பா.ராகவன்

பா.ராகவன்

முதல் பகுதி இங்கே. இந்த பகுதியில் அடுத்த 33 புத்தகங்கள்.

35. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்: படிக்க வேண்டும்.

36. ராமானுஜர்(வாழ்க்கை வரலாறு) – ராமகிருஷ்ண மடம் வெளியீடு: ராமானுஜரின் வாழ்க்கையை பற்றி நான் பெரிதும் குரு பரம்பரை ஐதீகங்கள் மூலமே படித்திருக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் நாடகமும் அதையே பெரிதும் ஒட்டி வருகிறது. இது எப்படி என்று தெரியவில்லை. மயிலாப்பூரில் திலிப் குமாரின் புத்தகக் கடைக்கு எதிரில்தான் மடம் இருக்கிறது. ஊருக்கு போனால் இங்கேயும் எட்டி பார்த்துவிட வேண்டியதுதான்.

37. பாரதியார் வரலாறு – சீனி விசுவநாதன்: படித்ததில்லை.

38. இந்திய சரித்திரக் களஞ்சியம் – ப. சிவனடி கேள்விப்பட்டதே இல்லை.

39. ஆதவன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]: ஆதவனின் என் பெயர் ராமசேஷன் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த ஒரு புத்தகம். அவரது சிறுகதைகளில் எனக்கு ஞாபகம் இருப்பது உயரமாக சிவப்பாக மீசை வச்சுக்காமல் ஒன்றுதான். (பாஸ்டன் பாலா அதற்கு இணையத்தில் சுட்டி கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். அவர் குலம் வாழ்க!)

40. சுப்பிரமணிய ராஜு கதைகள் [முழுத்தொகுப்பு]: ராஜுவை நான் படித்ததில்லை.

41. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் : மொழிபெயர்ப்பு – ரா.கி. ரங்கராஜன்: ஒரிஜினலை படித்திருக்கிறேன். இது என்ன பெரிய விஷயம் என்று எனக்கு புரியவே இல்லை.

42. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி: புரட்டி பார்த்திருக்கிறேன். படிக்க வேண்டும்.

43. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ. பத்மநாபன்: படிக்க வேண்டும்.

44. காந்தி – லூயி ஃபிஷர் : தமிழில் தி.ஜ. ரங்கநாதன்: ஒரிஜினலை படித்திருக்கிறேன். நல்ல புத்தகம்.

45. பாரதியார் கட்டுரைகள்: பாரதியாரின் கட்டுரைகள் அவரது கவிதைகள் அளவுக்கு பிரபலம் அடையவில்லை. ஆனால் நன்றாக இருக்கும். ஞான ரதம், சின்ன சங்கரன் கதை போன்றவையும் நன்றாக இருக்கும். அவற்றையும் படியுங்கள்.

46. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி: படித்ததில்லை.

47. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே: படித்ததில்லை.

48. குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி: என்னவோ இந்த புத்தகம் என்னை பெரிதாக இம்ப்ரஸ் செய்யவில்லை. சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் அவ்வளவு இலக்கியத் தரம் உள்ளது என்று சொல்ல மாட்டேன், ஆனால் முக்கியமான ஆவணம். கீழ் வெண்மணியை பற்றி ஒரு புத்தகம்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் அதை படிக்கலாம்.

49. பயணியின் சங்கீதம் – சுகுமாரன்: படித்ததில்லை.

50. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்: யுவனின் ஒளி விலகல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை நான் படித்ததில்லை.

51. God of small things – அருந்ததிராய்: படித்ததில்லை.

52. Midnight’s Children – சல்மான் ருஷ்டி: படித்ததில்லை.

53. Moor’s lost sigh – சல்மான் ருஷ்டி: படித்ததில்லை.

54. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி: சில கதைகள் பிடித்திருந்தன.

55. Train to Pakistan – குஷ்வந்த் சிங்: மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. படிக்கலாம்.

56. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா: படித்ததில்லை.

