இது தொடர் பதிவின் இறுதிப் பகுதி. அவரை சந்தித்த அனுபவம் பற்றி இங்கே; அவருடன் சிதம்பரம் கோவிலைப் பற்றி விவாதித்தது இங்கே; அவரது இன்றைய அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி இங்கே.

சுப்ரமணிய சாமி ஒரு சுவாரசியமான மனிதர். பொருளாதாரத்தில் நிபுணர். வக்கீலுக்குப் படித்தாரோ என்னவோ, ஆனால் சட்டத்தைப் பற்றி நிறைய தெரிந்தவர். இந்திய அரசியலில் அவர் வெறும் fringe மனிதராக இருந்தாலும், அத்தனை பேரிடமும் inside track இருக்கிறது. எமர்ஜென்சி காலத்திலிருந்து ஒவ்வொரு பெரிய அரசியல் மாற்றத்தின் உள்குத்து வேலைகள் அத்தனையும் அவருக்கு தெரிந்திருக்கும். அவர் on the record, off the record ஆக சொல்லும் பல விஷயங்களை மனிதர் சும்மா சென்செஷனுக்காக ஏதோ சொல்கிறார் என்று புறம் தள்ளினாலும், இந்திய அரசியலில் அவர் சொல்வதை விட நம்பமுடியாத விஷயங்கள் நடந்திருக்கின்றன.

ஆனால் அவர் எமர்ஜென்சி காலத்தில் “சாகசம்” புரிந்திருக்கிறார். அப்போது அவர் எம்.பி. அவரை கைது செய்ய வாரன்ட் இருக்கிறது. மனிதர் நேராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பேசிவிட்டு விமானம் ஏறி அமேரிக்கா சென்றுவிட்டார்! எமர்ஜென்சியை எதிர்த்தவர்களில் முக்கியமான ஒருவர். ஜனதா கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் founder member-களில் ஒருவர். இப்போதும் அந்த ஜனதா கட்சி லெட்டர்பாடிலாவது இருக்கிறது. அதற்கு இவர்தான் தலைவர்.

மொரார்ஜி காலத்தில் இவருக்கு மந்திரி பதவி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. மொரார்ஜியோடு முதலில் ஏதோ தகராறு இருந்திருக்கிறது. அப்புறம் சரியாகிவிட்டது என்று சொல்கிறார். ஆனாலும் அந்த கசப்பில்தான் இவர் விரும்பியது கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. மொரார்ஜி நீ இன்னும் சின்னப் பையன், (அப்போது முப்பத்தாறு முப்பத்தேழு வயது இருக்கும்) துணை மந்திரி பதவி வேண்டுமானால் தருகிறேன் என்றாராம். அது இவருக்கு அவமானமாக இருந்திருக்கிறது, அதனால் மறுத்துவிட்டாராம்.

அப்புறம் இந்திரா அலை, ராஜீவ் அலை, வி.பி. சிங் அலை என்று அலை அடித்துக் கொண்டே இருந்தது. இவர் சில சமயம் எம்.பி.யாக ஜெயித்திருக்கிறார். இஸ்ரேலுடன் அதிகார பூர்வமான உறவு, இந்திய-சீன உறவை முன்னேற்றுதல் இரண்டும் இவருக்கு pet projects என்று தெரிகிறது. மானசரோவர் ஏரிக்கு இந்தியர்கள் யாத்திரை போக சீன அரசை சம்மதிக்க வைத்திருக்கிறார். வி.பி. சிங்கை சந்திரசேகர் கவிழ்த்ததற்கு இவர்தான் சூத்திரதாரியாம். சந்திரசேகர் காபினெட்டில் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது இவர்தான் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய மூல காரணமாம்.

அதற்கப்புறம் இந்திய அரசியலில் marginalise செய்யப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவோடு சேர்ந்து வாஜ்பேயி அரசை கவிழ்த்தது ஒன்றுதான் இந்த கால கட்டத்தில் இவரது அரசியல் “சாதனை.” இப்போது சட்டம் ஒன்றே ஆயுதம்.

