தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 3

யார் பிரதமரானாலும் முதல்வரானாலும் அமைச்சரானாலும் நம் அன்றாட வாழ்வில் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. அதுவும் இப்போதெல்லாம் யாரும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு யாரும் அரசியலில் நுழைவதும் இல்லை. ஆனால் நேரடியாக சாதாரண (மத்தியதர) மக்களிடம் தாகம் ஏற்படுத்திய அமைச்சர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள்:

மது தண்டவதே, ரயில்வே அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – ரயில் பிரயாணத்தின் கஷ்டத்தை குறைத்தது.
ஒரு காலத்தில் பயணம் என்றாலே ரயில் பயணம்தான். இந்த ஜனதா அரசுக்கு முன் ரயில் பயணம், அதுவும் மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் என்றால் மிகவும் சிரமம்தான். அது சிரமம் என்று கூடத் தெரியாது, ஏனென்றால் ஒப்பிட்டுப் பார்க்க வேறு எதுவும் இல்லை. கட்டை பெஞ்சுகள், மிகவும் வசதி குறைந்த ரயில் பெட்டிகள் என்றுதான் இருக்கும். முதல் வகுப்பை பொறாமையால் எட்டிப் பார்த்தால் குஷன் வைத்த சீட்டுகள் தெரியும். (வேறு என்ன இருக்கிறது என்று தெரியாது, உள்ளே போனால்தானே?) தண்டவதே ரயில்வே அமைச்சரானதும் எல்லா வகுப்புகளிலும் சவுகரியம் உயர்ந்தது, கட்டை பெஞ்சுகள் ஒழிந்தன, எல்லா பெட்டிகளிலும் குஷன் வைத்த சீட்டுகள் வந்தன, நெடுந்தூர ரயில் பயணம் என்பது சிரமமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை என்று முதன்முதலாக புரிந்தது.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், தொழில் அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – அயல் நாட்டு கம்ப்யூட்டர் கம்பெனிகளை வெளியேற்றியது
இந்த liberalization எல்லாம் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஐபிஎம்மும், கோகோ கோலாவும் மார்க்கெட்டை பிடித்திருந்தன. (மார்க்கெட்டின் சைஸ் சின்னது, வசதியானவர்கள் மட்டும்தான் கோகோ கோலா குடிப்பார்கள், மிச்ச பேர் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் காளி மார்க்தான்) ஃ பெர்னாண்டஸ் என்ன நினைத்தாரோ தெரியாது, எல்லா அயல்நாட்டு கம்பெனிகளையும் இந்தியாவை விட்டு துரத்திவிட்டார். (ரஷியாவுக்கு மிக நெருக்கமானவர் என்று அறியப்பட்ட, சோஷலிசம் சோஷலிசம் என்று பேசிய இந்திரா காந்தி அயல் நாட்டு கம்பெனிகளை வெளியேற்றவில்லை, வலதுசாரி என்று அறியப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில்தான் இதெல்லாம் நடந்தது.) அவர் என்ன நினைத்து இதை செய்தாரோ தெரியாது, ஆனால் அதனால் அடுத்த ஜெனரேஷன் லிம்கா, கோல்ட் ஸ்பாட் குடித்து வளர்ந்தது, ஹெச்சிஎல், விப்ரோ மாதிரி கம்பெனிகளில் அவர்களுக்கு வேலை கிடைத்தது, மத்திய தர வர்க்கத்தின் நிலை கொஞ்சம் உயர்ந்தது.

எம்ஜிஆர், தமிழக முதல்வர், 1977-87 – தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள்
நிறைய தமிழர்கள் இன்று ஓரளவு வசதியாக வாழ்வது அவர்கள் அப்பா அம்மா கடனை உடனை வாங்கி அவர்களை எஞ்சினியரிங் படிக்க வைத்ததால்தான். அதற்கு முன்னாள் தமிழ் நாடு முழுவதும் ஒரு 2500-3000 சீட்தான் எஞ்சினியரிங், மருத்துவ கல்லூரிகளில். யோசித்துப் பாருங்கள், அன்றைக்கு ஒரு நாலு கோடி தமிழர் இருந்திருப்பார்கள், ஒரு கோடி குடும்பம் என்று வைத்துக் கொள்ளலாம். வருஷத்துக்கு ஒரு பத்து லட்சம் பேர் ப்ளஸ்டூ பாஸ் செய்திருப்பார்கள், அதில் மூவாயிரம் பேருக்குத்தான் தொழில் கல்லூரிகளில் சீட் என்றால் மிச்ச பேர் என்ன செய்வது?

