இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சுப்ரமணிய சாமி சிலிகான் பள்ளத்தாக்குக்கு வந்திருந்தார். அவரோடு நண்பர் வீட்டில் நாலைந்து பேர் சந்தித்தோம். பிறகு அவரோடு ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு முப்பது பேர் சேர்ந்து இரவு உணவு. அடுத்த நாள் அவரது பேச்சு மற்றும் கேள்வி பதில் செஷன் ஒன்று. ஒரு அறுபது எழுபது பேர் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் இன்னொரு உரை ஆற்ற சென்று கொண்டிருந்தார். ஏற்பாடு செய்திருந்த பாரதி தமிழ் சங்கம், அதன் தலைவர் ராகவேந்திரன், நண்பர் ராஜன் எல்லாருக்கும் நன்றி!

சாமி கேலிக்குரிய விதத்தில் பேசுபவர் (இன்னும் கடுமையான வார்த்தைகளை நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்), இந்திய அரசியலில் ஒரு irrelevant ஆளுமை என்றுதான் எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. இல்லை. நிச்சயமாக இல்லை. அதிபுத்திசாலி. இந்திய அரசியலை மாற்ற தன்னால் முடிந்த எல்லா விதத்திலும் போராடுபவர், ஆனால் போராடும் வழிகளில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் இப்போது தோன்றுகிறது. அவருடைய காம்ப்ரமைஸ்களைப் பற்றி எனக்கு கடுமையான விமர்சனம் இருக்கிறது.

எனக்கு சாமியின் “கொள்கைகள்” பற்றி இதற்கு முன்னால் எதுவும் தெரியாது. உண்மையை சொல்லப் போனால் நான் சாமியை சீரியஸாக எடுத்துக் கொண்டதே இல்லை. காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பு, அதனால் அவர் எழுதிய கட்டுரை ஏதாவது கண்ணில் பட்டாலும் படிப்பதில்லை. சுப்ரமணிய சாமி என்ற பேரைப் பார்த்தாலே தானாக ஸ்விட்ச் ஆஃப். ஆனால் வினவு தளத்தில் முதல் முதலாக நான் சண்டை போட்டது அவர் மேல் முட்டை வீச்சு சம்பவம் நடந்து, அதற்கு அவர்கள் ஆஹா! ஜனநாயக முறைப்படி, மக்கள் விருப்பத்தை சாமி மேல் முட்டை வீசி நிறைவேற்றினோம் என்று முட்டாள்தனமாக குதித்தபோதுதான். சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடக் கூடாது என்று சொல்ல எந்த தீட்சிதருக்கும் உரிமை இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஆனால் தீட்சிதர்களுக்கு அந்த உரிமை உண்டு என்று சொல்லவும் எல்லாருக்கும் கருத்துரிமை உண்டு; அப்படி சொல்பவர்கள் மேல் முட்டை வீசுபவர்கள் தண்டனை அடைய வேண்டியவர்களே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் எனக்கு அவரது கருத்துகளைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் அவர் தீட்சிதர்கள் கண்ட்ரோலில்தான் சிதம்பரம் கோவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பது மட்டுமே. சரி அதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதையாவது புரிந்து கொள்வோமே என்று நினைத்துதான் போனேன்.

அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். டையோ என்னவோ, தலை நிறைய கறுபபு முடி. (நான் புதிதாக ஒரு ஆணை சந்தித்தால் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்றுதான் முதலில் பார்ப்பேன். சொந்தக் கதை சோகக் கதை.) ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தொந்தி தொப்பை இல்லை. சிரித்த முகம். மேட்டுக்குடி ஆள் என்று தோன்ற வைக்கும் முகம், நிறம், தோற்றம், நடை உடை பாவனை. அதிரடி பேச்சு. குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. கேள்விகள் எரிச்சல் மூட்டும்போது எரிச்சலை polished ஆக வெளிப்படுத்தும் லாவகம். தான் ஒரு பெரிய மனிதர், முன்னாள் மந்திரி என்றெல்லாம் எந்த வித hangup-உம் இல்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எடுத்த ஒரு ஃபோட்டோவை காட்டினார். அதில் அவர் பாடம் நடத்துகிறார், போர்டில் என்னவோ சிக்கலான ஈக்வேஷன்கள். நான் ஈக்வேஷன்கள் சிக்கலாக இருக்கிறது என்று ஒரு சம்பிரதாய கமென்ட் விட்டேன். அவர் ஓ அதெல்லாம் வெறும் ஐகன் வால்யூக்கள் என்று சொன்னார். ஐகன் வால்யூ பற்றி தெரிந்த ஒரு அரசியல்வாதியா என்று எனக்கு கொஞ்சம் புல்லரித்தது!

நோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சனின் மாணவர். சாமுவெல்சனோடு இணைந்து பேப்பர்கள் எழுதிய ஐந்து பேர்களில் ஒருவர். சாமுவெல்சன் இவர் அடுத்த ஜெனரேஷனில் பேசப்படும் எகானமிஸ்டாக வருவார் என்று சொல்லி இருக்கிறாராம். கோடைக் காலத்தில் ஹார்வர்டில் ஒரு Mathematical Methods for Economics என்று ஒரு கோர்ஸ் நடத்துகிறாராம். சிலபஸில் Calculus of Variations , Multivariate Calculus எல்லாம் உண்டாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனால் இது ஒரு undergraduate கோர்ஸ் என்றுதான் நினைக்கிறேன். இதை நடத்த பெரும் மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நடத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏன் இந்தியாவிலிருந்து ஒருவரை வரவழைக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. என்னவோ.

வந்தபோதே களைத்திருந்தார். ஒரு பத்து நிமிஷம் தூங்கினார். பிறகு எழுந்து வந்தவர் எங்களுடன் பேச ஆரம்பித்தார். பல அதிரடி கேள்விகளை கேட்டார் – சோனியா காந்தி தான் கேம்ப்ரிட்ஜில் படித்தவர் என்று பொய் affidavit தாக்கல் செய்திருக்கிறாராம், ஆனால் அதை ஊடகங்கள் அமுக்கிவிட்டனவாம். மிட்ரோகின் என்ற கேஜிபி அதிகாரி சோனியா கேஜிபியிடம் பணம் வாங்கினார் என்று எழுதி இருக்கிறாராம். ஆனால் பா.ஜ.க. அரசு கூட அதைத் தோண்ட மறுத்துவிட்டதாம். இப்படி பல விஷயங்களை சொன்னார். ஏன் பா.ஜ.க. அரசு இவற்றை பயன்படுத்தி சோனியா காந்தியை ஒழிக்காமல் விட்டுவிட்டது என்று கேட்டேன். இதற்கு பதில் சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அதைப் பற்றி பேச மறுத்துவிட்டார்.

பதிவு நீண்டுகொண்டே போவதால் இங்கே நிறுத்திக்கொண்டு ரெஸ்டாரண்டில் என்ன பேசினார் என்று நாளை தொடர்கிறேன்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
தொடர் பதிவின் பகுதி 2, பகுதி 3, , பகுதி 4
சிலிகான் பள்ளத்தாக்கில் சுப்ரமணிய சாமி
சுப்ரமணிய சாமி பற்றிய விக்கி குறிப்பு
சுப்ரமணிய சாமியை கிண்டல் அடித்து நான் எழுதிய ஒரு பதிவு, இன்னொரு பதிவு (சாமி என்னை மன்னிப்பாராக!)
பாரதி தமிழ் சங்கம்