இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சுப்ரமணிய சாமி சிலிகான் பள்ளத்தாக்குக்கு வந்திருந்தார். அவரோடு நண்பர் வீட்டில் நாலைந்து பேர் சந்தித்தோம். பிறகு அவரோடு ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு முப்பது பேர் சேர்ந்து இரவு உணவு. அடுத்த நாள் அவரது பேச்சு மற்றும் கேள்வி பதில் செஷன் ஒன்று. ஒரு அறுபது எழுபது பேர் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் இன்னொரு உரை ஆற்ற சென்று கொண்டிருந்தார். ஏற்பாடு செய்திருந்த பாரதி தமிழ் சங்கம், அதன் தலைவர் ராகவேந்திரன், நண்பர் ராஜன் எல்லாருக்கும் நன்றி!

சாமி கேலிக்குரிய விதத்தில் பேசுபவர் (இன்னும் கடுமையான வார்த்தைகளை நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்), இந்திய அரசியலில் ஒரு irrelevant ஆளுமை என்றுதான் எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. இல்லை. நிச்சயமாக இல்லை. அதிபுத்திசாலி. இந்திய அரசியலை மாற்ற தன்னால் முடிந்த எல்லா விதத்திலும் போராடுபவர், ஆனால் போராடும் வழிகளில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் இப்போது தோன்றுகிறது. அவருடைய காம்ப்ரமைஸ்களைப் பற்றி எனக்கு கடுமையான விமர்சனம் இருக்கிறது.

எனக்கு சாமியின் “கொள்கைகள்” பற்றி இதற்கு முன்னால் எதுவும் தெரியாது. உண்மையை சொல்லப் போனால் நான் சாமியை சீரியஸாக எடுத்துக் கொண்டதே இல்லை. காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பு, அதனால் அவர் எழுதிய கட்டுரை ஏதாவது கண்ணில் பட்டாலும் படிப்பதில்லை. சுப்ரமணிய சாமி என்ற பேரைப் பார்த்தாலே தானாக ஸ்விட்ச் ஆஃப். ஆனால் வினவு தளத்தில் முதல் முதலாக நான் சண்டை போட்டது அவர் மேல் முட்டை வீச்சு சம்பவம் நடந்து, அதற்கு அவர்கள் ஆஹா! ஜனநாயக முறைப்படி, மக்கள் விருப்பத்தை சாமி மேல் முட்டை வீசி நிறைவேற்றினோம் என்று முட்டாள்தனமாக குதித்தபோதுதான். சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடக் கூடாது என்று சொல்ல எந்த தீட்சிதருக்கும் உரிமை இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஆனால் தீட்சிதர்களுக்கு அந்த உரிமை உண்டு என்று சொல்லவும் எல்லாருக்கும் கருத்துரிமை உண்டு; அப்படி சொல்பவர்கள் மேல் முட்டை வீசுபவர்கள் தண்டனை அடைய வேண்டியவர்களே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் எனக்கு அவரது கருத்துகளைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் அவர் தீட்சிதர்கள் கண்ட்ரோலில்தான் சிதம்பரம் கோவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பது மட்டுமே. சரி அதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதையாவது புரிந்து கொள்வோமே என்று நினைத்துதான் போனேன்.

அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். டையோ என்னவோ, தலை நிறைய கறுபபு முடி. (நான் புதிதாக ஒரு ஆணை சந்தித்தால் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்றுதான் முதலில் பார்ப்பேன். சொந்தக் கதை சோகக் கதை.) ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தொந்தி தொப்பை இல்லை. சிரித்த முகம். மேட்டுக்குடி ஆள் என்று தோன்ற வைக்கும் முகம், நிறம், தோற்றம், நடை உடை பாவனை. அதிரடி பேச்சு. குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. கேள்விகள் எரிச்சல் மூட்டும்போது எரிச்சலை polished ஆக வெளிப்படுத்தும் லாவகம். தான் ஒரு பெரிய மனிதர், முன்னாள் மந்திரி என்றெல்லாம் எந்த வித hangup-உம் இல்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எடுத்த ஒரு ஃபோட்டோவை காட்டினார். அதில் அவர் பாடம் நடத்துகிறார், போர்டில் என்னவோ சிக்கலான ஈக்வேஷன்கள். நான் ஈக்வேஷன்கள் சிக்கலாக இருக்கிறது என்று ஒரு சம்பிரதாய கமென்ட் விட்டேன். அவர் ஓ அதெல்லாம் வெறும் ஐகன் வால்யூக்கள் என்று சொன்னார். ஐகன் வால்யூ பற்றி தெரிந்த ஒரு அரசியல்வாதியா என்று எனக்கு கொஞ்சம் புல்லரித்தது!

நோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சனின் மாணவர். சாமுவெல்சனோடு இணைந்து பேப்பர்கள் எழுதிய ஐந்து பேர்களில் ஒருவர். சாமுவெல்சன் இவர் அடுத்த ஜெனரேஷனில் பேசப்படும் எகானமிஸ்டாக வருவார் என்று சொல்லி இருக்கிறாராம். கோடைக் காலத்தில் ஹார்வர்டில் ஒரு Mathematical Methods for Economics என்று ஒரு கோர்ஸ் நடத்துகிறாராம். சிலபஸில் Calculus of Variations , Multivariate Calculus எல்லாம் உண்டாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனால் இது ஒரு undergraduate கோர்ஸ் என்றுதான் நினைக்கிறேன். இதை நடத்த பெரும் மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நடத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏன் இந்தியாவிலிருந்து ஒருவரை வரவழைக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. என்னவோ.

வந்தபோதே களைத்திருந்தார். ஒரு பத்து நிமிஷம் தூங்கினார். பிறகு எழுந்து வந்தவர் எங்களுடன் பேச ஆரம்பித்தார். பல அதிரடி கேள்விகளை கேட்டார் – சோனியா காந்தி தான் கேம்ப்ரிட்ஜில் படித்தவர் என்று பொய் affidavit தாக்கல் செய்திருக்கிறாராம், ஆனால் அதை ஊடகங்கள் அமுக்கிவிட்டனவாம். மிட்ரோகின் என்ற கேஜிபி அதிகாரி சோனியா கேஜிபியிடம் பணம் வாங்கினார் என்று எழுதி இருக்கிறாராம். ஆனால் பா.ஜ.க. அரசு கூட அதைத் தோண்ட மறுத்துவிட்டதாம். இப்படி பல விஷயங்களை சொன்னார். ஏன் பா.ஜ.க. அரசு இவற்றை பயன்படுத்தி சோனியா காந்தியை ஒழிக்காமல் விட்டுவிட்டது என்று கேட்டேன். இதற்கு பதில் சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அதைப் பற்றி பேச மறுத்துவிட்டார்.

பதிவு நீண்டுகொண்டே போவதால் இங்கே நிறுத்திக்கொண்டு ரெஸ்டாரண்டில் என்ன பேசினார் என்று நாளை தொடர்கிறேன்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
தொடர் பதிவின் பகுதி 2, பகுதி 3, , பகுதி 4
சிலிகான் பள்ளத்தாக்கில் சுப்ரமணிய சாமி
சுப்ரமணிய சாமி பற்றிய விக்கி குறிப்பு
சுப்ரமணிய சாமியை கிண்டல் அடித்து நான் எழுதிய ஒரு பதிவு, இன்னொரு பதிவு (சாமி என்னை மன்னிப்பாராக!)
பாரதி தமிழ் சங்கம்

Advertisements

நிகழ்ச்சி இடம் மாறி இருக்கிறது. இப்போது
Bay area Vaishnav Parivar
25 Corning Ave.,
Milpitas, CA 95035
Phone: (408) 586-0006
FAX: (408) 586-0008

இங்கே நடக்கும்.

சுப்ரமணிய சாமி பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். நோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சன் அவரது அட்வைசராக இருந்தார். பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ப்ரொஃபசராக வேலை பார்த்தார். இந்தியா திரும்பி எம்.பி.யாக ஆனார். எமர்ஜென்சியை தைரியமாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது இவர் சட்டம் மற்றும் வணிகத் துறை அமைச்சராக இருந்தார். இப்போது ஜனதா கட்சி என்று ஒரு லெட்டர்பாட் கட்சியை நடத்துகிறார்.

