தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 3

யார் பிரதமரானாலும் முதல்வரானாலும் அமைச்சரானாலும் நம் அன்றாட வாழ்வில் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. அதுவும் இப்போதெல்லாம் யாரும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு யாரும் அரசியலில் நுழைவதும் இல்லை. ஆனால் நேரடியாக சாதாரண (மத்தியதர) மக்களிடம் தாகம் ஏற்படுத்திய அமைச்சர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள்:

மது தண்டவதே, ரயில்வே அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – ரயில் பிரயாணத்தின் கஷ்டத்தை குறைத்தது.
ஒரு காலத்தில் பயணம் என்றாலே ரயில் பயணம்தான். இந்த ஜனதா அரசுக்கு முன் ரயில் பயணம், அதுவும் மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் என்றால் மிகவும் சிரமம்தான். அது சிரமம் என்று கூடத் தெரியாது, ஏனென்றால் ஒப்பிட்டுப் பார்க்க வேறு எதுவும் இல்லை. கட்டை பெஞ்சுகள், மிகவும் வசதி குறைந்த ரயில் பெட்டிகள் என்றுதான் இருக்கும். முதல் வகுப்பை பொறாமையால் எட்டிப் பார்த்தால் குஷன் வைத்த சீட்டுகள் தெரியும். (வேறு என்ன இருக்கிறது என்று தெரியாது, உள்ளே போனால்தானே?) தண்டவதே ரயில்வே அமைச்சரானதும் எல்லா வகுப்புகளிலும் சவுகரியம் உயர்ந்தது, கட்டை பெஞ்சுகள் ஒழிந்தன, எல்லா பெட்டிகளிலும் குஷன் வைத்த சீட்டுகள் வந்தன, நெடுந்தூர ரயில் பயணம் என்பது சிரமமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை என்று முதன்முதலாக புரிந்தது.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், தொழில் அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – அயல் நாட்டு கம்ப்யூட்டர் கம்பெனிகளை வெளியேற்றியது
இந்த liberalization எல்லாம் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஐபிஎம்மும், கோகோ கோலாவும் மார்க்கெட்டை பிடித்திருந்தன. (மார்க்கெட்டின் சைஸ் சின்னது, வசதியானவர்கள் மட்டும்தான் கோகோ கோலா குடிப்பார்கள், மிச்ச பேர் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் காளி மார்க்தான்) ஃ பெர்னாண்டஸ் என்ன நினைத்தாரோ தெரியாது, எல்லா அயல்நாட்டு கம்பெனிகளையும் இந்தியாவை விட்டு துரத்திவிட்டார். (ரஷியாவுக்கு மிக நெருக்கமானவர் என்று அறியப்பட்ட, சோஷலிசம் சோஷலிசம் என்று பேசிய இந்திரா காந்தி அயல் நாட்டு கம்பெனிகளை வெளியேற்றவில்லை, வலதுசாரி என்று அறியப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில்தான் இதெல்லாம் நடந்தது.) அவர் என்ன நினைத்து இதை செய்தாரோ தெரியாது, ஆனால் அதனால் அடுத்த ஜெனரேஷன் லிம்கா, கோல்ட் ஸ்பாட் குடித்து வளர்ந்தது, ஹெச்சிஎல், விப்ரோ மாதிரி கம்பெனிகளில் அவர்களுக்கு வேலை கிடைத்தது, மத்திய தர வர்க்கத்தின் நிலை கொஞ்சம் உயர்ந்தது.

எம்ஜிஆர், தமிழக முதல்வர், 1977-87 – தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள்
நிறைய தமிழர்கள் இன்று ஓரளவு வசதியாக வாழ்வது அவர்கள் அப்பா அம்மா கடனை உடனை வாங்கி அவர்களை எஞ்சினியரிங் படிக்க வைத்ததால்தான். அதற்கு முன்னாள் தமிழ் நாடு முழுவதும் ஒரு 2500-3000 சீட்தான் எஞ்சினியரிங், மருத்துவ கல்லூரிகளில். யோசித்துப் பாருங்கள், அன்றைக்கு ஒரு நாலு கோடி தமிழர் இருந்திருப்பார்கள், ஒரு கோடி குடும்பம் என்று வைத்துக் கொள்ளலாம். வருஷத்துக்கு ஒரு பத்து லட்சம் பேர் ப்ளஸ்டூ பாஸ் செய்திருப்பார்கள், அதில் மூவாயிரம் பேருக்குத்தான் தொழில் கல்லூரிகளில் சீட் என்றால் மிச்ச பேர் என்ன செய்வது?

