பாலகுமாரனுக்கு ராஜராஜ சோழன், தஞ்சாவூர் பெரிய கோவில் என்றால் ஒரு பித்து உண்டு. உடையார் புத்தகம் வருவதற்கு முன்பே அவரது பல புத்தகங்களில் இது தெரியும்.

அவருடைய தளத்தில் அவர் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதைப் பற்றி உள்ளம் உருகி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதைப் பற்றி விவரித்து எல்லாம் நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. அங்கேயே போய் படித்துக் கொள்ளுங்கள்!

பாலகுமாரன் பதிவைப் பார்த்தேன், அடுத்த நாள் இந்த ஹிந்து கட்டுரை கண்ணில் பட்டது. டாக்டர் நாகசாமியின் ஒரு உரையைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

ராஜராஜ சோழன் 407 தளிச்சேரி பெண்டுகளுக்கு (நாட்டியம் ஆடுபவர்கள்) வீடு, நிலம் வழங்கியது, வீட்டின் அட்ரஸ், (ஏறக்குறைய பட்டா) அடுத்த வாரிசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முறை, பாடுபவர்கள், உடுக்கை அடிப்பவர்கள், வீணை வாசிப்பவர்கள், மத்தளம் வாசிப்பவர்கள், சங்கு ஊதுபவர்கள், கணக்கு வழக்கு பார்ப்பவர்கள், துணி வெளுப்பவர்கள், தைப்பவர்கள், எல்லா நடனங்களையும் மேற்பார்வை பார்ப்பவர்கள் அத்தனை விஷயங்களையும் கோவிலில் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறாராம். டாக்டர் நாகசாமி இந்த நானூறு தளிச்சேரி பெண்டுகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி அதை முதல்வர் கருணாநிதி வெளியிட்டாராம்.

சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்கள்!

அப்புறம் தமிழ் ஹிந்து தளத்திலும் ஒரு அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. அதே தளிச்சேரி பெண்டுகள், அவர்கள் வாழ்க்கை முறை, என்ன வட்டிக்கு அந்த காலத்தில் பணம் கிடைத்தது என்று பல விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். கட்டாயமாக படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பதிவுகள்:
பாலகுமாரனின் பதிவு
தஞ்சை பெரிய கோவில் ஓவியங்கள் – ஆர்வியின் பதிவு, ஹிந்து கட்டுரை
இந்திரா காந்தி சென்டரில் எல்லா ஓவியங்களும் (பாதிக்கு மேலான ஓவியங்கள் மங்கிவிட்டிருக்கின்றன. ஆனால் மிச்ச ஓவியங்களை தவறவிடாதீர்கள்.)
பெரிய கோவில் பற்றி ஒரு தளம்

ஹிந்து கட்டுரை
டாக்டர் நாகசாமி

தமிழ் ஹிந்து கட்டுரை

Advertisements

சிறுகதை எழுதுதல் – சொந்த அனுபவங்கள்

என் மனதில், கம்ப்யூட்டரில், நோட்ஸில் ஒரு டஜன் சிறுகதைகள் இருக்கலாம். அனேகமாக எல்லாமே புலம் பெயர்ந்த வாழ்வு பற்றியவை. எழுதப்பட்டவை எல்லாமே ஆங்கிலத்திலே எழுதப்பட்டவை. ஏனென்றால் என் கதைகளுக்கு இருக்கும் மூன்று வாசகர்களில் இருவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஆங்கிலத்தில் எழுதினால் சரிப்படுவதில்லை. தமிழ்தான் ஒத்துவரும். என்ன செய்வது, அவர்கள் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்.

என்னால் ஓ. ஹென்றியை தாண்டிப் போக முடிவதில்லை. கடைசி வரி அமைந்தால்தான் கதை எழுத முடிகிறது. அந்த கடைசி வரி ஒரு ட்விஸ்டாக இருக்க வேண்டும். இது வரை வெளிப்படையாக சொல்லாத ஒரு விஷயம் வெளியே வர வேண்டும். அப்போது ஒரு realization – பாத்திரங்களுக்கோ படிப்பவர்களுக்கோ இருக்க வேண்டும். ஆனால் அப்படி ட்விஸ்ட் வைத்து கதை எழுதும்போது பாத்திரங்கள் சரியாக flesh out ஆவதில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பாத்திரம் flesh out ஆகலாம். பாத்திரங்கள் தட்டையாக இருக்கின்றன என்று எனக்கே தெரிகிறது. அதை எப்படி சரி செய்வது என்றுதான் தெரியவில்லை.

உதாரணமாக அம்மாவுக்கு புரியாது கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வரும் எல்லாப் பாத்திரங்களும் one dimensional. அப்பாவுக்கு அதில் இருக்கும் ரோல் அம்மாவை கான்ட்ராஸ்ட் செய்வதுதான். பையனுக்கு இருக்க வேண்டிய தவிப்பு சரியாக வரவில்லை. அவன் காதலி வெறும் கார்ட்போர்ட் கட்அவுட். அவள் பெரியவர்கள் தேர்ந்தெடுக்கும் மணமகளாக இல்லாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான். அம்மாவை மட்டுமே விவரித்திருக்கிறேன். அது கூட சரியாக வந்ததா என்று சொல்வதற்கில்லை.

