பா.ராகவன்

பா.ராகவன்

பா.ராகவன் இன்று இணைய பதிவர்களில் பிரபலமானவர். கிழக்கு பதிப்பகத்தில் பார்ட்னரோ இல்லை உயர் அதிகாரியோ தெரியவில்லை. கல்கியில் துணை ஆசிரியராக இருந்தவர். அவரது non-fiction பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. பெரிய அறிமுகம் எல்லாம் தேவை இல்லாதவர். அதுவும் நான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை.

பா.ரா.வின் அப்பா ஆர்.பி. சாரதி, பெரியப்பா சுராஜ் ஆகியோரை சந்தித்திருக்கிறேன். அவர் அப்பாவும் என் அப்பாவும் ஹெட்மாஸ்டர்கள். ஏறக்குறைய சம வயதினர். பா.ரா. ஒரு முறை அவர் தன் முதல் கதையை கிணற்றடியில் வைத்து என் அப்பாவுக்குத்தான் சொன்னதாக குறிப்பிட்டார். சுராஜ் சைதாப்பேட்டையில் பாரதி சங்கம் என்று ஒன்று வைத்து அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்துவார். சின்ன வயதில் சிலவற்றுக்கு போயிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அம்மா அப்பாவின் நண்பி-நண்பர்களை எல்லாம் போய்ப் பார்க்க வேண்டும்.

அவர் இங்கே தனக்கு பிடித்த நூறு புத்தகங்களை பற்றி குறிப்பிடுகிறார். நூறு புத்தகம் பற்றி ஒரே பதிவில் எழுதினால் நானே படிக்க மாட்டேன். அதனால் இதை பகுதி பகுதியாக பிரித்து எழுதுகிறேன்.

1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்: முக்கியமான ஆவணம். ஆனால் அருமையான புத்தகம் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

2. வேதாகமம் [குறிப்பாகப் பழைய ஏற்பாடு]: எனக்கும் புதிய ஏற்பாடை விட பழைய ஏற்பாடுதான் பிடிக்கும். பழைய ஏற்பாட்டில் கதைகள் சுவாரசியமானவை. அதில் ஜெஹோவா நம்மூர் சுடலை மாடன் மாதிரி எனக்கு படையல் வைக்காமல் அவனுக்கா வச்சே என்று கடுப்பாகிவிடுவார். ஒரு கன்னம் மறு கன்னம் எல்லாம் ஏசு வந்த பிறகுதான்.

3. புத்தரும் அவர் தம்மமும் – பி.ஆர். அம்பேத்கர்: படித்ததில்லை.

4. நாலாயிர திவ்யப் பிரபந்தம்: அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாசுரங்களை ரசித்திருக்கிறேன். பொய்கை ஆழ்வாரின் வையம் தகளியா வார்கடலே நெய்யாக பாசுரம் கொண்டு வரும் படிமம் மிக அற்புதமானது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற பாசுரமும் எனக்கு பிடித்தமானது. என்றாவது எனது கவிதை அலர்ஜியை கடந்து படிக்க வேண்டும்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதியார்: சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு சூதிற் பணயமென்றே அங்கோர் தொண்டச்சி போனதில்லை என்று ஆரம்பிப்பது கவிதை. எனக்கே கற்பூர வாசனை தெரிகிறது.

6. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: படித்ததில்லை. படிப்பேனா என்பது சந்தேகமே.

7. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: சில அற்புதமான கதைகள் உண்டு – கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய் தூள், விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம்…

8. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.

9. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.

10. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்: அருமை!

11. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி: அபாரம்!

12. சிந்தாநதி – லா.ச. ராமாமிருதம்: படித்ததில்லை.

13. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லபெருமாள்: நல்ல புத்தகம்தான், ஆனால் ஏ க்ளாஸ் புத்தகம் இல்லை. காந்தியை கொலை செய்யப் போகும் புரட்சி இளைஞன். ஹே ராம் படம் இந்த கதையை ஓரளவு ஒத்துப் போகும்.

14. பொன்னியின் செல்வன் – கல்கி: மிக அற்புதமான கதை சிக்கல் கொண்ட புத்தகம். கொஞ்சம் verbose-தான், ஆனால் கல்கியின் சரளமான நடை அதை மறக்கடித்துவிடுகிறது. அலெக்சாண்டர் டூமா, வால்டர் ஸ்காட் போன்றவர்களை கொண்டாடும் நாம் அவற்றை விட சிறந்த கல்கியை மறந்துவிடுகிறோம்.