மன்மோகன் சிங்-நரசிம்ம ராவ், காங்கிரஸ் (மத்திய) அரசு – 1991-96 Liberalization
பெரும் தாக்கம் உள்ள முடிவு இது. இந்தியாவின் மத்திய தர வர்க்கம் மேலெழுந்தது. பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதித்தார்கள். கன்ஸ்யூமர் காலம் என்று சொல்லலாம். ஆனால் ஏழைகள் வாழ்க்கை இன்னும் கீழே போனதோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

இதைத் தவிர காமராஜின் மதிய உணவுத் திட்டம், தமிழக தொழிலமைச்சர் ஆர்வியின் (ஜனாதிபதி ஆன ஆர். வெங்கட்ராமன்) வேலை வாய்ப்பு தரும் பல தொழில்களை வளர்த்தது, சி. சுப்ரமண்யம் முன்னின்று இயக்கிய பசுமைப் புரட்சி என்றும் சொல்லலாம். ஆனால் இவை எனக்கு பர்சனலாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. (சின்னப் பையங்க!) அதனால்தான் இவற்றை குறிப்பிடவில்லை.

அமைச்சர்கள் நினைத்தால் மக்களுக்கு முன்னேற வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதுவே நல்ல அமைச்சர்களின் அடையாளம். அப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவாக இருப்பது நம் துரதிருஷ்டம்.

அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்கிய அரசியல்வாதிகள், தலைவர்கள், அமைச்சர்கள் என்று நீங்கள் யாரையாவது நினைக்கிறீர்களா? பதில் எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

Advertisements

உப்பிலி ஸ்ரீனிவாஸ் உட்பட்ட பலர் கக்கன் பற்றிய பல விவரங்களை வைத்யநாத ஐயர் பதிவில் கொடுத்திருந்தார்கள். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

கக்கன் 1910-இல் பிறந்தவர். அவரது குரு வைத்யநாத ஐயரை விட இருபது வயது இளையவர். தலித் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கோவில் பூசாரி. மதுரைக்கு பக்கத்து கிராமமான தும்பைப்பட்டியில் பிறந்தவர். வைத்யநாத ஐயர் வீட்டில் ஊழியராக இருந்து அடுப்படி வரையில் சகல வேலைகளையும் செய்து வந்தார். 38-இல் சொர்ணம் பார்வதி என்பவரோடு கல்யாணம் நடந்திருக்கிறது.

முதன் முதலாக அவர் பேர் அடிபட்டது மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தின்போது என்று நினைக்கிறேன். வைத்யநாத ஐயரும் கோபாலசாமி என்பவரும் முன்னால் நின்று இந்த ஆலயப் பிரவேசத்தை நடத்தி இருக்கிறார்கள்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு அலிப்பூர் ஜெயில். அப்போது பயங்கர அடியாம். 1946 மத்திய சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1952 தேர்தலில் எம்.பி. 1957 தேர்தலில் எம்.எல்.ஏ., அமைச்சர். பொதுப்பணித்துறை, விவசாயம், ஆதி திராவிடர் நலத்துறை, உள்துறை என்று பல பொறுப்புகளை வகித்திருக்கிறார். மெரினாவில் இந்துக் கடவுள்களின் சிலைகளை, தனது எச்சரிக்கையையும் மீறி, தந்தை பெரியார் எரித்த போது, சற்றும் தயங்காமல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தவர் கக்கன் என்று ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுகிறார். தனிப்பட்ட தலைவர்களை விட சட்டம் – ஒழுங்கு முக்கியம் என செயல்பட்ட அவரை பின்னர் அதே பெரியார் பாராட்டினாராம். ஜாதிக் கலவரத்தை திறமையாக அடக்கினார் என்று இங்கே படித்தேன். – “சாதிக் கலவரம் நடந்த போது தேவரை நேரில் போய் சந்திக்கச் சென்ற போது போக வேண்டாம் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மீறி மன தைரியத்துடன் சென்று தேவரை சந்திக்கிறார். அவர் மிகச் சிறப்பாக வரவேற்று, இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை விட்டு சாதிக் கலவரத்தை நிறுத்துகின்றனர்.” அவர் டம்மி அல்ல, டோக்கன் தலித் தலைவர் இல்லை என்று விஜயன் சொல்கிறார். வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில் பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமை கக்கனுக்கு உண்டாம்.

தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவுமிருந்த கக்கன் எந்த விதத்திலும் கறைபடாதவர். கக்கனுக்குப் பிறகு எந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகனுக்கும் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய பொறுப்புகள் இன்று வரை வழங்கப்படவில்லை.

கக்கன் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் கோஷ்டி சண்டை மட்டுப்பட்டிருந்தது என்று இங்கே படித்தேன். முதலில் கக்கன் காங்கிரஸ் தலைவராக இருந்தாரா இல்லை காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவராக இருந்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. கோஷ்டி சண்டை மட்டுப்பட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ராஜாஜியை வெளியே அனுப்பியாயிற்று. மிஞ்சி இருந்த ராஜாஜி ஆதரவாளர்கள் கூட – சி.எஸ். உட்பட – காமராஜை தலைவராக ஏற்றுக் கொண்டாயிற்று. அப்புறம் ஏது கோஷ்டி?

கக்கன் சென்ற ஒரே வெளிநாடு சீனா மட்டுமே.​ சீனாவிற்குச் சென்றிருந்த சமயம் சூயன்லாய் அவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.​

அமைச்சராய் இருந்தபோது தன்னுடைய சம்பளம் போதாமல்,​​ மாதக் கடைசியில் தன்னிடம் வேலைப் பார்க்கும் செயலாளரிடம் கடன் வாங்குவாராம். ராஜன் சொல்கிறார் – அவரது தம்பி விஸ்வநாதன் கக்கனுக்கு சென்னையில் வேலை கிடைத்து வேலைக்குச் சேருவதற்காக அண்ணன் வீட்டிற்குத் தங்கச் சென்றிருக்கிறார். இது அரசு வீடு என் உறவினர்கள் தங்கக் கூடாது இரவு மட்டும் போலீஸ்காரர் தங்கும் அவுட்போஸ்டில் இருந்து விட்டு காலையில் வேறு இடம் பார்த்துக் கொள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் மந்திரி கக்கன். ஆனால் உப்பிலி ஸ்ரீனிவாஸ் இது சம்பந்தி என்று குறிப்பிடுகிறார். (ஒரு வேளை இரண்டு பேரையும் வீட்டில் தங்கக் கூடாது என்று சொன்னாரோ என்னவோ. என்னைப் பொறுத்த வரை இது கிறுக்குத்தனம்.)

1975-இல் காமராஜர் இறந்த பிறகு அரசியலை விட்டு கக்கன் விலகிவிட்டார்.​ ​ ராயப்பேட்டையில் உள்ள கிருஷ்ணபுரத்தில் ரூபாய் 110 மாத வாடகையில் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தார்.​ எங்கு சென்றாலும் பேருந்துக்காக கால் கடுக்க நின்றிருப்பார்.​ நான்கு முழம் கதர் வேட்டியும் கதர் சட்டையுமே அணிவார்.​ சாதாரண ஏழை சாப்பிடும் உணவையே அவர் சாப்பிடுவார்.​எம்.ஜி.ஆர். ​முதலமைச்சராக இருந்த போது,​​ தமிழக அரசு கக்கனுக்கு இலவச வீடும் பேருந்தில் செல்ல இலவசப் பயணச் சீட்டும்,​​ இலவச மருத்துவச் சலுகையும் மாதம் 500 ரூபாய் ஓய்வு ஊதியமும் கொடுத்தது. 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.​ மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த கக்கனைப் பார்த்து உடல் நலன் விசாரித்தார்.​ உடனே கக்கனுக்கு தனியறை வசதியும்,​​ தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடைய எளிமைக்கும் நேர்மைக்கும் பல உதாரணங்கள் இங்கே சொல்லப்படுகின்றன.

