Indian culture



எங்கள் கல்லூரி நண்பன் ஸ்ரீதரின் பெண் மனஸ்வினி. மனஸ்வினி சிறு வயதிலிருந்து நடனம் கற்றுக் கொள்கிறாள். சமீபத்தில் NDTV அவளது நடன நிகழ்ச்சியிலிருந்து ஒரு க்ளிப்பை ஒளிபரப்பியது. பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. நண்பனின் பெண் என்பதற்காக சொல்லவில்லை, உண்மையிலேயே அழகாக ஆடுகிறாள். (கிட்டத்தட்ட இரண்டு நிமிஷம் கழிந்த பிறகு அவளுடைய நடனம் வருகிறது.)


இது அவளுடைய 75-ஆவது நிகழ்ச்சியாம். கடின உழைப்பு தெரிகிறது. ஒரு துறையில் நல்ல திறமை அடைய பத்தாயிரம் மணி நேரம் பயிற்சி பெற வேண்டும் என்று சொல்வார்கள். மேலேயே பயிற்சி பெற்றிருப்பாள் என்று நினைக்கிறேன். குழந்தைகள் பத்தாயிரம் மணி நேரம் பயிற்சி பெற வேண்டுமென்றால் அம்மா ஜெயஸ்ரீ, அப்பா ஸ்ரீதர் இரண்டு பேரும் எவ்வளவு உழைக்க வேண்டும்! ஸ்ரீதர் படிக்கும் காலத்தில் கூட இவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருக்கமாட்டான்!

இந்தக் கால இளைஞர் இளைஞிகள் எஞ்சினியரிங், டாக்டர், காமர்ஸ் என்று வழக்கமான வழியில் போகாமல் வேறு துறை பற்றி நினைப்பதே சந்தோஷமாக இருக்கிறது!

மனஸ்வினியை நான் கடைசியாகப் பார்த்தபோது அவளுக்கு ஒரு பத்து வயதிருக்கலாம். சிறு பெண் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், குழந்தைகள் எவ்வளவு சீக்கிரம் வளர்ந்துவிடுகிறார்கள்! இனி மேல் குழந்தை என்று சொல்வதே தவறு!


(இது அண்மையில் தான் ”அவார்டா கொடுக்கறாங்க” ப்ளாக்கில் வெளியானது. ஒரு சிறிய குழப்பத்தினால் இங்கே வரவேண்டியது அங்கே வெளிவந்துவிட்டது. எனவே மீண்டும் இங்கே.)

(இது ஈஷ்வர் கோபால் அனுப்பியுள்ள செய்தி)
திரு. உமர் எழுதிய ‘கலை உலகச் சக்கரவர்த்திகள்’ என்ற நூலிலிருந்து சில சுவாரசியமான தொகுப்புகள் :-

‘நாதசுவரச் சக்ரவர்த்தி’ டி.என். ராஜரத்தினம் பிள்ளை பிரயாணம் செய்யும்போது, ரயிலிலும் சரி, காரிலும் சரி, கச்சேரிக்குச் செல்லும்போது ஒரு பெரும்படையுடன்தான் செல்வார்.  ஒருதரம் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அவர் வந்து இறங்கியபோது அவருடன் வந்தவர்கள் சாரதா (அவர் மனைவிகளுள் ஒருவர், அவருக்கு ஐந்து மனைவிகள்), 2 அல்சேஷன் நாய்கள், 1 தாளம் போடுபவர், 1 ஒத்து ஊதுபவர், 2 தவில் வித்வான்கள், 1 நாதசுவர வித்வான், 2 எடுபிடிகள் ஆக பத்து நபர்களுடன் வந்திறங்கினார். பிரயாணத்திலும் கூட அவரது ஆடம்பர வாழ்வு தெரிந்தது.

இவர் ஒரு தனிப் பிறவி! சுகபோகங்களின் சிகரம்.  கேவலம், கையொப்பம் இடட்டும் – கொட்டைக் கொட்டை எழுத்துகள். அரைப் பக்கம் நிரம்பிவிடும். லெட்டர் பேப்பரும் வால் நோட்டீஸ் மாதிரித்தான். அதன் ஜோடி கவர் 15 அங்குலம் நீளமாகவும் இருக்கும். தபால் இலாகாவுக்கு நல்ல லாபம். கவரின் மேல் அச்சிட்டுள்ள பட்டம், பதவிகளின் போக்கும் கொஞ்சமும் இளைத்தவையல்ல, ரொம்பவும் பொருத்தமான பட்டங்களும் கூட. ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’, ‘ அகில உலக ஜோதி’…

மோட்டார் கார் பெரிய ரதம், காலனுக்கு (gallon) எட்டு மைலுக்கு மேல் ஓடாது. கச்சேரிகளுக்குப் பிரயாணம் செய்யும்போது,பக்கவாத்திய பரிவாரம், குடும்பம் சகலமும் காரில் அடங்கிவிடும். காதுகளில் மோட்டார் ‘ஹெட் லைட்’டுக்குச் சமமான வைரக் கடுக்கன் ஜோடி, அதை எஸ்.ஜி. கிட்டப்பாவிடம் விலைக்கு வாங்கி அணிந்துகொண்டதாகச் சொல்லுவார்கள், ஜரிகை மயமான ஆடை, அழுத்த வர்ணங்களில் பட்டுச் சட்டை, கவுன் போலவும் கழுத்து முதல் பாதம் வரை சில சமயங்களில் அணிந்துகொள்வார், முதலாளி மட்டுமேயல்ல, செட்டிலுள்ள பையன்களும் ஆடம்பரமான வேஷத்துடந்தான் இருப்பார்கள்.

பொடி டப்பி, பேர் பொடி டப்பியானாலும், டிரங்க் என்றுதான் சொல்லவேண்டும். பாப்பா கே.எஸ்.வெங்கட்ராமையா, வெள்ளியும் பொன்னும் கலந்த பெரிய பொடி டப்பியைப் பிரத்தியேகமாகத் தயாரித்து, ராஜரத்தினம் பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வெற்றிலைப் பெட்டி, ஒரு கூட்ஸ் வண்டி மாதிரி இருக்கும். கூஜா ஒரு வெள்ளி டிரங்க். இவ்வளவையும் தூக்கிக்கொண்டு, ரயில் பிரயாணம் முதல் வகுப்பில் வருவார்.

டி.என்.ஆர். ஓட்டல் தாசப்பிரகாஷில் தங்கியிருந்தபோது உஸ்தாத் கான்சாகிப் படே குலாம் அலி கான் அதே விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் ஜி.என்.பியை அழைத்துக் கொண்டு டி.என்.ஆர். இருந்த அறைக்கு வந்துவிட்டார். இருவர் வரவையும் கண்டு பூரித்துப் போனார் டி.என்.ஆர். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த்தும், கான்சாகிபின் பாட்டைக் கேட்க ஆசைப்பாட்டார் டி.என்.ஆர். டி.என்.ஆரின்  ஆசையை ஜி.என்.பி. சொன்னது, ‘மாண்ட்’ ராகத்தில் அற்புதமாக அரை மணி நேரம் பாடினார் உஸ்தாத். கான்சாகிப் பாட்டைக் கேட்டதும் ஜி.என்.பி. அப்படியே மயங்கிவிட்டார். ராஜரத்தினம் பிள்ளைக்கு குஷி வந்துவிட்ட்து. விடுவாரா பிள்ளை, படே குலாம் வாசித்த அதே ‘மாண்ட்’ ராகத்தை தனது நாதசுவரத்தில் இரண்டு மணி நேரம் வாசித்தார். ஜி.என்.பி-யும் படே குலாம் அலி கானும் வியந்துவிட்டார்கள்.

“நாதசுவரச் சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை’ என்று விலாசமிட்டு வந்தால்தான் கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ பிரித்துப் பார்ப்பார். ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று தனது பெயருக்கு முன் போடாத, மொட்டையாக டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று மட்டும் வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே குப்பையில் வீசிவிடுவார்.