அதில் சரியாக வந்தவை இரண்டு. ஒன்று கடைசி வரி ட்விஸ்ட். இன்னொன்று அம்மாவும் பையனும் பேசும் இடம். authentic பிராமண பாஷையில் பேசுகிறார்கள். நான் பிராமண ஜாதியில் பிறந்தவன். எனக்கு அந்த பாஷை வராவிட்டால் எப்படி? சுமாராக வந்தது அம்மாவின் முட்டை காய வைத்த ஸ்டவ்வை தூக்கிப் போடும் ஆசாரம். அதற்கு நான் பல விஷயங்களை சொன்னாலும் எனக்கு திருப்தியாக இல்லை.

இதை எப்படி திருத்தலாம் என்று சொல்லிக் கொடுக்கத்தான் ஆளில்லை. அப்படிப்பட்ட ஆளை எங்கே தேடுவது என்றும் தெரியவில்லை.

அப்புறம் இன்னொரு பிரச்சினை. நமக்கு தோன்றும் கரு மற்றவர்களுக்கும் தோன்றி இருக்கலாம். முதல் முறையாக அமேரிக்கா வந்த என் அம்மா ஃப்ரிஜ் நிறைய முந்தின நாள் சமைத்தது எக்கச்சக்கமாய் மிச்சம் இருந்தாலும் புதிதாக சாதம், குழம்பு, ரசம் வைப்பாள். எப்படி முந்தின நாள் சமையலை, பழைய சாப்பாட்டை, பையனுக்கு போடுவது? அப்புறம் நமக்கு சோம்பல் என்று அவன் நினைத்துவிட்டால்? ஃப்ரிஜ் பூராவும் சட்டி மேல் சட்டியாக பழைய குழம்பு, ரசம், சாதம் வைக்கப்பட்டிருக்கும். இதை வைத்து ஒரு கதை எழுதினேன். அப்புறம் இதே போல ஒரு கதையை கீதா பென்னட் எழுதி இருப்பதை நானே படித்தேன். நான் எழுதிய கதை எங்கேயாவது வெளியாகி பிரச்சினை கிளம்பினால் நான் காப்பி அடிக்கவில்லை என்று யார் நம்புவார்கள்? எம்எஸ்வி ஒரு மெட்டை பல பாட்டுக்கு போட்டிருக்கிறார் என்று இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னார் – பேசுவது கிளியா, வீடு வரை உறவு, மாம்பழத்து வண்டு எல்லாம் ஒரே ட்யூன்தானே! ஆனால் எம்எஸ்வியால் அதை சின்ன சின்ன மாற்றம் செய்து பல அருமையான பாடல்களாக ஆக்க முடிகிறது. நமக்கோ அதை மாற்றுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது.

பாலகுமாரன் பல தடவை சொல்லி இருக்கிறார் – அவருக்கு சுஜாதா ஒரு மணி நேரம் செலவழித்து கதை எழுத சொல்லிக் கொடுத்தாராம். இவர் கப்பென்று பிடித்துக் கொண்டாராம். நான் பாலகுமாரன் அளவு திறமை உள்ளவன் இல்லைதான். ஆனால் எனக்கும் மூக்கு வரை ஆசை இருக்கிறது. எனக்கு ஒரு சுஜாதாதான் இன்னும் கிடைக்கவில்லை.

சிறுகதை எழுதுவதில் ஆர்ட்டும் இருக்கிறது, craft-உம் இருக்கிறது. ஆர்ட் வருமோ வராதோ தெரியாது, craft -ஆவது வரவேண்டும் என்று ஆசை. எப்போதாவது கை வராமலா போய்விடும்?

தொடர்புடைய பதிவுகள்:
ஓ. ஹென்றி – விக்கி குறிப்பு
பாலகுமாரனுக்கு சிறுகதை எழுதுவது எப்படி என்று விளக்கிய சுஜாதா
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு


முதல் பகுதி மிக நீளமாக போனதால் இரண்டாக பிரிக்க வேண்டியதாகிவிட்டது. முதல் பாகம் இங்கே. மற்ற கதைகளைப் பற்றி கீழே.

கு.ப. ரா.வின் கதைகளில் எனக்கு பிடித்தவை திரை, கனகாம்பரம். கனகாம்பரம் உலகத் தரம் வாய்ந்த கதை. புதுசாய் கல்யாணம் ஆன கணவன் தன் மனைவியை தன நண்பர்களிடம் கலந்து பேசு, நாகரிக வாழ்க்கை வாழு என்று சொல்கிறான். உண்மையில் அவன் அதைத்தான் விரும்புகிறானா? திரையின் விதவை அக்கா ஒரு vicarious வாழ்க்கை வாழ விரும்புகிறாள்.

