ஒரு துக்ளக் அட்டைப்படம்

ஒரு துக்ளக் அட்டைப்படம்

இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதையைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்கள். சோ தன் நண்பர்களிடம் தன்னாலும் ஒரு பத்திரிகை நடத்த முடியும் என்று ஐந்து ரூபாய் பெட் வைத்திருக்கிறார். அந்த ஐந்து ரூபாய் ஜெயிப்பதற்காக ஆரம்பித்த பத்திரிகைதான் துக்ளக்!

பத்திரிகை நடத்த அனுபவம் இல்லை, அதனால் சும்மா பேருக்கு ஒரு இதழைக் கொண்டு வந்துவிட்டு நிறுத்திவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியம் உதவி செய்து பத்திரிகை வெளி வந்திருக்கிறது.

சோ 1970 பொங்கல் அன்று பத்திரிகை வெளியே கொண்டு வரலாம் என்று சொல்லி இருக்கிறார். பாலன் நாலு வாரம்தானே இருக்கிறது, பத்திரிகையில் என்ன வர வேண்டும் என்று ஒன்றும் யோசிக்கவில்லையே மூன்று மாதம் டைம் எடுத்து யோசிக்கலாமே என்று சொன்னாராம். சோ மூன்று வாரத்தில் தோன்றாதது மூன்று மாதத்திலும் எனக்கு தோன்றாது என்று தன் துக்ளக் ஸ்டைலில் பதில் சொன்னாராம்!

சோவின் அதிர்ஷ்டம் அழைக்கிறது புத்தகத்தில் இதை எல்லாம் விவரமாக எழுதி இருக்கிறார். இட்லிவடை தளத்தில் பக்கங்களை ஸ்கான் செய்து போட்டிருக்கிறார்கள். பாருங்கள்!

இந்த பேட்டியையும் பாருங்கள். 1970 ஜனவரியில் துக்ளக் இன்னும் ஆரம்பிக்காதபோது சோவை விகடனில் எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!

பத்திரிகை ஆசிரியர் ஆகிறார் ‘சோ’!
நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர் சொல்கிறார்களே, உண்மையா?

சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?

நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி காணப் போகிறீர்களா?

சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லையா?

நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?

சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!

நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?

சோ: ஒரு சகலகலா வல்லவர்!

நிருபர்: யார் அது?

சோ: நான்தான்.

நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம், லட்சியம் என்ன?

சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும். இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!

நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்?

சோ: பொங்கல் ரிலீஸ்!

நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில் என்னென்ன வரும் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

சோ: ஏன்? துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது, உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கிறீர்களா?

நிருபர்: சரி! உங்கள் பத்திரிகையின் அமைப்பைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?

சோ: எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன். I am going to look around me and also make my readers look around themselves.

துக்ளக் தளத்தில் பழைய இதழ்களை படிக்கலாம். ரெஜிஸ்டர் செய்ய வேண்டும், கேள்வி பதில் படிக்க முடியாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
இட்லிவடை தளத்தில் துக்ளக் ஆரம்பித்த கதை பதிவு
சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு
சோவின் தைரியம் பற்றி நல்லதந்தி
துக்ளக் தளம்

Advertisements

நான் பார்த்த நாடகம் எல்லாம் சென்னை சபா சர்க்யூட்டில் பார்த்தவைதான். ஒய்.ஜி.பி., சோ, மௌலி, கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி நாடகங்களை பார்த்திருக்கிறேன். கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், மகாபாரதத்தில் மங்காத்தா, டௌரி கல்யாணம், பட்டின பிரவேசம், அப்புறம் காத்தாடி ஊட்டிக்கு போகும் ஒரு நாடகம், ஐயோ அம்மா அம்மம்மா இவைதான் நான் இந்த சர்க்யூட்டில் பார்த்த நாடகங்களின் உச்சம்.

எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும் ஒரே ஜெனரேஷனுக்கே நாடகம் என்றால் என்ன என்பதை மறக்கடித்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்சனையும் ஷாவையும், ப்ரெக்டையும், ஆர்தர் மில்லரையும், டென்னசீ வில்லியம்சையும் படிக்க ஆரம்பித்ததும்தான் நாடகம் என்றால் என்ன என்று ஓரளவாவது எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அப்போது தமிழில் சோவின் நாடகங்களை படித்தேன். ஆனால் நாடகம் என்பது படித்து புரிந்து கொள்ள வேண்டியது இல்லை, பார்க்க வேண்டியது. அப்புறம் நாவலுக்கும் நாடகத்துக்கும் என்ன வித்தியாசம்?