நாகப்பட்டினத்தில் ஒரு நாதஸ்வர வித்வான். அவர் கையில் நாதஸ்வரம், வாசிப்பில் அபஸ்வரம், ஆனால் வேஷத்தில் ராஜரத்தினம் பிள்ளை அவர்களை அப்பட்டமாகக் காப்பியடித்துக் கொண்டிருந்தார். முன்பு அவர் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் கிராப்புத் தலை ஆனார்.  அதே ஜொலிப்புக் கடுக்கன், அதே டால் வீசும் மோதிரங்கள் போதாக்குறைக்கு “ஏகலைவன் மாதிரி அண்ணாச்சியை மனசிலே வச்சுக்கிட்டு வாசிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அத்துடன் நிற்காமல் ராஜரத்தினத்துக்கு நாதஸ்வரம் செய்து தரும் ஆசாரியைப் பிடித்து, அவருடைய வாத்தியத்தின் பிரத்தியேக அமைப்பையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  அத்துடனாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். “அண்ணாச்சி வாத்தியம் இருபத்தேழு இஞ்சு தானே, என்னுடைய வாத்தியத்தை இருபத்தெட்டரையாகப் பண்ணிவிடு” என்று வேறு சொல்லி வைத்தார். இது எப்படியோ பிள்ளைவாளின் காதுக்கு எட்டிவிட்டது.  அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்.  கொஞ்ச நாள் கழித்து ராஜரத்தினம் பிள்ளை நாகப்பட்டினம் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே ஒரு கச்சேரி. போன உடனேயே உள்ளூர் நாதஸ்வரத் தம்பிக்கு சொல்லியனுப்பினார். தம்பிக்கு ஒரு புறம் சந்தோஷம், இன்னொரு புறம் பயம். ஒருவாறு மனதைத் திடப்படுத்திக்கொண்டு ராஜரத்தினத்தின் முன் தயங்கித் தயங்கி நின்றார்.

“என்ன தம்பி, சவுக்கியமாயிருக்கியா”?

“இருக்கேன், உங்க ஆசீர்வாதம்”.

“அசப்பிலே பார்த்தா என்னை மாதிரியே இருக்கே. என்னைப் போலவே ஊதறியாமே? பேஷ், பேஷ், யாருகிட்டே பாடம்”?

“உங்களையே குருவா மனசிலே எண்ணிக்கிட்டேனுங்க, கேட்கப் போனா இந்த வட்டாரத்திலே என்னை எல்லோரும் ‘சின்ன ராஜரத்தினம்’னுதான் சொல்லுவாங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்!”

“அது சரி நீ என்னவோ ஆசாரிகிட்டே உன் வாத்தியத்தை இன்னும் கொஞ்சம் நீளமாகச் செய்யச் சொன்னயாமே, என்ன ரகசியம் அதிலே”?

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, மந்தர ஸ்தாயியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாப் பேச வைக்கலாம்னு ஓர் இஞ்ச் கூடுதலா பண்ணச் சொன்னேனுங்க”.

“அது போவட்டும், டிரஸ், கிரஸ், ஆபரணங்கள் எல்லாம் என்னைப் போலவே போட்டுகிட்டு இருக்கியே?”

உள்ளூர்த்தம்பி ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். தம்பிக்கு நிறைய காப்பி, பலகாரம் வாங்கிக் கொடுத்த பின், இருவரும், ஒரு காரில் ஏறி, வெளியே போனார்கள். ராஜரத்தினம் தன் ஓட்டுனரை விளித்து, “நேரே சலூனுக்கு ஓட்டப்பா!” என்றார். கார் சலூன் போய்ச் சேர்ந்த்து. தாம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உள்ளூர்த் தம்பியைப் பக்கத்து நாற்காலியில் உட்காரச் சொன்னார். தம்பிக்கு பகீரென்றது. “என்ன விபரீதம் நடக்குமோ”? என்று தயங்கினார்.

“சும்மா உட்காருப்பா!” என்றதும் தயங்கித் தயங்கி நாற்காலியில் ஏறி உட்கார்ந்திருந்தார். முடி திருத்தும் கலைஞரைப் பார்த்து, “இரண்டு பேருக்கும் மொட்டை அடி, திருப்பதி ஸ்டைலில்” என்றார். உள்ளூர்த் தம்பி அலறி, “என்னங்க இது! நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கதறியே விட்டார். “பின்னே என்னவென்று நினைச்சுகிட்டே? எல்லாத்திலேயும் நீ என்னைக் காப்பி அடிக்கிறே. நான் கடுக்கன் போட்டா நீ கடுக்கன் போடறே. நான் தோடா போட்டா நீயும் ‘தோடா’ போடறே. கழுத்து சங்கிலியிலே பாதியை
ஜிப்பாவுக்கு வெளியே எடுத்து விடுக்கிறே. கட்டுக்குடுமி வச்சுக்கிடா கட்டுக்குடுமி வச்சுக்கிறே, கிராப்பு வச்சிக்கிட்டா கிராப்பு வச்சிக்கிறே. வாத்யம் பண்றதிலே என்னை ஒரு படி மிஞ்சி ஒன்றரை இஞ்ச் கூட வைச்சு ஆர்டர் பண்றே. நான் இப்ப மொட்டை அடிச்சுக்கப்போறேன். நீயும் அடிச்சுக்க!” என்றார். தம்பிக்கு புத்தி வந்து சரணாகதி அடைந்த பிறகுதான் சலூனை விட்டு வெளியே வந்தார்.

டி.என்.ஆர். 1956ஆம் ஆண்டில் மாரடைப்பால் காலமானார். இவர் சம்பாதித்த தொகையின் மதிப்பு அக்காலத்திலேயே கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பார்கள். ஒரு கச்சேரிக்கு 1950ம் ஆண்டிலேயே பத்தாயிரம் ரூபாய் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்வளவு பணம் குவிந்தும் சிக்கனமாகச் செலவு செய்யாது மிகவும் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. இவரின் இறப்புச் சடங்குகளை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ஏற்றுக்கொண்டார்.


அமேரிக்காவில் தீபாவளி எப்படி கொண்டாடுவார்கள் என்று என் உறவினர்கள் பல முறை கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்படி கேட்பவர்களுக்கு முன்பெல்லாம் ஒன்றும் சொல்ல இருக்காது. அதாவது ஒரு எட்டு வருடம் முன்பெல்லாம், தீபாவளி என்பது சென்னை மற்றும் பிற ஊர்களில் இருக்கும் உறவினர்களுக்கு செய்யும் சில ஃபோன் கால்களுடன் தீபாவளி காலை முடிந்துவிட்டாதாக தோன்றும். என் அன்பு மனைவியிடம் இருந்து சில ஸ்வீட்ஸுடனும், வீட்டில் ஒரு சிறிய பூஜையுடனும் தீபாவளி இரவும் முடிந்துவிட்டதாகத் தோன்றும். இப்படி அமைதியான முறையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஒரு ஏக்கத்தை விட்டில் நிறைத்து விட்டு வந்து போகும். இது அனேகமாக இங்கு இன்றும் பல இல்லங்களில் நடக்கும் ஒரு காட்சிதான். ஆனால் சில வருடங்களாக இதில் இனிய மாற்றங்கள். இந்த மாதிரி போரடித்த தீபாவளியை போக்க வேண்டும் என்று மனைவியும் நானும் சிந்திக்க ஆரம்பித்தோம். அதன் விளைவாக ஒரு பாரம்பரியம் உருவாகத் தொடங்கியிருக்கிறது.

