நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

இது வேண்டாம் என்று சொல்லிவிட்டவர்கள், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது, ராஜம் கிருஷ்ணனை புதிதாக லிஸ்டில் சேர்த்தது என்று விவரங்களை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதை பற்றி சேதுராமனும் ஒரு மறுமொழியில் குறிப்பிட்டிருந்தார்.

23 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களது மரபுரிமையாளர்களுக்கு ரூ.84 லட்சம் பரிவுத்தொகை வழங்க முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அரசின் செய்தி குறிப்பு கீழே:

4.86 கோடி பரிவுத்தொகை
சிறந்த தமிழறிஞர்களின் நூல்கள் அனைவரையும் சென்றடைதல் வேண்டும் எனும் சீரிய நோக்கில் அந்நூல்களை நாட்டுடைமையாக்கி, அவற்றை படைத்த தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்குப் பரிவுத் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2006-ல் இந்த அரசு பொறுப்பேற்றபின் பரிதிமாற் கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முதலான 65 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு ரூ.4 கோடியே 86 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2009-2010-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரூ.5/3 லட்சம் பரிவுத்தொகை
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வண்ணம் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், ராய. சொக்கலிங்கனார், ச. அகத்தியலிங்கம், பாவலர் நா.ரா. நாச்சியப்பன், புலியூர் கேசிகன், சின்ன அண்ணாமலை, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பேராசிரியர் மு. ராகவையங்கார் ஆகிய 9 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.5 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்படும் என்றும்;

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், மு.சு. பூர்ணலிங்கம் பிள்ளை, தொ.மு. பாஸ்கர தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், வை.மு. கோதை நாயகி, பூவை எஸ். ஆறுமுகம், என்.வி. கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த. கோவேந்தன், திருக்குறள் மணி அ.க.நவநீதகிருட்டிணன் ஆகிய தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கப்படும் என்றும், முதல் அமைச்சர் கருணாநிதி இன்று (நேற்று) ஆணையிட்டுள்ளார்.

எஞ்சிய தமிழறிஞர்கள்
இந்த ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் படைப்புகள் அரசுடைமையாக்கப்படுமென அறிவிக்கப்பட்ட 28 தமிழறிஞர்களில் எஞ்சிய 7 தமிழறிஞர்களில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு. வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் இசைவு அளிக்கவில்லை. ஜே.ஆர்.ரங்கராஜூ, கே.ஆர்.ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜம் கிருஷ்ணன்
மேலும், சாகித்ய அகாடமி விருது மற்றும் தமிழக அரசின் விருது ஆகியவற்றை பெற்றுள்ள சிறந்த தமிழ் எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வேண்டுகோளை ஏற்று, தனி நேர்வாக கருதி அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத, காரணத்தால் அவருக்கு 3 லட்சம் பரிவுத் தொகை வழங்கிடவும் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணைகளின் பயனாக மொத்தம் 23 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு மொத்தம் 84 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது.


பூவை எஸ். ஆறுமுகம்

பூவை எஸ். ஆறுமுகம்

சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

பூவை எஸ். ஆறுமுகம் ஒரு சிறந்த எழுத்தாளர். பிறந்த ஊருக்குப் புகழ் ஊட்டியவர். “பூவை” என்ற சொல்லைத் தனது பெயருடன் இணைத்துக் கொண்டு, தமிழகத்திலும், தமிழகத்திற்கு அப்பாலும் ஊரின் பெயரை நிலை நாட்டியவர். பூவை ஊரில் மலர்ந்து, புகழ் பெற்ற எழுத்தாளராக வளர்ந்து, உமா, “பொன்னி, காதல் மனிதன் போன்ற தரமான பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் எழுத்துப் பணி மூலம் அண்ணா, கலைஞர், காமராசர் போன்ற அரசியல் தலைவர்களின் நட்பையும் பெற்றவர்.

பூவை ஆறுமுகம் 1927ம் வருஷம் ஜனவரி 31ம் தேதியன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தனது கல்வி முடிந்தவுடன், ஏலக்காய் வாரிய இணைப்புத் துறை அலுவலர் ஆகப் பதவி ஏற்றுக் கொண்டார். “ஏலக்காய்” ஏட்டின் துணை ஆசிரியர்.