பதவியினால் கிடைத்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி எந்தத் தவறும் செய்ததில்லை.​ தன்னுடைய இனத்தைக் கூட தனக்காக எந்த விதத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை,​​ ​ சுரண்டியதுமில்லை.​ இப்படி ஒருவர் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தாரா என்று ஆச்சர்யப்பட வைத்த மாமனிதர் அவர். இந்த நேர்மையும் கறைபடாத தன்மையும்தான் அவரை உயர்ந்தோர்க்கெல்லாம் உயர்ந்தவராக்கியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்தமிழ் சுட்டி – கக்கனின் எளிமைக்கும் நேர்மைக்கும் பல சம்பவங்கள் இங்கே சொல்லப்படுகின்றன.
கக்கன் பற்றிய இன்னொரு சுட்டி
கக்கன் பற்றிய விக்கி குறிப்பு


kamarajar
என் கண்களில் தமிழ் நாட்டின் தலை சிறந்த தலைவர் இவர்தான்.

உண்மையில் இது மிக ஆச்சரியமான விஷயம். அவர் மெத்தப் படித்தவர் இல்லை. தமிழில்தான் சுலபமாக பேச முடியும். (ஆங்கிலமும் ஹிந்தியும் பேச வராததால்தான் பிரதமர் பதவியை ஒதுக்கினார் என்று சிலர் சொல்கிறார்கள்.) பணக்காரர் இல்லை. கோவிலுக்குள் நுழைய முடியாத கீழ் ஜாதிக்காரர். (வைத்தியநாத ஐயர் மீனாட்சி கோவிலுக்குள் அழைத்து போனவர்களில் இவரும் இருந்தாரோ? இல்லை கக்கன் மட்டும்தானா? இவர் இல்லை என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் கக்கன் உள்ளிட்ட ஐந்து தலித்களும், ஷண்முக நாடாரும் இருந்தார்களாம். அப்போது தலித்களுக்கும், நாடார்களுக்கும் மீனாக்ஷி கோவிலில் நுழைய அனுமதி இல்லை. இது பற்றிய மேல் விவரங்களை இங்கே காணலாம்.) சிறந்த பேச்சாளரோ, எழுத்தாளரோ இல்லை. எம்ஜிஆர், அண்ணா, ஏன், கலைஞர் போலக் கூட மக்களை கவரக் கூடிய எதுவும் அவரிடம் இல்லை. அவரை விட சிஎஸ், ஆர்வி போன்றவர்கள் சிறந்த நிர்வாகிகள். அவரே பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமையாக மாறினாலும், காங்கிரஸ் தலைமையிடம் – காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்றவர்களிடம் – அவருக்கு ராஜாஜி மாதிரி செல்வாக்கு எல்லாம் இருந்ததில்லை. அவர் பெரியார் மாதிரி புரட்சி எதுவும் செய்ய முயசிக்கவில்லை.

அவருடைய ரகசியம் இதுதான் – மக்களுக்கு/கட்சிக்கு எது நல்லது, அதை எப்படி செய்வது என்று ஓயாமல் சிந்திக்கும் குணம். அந்த சிந்தனைகளை செயல்படுத்தும்போது வரக்கூடிய இடையூறுகளை தாண்டியே தீர வேண்டும் என்ற வெறி.

அவர் மந்திரிகளுக்கு சொன்ன அறிவுரை இதுதானாம் – “பிரச்சினைகளிடமிருந்து ஓடக் கூடாது. பிரச்சினையை சமாளிக்க ஒரு சின்ன முயற்சியாவது எடுங்கள். மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்”. அற்புதமான அறிவுரை. அவரும் அதை கடைப்பிடித்திருக்கிறார்.