கு. அழகிரிசாமி ஒரு மாஸ்டர். சிறுகதை அவருக்கு கை வந்த கலை. அவருடைய ராஜா வந்திருக்கிறார், திரிவேணி போன்ற கதைகள் நிறைவை தருவன. ராஜா ஒரு கதையில் வீட்டுக்கு வருகிறார், ராமன் இன்னொரு கதையில் தியாகய்யர் வீட்டுக்கு வருகிறார். அன்பளிப்பு பலரும் சிலாகிப்பது. நானும்தான். உங்களை சுற்றி வரும் சிறுவர்களுக்கு பரிசு கொடுக்கிறீர்கள், ஆனால் சாரங்கனுக்கு மட்டும் எதுவும் கொடுக்கவில்லை. அவன் இதை எப்படி எதிர்கொள்வான்?
இன்னும் கதைகள் உண்டு. அடுத்த பாகத்திலாவது தேறும் சிறுகதைகளின் முழு லிஸ்டையும் எழுத வேண்டும்.

கி. ராஜநாராயணன் இன்னொரு மாஸ்டர். அவருடைய பல கதைகள் தேறும். கோமதியில் ஒரு gay சமையல்காரன். மாய மானில் அரசு கொடுக்கும் மானியத்தை நம்பி கிணற்றில் மோட்டார் போட்டு கடனாளியாகும் ஒரு விவசாயி. கொத்தைப் பருத்தியில் நிலம் இல்லாத கலெக்டருக்கு பெண் கொடுக்க மறுக்கும் விவசாயி. ஜெயில் சிறுகதையில் ஸ்கூலை கட் அடித்துவிட்டு சிறு குழந்தையுடன் விளையாடும் மாணவன், கதவு சிறுகதையில் ஜப்தி ஆன கதவில் இன்னும் ஆடும் சிறுவர்கள். இன்னும் நிறைய இருக்கிறது, ஆனால் இவர் லிஸ்டும் அடுத்த பாகத்தில்தான் முழுமை அடையும்.

சுந்தர ராமசாமியின் விகாசம் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. ராவுத்தருக்கு கணக்கு தலைகீழ் பாடம். ஜவுளிக் கடையில் கூட்டம் நிறைந்து வழியும்போது முதலாளிக்கு அவர் இல்லாமல் பில் போட முடியவில்லை. ஆனால் ராவுத்தரின் அலட்டல் தாங்க முடியாமல் முதலாளி ஒரு கால்குலேட்டர் வாங்குகிறார். ராவுத்தர் என்ன செய்யப் போகிறார்?
ரத்னாபாயின் ஆங்கிலம் பேசப்படும், நல்ல சிறுகதை. பந்தா எப்படி எல்லாம் மாட்டி விடுகிறது?
பிரசாதம் கதையை படிக்கும் யாரும் ஒரு புன்முறுவல் செய்யாமல் இருக்க முடியாது. கான்ஸ்டபிளுக்கு பணம் வேண்டும். மாட்டிக் கொள்ளும் குருக்களிடம் லஞ்சம் கேட்கிறார். முதலில் பயப்படும் குருக்கள் பிறகு கொடாக்கண்டனாக மாறிவிடுகிறார். கான்ஸ்டபிள் என்ன செய்வார்?
ஊரார் பணத்தில் வாழும் கோவில் பண்டாரம், அவன் செலவில் வாழும் கிழவன். கிழவன் தனி ஆளாக கிணறு வெட்டுகிறான். இதுதான் கோவில் காளையும் உழவு மாடும் கதை. அருமை.
எனக்கு சீதை மார்க் சீயக்காய்த்தூள் மாதிரி ஒரு சிம்பிளான கதை என் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் பிடித்திருக்கிறது.
இவர் லிஸ்டும் அடுத்த பாகத்தில்தான் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

தி.ஜா.வின் கதைகளில் ஞாபகம் வருவது பாயசம், பரதேசி வந்தான், சிலிர்ப்பு. பாயசம் காட்டும் பொறாமை, பரதேசி வந்தானில் இருக்கும் அறச்சீற்றம், சிலிர்ப்பில் ஏற்படும் நிறைவு எல்லாமே அருமை.

எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப்பிள்ளை ஒரு tour de force. குடும்ப உறவுகளின் சுயநலத்தை மிக தத்ரூபமக விவரிக்கிறது. Very powerful story. பெட்கி இன்னொரு அருமையான கதை. செக்ஸ் என்ற ஒரே ஆயுதம் மட்டுமே இருக்கும் இளம்பெண் அதை தயங்காமல் உபயோகிக்கிறாள்.

ஜெயகாந்தன் கதைகளில் எனக்கு பிடித்தது அக்னிப் பிரவேசம் மட்டுமே. யுகசந்தி, குருபீடம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ரிஷிமூலம் மாதிரி கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் எனக்கு சுமாராகத்தான் தெரிகின்றன.

