துக்ளக் என்னை மன்னிக்கட்டும்!

நாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எல்லா தொகுதிகளிலும் தானே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் சட்டம் இடம் கொடுக்குமா என்று கேட்டதற்கு கருணாநிதி தன் இஷ்டம் போல வளைப்பதற்கு இது அவரது வீட்டின் ஜன்னல் சட்டம் அல்ல, நாட்டின் சட்டம் என்று பதிலளித்தார்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் சோனியா காந்தி புரட்சித் தலைவி, தமிழகத்தின் தவப் பயன், மகாத்மா ஜெயலலிதா டெல்லியில் நிற்க மனு தாக்கல் செய்யாவிட்டால் சோனியா காந்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று மகாதேவன் அறிவித்திருக்கிறார். சோனியா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லையே, அவரை எப்படி நீங்கள் நீக்க முடியும் என்று கேட்டதற்கு டி.டி.கே. தினகரன் முதலில் அவரை உறுப்பினராக்கி பிறகு நீக்குவோம் என்று சொன்னார். திவாகரன் அதெல்லாம் வேண்டாம், சோனியாவை காங்கிரசிலிருந்து நீக்கிவிடலாம் என்று கருத்து தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா 552 தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியை வெளியிடும்போது “முன்னாள் முதல்வர்” ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு எழுதும்படி தினகரன், மகாதேவன், திவாகரன் மூவரும் நிருபர்களை கேட்டுக் கொண்டார்கள்.

கலைஞர் பேட்டி
இது பற்றி பேட்டி அளித்த கலைஞர் நாற்பது ஆண்டு கால நண்பரான எம்ஜிஆர் கூட நாற்பது தொகுதிகளிலும் போட்டி இடுவேன் என்று சொன்னதில்லை என்பதை சுட்டி காட்டினார். இது பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைக்கு விரோதமானது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நல்லி சில்க் உடுத்தும் நய வஞ்சகி, நச்சுப் பாம்பு ஜெயலலிதா போன்று தான் எப்போதும் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்றும் வருத்தத்தோடு கூறினார். உடனே தான் நல்லி சில்க் முதலாளியான செட்டியாரின் இனத்துக்கு எதிரி இல்லை என்றும், செட்டியாரியத்தை மட்டுமே எதிர்ப்பதாகவும் ஒரு விளக்கமும் அளித்தார். கூட்டணி தர்மத்தை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்த ராமதாசும், கம்யூனிஸ்ட் கட்சி அவாளும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் வினவினார். முதுகில் குத்தும் துரோகி, கழக கண்மணிகளின் முதல் விரோதி வைக்கோ தி.மு.க. அணிக்கு மாற விரும்பினால் அவரை இரு கரம் நீட்டி வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சோ கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்த சோ, பிஜேபிக்கு இரண்டு சீட் கொடுத்துவிட்டு மிச்ச 38 சீட்டில் ஜெ நின்றிருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். யாருக்கு வாய்ப்பு அதிகரித்திருக்கும், ஜெவுக்கா, பிஜெபிக்கா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. நரேந்திர மோடி குஜராத்தில் எல்லா தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று அவர் பிஜேபி தலைமைக்கு ஆலோசனை தெரிவித்து வருகிறதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணி கட்சிகள் நிலவரம் 
கூட்டணியில் குழப்பம் விளைக்க கலைஞர் செய்யும் முயற்சிகள் படுதோல்வி அடையும் என்று ஜெயலலிதா இன்று பேட்டி அளித்திருக்கிறார். இந்த முயற்சிகளை கலைஞர் உடனே நிறுத்தாவிட்டால் அடுத்த திமுக உள் கட்சி தேர்தலில் எல்லா பதவிகளுக்கும் தான் போட்டி இட வேண்டி வரும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் மீண்டும் கலைஞரை அணுகியதாகவும், கலைஞர் அவருக்கு இதயத்தில் இடம் தருவதாக கூறியதாகவும் தெரிகிறது. அன்புமணிக்கு உடனடியாக மந்திரி பதவியும், பிறகு ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாக சொல்லி இருப்பதால் டாக்டர் இந்த ஏற்பாட்டை ஒத்துக் கொள்வார் என்று தெரிகிறது.