மன்மோகன் சிங்-நரசிம்ம ராவ், காங்கிரஸ் (மத்திய) அரசு – 1991-96 Liberalization
பெரும் தாக்கம் உள்ள முடிவு இது. இந்தியாவின் மத்திய தர வர்க்கம் மேலெழுந்தது. பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதித்தார்கள். கன்ஸ்யூமர் காலம் என்று சொல்லலாம். ஆனால் ஏழைகள் வாழ்க்கை இன்னும் கீழே போனதோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

இதைத் தவிர காமராஜின் மதிய உணவுத் திட்டம், தமிழக தொழிலமைச்சர் ஆர்வியின் (ஜனாதிபதி ஆன ஆர். வெங்கட்ராமன்) வேலை வாய்ப்பு தரும் பல தொழில்களை வளர்த்தது, சி. சுப்ரமண்யம் முன்னின்று இயக்கிய பசுமைப் புரட்சி என்றும் சொல்லலாம். ஆனால் இவை எனக்கு பர்சனலாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. (சின்னப் பையங்க!) அதனால்தான் இவற்றை குறிப்பிடவில்லை.

அமைச்சர்கள் நினைத்தால் மக்களுக்கு முன்னேற வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதுவே நல்ல அமைச்சர்களின் அடையாளம். அப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவாக இருப்பது நம் துரதிருஷ்டம்.

அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்கிய அரசியல்வாதிகள், தலைவர்கள், அமைச்சர்கள் என்று நீங்கள் யாரையாவது நினைக்கிறீர்களா? பதில் எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு


இலங்கை-புலிகள் போர் பற்றி ஒரு இலங்கை ராணுவ தளத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு excerpt:

A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombo for urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams.

நீ அடிக்கிறாப்போல அடி, நான் அழறாப்போல அழறேன் என்கிற மாதிரி இருக்கிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழம்

தொடர்புடைய சுட்டி: முழு கட்டுரை


வருஷா வருஷம் டைம் பத்திரிகை ஒரு உலகின் டாப் 100 மனிதர்கள் என்று.லிஸ்ட் போடும். 2010 லிஸ்ட் வந்து சில மாதங்கள் ஆகிவிட்டது, இருந்தாலும் இப்போதுதான் பார்த்தேன். என் கண்ணில் பட்ட இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர். (பேரைக் கிளிக்கினால் டைம் சுட்டிக்கு போகலாம்.)

மன்மோகன் சிங் – தலைவர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நம்பெருமாள்சாமி – இதற்கு முன் இவரைப் பற்றி கேட்டதே இல்லை. காடராக்ட் ஆபரேஷன் செய்து பலருக்கும் கண் பார்வையை மீட்டிருக்கிறாராம். அரவிந்த் கண் ஆஸ்பத்திரி என்று ஒன்று நடத்துகிறாராம். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.

கிரண் மஜூம்தார் – பயோகான் என்ற ஒரு பயோடெக்னாலஜி கம்பெனி நடத்துகிறார். பில்லியன் டாலர் கம்பெனியாம்!

ராகுல் சிங் – கனடாக்காரர் போலிருக்கிறது. அங்கே ஒரு paramedic ஆக இருக்கிறாராம். ஹைத்தியில் பூகம்பம் ஏற்பட்டபோது அங்கே சென்று உதவி செய்திருக்கிறார். அங்கே தண்ணீர் கொடுத்திருக்கிறார், மருத்துவ முதல் உதவி செய்திருக்கிறார். சிம்பிளான, அதே நேரத்தில் முக்கியமான விஷயம். க்ளோபல்மெடிக் என்ற அமைப்பை நடத்துகிறார்.

சேதன் பகத் – எழுத்தாளர்.

அதுல் கவாண்டே – டாக்டர். ஆனால் அவர் புகழ் அவரது புத்தகங்களால்தான். பெட்டர் என்ற புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன்.

