Indian Freedom Movementபெப்ருவரி 27 1931ஆல்ஃப்ரெட் பூங்கா, அலகபாத்பிரிட்டிஷ் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வரும் புரட்சிக்காரன் ஒருவன் தன் சகாக்கள் இருவரை சந்திப்பத்தற்க்காக காத்திருக்கிறான். போலீஸ் அவனை தேடிவருவதற்கு காரணம் – ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான பல தீவிரவாத நடவடிக்கைகள் – 1926ல் கக்கோரி ரயில் கொள்ளை, 1928ல் ஜான் போயண்ட்ஸ் சாண்டர்ஸ் என்ற அஸிஸ்டண்ட் சூப்பரிண்டெண்ட் ஆஃப் போலிஸ் கொலை, 1926ல் வைஸ்ராய் பயணம் செய்த புகைவண்டியை குண்டு வைத்து தகர்க்க முயன்றது போன்றவைகளாகும்.

தன் 15ஆவது வயதிலேயே இந்திய விடுதலைப் போரட்டத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவன் பனாராஸில் சம்ஸ்கிருத பாடசாலையில் பயின்றுகொண்டிருக்கும் பொழுது அமிரிட்ஸரில் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை அவன் மனதை மிகவும் பாதித்தது. அதன் விளைவாக காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றான். தண்டனையாக கடுமையான 15 கசையடிகளை பெற்றான். இவையெல்லாம் அவனை சிறிது சிறிதாக மாற்றி பின்னர் முழுமையாக ஆயதம் ஏந்திய புரட்சியின் பால் எடுத்துச் சென்றது. முழுமையாக ஆயுத புரட்சியை நம்பத் தொடங்கி அவன் பகத் சிங், சுக்தேவ், பதுகேஷ்வர் தத், ராஜ்குரு போன்ற புரட்சிகாரர்களை உருவாக்கினான். அவர்களால் அவன் பண்டிட்ஜி என்று அழைக்கப்பட்டான்.

கக்கோரி ரயில் கொள்ளையில் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபக்குல்லா கான் முதலியவர்கள் பிடிபட்ட பொழுது இவன் சுந்தர்லால் குப்தாவுடன் தப்பி ஓடினான். பின்னர் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன் என்ற புரட்சி அமைப்பை ஷிவா வர்மா, ராஷ்பிகாரி கோஷ் போன்றவர்களோடு சேர்ந்து உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக  சதி திட்டங்களை தீட்டினான். ஷோஷலிஸமே விடுதலை அடைந்த இந்தியாவின் எதிர்காலம் என்று நம்பினான்.

அவன் தீவிரவாத்தத்தை நம்பினாலும் அன்பும், பாசமும் நிரறைந்தவன். இல்லாதவர்களுக்கு உதவும் உத்தம குணம் படைத்தவன். ஒரு முறை, தான் மறைந்திருந்த வீட்டின் மூதாட்டி தன் மகளின் திருமணத்திற்கு பொருள் இல்லாம்ல் தவித்த சமயம் தன்னை பிடித்துக் கொடுத்தால் பிரிட்டிஷ் அரசாங்கம் ரூ.5000 வெகுமதி வழங்கும் என்றும் அதை பெற்றுக் கொண்டு திருமணத்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு ரூ. 5 லட்சம் கொடுத்தாலும் காட்டி கொடுப்பதில்லை என்று மூதாட்டி மறுத்துவிட்டாள்.

அன்று ஆல்ஃப்ரெட் பூங்காவில், நண்பர்கள் வந்தவுடன் தன் புரட்சி திட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தான். இதை பூங்காவின் வெளியில் இருந்து அறிந்த இன்னொரு சகா ரூ.30000த்திற்கு ஆசைப்பட்டு போலீஸிர்க்கு தகவல் சொல்ல போலீஸ் படை பூங்காவை சுற்றி வளைத்தது. துப்பாக்கி சூடுகளின் மத்தியில் நண்பர்கள் இருவரையும் தப்பிக்க வைத்தான். பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிர் தியாகம் செய்தான்.