கட்சியிலிருந்து நிற்க வைக்க ஆள் தேட வேண்டிய அவசியம் இல்லாததால் வைக்கோ மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிகிறது. அம்மாவை தலைவராக ஏற்றுக்கொண்டது பெரிய தீர்க்கதரிசனம் என்று அவர் நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இது தெரிந்த ஜெயலலிதா “இவர் ரொம்ப நல்லவரு! எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு” என்று சொன்னதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து நெரிசல் 
லாயிட்ஸ் ரோடில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டி இட வேண்டும் என்று ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் மனு கொடுக்க க்யூவில் நிற்பதால் லாயிட்ஸ் ரோடில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவினரின் அராஜகம் என்றும் இதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் சொல்லி உள்ளார்.

 

தி.மு.க. தொகுதி பங்கீட்டில் தகராறு

தி.மு.க. அணியில் தொகுதி பங்கீட்டு தகராறுகள் இன்னும் முடியவில்லை. காங்கிரசுக்கு 20 சீட், விடுதலை சிறுத்தைகளுக்கு 1 சீட் என்ற அளவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டாலும் ஸ்டாலின் அழகிரிக்கு இடையே தொகுதி பங்கீடு முடியாததால் கலைஞர் பெரும் கவலையில் இருக்கிறார் என்று தெரிகிறது. சீக்கிரம் பங்கீட்டை முடிக்கும்படியும், இல்லாவிட்டால் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை சமாளிக்க முடியாது என்றும் அவர் சொன்னதாக தெரிகிறது. மு.க. முத்து இந்த முறை இதயத்தில் மட்டும் இடம் தந்தால் போதாது என்றும் சொல்லி வருவதாக நமது நிருபர் தெரிவிக்கிறார்.

அழகிரி கை ஓங்குகிறது
இன்று இந்த தேர்தலின் விசேஷ பொறுப்பாளராக அழகிரி நியமிக்கப்பட்டார். இதை பற்றி பேசிய கலைஞர் அழகிரி ஏற்கனவே தென் மண்டல செயலாளராக இருப்பதாகவும், தமிழ் நாடு இந்தியாவின் தென் மண்டலத்தில்தான் இருப்பது பெரியார் வழி வந்து புவியியல் பயின்றவர்களுக்கு தெரியும் என்றும், அதனால் அழகிரியே இந்த தேர்தலுக்கு முழு பொறுப்பை ஏற்கப்போவதாகவும் சொன்னார். அழகிரி அவருக்கு ஒரு சால்வை போட்டு மரியாதை செலுத்தினார். அப்போது பேராசிரியர், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். பிறகு அழகிரி நிருபர்களிடம் பேசுகையில் ஸ்டாலின் என்பது ரஷியப் பெயர், ஸ்டாலினுக்கு ரஷிய தேர்தலில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தினகரன் அலுவலகம் மதுரையில் மூடப்பட்டதற்கும் இந்த செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சன் டிவியின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

தயாநிதி மாறன் மதுரையில் போட்டி!
அழகிரி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் சமரசம் ஏற்பட்டதாகவும், அதனால் தயாநிதி மதுரையில் போட்டி போட இருப்பதாகவும் தெரிகிறது. அழகிரியின் மகனான தயாநிதி சன் டிவியின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்பார் என்றும ஒரு வதந்தி உலவுகிறது.