நாடக உத்திகள் எனக்கு புரிய ரொம்ப நாளானது. உதாரணமாக ப்ரெக்டின் The good woman of Sezuan படித்தபோதுதான் எனக்கு முகமூடிகளை ஒரு நாடகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று புரிந்தது. கிரேக்க நாடகங்களை படித்தபோது என்னடா போரடிக்கிறார்கள் என்று தோன்றியது. அதில் வரும் கோரஸ் மகா முட்டாள்தனமாக தெரிந்தது.

அப்போதுதான் ஹைதராபாதில் காஷிராம் கொத்வால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகம் என்றால் அதுதான் நாடகம். எனக்கு இந்த நாடகம் பற்றி முன்பின் தெரியாது. ஏதோ நண்பன் கூப்பிட்டான் என்று கூடப் போனேன். முதல் காட்சியில் கோரஸ் வந்த அடுத்த நிமிஷம் எனக்கு கோரஸ் பற்றி ஞானோதயம் ஏற்பட்டது. Extremely powerful drama. விஜய் டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ். நானா ஃபட்னவிஸாக நடித்த மோகன் அகாஷே இன்னொரு ஜீனியஸ். நாடகம் என்றால் என்ன என்பது இதை பார்த்த பிறகுதான் எனக்கு புரிந்தது. நான் இன்னொரு நாடகத்தை இன்னும் பார்க்கவில்லை.

கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நானா ஃபட்னவிஸ் மராத்திய பேஷ்வா. புனேயில் அதிகாரம் செலுத்தியவர். பெண் பித்தர். அங்கே ஏழை காஷிராம் பிராமணர்களால் அவமானப்படுத்தப்படுகிறான். அவன் தன் பெண்ணை நானாவுக்கு கூட்டிக் கொடுத்து அதிகாரம் உள்ள கொத்வால் பதவியை பெறுகிறான். எல்லா பிராமணர்களுக்கும் டார்ச்சர் கொடுக்கிறான். அவன் பெண் பிரசவத்தில் இறந்துவிட, அவன் அதிகாரம் பறிக்கப்படுகிறது. அவன் அழிகிறான்.

பெங்களூரில் தலே தண்டா என்ற சுமாரான கிரிஷ் கார்னாட் நாடகம் பார்த்திருக்கிறேன். கல்கத்தாவிலும், பம்பாயிலும், பெங்களூரிலும் நாடகம் ஓரளவு நடப்பதாக அப்போதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் டெண்டுல்கர், ஏவம் இந்த்ரஜித் எழுதியவர், கிரிஷ் கார்னாட் மாதிரி தமிழில் யாருமே எழுதுவதில்லையா?

ஏவம் இந்த்ரஜித், சாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!, துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இவை அனைத்தும் நல்ல நாடகங்களாக அமையும் என்று தோன்றுகிறது. இது போன்ற நிஜமான நாடகங்கள் தமிழில் வருவதில்லையா? இல்லை வெளியில் தெரிவதில்லையா? இன்று நான் எங்கேயோ வாழ்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் நாடகம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் வளர்ந்த சூழ்நிலைதான் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கூத்துப் பட்டறை, ஞானி, நா. முத்துசாமி என்றெல்லாம் இருபது வருஷங்களுக்கு முன் நான் கேள்விப்பட்டது கூட இல்லை. அது சரி, கணையாழி பற்றி கூட தெரியாதுதான். 🙂 இப்போது வளர்பவர்களாவது பார்த்தால் சரிதான். ஆனால் இந்த ஜெனரேஷனுக்கும் எஸ்.வி. சேகர்தான் தெரியும் போலிருக்கிறது.

எனக்கு தெரிந்து சோதான் தமிழில் ஓரளவாவது உருப்படியாக நாடகம் எழுதி இருக்கிறார். அவை எல்லாமே வசனங்களை வைத்து மட்டும் எழுதப்பட்டவைதான். ஆனால் உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவை நல்ல முயற்சிகள்.

திராவிட பாரம்பரியத்தில் அண்ணாவின் வேலைக்காரி, ஓரிரவு பெரிதாக பேசப்படுகின்றன. கல்கி ஓரிரவை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் அண்ணாவை புகழ்ந்திருக்கிறார். கனல் பறக்கும் வசனம் இருந்தால் போதும், கதை முக்கியமில்லை என்று நினைத்த காலம் போல. அப்படி என்றால் வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரனை கூட நல்ல நாடகம் என்று சொல்லலாம்.