அந்த புரட்சி வீரன் சந்திரசேகர் ஆஸாத் என்று வழங்கப்பட்டு வந்த மோனிக்கர் சந்திரசேகர் திவாரி

(For ItsDiff Radio – Sep 21 2011)

1916 முதல் உலகப் போர் நடந்துக் கொண்டிருந்தது.

இந்தியாவிற்கு வந்திருந்த ஒரு அயர்லாந்து பெண்மணியின் மனதில் ஒரு பெரும் போர். இந்திய மக்களின் இன்னல்களை பார்த்து மனம் வெதும்பினார். ஆங்கிலேயர் பிடியில் சிக்கித் தவித்து சுதந்திரம் என்பதை அறியாதவராக இருந்து வரும் இந்தியர்களின் இன்னல்களை போக்க முடிவு செய்தார்.

இயற்க்கையாகவே இவருக்கு எளிய மக்களின் இன்னல்களின் காரணமாக இருப்பவர்களை எதிர்த்து போராடும் குணம் இருந்து வந்தது. முன்னதாக இங்கிலாந்தில் வேலை இல்லாதவர்களுக்காகவும், ஏழை விவசாயிகளுக்காகவும், மகளிருக்காகவும் போராடியவர். தியாஸபிக்கல் சொஸைட்டி என்ற இறையியல் சார்ப்பான இயக்கத்தில் ஈடுபட்டு தொண்டாற்றினார்.

இந்திய மக்களுக்காக போராட முடிவு செய்த அவர் அதன் பொருட்டு காங்கிரஸின் மூத்த தலைவர்களை சந்தித்தார். பால கங்காதிர திலகருடன் இணைந்து ஹோம் ரூல் லீக் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஹோம் ரூல் என்பது சுயாட்சி. இந்தியர்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினார். 1916ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை வழிதிருத்தும் தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். 1917ல் அவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார். அவர் இருக்கும் வரையில் ஹோம் ரூல் அவர் கண்ட கனவாகவே இருந்துவிட்டது.

இவர் இந்தியாவில் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்த்ங்களைக் கொண்டுவர முயற்ச்சித்தார். மத்திய இந்துப் பள்ளி மற்றும் கல்லூரியை அவர் நிறுவினார். பின்னர் அது பனாரஸ் ஹிந்து பல்கலைகழகமாக வளர்ச்சியடைந்தது. பெண்களின் விடுதலைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன் போரட்டத்தை தொடர்ந்தார். மேலும் தியாசபிக்கல் சொசைட்டி நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

சென்னையின் ஒரு பகுதிக்கு அவரை நினைவு கூறும் வகையில் அவர் பெயர் வழங்கப்பட்டது. அவர் 1933ல் காலமானார்.

அயர்லாந்திலிருந்து வந்து இந்தியர்களுக்காக உழைத்த அந்த பெண்மனி டாக்டர் அன்னி பெசண்ட்

(For ItsDiff Radio – September 14, 2011)


மார்ச் 13, 1940

கேக்ஸ்டன் ஹால், லண்டன்.

கிழக்கு இந்திய அசோசியேஷனும், ராயல் சென்ட்ரல் ஏசியன் சொஸைட்டியும் இணைந்து நடத்தவிருந்த கூட்டத்தில் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த புத்தகத்தில் பக்கங்கள் நடுப்புறங்கள் அப்புறப்படுத்தப் பட்டு, அதனுள்ளே ஒரு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்திய மக்கள் மீதும், இந்திய விடுதலையிலும் நேசம் கொண்டிருந்த அவன் தன் துப்பாக்கியின் நெடுநாளைய இலக்கான முன்னாள் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ ட்வையரின் வருகைக்காக காத்திருந்தான். இந்த கொலை நோக்கத்தின் காரணம் என்ன?

ஏப்ரல் 13, 1919.