அசோகமித்ரன் என்ற ஜீனியசை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் கதைகளை விவரிப்பது கஷ்டம். பிரயாணம், புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. வழக்கம் போல தலைப்பு ஞாபகம் இல்லை. உதாரணமாக திடீரென்று ஒரு கணத்தில் கார் ஓட்டுவது கைவந்துவிடும் கதை. இந்த லிஸ்டும் அடுத்த பகுதியில்தான் முழுமை செய்ய வேண்டும்.

லா.ச.ரா.வின் கதைகளில் எனக்கு பிடித்தது பூரணி. பஞ்ச பூதக் கதைகள் என்று அவர் ஒரு முறை எழுதினர். பூரணிதான் பூமி. – இல்லை இல்லை ப்ரித்வி. பூமியைப் போல பொறுமை வாய்ந்த குடும்பத் தலைவி. இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. குயவன் தன் பிள்ளை இறந்த கோபத்தில் பானை சட்டிகளை உடைக்கும் கதை.

அப்புறம் அம்பை. எல்லாரும் சொல்லும் அம்மா ஒரு கொலை செய்தால் கதை எனக்கு வெறும் cliche ஆக தெரிகிறது. எனக்கு பிடித்தவை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. விவரிப்பது கஷ்டம். மல்லுக்கட்டு – மிக subtle ஆக பெண் அடக்கப்படுவதையும் அவள் போதும் என்று எழுந்திருப்பதையும் எழுதி இருப்பார்.

பாலகுமாரன் சில அபாரமான சிறுகதைகளை ஆரம்ப காலத்தில் எழுதி இருக்கிறார். சின்ன சின்ன வட்டங்கள் இன்றும் பேசப்படும் கதை. வேலை போய் கையில் காசில்லாமல் படும் அவதி மிக அருமையாக காட்டப்பட்டிருக்கும். நெட்டி பொம்மைகள் கதையில் எல்லாருடனும் படுக்கும் ஒரு துணை நடிகைக்கு இருக்கும் தைரியமும், நல்ல நிலையில் இருக்கும் இரு மத்திய வர்க்க “முற்போக்கு” எழுத்தாளர்களின் பயமும் நன்றாக வந்திருக்கும். எந்தக் கரை பச்சை கதையில் சாதாரணமாக வீட்டு வேலைகளை செய்யும் மச்சினனை அடுத்தவரின் indirect disapproval எப்படி தன் மன்னி மேல் எரிந்து விழ வைக்கிறது என்பதுதான் கரு.

வண்ணநிலவனின் எஸ்தர் பேசப்படும் கதை. காரணத்துடன்தான் பேசப்படுகிறது. அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.

கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.

கிருஷ்ணன் நம்பி. மருமகள் வாக்கு சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.

தங்கர் பச்சானின் குடி முந்திரி, வெள்ளை மாடு இரண்டும் நல்ல கதைகள். குடி முந்திரியில் நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார். வெள்ளை மாடு மாட்டுக்கும் மனிதனுக்கும் அமையும் உறவு பற்றி. பிரேம்சந்தின் ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.

ஜெயமோகனின் ஜீனியஸ் சிறுகதைகளை விட நாவல்களில்தான் நன்றாக வெளிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் பித்தம் – ரசவாதத்தை தேடி அலையும் ஒரு பண்டாரம், அசோகமித்ரனின் ஒரு கதையை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது; அவதாரம் – பலம் வாய்ந்த ரௌடியை கைசண்டையில் ஜெயிக்கும் ஊனமுற்றவன்; கடைசி வரை சிறுகதை – சீரழிந்து போனாலும், விபச்சாரமே செய்தாலும் பரவாயில்லை, ஆனால் தங்கை வேற்று ஜாதிக்காரனை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைக்கும் மாணிக்கம் கவுண்டர், இதே கருவை வைத்து நானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன்; மாடன் மோட்சம் – ஒரு நாட்டார் தெய்வம் classical ஹிந்து மதத்தில் ஐக்கியமாவது; ஊமைச் செந்நாய் – ஒடுக்குபவனின் உதவியை நிராகரிக்கும் அடிமை; இந்த மாதிரி சில சிறந்த கதைகள் இருக்கின்றன.

தமயந்தி என்ற அவ்வளவாக தெரியாத எழுத்தாளர் எழுதிய ஒரு சிறந்த சிறுகதை அனல் மின் மனங்கள். கிழவியை என்ன செய்வது என்ற அதே கருதான். மகனுக்கும் வேண்டாம், மகளுக்கும் வேண்டாம். கடைசியில் மகன் அவளை பச ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய்விடுகிறான். குரூரம் எத்தனை சிறப்பாக வந்திருக்கிறது?