சுப்ரமணிய சாமி மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அப்படி விமர்சனம் உள்ளவர்களில் நானும் ஒருவன். ஆனால் அவர் மெத்தப் படித்தவர் என்பதிலோ, இந்திய அரசியலில் ஒரு insider என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை. குறைந்த பட்சம் நன்றாக பொழுது போகும் என்று நினைக்கிறேன். வந்துதான் பாருங்களேன்!

விஸ்வநாதன் கக்கன் வேறு பேசுகிறார். இவர் முன்னாள் தமிழக அமைச்சரும், அரசியல் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுபவரும் ஆன கக்கனின் சகோதரர். கக்கனைப் பற்றிய நினைவுகளை கேட்கவாவது வாங்கள்!

Bharathi Thamizh Sangam Invites you to a lecture by

Dr. Subramanian Swamy

Professor of Economics, Harvard University

Chief Guest

Thiru.Viswanathan Kakkan (Brother of Late Shri.P.Kakkan, Home minister, Tamil Nadu)

June 26 (Saturday) @ 1.30 PM

Hotel Swagat, 68 South Abel St, Milpitas

Admission free – All are welcome!!

For details contact: Rajan – 510-825-2971, Nagarajan – 408-771-5779

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய பதிவுகள்:
நிகழ்ச்சி இடம் மாறி இருக்கிறது.

சுப்ரமணிய சாமி பற்றிய விக்கி குறிப்பு
சுப்ரமணிய சாமியை கிண்டல் அடித்து நான் எழுதிய ஒரு பதிவு, இன்னொரு பதிவு (சாமி என்னை மன்னிப்பாராக!)
கக்கன் தன் குருவான வைத்யநாத ஐயரை நினைவு கூர்கிறார்
பாரதி தமிழ் சங்கம்


துக்ளக் என்னை மன்னிக்கட்டும்!

நாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எல்லா தொகுதிகளிலும் தானே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் சட்டம் இடம் கொடுக்குமா என்று கேட்டதற்கு கருணாநிதி தன் இஷ்டம் போல வளைப்பதற்கு இது அவரது வீட்டின் ஜன்னல் சட்டம் அல்ல, நாட்டின் சட்டம் என்று பதிலளித்தார்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் சோனியா காந்தி புரட்சித் தலைவி, தமிழகத்தின் தவப் பயன், மகாத்மா ஜெயலலிதா டெல்லியில் நிற்க மனு தாக்கல் செய்யாவிட்டால் சோனியா காந்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று மகாதேவன் அறிவித்திருக்கிறார். சோனியா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லையே, அவரை எப்படி நீங்கள் நீக்க முடியும் என்று கேட்டதற்கு டி.டி.கே. தினகரன் முதலில் அவரை உறுப்பினராக்கி பிறகு நீக்குவோம் என்று சொன்னார். திவாகரன் அதெல்லாம் வேண்டாம், சோனியாவை காங்கிரசிலிருந்து நீக்கிவிடலாம் என்று கருத்து தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா 552 தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியை வெளியிடும்போது “முன்னாள் முதல்வர்” ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு எழுதும்படி தினகரன், மகாதேவன், திவாகரன் மூவரும் நிருபர்களை கேட்டுக் கொண்டார்கள்.

