பொருட்களை இறக்கும்போதும், நாமும் நனைகிறோம். ஆடுதாண்டு காவிரியைக் காணும்போதும், பண்ணேர்கட்டா பண்னையில் தங்கும்போதும் அப்படியே. ஒகேனக்கலில் ஒரு மன்னார்குடி மாமியின் குடிசை உணவகத்தில் மிளகாய் வத்தல் குழம்பு சாப்பிடும்போதும் நாமும் அதை அனுபவிக்கிறோம். நூலாசிரியர்களின் எழுத்து வன்மை அத்தகையது. அவற்றின் சுவையை பாமரத்தியான எனக்கு சொல்லத் தெரியவில்லை. காவிரித் தாயின் இதயமான மேட்டூர் அணை பற்றி மட்டுமல்ல, அங்கங்கே உள்ள தடுப்பணைகள் பற்றியும் கூட சுவையான தகவல்கள். வழியில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடிலில் பெறும் சுவையான அனுபவங்கள். எதைச் சொல்வது, எதை விடுவது. காவிரியோடு கொள்ளிடம் கண்ட அனுபவங்களைச் சொல்லும்போது, அருகே அமைந்துள்ள கங்கைகண்ட சோழபுரத்துக்கும் ஒரு கிளைப்பயணம் (‘விஸிட்’ என்று சொன்னால் சட்டென விளங்கும் அளவுக்கு ஆங்கிலம் நம் மீது அமர்ந்துவிட்டது). அந்த அத்தியாயம் துவங்குவதே ஒரு அழகு.

‘தொலைவில் நரைநிறத்தில் கோபுரம் தெரியும்போதே மனம் நெகிழத் துவங்கிவிடும். அங்கே செல்லும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் அனுபவம். ராஜேந்திர சோழன் ஏன் இதைக் கட்டினான்? தஞ்சையில் ராஜராஜேச்சுரத்தை தந்த தந்தையை மிஞ்சவா? அப்படியானால் அபாரமாகத் திட்டமிட்ட கோபுரத்தை ஏன் பாதியில் மழித்துக் குட்டையாக்கினான்? எந்த தோல்வி, அல்லது உணர்வு அவனைத் தடுத்தது? வளமான காவிரிக்கரையை விட்டு வறண்ட இப்பகுதியில் ஏன் இதைக் கட்டினான்? இப்பகுதி மக்களுக்கும் ஒரு அக வாழ்வைத் தரவா?’ இப்படி நீண்டு செல்லும் நூலாசிரியர்களின் விளக்கம், பின்னர் கொள்ளிடத்தில் மேலணை கீழணை கட்ட கற்களூக்காக பிரிட்டிஷ் அரசாங்கம், இக்கோயிலின் ராஜ மதிலைத் தகர்த்து கருங்கற்களை எடுத்துச் சென்ற சோகத்தைச் சொல்லும்போது நம் மனமும் அழும். (இன்றைக்கும் ராஜ மதிலின்றி, திறந்த கோயிலாகத்தான் நிற்கிறது கங்கை கொண்ட சோழீச்சுரம்).

கல்லணையில் துவங்கி பிரியத் துவங்கிய காவிரியின் கிளையாறுகள், தண்ணீரைப் பிரித்து எடுத்துச்செல்ல, கும்பகோணம் வரும்போதே காவிரி சிறுத்துவிடுகிறது. எனவே, கும்பகோணத்துக்கு கிழக்கே வீரசோழன் கிளைக்கும்போது, ‘காவிரி தந்து, தந்து மெலிந்துகொண்டே போவதைப் பார்க்கும்போது நம் மனதில் சோகம் தலை தூக்குகிறது’ என்று நூலாசிரியர்கள் எழுதும்போது நம் மனதையும் அந்த உணர்வு அழுத்துகிறது. காவிரிக் கரையில் வளர்ந்த கலாச்சாரம்தான் எத்தகையது, பண்பாடுதான் எவ்வளவு உன்னதமானது! குழாயிலும்தான் தண்ணீர் வருகிறது. அதுவே ஆற்றில் ஓடும்போது இப்படியா பாட்டாகக் கேட்கும், இசையாக மலரும், பண்பாடாக வளரும், கோயிலாக உயரும்!

