சுரேஷ் கண்ணன் தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கினால், என்ன சிறுகதைகளை இயக்கலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். அந்த லிஸ்ட் கீழே.
ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்
உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் – ஆதவன்
பிலிமோத்ஸவ் – சுஜாதா
உள்ளும் புறமும் – வண்ண நிலவன்
அந்தரங்கம் புனிதமானது – ஜெயகாந்தன்
கிறுக்கல் – லா.ச.ராமாமிருதம்
புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
தீட்டு – அழகிய பெரியவன்
ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

இந்த சிறுகதைகளில் நான் மூன்றுதான் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது, அசோகமித்ரனின் புலிக் கலைஞன், இந்திரா பார்த்தசாரதியின் ஒரு கப் காப்பி. முதல் இரண்டும் எனக்கு பிடித்த சிறுகதைகள். ஒரு கப் காப்பி சுமார்தான்.

ஒரு நாள் கழிந்தது கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் பாட்டை பற்றியது. அதிலும் ஒரு சிறு குழந்தை மிக நல்ல காரக்டர். குடும்பத் தலைவன் ஏழை, அதே நேரத்தில் அது தெரியாத மாதிரி கொஞ்சம் பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும். அந்த ரோலுக்கு தலைவாசல் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

புலிக் கலைஞன் மிக அற்புதமான ஒரு கதை. புலி வேஷம் போடும் ஒருவன் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான். அந்த டெமோவின்போது ஒரு intensity வெளிப்பட வேண்டும். பிரகாஷ் ராஜ் பொருத்தமாக இருப்பார். இல்லை என்றால் நாசர்.

ஒரு கப் காப்பி சிறு வயது நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வேளை. ஒருவன் ஏழை பிராமணன், ஒன்றும் தெரியாமல் பிராமணன் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு புரோகிதம் செய்கிறேன் என்று காலத்தை ஓட்டுபவன். இன்னொருவன் ஊரை விட்டுபோய் ஓரளவு செழிப்பாக, சடங்குகள் செய்ய வேண்டும் என்று வருபவன். டெல்லி கணேஷும், டெல்லி குமாரும் பொருத்தமாக இருப்பார்கள்.

எனக்கு தோன்றும் சிறுகதைகள்:
தங்கர் பச்சானின் குடிமுந்திரி – முந்திரி மரத்தை வெட்டி பையனுக்கு ஷூ வாங்குகிறார் விவசாயி அப்பா.
சுஜாதாவின் நிஜத்தை தேடி – உதவி கேட்பவன் ஃப்ராடா இல்லையா? கணவன் மனைவி சண்டை.
சுந்தர ராமசாமியின் விகாசம் – மனித கால்குலேட்டர் ராவுத்தர் எலெக்ட்ரானிக் கால்குலேட்டர் வந்ததும் என்ன செய்வார்?
புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் – கணக்குப் பிள்ளை பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட திட்டம் இடுகிறார்.
புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள் – ட்ரெய்னில் பெண்ணின் கால் பட்டதும் சுப்பையா பிள்ளை கனவு காண்கிறார்.
புதுமைப்பித்தனின் சாப விமோசனம் – சீதையின் அக்னி பிரவேசத்தை பற்றி அகலிகை என்ன நினைப்பாள்?
கு.ப.ரா.வின் கனகாம்பரம் – புது மனைவியிடம் தன நண்பர்களிடம் கலந்து பேச சொல்லும் கணவன், அதன்படி நடக்கும் மனைவி.
ஜெயமோகனின் பித்தம் – இரும்பை தங்கமாக மாற்ற வாழ்க்கையை செலவிடும் பண்டாரம்.
பாலகுமாரனின் எந்த கரை பச்சை – வீட்டு வேலைகளை கவுரவம் பார்க்காமல் செய்யும் மச்சினன்
பாலகுமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் – வேலை இழந்த கணவன், இறந்து போகும் குழந்தை.
எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – சுய நலம் நிறைந்த குடும்பம்
அசோகமித்ரனின் பிரயாணம் – குருவை ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத சிஷ்யன்


எரிக் செகால் எழுதிய இந்த புத்தகம் என் மனதை தொட்ட புத்தகங்களில் ஒன்று. பல முறை படித்த புத்தகம்தான், ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி பக்கங்களை படிக்கும்போது கண்ணில் நீர் தேங்கும். ஆலிவர் பாரெட் IV தன் அப்பாவின் தோள்களில் சாய்ந்து அழும் காட்சி மிக உருக்கமானது.

ஆனால் யோசித்து பார்த்தால் இந்த புத்தகத்தில் ஒன்றுமே இல்லை. பணக்கார குடும்பத்து நாயகன் ஏழை பெண்ணை காதலித்து, அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு, கல்யாணம் செய்து கொள்கிறான். மனைவி சிறு வயதிலேயே இறந்து விடுகிறாள். இந்த மில்ஸ் அண்ட் பூன் கதையை எவ்வளவு சிறப்பாக எழுதி இருக்கிறார்! இதே கதையை பிரபல தமிழ் எழுத்தாளர்கள் என்ன தலைப்பு வைத்திருப்பார்கள், எப்படி எல்லாம் எழுதி இருப்பார்கள் என்று ஒரு கற்பனை. என்னை இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் மன்னிப்பார்களாக!