கலைஞர் பேட்டி
இது பற்றி பேட்டி அளித்த கலைஞர் நாற்பது ஆண்டு கால நண்பரான எம்ஜிஆர் கூட நாற்பது தொகுதிகளிலும் போட்டி இடுவேன் என்று சொன்னதில்லை என்பதை சுட்டி காட்டினார். இது பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைக்கு விரோதமானது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நல்லி சில்க் உடுத்தும் நய வஞ்சகி, நச்சுப் பாம்பு ஜெயலலிதா போன்று தான் எப்போதும் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்றும் வருத்தத்தோடு கூறினார். உடனே தான் நல்லி சில்க் முதலாளியான செட்டியாரின் இனத்துக்கு எதிரி இல்லை என்றும், செட்டியாரியத்தை மட்டுமே எதிர்ப்பதாகவும் ஒரு விளக்கமும் அளித்தார். கூட்டணி தர்மத்தை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்த ராமதாசும், கம்யூனிஸ்ட் கட்சி அவாளும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் வினவினார். முதுகில் குத்தும் துரோகி, கழக கண்மணிகளின் முதல் விரோதி வைக்கோ தி.மு.க. அணிக்கு மாற விரும்பினால் அவரை இரு கரம் நீட்டி வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சோ கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்த சோ, பிஜேபிக்கு இரண்டு சீட் கொடுத்துவிட்டு மிச்ச 38 சீட்டில் ஜெ நின்றிருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். யாருக்கு வாய்ப்பு அதிகரித்திருக்கும், ஜெவுக்கா, பிஜெபிக்கா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. நரேந்திர மோடி குஜராத்தில் எல்லா தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று அவர் பிஜேபி தலைமைக்கு ஆலோசனை தெரிவித்து வருகிறதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணி கட்சிகள் நிலவரம் 
கூட்டணியில் குழப்பம் விளைக்க கலைஞர் செய்யும் முயற்சிகள் படுதோல்வி அடையும் என்று ஜெயலலிதா இன்று பேட்டி அளித்திருக்கிறார். இந்த முயற்சிகளை கலைஞர் உடனே நிறுத்தாவிட்டால் அடுத்த திமுக உள் கட்சி தேர்தலில் எல்லா பதவிகளுக்கும் தான் போட்டி இட வேண்டி வரும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் மீண்டும் கலைஞரை அணுகியதாகவும், கலைஞர் அவருக்கு இதயத்தில் இடம் தருவதாக கூறியதாகவும் தெரிகிறது. அன்புமணிக்கு உடனடியாக மந்திரி பதவியும், பிறகு ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாக சொல்லி இருப்பதால் டாக்டர் இந்த ஏற்பாட்டை ஒத்துக் கொள்வார் என்று தெரிகிறது.

கட்சியிலிருந்து நிற்க வைக்க ஆள் தேட வேண்டிய அவசியம் இல்லாததால் வைக்கோ மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிகிறது. அம்மாவை தலைவராக ஏற்றுக்கொண்டது பெரிய தீர்க்கதரிசனம் என்று அவர் நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இது தெரிந்த ஜெயலலிதா “இவர் ரொம்ப நல்லவரு! எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு” என்று சொன்னதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து நெரிசல் 
லாயிட்ஸ் ரோடில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டி இட வேண்டும் என்று ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் மனு கொடுக்க க்யூவில் நிற்பதால் லாயிட்ஸ் ரோடில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவினரின் அராஜகம் என்றும் இதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் சொல்லி உள்ளார்.

 

தி.மு.க. தொகுதி பங்கீட்டில் தகராறு

தி.மு.க. அணியில் தொகுதி பங்கீட்டு தகராறுகள் இன்னும் முடியவில்லை. காங்கிரசுக்கு 20 சீட், விடுதலை சிறுத்தைகளுக்கு 1 சீட் என்ற அளவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டாலும் ஸ்டாலின் அழகிரிக்கு இடையே தொகுதி பங்கீடு முடியாததால் கலைஞர் பெரும் கவலையில் இருக்கிறார் என்று தெரிகிறது. சீக்கிரம் பங்கீட்டை முடிக்கும்படியும், இல்லாவிட்டால் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை சமாளிக்க முடியாது என்றும் அவர் சொன்னதாக தெரிகிறது. மு.க. முத்து இந்த முறை இதயத்தில் மட்டும் இடம் தந்தால் போதாது என்றும் சொல்லி வருவதாக நமது நிருபர் தெரிவிக்கிறார்.