ஆயிரம் தடுப்புக்களில் இன்று காவிரி சிறைப்பட்டிருக்கலாம். ஆனால் அன்றைக்கு கல்லணை கூட கட்டப்படாத நிலையில் கரை புரண்டு ஓடிய காவிரியைப் பார்த்து இளங்கோவடிகள் ஆர்ப்பரித்தது போல இந்நூலைப் படித்த பின் நமக்கும் ஆர்ப்பரிக்கத் தோன்றுகிறது.
‘காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்’

“நடந்தாய் வாழி காவேரி” புத்தகத்தை சாரதா வாங்கிய அனுபவமும் சுவையாக இருக்கிறது. வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் நேராக வாங்கி இருக்கிறார். பதிவின் நீளம் கருதி இதை தனியான பதிவாக போடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு, ஊர் சுற்றல்

தொடர்புடைய பதிவுகள்:

சிட்டி:
சிட்டியின் ப்ளாக் – அவர் மறைவதற்கு ஒரு ஆறேழு மாதம் முன்னால்தான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.
சிட்டியைப் பற்றி ஹிந்து நாளிதழில்

சாரதாவின் பிற பதிவுகள்:
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம்

Si.Su. Chellappaஅழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையைப் படித்தபோது ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதை நினைவு வந்தது. பிதாமகன் சினிமாவும் நினைவு வந்தது. ஒரே காட்சிதான் – சுடுகாட்டு வெட்டியான் பிணத்தை எரித்துக் கொண்டும் குத்திக் கொண்டும் ஆனந்தமாக பாட்டு பாடுகிறான். செல்லப்பாவுக்கு பிணத்தை எரிப்பது வெட்டியானுக்கு வெறும் வேலை, அவனுக்கும் காதல் உண்டு, பாசம் உண்டு, அவை எல்லாம் அடுத்தவர் பிணம் பின்புலமாக இருக்கும்போதும், இறந்தவர் குடும்பம் சோகத்தில் மூழ்கி இருக்கும்போதும் கூட (பாட்டாக) வெளிப்படும் என்ற தரிசனம் கிடைக்கிறது. ஜெயகாந்தன் கதையில் தரிசனம் கிடைப்பது வெட்டியானுக்கு; அவன் மகன் இறக்கும்போதுதான் மயானம் துக்கம் நிறைந்த இடம் என்பதை அவன் உணர்கிறான். அது வரையில் அவனும் மயானத்தில் ஜாலியாக “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” என்று பாடிக்கொண்டு இருக்கிறான். பிதாமகனிலும் அதே கண்டுபிடிப்புதான் – விக்ரமுக்கு சாவு எவ்வளவு கொடுமையானது என்பது சூர்யா காரக்டர் இறந்த பிறகுதான் தெரிகிறது. அது வரை அவனும் பிணத்தை எரிக்கும்போது பாடிக்கொண்டுதான் இருக்கிறான். ஒரே காட்சி, மூன்று சித்தரிப்புகள். நன்றாக இருக்கிறது!

செல்லப்பாவின் கதையை பதித்த அழியாச்சுடர்கள் தளத்துக்கு நன்றி!

நண்பர் ஸ்ரீனிவாஸ் அனுப்பிய மறுமொழியிலிருந்து: சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்)

ஜெயகாந்தனின் சிறுகதையான ‘நந்தவனத்திலோர் ஆண்டி’ க்கும், ‘பிதாமகன்’ கதைக்கும் ஒற்றுமை உள்ளதைக் கவனித்தீர்களா?’ என்று கேட்டு எனக்கு அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் ஒரு நேயர்.

இதில் இரண்டு விஷயம் எனக்கு உற்சாகமளித்தது. ‘பிதாமகன்’ போன்ற படங்களை உடனே அமெரிக்காவிலும் பார்த்துவிடுகிறார்கள். ஜெயகாந்தன் கதைகளையும் படித்திருக்கிறார்கள் அமெரிக்காவில் உள்ளவர்கள்.

‘நந்தவனத்திலோர் ஆண்டி’ ஜெயகாந்தன், ஆரம்ப காலத்தில் ‘சரஸ்வதி’ இதழில் எழுதிய சிறுகதை. இதுவும் ஒரு வெட்டியானின் கதைதான். இதன் ஆதாரக் கருத்து — தினம் தினம் குழந்தைகளைப் புதைப்பதால் துக்கம் மரத்துப் போய், எவ்வித வருத்தமும் காட்டாமல் சித்தர் பாட்டை அர்த்தம் புரியாமல் முணுமுணுப்பவன் (இவனுக்குக் குடும்பம் உண்டு). இடுகாட்டிலேயே பிறந்த தன் மகனை இழந்ததும்தான், தான் புதைத்த ஒவ்வொரு பிணத்தின் பின்னாலும் சோகம் இருப்பது புரிந்து, எல்லாச் சாவுக்கும் கதறி அழுகிறான் என்பது.