அமார்த்ய சென் – பொருளாதார நிபுணர். நோபல் பரிசு பெற்றவர்

பங்கர் ராய் – ராய் கிராம மக்களுக்கு வேலை கிடைக்க பாடுபவர். உண்மையான ஹீரோ.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்+கவுரவங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
டைம் 100 லிஸ்ட்


மன்மோகன் அடுத்த பிரதமர் என்பது நிச்சயம் ஆகிவிட்டது. அவரது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும்?

நான் அமெரிக்காவில் வாழ்பவன். என் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. அமெரிக்க அரசியலை விட இந்திய அரசியலைத்தான் நான் கவனிக்கிறேன். ஆனாலும் தூரம் அதிகம். இந்தியாவில் இருந்தால் நேரடியான பாதிப்பு, நண்பர்கள், டீக்கடை பேச்சு, செய்தித்தாள்கள், டிவி என்று பலதரப்பட்ட விதத்தில் என் கருத்துகள் முழுமை அடையும். இப்போதோ இணையத்தில் நுனிப்புல் மேய்வதுதான் எனக்கு செய்திகளின் ஆதாரம். அதனால் இமேஜை மட்டும் வைத்து இதை எழுதுகிறேன்.

மனித வள மேம்பாடு அல்லது கல்வி அல்லது கிராம மேம்பாடு: ராகுல் காந்தி. ராகுல் மந்திரி சபையில் பொறுப்பேற்றே ஆக வேண்டும். அவரது கவனம் இந்த துறைகளில் இருக்கிற மாதிரி தோன்றுகிறது. அதனால் இதில் ஏதோ ஒரு துறை கொடுக்கலாம்.

கபில் சிபல்: முன்னாள் சாலிசிடர் ஜெனரல். திறமையாளர். இவருக்கு சட்டம் மாதிரி எதையாவது கொடுத்து மூலையில் உட்கார வைக்காமல் நல்ல துறையாக கொடுக்கலாம். உள்துறை?

நிதி: மாண்டெக் சிங் ஆலுவாலியா. முன்னாள் நிதித்துறை செயலாளர். திட்டக் கமிஷன் துணைத் தலைவர். முன்பு மன்மோகன் நரசிம்ம ராவ் அரசில் செயல்பட்ட மாதிரி செயல்படுவார்.

வெளியுறவுத் துறை: சஷி தரூர். தரூர் ஐ.நா.வில் பெரிய பொறுப்பில் இருந்தவர். செக்ரடரி ஜெனரல் பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனாலும் அவருக்கு இருக்கும் அனுபவம், தொடர்புகள் ஆகியவை இந்த பதவிக்கு பெரும் உதவியாக இருக்கும். அவருக்கு அனேகமாக ஒரு உதவி அமைச்சர் பதவியாவது கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் காபினெட் அமைச்சர் பதவிதான் சரி.

ரயில்வே: லாலு யாதவ். போன முறை சிறப்பாக செயல்பட்டார். அந்த ஒரு காரணத்துக்காவே அவரை இப்போதும் மந்திரி சபையில் சேர்த்து அதே துறை வழங்கப் பட வேண்டும்.

தகவல் துறை: தயாநிதி மாறன். தயாநிதி ஊழல் பேர்வழி என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றபடி சாதாரண மக்களுக்கும் நன்மை விளைந்திருக்கிறது.

இந்த ஆறு பேருக்கு சீட் கொடுக்க வேண்டும். இவர்கள் முதல் லிஸ்ட்.