சிறந்த கதாசிரியர், இருனூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும் எழுதித் தஞ்சை மண் வாசனையைப் பரப்பியவர். இவரது எழுத்தில் சமூக நீதியும், சமுதாய வளர்ச்சிக் கருத்துக்களும் நர்த்தனமாடும்.

இவர் எழுதிய மகுடி என்ற ஓரங்க நாடகம், ஆனந்த விகடனில் முதற்பரிசு பெற்ற நாடகம். கல்கி முதல் அகிலன் வரை என்ற இவரது திறனாய்வு நூல் வெகு சிறப்பானது. இவரது படைப்பான இன்னொரு கீதை தூரதர்ஷனில் பத்து வாரங்கள் ஒளி பரப்பப்பட்ட சிறந்த நாடகம். இதனால் இவருக்கு ஏற்பட்ட பெருமையை விட, இவரது சொந்த ஊரான பூவைக்கு ஏற்பட்ட பெருமைதான் அதிகம். தங்கச் சம்பா என்ற இவரது நாவல், வட்டார மணம் வீசும் வளமானதொன்று. ஐம்பது அறுபது எழுபதுகளில் யாவரும் போற்ற எழுதிக் குவித்தவர்.

தமிழக முதலமைச்சர்களாக இருந்த மாண்புமிகு எம்.பக்தவத்சலம், மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி, மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரிடம் தனது நாவல், நாடகம், சிறுகதைகளுக்காக தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர். ஒரே சமயம், நாடகம் மற்றும் நாவலுக்காக டாக்டர் எம்.ஜி.ஆரிடம் தமிழக அரசின் விருதுகளைப் பெற்ற ஒரே எழுத்தாளர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி ஆகிய இருவரையும் தனது கூண்டுக்கிளி என்ற திரைப் படத்தில் நடிக்க வைத்து, திரையுலக எழுத்தாளர் வரிசையிலும் இணைந்து முத்திரை பதித்தவர்.

இவரது சிறுகதைகள், நாவல்களுக்கென்று, சென்னை கன்னிமாரா நூலகத்தில், ஒரு தனி அலமாரியே அமைக்கப்பட்டுள்ளது.

இவரது படைப்புகள் :
சிறுகதைத் தொகுப்புகள்: கடல் முத்து, அமிர்தம், பூவையின் கதைகள், வேனில் விழா, அந்தித் தாமரை, இனிய கதைகள், திருமதி சிற்றம்பலம், தாய் வீட்டுச் சீர், அரண்மனைக் கோழிமுட்டை, சுட்டும் விழிச் சுடர் முதலானவை.
நாவல்கள்: ஒற்றை ரோஜாப்பூ, வாழும் காதல், ஜாதி ரோஜா, பத்தினித் தெய்வம், அன்னக்கிளி, பூமணம், தாய் மண், வசந்த பைரவி, நாத வீணை, நீ சிரித்த வேளை, மருதாணி நகம், சமுதாயம் ஒரு சைனா பஜார், கீழ் வானம், பத்தினிப் பெண் வேண்டும், நித்தியவல்லி, அக்கினி சாட்சி, அறம் வளர்த்த நாயகி, காதலிக்க ஒருத்தி, கற்பின் கொழுந்து, கரை மணலும் காகித ஓடமும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, மற்றும் பல.

தகவல் ஆதாரம்:
1. மது. ச. விமலானந்தம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு – 1987
2. ஆனந்த விகடன் தகவல் வங்கி – புகைப்படத்திற்கும், வரலாற்றுக் குறிப்பிற்கும், ஆனந்த விகடன் குழுவினருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி)

ஆர்வி: நான் இவர் எழுதிய எதையும் படித்ததில்லை. அதனால் எதுவும் சொல்வதற்கில்லை. கூண்டுக்கிளி படம் தயாரித்து இயக்கியது டி.ஆர். ராமண்ணா என்று நினைவு. கதை வசனம் விந்தன் என்று நினைக்கிறேன். இவரது பங்களிப்பு என்ன என்று தெரியவில்லை.