15. கார்ல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா: படித்ததில்லை. சாமிநாத சர்மா எழுதிய நான் கண்ட நால்வர் (திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதி) எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அவருடைய நாடகமான பாணபுரத்து வீரனும் பிடிக்கும். அவர்தான் கலைஞரின் மனோகரா ஸ்டைல் உணர்ச்சி பிழம்பு வசனங்களுக்கு முன்னோடி என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

16. ந. பிச்சமூர்த்தி கதைகள் [முழுத்தொகுப்பு – இரண்டு பாகங்கள்]: சில கதைகள் படித்திருக்கிறேன். முழு தொகுப்பையும் படித்ததில்லை. பிச்சமூர்த்தியின் பெரிய தாக்கம் சிறுகதைகள், நாவல்கள் அல்ல, அவரது கவிதைகள்தான். எனக்கே சில கவிதைகள் பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நான் காசு கொடுத்து வாங்கிய ஒரே கவிதை புத்தகம் பிச்சமூர்த்தி கவிதைகள்தான். பாரதியார் கவிதைகள் கூட அம்மா அப்பா யாராவது வாங்கிக் கொடுத்ததுதான்.

17. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]: அற்புதம்! புதுமைப்பித்தனை பற்றி புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. இது வரை வந்த தமிழ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர், அவ்வளவுதான்.

18. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார்: படித்ததில்லை.

19. எனது சிறைவாசம் – அரவிந்தர்: தண்டம். பா.ரா.வுக்கு இதெல்லாம் எப்படி பிடிக்கிறது என்று தெரியவில்லை.

20. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே. செட்டியார்: படித்ததில்லை.

21. ஒற்றன் – அசோகமித்திரன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்க்கையை விவரிக்கும் அணுகுமுறை உள்ளவர். மெல்லிய நகைச்சுவை பக்கத்துக்கு பக்கம் தெரியும். இது அவருடைய உன்னதமான புத்தகங்களில் ஒன்று.

22. நிலா நிழல் – சுஜாதா: இதை படித்த ஞாபகம் இருக்கிறது, ஆனால் கதை ஞாபகம் வரவில்லை. இதுதான் ஒரு நடிகையின் சிறு பெண்ணோடு பக்கத்து மெக்கானிக் ஷாப் சிறுவர்கள் நண்பர்களாகும் கதையோ? நம்ம உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஏதாவது எழுதுகிறாரா என்று பார்ப்போம்.

23. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா: இதுதான் ஒரிஜினல் ப்ளாக். நன்றாக இருக்கும். இதை பற்றி என்னுடைய ஒரு பதிவு இங்கே.

24. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு: கரிச்சான் குஞ்சை பற்றி நிறைய படித்துவிட்டேன், இந்த புத்தகம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.

25. அவன் ஆனது – சா. கந்தசாமி: படித்ததில்லை.

26. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்: படித்ததில்லை.

27. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன்: படித்ததில்லை. படிக்க ஆவலாக இருக்கிறது. ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், பாக்கியம் ராமசாமி, சுந்தர பாகவதர் என்ற பேர்களில் எழுதுவது ஒருவரே (ஜ.ரா.சு.) என்று நினைத்திருந்தேன். இதைப் பார்த்தால் புனிதன் வேறு யாரோ என்று தோன்றுகிறது.

28. வ.உ..சி. நூற்றிரட்டு: படித்ததில்லை.

29. வனவாசம் – கண்ணதாசன்: வனவாசமோ மனவாசமோ ஏதோ ஒன்றுதான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம் எல்லாம் இல்லை, ஆனால் முக்கியமான ஆவணம். தி.மு.க.வின் உள்குத்துகளை விவரிக்கும் புத்தகம்.

30. திலகரின் கீதைப் பேருரைகள்: படித்ததில்லை.

31. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்: கேள்விப்பட்டதே இல்லை.

32. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – பி.ஆர். அம்பேத்கர் படித்ததில்லை.

33. காமராஜரை சந்தித்தேன் – சோ: படிக்க விரும்பும் ஒரு புத்தகம். இந்த முறை ஊருக்கு போனால் அலையன்சில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். டோண்டு இந்த புத்தகத்தைப் பற்றி எழுதி இருக்கிறாரா தெரியவில்லை. அவர் சோவின் முரட்டு பக்தர். காமராஜ் மேல் பெருமதிப்பு வைத்திருப்பவர்.