 

 

ராஜீவ் மரணம் தற்கொலை – சுப்ரமணிய சாமியின் அதிர்ச்சி தரும் அறிக்கை

“இங்கே பாருங்கோ, ராஜீவ் எக்ஸ் ப்ரைம் மினிஸ்டர். அவருக்கு நிறைய செக்யூரிடி எல்லாம் உண்டு. அவர்கிட்ட எப்படி பாம் போக முடியும்? அந்த பாம் அவரோட உடம்பிலேயே இருந்துது. அவருக்கு குடும்பத்திலே சோனியா ரொம்ப தொந்தரவு கொடுத்தாலே அந்த மனுஷன் பாவம் அவர் உடம்பிலே அவரே பாம் செட்டப் பண்ணி தற்கொலை பண்ணிண்டுட்டார். இதுக்கு என்கிட்டே நிறைய எவிடன்ஸ் இருக்கு. அதை எல்லாம் எனக்கு பிரபாகரனே கொடுத்திருக்கார்” என்று சாமி சொன்னதாக கேட்ட நாம் அதிர்ந்து போனோம். அவரிடம் நீங்கள்தான் புலிகளோட எதிரியாச்சே என்று கேட்டோம். அதற்கு அவர் “இல்லே இல்லே நான் காங்கிரசுக்கு எதிரி. பிரபாகரனும் அப்படித்தான். அதனால அவர் என்னோட நண்பன், இதுக்கு உங்களுக்கு எவிடன்ஸ் வேணும்னா தாவூத் இப்ராஹீம் கிட்ட கேட்டுக்குங்கோ” என்று சொன்னார்.

இதனால் ஜெ அவருக்கு மதுரை தொகுதியை விட்டுத் தருவார் என்றும், மிச்சம் உள்ள 39 தொகுதியில் மட்டுமே போட்டி இடுவார் என்றும தெரிகிறது. அந்த பாம்பை(bomb) செட்டப் செய்தது கருணாநிதி என்னும் பாம்புதான் என்றும், ராஜீவின் தற்கொலைக்கு கருணாநிதி அவருக்கு கமர்கட் கொடுக்காததும் ஒரு முக்கிய காரணம் என்றும், ஜெ முழங்கினார்.
இதை கேட்டதும் கலைஞர் எழுதிய கவிதை.

ஜெயலலிதா வட்டமிடும் கழுகு,
நான் உனக்காக உருகும் மெழுகு,
தமிழா நீ பார்த்து பழகு.

ஆர்எம்வி கட்சியின் இமாலய வளர்ச்சி – தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்

பல நாட்களாக அவார்டா கொடுக்கறாங்க என்ற ப்ளாக்-ஐ எழுதி வரும் ஆர்வி இன்று ஆர்எம்வி கட்சியில் சேர்ந்தார். ஆர்விக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பழைய கால சினிமா பற்றி ஆர்எம்வியை பேட்டி காண முயற்சித்ததாகவும், ஆர்எம்வி தவறாக புரிந்து கொண்டு அவரை கட்சி உறுப்பினர் ஆக்கி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அவரது எம்ஜிஆர் கழகத்தில் உறுப்பினர் எண்ணிக்கை போன வருஷத்தை விட 100% அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

எம்ஜிஆர் கழகத்துக்கு ஒரு சீட் – கலைஞர் அறிக்கை
தமிழக அரசியல் மாற்றங்களை எப்போதும் கூர்ந்து கவனித்து வரும் கலைஞரின் கழுகுக் கண்களிலிருந்து எம்ஜிஆர் கழகத்தின் இமாலய வளர்ச்சி தப்பவில்லை என்று தெரிகிறது. இன்று மாலை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் நாற்பது ஆண்டு நண்பர் எம்ஜிஆருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவரும், ஏமாற்றங்களை அண்ணாவின் ஆணைப்படி எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டு தாங்கிக் கொள்பவருமான ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்துக்கு வரும் தேர்தலில் அமெரிக்காவில் ஒரு சீட் ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இதன் மூலம் வெளி நாடுகளிலும் போட்டியிடும் முதல் இந்தியக் கட்சி தி.மு.க.தான் என்ற ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சீட்டில் அமெரிக்காவில் வாழும் ஆர்வி போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆர்எம்வியிடம் தமிழகத்தில் சீட் கிடைக்காததற்காக ஏமாற்றம் அடைகிறீர்களா என்று கேட்டதற்கு அவர்
“உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்”
என்று பாடிவிட்டு, எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் ராஜு, வட அமெரிக்காவில் வாசு என்று இரண்டு படங்களை எடுக்க திட்டம் போட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