பட்ஜெட் உரையிலிருந்து:

117. With a view to ensuring that the views and thoughts of great Tamil Savants who dedicated their lives to the Tamil language, benefits not only the present but future generations also, the Tamil Nadu Government is implementing the scheme of nationalization of books of Tamil scholars. The books of 95 Tamil scholars have been nationalized by the State Government so far. Out of these, the works of 87 scholars have been nationalized by the DMK Government. After assuming charge by this Government in 2006 the works of 65 Tamil scholars including that of Parithimar Kalaignar, Pulavar Kuzhanthai, Muthamizh Kavalar K.A.P.Viswantham, Ilakkuvanar, Prof.Vellaivaranar, Dr.R.P.Sethupillai and Va. Suba. Manickam have been nationalised and solatium of Rs.4.86 crores have been given to their legal heirs. In continuation of this, this year books of 28 Tamil scholars namely Kuzhanthi Kavignar Ala.Valliappa, Kaviarasu Kannadhasan, Prof.Viayapuri Pillai, Pandithamani M.Kathiresan Chettiar, M.Raghavaiyangar, Pammal Sambandanar, A.Chidambaranathan Chettiar, M.S.Poornalingam Pillai, T.M.Baskara Thondaiman, Palur Kannappa Mudaliar, Raya.Chockalinganar, Dr.M.Varadharajanar, Dr.S.Akathiyalingam, Pavalar N.R.Natchiappan, Puliyur Kesikan, Writer Chandilyan, Writer V.M.Kothainayaki, Chinna Annamalai, Poovai S.Arumugam, N.V.Kalaimani, Kavingnar Murugusundaram, Pulavar T.Kovendan, Writer Sundara Ramasamy, Tirukural Mani, A.K.Navaneetha Krishnan, Lakshmi, Vaduvoor Duriasamy Iyengar, Jamathagni and J.R.Rangaraju will be nationalised and solatium will be given to their legal heirs having regard to the number of books written by them, their social impact and their literary value.

ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் பெயர்களில் ஒரு அச்சுப்பிழை இருக்கிறது என்று நினைக்கிறோம். ஏனென்றால் 28 பேர் என்று சொல்லிவிட்டு 29 பெயர்கள் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. திருக்குறள் மணி என்பது அ.க.நவநீதகிருஷ்ணனின் பட்டப் பெயர் என்பது எங்கள் யூகம். மேலும் விவரங்களுக்கு அ.க. நவநீதகிருஷ்ணன் பற்றிய குறிப்பை பார்க்கவும்.

இதை பற்றி நான் முதலில் எழுதுவதாக இல்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்தான் எழுத்தாளர்களின் முழு லிஸ்ட் கிடைத்தது. ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியவர்களின் பேரை இந்த லிஸ்டில் கண்டு அசந்தேன். இவர்கள் இருவரும் அந்த காலத்து ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரி. ஒரு காலத்தில் பிரபலமானவர்கள்தான், ஆனால் இவர்கள் எழுத்து வருங்கால சந்ததியருக்காக காப்பாற்றப்பட வேண்டியது என்றோ, இலக்கியத் தரம் வாய்ந்தது என்றோ சொல்லிவிட முடியாது. அவர்கள் புத்தகம் கிடைத்தால் நான் வாங்குவேன். எனக்கு புத்தகப் பித்து. அதற்காக வரிப் பணத்தை செலவழிக்க வேண்டுமா என்ன? இந்த எழுத்தாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வேண்டும். சின்ன வயதில் கலைஞர் விரும்பிப் படித்த எழுத்தாளர்கள் எழுதியது நாட்டுடமை என்ற நிலை தவறு. அப்புறம் நான் நாளைக்கு முதலமைச்சரானால் முத்து காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ ஆகியோரின் சாகசங்கள் நாட்டுடமை ஆகும்.