ஏ.ஏ.ஹெச்.கே. கோரி எழுதிய ஒரு சிறந்த சிறுகதை அவன் அவள் இவன். “இவன்” “அவளுக்காக” அவளை பணத்துக்காக கைவிட்ட முறைப்பையன் “அவனுக்கு” கடிதம் எழுதித் தருகிறான். அப்படியே ரூட் போடுகிறான். கடிதம் பிரமாதமா எழுதப்பட்டு “அவன்” திரும்பி வந்து “அவளை” கல்யாணம் செய்து கொள்ள ரெடி!

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு கதை எனக்கு பிடித்தமானது. Very well crafted. சாகியின் சிறுகதைகளை நினைவுபடுத்துவது. பேய்க்கதை. விவரிக்க முடியாது, அதுதான் ஒரே கஷ்டம். பேரும் நினைவில்லை.

கடைசியாக சுஜாதா – நல்ல சிறுகதையை நான் தெரிந்துகொண்டது இவர் மூலமாகத்தான். பொதுவாக ஸ்ரீரங்கத்து கதைகள் அபாரமானவை. எனக்கு பிடித்தவை பேப்பரில் பேர் (கிரிக்கெட் விளையாடும் சுஜாதா), சீனு (ஏமாற்றும் நகரத்துப் பெண்). நிஜத்தை தேடி என்ற கதையும் பிடிக்கும். தான் சொன்னது தவறு என்று ஒத்துக்கொள்ள முடியாத கணவன். அப்புறம் ஒரு லட்சம் புத்தகங்கள்.

சில சமயம் தனிப்பட்ட கதைகளை விட தொகுப்பு ஒரு அருமையான ambience-ஐ உருவாக்குகிறது. உதாரணமாக தேவனின் துப்பறியும் சாம்பு கதைகள், கல்கியின் தேரழுந்தூர் சிவக்கொழுந்து, தப்பிலி கப், மயிலைக் காளை போன்ற கதைகள், சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் ஸ்ரீரங்கம் கதைகள், பிரபஞ்சனின் பதவி என்று சிறுகதைத் தொகுதி, பெங்களூர் ரவிச்சந்திரன் எழுதிய இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் என்ற சிறுகதைத் தொகுதி போன்றவற்றை சொல்லலாம்.

தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் – பகுதி 1

சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு
ஜெயமோகனின் உரை – பசியாகி நிற்கும் ஞானம். தி.ஜா.வின் பரதேசி வந்தான் கதை இங்கே விலாவாரியாக பேசப்படுகிறது.

இந்த வாரம் சிறுகதை வாரம்


எத்தனை நாள்தான் அடுத்தவர்கள் லிஸ்டை பற்றியே எழுதுவது? இந்த முறை என் லிஸ்ட். இது முழுமையானது இல்லை. எனக்கு சிறுகதைகள் தலைப்பு நினைவிருப்பதில்லை. ஞாபகம் வரும் சிறுகதைகளை பற்றி இப்போது. அடுத்த பாகம் எப்ப வரும் எப்டி வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடும்.

அனேகமாக இதுவே – முதல் பகுதியே – பெரிய போஸ்டாக இருக்கும். பெரிய போஸ்ட்களைப் பார்த்தாலே எனக்கு மனச்சோர்வு ஏற்படும். எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். நாலைந்து பதிவுகளாக போட்டாலும் போடுவேன்.

லிஸ்ட் கீழே:
ஏ.ஏ.ஹெச்.கே. கோரி – அவன் அவள் இவன்
அம்பை – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு
அசோகமித்திரன் – பிரயாணம், புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும்
பாலகுமாரன் – சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்தக் கரை பச்சை
தமயந்தி – அனல் மின் மனங்கள்
திலீப் குமார் – கடவு, கடிதம்
ஜெயகாந்தன் – அக்னிப் பிரவேசம்
ஜெயமோகன் – பித்தம், அவதாரம், கடைசி வரை, மாடன் மோட்சம், ஊமை செந்நாய்
கி. ராஜநாராயணன் – கோமதி, மாய மான், கொத்தைப் பருத்தி, ஜெயில், கதவு
கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
கு. அழகிரிசாமி – ராஜா வந்திருந்தார், திரிவேணி, அன்பளிப்பு
கு.ப.ரா. – திரை,கனகாம்பரம்
லா.ச.ரா. – பூரணி
எம்.வி. வெங்கட்ராம் – பைத்தியக்காரப் பிள்ளை, பெட்கி
பட்டுக்கோட்டை பிரபாகர் – ?
புதுமைப்பித்தன் – மனித இயந்திரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாப விமோசனம், பொன்னகரம், புதிய கூண்டு, துன்பக் கேணி, செல்லம்மாள், கல்யாணி, ஒரு நாள் கழிந்தது, காலனும் கிழவியும், பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை
சா. கந்தசாமி – தக்கையின் மீது நான்கு கண்கள்
சுஜாதா – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி, ஒரு லட்சம் புத்தகங்கள்
சுந்தர ராமசாமி – விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம், பிரசாதம், கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய்த்தூள்
தங்கர் பச்சான் – குடி முந்திரி, வெள்ளை மாடு
தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம்
வண்ணநிலவன் – எஸ்தர்
யுவன் சந்திரசேகர் – 23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்

பதிவின் நீளத்தைக் குறைக்க இந்த முறை புதுமைப்பித்தன் மட்டும். அடுத்த பாகத்தில் மற்றவர்களைப் பற்றி.