1940 முன் அதாவது சுமார் 21 வருடங்களுக்கு முன் ரவ்லட் மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போரட்டம் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் என்னும் தோட்டத்தில் பல தலைவர்கள் ரவ்லட் ம்சோதாவை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20ஆயிரம் மக்கள் அந்த கூட்டத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதன் குறுகிய நுழைவாயில் வழியாக பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் 90 காவலாளிகள் கொண்ட தன் காவல் படையுடனும், தானியங்கி துப்பாக்கிகளுடனும் நுழைந்தார். எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகமால் தப்பிக்க பலர் தோட்டத்தின் நடுவிலிருந்த கிணற்றில் குதித்தனர். பலர் தோட்டத்தின் உயர்ந்த சுவர்க்ளை ஏறி கடக்க முற்பட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு இரையானார்கள். அதில் ஆறே வாரங்களே ஆகியிருந்த குழந்தையும் அடங்கும். சிலரின் கணக்குப்படி ஆயிரட்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று வர்ணிக்கப்பட்டது.

உலகமே கண்டித்த அந்தச் சம்பவத்தை அப்போதைய பஞ்சாப் ஆளுனரான மைக்கேல் ஓ ட்வையர் பிர்கேடியர் டயர் செய்தது சரியே என்று பதிவு செய்தார். அனைவரும் வெகுண்டெழுந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் மௌனமாக துயரத்தை அனுபவித்து வந்தார்கள். பைசாகி தினமான அன்று சோக தினமாக மாறியது.

அப்படி வெகுண்டவர்களில் ஒருவன் தான் இன்று அதாவது 1940ல் கேக்ஸ்டன் ஹாலில் காத்திருந்த அந்த புரட்சி வீரன். சிறிது நேரத்தில் மைக்கேல் ட்வையர் உள்ளே நுழைந்தார். புத்தகத்துடன் மெதுவாக புரட்சிக்காரன் அவரை நெருங்கினான். யாரும் சந்தேகம் கொள்ளாதவாறு புத்தகத்தை திறந்தான். அதில் மறைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை அவர் வயிற்றில் சுட்டான். உடனே ட்வையர் கொல்லப்பட்டார்.

அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சொன்னது: “21 வருடங்களாக மனதில் இருந்த பழியுணர்ச்சிக்கு நிறைவு  இன்று தான் கிடைத்தது. இந்தச் செயலை செய்ததற்க்காக நான் மிகவும் பெருமைபடுகிறேன். என் தாய்நாட்டிற்காக உயிரை விடுவதைக் காட்டிலும் பெருமை கிடையாது”

ஜூலை 31 1940ல் அவன் தூக்கிலிடப்பட்டான்.

அந்த புரட்சி வீரன் உத்தம் சிங்.

(For ItsDiff Radio – September 7, 2011)


நவம்பர் 17 1920.

பின்னாளில் எட்வார்ட் VIII என்ற அரசராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது கல்கட்டாவிற்கு விஜயம் செய்தார். அந்நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர் நோக்கியிருந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக நீதி மன்றத்தில் வாதாடி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசபற்று மிக்க வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர். அப்படி கல்கத்தா பகுதியில் போராடிய வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்க தலைமை தாங்கினார். வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவில் நுழைந்த பொழுது அங்கு சாலைகளிலும், மற்ற இடங்களிலும் வரவேற்க ஒருவர் கூட இல்லை. முழுமையாக பந்த் செய்து புறக்கணிப்பை வெற்றி பெற செய்தார்.

அவர் வழக்கறிஞ்கராக பணியாற்றிய பொழுது அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின் வழக்கையும் கையிலெடுத்துக் கொண்டார். அந்த வழக்குக்கு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்று பெயர் இருந்தது. லார்ட் கிங்ஸ்போர்டை குதிராம் போஸும், பிரஃபுல்ல குமார் ஷாக்கியும் கொல்ல முயன்ற போது கிங்ஸ்போர்ட் தப்பினார். ஆனால் இரண்டு அப்பாவி ஆங்கில பெண்மணிகள் இறந்து போயினர். அரவிந்த் கோஷ் இந்தச் சதிக்கு பின்னால் உள்ள தலைவர் என்று ஆங்கில அரசு முடிவுக்கு வந்திருந்தது. ஒருவரும் அவருக்காக வாதிட முன்வரவில்லை. அனால் தேசபக்தி மிகுந்த இந்த கல்கத்தா வழக்கறிஞர் வழக்கை எடுத்துக் கொண்டார். வழக்கு 126 நாட்கள் நீடித்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 4500 தஸ்தாவேஜூக்களும், பொருட்களும் வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது கோஷை தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றது ஆங்கில அரசு. அந்தத் வழக்கறிஞரின் ஒன்பது நாள் முடிவுரைக்கு பின்னர் அரவிந்த கோஷ் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞர் தன் வாதத்திறமையால் கோஷை விடுதலை செய்ததுமல்லாம்ல் அதற்க்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வெற்றி பெறாதிருந்தால் நமக்கு ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி கிடைத்திருக்கமாட்டார்.