57. All the president’s men – Bob Woodward: சுமாரான புத்தகம். பா.ரா.வின் பத்திரிகை பின்புலம் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுக்க வைத்திருக்கலாம்.

58. மதிலுகள் – பஷீர் [நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு மட்டும்.]: படிக்க வேண்டும்.

59. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்: படித்ததில்லை.

60. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ: படித்ததில்லை.

61. Courts and Judgements – அருண்ஷோரி: படிக்க வேண்டும்.

62. மோகமுள் – தி. ஜானகிராமன்: புத்தகத்தை படிக்கும்போது கும்பகோணத்து புழுதி மூக்கில் ஏறும். மிக அருமையான புத்தகம்.

63. ஜனனி – லா.ச. ராமாமிருதம்: படிக்க வேண்டும்.

64. பஞ்ச பூதக் கதைகள் – லா.ச. ராமாமிருதம்: எனக்கு இதில் பூரணி என்ற ஒரு கதைதான் தேறும். பூரணி பூமியின் உருவமாக சித்தரிக்கப்படுகிறாள்.

65. கி.ராஜநாராயணன் கதைகள் [முழுத்தொகுப்பு]: நான் கதவு, கொத்தை பருத்தி போன்ற சில தொகுப்புகளை படித்திருக்கிறேன். முழுதும் படித்ததில்லை. கி.ரா.வின் பல கதைகள் சிறப்பானவை.

66. அசோகமித்திரன் கட்டுரைகள் [இரண்டு பாகங்கள்]: அசோகமித்திரன் ஜீனியஸ் என்பது என் எண்ணம். அவரது கட்டுரைகளை அங்கும் இங்குமாகத்தான் படித்திருக்கிறேன். தொகுப்பாக கிடைத்தால் வாங்கிவிட வேண்டியதுதான்.

67. இரா. முருகன் கதைகள் [முழுத்தொகுப்பு]: இரா. முருகனை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் எதுவும் படிக்கவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:

பா.ரா.வுக்கு பிடித்த நூறு புத்தகங்கள், என் குறிப்புகள் I

ஆதவனின் உயரமாக சிவப்பாக மீசை வச்சுக்காமல் 1 2 3

கீழ்வெண்மணி நாவல்கள்

பா. ராகவனின் தளம்
பா.ரா. பற்றிய விக்கி குறிப்பு
பா.ரா.வின் நிலமெல்லாம் ரத்தம் ஆன்லைனில் படிக்க
கிழக்கு பதிப்பகம்


க.நா. சுப்ரமண்யம்

க.நா. சுப்ரமண்யம்

தன ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் பேசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் புத்தகங்களை பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை – நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது?

எனக்கு இந்த புத்தகம் ஒரு eye opener. தமிழிலும் சாண்டில்யன், லக்ஷ்மி தரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ கொஞ்சம் நல்ல புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. (எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் கிடைத்தது.)

இதில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் எனக்கு இன்னும் முக்கால்வாசி கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் தேடுவதை நான் நிறுத்தவில்லை.

க.நா.சு.வின் லிஸ்ட் கீழே. எனக்கு ஏதாவது தெரிந்தால் அதையும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

1. புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று யாராவது தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

2. தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

3. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்படித்ததில்லை. இவர் எழுதிய எதையுமே நான் படித்ததில்லை. இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே உண்டு. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. அவற்றைப் பற்றிய பதிவு இங்கே. வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

4. எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய போஸ்ட்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.