34. அர்த்த சாஸ்திரம் – சாணக்கியர்: படிக்க ஆரம்பித்தேன், முடிக்க முடியவில்லை. படித்த வரையில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்தது. ரொம்ப ப்ராக்டிகலான புத்தகம். நியாய அநியாயங்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
பா.ரா.வுக்கு பிடித்த நூறு புத்தகங்கள்

தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள், இன்னும் சில சிபாரிசுகள்
அசோகமித்ரனின் ஒற்றன் பகுதி 1, பகுதி 2, அசோகமித்திரன்
சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்
கரிச்சான் குஞ்சு
எஸ்.ஏ.பி., பி.எஸ். ராமையா, ஜெகசிற்பியன், எழுத்தாளர் ஆர்வி, சிவசங்கரி, தி. ஜா, நா. பா., விந்தன் ஆகியோரை பதிவர் ஜீவி அறிமுகம் செய்கிறார்.

பா. ராகவனின் தளம்
பா.ரா. பற்றிய விக்கி குறிப்பு
பா.ரா.வின் நிலமெல்லாம் ரத்தம் ஆன்லைனில் படிக்க
கிழக்கு பதிப்பகம்


என்னிடம் இரண்டு காப்பி இருக்கிறது, ஒன்று நர்மதா பதிப்பகத்திலிருந்து, இன்னொன்று காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து. இன்று காலச்சுவடு பதிப்பக புத்தகத்தை புரட்டி பார்த்தேன். இரண்டு எக்ஸ்ட்ரா சாப்டர் இருக்கிறது. வாங்குபவர்கள் காலச்சுவடு பதிப்பக புத்தகத்தை வாங்குங்கள்!

தொடர்புடைய பிற பதிவுகள்
அசோகமித்ரனின் ஒற்றன்
எண்பதுகளில் என் படிப்பு
அசோகமித்ரனின் சில கதைகள்



ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த புத்தகம். ஒன்றுக்கு இரண்டு காப்பி வேறு கை வசம். இன்று தூக்கம் வராமல் புரட்டினேன்.

மனிதர் ஜீனியஸ். சந்தேகமே இல்லை.

அயோவா பல்கலைகழகம் உலக எழுத்தாளர்களை ஒரு ஆறேழு மாத காலம் செமினார் மாதிரி ஏதோ ஒன்றுக்கு அழைத்திருக்கிறது. தமிழுக்கு அசோகமித்திரன் என்ற தியாகராஜன் – டகரஜான் என்று ஜப்பானிய பெண் எழுத்தாளர் கஜுகோவால் அழைக்கப்படுபவர். சைவ உணவு கிடைக்காமல், சரியாக சமைக்கவும் தெரியாமல், காப்பி (அதுவும் அமெரிக்க காப்பி), கார்ன் ஃப்ளேக்ஸ், சீரியல், பாதி வெந்த சாதம் இவற்றை வைத்து காலம் தள்ளுபவர். அவரது அனுபவங்கள்தான் இந்த கதை.

கிண்டலும் நகைச்சுவையும் புத்தகம் பூராவும் இழைந்தோடுகிறது. நாலு வரிக்கு ஒரு முறையாவது புன்னகையாவது வந்தே தீரும். ஷூவில் இருக்கும் அட்டையை எடுக்காமல் ஷூ கடித்துவிடுகிறது. யாரோ ஒரு நண்பன் வீட்டுக்கு போனால் நண்பனின் காதலியின் கணவன் இவரை தன் மனைவியின் காதலன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட வருகிறான். பெருவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு கதை எழுத திட்டம் இடுகிறார். எதியோப்பியாவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் இவரை உடும்பு பிடியாக பிடித்துக் கொள்கிறார்.

பி.ஜி. வுட்ஹவுசுக்கு இணையான நகைச்சுவை உணர்வு கொண்ட எழுத்தாளர் தமிழில் கிடையாது என்று நினைத்திருந்தேன். அவரை விட மென்மையான, subtle, மேன்மையான நகைச்சுவை.

எண்பதுகளில் என் படிப்பு என்ற பதிவில் ஒரு அசோகமித்திரன் கதையை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது இந்த நாவலின் ஒரு பகுதி என்று தெரிந்து கொண்டேன். அதிசயமான தற்செயல்!

தொடர்புடைய பிற பதிவுகள்
எண்பதுகளில் என் படிப்பு
அசோகமித்ரனின் சில கதைகள்

பின் குறிப்பு: ஒற்றன் எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இடம் பெறுகிறது. ஆனால் ஆச்சரியம், ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இல்லை.