அதற்காக நான் எழுத்துகளை நாட்டுடமை ஆக்குவது தவறு என்று சொல்லவில்லை. எழுத்துக்கள் நாட்டுடமை ஆவது புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் அல்ல, எல்லாருக்குமே நல்ல விஷயம். அந்த எழுத்தாளர்களுக்கோ, அவர்கள் வாரிசுகளுக்கோ ஓரளவு பணம் கிடைக்கிறது. மறந்து போகப்பட்ட புத்தகங்கள் மீண்டும் தெரிய வர ஓரளவு வாய்ப்பு இருக்கிறது.

இந்த வருஷம் சுந்தர ராமசாமி, கண்ணதாசன் ஆகியவர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆனதாகவும், அவர்கள் வாரிசுகள் சம்மதிக்காததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் படித்தேன். முதலில் கேட்டுவிட்டு பிறகு நாட்டுடமை திட்டத்தை அறிவித்திருக்கலாம். அறிவித்துவிட்டு விட்டு பிறகு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது take it for granted mentality. ஆனால் சின்ன விஷயம், எதிர்காலத்தில் சுலபமாக தவிர்க்கலாம். தவிர்ப்பார்கள் என்று நம்புவோம்.

ஒரு பெரிய விஷயமும் உண்டு. நாட்டுடமை ஆக்கிவிட்டு யாராவது புத்தகங்களை போடுவார்கள் என்று அரசு உட்கார்ந்திருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒரு செம்பதிப்பு கொண்டு வரப் பட வேண்டும். ஏதோ தமிழ் பல்கலை கழகம் எல்லாம் இருக்கிறதாம், அங்கெல்லாம் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாமே? இல்லை என்றால் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் எழுதியவற்றை எல்லாம் யாரும் பதிக்கப் போவதில்லை.

சில கேள்விகள் இருக்கின்றன. இது வரை எத்தனை எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆகி இருக்கிறது? யாரிடமாவது லிஸ்ட் இருக்கிறதா? இல்லை என்றால் உள்ளூர் ஆள் யாராவது இதை Right to information act மூலம் தெரிந்து சொல்ல முடியுமா? இதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏதாவது விதிமுறைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றனவா இல்லையா?

ராஜம் கிருஷ்ணன் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கள ஆய்வு செய்து புத்தகம் எழுதுவது இவருடைய தனி சிறப்பு. வேருக்கு நீர் புத்தகம் சாஹித்ய அகாடெமி பரிசு பெற்றது. மணலூர் மணியம்மையை பற்றி எழுதிய பாதையில் பதிந்த அடிகள் ஒரு முக்கியமான ஆவணம். குறிஞ்சித்தேன் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த வருஷ லிஸ்டில் எனக்கு தெரிந்தவர்களை பற்றி சிறு குறிப்புகள் கீழே. மற்றவர்களை பற்றி தெரிந்தவர்கள் சொல்லவும். இவர்களை தெரிந்து கொள்வது நல்ல விஷயம்தானே!

முனைவர் ச. அகத்தியலிங்கம் யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். தமிழ் விக்கிபீடியா குறிப்பு இங்கே

சின்ன அண்ணாமலை – சுதந்திர போராட்ட வீரர். ஐம்பதுகளில் ஒரு பதிப்பகம் வைத்து பல நல்ல நூல்களை வெளியிட்டார் என்று ஞாபகம். ஒரு காலத்தில் காமராஜருக்கு துணை. சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரோ? தலைவர். இவர் எழுதி நான் அதிகமாக படித்ததில்லை. அதனால் இந்த தேர்வை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. சின்ன அண்ணாமலையை பற்றி சேதுராமன் அவர்கள் ஒரு guest post எழுதி இருக்கிறார். இங்கே அவர் பேரை க்ளிக் செய்தால் அந்த கட்டுரையை படிக்கலாம்.

பூவை எஸ். ஆறுமுகம் – ஏதோ சில சிறுவர் கவிதைகள் படித்த ஞாபகம் இருக்கிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. ேரை க்ளிக் செய்தால் சேதுராமன் எழுதிய guest postஐ படிக்கலாம்.