அவரது ஜனதா கட்சி தளத்தில் அவர் காமராஜ், இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் முதல் பல தலைவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். Of course, எல்லா கட்டுரைகளிலும் இவருடைய திறமை, நல்ல மனது ஆகியவற்றை அந்த தலைவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். வாஜ்பேயியோடு மட்டும் எப்போதும் கொஞ்சம் கசப்பு உண்டு போலிருக்கிறது. இருந்தாலும் மிகவும் சுவாரசியமான கட்டுரைகள். முடிந்தால் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சுப்ரமணிய சாமியை சந்தித்தேன்
சுப்ரமணிய சாமியுடன் விவாதம்
சாமியின் அரசியல்

ஜனதா கட்சி தளத்தில் சுப்ரமணிய சாமியின் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகள்

Advertisements

kamarajar
என் கண்களில் தமிழ் நாட்டின் தலை சிறந்த தலைவர் இவர்தான்.

உண்மையில் இது மிக ஆச்சரியமான விஷயம். அவர் மெத்தப் படித்தவர் இல்லை. தமிழில்தான் சுலபமாக பேச முடியும். (ஆங்கிலமும் ஹிந்தியும் பேச வராததால்தான் பிரதமர் பதவியை ஒதுக்கினார் என்று சிலர் சொல்கிறார்கள்.) பணக்காரர் இல்லை. கோவிலுக்குள் நுழைய முடியாத கீழ் ஜாதிக்காரர். (வைத்தியநாத ஐயர் மீனாட்சி கோவிலுக்குள் அழைத்து போனவர்களில் இவரும் இருந்தாரோ? இல்லை கக்கன் மட்டும்தானா? இவர் இல்லை என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் கக்கன் உள்ளிட்ட ஐந்து தலித்களும், ஷண்முக நாடாரும் இருந்தார்களாம். அப்போது தலித்களுக்கும், நாடார்களுக்கும் மீனாக்ஷி கோவிலில் நுழைய அனுமதி இல்லை. இது பற்றிய மேல் விவரங்களை இங்கே காணலாம்.) சிறந்த பேச்சாளரோ, எழுத்தாளரோ இல்லை. எம்ஜிஆர், அண்ணா, ஏன், கலைஞர் போலக் கூட மக்களை கவரக் கூடிய எதுவும் அவரிடம் இல்லை. அவரை விட சிஎஸ், ஆர்வி போன்றவர்கள் சிறந்த நிர்வாகிகள். அவரே பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமையாக மாறினாலும், காங்கிரஸ் தலைமையிடம் – காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்றவர்களிடம் – அவருக்கு ராஜாஜி மாதிரி செல்வாக்கு எல்லாம் இருந்ததில்லை. அவர் பெரியார் மாதிரி புரட்சி எதுவும் செய்ய முயசிக்கவில்லை.

அவருடைய ரகசியம் இதுதான் – மக்களுக்கு/கட்சிக்கு எது நல்லது, அதை எப்படி செய்வது என்று ஓயாமல் சிந்திக்கும் குணம். அந்த சிந்தனைகளை செயல்படுத்தும்போது வரக்கூடிய இடையூறுகளை தாண்டியே தீர வேண்டும் என்ற வெறி.

அவர் மந்திரிகளுக்கு சொன்ன அறிவுரை இதுதானாம் – “பிரச்சினைகளிடமிருந்து ஓடக் கூடாது. பிரச்சினையை சமாளிக்க ஒரு சின்ன முயற்சியாவது எடுங்கள். மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்”. அற்புதமான அறிவுரை. அவரும் அதை கடைப்பிடித்திருக்கிறார்.