அழகிரி கை ஓங்குகிறது
இன்று இந்த தேர்தலின் விசேஷ பொறுப்பாளராக அழகிரி நியமிக்கப்பட்டார். இதை பற்றி பேசிய கலைஞர் அழகிரி ஏற்கனவே தென் மண்டல செயலாளராக இருப்பதாகவும், தமிழ் நாடு இந்தியாவின் தென் மண்டலத்தில்தான் இருப்பது பெரியார் வழி வந்து புவியியல் பயின்றவர்களுக்கு தெரியும் என்றும், அதனால் அழகிரியே இந்த தேர்தலுக்கு முழு பொறுப்பை ஏற்கப்போவதாகவும் சொன்னார். அழகிரி அவருக்கு ஒரு சால்வை போட்டு மரியாதை செலுத்தினார். அப்போது பேராசிரியர், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். பிறகு அழகிரி நிருபர்களிடம் பேசுகையில் ஸ்டாலின் என்பது ரஷியப் பெயர், ஸ்டாலினுக்கு ரஷிய தேர்தலில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தினகரன் அலுவலகம் மதுரையில் மூடப்பட்டதற்கும் இந்த செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சன் டிவியின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

தயாநிதி மாறன் மதுரையில் போட்டி!
அழகிரி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் சமரசம் ஏற்பட்டதாகவும், அதனால் தயாநிதி மதுரையில் போட்டி போட இருப்பதாகவும் தெரிகிறது. அழகிரியின் மகனான தயாநிதி சன் டிவியின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்பார் என்றும ஒரு வதந்தி உலவுகிறது.

 

 

ராஜீவ் மரணம் தற்கொலை – சுப்ரமணிய சாமியின் அதிர்ச்சி தரும் அறிக்கை

“இங்கே பாருங்கோ, ராஜீவ் எக்ஸ் ப்ரைம் மினிஸ்டர். அவருக்கு நிறைய செக்யூரிடி எல்லாம் உண்டு. அவர்கிட்ட எப்படி பாம் போக முடியும்? அந்த பாம் அவரோட உடம்பிலேயே இருந்துது. அவருக்கு குடும்பத்திலே சோனியா ரொம்ப தொந்தரவு கொடுத்தாலே அந்த மனுஷன் பாவம் அவர் உடம்பிலே அவரே பாம் செட்டப் பண்ணி தற்கொலை பண்ணிண்டுட்டார். இதுக்கு என்கிட்டே நிறைய எவிடன்ஸ் இருக்கு. அதை எல்லாம் எனக்கு பிரபாகரனே கொடுத்திருக்கார்” என்று சாமி சொன்னதாக கேட்ட நாம் அதிர்ந்து போனோம். அவரிடம் நீங்கள்தான் புலிகளோட எதிரியாச்சே என்று கேட்டோம். அதற்கு அவர் “இல்லே இல்லே நான் காங்கிரசுக்கு எதிரி. பிரபாகரனும் அப்படித்தான். அதனால அவர் என்னோட நண்பன், இதுக்கு உங்களுக்கு எவிடன்ஸ் வேணும்னா தாவூத் இப்ராஹீம் கிட்ட கேட்டுக்குங்கோ” என்று சொன்னார்.

இதனால் ஜெ அவருக்கு மதுரை தொகுதியை விட்டுத் தருவார் என்றும், மிச்சம் உள்ள 39 தொகுதியில் மட்டுமே போட்டி இடுவார் என்றும தெரிகிறது. அந்த பாம்பை(bomb) செட்டப் செய்தது கருணாநிதி என்னும் பாம்புதான் என்றும், ராஜீவின் தற்கொலைக்கு கருணாநிதி அவருக்கு கமர்கட் கொடுக்காததும் ஒரு முக்கிய காரணம் என்றும், ஜெ முழங்கினார்.
இதை கேட்டதும் கலைஞர் எழுதிய கவிதை.

ஜெயலலிதா வட்டமிடும் கழுகு,
நான் உனக்காக உருகும் மெழுகு,
தமிழா நீ பார்த்து பழகு.

