Dramaதீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி பாரதி தமிழ் சங்கம் தனிமை என்ற நாடகத்தை சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதி மக்களுக்கு அளித்தது. இரண்டு காட்சிகள். மதியம் இரண்டு மணிக்கு நாங்கள் சென்றோம். இன்னொரு காட்சி மாலை 6 மணிக்கு. வேண்டா வெறுப்பாக குழந்தைகளுக்கு தனிமையை கொடுத்துவிட்டு, நான்-சித்ரா, ஆர்வி-ஹேமா நால்வரும் கடமையே என்ற உணர்வில் சென்றோம். ஓஹ்லோனி கல்லூரி வளாகத்தில் நுழைந்தவுடனே பார்க்கிங் லாட்டிலேயே பாரதி தமிழ் மன்ற வாலண்டியர்கள் வரவேற்று நமக்காக பார்க்கிங் டிக்கட்டை கருவியிலிருந்து தருவித்து கொடுத்தார்கள். இரண்டு ரூபாய். ஜாக்ஸன் தியேட்டருக்கு வழி சொன்னார்கள். வரவேற்ப்பு எல்லாம் பலமாக தானிருக்கிறது…உள்ளே டிராமா எப்படியோ என்று யோசனையில் பல படிகள் ஏறி ஜாக்ஸன் தியேட்டரில் நுழைந்து இருக்கையைப் பிடித்தோம்.

சரியான நேரத்திற்கு நாடகத்தை தொடங்கினார்கள். ஜாக்சன் தியேட்டரில் பல பிற மொழி நாடகங்கள் நடக்குமென புரிகிறது. அதற்க்கு தகுந்தவாறு அரங்க அமைப்பு உள்ளது. கவனத்தை ஈர்த்த்து சப்-டைட்டில் போடும் வசதி. திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் போட்டு தான் பார்த்திருக்கிறேன். புதிதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. சப்-டைட்டில் தெரியும் திரை அமைப்பு மிகவும் உயரத்திலிருந்ததால் டிவிடி மற்றும் திரைப்படங்களில் பார்ப்பதுப் போல் சப்டைட்டிலை கடைககண்ணில் பார்க்க முடியாது. நாங்களிருந்த இடத்திலிருந்து நடுப்பகுதியிலிருந்து மிகவும் கடினம். ஒன்று சப்-டைடிலைப் பர்க்க வேண்டும் அல்லது நாடகக் காட்சிகளை பார்க்க வேண்டும். இரண்டும் ஒரே பார்வையில் அடங்காது. பாக்ஸ் அமைப்பில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஒருவேளை தெரியலாம்.

நாடகம் காட்சி அமைப்பு எளிமையாக இருந்தது. அதிகம் பிராப்ஸ் இல்லை.ஆனால் நாடகக் காட்சிகளுக்கே உண்டான செயற்க்கைதன்மையை மறைக்க முடியவில்லை. இந்த குறையை வலிமையான கதையினாலும் தேர்ந்த அளவான நடிப்பிலும் ஒரளவு மறைத்திருக்கிறார்கள்.

வைஷ்ணவ குடுமபத்தின் அடையாளங்களையும், ஆசாபாசங்களையும், பாரம்பரியங்களையும் பொருளியல் உலகின் சூழலில் தவற விட்டுவிட்டு கூட்டு குடும்ப வாழ்க்கையின் சுகங்களை, இன்பங்களையும் இழந்து நிற்கும் தனிமையை தன் குழந்தைகள் தன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது உணர்கிறார் மணி எனற ஒரு பெரியவர் (நவீன் நாதன்). தன் கிராமத்து அக்ரகாரத்தைத் தாண்டி பணி நிமத்தமாகவும், கூட்டுக் குடும்பத்தின் அவதிகளிலிருந்து தனனையும் தன் மனைவியையும் விடுவித்துக் கொள்ள சென்னை செல்ல முயலும் போது, குடும்பத்தின் சந்தோஷத்திற்க்கு முடிவு ஏற்ப்படுகிறது. தன் பக்க நியாத்தை விளக்க முயல பல உறவுகளின் முக்கியத்தை பலவீனமாக்கி மனங்களை புண்படச் செய்கிறார். பின்னர் தான் தனிமையாக வாழும் முதிய காலத்தில் வாழ்க்கையில் பிடிப்பற்று, நோய் நொடியில் உழன்று கொண்டு முடிவை எதிர்ப்பார்த்து விரக்தியாக காலத்தை கழிக்கும் பொழுது ஸ்ரீதர் (ஜெய் கணேஷ்) என்ற ஒரு ஒரு புதிய நண்பர் வருகிறார். பெரியவ்ரின் வாழ்வில் சீர்திருத்தங்களை செய்கிறார். பெரியவர் தனிமையிலிருந்து விடுபடுகிறார்.