இதனால் அவர் குறைகள் இல்லாத மாமனிதர் என்று அர்த்தமில்லை. ராஜாஜியை அமுக்க அவர் 42-54 கால கட்டத்தில் செய்த முயற்சிகள், அவரோடு போட்ட சண்டைகள் அவருக்கு பெருமை சேர்ப்பதில்லை. ராஜாஜிக்கும் பெருமை சேர்ப்பதில்லை என்பதும் உண்மைதான். அவர் கர்வி இல்லை, ஆனால் தொண்டர்களை அணுக விட்டதில்லை. ஏதாவது உதவி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான். சோவே கூட அவர் மற்ற தமிழக் தலைவர்களை வளரவிடவில்லை, தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா ராஜினாமா செய்து பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு முதலமைச்சரின் உள்ளக் குமுறல் என்று குமுதத்திலோ விகடனிலோ ஒரு கட்டுரை வந்தது. எப்படி தலைவர் தன்னை முழுமையாக நம்பவில்லை, சுதந்திரமாக இயங்க விடவில்லை, தலைவர் ஒரு சூப்பர் முதலமைச்சராக நடந்து கொள்கிறார் என்று முதல்வர் வருத்தப்படுகிறார். அது பக்தவத்சலம் காமராஜை பற்றி வருத்தப்பட்டது, பன்னீர்செல்வம் ஜெவை பற்றி அல்ல. தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் செய்தது தவறு. அவர் குறைகள் உள்ள மாமனிதர்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு போயிருக்கிறார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு ஸத்யாக்ரஹத்தில் பங்கேற்றிருக்கிறார். சத்யமூர்த்தியின் அணுக்க சீடர். கொஞ்ச நாள் அவர் தமிழ் நாடு காங்கிரஸில் தலைவராகவும் காமராஜ் செயலாராகவும் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர் தலைவர், அவர் செயலாளர். 🙂 சத்தியமூர்த்தியின் மறைவுக்கு பின்னால், ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னால் இவர் தமிழ் நாட்டு காங்கிரஸின் ஜீவ நாடி ஆகிவிட்டார். அவரால் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வருவதற்கு கூட பல முட்டுக்கட்டைகள் போட முடிந்தது.

அவரது பலங்களில் அவருடைய எளிமையான பின்புலமும் ஒன்று. அவருடைய மதிய உணவுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் ராஜாஜிக்கும் ஒரே குறிக்கோள்தான். அரசியல் நிர்ணய சட்டத்தில் சொன்னபடி எல்லாருக்கும் கல்வி என்பதை விரைவாக நிறைவேற்றுவது. இரண்டு பேருக்கு ஒரே பிரச்சினைதான். கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறைவாக இருக்கிறது. ராஜாஜி கண்ட தீர்வு பகுதி நேரக் கல்வி. (திராவிட இயக்கத்தினர் குலக் கல்வி என்று அழைத்த இந்த திட்டத்தை பற்றி மேலும் விவரங்கள் இங்கே) பகுதி நேரக் கல்வி என்பது சிறந்த நிர்வாக முடிவு. அதனால் கல்வி அறிவு செலவு அதிகம் ஆகாமல் அதிகரித்திருக்கும். ஆனால் அது ஒரு bean counter’s logical, cold hearted தீர்வு. காமராஜ் கண்ட தீர்வில் செலவு அதிகம்தான். ஆனால் அந்த பணம் well spent என்று அவரது படிக்காத ஏழை மனதுக்கு மட்டும்தான் புரியும். ஜீனியஸ் என்றே சொல்லக் கூடிய ராஜாஜிக்கு அந்த தீர்வு எப்போதும் தோன்ற வாய்ப்பில்லை.

விவசாயம், மின்சாரம், தொழில் பேட்டிகள் அமைப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தினார். அரசு விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆர்வியும் இதை குறிப்பிட்டு சொல்கிறார்.

எதிரிகளையும் அணைத்து செல்லும் பக்குவம் அவரிடம் இருந்தது. முதல்வர் போட்டிக்கு அவரை எதிர்த்து போட்டி இட்ட சிஎஸ்தான் அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சிஎஸ், ஆர்வி, கக்கன், பக்தவத்சலம் போன்ற திறமைசாலிகளை அவர் அரவணைத்து சென்றார். அதே நேரத்தில் அவர் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை. மொரார்ஜியை அவர் அடக்கிய விதம் சூப்பர். கலைஞரால் கூட இப்படி செய்திருக்க முடியாது.