தமிழ் சிறுகதைகளில் பல சாதனையாளர்கள் உண்டு, ஆனால் இன்னும் புதுமைப்பித்தனை யாரும் தாண்டவில்லை. எனக்கு ஒரு பத்து பனிரண்டு கதைகள் தேறும்.

நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை.

அதற்கு மிக அருகே உள்ள கதை சுப்பையா பிள்ளையின் காதல்கள். தாம்பரத்திலிருந்து தினமும் ட்ரெயினில் போகும் சுப்பையா பிள்ளையின் கால் மேல் ஒரு இளம் பெண்ணின் கால் தற்செயலாக படுகிறது. அவ்வளவுதான் கதை.

அப்புறம் கடவுளும் கந்தசாமி பிள்ளையும். சிவ பெருமான் கந்தசாமி வீட்டுக்கு விசிட் அடிக்கிறார். புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. ஒரு நாள் கழிந்தது கதையில் வரும் சிறு பெண்ணும் அப்படித்தான்.

அப்புறம் சாப விமோசனம், பொன்னகரம். சீதையை ராமன் தீக்குளிக்க சொன்னது தெரிந்தால் அகலிகையின் கதி என்ன? பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது.

புதிய கூண்டு, துன்பக் கேணி இரண்டும் உணர்ச்சிகரமான கதைகள். கஷ்டப்படும் குடும்பத்தில் அண்ணனும் தம்பியும் காலேஜில் சேருகிறார்கள். அண்ணன் கிருத்துவப் பெண்ணை காதலித்து மதம் மாறி கல்யாணமும் செய்து கொள்கிறான். கொஞ்ச நாளில் அம்மா அவுட். அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை. அற்புதமாக எழுதப்பட்ட கதை. துன்பக் கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம்.

செல்லம்மாள் இன்னொரு அருமையான கதை. புருஷன் கண்ணெதிரில் செல்லம்மாள் செத்துக் கொண்டிருக்கிறாள், இதுதான் கதை. இன்னொருவர் கண்ணெதிரில் சாவதைப் பற்றி மகா மசானம் என்ற இன்னொரு கதையும் உண்டு.

கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது. ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை.

ஒரு நாள் கழிந்தது கதையில் முருகதாசர் அன்றைக்கு வேண்டிய பணம் சம்பாதித்துக் கொள்கிறார். அதற்கு ஆயிரம் வெட்டி பந்தா.

அப்புறம் காலனும் கிழவியும். கிழவியை அழைத்துப் போக வரும் யமதர்மன் கடைசியில் தன் பாசக்கயிற்றை விட்டுவிட்டுப்போகிறான். மனிதருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.

அப்புறம் சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதையில் கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் சக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான்.

எனக்கு இன்னும் பிடிபடாத, ஆனால் பரவலாக பேசப்படும் கதை சிற்பியின் நரகம்.

என் Reference-களையும் கொடுத்துவிடுகிறேன். எஸ். ராமகிருஷ்ணன் காஞ்சனை (என் லிஸ்டில் வராது), கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், செல்லம்மாள் ஆகியவற்றை தன் 100 சிறந்த தமிழ் சிறுகதை லிஸ்டில் தேர்வு செய்திருக்கிறார். ஜெயமோகன் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், கயிற்றரவு, செல்லம்மாள், சிற்பியின் நரகம், கபாடபுரம், ஒரு நாள் கழிந்தது, அன்றிரவு, சாமியாரும் குழந்தையும் சீடையும், காலனும் கிழவியும், சாப விமோசனம், வேதாளம் சொன்ன கதை (என் லிஸ்டில் வராது), பால்வண்ணம் பிள்ளை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கிறார். ஜெயமோகன் லிஸ்டில் பாதி அடையாளம் தெரியவில்லை. இன்னும் ஒரு முறை புதுமைப்பித்தன் சிறுகதைகளை புரட்டிப் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:
சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு
ஜெயமோகனின் உரை – பசியாகி நிற்கும் ஞானம். தி.ஜா.வின் பரதேசி வந்தான் கதை இங்கே விலாவாரியாக பேசப்படுகிறது.