தீபாவளி நெருங்குகிறது…. தம்பிகளுடனும், கம்பவுண்ட் நண்பர்களுடனும் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே எந்த வெடிகள் வாங்க வேண்டும் என்று ஒரு நூறு ரூபாய்க்கு பட்டியல் போட்டு, கடைசியில் ஒரு வழியாக அப்பா சம்மதத்துடன் ஒரு இருபத்தைந்து ரூபாய்க்கு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்ன்ர் தான், வெடி மற்றும் மத்தாப்புக்கள் வருகிறது. அது போலத்தான் புதிய உடைகளும். திபாவளிக்கு முந்தின தினம் டெய்லர் கடைக்குப் போய் காத்திருந்து, அவர் கருணையில் கடைசியில் இரவு ஒரு ஒன்பது மணிக்கு புதிய உடைகள் வந்து சேர்கிறது. இதல்லாம் ஒரு துன்பமாயினும் அதிலும் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது. பாட்டி வீட்டில் தான் அனேகமாகத் தீபாவளி. மாலை அப்பா வந்ததும் டவுன் பஸ் பிடித்து கொட்டும் மழையில் கடைசி ”யாக்கோபுரம்” பஸ் பிடித்து கிட்டதட்ட இரவு பத்தரை மணிக்கு பாட்டியின் ஊர் போய் சேர்கிறோம். ஊரே அந்த இரவிலும் கோலாகலம் அடைந்திருக்கிறது. ஒரு வீட்டிலும் முன் கதவு மூடப்படவில்லை.ஒவ்வொரு வீட்டின் முன்னும் சித்தப்பா,பெரியப்பா, மாமா-அத்தை இவர்களின் பையன்களும், பெண்களும் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது வெளியே வந்து மகிழ்ச்சி பொங்க ”வாங்க வாங்க” என்று அபபாவிடமும், அம்மாவிடமும் விசாரித்துவிட்டு “போளி ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது”, “துக்கடா அடுப்பில் இருக்கிறது” என்று எதாவது சொல்லிப் போகிறார்கள்.அதற்க்குள் சித்தப்பா எங்களை பார்த்து வந்து “என்ன கடைசி பஸ் தான் கிடைத்ததா” என்று விசாரித்துக் கொண்டே அம்மா கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொள்கிறார்…வெடி மத்தாப்புகளுக்கிடையிலும், குசலம் விசாரிப்புகளுக்கு இடையிலும் புகுந்து, கடந்து பாட்டி வீடு வந்தடைகிறோம். அங்கே சித்தப்பா மகன்கள் மற்ற நண்பர்களுடன் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாட்டி வந்து எல்லோரையும் வரவேற்கிறாள். வந்ததும், வராததுமாக “லக்‌ஷ்மி, வடைக்கு அரைத்துக் கொண்டிருந்தேன், நல்ல வேலை வந்துட்ட. போய் அதை பாத்துக்க” என்று சொல்ல அம்மா உடைகளை மாற்ற நேரமில்லாமல் அடுப்படியில் சித்திகளுடன் ஐக்கியமாகிறாள்.
“என்ன டெய்லர் நேரமாக்கிட்டானா? கடைசி கார் தானா கிடைச்சுது?”
“இல்லம்மா, அஃபீஸ்ல் வேலை 7 மணி வரை இருந்துது. அப்புறம் டெய்லர்ட்ட போயிட்டு வரும் போதே, மழை வேற”
“சரி விடு. வா சாப்பிடு…”
“நீங்களும் வாங்கடா…” நாங்களும் உற்ச்சாகமாகி பின்னல் ஓடுகிறோம்.
எல்லோரும் பேசிக்கொண்டே சுடச் சுட தோசை மற்றும் தேங்கா சட்னி, சாம்பார் ஸ்வீட்கள் முதலியவற்றை கபளீகரம் பண்ணுகிறோம்.
அப்பா மற்றும் சித்தப்பா ஊர் முழுவதும் உள்ள சகோதரர்களையும், தங்களைப்போன்று வெளியூரிலிருந்து வந்த சகோதரர்களையும் (எல்லாம் பெரியப்பா – சித்தப்பா வீட்டு சகோதரர்கள் தான் – ஊரே சொந்தக்ககாரர்கள் தானே) பார்க்க, எல்லோரும் கூடும் அடுத்தடுத்து நீண்ட திண்ணைகள் கொண்ட வீடுகள் அமைந்த நடுத்தெருவிற்க்குச் செல்கிறார்கள். மூன்று வீட்டு திணனையை சகோதரர்கள் நிறத்திருக்கிறார்கள். பலமான சிரிப்பு, பேச்சு, மீண்டும் சிரிப்பு. இனி மேல் இரண்டு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்கள்…நாங்கள் எல்லோரும் அம்மாக்களிருக்கும் அடுப்படிக்கும், தெருவிற்க்கும், அப்பாக்களிருக்கும் நடுத்தெருவிற்க்கும் இரவு 11 மணியிலிருந்து 2 மணி வரை ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். கேட்பதற்கு ஒரு ஆள் கிடையாது. எல்லா இடங்களும் விளக்கு வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. வெடிகளின் சத்தங்களிலும், ஜனங்களின் போக்கு வரத்திலும் ஊர் நிறைந்திருக்கிறது….

முப்பது வருடத்திற்கு முன்னால் அது. நிச்சயம் இப்பொழுது இப்படியெல்லாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாது. ஆம். இங்கும் தீபாவளி வந்துவிட்டதுதான்.நாளை மறு நாள் தீபாவளி.சித்ரா முன்னரே எல்லோருக்கும் ”ஈவைட்” மூலம் தகவல் அனுப்பி தீபாவளிக்கு ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். தீபாவளி காலையில் ஒன்றும் பண்ண முடியாது. பட்ஷணம் பல பண்ண வேண்டும் என்ற அவளுக்கு ஆசை தான். ஆனால் தனி ஆளாக அதெல்லாம் செய்ய முடியுமா? என்ன சித்திகளும், அத்தைகளும், பாட்டிகளும் வந்து இருந்து இரவெல்லாம் கண்விழித்து செய்யும் காலமும், இடமுமாகவா இருக்கிறது? அனைத்து நண்பர்களும், மனைவிகளும் பிஸியாக இருப்பவர்கள். எல்லோருக்கும் வேலை, வீடு, குழந்தைகள். மொத்தத்தில் தீபாவளி அன்று காலை அலுவலகத்திற்கு லீவ் போட்டால் தான் முடியும் என்ற நிலைமை. அப்படிதான் ஆயிற்று. நான் உதவி செய்யலாம் என்றால் வாரத்திற்கு ஒரு நாள் தான் அலுவலகம் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையில் (மற்ற நான்கு நாட்கள் கோர்ட்டில்)மாட்டிக் கொண்டதால் சித்ராவிற்கு உதவி செய்வதாக அளித்திருந்த வாக்குறுதியை சத்தமில்லாமல் வாபஸ் வாங்கினேன்.

சவாலை சமாளிக்கத்தான் அலுவலகத்தில் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறாள் சித்ரா. பிராஜக்ட் மேனஜர். தீபாவளியும் அவள் கண்ணில் ஒரு சிறு பிராஜக்ட்டாக உருவெடுத்தது. நான் மாலையில் வீடு வந்து சேரும் பொழுது அனேகமாக எல்லாம் தயார். நான் என் பங்குக்கு எதாவது உதவி செய்யவா என்று குற்ற உணர்ச்சியுடன் கேட்டு வைத்தேன்.கேட்கும் போதே ஒரு பயம் தான். எங்கே வேலை நிறைய இருக்குமோ என்று. நல்ல வேலை பெரிதாக  செய்வதற்கு ஒன்றும் மீதம் இல்லை. நண்பர்களும் ஸ்வீட், காரம், டின்னர் ஐட்டங்களுடன் 7 மணிக்கு ஆஜர்.

தீபாவளிக்கு வெடி மத்தாப்பு எல்லாம் ஜூலை மாதமே வாங்கிவிடுவோம். அப்பாடா. இதில் ஒன்றிலாவது இந்தியாவில் கொண்டாடுபவர்களை தோற்கடித்தாகிவிட்டது. அட வெடியெல்லாம் போடுகிறீர்களா என்று ஆச்சர்யபடுகிறீர்களா? ஆம. நிச்சயாமாக. ஜூலை நான்கு இங்கே சுதந்திர தினம். அதற்கு ஃபயர்வொர்க்ஸ் கிடைக்கும். சிவாகாசி சரக்கு இல்லை. அதை வாங்கி வைத்துவிடுவோம். இம்முறையும் அது தான். பேக்யார்ட் என்று சொல்லும் கொல்லை புறத்தில் கோலாகலம் மணி 8 அளவில் தொடங்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்காகத் தானெ. அனைத்து குழந்தைகளும் வந்து சேர்வதற்கு 8 மணி ஆகிவிட்டது. சற்றே நவம்பர் குளிர் மெலிதாக தாக்குகிறது. கம்பி மத்தாப்புகளில் ஆரம்பித்த கொண்டாட்டம் படிப்படியாக் ப்ரோமோஷன் பெற்று, உய் உய் என்ற சத்தங்களுடன் பெரிதாக சில மணித்துளிகள் வெடிக்கும் வெடியாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம்.