பழைய கதை என்றாலும் நவீன சூழலுக்கு மாற்றிஅமைத்திருக்கிறார்கள். நாடகக் கதை அமைப்பு ஃபளாஷ் பேக் யுத்திகளால் சிறப்பாக அமைந்திருக்கிறது. கடந்த கால நிகழ் கால பிரிவினைகளை லைட்டிங் மற்றும் ஃபிரீஸ் யுத்திகளாலும் கையாண்டிருக்கிறார்கள். லைட்டிங் தரம் உயர்ந்தது. ஒலியமைப்பும் உயர்ந்த ரகமே. ஜாக்சன் தியேட்டர் அமைப்புகள் கைகொடுத்திருக்கிறது.

நாடகத்தில் நகைச்சுவை ஒரு ப்ளஸ். அதுவும் புது மருமகள் சிகரெட் பிடிப்பதாக பார்த்த மாமியார் வரும் காட்சி புனைவுகள் பிரில்லியண்ட். நாடகத்தின் மையப் பகுதியில் சற்றே தொய்விருந்தது. மற்றபடி நாடகத்தில் எந்தத் குறைப்பாடும் எனக்குத் தெரியவில்லை.

இது ஒரு கிரியா கிரியேஷன்ஸ் நாடகம்.  ஆனந்த் ராகவ் எழுதிய நாடகத்தை தீபா ராமானுஜம் டைரக்ட் செய்திருக்கிறார்.  முன்னர் ஹியூஸ்டன், மற்றும் பல நகரங்களில் நடத்தியிருக்கிறார்கள்.  தமிழகத்திலும் நடத்தியிருக்கிறார்கள்.

பாரதி தமிழ் மன்றம் இம்முறை சிறப்பாக ஆர்கனைஸ் செய்துள்ளது. அதுவும் மிகவும் சிறப்பாக. பொதுவாக சிக்கனம் கருதி பாரதி தமிழ் மன்றத்தினர் சிறிய பட்ஜெட் நிகழ்ச்சிகளாக நடத்த அது மக்கள் மனதில் பெரிதாக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் இம்முறை ஹை பட்ஜெட்க்கு போயிருக்கிறார்கள். பணத்துக்கு ஏற்ற தரம். சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.  பணம் செலவு செய்வது ஒரு புறம், நேரம் செலவு செய்வது ஒர் புறம். தரமான நேரத்தை தந்திருக்கிறார்கள்.

வளைகுடா பகுதியில் இது வரைப் பார்த்த நாடகங்களிலேயே மிகவும் நேர்த்தியான நாடகம். நாடக், மற்றும் பல தொழில்முறை குழுக்களைக் காட்டிலும் அபாரமாக வந்துள்ளது.

பிற்சேர்க்கை – இதில் சப்-டைட்டில் என்று நான் குறிப்பிட்டிருப்பதன் சரியான பெயர் சூப்பர் டைட்டிலாம். பின்னர் தான் அறிந்துக் கொண்டேன்.


சென்ற சனிக்கிழமை,  நண்பர்  திருமலை ராஜன் புண்ணியத்தில் மணி ராமின் புதிய நாடகமான ‘முடிவல்ல ஆரம்பம்’  பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
(இங்கு கலிபோர்னியா – கூப்பர்டினோ டீ-ஆன்சா அரங்கில்)

நிகழ் கால அரசியலை மையமாக வைத்து நாடகம் போடுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்.  அதுவும் மணி ராம்,  சில முக்கியமான கதாபாத்திரங்களுக்கு,  அவர்களின் நிஜ வாழ்க்கை உண்மைப் பெயர்களையே வேறு கொடுத்து அசத்தி விட்டார்.  இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான துணை முதல்வர் ரோலில் நடித்து பட்டையைக் கிளப்பியதும்  மணிராம் தான்.  90 நிமிடம் நம்மை இருக்கையில் கட்டிப்போட்ட இந்த நாடகம் (இடைவேளை கிடையாது)  ஹே ராம் படம் மாதிரி,  கிளைமாக்ஸில்  ஆரம்பித்து,  விறுவிறுவென்று  பின்னோக்கிச் சென்றது.

எனக்குத் தெரிந்த வரை,  இந்த நாடகத்தில் ஒரு சிறிய குறை என்னவென்றால்,  துணை முதல்வரின் அள்ளக்கைகள்  சிலர் பேசும்  இரட்டை அர்த்த வசனங்கள் தான்.  மற்றபடி, மணி ராமின் ‘அவதார்ஸ்’ நாடகக் குழு,  மீண்டும் ஒரு முறை தன் தொழில் முறை நேர்த்தியை சந்தேகத்திற்கு இடமின்றி  நிரூபித்துள்ள நாடகம் இது.