இந்திரா பார்த்தசாரதி பற்றி சொல்கிறார்கள். நந்தன் கதை நாடகம் conspiracy theory கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது. (இதன் வீடியோவை ஒரு முறை பார்த்திருக்கிறேன், நல்ல நடிப்பு, ஆனால் கதை சரியில்லை!) ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதையை அப்படியே போட்டுவிட்டார். இவை எல்லாம் நல்ல நாடகமாக எனக்கு படவில்லை.

மெரினாவின் நாடகங்கள் ஒரு காலத்தில் மிகவும் பாப்புலர். ஊர் வம்பு, கால்கட்டு ஆகியவற்றை விகடனில் படித்திருக்கிறேன். தனிக் குடித்தனம் புகழ் பெற்ற நாடகம். ஆனால் இவை எதுவும் உலகத் தரம் வாய்ந்த நாடகம் என்று எனக்கு தோன்றவில்லை.

சுஜாதா சில முயற்சிகள் செய்திருக்கிறார். சரியாக வரவில்லை. நான் பார்த்த ஊஞ்சல் நாடகத்தின் வீடியோ was quite bad. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு சிறு வயதில் படித்திருக்கிறேன், அப்போது பிடித்திருந்தது, இப்போது என்ன நினைப்பேனோ தெரியாது. அவர் எழுதிய சரளா என்ற நாடகம் அந்த காலத்தில் எனக்கு டென்னசீ வில்லியம்சை நினைவுபடுத்தியது. மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

அதே போல் ஜெயந்தன் எழுதிய ஏதோ ஒரு நாடகம் எனக்கு அந்த காலத்தில் பிடித்திருந்தது. கணக்கனோ என்னவோ பேர். மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

தமிழில் சோதனை நாடகங்கள் என்று என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் நாற்காலிக்காரர் கதை நாடகமாக பார்த்தால் நன்றாக இருக்கலாம்.

நீங்கள் நாடகம் பார்த்த அனுபவங்களை எழுதுங்களேன்! அது எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணமாக இருந்தாலும் சரி.

தொடர்புடைய பதிவுகள்
சோ – ஒரு மதிப்பீடு
முகமது பின் துக்ளக் விமர்சனம்


சோ ராமசாமி

சோ ராமசாமி

இன்று தற்செயலாக நெருக்கடி நிலை பற்றி டோண்டு ராகவன் எழுதிய ஒரு பதிவை பார்த்தேன். சோ நெருக்கடி நிலையின்போது இந்திரா காந்திக்கு ஜால்ரா அடிக்கவில்லை என்று தெரியும். ஆனால் இவ்வளவு விவரங்கள் தெரியாது. அவர் எழுதியதிலிருந்து:

அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.

இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.

….

பத்திரிகை தணிக்கை முறை மிகவும் கடுமையாக்கப்பட்டது. சில காலம் வெளியிடப்படாமல் வைத்திருந்த துக்ளக்கை சோ அவர்கள் மறுபடி வெளியிட்டார். பத்திரிகை தணிக்கை அதிகாரிகளை நன்றாக ஏய்த்தார்.

….

1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்? 1976-ல் வந்திருக்க வேண்டிய பொது தேர்தலை இந்திரா காந்தி ஓராண்டுக்கு தள்ளி வைத்தார். இந்த அக்கிரமம் முன்னாலும் நடக்கவில்லை, அதற்கு பின்னாலும் தற்சமயம் வரை நடக்கவில்லை.

….

1977-ல் பத்திரிகை தணிக்கை முறை தேர்தலுக்கு முன்னோடியாக விலக்கப்பட்டது. அப்போது சோ அவர்கள் சீரணி அரங்கில் ஒரு மீட்டிங் வைத்தார். தணிக்கை முறை தமாஷ்கள் பலவற்றை அவர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவற்றை சோ அவர்கள் மேற்கோள் காட்ட, அது தணிக்கை அதிகாரியால் தடுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் நன்றாக நிலை கொண்டுள்ளதாக ஒரு இந்திரா காங்கிரஸ் தலைவர் உளறியதை சோ அவ்ர்கள் அப்படியே மாறுதலின்றி செய்தியாகப் போட இது ரொம்ப ஓவர், தேவையில்லாத கிண்டல் என்று தணிக்கை அதிகாரி நீக்கினார். அதை சோ அவர்கள் கூறியபோது மெரினா கடற்கரையே சிரிப்பலைகளில் மூழ்கியது. அப்போதுதான் மேலே கூறியபடி இந்திரா காந்தியை வெறுமனே பெயரிட்டு அழைத்ததையும் பிரதமர் என்று குறிப்பிடாததையும் கூறினார். இன்னொரு சிரிப்பலை.