பின்னர் ஸ்வீட்களுடன் டின்னர். குழந்தைகளின் விளையாட்டு. பெரியவர்களின் பேச்சுகள். கிட்டத்தட்ட தமிழகத்தில் தீபாவளி கொண்டாடியது போன்ற மகிழ்ச்சி.ஒரு முக்கியமான விஷயம். அனேகமாக உங்கள் வீட்டிற்கெல்லாம் அழையா விருந்தினராக வரிசையாக வருகை தரும் சாலமன் பாப்பையா மற்றும் குழுவினர்கள், திரை நட்சத்திரங்கள், புது சினிமாக்கள் பற்றிய ரிவ்யூக்கள் இவையெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. சாலமன் பாபையாக்களை வீட்டிற்குள் கூட்டி வரும் டி.வி.சேனலகள் எங்கள் வீட்டில் கிடையாது. அடுத்த முறை தீபாவளி அன்று முழுவதும் டி.வி.யை அணைத்து விட்டு கொண்டாடுங்கள். அதன் மகிழ்ச்சியே தனி.

போன வருடமும், இந்த வருடமும் வார இறுதி என்பதால் மகிழ்ச்சியான மன நிலையில் கொண்டாட முடிந்தது. தீபாவளிக்கு விடுமுறை எவ்வளவு அவசியம் என்பது நன்றாகவே புரிந்தது. ஆர்வி – ஹேமா, குழந்தைகளுடன்  சில வருடங்களாக சேர்ந்து தான் தீபாவளி கொண்டாடுகிறோம். இரண்டு வருடத்திற்கு முன் மேலும் இரண்டு நண்பர்களின் குடும்பங்கள். போன வருடம் ஒரு ஐந்து குடும்பம். இந்த வருடம் இந்த எண்ணிக்கையில் மேலும் இரண்டு கூடியது. இவர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் மாமா-அத்தை, பெரியப்பா-சித்தப்பா, பெரியம்மா-சித்திகள்.


அடுத்த வருடத்திற்கு காத்திருக்கிறோம்.


தமிழ்மணம் நட்சத்திர பதிவர் பதிவு 1

முதலில் ஹிந்துத்துவம் என்ற வார்த்தையே தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஹிந்துத்துவம் என்றால் ஹிந்துக்களின் மத, பண்பாட்டு சூழல் என்று பொருள் வருகிறது. நான் ஒரு ஹிந்து. மனப்பூர்வமாக கடவுளை வழிபடுபவன். கோவில்கள் என் உள் மனதில் பதிந்தவை. மகாபாரதமே உலகின் சிறந்த இலக்கியம் என்று நினைப்பவன். (ராமாயணத்துக்கு இரண்டாவது இடம்). ஆனால் இன்று பரவலாக பொருள் கொள்ளும் விதத்தில் நான் ஹிந்துத்துவவாதி இல்லை.

சரி பார்ப்பனீயம் என்ற வார்த்தை பிரயோகம் தவறானது என்றே ஒத்துக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிக்கும் கூட்டம் ஒன்று இங்கே அலைகிறது. இதில் இன்னொரு வார்த்தை பிரயோகத்தைப் பற்றி பேசப் புகுந்தால் ஹனுமார் வால் மாதிரி நீளும். இப்போதைக்கு பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அர்த்தத்திலேயே – காலம் காலமாக ஹிந்துக்கள் விட்டுக்கொடுத்து வந்திருக்கிறார்கள், இந்த அநியாயத்தை சமன்படுத்த ஹிந்துக்கள் கட்டுக்கோப்பாக, ஒரு அமைப்பினால் வழி நடத்தப்பட வேண்டும் – இனி மேல் பேசுவோம்.

நான் சிறு வயதிலிருந்து கண்ட ஹிந்து மதம் மிக சிம்பிள். என் அம்மாவுக்கு பக்தி அதிகம். கோவில் குளம் என்றால் பித்து. காலையில் கந்த சஷ்டி கவசம் சொன்னால்தான் காப்பி கிடைக்கும். என் அம்மாவின் அதிகமான பக்தியால் டீனேஜ் காலத்தில் என் rebellion கொஞ்சம் உக்ரம். கடவுள் நியாயமானவர் என்றால் கோவிலுக்கு போய் ஜால்ரா அடித்தால்தான் எனக்கு நல்லது செய்வாரா? நான் அயோக்கியத்தனம் செய்தாலும் கோவிலுக்கு போனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா? நான் படிக்காமல் தேங்காய் உடைத்தால் எனக்கு அதிக மார்க் வந்துவிடும் என்றால் அது கஷ்டப்பட்டு படித்தவனுக்கு அவர் துரோகம் செய்வதாக ஆகாதா? எனக்கு எது வேண்டும், எது நல்லது என்று கடவுளுக்கு தெரியாதா? அப்படி தெரியாவிட்டால் அவர் கடவுள்தானா? அப்புறம் நான் பிரார்த்தனை செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? வல்ல பூதத்தையும் வலாஷ்டிக பேய்களையும் நான் கேட்காமலே அவர் ஓட்ட வேண்டாமா?

அப்புறம் காலம் போகப் போக பிரார்த்தனை என்பது கடவுளுக்கு தேவை இல்லை, பக்தனுக்குத்தான் தேவை என்று புரிந்துகொண்டேன். பிரார்த்தனை செய்தாலும் ஹிந்துதான், செய்யாவிட்டாலும் ஹிந்துதான் என்ற நிலை எனக்கு பிடித்திருந்தது. உனக்கு எது சரியோ, அதை செய், அதுவே உனக்கு மதம், அதுவே உன் ஆன்மிகம் என்று ஹிந்து மதத்தில்தான் இருக்கிறது என்று தோன்றியது. தென்னாடுடைய சிவனை வணங்குபவனும் ஹிந்து; கற்பூரம் நாறுமோ என்று யோசிப்பவளும் ஹிந்து; ஆத்தாடி மாரியம்மா என்று பாடுபவனும் ஹிந்து; பலி கொடுப்பவனும் ஹிந்து; வாடின பயிரை கண்டபோது கூட வாடுபவனும் ஹிந்து; கல்லால் அடிக்கும் சாக்கிய நாயனாரும் ஹிந்து. பெருந்திருவே கறுப்பண்ணா என்று லா.ச.ரா. குடும்பத்தினர் ஒரு highbrow கடவுளையும் lowbrow கடவுளையும் ஒரே நேரத்தில் கூப்பிடுகிறார்கள். அது அவர்களுக்கு சரியாக இருக்கிறது. கடமையை செய், கடவுளைப் பற்றி கவலைப்படாதே என்று கிருஷ்ணனே கீதையில் சொல்கிறான்! கடவுளும் நாமும் ஒன்று என்ற அத்வைதம்; இல்லை இரண்டு என்று விசிஷ்டாத்வைதம்; இந்த ஒன்று, இரண்டு, மூன்று கவலை எல்லாம் வேண்டாம், ராம நாமம் போதும்; எந்த எழவும் வேண்டாம், வேலையை பாரும் ஓய், கடவுளாவது மண்ணாவது என்று சொல்லும் சார்வாகன் – உங்களுக்கு எது சரிப்படுகிறது? அந்த ஹிந்து மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! நான் எடுத்துக் கொண்ட ஹிந்து மதம் எனக்கு பர்சனலான மதம். அது எனக்கு மட்டும்தான். என் குடும்பத்துக்கு கூட இல்லை.

கவனிக்கவும், ஹிந்து மதத்தில் நிராகரிக்க வேண்டிய கூறுகள் இல்லை என்று நான் வாதிடவில்லை. நான் யோசித்து இந்த இந்த கூறுகளை நிராகரிக்கிறேன், இந்த இந்த கூறுகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் நான் ஹிந்து மதம் என்னை தள்ளி வைக்காது. அட கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொன்னவரே ஹிந்துவாக வாழ்ந்து மறைந்தபோது நமக்கென்ன? ஆனால் குரானின்/பைபிளின்/டோராவின்/கிரந்த் சாஹிபின் இந்த கூறுகளை நான் ஏற்கவில்லை என்று ஒரு முஸ்லிமோ, கிருஸ்துவனோ, யூதனோ, சீக்கியனோ சொன்னால் அது மத விரோதம் (என்று நினைக்கிறேன்.)