இதனால் அவர் குறைகள் இல்லாத மாமனிதர் என்று அர்த்தமில்லை. ராஜாஜியை அமுக்க அவர் 42-54 கால கட்டத்தில் செய்த முயற்சிகள், அவரோடு போட்ட சண்டைகள் அவருக்கு பெருமை சேர்ப்பதில்லை. ராஜாஜிக்கும் பெருமை சேர்ப்பதில்லை என்பதும் உண்மைதான். அவர் கர்வி இல்லை, ஆனால் தொண்டர்களை அணுக விட்டதில்லை. ஏதாவது உதவி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான். சோவே கூட அவர் மற்ற தமிழக் தலைவர்களை வளரவிடவில்லை, தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா ராஜினாமா செய்து பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு முதலமைச்சரின் உள்ளக் குமுறல் என்று குமுதத்திலோ விகடனிலோ ஒரு கட்டுரை வந்தது. எப்படி தலைவர் தன்னை முழுமையாக நம்பவில்லை, சுதந்திரமாக இயங்க விடவில்லை, தலைவர் ஒரு சூப்பர் முதலமைச்சராக நடந்து கொள்கிறார் என்று முதல்வர் வருத்தப்படுகிறார். அது பக்தவத்சலம் காமராஜை பற்றி வருத்தப்பட்டது, பன்னீர்செல்வம் ஜெவை பற்றி அல்ல. தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் செய்தது தவறு. அவர் குறைகள் உள்ள மாமனிதர்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு போயிருக்கிறார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு ஸத்யாக்ரஹத்தில் பங்கேற்றிருக்கிறார். சத்யமூர்த்தியின் அணுக்க சீடர். கொஞ்ச நாள் அவர் தமிழ் நாடு காங்கிரஸில் தலைவராகவும் காமராஜ் செயலாராகவும் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர் தலைவர், அவர் செயலாளர். 🙂 சத்தியமூர்த்தியின் மறைவுக்கு பின்னால், ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னால் இவர் தமிழ் நாட்டு காங்கிரஸின் ஜீவ நாடி ஆகிவிட்டார். அவரால் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வருவதற்கு கூட பல முட்டுக்கட்டைகள் போட முடிந்தது.

அவரது பலங்களில் அவருடைய எளிமையான பின்புலமும் ஒன்று. அவருடைய மதிய உணவுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் ராஜாஜிக்கும் ஒரே குறிக்கோள்தான். அரசியல் நிர்ணய சட்டத்தில் சொன்னபடி எல்லாருக்கும் கல்வி என்பதை விரைவாக நிறைவேற்றுவது. இரண்டு பேருக்கு ஒரே பிரச்சினைதான். கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறைவாக இருக்கிறது. ராஜாஜி கண்ட தீர்வு பகுதி நேரக் கல்வி. (திராவிட இயக்கத்தினர் குலக் கல்வி என்று அழைத்த இந்த திட்டத்தை பற்றி மேலும் விவரங்கள் இங்கே) பகுதி நேரக் கல்வி என்பது சிறந்த நிர்வாக முடிவு. அதனால் கல்வி அறிவு செலவு அதிகம் ஆகாமல் அதிகரித்திருக்கும். ஆனால் அது ஒரு bean counter’s logical, cold hearted தீர்வு. காமராஜ் கண்ட தீர்வில் செலவு அதிகம்தான். ஆனால் அந்த பணம் well spent என்று அவரது படிக்காத ஏழை மனதுக்கு மட்டும்தான் புரியும். ஜீனியஸ் என்றே சொல்லக் கூடிய ராஜாஜிக்கு அந்த தீர்வு எப்போதும் தோன்ற வாய்ப்பில்லை.

விவசாயம், மின்சாரம், தொழில் பேட்டிகள் அமைப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தினார். அரசு விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆர்வியும் இதை குறிப்பிட்டு சொல்கிறார்.

எதிரிகளையும் அணைத்து செல்லும் பக்குவம் அவரிடம் இருந்தது. முதல்வர் போட்டிக்கு அவரை எதிர்த்து போட்டி இட்ட சிஎஸ்தான் அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சிஎஸ், ஆர்வி, கக்கன், பக்தவத்சலம் போன்ற திறமைசாலிகளை அவர் அரவணைத்து சென்றார். அதே நேரத்தில் அவர் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை. மொரார்ஜியை அவர் அடக்கிய விதம் சூப்பர். கலைஞரால் கூட இப்படி செய்திருக்க முடியாது.