ஒரு பத்திரிகையாளராக இந்த சமயத்தில்தான் சோ மிக அதிகமாக பிரகாசித்திருக்கிறார்.

தொடர்புடைய பிற பதிவுகள்:
சோ – ஒரு மதிப்பீடு
சோவை பற்றி நல்லதந்தி
முகமது பின் துக்ளக் – என் விமர்சனம்
முகமது பின் துக்ளக் – விகடன் விமர்சனம்


துக்ளக் என்னை மன்னிக்கட்டும்!

நாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எல்லா தொகுதிகளிலும் தானே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் சட்டம் இடம் கொடுக்குமா என்று கேட்டதற்கு கருணாநிதி தன் இஷ்டம் போல வளைப்பதற்கு இது அவரது வீட்டின் ஜன்னல் சட்டம் அல்ல, நாட்டின் சட்டம் என்று பதிலளித்தார்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் சோனியா காந்தி புரட்சித் தலைவி, தமிழகத்தின் தவப் பயன், மகாத்மா ஜெயலலிதா டெல்லியில் நிற்க மனு தாக்கல் செய்யாவிட்டால் சோனியா காந்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று மகாதேவன் அறிவித்திருக்கிறார். சோனியா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லையே, அவரை எப்படி நீங்கள் நீக்க முடியும் என்று கேட்டதற்கு டி.டி.கே. தினகரன் முதலில் அவரை உறுப்பினராக்கி பிறகு நீக்குவோம் என்று சொன்னார். திவாகரன் அதெல்லாம் வேண்டாம், சோனியாவை காங்கிரசிலிருந்து நீக்கிவிடலாம் என்று கருத்து தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா 552 தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியை வெளியிடும்போது “முன்னாள் முதல்வர்” ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு எழுதும்படி தினகரன், மகாதேவன், திவாகரன் மூவரும் நிருபர்களை கேட்டுக் கொண்டார்கள்.

கலைஞர் பேட்டி
இது பற்றி பேட்டி அளித்த கலைஞர் நாற்பது ஆண்டு கால நண்பரான எம்ஜிஆர் கூட நாற்பது தொகுதிகளிலும் போட்டி இடுவேன் என்று சொன்னதில்லை என்பதை சுட்டி காட்டினார். இது பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைக்கு விரோதமானது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நல்லி சில்க் உடுத்தும் நய வஞ்சகி, நச்சுப் பாம்பு ஜெயலலிதா போன்று தான் எப்போதும் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்றும் வருத்தத்தோடு கூறினார். உடனே தான் நல்லி சில்க் முதலாளியான செட்டியாரின் இனத்துக்கு எதிரி இல்லை என்றும், செட்டியாரியத்தை மட்டுமே எதிர்ப்பதாகவும் ஒரு விளக்கமும் அளித்தார். கூட்டணி தர்மத்தை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்த ராமதாசும், கம்யூனிஸ்ட் கட்சி அவாளும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் வினவினார். முதுகில் குத்தும் துரோகி, கழக கண்மணிகளின் முதல் விரோதி வைக்கோ தி.மு.க. அணிக்கு மாற விரும்பினால் அவரை இரு கரம் நீட்டி வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சோ கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்த சோ, பிஜேபிக்கு இரண்டு சீட் கொடுத்துவிட்டு மிச்ச 38 சீட்டில் ஜெ நின்றிருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். யாருக்கு வாய்ப்பு அதிகரித்திருக்கும், ஜெவுக்கா, பிஜெபிக்கா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. நரேந்திர மோடி குஜராத்தில் எல்லா தொகுதிகளிலும் போட்டி இட வேண்டும் என்று அவர் பிஜேபி தலைமைக்கு ஆலோசனை தெரிவித்து வருகிறதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணி கட்சிகள் நிலவரம் 
கூட்டணியில் குழப்பம் விளைக்க கலைஞர் செய்யும் முயற்சிகள் படுதோல்வி அடையும் என்று ஜெயலலிதா இன்று பேட்டி அளித்திருக்கிறார். இந்த முயற்சிகளை கலைஞர் உடனே நிறுத்தாவிட்டால் அடுத்த திமுக உள் கட்சி தேர்தலில் எல்லா பதவிகளுக்கும் தான் போட்டி இட வேண்டி வரும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் மீண்டும் கலைஞரை அணுகியதாகவும், கலைஞர் அவருக்கு இதயத்தில் இடம் தருவதாக கூறியதாகவும் தெரிகிறது. அன்புமணிக்கு உடனடியாக மந்திரி பதவியும், பிறகு ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாக சொல்லி இருப்பதால் டாக்டர் இந்த ஏற்பாட்டை ஒத்துக் கொள்வார் என்று தெரிகிறது.