எங்கோ ஒரு கவிதை படித்தேன் – தமிழ்தான் என் உயிர்மூச்சு, ஆனால் அதை பிறர் மேல் விடமாட்டேன் என்று. அதைப் போல உங்கள் மத நம்பிக்கை உங்களோடு இருக்கவேண்டும். அது ஹிந்து மதத்தில்தான் சுலபம் என்று நினைக்கிறேன். இப்படி வேறு எதிலும் – குறிப்பாக யூத, கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் இப்படி பெர்சனல் மதம் என்பது முடியாது. புகழ் பெற்ற 10 commandments-ஐ பாருங்கள். முதல் ஐந்தோ ஆறோ என்னை கும்பிடு, வேறு யாரையாவது கும்பிட்டால் உதைப்பேன் என்ற ரேஞ்சில்தான் இருக்கும். எது சரி, எது தவறு என்று நிர்ணயிப்பது புனிதப் புத்தகங்களும், குருமார்களும்தான். மார்ட்டின் லூதர் போப் சரியில்லை என்று சொன்னால் அவருக்கு அபாயம்தான். அவர் தப்பிக்க ஒரே வழி அவரே இன்னொரு கிளை மதத்தின் குரு ஆவதுதான்.

இந்த ஹிந்துத்துவவாதிகள் என்ன சொல்கிறார்கள்? ஹிந்துக்களே ஒன்றுபடுங்கள், முஸ்லிம்கள் முகம்மதுவின் கார்ட்டூனைப் போட்டால் கொந்தளிக்கிறார்கள், சல்மான் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ய வைக்கிறார்கள், நீங்கள் ஏன் எம்.எஃப். ஹுசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தால் சுரணை கெட்டுப் போய் பேசாமல் இருக்கிறீர்கள், நீங்களும் ஒரு மதத் தலைவர்/அமைப்பு பின்னால் ஒன்றுபடுங்கள் என்று கூக்குரலிடுகிறார்கள். முட்டாள்கள் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்கிறார்கள், அதை இந்த அரசும் ஓட்டு அரசியலுக்காக ஏற்கிறது, இது அயோக்கியத்தனம், இதை தடுக்க நீங்களும் முட்டாள்களாக மாறி ஹுசேனுக்கு எதிராக போராடுங்கள் என்பது ஒரு பேச்சா! இவர்களது தீர்வு என்பது நாம் ராமனை/கிருஷ்ணனை வழிபட்டுக் கொண்டே முஸ்லிம்கள் போல நம் மதம் “அங்கீகரிக்கப்பட்ட” வழியில் செல்ல வேண்டும் என்பதுதான். முல்லாவுக்கு பதிலாக சங்கராச்சாரியார்களை, மற்ற சாமியார்களை வைத்துக் கொள்வோம் என்கிறார்கள். இப்படி நான் முருகனை வழிபட்டுக் கொண்டே நம்ம குருநாதர் இந்த புத்தகத்தை ஏற்கிறாரா, இந்த ஓவியத்தை ஒத்துக் கொள்கிறாரா, கோவிலில் தேவாரம் பாடுவது அவருக்கு சரியாக படுகிறதா என்று என் சொந்த யோசனையை விட்டுவிட்டு ஒரு சாயிபாபாவோ, சங்கராச்சாரியாரோ, ஆர்.எஸ்.எஸ்.சோ காட்டும் வழியில்தான் போக வேண்டும் என்றால் அதற்கு பேசாமல் அல்லா பக்கமே போய்விடலாம். எதற்காக நான் முருகனை வணங்கும் முஸ்லிமாக, கிருஷ்ணனை வணங்கும் கிருஸ்துவனாக மாற வேண்டும்?

போலி மதசார்பின்மையை எதிர்த்து போராடுகிறேன் என்று ஆரம்பித்தார்கள். ஓட்டு வேண்டுமென்றால் ஹிந்துக்கள் கட்டுகோப்பான ஒரு அமைப்பாக இருந்தால்தான் முடியும் என்று தெரிகிறது. அதனால் உனக்கு நாங்கள் முல்லாவாக இருக்கிறோம் என்று முடித்திருக்கிறார்கள்.

என் கடவுள் துர்கையா, அல்லாவா, ஏசுவா, புத்தரா, அப்படி எதுவுமே இல்லையா என்று நான் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். உங்கள் முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதமே – என் விஷயத்தில் மூக்கை நீட்டாத வரையில்.

பின்குறிப்பு: கல்லூரி காலத்தில் எனக்கு நாலைந்து நெருங்கிய முஸ்லிம் நண்பர்கள் உண்டு. அவர்கள் யாரும் அல்லா முல்லா என்று அலையவில்லை. முகமது ஃபர்ஹாத் ஜாமாவுக்கு எனக்குத் தெரிந்ததை விடவும் அதிகமாக ஹிந்து மதத்தைப் பற்றி அப்போது தெரியும். ஒரு நாளும் அவன் சல்மான் ரஷ்டியின் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று சொல்லமாட்டான். இந்த பதிவைப் பொறுத்த வரை ஹிந்துத்துவவாதிகளின் கூற்றான முஸ்லிம்களை மத அமைப்பு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை ஒரு வாதத்துக்காக (மட்டும்) முழு உண்மை என்று வைத்துக் கொண்டு எதிர்வாதம் செய்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு


தீர்ப்பு எனக்கு புரியவில்லை என்பதை சொல்லத்தான் வேண்டும். படித்த வரையில் ஒரு நீதிபதி இங்கேதான் ராமன் பிறந்தார் என்று சொல்வது போல இருக்கிறது. (ராமன் இங்கேதான் பிறந்தான் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றல்ல, ராமன் இங்கேதான் பிறந்தான் என்று). இன்னொரு நீதிபதி கோவில் இடிக்கப்படவில்லை, ஏற்கனவே இருந்த இடிபாடுகளின் மீது மசூதி கட்டப்பட்டது என்கிறார். இது இவருக்கு எப்படித் தெரியும் என்று புரியவில்லை. ஒருவர் அது மசூதியே இல்லை, ஏனென்றால் அது இடிபாடுகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்கிற மாதிரி இருக்கிறது. இத்தனை நாள் இது முஸ்லிம் அமைப்புக்கு சொந்தம் என்பதற்கு documentation இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இல்லை என்கிறார்கள். அப்படி எந்த documentation-உம் இல்லை, இது புறம்போக்கு நிலம் என்றால் இத்தனை நாள் கையகப்படுத்துவதில் ஹிந்து அமைப்புகளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அப்புறம் நிர்மோஹி ஆகாராவாம், இதுவும் ஹிந்து அமைப்புதானே, இதற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் என்றும் புரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் கோர்ட்டில் கேஸ் முடிந்தது சந்தோஷம். தீர்ப்பு பிடிக்கிறதோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்வதுதான் (இல்லை அப்பீல் செய்வது) சரியான அணுகுமுறை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய சுட்டிகள்: அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்


பிரபல கர்நாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் ஒரு ப்ளாக் எழுதுகிறார். சுவாரசியமான ப்ளாக். அவரது சில லைவ் கச்சேரிகளைக் கூட நீங்கள் அங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம். (எனக்கு வேலை செய்யவில்லை) மாதிரிக்கு ஒரு பதிவு – எண்பதுகளின் இறுதியில் அவர் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கச்சேரி செய்த அனுபவங்களை இங்கே விவரிக்கிறார்.

ச. சுப்பிரமணியன் நல்ல வாசகரும் கூட. அவர் தமிழிலும் ஒரு ப்ளாக் எழுதுகிறார், இங்கே அனேகமாக தமிழ் வாசிப்பைப் பற்றி எழுதுகிறார். சமீபத்திய பதிவு சிட்டி சுந்தரராஜனைப் பற்றி. (சிட்டி தி.ஜா.வோடு இணைந்து நடந்தாய் வாழி காவேரி எழுதியவர்.)

உங்களுக்கு வேறு எதிலும் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் அவரது யூட்யூப் சானலை கேட்கலாம். அருமையான பாடல்கள் பல இருக்கின்றன. மாதிரிக்கு ஒன்று.

ஆடும் சிதம்பரமோ என்ற கோபாலகிருஷ்ண பாரதியார் பாட்டு.

வீடியோவில் ஒரு நாலரை நிமிஷம் ஆனதும் – “தாள மத்தளம் போட தத்தித்தத்தை என்று” என்ற வரிகளை வீடியோவில் கட்டாயமாக பாருங்கள். மனிதர் என்ஜாய் செய்து பாடுகிறார்!