ஆர்விக்கு மாரடைப்பு
உலகம் சுற்றும் வாலிபனை பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த ஆர்வி வட அமெரிக்காவில் வாசு பற்றி வந்த செய்தியை படித்துவிட்டு தான் அமெரிக்காவில் தி.மு.க. அணியில் போட்டி இடப்போவதை தெரிந்து கொண்டார். உடனே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது மாரடைப்பு இல்லை, வாயு தொந்தரவுதான் என்று டாக்டர்கள் சொன்னாலும் அவர் தேர்தல் முடியும் வரை கோமாவிலிருந்து வெளி வரமாட்டேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் -ஆர்எம்வி ஆலோசனை
ஆர்வி பார்ப்பன ஜாதியில் பிறந்தவர் என்பதை இப்போதுதான் கலைஞர் அறிந்தார். அவர் உடனே “அவாள் நமக்கு எப்போதுமே சவால்தான்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சமீபத்தில் 1964-இல் கூடுவாஞ்சேரி இடைத்தேர்தலில் ஒரு குல்லுக பட்டர் தி.மு.க.வின் முதுகில் குத்தியதையும், ஜெயலலிதா சட்டசபைய்ல் தான் பாப்பாத்தி என்று சொல்லிக் கொண்டதையும், அதே சட்ட சபையில் ஜாதி பேதத்தை ஒழிப்பதற்காக தான் சூத்திரன், நாலாம் வருணத்தவன் என்று சொல்லி கொண்டதையும் நினைவு கூர்ந்தார். பிறகு தென்சென்னை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டதால், ராஜாஜியை மூதறிஞர் என்று முதலில் அழைத்தது தான்தான் என்பதையும் நினைவு கூர்ந்தார். தான் பார்ப்பனர்களுக்கு எதிரி இல்லை, பார்ப்பநீயத்துக்குத்தான் என்று இலக்கிய ரசம் சொட்ட சொட்ட இன்னொரு கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்த கவிதை நாளை தினகரன், முரசொலியில் வரும் என்றும், இந்த கவிதைக்கு கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நமீதா அபிநயம் பிடித்துக் காட்டுவார் என்றும் தெரிகிறது.

பிறகு ஆர்எம்வி இது போன்ற துயர சம்பவங்களை தவிர்க்க விரும்புவதாகவும், அதனால் வழக்கம் போல் கலைஞர் இதயத்தில் மட்டும் சீட் கிடைத்தால் போதும் என்று கூறினார். கலைஞர் தான் எதையும் தாங்கும் இதயம் உள்ள அண்ணாவின் வழி வந்தவன், ஆர்எம்வியையும் தாங்குவேன் என்று குறிப்பிட்டார்.

காதில் விழுந்த துணுக்கு செய்திகள் 

ரஜினி ஆதரவு யாருக்கு?
ரஜினி நான் யாருக்கு ஆதரவு தரணும், எப்படி ஆதரவு தரணும், எப்போ ஆதரவு தரணும் அப்படின்றதெல்லாம் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இதையே இந்திரன் படத்தில் ஒரு பன்ச் ஆகவும் வைத்த்ருப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது. படத்தின் ரகசியங்கள் வெளி வருவதால் ஷங்கர் மிக கோபத்தில் இருக்கிறாராம்.

ஸ்வீட் எஸ், சீட் நோ
சரத்தின் மூத்த மகளுக்கு நேற்று 25 வயது முடிந்தது. இதை குடும்பத்தில் அனைவரும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்கள். தன் கட்சி சார்பில் நிற்க மூன்று தகுதி உள்ளவர்கள் கிடைத்துவிட்டதால் சரத் ஆனந்தத்தில் மிதக்கிறார். ஆனால் ராதிகாவோ ஸ்வீட் கொடுத்து கொண்டாடினால் ஓகே, ஆனால் சீட் கொடுத்து கொண்டாடக் கூடாது, பணத்தை எல்லாம் முதல் தாரத்து வாரிசுங்க மேலயே விட்டீங்க, அப்புறம் தெரியும் சேதி என்று உறுமுகிறாராம்.