ராஜேஷ்குமார், கெட்டி கிட்னி: அப்பா பாரெட் ஒரு இன்ஸ்பெக்டரை கூப்பிடுகிறார். என் பையன் என்னிடம் 5000 ரூபாய் ஏன் கேட்டான் என்று கண்டுபிடிக்க சொல்கிறார். கிட்னியை திருட சதி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

பாலகுமாரன், சித்தியின் கோமணம்: ஒரு சித்தி (சித்தருக்கு பெண்பால்) வந்து ஜெனிஃபரை குணப்படுத்திவிடுகிறார். அந்த சித்திக்கு போன ஜென்மத்தில் தாசியாக கோமணம் மட்டுமே அணிந்த ஒரு சித்தருக்கு சேவை செய்ததால் சித்தி கிடைத்துவிடுகிறது.

ஜெயமோகன், ஆழப் பரவும் நிழல்: புத்தகத்தில் மொத்தம் ஆயிரம் பக்கம். அப்பாவும் மகனும் உணர்ச்சியில் கொந்தளிக்கிறார்கள். அப்பா தமிழ் கலந்த மலையாளத்திலும் மகன் மலையாளம் கலந்த தமிழிலும் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக் கொள்கிறார்கள். ஜெனிஃபரிந் மறைவுக்கு பிறகு பாரெட் எப்படி எல்லாம் சீரழிகிறான், கஞ்சா குடிக்கிறான், பிச்சை எடுக்கிறான் என்று ஒரு நூறு பக்கம் இருக்கிறது. அதற்கு பிறகு ஜெயமோகனே இந்த புத்தகத்துக்கு ஒரு விமர்சனமும் எழுதிக் கொள்கிறார். அது ஒரு ஐந்நூறு பக்கம்.

அசோகமித்திரன், மறைந்த உடல்கள்: பாரெட்டுக்கு ஏன் ஜெனிஃபரை மணந்தோம் என்றே தெரியவில்லை. என்னவோ நடந்துவிட்டது. இப்போது ஜெனிஃபர் இறக்க போகிறாள் என்றதும் சரி சீக்கிரம் செத்தால் நல்லது என்று நினைக்கிறான்.

புதுமைபித்தன், கடவுளும் ஜெனிஃபரின் பிள்ளையும் – ஆலிவர் பாரெட் பிள்ளைவாள் ஜெனிஃபர் என்ற கிருஸ்தவ பெண்ணை விவாகம் செய்து கொள்கிறார். பிரசவத்தில் இறந்து கொண்டிருக்கும் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போக பணமில்லை. அப்போது கடவுள் ஒரு விசிட் அடித்து இதுதான் அய்யா பொன்னகரம்! என்கிறார். (வந்தது ஏசுவா, ஈசனா என்று கேட்கக் கூடாது)

சாண்டில்யன், வன மோகினி – இளைய ராணா ஆலிவர் பாரெட் அக்பரின் வைப்பாட்டி மகளான ஜெனிஃபர் கானை மணந்து சிங்காதனத்தை துறக்கிறான். நடுவில் காடு, மலை எல்லாம் பற்றி ஐந்து பக்கத்துக்கு ஒரு முறை வர்ணனை – இந்த காடு, மலை எல்லாம் ஜெனிஃபர் கானின் உடலில் இருக்கிறது. ஜெனிஃபர் கானை குணப்படுத்த ராஜ வைத்தியரை மூத்த ராணாவிடம் கடனாக கேட்கிறான். ராஜ வைத்தியர் வர தாமதம் ஆகி ஜெனிஃபர் இறந்ததும் அவன் வீறு கொண்டு எழுந்து அக்பரை எதிர்க்கிறான்.

லைஞர் கருணாநிதி, சாதிச் சுடுகாடு – ஆலிவர் பாரெட் அய்யர் தலித் ஜெனிஃபரை காதலிப்பதை மூட நம்பிக்கைகளில் மூழ்கிய அப்பா பாரெட் எதிர்த்திட்டார். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை பொறுக்க முடியாமல் ஒரு போலி சாமியார் ஜெனிஃபருக்கு விஷம் வைத்திட்டார். காலம் கடந்த பின் அப்பா அய்யர் அழுதிட்டார்.

ஜானகிராமன், அப்பா வந்தார் – வயதில் மூத்த ஜெனிஃபரை ஆலிவர் காதலிப்பதை அப்பா எதிர்க்கிறார். அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் தொடுப்பு என்று பின்னால் தெரிய வருகிறது.

இந்திரா பார்த்தசாரதி, சந்திர சாமி: டெல்லியில் ஆலிவர் பாரெட் அய்யங்கார் மந்திரியின் குருவின் வைப்பாட்டியின் தம்பி மகளை மணந்து டெல்லியில் பெரிய ஆளாகிறான். அவள் இறந்ததும் அவனை யாரும் சீந்த வில்லை. பாதி புத்தகம் ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஏனென்றால் All characters talk only in English, you know.