எனக்கு கர்நாடக சங்கீதம் எல்லாம் தெரியாது. ஆனால் இந்த குரல் வளத்தையும், அருமையான பாட்டுகளையும் கேட்க பெரிதாக ஞானம் எதுவும் தேவை இல்லை. நல்ல இசையை தரும் அவருக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சஞ்சய் சுப்ரமணியனின் ஆங்கில ப்ளாக், தமிழ் ப்ளாக், யூட்யூப் சானல்
நடந்தாய் வாழி காவேரி புத்தகம்


பக்ஸ் ரொம்ப நாளைக்கு முன் துரோணாச்சாரியார் அந்தணரா? என்று ஒரு பதிவு எழுதி இருந்தான். சமூகம் துரோணரை பிராமணன் என்று பார்த்தாலும் அவர் பிராமணன் என்ற லட்சியத்தை அடைந்தவர் இல்லை என்பது அவன் வாதம்.

இந்த தளத்தில் பல சுவாரசியமான மறுமொழிகள் எழுதி இருக்கும் விருட்சம் இதைப் பற்றி தன கருத்துகளை எழுதி இருக்கிறார். பாலகுமாரன் துரோணரைப் பற்றி அன்பு மந்திரம் என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறாராம். அதைப் படித்து இவரது சிந்தனைகள் தூண்டப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு பகுதிகளில் நாவலைப் பற்றியும் கடைசி பகுதியில் தன கருத்துகளையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஜாதி

தொடர்புடைய பக்கங்கள்:
துரோணாச்சாரியார் அந்தணரா? – பக்ஸ்
துரோணாச்சாரியார் அந்தணரா? – விருட்சம் – பகுதி 1, பகுதி 2, பகுதி 3


யுனெஸ்கோவின் கணக்குப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துகொண்டிருக்கின்றன. இந்த மொழிகளை பேசுபவர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள். எந்த நாட்டில் அதிகமான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன தெரியுமா? இந்தியாவில்தான். 196 மொழிகள்! சீனா, ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துகொண்டிருக்கின்றன.

நம்மூரில் பொதுவாக பழங்குடிகள் வாழும் இடங்களில் மொழிகள் அழிந்துகொண்டிருக்கின்றன. வடகிழக்கு பிரதேசங்கள், அந்தமான் தீவுகள், ஹிமாலய மலை அடிவாரங்கள்… நிறைய மொழிகள் நூறு பேருக்குக் கூட தெரியாதவை. கிரேட் அந்தமானீஸ் என்ற மொழி தெரிந்தவர்கள் ஐந்தே பேர்தான். (அதுவும் 2009இல், இந்த வருஷம் எல்லாரும் இருக்கிறார்களோ, என்னவோ.)

தமிழ் நாட்டில் டேஞ்சர் நிலையில் இருக்கும் மொழிகள் எல்லாம் நீலகிரி பக்கம் பேசப்படுபவை. தோடா (Thoda -1981 சென்சஸ் படி 1006 பேர் பேசுகிறார்கள்), கோடா (Koda – 1992 கணக்குப்படி 2000 பேர்), குருபா (Kuruba – >14000, 2001 சென்சஸ் படி), கொரகா (koraga – >16000, 1981 சென்சஸ் படி). தோடா அனேகமாக தோடர்கள் என்ற பழங்குடி மக்கள் பேசும் மொழியாக இருக்க வேண்டும். ராஜம் கிருஷ்ணன் இவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். (குறிஞ்சித் தேன்?) முப்பது வருஷங்களுக்கு முன் நான் ஊட்டி போனபோது இவர்கள் வீடு ஒன்றைப் பார்த்திருக்கிறேன்.

நீலகிரியில் வாழும் இன்னொரு பழங்குடி மக்களான படகர்கள் (Badaga) நிலை பரவாயில்லை. 2001 சென்சஸ் படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த மொழியை பேசுகிறார்கள்.

இது பெரிய காரியம். இதை தொகுத்த ஆசிரியர் குழு பெரிய சாதனை செய்திருக்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து ஒரே ஒருவர் மட்டும் – உதய நாராயண் சிங் – ஆசிரியர் குழுவில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சிங் மைசூரில் இருக்கும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட்ஆஃப் இந்தியன் லாங்க்வேஜஸ் அமைப்பின் தலைவர்.

மொழிகள் மனித இனத்தின் செல்வங்கள். இவற்றை எல்லாம் பாதுகாக்க அரசு கொஞ்சம் பணம் செலவழிக்கலாமே!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய சுட்டிகள்:
யுனெஸ்கோ அழியும் மொழிகள் map
தமாஷ் – அழிந்து கொண்டிருக்கும் மொழியான அங்கமி மொழியை நாங்கள் கற்ற கதை


எம்.எஸ்.

ஜெயமோகனின் ஒரிஜினல் பதிவிற்கு வந்த பல மறுமொழிகளிலும் சரி, எம்.எஸ். பற்றிய என் முந்தைய பதிவிற்குவந்த சில மறுமொழிகளிலும் சரி, ஒரு பொதுவான தீம் உண்டு – இறந்து போனவரை ஏன் கேவலப்படுத்த வேண்டும்? அவரைப் பற்றி இருக்கும் ஒரு புனிதமான பிம்பத்தை ஏன் உடைக்க வேண்டும்?

எது கேவலம்? அவர் தேவதாசி வீட்டில் பிறந்ததா? சதாசிவத்துடன் அவருக்கு திருமணத்துக்கு முன் இருந்த உறவா? அவருக்கும் ஜி.என்.பிக்கும் இருந்த பிணைப்பா?

அவர் தேவதாசி வீட்டில் பிறந்ததில் என்ன கேவலம்? பிறப்பால் ஒருவருக்கு கேவலம் என்று இன்னும் நம் அடி மனதில் ஏதாவது ஓடுகிறதா?

MS, Sathasivamசதாசிவத்துடன் திருமணத்துக்கு முன் அவருக்கு உறவு இருந்தால் என்ன தவறு? அந்த கால விழுமியங்களின் படி சதாசிவம் ஒரு “தாசியை வைத்துக் கொண்டிருந்ததில்” எந்த குற்ற உணர்வையும் அனுபவித்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. “தாசி” வீட்டில் பிறந்த எம்.எஸ்ஸுக்கு, தான் பிறந்த ஜாதியின் பழக்கங்களை மீறி “நல்ல” குடும்ப வாழ்க்கை வாழத் துடித்த எம்.எஸ்ஸுக்கு, ஒருவரோடு வாழ்வதே முன்னேற்றம் என்று தோன்றி இருக்க வேண்டும். அதுவும் அவருக்கு அப்போது தன் குல கலாசாரத்தை விட்டு வெளியேறத் தெரிந்த ஒரு வழி சதாசிவம் மட்டுமே என்று பதிவிலிருந்து தெரிகிறது. அதுவும் இந்த விஷயம் பேசப்படுவது எம்.எஸ்ஸுக்கு கேவலம் என்று சொல்லும் யாரும் இது சதாசிவத்துக்கு கேவலம் என்று நினைக்கவில்லை. வீட்டில் மனைவி இருக்கும்போது ஒரு சிறு பெண்ணை, ஒரு டீனேஜரை, “வைத்துக் கொள்வது” சதாசிவத்துக்கு கேவலம் இல்லை, ஆனால் அப்படி “வைத்துக் கொள்ளப்படுவது” எம்.எஸ்ஸுக்கு கேவலம்! டீனேஜர் என்பதற்கு ஆதாரம் வேண்டுமா? ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் கல்கியின் மகள் கௌரி ராம்நாராயண் எழுதிய கட்டுரையை பாருங்கள் – 1934 -இல், 17 வயதில் சென்னை ம்யூசிக் அகாடமியில் எம்.எஸ் முதல் முறையாக பாடுகிறார். ஜாம்பவான்கள் எல்லாம் புகழ்கிறார்கள். // At this time Thiagarajan Sadasivam entered her life as a dashing suitor. // என்று கௌரி எழுதுகிறார்.

GNBஅவர் ஜி.என்.பியோடு வாழ விரும்பியதில் என்ன கேவலம்? 1939-40 வாக்கில் – சதாசிவம் தொடர்புக்கு நாலைந்து வருஷம் ஆகியும் – அவர் வேண்டிய மனைவி ஸ்தானத்தை சதாசிவம் தரவில்லை. அப்போது சகுந்தலை படப்பிடிப்பு தொடங்குகிறது. ஜி.என்.பி. அவரைக் கவர்கிறார். ஆனால் எம்.எஸ். வேண்டிய மனைவி ஸ்தானத்தைத் தர ஜி.என்.பி.யும் இசையவில்லை. சதாசிவம் எம்.எஸ். கையை விட்டுப் போய்விடப் போகிறார் என்று பயந்தாரோ என்னவோ, அந்த ஸ்தானத்தைத் தர வருகிறார். எம்.எஸ். தன் வாழ்க்கையில் பெரிதும் விரும்பியது ஜி.என்.பியோ, சதாசிவமோ இல்லை, மனைவி ஸ்தானம்தான். அவரும் சதாசிவமும் மணந்து கொள்கிறார்கள். சாப்டர் க்ளோஸ். இதில் என்ன கேவலத்தை கண்டீர்கள்?