மேலும் இந்த வழக்கறிஞர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மரணப் படுக்கையிலிருந்த பொழுது பெங்கால் ஆர்டினன்ஸ் என்று கூறப்பட்டு வந்த மசோதாவை எதிர்த்துப் போராடினார். தீவிரவாதி என்ற சந்தேகம் மட்டுமே ஒருவரை கைது செய்ய போதுமான காரணம் என்ற நியாமற்ற மசோதா அது. கறுப்பு மசோதா என்ற அழைக்கப்பட்ட அந்த மசோதாவை எதிர்க்க தன்னை படுக்கையிலேயே கோர்ட்டுக்கு எடுத்து செல்ல கேட்டுக் கொண்டார். இரண்டு மருத்துவர்கள் துணையுடன் சென்று வாதாடினார். அந்த மசோதா தோற்றது.

ஜூன் 16 1925 அன்று அவர் உடல்நிலை காரணமாக இயற்கை எய்தினார்.

அந்த வழக்கறிஞர் தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்.

(For ItsDiff Radio –  August 23, 2011)


ஃபெப்ருவரி 4, 1922

மகாத்மா காந்தியின் தலைமையில் சட்ட மறுப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஷவ்ரி ஷவ்ராவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நகரில் மையமாக உள்ள அங்காடிகள் இருக்கும் சந்தையை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். அவர்கள் “ஆங்கில அரசே! இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”, “மகாத்மா காந்தி வாழ்க” போன்ற கோஷங்கள் எழுப்பிச் சென்றார்கள். அப்பொழுது கலவரங்களை எதிர்பார்த்து காத்திருந்த போலீஸ் படை ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. மேலும் போராட்ட ஊர்வலத்திலிருந்த மூன்று பேரை மிகக் கொடூரமாக போலீஸ் தடியால் அடித்தது. அடித்ததில் மூவரும் உயிர் நீத்தனர். வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகளை மறந்து கையில் இருந்த தீப்பந்தங்களுடன் போலீஸ் படையை துரத்தி சென்று அவர்களில் இருபத்து மூன்று பேரை மாய்த்தது. மிகவும் துயரமான இச்சம்பவம் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஷ்வ்ரி ஷவ்ரா கலவரம் என்று வர்ணிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு போராட்டக்காரர்களில் 225 பேரை கைதுசெய்து அவர்க்ளை தூக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தது. அப்பொழுது ஒரு தலைவர் தான் 1909 முதல் நிறுத்தி வைத்திருந்த வழக்கறிஞர் தொழிலை கையில் எடுத்தார். தன் வாதத் திறமையால் 153 பேரை குற்றமற்றவர்களாக பிரிட்டிஷ் அரசிடம் நிறுபித்து அவர்கள் விடுதலை அடையச் செய்தார்.

இந்தத் தலைவர் சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்ப்பார். 1886 முதல் 1936 வரை அநேகமாக அனைத்து காங்கிரஸ் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். 1906 ஹிந்து மஹாசபா இயக்கத்தை நிறுவினார்.  பிriட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்பதற்க்காக ஹிந்து மஹாசபா அங்கத்தினர் போராடினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து போராடும் பொருட்டு, அனைத்து தேர்தல்களில் போட்டியிடுவதை கைவிட்டார்.