ஜெயகாந்தன் கதையில் கஞ்சா கடத்தல், சூர்யா போன்ற நண்பர்கள் எதும் கிடையாது. ‘பிதாமகன்’ அந்தக் கதையினால் inspired என்று வேண்டுமெனில் சொல்லலாம்.

அப்படிப் பார்த்தால், அரிச்சந்திரன் கதை கூட அதற்கு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். ‘ரோஜா’ வை ‘சத்தியவான் சாவித்ரி’ கதையிலிருந்து தட்டியது என்று சொல்லலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை
சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல், வாடிவாசல் பற்றி அழியாச்சுடர்கள் தளத்தில்


அமெரிக்காவில் வாட்டர் கூலர் டாக் என்று சொல்வார்கள். தண்ணீர் குடிக்கும்போது சக பணியாளர்களிடம் என்ன பேசுவீர்கள்? நம் ஊரில் நான் வேலை செய்த வரைக்கும் சினிமா, கிரிக்கெட், சில சமயம் அன்றைக்கு பரபரப்பான செய்திகள். இப்போது டிவியும் இருக்கும், குறிப்பாக பெண்கள், அதுவும் ஆன்டிகள் பேசும்போது நேற்று சீரியலில் என்ன நடந்தது என்று பேசுவார்கள் என்று நினைக்கிறேன். (யாராவது நாலு பெண்கள் போடா MCP, பெண்களை ஸ்டீரியோடைப் செய்யாதே என்று எழுதுங்கம்மா!)

வாரப் பத்திரிகைகளில் தொடர்கதை என்பது எண்பதுகள் வரைக்கும் கூட மிக பாப்புலரான ஒன்று. அப்போதெல்லாம் டிவி சீரியலுக்கு பதிலாக அதுதான் பேசப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என் அம்மா பேசியது எனக்கே தெரியும். பாலகுமாரன் இந்த வாரம் கரையோர முதலைகளில் என்ன எழுதினார், சிவசங்கரியின் தொடர்கதையில் அருண் அவன் நண்பனின் மனைவியிடம் தன் “காதலை” சொல்வானா (கதை பேர் நினைவில்லை, ஆனால் இந்த அருண்தாங்க எனக்கு கண்டாலே ஆகாது, ரொம்ப நல்லவரு!), இன்னும் ஒரு பத்து வருஷம் முன்னால் மணியன், அகிலன், நா.பா. என்ன எழுதுவார் என்று பேசியது இன்றைக்கு ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த வாரத் தொடர்கதை formatஐ மீறி இலக்கியம் உருவாவது கஷ்டம். ஒரு ஃபார்முலா இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பம் இருக்க வேண்டும். அந்த திருப்பம் அடுத்த ஐந்து நிமிஷத்தில் மறந்துவிடுகிற மாதிரி இருக்கலாம், ஆனால் திருப்பம் இருந்தே ஆக வேண்டும். ஒரு வாரம் கழித்துதான் அடுத்த இன்ஸ்டால்மென்ட் வரும், அதற்குள் போன வாரம் படித்தது மறந்துவிடும். அதனால் போன வாரம் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். சாண்டில்யன்தான் இதை ஏறக்குறைய ஒரு மெக்கானிகல் ப்ராசஸ் ஆகவே மாற்றினார். முதல் இரண்டு பக்கம் போன வாரம் என்ன நடந்தது, அடுத்த இரண்டு பக்கம் போன வார திருப்பத்தைப் பற்றி, கடைசி இரண்டு பக்கம் கதவைத் திறந்தான், அதற்கு பின்னால் நின்றவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் (பின்னால் நிற்பவர் ஒரு பைசாவுக்கு பெற மாட்டார்) என்று எழுதுவார். கோப்பெருந்தேவி எங்கே என்று ஒரு சிறுகதை உண்டு. இந்த மாதிரி எழுத்தை பகடி செய்து எழுதப்பட்டது. அது ஒரு தொடர்கதையின் ஒரு வார இன்ஸ்டால்மென்ட் – கதை பூராவும் குதிரை மேல் உட்கார்ந்துகொண்டு கோப்பெருந்தேவி எங்கே எங்கே என்று யோசிப்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. தொடர்கதை முழு நாவலாக வரும்போது இந்த வாரம் ஒரு திருப்பம் ஃபார்முலாவின் குறை மிக நன்றாகத் தெரியும்.