ஆட்சேபிப்பவர்கள், எம்.எஸ்.சின் “தொடர்புகள்” கேவலமானவை என்று நினைப்பவர்கள், தலைவன் பரத்தை வீட்டுக்கு போக, தலைவி வீட்டில் உட்கார்ந்து அகநானூறும் கலித்தொகையும் பாடும் காலத்துக்கு போக விரும்புகிறீர்களா? எம்.எஸ்.சுக்கு கேவலமாம், சதாசிவத்துக்கு இல்லையாம். சதாசிவத்தோடு நிரந்தரமான உறவு இல்லாதபோதும் எம்.எஸ்சுக்கு வேறு யார் மீதும் விருப்பம் வரக்கூடாதாம்! பரசுராமரின் அப்பா ஜமதக்னி தன் மனைவி ரேணுகா தண்ணீரில் ஒரு கந்தர்வனின் அழகிய உருவத்தைக் கண்டு அழகாக இருக்கிறானே என்று சொன்னதால் அவள் கற்பு போய்விட்டது என்று அவளை வெட்டச் சொன்னாராம், அதுதான் நினைவு வருகிறது. விக்டோரியன் விழுமியங்கள்!

ஒரு ஒரு ஆட்சேபனை மட்டுமே – இது வரை யாரும் சொல்லாத ஆட்சேபனை – கொஞ்சமாவது சாரம் உடையது – இவை எல்லாம் வெளியே வருவதை எம்.எஸ்.சே விரும்பி இருக்கமாட்டார். உண்மைதான். ஆனால் எந்த ஒரு icon-க்கும் உள்ள இமேஜ் பொய்களின் மேல் கட்டப்படக் கூடாது. அப்புறம் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு privacy குறைவுதான். கலைஞர் எழுபதுகளில் தான் செய்த ஊழல்கள் நினைவு கூரப்படுவதை விரும்புவாரா? ஊழல்கள் மட்டுமில்லை, எந்த எந்த பெண்ணுடன் தொடர்பு இருந்தது என்பது வெளிவருதையும் கூடத்தான் விரும்பமாட்டார். ஆனால் பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இவை எல்லாம் பேசுபொருள்தான்.

மற்றவர்களைப் பற்றி நான் சொல்ல முடியாது, ஆனால் I find M.S.’s story truly inspiring. எம்.எஸ். பெரும் சாதனையாளர் என்று தெரியும். ஆனால் குரல் கடவுள் கொடுத்த வரம்; அமைந்த கணவன் ஒரு மார்க்கெட்டிங் ஜீனியஸ். தற்செயலாக அமைந்த இந்த இரண்டும் மட்டுமே அவரை உயர்த்தியது என்று நினைத்திருந்தேன். அவருடைய struggles என்னை அவருக்கு நெருக்கமாக உணரச் செய்கிறது. இத்தனை கஷ்டங்களையும், அவமானங்களையும் மீறி அவர் சாதிக்க முடியுமென்றால் அதில் நூற்றில் ஒரு பங்கு கஷ்டமும் அவமானமும் படாத நான் அவரின் சாதனையில் ஆயிரத்தில் ஒரு பங்காவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
எம்.எஸ். பற்றிய என் முந்தைய பதிவு
ஜெயமோகனின் ஒரிஜினல் பதிவு
கௌரி ராம்நாராயணின் கட்டுரை

பின் குறிப்பு: நானும் சாதனை செய்யப் போகிறேன் என்றதும் பயப்பட வேண்டாம் – நான் பாடுவதாக இல்லை. 🙂


இந்த தளத்தின் இன்னொரு பொறுப்பாளரான உப்பிலி ஸ்ரீனிவாஸ் கொஞ்ச நாளாக சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் புகழும் பதிவாக போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு அவர் கருத்துகளில் முழு இசைவு இல்லை. என் கண்ணில் சந்திரசேகரர் scholar, அவ்வளவுதான். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது தோன்றியவை:

ஊரில் பரவலாக இருக்கும் நினைப்பு இதுதான். சந்திரசேகரர் உத்தமர். ஞானி. வேதம், சாஸ்திரம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர். உண்மையான துறவி. காஞ்சி மடத்துக்கு இன்றைக்கு மிச்சம் இருக்கும் பேருக்கும் புகழுக்கும் அவர்தான் காரணம். ஜெயேந்திரரோ பலவீனங்கள் உள்ளவர். கொலை செய்யத் தூண்டினார் என்று நம்புகிறோமோ இல்லையோ பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படித்தான். அவருக்கு தத்துவ ஞானம் இருக்கிறதோ இல்லையோ அது அதிகமாக வெளியே தெரியவில்லை. அரசியலில் எல்லாம் தலையிட்டார். அவரால்தான் காஞ்சி மடத்துக்கு பேர் கெட்டது. எனக்கும் ஏறக்குறைய இதே எண்ணம்தான். சந்திரசேகரரை பெரும்பாலான பிராமணர்கள் தெய்வம் என்று கொண்டாட முக்கியமான காரணமே அவர்களுக்கு ஜெயேந்திரர் மேல் உள்ள அதிருப்தியும் வெறுப்புமே என்று எனக்கு தோன்றுகிறது. ஜெயேந்திரர் சந்திரசேகரரின் அடிச்சுவட்டிலேயே சென்றிருந்தால் இன்று சந்திரசேகரரை எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி

சந்திரசேகரர் தனிப்பட்ட முறையில் உத்தமர்தான். ஒரு உண்மையான துறவிக்குரிய லட்சணங்கள் அனேகமாக அவருக்கு பொருந்தித்தான் இருக்கின்றன. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பெரும் பாண்டித்தியம் உடையவர். அவருக்கு தமிழில் பாண்டித்தியம் இருந்தது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. (டாக்டர் நாகசாமி சில இடங்களில் இது பற்றி பேசுகிறார்.) மறைந்துகொண்டிருக்கும் நம் பாரம்பரியம் மீண்டும் தழைக்க பாடுபட்டார். அதர்வ வேதம் மீண்டும் ஓரளவு உயிர்த்தெழ அவர்தான் காரணம் என்று தெரிகிறது. ஒரு நாளைக்கு உப்பில்லாத வாழைப்பூ பொரியலும் சாதமும் கலந்து ஒரு கவளம்தான் சாப்பிடுவார் என்று சொல்வார்கள். உண்மையோ பொய்யோ, மனிதர் உடலில் ஊளைச்சதை எதுவும் கிடையாது. ஊளைச்சதையை விடுங்கள், சதையே கிடையாது. (ஜெயேந்திரர் பார்க்க கொஞ்சம் புஷ்டியாக இருப்பார்.)

இப்படி உண்மையான துறவு ஒரு புறம், அதே நேரத்தில் திறமையான நிர்வாகி/மடாதிபதியும் கூட. ஒரு மடத்தின் பலம் அந்த மடாதிபதி மேல் மக்களுக்கு இருக்கும் நல்ல எண்ணமே என்பதை புரிந்து வைத்திருந்தார். ஒரு நல்ல தலைவனுக்கு வேண்டிய charisma அவரிடம் நிறைய உண்டு. அவரை சந்தித்துப் பேசியவர்களில் அநேகமானவர்கள் மிகவும் impress ஆகி இருக்கிறார்கள். அவர் வருவதற்கு முன் ஐயர்கள் எல்லாரும் ஒரு மடாதிபதி பின் நின்றிருக்கமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஜெயேந்திரர் பேர் இப்படி சீப்பட்ட பிறகும் முக்கால்வாசி ஐயர் கல்யாணப் பத்திரிகைகள் காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன் என்றுதான் அடிக்கப்படுகின்றன (என் கல்யாணப் பத்திரிகையும் அப்படித்தான்.) சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையாக இருந்த கும்பகோணம் மடம் இன்று ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஜெயேந்திரர் கேவலப்படுவதற்கு முன் சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் அது மக்கள் கண்களில் ஏறக்குறைய முதல் இடத்துக்கே வந்து கொண்டிருந்தது. இப்படி அந்த மடத்துக்கு மதிப்பு இருப்பதற்கு சந்திரசேகரரே முக்கிய காரணம். இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது – மடத்தின் பிரஸ்டிஜை வளர்த்த ஒரு துறவி பொய் சொன்னாரா? எனக்குத் தெரிந்து அவர் எங்கேயும் தன் வாயால் இது ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று சொன்னதில்லை, ஆனால் அப்படி சொல்வதை எப்போதும் தடுத்ததில்லை. அதை மறைமுகமாக ஊக்குவித்தார் என்றுதான் நினைக்கிறேன். இந்த ஒரு விஷயம் அவரது துறவுக்கு ஒரு இழுக்குத்தான்.