முன் வந்த பதிவுகள்
சுப்பிரமணிய சாமி – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 5
டி. ராஜேந்தர் – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்


kamarajar
என் கண்களில் தமிழ் நாட்டின் தலை சிறந்த தலைவர் இவர்தான்.

உண்மையில் இது மிக ஆச்சரியமான விஷயம். அவர் மெத்தப் படித்தவர் இல்லை. தமிழில்தான் சுலபமாக பேச முடியும். (ஆங்கிலமும் ஹிந்தியும் பேச வராததால்தான் பிரதமர் பதவியை ஒதுக்கினார் என்று சிலர் சொல்கிறார்கள்.) பணக்காரர் இல்லை. கோவிலுக்குள் நுழைய முடியாத கீழ் ஜாதிக்காரர். (வைத்தியநாத ஐயர் மீனாட்சி கோவிலுக்குள் அழைத்து போனவர்களில் இவரும் இருந்தாரோ? இல்லை கக்கன் மட்டும்தானா? இவர் இல்லை என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் கக்கன் உள்ளிட்ட ஐந்து தலித்களும், ஷண்முக நாடாரும் இருந்தார்களாம். அப்போது தலித்களுக்கும், நாடார்களுக்கும் மீனாக்ஷி கோவிலில் நுழைய அனுமதி இல்லை. இது பற்றிய மேல் விவரங்களை இங்கே காணலாம்.) சிறந்த பேச்சாளரோ, எழுத்தாளரோ இல்லை. எம்ஜிஆர், அண்ணா, ஏன், கலைஞர் போலக் கூட மக்களை கவரக் கூடிய எதுவும் அவரிடம் இல்லை. அவரை விட சிஎஸ், ஆர்வி போன்றவர்கள் சிறந்த நிர்வாகிகள். அவரே பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமையாக மாறினாலும், காங்கிரஸ் தலைமையிடம் – காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்றவர்களிடம் – அவருக்கு ராஜாஜி மாதிரி செல்வாக்கு எல்லாம் இருந்ததில்லை. அவர் பெரியார் மாதிரி புரட்சி எதுவும் செய்ய முயசிக்கவில்லை.

அவருடைய ரகசியம் இதுதான் – மக்களுக்கு/கட்சிக்கு எது நல்லது, அதை எப்படி செய்வது என்று ஓயாமல் சிந்திக்கும் குணம். அந்த சிந்தனைகளை செயல்படுத்தும்போது வரக்கூடிய இடையூறுகளை தாண்டியே தீர வேண்டும் என்ற வெறி.

அவர் மந்திரிகளுக்கு சொன்ன அறிவுரை இதுதானாம் – “பிரச்சினைகளிடமிருந்து ஓடக் கூடாது. பிரச்சினையை சமாளிக்க ஒரு சின்ன முயற்சியாவது எடுங்கள். மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்”. அற்புதமான அறிவுரை. அவரும் அதை கடைப்பிடித்திருக்கிறார்.