இந்த நாடகம்,  இந்தியாவில்,  குறிப்பாகத் தமிழ் நாட்டில்,  அரங்கேறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.  அப்படித் தப்பித் தவறி அரங்கேற்றினால்,  உங்கள் இல்லத்துக்கு,  ஆட்டோவில் உருட்டுக்கட்டைகள் மற்றும் சர்வாயுதபாணிகளாய்,  பல அழையா விருந்தாளிகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Any way,  மணி ராம் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய Hats off !

இந்த நாடகம் பற்றிய விரிவான விமர்சனத்தை நீங்கள் அடுத்த மாத ‘தென்றல்’ இதழில் எதிர்பார்க்கலாம்.

The new poster for Mudivalla Arambam. Set in a political backdrop, it is an intense drama in which the lives of the common people intertwine with the powers that be. Mudivalla Arambam

Chief  Minister   Ilavendan’s   Interview…….நான் பார்த்த நாடகம் எல்லாம் சென்னை சபா சர்க்யூட்டில் பார்த்தவைதான். ஒய்.ஜி.பி., சோ, மௌலி, கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி நாடகங்களை பார்த்திருக்கிறேன். கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், மகாபாரதத்தில் மங்காத்தா, டௌரி கல்யாணம், பட்டின பிரவேசம், அப்புறம் காத்தாடி ஊட்டிக்கு போகும் ஒரு நாடகம், ஐயோ அம்மா அம்மம்மா இவைதான் நான் இந்த சர்க்யூட்டில் பார்த்த நாடகங்களின் உச்சம்.

எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும் ஒரே ஜெனரேஷனுக்கே நாடகம் என்றால் என்ன என்பதை மறக்கடித்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்சனையும் ஷாவையும், ப்ரெக்டையும், ஆர்தர் மில்லரையும், டென்னசீ வில்லியம்சையும் படிக்க ஆரம்பித்ததும்தான் நாடகம் என்றால் என்ன என்று ஓரளவாவது எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அப்போது தமிழில் சோவின் நாடகங்களை படித்தேன். ஆனால் நாடகம் என்பது படித்து புரிந்து கொள்ள வேண்டியது இல்லை, பார்க்க வேண்டியது. அப்புறம் நாவலுக்கும் நாடகத்துக்கும் என்ன வித்தியாசம்?

நாடக உத்திகள் எனக்கு புரிய ரொம்ப நாளானது. உதாரணமாக ப்ரெக்டின் The good woman of Sezuan படித்தபோதுதான் எனக்கு முகமூடிகளை ஒரு நாடகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று புரிந்தது. கிரேக்க நாடகங்களை படித்தபோது என்னடா போரடிக்கிறார்கள் என்று தோன்றியது. அதில் வரும் கோரஸ் மகா முட்டாள்தனமாக தெரிந்தது.

அப்போதுதான் ஹைதராபாதில் காஷிராம் கொத்வால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகம் என்றால் அதுதான் நாடகம். எனக்கு இந்த நாடகம் பற்றி முன்பின் தெரியாது. ஏதோ நண்பன் கூப்பிட்டான் என்று கூடப் போனேன். முதல் காட்சியில் கோரஸ் வந்த அடுத்த நிமிஷம் எனக்கு கோரஸ் பற்றி ஞானோதயம் ஏற்பட்டது. Extremely powerful drama. விஜய் டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ். நானா ஃபட்னவிஸாக நடித்த மோகன் அகாஷே இன்னொரு ஜீனியஸ். நாடகம் என்றால் என்ன என்பது இதை பார்த்த பிறகுதான் எனக்கு புரிந்தது. நான் இன்னொரு நாடகத்தை இன்னும் பார்க்கவில்லை.

கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நானா ஃபட்னவிஸ் மராத்திய பேஷ்வா. புனேயில் அதிகாரம் செலுத்தியவர். பெண் பித்தர். அங்கே ஏழை காஷிராம் பிராமணர்களால் அவமானப்படுத்தப்படுகிறான். அவன் தன் பெண்ணை நானாவுக்கு கூட்டிக் கொடுத்து அதிகாரம் உள்ள கொத்வால் பதவியை பெறுகிறான். எல்லா பிராமணர்களுக்கும் டார்ச்சர் கொடுக்கிறான். அவன் பெண் பிரசவத்தில் இறந்துவிட, அவன் அதிகாரம் பறிக்கப்படுகிறது. அவன் அழிகிறான்.