இந்த வாரம் சிறுகதை வாரம்


தோன்றியதைப் பற்றி எல்லாம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறேன். அமார்த்ய சென்னிலிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை வரை ஒரே அவியலாக இருக்கிறது. ஒரு சேஞ்சுக்காக ஒரே ஒரு விஷயம் பற்றி focus செய்யலாம் என்று எண்ணம். இந்த வாரம், சிறுகதை வாரம். சிறுகதைகளை பற்றி மட்டும் எழுதப் போகிறேன். என்ன எழுதப் போகிறேன் என்று இது வரை எனக்கே தெரியாது. 🙂

சிறுகதை என்றால் என்ன என்று பெரிய பெரிய மேதைகளே வரையறுக்க குழம்புகிறார்கள். சிலர் சைஸை வைத்து வரையறுக்கிறார்கள். பத்து பக்கம் இருந்தால் சிறுகதையா? 25 பக்கம்? 50 பக்கம்? எத்தனை பக்கம் இருந்தால் சிறுகதையிலிருந்து கொஞ்சம் பெருகதைக்கு மாறுகிறது? (இந்த இடத்தில் எப்படியாவது அருகதை என்று எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன், அப்புறம் படிப்பவர்கள் பாவம் என்று விட்டுவிட்டேன்) நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அதிலெல்லாம் படம் போட்டு பாகங்களை குறித்த பிறகும் கதை பத்து பக்கத்தை தாண்டாது. இருபது பக்க “சிறுகதையே” எனக்கு கொஞ்சம் கஷ்டம். 🙂 ஆனால் டிக்கன்ஸ் சிறுகதை எழுதினால் ஒரு ஐம்பது பக்கம் போகும். ஜோஸஃப் கான்ராடின் Heart of Darkness படிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். என் கண்ணில் அது சிறுகதைதான். அது ஒரு 70 பக்கம் இருக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு மூன்று decade-களில் எழுதப்பட்ட கதைகள் பொதுவாக நீளமாக இருக்கின்றன.

சிலர் சிறுகதை ஒரு moment -ஐ, ஒரு நக்மா-வை, (நக்மாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை யாராவது சொல்லுங்கப்பு!) காட்டுவதுதான் சிறுகதை என்று சொல்கிறார்கள். (நக்மாவை காட்டினால் அல்லது நக்மா காட்டினால் அது சிறுகதை இல்லை, சினிமா என்று யாராவது கடிப்பதற்கு முன் ஹிந்தியில் நக்மா என்றால் ஒரு moment என்று சொல்லிவிடுகிறேன். அது moment-உக்கும் கொஞ்சம் மேலே, உருது வார்த்தைகளுக்கு உள்ள ஒரு charm அதில் இருக்கிறது.) அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் நல்ல உதாரணம். ஆனால் புதுமைப்பித்தனின் ஒரு கதை – பேர் ஞாபகம் வரவில்லை, கூடுவிட்டு கூடு பாயும் நன்னய பட்டன்? என்று நினைக்கிறேன் – பல யுகங்களை கடக்கிறது. அதுவும் நல்ல கதைதான்.

பெரிய பெரிய மேதைகளே தடுமாறும்போது நான் எதற்கு கஷ்டப்பட வேண்டும்? யாரோ ஒருவர் போர்னோக்ராஃபி பற்றி சொன்னது நினைவு வருகிறது. அதை என்னால் வரையறுக்க முடியாது, ஆனால் பார்த்தால் எது போர்னோ, எது இல்லை என்று தெரியும் என்று சொன்னாராம். சிறுகதைக்கும் அந்த வரையறைதான் சரிப்பட்டு வரும். எந்த வரையறைக்கும் விதிவிலக்குகள் காட்ட முடியும். ஆனால் பார்த்தால் இது சிறுகதையா, குறுநாவலா, நாவலா என்று தெரியும்.

ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த சிறுகதை ஆசிரியர்கள்/கதைகள் – உடனடியாக தோன்றுபவை – சாகி, எம்.ஆர். ஜேம்சின் பேய்க்கதைகள், ஓ. ஹென்றியின் சில கதைகள், பல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், சில ஜாக் லண்டன் கதைகள், சில பி.ஜி. வுட்ஹவுஸ் கதைகள், வெகு சில அசிமோவ், உர்சுலா லி க்வின் கதைகள் பிடிக்கும். பெரிதாக பேசப்படும் ஹாதொர்ன், எட்கார் ஆலன் போ (Purloined Letter, Gold Bug, Pit and the Pendulum பிடிக்கும்), சாமர்செட் மாம், மார்க் ட்வேய்நின் சிறுகதைகள் எல்லாம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

இந்திய மொழிகளில் ஹிந்தியில் பிரேம்சந்த். மிக அற்புதமான சிறுகதைகள். மணிக் பந்தோபாத்யாயின் வங்காளச் சிறுகதைகளில் பல மிகவும் சக்தி உள்ளவை. மைதிலியோ, போஜ்புரியோ என்னவோ ஒன்றில் எழுதிய ஃபனீஸ்வர்நாத் ரேணு அருமையாக எழுதுவார். வேறு யாரும் எனக்கு தெரியவில்லை. இஸ்மத் சுக்டை, சாதத் ஹாசன் மாண்டோ, கிருஷ்ண சந்தர் மாதிரி எல்லாம் பேர் நினைவு வந்தாலும் எந்த கதையும் நினைவு வரவில்லை. மற்றவர்களின் நாவல்கள்தான் நினைவு வருகின்றன.

