பா.ராகவன்

பா.ராகவன்

முதல் பகுதி இங்கே. இந்த பகுதியில் அடுத்த 33 புத்தகங்கள்.

35. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்: படிக்க வேண்டும்.

36. ராமானுஜர்(வாழ்க்கை வரலாறு) – ராமகிருஷ்ண மடம் வெளியீடு: ராமானுஜரின் வாழ்க்கையை பற்றி நான் பெரிதும் குரு பரம்பரை ஐதீகங்கள் மூலமே படித்திருக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் நாடகமும் அதையே பெரிதும் ஒட்டி வருகிறது. இது எப்படி என்று தெரியவில்லை. மயிலாப்பூரில் திலிப் குமாரின் புத்தகக் கடைக்கு எதிரில்தான் மடம் இருக்கிறது. ஊருக்கு போனால் இங்கேயும் எட்டி பார்த்துவிட வேண்டியதுதான்.

37. பாரதியார் வரலாறு – சீனி விசுவநாதன்: படித்ததில்லை.

38. இந்திய சரித்திரக் களஞ்சியம் – ப. சிவனடி கேள்விப்பட்டதே இல்லை.

39. ஆதவன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]: ஆதவனின் என் பெயர் ராமசேஷன் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த ஒரு புத்தகம். அவரது சிறுகதைகளில் எனக்கு ஞாபகம் இருப்பது உயரமாக சிவப்பாக மீசை வச்சுக்காமல் ஒன்றுதான். (பாஸ்டன் பாலா அதற்கு இணையத்தில் சுட்டி கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். அவர் குலம் வாழ்க!)

40. சுப்பிரமணிய ராஜு கதைகள் [முழுத்தொகுப்பு]: ராஜுவை நான் படித்ததில்லை.

41. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் : மொழிபெயர்ப்பு – ரா.கி. ரங்கராஜன்: ஒரிஜினலை படித்திருக்கிறேன். இது என்ன பெரிய விஷயம் என்று எனக்கு புரியவே இல்லை.

42. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி: புரட்டி பார்த்திருக்கிறேன். படிக்க வேண்டும்.

43. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ. பத்மநாபன்: படிக்க வேண்டும்.

44. காந்தி – லூயி ஃபிஷர் : தமிழில் தி.ஜ. ரங்கநாதன்: ஒரிஜினலை படித்திருக்கிறேன். நல்ல புத்தகம்.

45. பாரதியார் கட்டுரைகள்: பாரதியாரின் கட்டுரைகள் அவரது கவிதைகள் அளவுக்கு பிரபலம் அடையவில்லை. ஆனால் நன்றாக இருக்கும். ஞான ரதம், சின்ன சங்கரன் கதை போன்றவையும் நன்றாக இருக்கும். அவற்றையும் படியுங்கள்.

46. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி: படித்ததில்லை.

47. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே: படித்ததில்லை.

48. குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி: என்னவோ இந்த புத்தகம் என்னை பெரிதாக இம்ப்ரஸ் செய்யவில்லை. சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் அவ்வளவு இலக்கியத் தரம் உள்ளது என்று சொல்ல மாட்டேன், ஆனால் முக்கியமான ஆவணம். கீழ் வெண்மணியை பற்றி ஒரு புத்தகம்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் அதை படிக்கலாம்.

49. பயணியின் சங்கீதம் – சுகுமாரன்: படித்ததில்லை.

50. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்: யுவனின் ஒளி விலகல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை நான் படித்ததில்லை.

51. God of small things – அருந்ததிராய்: படித்ததில்லை.

52. Midnight’s Children – சல்மான் ருஷ்டி: படித்ததில்லை.

53. Moor’s lost sigh – சல்மான் ருஷ்டி: படித்ததில்லை.

54. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி: சில கதைகள் பிடித்திருந்தன.

55. Train to Pakistan – குஷ்வந்த் சிங்: மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. படிக்கலாம்.

56. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா: படித்ததில்லை.

57. All the president’s men – Bob Woodward: சுமாரான புத்தகம். பா.ரா.வின் பத்திரிகை பின்புலம் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுக்க வைத்திருக்கலாம்.

58. மதிலுகள் – பஷீர் [நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு மட்டும்.]: படிக்க வேண்டும்.

59. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்: படித்ததில்லை.

60. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ: படித்ததில்லை.

61. Courts and Judgements – அருண்ஷோரி: படிக்க வேண்டும்.

62. மோகமுள் – தி. ஜானகிராமன்: புத்தகத்தை படிக்கும்போது கும்பகோணத்து புழுதி மூக்கில் ஏறும். மிக அருமையான புத்தகம்.

63. ஜனனி – லா.ச. ராமாமிருதம்: படிக்க வேண்டும்.

64. பஞ்ச பூதக் கதைகள் – லா.ச. ராமாமிருதம்: எனக்கு இதில் பூரணி என்ற ஒரு கதைதான் தேறும். பூரணி பூமியின் உருவமாக சித்தரிக்கப்படுகிறாள்.

65. கி.ராஜநாராயணன் கதைகள் [முழுத்தொகுப்பு]: நான் கதவு, கொத்தை பருத்தி போன்ற சில தொகுப்புகளை படித்திருக்கிறேன். முழுதும் படித்ததில்லை. கி.ரா.வின் பல கதைகள் சிறப்பானவை.