ஆர்எம்வி கட்சியின் இமாலய வளர்ச்சி – தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்

பல நாட்களாக அவார்டா கொடுக்கறாங்க என்ற ப்ளாக்-ஐ எழுதி வரும் ஆர்வி இன்று ஆர்எம்வி கட்சியில் சேர்ந்தார். ஆர்விக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பழைய கால சினிமா பற்றி ஆர்எம்வியை பேட்டி காண முயற்சித்ததாகவும், ஆர்எம்வி தவறாக புரிந்து கொண்டு அவரை கட்சி உறுப்பினர் ஆக்கி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அவரது எம்ஜிஆர் கழகத்தில் உறுப்பினர் எண்ணிக்கை போன வருஷத்தை விட 100% அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

எம்ஜிஆர் கழகத்துக்கு ஒரு சீட் – கலைஞர் அறிக்கை
தமிழக அரசியல் மாற்றங்களை எப்போதும் கூர்ந்து கவனித்து வரும் கலைஞரின் கழுகுக் கண்களிலிருந்து எம்ஜிஆர் கழகத்தின் இமாலய வளர்ச்சி தப்பவில்லை என்று தெரிகிறது. இன்று மாலை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் நாற்பது ஆண்டு நண்பர் எம்ஜிஆருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவரும், ஏமாற்றங்களை அண்ணாவின் ஆணைப்படி எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டு தாங்கிக் கொள்பவருமான ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்துக்கு வரும் தேர்தலில் அமெரிக்காவில் ஒரு சீட் ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இதன் மூலம் வெளி நாடுகளிலும் போட்டியிடும் முதல் இந்தியக் கட்சி தி.மு.க.தான் என்ற ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சீட்டில் அமெரிக்காவில் வாழும் ஆர்வி போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆர்எம்வியிடம் தமிழகத்தில் சீட் கிடைக்காததற்காக ஏமாற்றம் அடைகிறீர்களா என்று கேட்டதற்கு அவர்
“உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்”
என்று பாடிவிட்டு, எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் ராஜு, வட அமெரிக்காவில் வாசு என்று இரண்டு படங்களை எடுக்க திட்டம் போட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

ஆர்விக்கு மாரடைப்பு
உலகம் சுற்றும் வாலிபனை பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த ஆர்வி வட அமெரிக்காவில் வாசு பற்றி வந்த செய்தியை படித்துவிட்டு தான் அமெரிக்காவில் தி.மு.க. அணியில் போட்டி இடப்போவதை தெரிந்து கொண்டார். உடனே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது மாரடைப்பு இல்லை, வாயு தொந்தரவுதான் என்று டாக்டர்கள் சொன்னாலும் அவர் தேர்தல் முடியும் வரை கோமாவிலிருந்து வெளி வரமாட்டேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் -ஆர்எம்வி ஆலோசனை
ஆர்வி பார்ப்பன ஜாதியில் பிறந்தவர் என்பதை இப்போதுதான் கலைஞர் அறிந்தார். அவர் உடனே “அவாள் நமக்கு எப்போதுமே சவால்தான்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சமீபத்தில் 1964-இல் கூடுவாஞ்சேரி இடைத்தேர்தலில் ஒரு குல்லுக பட்டர் தி.மு.க.வின் முதுகில் குத்தியதையும், ஜெயலலிதா சட்டசபைய்ல் தான் பாப்பாத்தி என்று சொல்லிக் கொண்டதையும், அதே சட்ட சபையில் ஜாதி பேதத்தை ஒழிப்பதற்காக தான் சூத்திரன், நாலாம் வருணத்தவன் என்று சொல்லி கொண்டதையும் நினைவு கூர்ந்தார். பிறகு தென்சென்னை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டதால், ராஜாஜியை மூதறிஞர் என்று முதலில் அழைத்தது தான்தான் என்பதையும் நினைவு கூர்ந்தார். தான் பார்ப்பனர்களுக்கு எதிரி இல்லை, பார்ப்பநீயத்துக்குத்தான் என்று இலக்கிய ரசம் சொட்ட சொட்ட இன்னொரு கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்த கவிதை நாளை தினகரன், முரசொலியில் வரும் என்றும், இந்த கவிதைக்கு கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நமீதா அபிநயம் பிடித்துக் காட்டுவார் என்றும் தெரிகிறது.