பெங்களூரில் தலே தண்டா என்ற சுமாரான கிரிஷ் கார்னாட் நாடகம் பார்த்திருக்கிறேன். கல்கத்தாவிலும், பம்பாயிலும், பெங்களூரிலும் நாடகம் ஓரளவு நடப்பதாக அப்போதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் டெண்டுல்கர், ஏவம் இந்த்ரஜித் எழுதியவர், கிரிஷ் கார்னாட் மாதிரி தமிழில் யாருமே எழுதுவதில்லையா?

ஏவம் இந்த்ரஜித், சாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!, துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இவை அனைத்தும் நல்ல நாடகங்களாக அமையும் என்று தோன்றுகிறது. இது போன்ற நிஜமான நாடகங்கள் தமிழில் வருவதில்லையா? இல்லை வெளியில் தெரிவதில்லையா? இன்று நான் எங்கேயோ வாழ்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் நாடகம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் வளர்ந்த சூழ்நிலைதான் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கூத்துப் பட்டறை, ஞானி, நா. முத்துசாமி என்றெல்லாம் இருபது வருஷங்களுக்கு முன் நான் கேள்விப்பட்டது கூட இல்லை. அது சரி, கணையாழி பற்றி கூட தெரியாதுதான். 🙂 இப்போது வளர்பவர்களாவது பார்த்தால் சரிதான். ஆனால் இந்த ஜெனரேஷனுக்கும் எஸ்.வி. சேகர்தான் தெரியும் போலிருக்கிறது.

எனக்கு தெரிந்து சோதான் தமிழில் ஓரளவாவது உருப்படியாக நாடகம் எழுதி இருக்கிறார். அவை எல்லாமே வசனங்களை வைத்து மட்டும் எழுதப்பட்டவைதான். ஆனால் உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவை நல்ல முயற்சிகள்.

திராவிட பாரம்பரியத்தில் அண்ணாவின் வேலைக்காரி, ஓரிரவு பெரிதாக பேசப்படுகின்றன. கல்கி ஓரிரவை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் அண்ணாவை புகழ்ந்திருக்கிறார். கனல் பறக்கும் வசனம் இருந்தால் போதும், கதை முக்கியமில்லை என்று நினைத்த காலம் போல. அப்படி என்றால் வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரனை கூட நல்ல நாடகம் என்று சொல்லலாம்.

இந்திரா பார்த்தசாரதி பற்றி சொல்கிறார்கள். நந்தன் கதை நாடகம் conspiracy theory கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது. (இதன் வீடியோவை ஒரு முறை பார்த்திருக்கிறேன், நல்ல நடிப்பு, ஆனால் கதை சரியில்லை!) ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதையை அப்படியே போட்டுவிட்டார். இவை எல்லாம் நல்ல நாடகமாக எனக்கு படவில்லை.

மெரினாவின் நாடகங்கள் ஒரு காலத்தில் மிகவும் பாப்புலர். ஊர் வம்பு, கால்கட்டு ஆகியவற்றை விகடனில் படித்திருக்கிறேன். தனிக் குடித்தனம் புகழ் பெற்ற நாடகம். ஆனால் இவை எதுவும் உலகத் தரம் வாய்ந்த நாடகம் என்று எனக்கு தோன்றவில்லை.

சுஜாதா சில முயற்சிகள் செய்திருக்கிறார். சரியாக வரவில்லை. நான் பார்த்த ஊஞ்சல் நாடகத்தின் வீடியோ was quite bad. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு சிறு வயதில் படித்திருக்கிறேன், அப்போது பிடித்திருந்தது, இப்போது என்ன நினைப்பேனோ தெரியாது. அவர் எழுதிய சரளா என்ற நாடகம் அந்த காலத்தில் எனக்கு டென்னசீ வில்லியம்சை நினைவுபடுத்தியது. மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

அதே போல் ஜெயந்தன் எழுதிய ஏதோ ஒரு நாடகம் எனக்கு அந்த காலத்தில் பிடித்திருந்தது. கணக்கனோ என்னவோ பேர். மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

தமிழில் சோதனை நாடகங்கள் என்று என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் நாற்காலிக்காரர் கதை நாடகமாக பார்த்தால் நன்றாக இருக்கலாம்.

நீங்கள் நாடகம் பார்த்த அனுபவங்களை எழுதுங்களேன்! அது எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணமாக இருந்தாலும் சரி.

தொடர்புடைய பதிவுகள்
சோ – ஒரு மதிப்பீடு
முகமது பின் துக்ளக் விமர்சனம்