இலக்கியம் உருவாவது கஷ்டம் என்றாலும் சுவாரசியம் குறையாமல் எழுதுபவர்கள் உண்டு. சுஜாதாவை குறிப்பாக சொல்லலாம். கல்கி இதில் நிபுணர். ரா.கி. ரங்கராஜன், ஏ.எஸ்.பி. அண்ணாமலை, பி.வி.ஆர். மாதிரி சில மறக்கப்பட்ட எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதக் கூடியவர்கள். அகிலன், நா.பா. போன்றவர்கள் மிக பிரபலமாக இருந்தவர்கள். லக்ஷ்மி, சிவசங்கரி, மணியன், இந்துமதி, பாலகுமாரன் மாதிரி பலர் பெண்கள், அதுவும் ஆன்டிகள் மனதை கவர்ந்தவர்கள்.

தேவன் சில சமயம் இந்த ஃபார்முலாவை தாண்டி இருக்கிறார். அவரது ஸ்ரீமான் சுதர்சனம் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் பணக் கஷ்டங்களை தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவார். ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஒரு கிளாசிக். துப்பறியும் சாம்பு ஃபார்முலாதான், ஆனால் மிக சுவாரசியமான புத்தகம். தேவன் பி.ஜி. வுட்ஹவுஸ் மாதிரி எழுதக் கூடியவர். ஆனால் வுட்ஹவுஸ் வார்த்தைகளில் விளையாடி நம்மை சிரிக்க வைப்பார். தேவன் சிசுவேஷனல் காமெடி எழுதுகிறார். சில சமயம் புன்னகைக்கிறோம்.

Gomathiyin Kadhalanதேவனின் கோமதியின் காதலன் ஃபார்முலா தொடர்கதைதான். விகடனின் பக்கங்களை நிரப்ப எழுதப்பட்ட ஒரு தொடர்கதை. இலக்கியம் நிச்சயமாக இல்லை. ஆனால் அந்த காலத் தொடர்கதைகள் எப்படி இருந்தன என்று நமக்கு அழகாக காட்டுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு quote உடன் ஆரம்பிக்கிறார். திருப்பம் வாராவாரம் உண்டு.

பல வருஷமாக சொல்லப்படும் கதைதான். ரங்கராஜன் தன் பேரை மாற்றிக் கொண்டு நாயகி வீட்டில் வேலைக்கு சேர்கிறான். அங்கே நான்தான் ரங்கராஜன் என்று சொல்லிக்கொண்டு மணி வருகிறான். ஆள் மாறாட்டம், காதல் என்று கதை போகிறது. உள்ளத்தை அள்ளித் தா படம் பார்த்ததில்லையா நீங்கள்? ஏறக்குறைய அந்த மாதிரி கதைதான்.

கதை முக்கியமே இல்லை. ஆனால் தேவன் காட்டும் ஒரு உலகம் – உயர் மத்திய வர்க்கம், பிராமணக் குடும்பம் (அப்பா மிராசுதார், மாமா ஜட்ஜ் இந்த மாதிரி) உண்மையாக இருக்கிறது. கதையின் சிறப்பான அம்சம் அதுதான். அதில் வரும் சின்ன காரக்டர்கள், அறிவிப்புகளை சொல்லிக் கொண்டே இருக்கும் சிறுவன், எதுகை மோனை பேசி பேசி தட்சணை கேட்கும் பிராமணர், சண்டை போடும் அண்ணன், ஊரிலிருந்து வரும் கணக்குப்பிள்ளை பையன் எல்லாம் சுவாரசியமான காரக்டர்கள்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

கோமதியின் காதலன் டி.ஆர். ராமச்சந்திரன், சாவித்திரி நடித்து படமாகவும் வந்தது. ஓடவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>படிப்பு

தொடர்புடைய பதிவுகள்: தேவன் பற்றி சுஜாதா

அடுத்த பக்கம் »