இதனால் அவர் குறைகள் இல்லாத மாமனிதர் என்று அர்த்தமில்லை. ராஜாஜியை அமுக்க அவர் 42-54 கால கட்டத்தில் செய்த முயற்சிகள், அவரோடு போட்ட சண்டைகள் அவருக்கு பெருமை சேர்ப்பதில்லை. ராஜாஜிக்கும் பெருமை சேர்ப்பதில்லை என்பதும் உண்மைதான். அவர் கர்வி இல்லை, ஆனால் தொண்டர்களை அணுக விட்டதில்லை. ஏதாவது உதவி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான். சோவே கூட அவர் மற்ற தமிழக் தலைவர்களை வளரவிடவில்லை, தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா ராஜினாமா செய்து பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு முதலமைச்சரின் உள்ளக் குமுறல் என்று குமுதத்திலோ விகடனிலோ ஒரு கட்டுரை வந்தது. எப்படி தலைவர் தன்னை முழுமையாக நம்பவில்லை, சுதந்திரமாக இயங்க விடவில்லை, தலைவர் ஒரு சூப்பர் முதலமைச்சராக நடந்து கொள்கிறார் என்று முதல்வர் வருத்தப்படுகிறார். அது பக்தவத்சலம் காமராஜை பற்றி வருத்தப்பட்டது, பன்னீர்செல்வம் ஜெவை பற்றி அல்ல. தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் செய்தது தவறு. அவர் குறைகள் உள்ள மாமனிதர்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு போயிருக்கிறார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு ஸத்யாக்ரஹத்தில் பங்கேற்றிருக்கிறார். சத்யமூர்த்தியின் அணுக்க சீடர். கொஞ்ச நாள் அவர் தமிழ் நாடு காங்கிரஸில் தலைவராகவும் காமராஜ் செயலாராகவும் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர் தலைவர், அவர் செயலாளர். 🙂 சத்தியமூர்த்தியின் மறைவுக்கு பின்னால், ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னால் இவர் தமிழ் நாட்டு காங்கிரஸின் ஜீவ நாடி ஆகிவிட்டார். அவரால் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வருவதற்கு கூட பல முட்டுக்கட்டைகள் போட முடிந்தது.

அவரது பலங்களில் அவருடைய எளிமையான பின்புலமும் ஒன்று. அவருடைய மதிய உணவுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் ராஜாஜிக்கும் ஒரே குறிக்கோள்தான். அரசியல் நிர்ணய சட்டத்தில் சொன்னபடி எல்லாருக்கும் கல்வி என்பதை விரைவாக நிறைவேற்றுவது. இரண்டு பேருக்கு ஒரே பிரச்சினைதான். கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறைவாக இருக்கிறது. ராஜாஜி கண்ட தீர்வு பகுதி நேரக் கல்வி. (திராவிட இயக்கத்தினர் குலக் கல்வி என்று அழைத்த இந்த திட்டத்தை பற்றி மேலும் விவரங்கள் இங்கே) பகுதி நேரக் கல்வி என்பது சிறந்த நிர்வாக முடிவு. அதனால் கல்வி அறிவு செலவு அதிகம் ஆகாமல் அதிகரித்திருக்கும். ஆனால் அது ஒரு bean counter’s logical, cold hearted தீர்வு. காமராஜ் கண்ட தீர்வில் செலவு அதிகம்தான். ஆனால் அந்த பணம் well spent என்று அவரது படிக்காத ஏழை மனதுக்கு மட்டும்தான் புரியும். ஜீனியஸ் என்றே சொல்லக் கூடிய ராஜாஜிக்கு அந்த தீர்வு எப்போதும் தோன்ற வாய்ப்பில்லை.

விவசாயம், மின்சாரம், தொழில் பேட்டிகள் அமைப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தினார். அரசு விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆர்வியும் இதை குறிப்பிட்டு சொல்கிறார்.

எதிரிகளையும் அணைத்து செல்லும் பக்குவம் அவரிடம் இருந்தது. முதல்வர் போட்டிக்கு அவரை எதிர்த்து போட்டி இட்ட சிஎஸ்தான் அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சிஎஸ், ஆர்வி, கக்கன், பக்தவத்சலம் போன்ற திறமைசாலிகளை அவர் அரவணைத்து சென்றார். அதே நேரத்தில் அவர் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை. மொரார்ஜியை அவர் அடக்கிய விதம் சூப்பர். கலைஞரால் கூட இப்படி செய்திருக்க முடியாது.