5. லா.ச.ரா.வின் ஜனனி – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
லா.ச.ரா. கொஞ்சம் pretentious என்று நான் நினைக்கிறேன். அவர் எழுத்துகள் உணர்ச்சி பிரவாகம். ஆனால் அவர் எழுதிய பாற்கடல், புத்ர இரண்டும் எனக்கு பிடிக்கும். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். (நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?) அந்த வரி வரும் கேரளத்தில் எங்கோ என்ற புத்தகத்தை நான் தேடித் பிடித்து படித்திருக்கிறேன். இந்த ஒரு வரி தவிர வெறும் ஒன்றுமே அதில் கிடையாது. 🙂

6. எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – எஸ்.வி.வி. இதில் கலக்கி விடுவார். நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருக்கும். “படித்திருக்கிறீர்களா” புத்தகம் படித்துவிட்டு அந்த கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான்.கல்கியின் நகைச்சுவை மாதிரி இருக்கும். ஆனால் அவரது பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை (ராமமூர்த்தி)

7. வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

8. யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் – படித்ததில்லை. யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்?) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

9. வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். சமீபத்தில் என்னிடம் இருக்கும் காப்பியை தேடித் பிடித்து திருப்பியும் படித்தேன், அப்போதும் பிடித்திருந்தது.

10. சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

11. ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

12. தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. படித்ததில்லை. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு என்ற அருமையான சிறுகதையை வேறு எங்கேயோவும் படித்திருக்கிறேன். பசி ஆறியது, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை. தி.ஜா.வின் மோக முள், அம்மா வந்தாள் இரண்டும் எனக்கும் பிடித்த நாவல்கள். மரப் பசு சிலாகிக்கப்படுகிறது. சில இடங்கள் நன்றாகவும் இருக்கும். ஆனால் என் கண்ணில் அது ஒரு தோல்வி. தி.ஜா.வுக்கு அந்த காலத்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும். இந்த காலத்து வாசகர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். 🙂

13. மு.வ.வின் கரித்துண்டுபடித்ததில்லை. கரித்துண்டு பற்றிய பதிவு இங்கே. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. மு.வ.வை பற்றிய ஒரு பதிவு இங்கே. அவரது இன்னொரு நாவலான அகல் விளக்கு பற்றி இங்கே படிக்கலாம். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

14. தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

15. டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள் – படித்ததில்லை. ராஜன் அந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

16. ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள்படித்ததில்லை. இங்கே இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

17. கு. அழகிரிசாமி கதைகள் – அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். இந்த தொகுப்பை நான் படித்ததில்லை. ஆனால் இதில் வந்திருக்கும் ராஜா வந்திருக்கிறார், திரிவேணி இரண்டு சிறுகதைகளையும் வேறு எங்கோ படித்திருக்கிறேன். மிக அருமையானவை. என்னிடம் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளும் தொகுக்கப்பட்டது ஒரு காப்பி இருக்கிறது. இன்னும் படித்து முடிக்கவில்லை. புத்தகத்தை எங்கே வைத்தேன் என்றுதான் தெரியவில்லை. 🙂

18. அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் – இவர் மகாகவி பாரதியார் இல்லை. இன்னொருவர். இந்த புத்தகத்தை படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

19. கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

20. பாரதிதாசன் கவிதைகள் – எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஏதாவது படித்திருப்பேன், என்ன என்று கூட தெரியாது. முனைவர் மு. இளங்கோவன் மாதிரி யாராவது பாரதிதாசனின் கவிதை வீச்சு, தாக்கம் பற்றி எழுதினால் என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் பாரதிதாசனுக்கு சந்தம் கை வந்த கலை – எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல sense of humor உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்து பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும்

21. கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதை தொகுப்பு. திரை, பண்ணை செங்கான், விடியுமா ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர். கு.ப.ராவின் எல்லா கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை அல்லையன்ஸ் பதிப்பகம் தொகுத்து ஏழெட்டு வால்யூம்களை ஒரு நாலைந்து வருஷத்துக்கு முன் வெளியிட்டது. இப்போதும் கிடைக்கலாம். என்னிடம் கூட ஒன்றிரண்டு வால்யூம்கள் எங்கேயோ இருக்கிறது.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!