காமராஜ் திட்டம் எல்லாம் போட அவரால்தான் முடியும். பதவி ஆசை அவருக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்கு ராஜாஜி ஒரு வீக்னெஸ். அங்கே அவரது பெருந்தன்மை, நல்ல குணங்கள் வெளிப்படவில்லை. சத்தியமூர்த்திக்கு பதிலாக ராஜாஜியை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக காந்தி – முதல்வராக ஆக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு, ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொள்ளாமல் காங்கிரசை விட்டு விலகியதும் தீவிரம் அடைந்தது. 46-இல் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழையக் கூடாது என்று காமராஜ் பெரிதும் முயன்றார். கட்சி அவரது கண்ட்ரோலில் இருந்தாலும், ராஜாஜிக்கு கணிசமான ஆதரவு இருந்தது – மேலிடத்து சப்போர்ட்டும் இருந்தது. அதனால் ராஜாஜி காமராஜை மீறி உள்ளே நுழைந்தார். ராஜாஜி மத்திய அரசாங்கத்துக்கு போய்விட்டதால் சண்டை இன்னும் பெரிதாக வெடிக்கவில்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் சில உள்குத்து வேலைகள் செய்திருக்கிறார். காமராஜ் படத்தில் அவர் ஒரு விழாவில் ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதாக காட்டுகிறார்கள்.

தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் கோட்டை விட்டுவிட்டார். கேரளாவில் இருந்தாலென்ன, தமிழ் நாட்டில் இருந்தாலென்ன, இரண்டும் இந்தியாதானே என்று அவர் நினைத்திருக்க வேண்டும். பிராந்திய உணர்ச்சிகள் இவ்வளவு தீவிரமாக வளரும் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அவருடைய அலட்சியத்துக்கு தமிழர்கள் இன்றும் ஒரு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மிக பெரிய தோல்வி இந்திரா காந்திதான். அவர் தோளில் நின்று பிரதமரான இந்திரா அவரையே யார் என்று கேட்டது அவரை நிலை குலைய செய்திருக்க வேண்டும். அறுபதுகள் காங்கிரசுக்கு நல்லதாக இல்லை. சீனாவோடு சண்டை, ஹிந்தி எதிர்ப்பு, வேலை இல்லா திண்டாட்டம், பொதுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருந்த அதிருப்தி, சோஷலிசத்தின் குறைகள் வெளிப்பட ஆரம்பித்தது எல்லாம் அவரை புரட்டி போட்டுவிட்டன. Indira usurped his socialistic plank. ராஜ மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயம், என்றெல்லாம் ஆரம்பித்தது உண்மையான சோஷலிஸ்ட்டான அவரை வலது சாரி தலைவராக காட்டியது – அவருக்கு மிஞ்சிய கூட்டாளிகள் எல்லாம் வலது சாரி நிஜலிங்கப்பா, மொரார்ஜி, எஸ்.கே.பாட்டில், சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள்தான். A great irony.

முதல்வர் பதவியில் இருந்து விலகிய நாளிலிருந்து அவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல மத்தியிலும் மாநிலத்திலும் இயங்க முயன்றார். மத்தியில் வெற்றி பெற்றவர் மாநிலத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது மத்தியிலும் அவர் தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. 67-இல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஜெயித்திருந்தால் இந்திராவால் அவரை அவ்வளவு சுலபமாக உதறி இருக்க முடியாது. 71-இலோ பங்களாதேஷ் போர் இந்திராவுக்கு அமோக வெற்றி தந்தது. காமராஜ் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவர் ஒரு மாநில அளவு தலைவர் அவ்வளவுதான். அவ்வளவு பெரிய தலைவருக்கும் sell-by-date கடந்து விட்டது.

