rmv1

2009 தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்

ஆர்எம்வி தன் அறையில் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு எதையோ மும்முரமாக தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆர்எம்வி: (தனக்கு தானே) இந்த வீட்ல எதுவும் வச்சது வச்ச இடத்தில இருக்காது. எல்லாத்தையும் கலைச்சு போட்ருவாங்க. ஆச்சி! ஆச்சி!

அவரது மனைவி சலித்துக் கொண்டே வருகிறார்.
மனைவி: நல்ல அளகான வள்ளியம்மைன்ற பேரை விட்டுட்டு ஆட்சி என் கையில சொல்லிக்கறத்துகாகவே என்னை ஆச்சி ஆச்சின்னு கூப்பிடுறாஹ.

மனைவி: என்னங்க?
ஆர்எம்வி: இங்க வச்சிருந்த பேப்பர் எல்லாம் எங்க போட்டே?
மனைவி: என்னா பேப்பர்?
ஆர்எம்வி: அதன் 1998-இலிருந்து நியூஸ்பேப்பர் எல்லாம் இங்க அடுக்கி வச்சிருந்தனே?
மனைவி: அட என்னாங்க? பத்து வருஷம் பழைய பேப்பரை தேடிக்கிட்டு? தூசி பறக்குதுன்னு அதையெல்லாம் தூக்கி எடைக்கு போட்டுட்டேன்.
ஆர்எம்வி: அடிப்பாவி! காரியத்தை கெடுத்திட்டியே! இப்ப என்ன செய்யறது?
மனைவி: இப்போ என்னா ஆயிடுச்சு? என்னவோ உங்க அம்மா எனக்கு கொடுத்த நகையெல்லாம் தூக்கி போட்டுட்ட மாதிரி பேசரீயளே! அதுவும் உங்க அம்மா எனக்கு நகை கிகை கொடுத்துற கிடுத்துறப் போறாங்க! உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டேன்?
ஆர்எம்வி: சரி சரி ஆரம்பிக்காத! எல்லா பேப்பரையும் போட்டுட்டியா? 2006-ஆம் வருஷ பேப்பர் கூட?
மனைவி: அட இது என்னடா வம்பா போச்சு? அதை வச்சு என்ன பண்ணப் போறீங்க?
ஆர்எம்வி: அது இல்ல, கலைஞர் வழக்கம் போல இதயத்தில மட்டும்தான் இடம் கொடுக்கப் போறாரு. மீண்டும் இதயத்தில் மட்டுமே இடம் என்பது ஏமாற்றமே, அடுத்த முறையாவது சீட் கொடுங்கள் என்று பழைய எலெக்ஷன் சமயத்தில் விட்ட அதே அறிக்கையையே திருப்பி கொடுத்திடலாம்னு பாத்தேன். ஒவ்வொரு முறையும் புதுசு புதுசா எழுதி கொடுக்கறதுக்கு தனியா பணம் தரணுமில்லெ?
மனைவி: செட்டியாரு பணத்தில கெட்டிதான்.
ஆர்எம்வி: இல்லாமலா எம்ஜிஆர் கிட்ட இத்தன வருஷம் குப்பை கொட்டினேன்?
மனைவி: இதிலெல்லாம் சிக்கனம் பாக்காதீங்க. இதயத்தில் இடம் என்பதை மாற்றுவார் உதயம் அப்படின்னு ஏதாவது புதுசா எழுத சொல்லுங்க. அப்பத்தான் ஸ்டாலின் பிள்ள உதயநிதி தி.மு.க. தலைவராகும்போதாவது உங்களுக்கு சீட் கொடுப்பாங்க!

முன் வந்த பதிவுகள்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்