கட்சியிலிருந்து நிற்க வைக்க ஆள் தேட வேண்டிய அவசியம் இல்லாததால் வைக்கோ மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிகிறது. அம்மாவை தலைவராக ஏற்றுக்கொண்டது பெரிய தீர்க்கதரிசனம் என்று அவர் நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இது தெரிந்த ஜெயலலிதா “இவர் ரொம்ப நல்லவரு! எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு” என்று சொன்னதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து நெரிசல் 
லாயிட்ஸ் ரோடில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டி இட வேண்டும் என்று ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் மனு கொடுக்க க்யூவில் நிற்பதால் லாயிட்ஸ் ரோடில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவினரின் அராஜகம் என்றும் இதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் சொல்லி உள்ளார்.

 

தி.மு.க. தொகுதி பங்கீட்டில் தகராறு

தி.மு.க. அணியில் தொகுதி பங்கீட்டு தகராறுகள் இன்னும் முடியவில்லை. காங்கிரசுக்கு 20 சீட், விடுதலை சிறுத்தைகளுக்கு 1 சீட் என்ற அளவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டாலும் ஸ்டாலின் அழகிரிக்கு இடையே தொகுதி பங்கீடு முடியாததால் கலைஞர் பெரும் கவலையில் இருக்கிறார் என்று தெரிகிறது. சீக்கிரம் பங்கீட்டை முடிக்கும்படியும், இல்லாவிட்டால் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை சமாளிக்க முடியாது என்றும் அவர் சொன்னதாக தெரிகிறது. மு.க. முத்து இந்த முறை இதயத்தில் மட்டும் இடம் தந்தால் போதாது என்றும் சொல்லி வருவதாக நமது நிருபர் தெரிவிக்கிறார்.

அழகிரி கை ஓங்குகிறது
இன்று இந்த தேர்தலின் விசேஷ பொறுப்பாளராக அழகிரி நியமிக்கப்பட்டார். இதை பற்றி பேசிய கலைஞர் அழகிரி ஏற்கனவே தென் மண்டல செயலாளராக இருப்பதாகவும், தமிழ் நாடு இந்தியாவின் தென் மண்டலத்தில்தான் இருப்பது பெரியார் வழி வந்து புவியியல் பயின்றவர்களுக்கு தெரியும் என்றும், அதனால் அழகிரியே இந்த தேர்தலுக்கு முழு பொறுப்பை ஏற்கப்போவதாகவும் சொன்னார். அழகிரி அவருக்கு ஒரு சால்வை போட்டு மரியாதை செலுத்தினார். அப்போது பேராசிரியர், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். பிறகு அழகிரி நிருபர்களிடம் பேசுகையில் ஸ்டாலின் என்பது ரஷியப் பெயர், ஸ்டாலினுக்கு ரஷிய தேர்தலில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தினகரன் அலுவலகம் மதுரையில் மூடப்பட்டதற்கும் இந்த செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சன் டிவியின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

தயாநிதி மாறன் மதுரையில் போட்டி!
அழகிரி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் சமரசம் ஏற்பட்டதாகவும், அதனால் தயாநிதி மதுரையில் போட்டி போட இருப்பதாகவும் தெரிகிறது. அழகிரியின் மகனான தயாநிதி சன் டிவியின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்பார் என்றும ஒரு வதந்தி உலவுகிறது.

 

 

ராஜீவ் மரணம் தற்கொலை – சுப்ரமணிய சாமியின் அதிர்ச்சி தரும் அறிக்கை

“இங்கே பாருங்கோ, ராஜீவ் எக்ஸ் ப்ரைம் மினிஸ்டர். அவருக்கு நிறைய செக்யூரிடி எல்லாம் உண்டு. அவர்கிட்ட எப்படி பாம் போக முடியும்? அந்த பாம் அவரோட உடம்பிலேயே இருந்துது. அவருக்கு குடும்பத்திலே சோனியா ரொம்ப தொந்தரவு கொடுத்தாலே அந்த மனுஷன் பாவம் அவர் உடம்பிலே அவரே பாம் செட்டப் பண்ணி தற்கொலை பண்ணிண்டுட்டார். இதுக்கு என்கிட்டே நிறைய எவிடன்ஸ் இருக்கு. அதை எல்லாம் எனக்கு பிரபாகரனே கொடுத்திருக்கார்” என்று சாமி சொன்னதாக கேட்ட நாம் அதிர்ந்து போனோம். அவரிடம் நீங்கள்தான் புலிகளோட எதிரியாச்சே என்று கேட்டோம். அதற்கு அவர் “இல்லே இல்லே நான் காங்கிரசுக்கு எதிரி. பிரபாகரனும் அப்படித்தான். அதனால அவர் என்னோட நண்பன், இதுக்கு உங்களுக்கு எவிடன்ஸ் வேணும்னா தாவூத் இப்ராஹீம் கிட்ட கேட்டுக்குங்கோ” என்று சொன்னார்.