இரண்டாவது லிஸ்டில் சீனியர்கள், தோழமைக் கட்சியினர், “இளைஞர்கள்” எல்லாம் வருவார்கள். பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஷரத் பவார் போன்ற மூத்தவர்களுக்கு எப்படியும் சீட் கொடுக்க வேண்டும். பிரனாபுக்கு ராணுவம், சிதம்பரத்துக்கு உள்துறை (இல்லை என்றால் சிதம்பரத்துக்கு ராணுவம், பிரனாபுக்கு உள்துறை), பவாருக்கு விவசாயம் ஆகியவற்றை கொடுக்கலாம். “இளைஞர்களான” சச்சின் பைலட், ஜோதி சிந்தியா ஆகியவர்களுக்கு விமானத்துறை, கல்வி, பெட்ரோலியம், சாலைகள், வணிகம் என்று முக்கியமான infrastructure துறை கொடுப்பது நல்லது. குலாம் நபி ஆசாத், கமல்நாத், பிரஃபுல் படேல், ஜெயராம் ரமேஷ், சல்மான் குர்ஷீத் போன்றவர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள். மம்தா பானர்ஜிக்கு ராகுலுக்கு எதையாவது கொடுத்த பிறகு மிச்சம் இருப்பவற்றில் மனித வள மேம்பாடு அல்லது கல்வி என்று எதையாவது கொடுக்கலாம். தி.மு.க. எப்படியும் அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, ராசா, பழனிமாணிக்கம் ஆகியோருக்கு பதவி கேட்கும். எதையாவது கொடுத்து தொலைக்க வேண்டியதுதான்.

அர்ஜுன் சிங், ஷிவ்ராஜ் பாட்டில் போன்றவர்களை மறந்துவிட வேண்டும். இவர்கள் எல்லாம் தண்டம்.


நினைவு தெரிந்த நாளாக சரியோ தப்போ எந்த குட்டையில் ஊறிய மட்டை பெட்டர் என்று ஒரு திடமான கருத்து இருந்தது. இந்த தேர்தல் மாதிரி மோசமான மன நிலையில் எப்போதும் இருந்ததில்லை. அதற்கு காரணம் இலங்கைத் தமிழர்கள்தான்.

இலங்கைத் தமிழர்கள் இன்று செத்துக் கொண்டிருக்காவிட்டால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று தைரியமாக சொல்வேன் – காங்கிரஸ் நல்லவர்கள் என்பதற்காக இல்லை, பா.ஜ.க. முஸ்லிம்களையும் ஹிந்துக்களையும் பிரித்து வைப்பதை ஒரு strategy ஆக கொண்டிருப்பதால்.

கலைஞரும் ஜெவும் மற்ற குட்டித் தலைவர்களான சிதம்பரமும் ராமதாசும் விஜயகாந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக கையை விரித்துவிட்டால் கூட பரவாயில்லை. இவர்களது போலித்தனம் மகா வெறுப்பை கிளப்புகிறது. என்ன மாதிரியான தலைவர்கள் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார்கள்? ஜெ துணிச்சலாக திமிராக மனதில் பட்டதை சொல்வார் என்று எனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தது. தேர்தல் வந்தவுடன் உண்ணாவிரதமாம். அயோக்கியத்தனம் மட்டுமே உள்ள தலைவர்கள்.

ஆனால் யாராவது ஆட்சிக்கு வரத்தான் போகிறார்கள். யார் வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நப்பாசையாவது மிஞ்சும்?

அத்வானி இல்லை. பா.ஜ.க. இந்திய இறையாண்மையை காங்கிரசை விட சென்சிடிவாக பார்க்கும் – அவர்களுக்கு இலங்கையின் இறையாண்மை பலவீனப்படுவது நல்ல விஷயம் இல்லை.

கம்யூனிஸ்டுகள்? இல்லை. அவர்களுக்கு வழிகாட்டியான சீனா எப்போதுமே உயிர்களைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. அவர்கள் ஆதரவு ராஜபக்செவுக்குத்தான்.

மாயாவதி போன்ற யாராவதா? இலங்கையை பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?

காங்கிரசா? இது நப்பாசைதான் – கலைஞர் வாயை திறக்க மாட்டார்தான், ஆனால் காங்கிரஸ்காரர்களுக்கு புரியாமல் போய்விடுமா? என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா? தமிழ் நாட்டில் பேருக்காவது கட்சி இருக்கும் ஒரே “தேசியக் கட்சி” இதுதான். காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்குப் பின் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று எழுத கை கூசுகிறது. நம்பிக்கை இல்லைதான். ஆனால் மற்ற பேர் மீது 0% நம்பிக்கைதான் இருக்கிறது. இவர்கள் மீது ஒன்றிரண்டு சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிதம்பரமும், மணிஷங்கர் ஐயரும், இளங்கோவனும், ஜி.கே. வாசனும் அடி முட்டாள்களா? ப்ராக்டிகலாக யோசித்துப் பாருங்கள். இவர்களுக்கு உள்ள மாற்று இலங்கை தமிழர்களின் நிலையை இன்னும் மோசமாக்குவார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

என்ன கொடுமைடா சாமி! போயும் போயும் இவர்கள்தான் இருப்பதிலே நல்ல சாய்ஸ் என்றால் என்னத்தை செய்வது!