இன்று ஒரு காமராஜ் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. கம்யூனிசம், சோஷலிசம், காபிடலிசம், போன்ற இசங்களை விட நல்ல தலைவர்கள் ஏதோ ஒரு இசத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது. கன்சர்வேடிவ் ராஜாஜி, சோஷலிஸ்ட் காமராஜ் இருவருமே நல்ல முதல்வர்கள்தானே!

அவரைப் போன்ற ஒரு தலைவர் இந்தியாவின் வரப்பிரசாதம்.சோவை பற்றி எழுதுவதாக முதலில் ஐடியா இல்லை. கொற்கை என்பவர் நான் ராஜாஜியை பற்றி எழுதியதும் அவர் “நீ பிராமணன், பிராமணன் பற்றிதான் எழுதுவாய்” என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் விட்டார். அந்த கமென்ட் கிளப்பிய கடுப்பில்தான் – “பிராமணன் பற்றி எழுதுவது கொலைக் குற்றமா?” – இதை எழுதுகிறேன்.

சோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல் (வெற்றி அடைந்தாரா தெரியாது), நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், அரசியல் இதழியலாளர் என்று.

வக்கீலாக என்ன செய்தாரோ எனக்கு தெரியாது.

அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு திரைப்படம் கூட நினைவில்லை. ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே என்ன படம்? இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி)

அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம். உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை மாதிரி சில நாடகங்களில்தான் கோர்வையான கதை அமைந்திருக்கும். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பண பலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார். அவரது பாணி ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணி. very topical comments. எழுத ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. சில சமயம் Pygmalion, Tale of Two Cities போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் மனம் ஒரு குரங்கு, வந்தே மாதரம் போன்ற நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் ப்ளாட்டே இல்லாமல் சும்மா அரசியல் கமெண்ட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள் மற்றும் நாடகங்களை எழுதி இருக்கிறார்.

அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. இருவரிடமும் ஒரே ப்ராப்ளம். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.

அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் சிரிக்க வைப்பவை. சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. சாத்திரம் சொன்னதில்லை, துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகியவை படிக்க வேண்டியவை.

அவருடைய இதழியல் பணி குறிப்பிடப்பட வேண்டிய்து. துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். கலைஞர் அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது ஆச்சரியம்தான். He made Thuglaq an institution! அவருக்கு பிறகு துக்ளக் வரப்போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

அவருடைய அபிப்ராயங்கள் சுலபமாக மாறுவதில்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. அவற்றை நல்ல நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவார். எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை அவர் நடுநிலை தவறியதில்லை. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார். ஒண்ணரை பக்க நாளேடுகள் சூப்பர்!

என்றைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்க ஆரம்பித்தனவோ, அன்றையிலிருந்து அவர் தனது நடுநிலையை தவற விட்டுவிட்டார். அவரது கண்ணோட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நல்லது. அதனால் அவர் பா.ஜ.க.வின் முக்கிய குறையான முஸ்லீம் எதிர்ப்பு என்பதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார். நரேந்திர மோடி குஜராத்தை ஊழல் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறாராம். அங்கே வளர்ச்சி அதிகமாம். அவரை சாதாரண மனிதனும் சுலபமாக பார்க்கலாமாம். இவை எல்லாம் அங்கே நடந்த படுகொலைகளை நியாயபடுத்த முடியாது. அவரே ஒரு முறை சொன்ன மாதிரி, integrity is more important in a politician than efficiency.

அதே போல்தான் ஜெவும். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்புகிறார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருக்கிறது.

அவர் நல்ல அறிவாளி. அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று.

மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். ஆனால் ஒரு பத்து பதினைந்து வருஷங்களாக அவர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார், அதனால் எல்லார் தவறுகளையும் போட்டு கிழிக்காமல், பா.ஜ.க.வுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துவிட்டார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூறப்பட வேண்டியவர்.