ஜயேந்திர சரஸ்வதி

ஜெயேந்திரரோ, சொல்லவே வேண்டாம். கோர்ட்டில் எப்போது தீர்ப்பு வருமோ தெரியாது – ஆனால் என்ன தீர்ப்பு வந்தாலும் அவர் மீது படிந்த களங்கம் போகாது. பெண் விஷயத்தில் வீக் என்று அனேகமாக எல்லாரும் நினைக்கிறார்கள். கொலை பற்றி எனக்கே கொஞ்சம் சந்தேகம் உண்டு. அவர் இப்படி எல்லாம் கேவலப்படாவிட்டாலும் அவர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு – ராம ஜன்ம பூமி விஷயத்தில் அவருடைய தலையீடு, பொதுவாக அவருடைய பி.ஜே.பி. சார்பு நிலை, ஒரு காலத்திய ஜெயலலிதா சார்பு நிலை எல்லாம் துறவுக்கு இழுக்கு. ஒரு துறவி அரசியலில் தலையிடுவது என் கண்ணில் தவறுதான். என் நினைவு சரியாக இருந்தால் இவர் பி.ஜே.பி. அலுவலகம் எல்லாம் திறந்து வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் ஜெயலலிதா, பி.ஜே.பி. தலைவர்கள் எல்லாருக்கும் வேண்டியவராக இருந்தார். ஜெயலலிதா கொண்டு வந்த கட்டாய மத மாற்ற தடை சட்டத்துக்கு இவர்தான் மூல காரணம் என்று கேள்வி. மேலும் சந்திரசேகரரோடு ஒப்பிடும்போது இவருக்கும் வேதம், சாஸ்திரம் பற்றி தெரிந்திருப்பது குறைவுதான் என்று தோன்றுகிறது.

ஆனால்:
சந்திரசேகரர் ஹிந்து மதத்தின் காலாவதி ஆகிவிட்ட, அடக்குமுறை அம்சம் உள்ள சில நியதிகளை மீண்டும் நிறுவ முயன்றார். முக்கியமாக, ஜாதி: அவருக்கு வேதம் படிப்பது குறைகிறதே என்ற கவலை இல்லை, ஆனால் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் வேதம் படிப்பது குறைகிறதே என்ற கவலை இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் சொல்லித் தருகிறேன், வேதம் தழைத்தால் போதும் என்று அவர் கிளம்பவில்லை. அவருக்கு பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் என்பதில் நம்பிக்கை இருந்தது. பி.ஏ. கிருஷ்ணன் தலித்கள் கோவிலுக்கு வரலாம் என்று 1939இல் ராஜாஜி தமிழ் நாட்டு முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட மசோதாவை எதிர்த்தார் என்று குறிப்பிடுகிறார். காந்தி அவரை பார்க்க வரும்போது நடுவில் ஒரு பசு மாட்டை நிறுத்தினாராம். ஏனென்றால் காந்தி பனியா, பிராமணர்களை விட “கீழ் ஜாதி”, பசு மாடு இல்லாவிட்டால் “தீட்டாகிவிடும்”. மொட்டை அடித்துக் கொள்ளாத விதவைப் பெண்களைப் பார்க்க மாட்டாராம்; அப்படி பார்க்க நேரிட்டால் அன்று சாப்பிட மாட்டாராம். இதனால் அவரை பார்க்காமல் தவிர்த்த உறவினர்கள் எனக்கு உண்டு. பெண்களுக்கு சமூகத்தில் என்ன இடம் சரியானது என்று நினைத்திருப்பார் என்று தெளிவாகத் தெரிகிறது.

செல்வாக்கு நிறைய இருந்தது. அவர் செயலாக இருந்த காலத்தில் பிராமணர்கள்தான் நிறைய படித்த ஜாதி. இவர் சொல்லி இருந்தால், ஜாதியின் தாக்கம் இன்னும் குறைந்திருக்கும்; பெண்கள் இன்னும் கொஞ்சம் சமமாக நடத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் இவருக்கே அது தவறு என்று தோன்றவில்லை, அப்படிப்பட்ட சமூகமே சரி என்று நினைத்தார். அவரை குறை சொல்லியும் பயனில்லை. 1894இல் பிறந்தவர். அவர் வளர்ந்த காலத்தின் விழுமியங்கள் வேறு. அவரால் அந்த விழுமியங்களை தாண்ட முடியவில்லை.

ஜெயேந்திரர் 1935இல் பிறந்தவர். அவருடைய இளமைக் காலத்தில் ஜாதி தவறு என்று சொல்வதை நிச்சயமாக கேட்டிருப்பார். ஜெயேந்திரர் பல வருஷங்களாக மடத்தை சமூகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்று முயன்றார். மடத்தை இன்னும் வலுவானதாக ஆக்க வேண்டும் என்ற ஆர்வமாகக் கூட இருக்கலாம் – ஆனால் தலித்களோடு பழக முயன்றார். மடம் பிராமணர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொந்தமானது என்று ஆக்க முயன்றார். அவரை சந்திரசேகரர் இருந்த வரைக்கும் சுதந்திரமாக இயங்கவிடவில்லை. ஜெயேந்திரர் மடத்தை விட்டு ஓடிய நிகழ்ச்சிக்கு இதுதான் மூல காரணம் என்று சொல்கிறார்கள். ஜெயேந்திரர் தன் முயற்சியில் வெற்றி அடையவில்லை, இன்றும் மடம் பிராமணர்களின் மடமே. ஆனால் அவர் முயன்றார் என்பது பெரிய விஷயம். ஜெயேந்திரர் சந்திரசேகரரை விட நாற்பது வயது இளையவர். அவருக்கு இது இன்னும் சுலபமாக இருந்திருக்கலாம்.

ஒரு பக்கம் தனிப்பட்ட முறையில் உத்தமரான, ஆனால் காலாவதி ஆகிவிட்ட ஹிந்து மதத்தின் சில பழக்க வழக்கங்களை மீண்டும் நிலைநிறுத்த முயன்ற ஒரு உண்மையான துறவி; இன்னொரு பக்கம், தனிப்பட்ட முறையில் பலவீனங்கள் உடைய, ஆனால் மடத்தை பயனுள்ள பாதையில் திருப்ப முயற்சி செய்து தோற்றுப் போன ஒரு மனிதர். எனக்கு மடத்தை மாற்ற முயன்றவர்தான் மேலானவராகத் தெரிகிறது.

டிஸ்க்ளைமர்: நான் தெய்வத்தின் குரல் எல்லாம் படித்தத்தில்லை. படிப்பேன் என்ற நம்பிக்கையும் இல்லை. புத்தகத்தின் பேரே கொஞ்சம் கடுப்படிக்கிறது. மனிதனை தெய்வமாக்காதீர்கள்!

பின்குறிப்பு: இந்த தளத்தின் இன்னொரு பொறுப்பாளரான நண்பர் ஸ்ரீனிவாஸ் ஒரு பதிவில் சந்திரசேகரர் பல்லக்கிலிருந்து மாயமாக மறைந்து போனார் என்றெல்லாம் எழுதி இருந்தார். இதே ஸ்ரீனிவாஸ் பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா எனக்கு திருவண்ணாமலையில் காட்சி தந்தார் என்று சாரு நிவேதிதா எழுதினால் விழுந்து விழுந்து சிரிப்பார். 🙂 மனிதனை தெய்வமாக்காதீர்கள், அனாவசிய கட்டுக்கதைகள் வேண்டாமே!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஆளுமைகள்–>காஞ்சி சங்கர மடம் பற்றிய பதிவுகள்

அடுத்த பக்கம் »