இந்திய பிரச்சினைகள் மட்டுமே என்றால் எனக்கு காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதில் தயக்கம் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட நாள் முதல் நான் பா.ஜ.க. எதிர்ப்பாளன். அன்று உருவான strategy-ஐ பா.ஜ.க. மாற்றிக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. மாயாவதி போன்றவர்களை விட காங்கிரஸ் பெட்டர் என்பது என் திடமான அபிப்ராயம். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் கொஞ்சம் குறையலாம், ஆனால் அவர்கள் கூட்டாளிகள் அதை ஈடு செய்துவிடுவார்கள். மேலும் அவர்கள் கம்யூநிச்டுகளா, காபிடலிஸ்டுகளா என்பதே இப்போதெல்லாம் குழப்பமாக இருக்கிறது. (நந்திக்ராமத்தை பாருங்கள்!)


நான் புலிகளின் ஆதரவாளனா இல்லையா என்பது இந்த போஸ்டுக்கு தேவை இல்லாத விஷயம். ஆனால் நான் லாஜிக்கின் ஆதரவாளன். வாழ்க்கையில் மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆயுதம் லாஜிக் என்று உறுதியாக நம்புபவன்.

இந்திரா காந்தியை கொலை செய்தவர் ஒரு சீக்கியர். அதனால் சீக்கிய இனத்தையே தண்டிக்கவில்லையே? காங்கிரஸ்காரர்கள் ஒரு சீக்கியரையே பிரதமராக ஆக்கவில்லையா? சீக்கியர்கள் என்றால் ஒஸ்தி, தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா? ராஜிவ் காந்தி கொலைக்காக ஒரு இனத்தையே படுகொலை செய்வது நியாயமா?

நான் இந்த வாதத்தை பல இடங்களில் படித்தேன். சோலை என்ற மூத்த பத்திரிகையாளர் ( இப்போது குமுதம் ரிப்போர்டரில் எழுதுபவர்), சீமான் போன்றவர்களும் இதை சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், என்னால் இதை உறுதியாக சொல்ல முடியவில்லை.

ராஜிவ் கொலைக்கு மூல காரணம் பிரபாகரன் என்பது தெரிந்ததே. அவர் மீது இன்னும் கேஸ் இருக்கிறது. யாரோ ஒரு புலிகளின் தலைவர் “ராஜிவ் கொலை ஒரு துரதிர்ஷ்டமான விஷயம்” என்று இலைமறைகாயாக சொன்னார்.

இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமானவர்களை எந்த காங்கிரஸ்காரனும், இந்தியனும், தமிழனும் ஆதரிக்கவில்லை. பியாந்த் சிங் மன்னிக்கப்படவில்லை. மன்மோகன் சிங் இந்திராவை கொலை செய்ய திட்டம் தீட்டவில்லை, ஆணை இடவில்லை, காலிஸ்தான் வேண்டும் என்று போராடவில்லை. சீக்கியர்கள் காலிஸ்தான் வேண்டும் என்று போராடியபோது சீக்கியர்களும் அடக்குமுறைக்கு ஆளானார்கள். அவர்களிலும் நிச்சயமாக அப்பாவிகள் அவதிப்பட்டிருப்பார்கள்.

இவர்களோ புலிகள் = தமிழர்கள் என்று வாதிடுகிறார்கள். பிரபாகரனை அதிகாரத்தில் அமர்த்த இந்தியா பாடுபடவேண்டும் என்று சொல்கிறார்கள். புலிகளை தனிமைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நான் ஒரு தெலுங்கன் என்று வைத்துக்கொள்வோம். எனக்கு இந்த சிம்பிள் லாஜிக் கூட புரியாதா என்ன?

அடுத்தவர்களை ஏமாற்றலாம், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதில் என்ன பயன்?