சேதுராமனின் அடுத்த guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

நாற்பதுகளில், பாவேந்தர் பாரதிதாசன் செட்டி நாட்டுப் பகுதியில் சொற்பொழிவுகள் பல செய்தது, அந்தப் பகுதி இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. மாதக் கணக்கில் அவரை அங்கு தங்க வைத்துக் கருத்துரை வழங்க வைத்தனர். பாரதிதாசன் நூல்களை அச்சிடவும், அவர்தம் நாடகங்களை நடத்தவும், முத்தமிழ் நிலையம் என்னும் அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். இளந்தமிழன் என்ற கையெழுத்து இதழினை நடத்தியவரும், தமிழ் இளைஞர் கழகம் என்ற அமைப்பின் பொறுப்பாளருமான முருகு சுப்பிரமணியன் திட்டமிட்டவாறு, கோனாப்பட்டியில் மற்ற அன்பர்களுடன் சேர்ந்து முத்தமிழ் நிலையத்தைத் தொடங்கினார்.

1947ம் ஆண்டு முருகு சுப்பிரமணியம் அவர்களால் பொன்னி எனும் இலக்கியத் திங்களிதழும் தொடங்கப் பெற்றது. பல இளங்கவிஞர்கள் தோற்றம் பெறவும் அறிஞர்களின் கட்டுரைகள் வெளியாகவும் இவ்விதழ் பெரிதும் பயன்பட்டது. பொன்னி இதழில் பல கவிஞர்கள் கவிதை புனைய விரும்பவே, இதழாசிரியர் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பின் கீழ் மாதம்தோறும் ஒரு கவிஞரை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.

கொத்தமங்கலத்தைச் சேர்ந்த மு. அண்ணாமலைதான் இவ்வமைப்பின் மூலம் முதலாக அறிமுகமானார். அண்ணாமலையைத் தொடர்ந்து 47 கவிஞர்கள் பொன்னி இதழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இப்பரம்பரைப் பட்டியலில், பொன்னி இதழ் வெளியிடுவதில் துணை நின்ற மு. அண்ணாமலை, நா. ரா. நாச்சியப்பன் இருவரும் முதலிரு இடங்களில் நிற்பது குறிப்பிடத்தக்கது. இப்பரம்பரையிலுள்ள முக்கியமான மற்ற கவிஞர்கள் – சுரதா, புத்தனேரி சுப்ரமணியன், முடியரசன், கோவை இளஞ்சேரன், ஷெரிஃப், சுப்பு ஆறுமுகம் ஆகியோர்.

பொன்னி இதழில் பாரதிதாசன் பரம்பரை தொடரில் இரண்டாவதாக அறிமுகமான நா.ரா.நாச்சியப்பன் இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். பிறந்த தேதி ஜூலை 13, 1927. பாவேந்தர் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். இளமைக் காலத்திலேயே, பாவேந்தரைத் தம் ஊருக்கு அழைத்து இலக்கியக் கூட்டங்கள் நடத்தியவர். பொன்னி புதுக்கோட்டையிலிருந்து வெளியான போது வெளியீட்டிற்கு உதவியவர்.

பின்னர் மு.அண்ணாமலை சென்னையில் அச்சகம் தொடங்கியபோது, அவ்வச்சகப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். அக்காலத்தில் வெளியான குயில் இதழினுக்கும் தம் உடலுழைப்பினை நல்கியவர். நாச்சியப்பன் பர்மாவில் வாழ்ந்த காலத்தில் பெரியார் அங்கு சென்ற போது, வரவேற்ற பெருமைக்கும் உரியவர்.

1949-1950ல் பொன்னி இதழின் துணையாசிரியராக இருந்த நாச்சியப்பன், 1945ல் ஐங்கரன் எனும் கையெழுத்து ஏடு நடத்தியும், ஆத்தங்குடியில் திராவிடர் கழகம் தொடங்கியும் பெரியாரிடம் பாராட்டுப் பெற்றவர்..1948ல் கொய்யாக் காதல் எனும் காவியம் எழுதி வெளியிட்டார். கே.ஆர்.இராமசாமியின் “மணமகள்” நாடகத்திற்கும், அண்ணாவின் “சந்திரமோகன்” நாடகத்திற்கும், பாடல்கள் எழுதிய பெருமைக்கும் உரியவர்.

இவர் எழுதிய மற்ற நூல்கள் ஈரோட்டுத் தாத்தா(பெரியார் பற்றியது), இன்பத் திராவிடம், தேடி வந்த குயில் முதலானவை. 1972ல் இளந்தமிழன் என்ற திங்களிதழைத் தொடங்கி நடத்தினார். இவர் இயற்றிய பாடல்களின் இரு தொகுதிகளும் 1980-1981ல் வெளிவந்தன. பல சிறுவர் பாடல்களையும் திறனாய்வு நூல்களையும் எழுதி வருபவர். பாவேந்தரின் வழியில் பல கதைக் கவிதைகளைப் படைப்பதுடன், கவிதையுணர்வு தொய்யாமல் படைப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

பாரதிதாசன் வழியிலேயே கடவுள் மறுப்பு, தமிழ்ப் பற்று, சமுதாயப் பார்வை, பகுத்தறிவு முதலான பொருண்மைகளில், இவர்தம் கவிதைகள் அமைந்துள்ளன.

(தகவல் ஆதாரம் – முனைவர் மு. இளங்கோவன் எழுதிய “பாரதிதாசன் பரம்பரை” – வெளியிட்டோர் – முகிலரசி, 31 கொல்லப் பாளையம், ஆர்க்காடு 632503 — 2001)

ஆர்வி: கிடைத்த விவரங்களை வைத்து பார்த்தால் அப்படி ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய எழுத்துகளாக தெரியவில்லை. திராவிட இயக்கத் தொடர்பு இருப்பதால் கலைஞர் இவரது வாரிசுகளுக்கு உதவி செய்ய விரும்பி இருக்கலாம். இந்த தேர்வுகளில் transparency இல்லாதது பெரும் குறைதான்.