பிறகு ஆர்எம்வி இது போன்ற துயர சம்பவங்களை தவிர்க்க விரும்புவதாகவும், அதனால் வழக்கம் போல் கலைஞர் இதயத்தில் மட்டும் சீட் கிடைத்தால் போதும் என்று கூறினார். கலைஞர் தான் எதையும் தாங்கும் இதயம் உள்ள அண்ணாவின் வழி வந்தவன், ஆர்எம்வியையும் தாங்குவேன் என்று குறிப்பிட்டார்.

காதில் விழுந்த துணுக்கு செய்திகள் 

ரஜினி ஆதரவு யாருக்கு?
ரஜினி நான் யாருக்கு ஆதரவு தரணும், எப்படி ஆதரவு தரணும், எப்போ ஆதரவு தரணும் அப்படின்றதெல்லாம் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இதையே இந்திரன் படத்தில் ஒரு பன்ச் ஆகவும் வைத்த்ருப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது. படத்தின் ரகசியங்கள் வெளி வருவதால் ஷங்கர் மிக கோபத்தில் இருக்கிறாராம்.

ஸ்வீட் எஸ், சீட் நோ
சரத்தின் மூத்த மகளுக்கு நேற்று 25 வயது முடிந்தது. இதை குடும்பத்தில் அனைவரும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்கள். தன் கட்சி சார்பில் நிற்க மூன்று தகுதி உள்ளவர்கள் கிடைத்துவிட்டதால் சரத் ஆனந்தத்தில் மிதக்கிறார். ஆனால் ராதிகாவோ ஸ்வீட் கொடுத்து கொண்டாடினால் ஓகே, ஆனால் சீட் கொடுத்து கொண்டாடக் கூடாது, பணத்தை எல்லாம் முதல் தாரத்து வாரிசுங்க மேலயே விட்டீங்க, அப்புறம் தெரியும் சேதி என்று உறுமுகிறாராம்.

முன் வந்த பதிவுகள்
சுப்பிரமணிய சாமி – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 5
டி. ராஜேந்தர் – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்


சந்திரலேகா அறையில் காத்திருக்கிறார். சாமி வருகிறார்.

சாமி: சாரி சந்திரலேகா, கொஞ்சம் லேட்டாயிடுத்து. வர வழியிலே சில பேர் கருப்பு கோட் போட்டுண்டு நின்னுண்டு இருந்தா. அவாள அவாய்ட் பண்ணிட்டு சுத்திண்டு வரத்துக்குள்ளே கொஞ்சம் லேட்.
சந்திரலேகா: நீங்க வர வழிலே கோர்ட் எதுவும் கிடையாதே?
சாமி: என்னன்னு தெரியலியே! அடையாளம் தெரிஞ்சுரப்படாதுன்னு முகத்தை கூட மூடிண்ட்ருந்தா.
லேகா: நீங்க மசூதி வழியா வந்திருப்பீங்க. பர்தா போட்ட பொண்ணுங்களை பயந்து ஓட்றீங்களே!
சாமி: என்ன பண்றது, என் தலைஎழுத்து இப்படி ஆயி போச்சு. கருப்பை பாத்தாலே ஒரே காப்ராவா இருக்கு. சரி வா, நம்ம கட்சி நிர்வாகிகளோட பேசுவோம்.
லேகா: இருக்கறது நானும் நீங்களும்தான். வேணும்னா இந்த சேர்ல ஒசாமா, அந்த சேர்ல ஒபாமா இருக்கறதா நினைச்சுக்கங்க.
சாமி: நான் ஒபாமாவுக்கு நாளைக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கேன். ஒசாமா கடன்காரந்தான் கிடைக்க மாட்டேங்கறான்.
லேகா: அது ஒபாமா அப்பாயின்ட்மென்ட் இல்லை. உம் அப்பாம்மாவுக்கு கொடுத்த அப்பாயின்ட்மென்ட். வெறும் வாயையே மெல்லுங்க!
சாமி: இதை எல்லாம் எவனும் கண்டுக்கறதில்ல. நீ மட்டும் ஏன் கண்டுக்கற? சரி பாயிண்டுக்கு வருவோம். நான் ஜெயலலிதாகிட்ட சொல்லி மதுரை சீட் வாங்கி நிக்கப் போறேன். அந்த சீட் மட்டும் கிடைக்கட்டும், அப்புறம் பார், மஹாத்மா காந்தியை கொன்னது அழகிரிதான் அப்படின்னு சொல்லி பிச்சு உதறிட மாட்டேன்!
லேகா: (மனதுக்குள்) ஏன் தலைஎழுத்து ஐ.ஏ.எஸ். படிச்சிட்டு இங்கே வந்து மாட்டிக்கிட்டேன். (உரக்க) அதை எல்லாம் யாரு கேக்கப் போறாங்க? உங்களுக்கு சீட் சரி, எனக்கு என்ன வழி?
சாமி: வேணும்னா உன்னை ஒபாமா கிட்ட சேத்து உட்டடறேன்! இந்த கட்சிக்கு த்யாகம் பண்ணினது யாரு? நான்தானே! முட்டையால என்னத்தானே அடிச்சா!
லேகா: இந்த கட்சியில் சேந்ததே பெரிய தியாகம்! உங்க கூட இருக்கறதால என்னை யாரும் மதிக்கறதில்ல, இல்லாட்டி நானும் பிஜேபி, மாயாவதி கட்சின்னு எங்கியாவது சேந்து ஒரு எம்பி சீட்டாவது வாங்கி இருப்பேன்.
சாமி: வாங்கினா போறுமா, ஜெயிக்க வேணாமா!
லேகா: (கடுப்பில்) கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாட ஆரம்பிக்கிறார். சாமி ரூமை விட்டு ஒரே ஓட்டம்.