இவர் பிரிட்டிஷ் காலனிகளுக்கு வேலை செய்யும் பொருட்டு இந்தியர்களை அடிமைகளாக கொண்டு செல்வதை எதிர்த்து போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக  1918, 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பனாரஸ்-ஹிந்து பல்கலைகழகத்தை வாரனாசியில் நிறுவனம் செய்தார்.

இப்படி பல்வேறு துரைகளிலும் பணியாற்றிய மற்றும் இந்தியாவின் விடுதலைக்கு போரடியவருமாகிய அந்தத் தலைவர் மதன் மோகன் மாளவியா.

(For ItsDiff Radio – July 27, 2011)


ஆகஸ்ட் 22 1907

ஸ்டட்கர்ட், ஜெர்மனி

சர்வதேச சோஸியலிஸ மாநாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே ஒரு அம்மையார் இடி முழக்கம் போன்று தன் உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த அம்மையார் அந்த கூட்டத்தில் தனக்கு பேச கிடைத்தது ஒரு பொன்னான வாய்ப்பு என்று கருதினார். காரணம் அவரது தேசப் பற்று. ஆம். பிரிட்டிஷ் அரசால் இந்தியா அடிமைப்படுத்தப்பட்டு அதன் பிரஜைகள் அல்லலுறுவதை உலக அரங்குகுக்கு எடுத்துச் சொல்ல அது ஒரு அரிய சந்தர்ப்பமே. பல் வேறு தேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் தேசங்களின் தலைவிதிகளை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர்கள். அம்மையார் எண்ணற்ற இந்தியர்களின் அவலங்களையும் ஏழ்மை நிலையையும் அனைவருக்கு எடுத்துக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டிஷ் அரசு 35 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார். இந்திய பிரஜைகளிடமிருந்து இப்படி கொள்ளையடிப்பதனால் நாளுக்கு நாள் இந்தியாவின் பொருளாதார நிலை சீர் குலைவதை பற்றி எடுட்துரைத்தார். “மனிதகுலத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் வாழ்கின்றனர். சுதந்திரத்தை விரும்பும் எவரும் இந்தப் பிரஜைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை அடைய ஒத்துழைக்கவேண்டும்” என்று கூறி தன் உரையை முடித்தார். அதன் பின் ஒரு காரியத்தை மேற்கொண்டார். சட்டென்று ஒரு இந்திய கொடியை ஏற்றினார். ”இது தான் சுதந்திர இந்தியாவின் கொடி. சுதந்திர இந்தியா பிறந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக உயிர் துறந்த எண்ணற்ற விடுதலை வீரர்களினால் அது புனிதப்ப்டுத்தப்பட்டுள்ளது. அதன் பெயரில் சுதந்திரத்தை பிறப்புரிமையாக கருதுபவர்கள் அனைவரிடமுமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்” என்று முழங்கினார்.

மாயத்தால் கட்டுண்டவர்கள் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று அந்தக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். அந்தக் கொடி 1905ல் வீர் சாவர்க்கார், மற்றும் சில தேசப் பற்று மிகுந்தவர்களுடன் சேர்ந்து அந்த அமமையார் வடிவமைத்தார். முன்னதாக பெர்லினிலும், வங்காளத்திலும் பறந்த அந்தக் கொடி பச்சை, காவி, சிகப்பு பட்டைகள் கொண்டது. பச்சை பட்டையில் அன்றைய இந்தியாவில் இருந்த 8 பிராந்தியங்களை குறிக்கும் வண்ணம் 8 மலரும் தாமரைகள் இருந்தது. நடுவில் இருந்த காவிப் பட்டையில் தேவநாகிரி எழுத்துகளில் ”வந்தே மாதரம்” பொறிக்கப்பட்டிருந்தது. கீழே இருந்த சிகப்பு பட்டையில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை குறிக்கும் அரை பிறைச் சந்திரனும், உதய சூரியனும் இருந்தது.

இந்த துணிச்சல் மிகுந்த தேச பற்று மிக்க அம்மையார் மேடம் காமா என்று அழைக்கப்பட்டு வந்த பிக்காய்ஜி ரஸ்டம் காமா.

(For ItsDiff Radio – 07/20/2011)


1919 ஆம் ஆண்டு. முதலாம் உலகப் போர் முடிந்திருந்தது.