காமராஜ் திட்டம் எல்லாம் போட அவரால்தான் முடியும். பதவி ஆசை அவருக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்கு ராஜாஜி ஒரு வீக்னெஸ். அங்கே அவரது பெருந்தன்மை, நல்ல குணங்கள் வெளிப்படவில்லை. சத்தியமூர்த்திக்கு பதிலாக ராஜாஜியை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக காந்தி – முதல்வராக ஆக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு, ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொள்ளாமல் காங்கிரசை விட்டு விலகியதும் தீவிரம் அடைந்தது. 46-இல் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழையக் கூடாது என்று காமராஜ் பெரிதும் முயன்றார். கட்சி அவரது கண்ட்ரோலில் இருந்தாலும், ராஜாஜிக்கு கணிசமான ஆதரவு இருந்தது – மேலிடத்து சப்போர்ட்டும் இருந்தது. அதனால் ராஜாஜி காமராஜை மீறி உள்ளே நுழைந்தார். ராஜாஜி மத்திய அரசாங்கத்துக்கு போய்விட்டதால் சண்டை இன்னும் பெரிதாக வெடிக்கவில்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் சில உள்குத்து வேலைகள் செய்திருக்கிறார். காமராஜ் படத்தில் அவர் ஒரு விழாவில் ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதாக காட்டுகிறார்கள்.

தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் கோட்டை விட்டுவிட்டார். கேரளாவில் இருந்தாலென்ன, தமிழ் நாட்டில் இருந்தாலென்ன, இரண்டும் இந்தியாதானே என்று அவர் நினைத்திருக்க வேண்டும். பிராந்திய உணர்ச்சிகள் இவ்வளவு தீவிரமாக வளரும் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அவருடைய அலட்சியத்துக்கு தமிழர்கள் இன்றும் ஒரு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மிக பெரிய தோல்வி இந்திரா காந்திதான். அவர் தோளில் நின்று பிரதமரான இந்திரா அவரையே யார் என்று கேட்டது அவரை நிலை குலைய செய்திருக்க வேண்டும். அறுபதுகள் காங்கிரசுக்கு நல்லதாக இல்லை. சீனாவோடு சண்டை, ஹிந்தி எதிர்ப்பு, வேலை இல்லா திண்டாட்டம், பொதுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருந்த அதிருப்தி, சோஷலிசத்தின் குறைகள் வெளிப்பட ஆரம்பித்தது எல்லாம் அவரை புரட்டி போட்டுவிட்டன. Indira usurped his socialistic plank. ராஜ மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயம், என்றெல்லாம் ஆரம்பித்தது உண்மையான சோஷலிஸ்ட்டான அவரை வலது சாரி தலைவராக காட்டியது – அவருக்கு மிஞ்சிய கூட்டாளிகள் எல்லாம் வலது சாரி நிஜலிங்கப்பா, மொரார்ஜி, எஸ்.கே.பாட்டில், சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள்தான். A great irony.

முதல்வர் பதவியில் இருந்து விலகிய நாளிலிருந்து அவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல மத்தியிலும் மாநிலத்திலும் இயங்க முயன்றார். மத்தியில் வெற்றி பெற்றவர் மாநிலத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது மத்தியிலும் அவர் தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. 67-இல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஜெயித்திருந்தால் இந்திராவால் அவரை அவ்வளவு சுலபமாக உதறி இருக்க முடியாது. 71-இலோ பங்களாதேஷ் போர் இந்திராவுக்கு அமோக வெற்றி தந்தது. காமராஜ் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவர் ஒரு மாநில அளவு தலைவர் அவ்வளவுதான். அவ்வளவு பெரிய தலைவருக்கும் sell-by-date கடந்து விட்டது.

இன்று ஒரு காமராஜ் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. கம்யூனிசம், சோஷலிசம், காபிடலிசம், போன்ற இசங்களை விட நல்ல தலைவர்கள் ஏதோ ஒரு இசத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது. கன்சர்வேடிவ் ராஜாஜி, சோஷலிஸ்ட் காமராஜ் இருவருமே நல்ல முதல்வர்கள்தானே!

அவரைப் போன்ற ஒரு தலைவர் இந்தியாவின் வரப்பிரசாதம்.