காமராஜ் திட்டம் எல்லாம் போட அவரால்தான் முடியும். பதவி ஆசை அவருக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்கு ராஜாஜி ஒரு வீக்னெஸ். அங்கே அவரது பெருந்தன்மை, நல்ல குணங்கள் வெளிப்படவில்லை. சத்தியமூர்த்திக்கு பதிலாக ராஜாஜியை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக காந்தி – முதல்வராக ஆக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு, ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொள்ளாமல் காங்கிரசை விட்டு விலகியதும் தீவிரம் அடைந்தது. 46-இல் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழையக் கூடாது என்று காமராஜ் பெரிதும் முயன்றார். கட்சி அவரது கண்ட்ரோலில் இருந்தாலும், ராஜாஜிக்கு கணிசமான ஆதரவு இருந்தது – மேலிடத்து சப்போர்ட்டும் இருந்தது. அதனால் ராஜாஜி காமராஜை மீறி உள்ளே நுழைந்தார். ராஜாஜி மத்திய அரசாங்கத்துக்கு போய்விட்டதால் சண்டை இன்னும் பெரிதாக வெடிக்கவில்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் சில உள்குத்து வேலைகள் செய்திருக்கிறார். காமராஜ் படத்தில் அவர் ஒரு விழாவில் ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதாக காட்டுகிறார்கள்.

தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் கோட்டை விட்டுவிட்டார். கேரளாவில் இருந்தாலென்ன, தமிழ் நாட்டில் இருந்தாலென்ன, இரண்டும் இந்தியாதானே என்று அவர் நினைத்திருக்க வேண்டும். பிராந்திய உணர்ச்சிகள் இவ்வளவு தீவிரமாக வளரும் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அவருடைய அலட்சியத்துக்கு தமிழர்கள் இன்றும் ஒரு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மிக பெரிய தோல்வி இந்திரா காந்திதான். அவர் தோளில் நின்று பிரதமரான இந்திரா அவரையே யார் என்று கேட்டது அவரை நிலை குலைய செய்திருக்க வேண்டும். அறுபதுகள் காங்கிரசுக்கு நல்லதாக இல்லை. சீனாவோடு சண்டை, ஹிந்தி எதிர்ப்பு, வேலை இல்லா திண்டாட்டம், பொதுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருந்த அதிருப்தி, சோஷலிசத்தின் குறைகள் வெளிப்பட ஆரம்பித்தது எல்லாம் அவரை புரட்டி போட்டுவிட்டன. Indira usurped his socialistic plank. ராஜ மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயம், என்றெல்லாம் ஆரம்பித்தது உண்மையான சோஷலிஸ்ட்டான அவரை வலது சாரி தலைவராக காட்டியது – அவருக்கு மிஞ்சிய கூட்டாளிகள் எல்லாம் வலது சாரி நிஜலிங்கப்பா, மொரார்ஜி, எஸ்.கே.பாட்டில், சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள்தான். A great irony.

முதல்வர் பதவியில் இருந்து விலகிய நாளிலிருந்து அவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல மத்தியிலும் மாநிலத்திலும் இயங்க முயன்றார். மத்தியில் வெற்றி பெற்றவர் மாநிலத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது மத்தியிலும் அவர் தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. 67-இல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஜெயித்திருந்தால் இந்திராவால் அவரை அவ்வளவு சுலபமாக உதறி இருக்க முடியாது. 71-இலோ பங்களாதேஷ் போர் இந்திராவுக்கு அமோக வெற்றி தந்தது. காமராஜ் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவர் ஒரு மாநில அளவு தலைவர் அவ்வளவுதான். அவ்வளவு பெரிய தலைவருக்கும் sell-by-date கடந்து விட்டது.

இன்று ஒரு காமராஜ் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. கம்யூனிசம், சோஷலிசம், காபிடலிசம், போன்ற இசங்களை விட நல்ல தலைவர்கள் ஏதோ ஒரு இசத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது. கன்சர்வேடிவ் ராஜாஜி, சோஷலிஸ்ட் காமராஜ் இருவருமே நல்ல முதல்வர்கள்தானே!

அவரைப் போன்ற ஒரு தலைவர் இந்தியாவின் வரப்பிரசாதம்.