அதன் முடிவுகள் துருக்கியில் ஆட்டோமேன் சாம்ராஜ்யம் நடத்தி வந்த காலிஃபட்டை பாதித்துக் கொண்டிருந்தது. காலிஃபெட் என்பது அரசாங்கம் இஸ்லாமிய சட்டங்களை அமல் படுத்தி அரசு நடத்தும் முறை. ஆட்டோமேன் சாம்ராஜ்யத்தின் சுல்தான் அப்போதைய காலிஃப்ஃபாக இருந்து வந்தார்.ஆட்டோமேன் பேரரசு பாதுகாத்து வந்த அகில இஸ்லாமிய பிரந்தியத்திலிருந்தும் காலிஃபேட்டிலிருந்தும் எகிப்து, சிரியா போன்ற பல நாடுகள் பிரிவதற்கு பிரிட்டிஷ் அரசு அனுமதித்திருந்தது. இதனால் இந்திய இஸ்லாமியத் தலைவர் ஒருவர் மனம் கலங்கினார். காலிஃபேட்டை காப்பாற்ற முயற்சி எடுத்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்தஃபா கெமால் அட்டொடர்க் என்ற மேற்கத்திய சார்புள்ள துருக்கியர் மூலமாக துருக்கியில் மேற்கத்திய கொள்கை சீர்த்திருத்தங்களை புகுத்துவதை இஸ்லாமிய மத அரசியலில் தலையிடுவதாக அந்தத் தலைவர் எண்ணினார். மேலும் இந்தியாவின் விடுதலையில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். இந்தப் பிண்ணனியில் இந்தியாவில் பிற இஸ்லாமிய தலைவர்களுடன் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். அதன் பெயர் கிலாஃபட் இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துருக்கிய தலையீட்டை எதிர்த்து போராட முடிவு செய்தார். இதற்காக லண்டனுக்கு 1919ல் பயணம் மேற்கொண்ட குழுவில் இடம்பெற்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முஸ்தாஃபா கெமாலை துருக்கிய சுல்டானுக்கு எதிராக செயல்படுவதை தடுக்க கோரிக்கை விடுத்தார். இந்தியா திரும்பியதும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்க முயன்றார்.

அப்பொழுது இந்திய சுதந்திரத்திற்க்காக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பல போராட்டங்கள் நடத்தி வந்தனர். கிலாஃபட் இயக்கத்திற்கும், இந்திய தேசிய காங்கிரஸிர்க்கும் பொதுவான பகைவராக இருந்து வந்தது பிர்ட்டிஷ் பேரரசு. தலைவருக்கு ஏற்கனவே இந்திய விடுதலையில் ஆர்வம் இருந்ததால் மகாத்மா காந்தியுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன் படிக்கையின் படி கிலாஃபட் இயக்கமும் காங்கிரஸும் இணைந்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தியது. ஆனால் 1922ல் ஷவ்ரி ஷவ்ராவில் நடந்த வன்முறை போராட்டத்தினால் காந்தியடிகள் போராட்டத்தை கைவிட நேர்ந்தது. மேலும் தலைவர் நடத்திய போராட்டத்தை முதலிலிருந்தே தேசிய போரட்டமாக பார்க்க விரும்பாத சில காங்கிரஸ் தலைவர்களும் இந்து மஹாசபா தலைவர்களும் அவருடன் ஒத்துழைக்க மறுத்தனர். இதனால் தலைவர் பெருத்த ஏமாற்றம் அடைந்தார்.

இவருக்கு ஒரு கனவு இருந்து வந்தது. அதை அவர் இவ்வாறு கூறுகிறார் – ”ஒரு நாள் இந்தியாவின் அனைத்து மதங்களும் இணையும் என்பதே என் கனவு”.

ஆனாலும் அவருடைய போரட்டங்களை நிறுத்தவில்லை. முதலாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தியடிகளுடன் கலந்து கொண்டார்.

இவர் 1931ல் காலமானார்.

அந்தத் தலைவர் மௌலானா முகமத் அலி.

அடுத்த பக்கம் »