முன் வந்த பதிவுகள்
டி. ராஜேந்தர் – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்


இது ஒரு மீள்பதிவு – தேர்தல் நெருங்கும் காலத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு ஒரு 22 வயது என்று வைத்துக்கொள்வோம். (அட கனவாவது காண்போமே!) எனக்கு அரசியலில் ஈடுபாடு இருக்கிறது என்றும் நான் ஒரூ கட்சியில் சேர விரும்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கட்சியிலும் சேருவதற்கான காரணங்கள்:

திமுக: எனக்கு கலைஞரின் தமிழ் பிடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் என் அப்பா தி.மு.க.வில் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் கலைஞரின் குடும்பம் உயர நான் எதற்கு உழைக்க வேண்டும்?
அதிமுக: எனக்கு சசிகலாவின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும்.
பாமக: நான் வன்னியராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்நியர்தான்.
விடுதலை சிறுத்தைகள்: நான் தலித்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சலித்துக் கொள்வார்கள்.
சரத்குமார் கட்சி: நான் நாடாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சரத் என்னை நாடார், அதாவது நாட மாட்டார். (ராடான் டிவியின் பெயர் மர்மம் இப்போதுதான் புரிகிறது)
தேதிமுக: தமிழில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் கேப்டனாக இருக்கவேண்டும்.
பாஜக: நான் சோவாக இருக்கவேண்டும்.
காங்கிரஸ்: எனக்கு பைத்தியம் பிடித்திருக்கவேண்டும்.
மதிமுக: எனக்கு பைத்தியம் முற்றி இருக்க வேண்டும்.
சுப்ரமணிய சாமி கட்சி: எனக்கு பைத்தியம் குணமாக வாய்ப்பே இல்லாமல் இருக்க வேண்டும்.
கார்த்திக் கட்சி: அஹம் பிரம்மாஸ்மி!
ரஜினிகாந்த் ஆதரவாளர்: வரும்ம்ம், ஆனால் வராது என்று ஒரு உறுதியோடு இருக்க வேண்டும்.

இதில் எனக்கு எந்த தகுதியுமே இல்லாதது வருத்தம்தான். ஏதாவது ஒன்றாவது இருந்திருந்தால் 2011இல் நான்தான் முதலமைச்சர்!