இதனால் ஜெ அவருக்கு மதுரை தொகுதியை விட்டுத் தருவார் என்றும், மிச்சம் உள்ள 39 தொகுதியில் மட்டுமே போட்டி இடுவார் என்றும தெரிகிறது. அந்த பாம்பை(bomb) செட்டப் செய்தது கருணாநிதி என்னும் பாம்புதான் என்றும், ராஜீவின் தற்கொலைக்கு கருணாநிதி அவருக்கு கமர்கட் கொடுக்காததும் ஒரு முக்கிய காரணம் என்றும், ஜெ முழங்கினார்.
இதை கேட்டதும் கலைஞர் எழுதிய கவிதை.

ஜெயலலிதா வட்டமிடும் கழுகு,
நான் உனக்காக உருகும் மெழுகு,
தமிழா நீ பார்த்து பழகு.

ஆர்எம்வி கட்சியின் இமாலய வளர்ச்சி – தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்

பல நாட்களாக அவார்டா கொடுக்கறாங்க என்ற ப்ளாக்-ஐ எழுதி வரும் ஆர்வி இன்று ஆர்எம்வி கட்சியில் சேர்ந்தார். ஆர்விக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பழைய கால சினிமா பற்றி ஆர்எம்வியை பேட்டி காண முயற்சித்ததாகவும், ஆர்எம்வி தவறாக புரிந்து கொண்டு அவரை கட்சி உறுப்பினர் ஆக்கி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அவரது எம்ஜிஆர் கழகத்தில் உறுப்பினர் எண்ணிக்கை போன வருஷத்தை விட 100% அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

எம்ஜிஆர் கழகத்துக்கு ஒரு சீட் – கலைஞர் அறிக்கை
தமிழக அரசியல் மாற்றங்களை எப்போதும் கூர்ந்து கவனித்து வரும் கலைஞரின் கழுகுக் கண்களிலிருந்து எம்ஜிஆர் கழகத்தின் இமாலய வளர்ச்சி தப்பவில்லை என்று தெரிகிறது. இன்று மாலை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் நாற்பது ஆண்டு நண்பர் எம்ஜிஆருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவரும், ஏமாற்றங்களை அண்ணாவின் ஆணைப்படி எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டு தாங்கிக் கொள்பவருமான ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்துக்கு வரும் தேர்தலில் அமெரிக்காவில் ஒரு சீட் ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இதன் மூலம் வெளி நாடுகளிலும் போட்டியிடும் முதல் இந்தியக் கட்சி தி.மு.க.தான் என்ற ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சீட்டில் அமெரிக்காவில் வாழும் ஆர்வி போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆர்எம்வியிடம் தமிழகத்தில் சீட் கிடைக்காததற்காக ஏமாற்றம் அடைகிறீர்களா என்று கேட்டதற்கு அவர்
“உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்”
என்று பாடிவிட்டு, எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் ராஜு, வட அமெரிக்காவில் வாசு என்று இரண்டு படங்களை எடுக்க திட்டம் போட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