தமிழில்தான் நான் ஓரளவு சிறுகதைகளை படித்திருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதை வடிவத்தை ஜீரணித்து பல வருஷம் ஆயிற்று. இத்தனைக்கும் நூறு வருஷமாகத்தான் சிறுகதைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. புதுமைப்பித்தன் ஒரு ஜீனியஸ். அவர் சிறுகதைகள், கட்டுரைகள் மட்டுமே எழுதினர். கு.ப.ரா. அருமையான கதைகளை எழுதி இருக்கிறார். அசோகமித்திரன் தமிழின் இன்னொரு ஜீனியஸ். அவருக்கு சிறுகதை கை வந்த கலை. கு. அழகிரிசாமி சிறுகதையின் மாஸ்டர். கி.ராஜநாராயணன் இன்னொரு மாஸ்டர். ஈகோவை வைத்து மிக subtle-ஆன கதைகளை எழுதும் சா. கந்தசாமி, அன்றைய காலகட்டத்தின் நியாய அநியாயங்களை எடுத்து வைத்த ஜெயகாந்தன், மிக சுவாரசியமான கதைகளை வணிக இதழ்களுக்காக எழுதிய கல்கி, தேவன், சுஜாதா, ஒரு காலத்தில் மிக அபாரமான சிறுகதைகளை எழுதிய பாலகுமாரன், மிக குரிவாகவே எழுதினாலும் மறக்க முடியாத கதைகளை எழுதிய ஜி. நாகராஜன், திலீப் குமார், வெளுத்து வாங்கும் அ. முத்துலிங்கம், நாவல்கல் அளவுக்கு வராவிட்டாலும் நல்ல சிறுகதைகளை எழுதும் ஜெயமோகன் என்று மணிக்கொடி காலத்திலிருந்து இன்று வரை லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்.

உங்களுக்கு என்ன சிறுகதைகள் பிடித்திருந்தது? உங்களை பாதித்த சிறுகதைகள் ஏதாவது உண்டா? சிறுகதைகளை பற்றி உங்கள் எண்ணம் என்ன? சும்மா நானே பேசுவதை விட எல்லாரும் பேசினால் நன்றாக இருக்குமே!

நீங்கள் எழுதிய சிறுகதை எதையாவது இங்கே பதிக்க விரும்புகிறீர்களா? (எனக்கு பிடித்தால்தான் பதிப்பேன்.)

பக்ஸ், சேதுராமன் நீங்கள் யாராவது இதைப் பற்றி எழுத விரும்புகிறீர்களா?

தொடர்புடைய பதிவுகள்:

சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு


ஜீவியின் எழுத்தாளர் அறிமுகங்களை பற்றி எழுதி இருந்தேன். அவர் இந்த முறை கரிச்சான் குஞ்சு பற்றி எழுதி இருக்கிறார். படித்து பாருங்கள்.

பாலகுமாரன் எழுதிய இரும்பு குதிரைகள் புத்தகத்தில் அவரை சித்தரித்திருக்கிறார் என்று கேள்வி. (மன்னார்குடி ஸ்கூல் வாத்தியார், ரிடையர் ஆன பிறகு லாரி கணக்கு எழுத சென்னைக்கு தன் மகளுடன் வருவார்)

நான் பசித்த மானுடம் புத்தகம் படித்ததில்லை. கரிச்சான் குஞ்சுவின் தெளிவு என்ற ஒரு சிறுகதை தொகுப்பு படித்திருக்கிறேன், அது என்னை அவ்வளவு impress செய்யவில்லை. ஜெயமோகன் பசித்த மானுடத்தை தனது இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ். ராமகிருஷ்ணனும் இதை தன் நூறு சிறந்த நாவல் லிஸ்டில் சேர்க்கிறார்.

தொடர்புடைய பதிவுகள்
கரிச்சான் குஞ்சு பற்றி ஜீவி
ஜீவியின் எழுத்தாளர் அறிமுகங்கள்
ஜெயமோகனின் தமிழ் நாவல் லிஸ்ட்
எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த தமிழ் நாவல் லிஸ்ட்
கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானிடம்” பற்றி வெங்கட் சாமிநாதன்
கரிச்சான் குஞ்சுவை வெங்கட் சாமிநாதன் நினைவு கூர்கிறார்
கரிச்சான் குஞ்சுவைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
கரிச்சான் குஞ்சுவைப் பற்றி ஆர்.பி. ராஜநாயஹம்


(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)

டீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த்! வசந்த்!, கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.

கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.

மாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.

ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.

இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.

குமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.

அடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திருந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.

எல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.

அசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே!

புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித்து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது – டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.

அலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass!

இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங்கும் விமானங்கள்
5. வால்காவிலிருந்து கங்கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம்பு
8. ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
9. கணேஷ் வசந்த் கதைகள்
10. எஸ்.எஸ். 66
வேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).

மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
எழுபதுகளில் என் படிப்பு
இன்குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்