66. அசோகமித்திரன் கட்டுரைகள் [இரண்டு பாகங்கள்]: அசோகமித்திரன் ஜீனியஸ் என்பது என் எண்ணம். அவரது கட்டுரைகளை அங்கும் இங்குமாகத்தான் படித்திருக்கிறேன். தொகுப்பாக கிடைத்தால் வாங்கிவிட வேண்டியதுதான்.

67. இரா. முருகன் கதைகள் [முழுத்தொகுப்பு]: இரா. முருகனை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் எதுவும் படிக்கவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:

பா.ரா.வுக்கு பிடித்த நூறு புத்தகங்கள், என் குறிப்புகள் I

ஆதவனின் உயரமாக சிவப்பாக மீசை வச்சுக்காமல் 1 2 3

கீழ்வெண்மணி நாவல்கள்

பா. ராகவனின் தளம்
பா.ரா. பற்றிய விக்கி குறிப்பு
பா.ரா.வின் நிலமெல்லாம் ரத்தம் ஆன்லைனில் படிக்க
கிழக்கு பதிப்பகம்


சமீபத்தில் டாப்டென் என்ற பதிவில் சில சிபாரிசுகளை பார்த்தேன். அவர்கள் குமுதத்தில் வந்த சிலவற்றை மீள்பதிவு செய்திருக்கிறார்கள். அவை பற்றிய கமெண்ட்கள் இங்கே.

சிறந்த பத்து தமிழ் நாவல்கள் – சா. கந்தசாமி

சா. கந்தசாமியின் சாயாவனம் என் சிறு வயதில் அம்மா, அப்பா, நான் எல்லாரும் பல முறை விரும்பி படித்த புத்தகம். என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன். மாற்றம் என்றால் என்ன என்பதை மிகவும் ஆக சுட்டி இருப்பார்.

1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவல் என்பதால் இது பலரால் சிபார்சு செய்யப்படுகிறது. என் கருத்தில் இது படிக்கப்பட வேண்டியது இல்லை. போரடிக்கும்.

2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம் க.நா.சு. படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் குறிப்பிட்ட நாவல். இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம் ஜெயமோகன் சொன்ன நாவல். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

4. வாசவேஸ்வரம் – கிருத்திகா கிருத்திகா சமீபத்தில் மறைந்துவிட்டாராம். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன் அசோகமித்திரன் மிக subtleஆன ஆசிரியர். இந்த புத்தகம் எனக்கு too subtle. அவரது தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள் போன்ற புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்.

6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் படித்ததில்லை.

7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை.

8. அவன் ஆனது – சா. கந்தசாமி படித்ததில்லை.

9. வானம் வசப்படும் – பிரபஞ்சன் படிக்கலாம், ஆனால் எனக்கு இந்த புத்தகம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை.

10. ரப்பர் – ஜெயமோகன் ஜெயமோகனின் சுமாரான நாவல். அவரது முதல் நாவலும் கூட. அவரது potential நன்றாக தெரியும், ஆனால் அவர் எழுத்தாளராக இன்னும் பல படிகள் ஏற வேண்டி இருப்பதும் தெரியும். இதை விட பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் போன்ற புத்தகங்களை நான் சிபாரிசு செய்கிறேன்.

கந்தவர்னை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததில்லை. அவரது சிபாரிசுகள்.

1. மோகமுள் – தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.

2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் ஒரே ஒரு நீல. பத்மநாபன் நாவல்தான் என் நினைவில் இருக்கிறது. எனக்கு இங்கே கொஞ்சம் குழப்பம். இதை படித்திருக்கிறேனா என்று நினைவில்லை.

3. சாயாவனம் – சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி, என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.

4. மலரும் சருகும் – டி. செல்வராஜ் படித்ததில்லை.

5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.

6. கடல்புரத்தில் – வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.

7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.

8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.

9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் என் பதிவு இங்கே.

10. கோவேறுக் கழுதைகள் – இமையம் படித்ததில்லை.

சி. மோகன் சிபாரிசுகள் – எனக்கு இவர் யாரென்று தெரியாது. படித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

1. இடைவெளி – எஸ். சம்பத் படித்ததில்லை.

2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. புத்தகம் பிடிக்கும் என்று தோன்றியது. ஆனால் மேலே தொடர முடியாமல் ஒரு சோம்பேறித்தனம்.

3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அபாரமான புத்தகம். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.

4. நினைவுப் பாதை – நகுலன் படித்ததில்லை.

5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன் ஒரு ரவுடி மிக லாஜிகலாக சிந்தித்து தன் வைப்பாட்டிக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்கிறான். ஜி. நாகராஜன் இன்னும் தமிழ் உலகை ஷாக் செய்யக் கூடியவர்.

6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி அற்புதமான புஸ்தகம்.

7. மோகமுள் – தி. ஜானகிராமன் முன்பு சொன்ன மாதிரி அருமை.

8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை

9. தண்ணீர் – அசோகமித்திரன் இந்த முறை அவரது எழுத்து எனக்கு புரிந்துவிட்டது – என்று நினைக்கிறேன். ஜமுனா, அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, தண்ணீர் பஞ்சம் எல்லாம் நன்றாக வந்திருக்கும்.

10. சாயாவனம் – சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி இலக்கியத் தரம் வாய்ந்த புஸ்தகம்.