ஆர்விக்கு மாரடைப்பு
உலகம் சுற்றும் வாலிபனை பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த ஆர்வி வட அமெரிக்காவில் வாசு பற்றி வந்த செய்தியை படித்துவிட்டு தான் அமெரிக்காவில் தி.மு.க. அணியில் போட்டி இடப்போவதை தெரிந்து கொண்டார். உடனே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது மாரடைப்பு இல்லை, வாயு தொந்தரவுதான் என்று டாக்டர்கள் சொன்னாலும் அவர் தேர்தல் முடியும் வரை கோமாவிலிருந்து வெளி வரமாட்டேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் -ஆர்எம்வி ஆலோசனை
ஆர்வி பார்ப்பன ஜாதியில் பிறந்தவர் என்பதை இப்போதுதான் கலைஞர் அறிந்தார். அவர் உடனே “அவாள் நமக்கு எப்போதுமே சவால்தான்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சமீபத்தில் 1964-இல் கூடுவாஞ்சேரி இடைத்தேர்தலில் ஒரு குல்லுக பட்டர் தி.மு.க.வின் முதுகில் குத்தியதையும், ஜெயலலிதா சட்டசபைய்ல் தான் பாப்பாத்தி என்று சொல்லிக் கொண்டதையும், அதே சட்ட சபையில் ஜாதி பேதத்தை ஒழிப்பதற்காக தான் சூத்திரன், நாலாம் வருணத்தவன் என்று சொல்லி கொண்டதையும் நினைவு கூர்ந்தார். பிறகு தென்சென்னை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டதால், ராஜாஜியை மூதறிஞர் என்று முதலில் அழைத்தது தான்தான் என்பதையும் நினைவு கூர்ந்தார். தான் பார்ப்பனர்களுக்கு எதிரி இல்லை, பார்ப்பநீயத்துக்குத்தான் என்று இலக்கிய ரசம் சொட்ட சொட்ட இன்னொரு கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்த கவிதை நாளை தினகரன், முரசொலியில் வரும் என்றும், இந்த கவிதைக்கு கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நமீதா அபிநயம் பிடித்துக் காட்டுவார் என்றும் தெரிகிறது.

பிறகு ஆர்எம்வி இது போன்ற துயர சம்பவங்களை தவிர்க்க விரும்புவதாகவும், அதனால் வழக்கம் போல் கலைஞர் இதயத்தில் மட்டும் சீட் கிடைத்தால் போதும் என்று கூறினார். கலைஞர் தான் எதையும் தாங்கும் இதயம் உள்ள அண்ணாவின் வழி வந்தவன், ஆர்எம்வியையும் தாங்குவேன் என்று குறிப்பிட்டார்.

காதில் விழுந்த துணுக்கு செய்திகள் 

ரஜினி ஆதரவு யாருக்கு?
ரஜினி நான் யாருக்கு ஆதரவு தரணும், எப்படி ஆதரவு தரணும், எப்போ ஆதரவு தரணும் அப்படின்றதெல்லாம் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார். இதையே இந்திரன் படத்தில் ஒரு பன்ச் ஆகவும் வைத்த்ருப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது. படத்தின் ரகசியங்கள் வெளி வருவதால் ஷங்கர் மிக கோபத்தில் இருக்கிறாராம்.

ஸ்வீட் எஸ், சீட் நோ
சரத்தின் மூத்த மகளுக்கு நேற்று 25 வயது முடிந்தது. இதை குடும்பத்தில் அனைவரும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்கள். தன் கட்சி சார்பில் நிற்க மூன்று தகுதி உள்ளவர்கள் கிடைத்துவிட்டதால் சரத் ஆனந்தத்தில் மிதக்கிறார். ஆனால் ராதிகாவோ ஸ்வீட் கொடுத்து கொண்டாடினால் ஓகே, ஆனால் சீட் கொடுத்து கொண்டாடக் கூடாது, பணத்தை எல்லாம் முதல் தாரத்து வாரிசுங்க மேலயே விட்டீங்க, அப்புறம் தெரியும் சேதி என்று உறுமுகிறாராம்.

முன் வந்த பதிவுகள்
சுப்பிரமணிய சாமி – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 5
டி. ராஜேந்தர் – தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 4
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 3 – சரத்குமார்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 2 – ஆர்.எம். வீரப்பனின் எம்ஜிஆர் கழகம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 1 – கார்த்திக் கட்சி
தமிழ் நாட்டு கட்சிகள்சோவை பற்றி எழுதுவதாக முதலில் ஐடியா இல்லை. கொற்கை என்பவர் நான் ராஜாஜியை பற்றி எழுதியதும் அவர் “நீ பிராமணன், பிராமணன் பற்றிதான் எழுதுவாய்” என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் விட்டார். அந்த கமென்ட் கிளப்பிய கடுப்பில்தான் – “பிராமணன் பற்றி எழுதுவது கொலைக் குற்றமா?” – இதை எழுதுகிறேன்.

சோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல் (வெற்றி அடைந்தாரா தெரியாது), நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், அரசியல் இதழியலாளர் என்று.

வக்கீலாக என்ன செய்தாரோ எனக்கு தெரியாது.

அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு திரைப்படம் கூட நினைவில்லை. ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே என்ன படம்? இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி)

அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம். உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை மாதிரி சில நாடகங்களில்தான் கோர்வையான கதை அமைந்திருக்கும். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பண பலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார். அவரது பாணி ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணி. very topical comments. எழுத ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. சில சமயம் Pygmalion, Tale of Two Cities போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் மனம் ஒரு குரங்கு, வந்தே மாதரம் போன்ற நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் ப்ளாட்டே இல்லாமல் சும்மா அரசியல் கமெண்ட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள் மற்றும் நாடகங்களை எழுதி இருக்கிறார்.

அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. இருவரிடமும் ஒரே ப்ராப்ளம். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.

அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் சிரிக்க வைப்பவை. சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. சாத்திரம் சொன்னதில்லை, துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகியவை படிக்க வேண்டியவை.

அவருடைய இதழியல் பணி குறிப்பிடப்பட வேண்டிய்து. துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். கலைஞர் அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது ஆச்சரியம்தான். He made Thuglaq an institution! அவருக்கு பிறகு துக்ளக் வரப்போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

அவருடைய அபிப்ராயங்கள் சுலபமாக மாறுவதில்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. அவற்றை நல்ல நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவார். எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை அவர் நடுநிலை தவறியதில்லை. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார். ஒண்ணரை பக்க நாளேடுகள் சூப்பர்!

என்றைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்க ஆரம்பித்தனவோ, அன்றையிலிருந்து அவர் தனது நடுநிலையை தவற விட்டுவிட்டார். அவரது கண்ணோட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நல்லது. அதனால் அவர் பா.ஜ.க.வின் முக்கிய குறையான முஸ்லீம் எதிர்ப்பு என்பதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார். நரேந்திர மோடி குஜராத்தை ஊழல் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறாராம். அங்கே வளர்ச்சி அதிகமாம். அவரை சாதாரண மனிதனும் சுலபமாக பார்க்கலாமாம். இவை எல்லாம் அங்கே நடந்த படுகொலைகளை நியாயபடுத்த முடியாது. அவரே ஒரு முறை சொன்ன மாதிரி, integrity is more important in a politician than efficiency.

அதே போல்தான் ஜெவும். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்புகிறார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருக்கிறது.

அவர் நல்ல அறிவாளி. அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று.

மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். ஆனால் ஒரு பத்து பதினைந்து வருஷங்களாக அவர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார், அதனால் எல்லார் தவறுகளையும் போட்டு கிழிக்காமல், பா.ஜ.க.வுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துவிட்டார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூறப்பட வேண்டியவர்.


எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். ஸ்கூலில் டீச்சர். நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.

என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவருக்கு ஆட்சி செய்ய ஒரு ஸ்கூல் இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய நண்பர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு எஸ்கேப் வால்வ்.

எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு அழைத்துப்போய் மெம்பர் ஆக்கினார். எலிமெண்டரி ஸ்கூலுக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். இண்டெர்வல் விடும் அந்த ஐந்து நிமிஷத்தில் கூட நான் லைப்ரரிக்கு ஓடிவிடுவேன். ஒரு வருஷத்துக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் பேப்பர்களையும் விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி.

என் நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டு சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.

எனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை எழுதினார், அதை சமீபத்தில் நெட்டில் படித்தேன்.

பெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி”, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌஸிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (சமீபத்தில் மீண்டும் படித்தபோதுதான் தெரிந்துகொண்டேன்) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. எனக்கு ஒன்றும் அந்த வயதில் புரியப்போவதில்லை என்ற தைரியமாக இருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால், யவன ராணி, கடல் புறா, மலை வாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவ பூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை, மஞ்சள் ஆறு, போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல் புறா மூலமும் தெரிந்துகொண்டவை பல வருஷங்கள் சரித்திர பரீட்சைகளில் உதவி செய்தன.

ஒரு பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகம் சாயாவனம்தான். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது.

அப்போது ஜெயகாந்தன், அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை படித்தேன், ஆனால் எதுவும் அந்த வயதிற்கு பொருந்தவில்லை. சில நேரங்களில் சில மனிதர்களில் வெங்கு மாமா ஒரு பெரிய ஷாக் என்பது நினைவிருக்கிறது.

வாரப் பத்திரிக்கைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். மணியன் போரடிக்கும், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் படிப்பேன். இதயம் பேசுகிறது படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது.

தமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

நான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)

அப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள். அப்புறம் ராஜேந்திர குமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம்.

ஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக். அது கிடைப்பது அபூர்வம்தான்.

14 வயதில் இங்க்லிஷுக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி பிறகு

சீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றி பிறகு.