கண்ணதாசன் – கண்ணதாசனின் சினிமா பாட்டுகள் பிடிக்கும். நாட்டுடமை அவரது சினிமா பாட்டுகளை பாதிக்காது என்று நினைக்கிறேன். அவர் எழுதிய கதைகள், காவியங்கள் எல்லாம் நல்ல இலக்கியம் இல்லை. அர்த்தமுள்ள இந்து மதம் இன்னும் விற்கிறது. அதனால் காந்தி கண்ணதாசன் எதிர்க்கிறார். இது புரிந்து கொள்ளக் கூடியதே. மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் விக்கிபீடியாவில் உள்ளதை காணலாம்.

பாலூர் கண்ணப்ப முதலியார் – டோண்டு ராகவன் இவர் சென்னை நியூ காலேஜ் தமிழ் துறை தலைவராக இருந்தவர் என்று தெரிவிக்கிறார். பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – பெரும் தமிழ் பண்டிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எதுவும் படித்ததில்லை. இவர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டது நல்ல தெரிவு என்றுதான் தோன்றுகிறது. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி சேதுராமன் எழுதிய குறிப்புகளை காணலாம். இவரை பற்றிய ஒரு திண்ணை தளக் கட்டுரையை இங்கே காணலாம்.

என்.வி. கலைமணியாரென்று தெரியாது. இவரைப் பற்றி சேதுராமன் அவர்கள் ஒரு guest post எழுதி இருக்கிறார். இங்கே அவர் பேரை க்ளிக் செய்தால் அந்த கட்டுரையை படிக்கலாம்.

புலியூர் கேசிகன்எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறது, ஆனால் யாரென்று தெரியவில்லை. பல சங்க, பிற்கால இலக்கியங்களுக்கு உரை எழுதி இருக்கிறாராம். லிஃப்கோ இவரது புத்தகங்களை பதித்தது என்று நினைவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

வை.மு. கோதைநாயகி – இவர் அந்த காலத்து பெண்ணிய எழுத்தாளரோ? எழுத்தாளர். சரியாக நினைவில்லை, ஆனால் நல்ல தெரிவு என்று தோன்றுகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். இவரை பற்றி குமுதத்தில் வந்த ஒரு கட்டுரை இங்கே.

புலவர் த. கோவேந்தன்யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். கோவேந்தனும் நாச்சியப்பனும் பாரதிதாசன் பரம்பரையை சேர்ந்த கவிஞர்கள். பாரதிதாசன் பரம்பரை பற்றி மு. இளங்கோவன் எழுதிய ஒரு கட்டுரை இங்கே. கோவேந்தன் நடத்திய வானம்பாடி பற்றிய விவரங்கள் இங்கே. இதுவும் இளங்கோவன் எழுதிய பதிவு.

பம்மல் சம்பந்த முதலியார் – நல்ல தெரிவு. தாமதமான தெரிவு. யாராவது மனோகரா நாடகத்தை பதியுங்கள்! (சங்கரதாஸ் ஸ்வாமிகளின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆகிவிட்டனவா?). பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை படிக்கலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே.

சாண்டில்யன் – தவறான தெரிவு. சாண்டில்யன் ஒரு டைம் பாஸ் எழுத்தாளர். நல்ல எழுத்தாளர் இல்லை. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை படிக்கலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே. சாண்டில்யனை பற்றி ஒரு அலசல் இங்கே.

அ. சிதம்பரநாதன் செட்டியார் யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

சுந்தர ராமசாமி – தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். நல்ல தெரிவு. இன்னும் மார்க்கெட் உள்ள எழுத்தாளர். காலச்சுவடு கண்ணன் இதை எதிர்ப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.

ராய. சொக்கலிங்கம்யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. ராய. சொ. சுதந்திர போராட்ட வீரர். மரபுக் கவிஞர். ஊழியன் என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். இவருக்கு வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியிவர்கள் உதவி ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். விவரங்களை சிரமப்பட்டு தேடிய சேதுராமனுக்கும, அவருக்கு விவரங்களை கொடுத்து உதவிய காரைக்குடி சித. ராயப்ப செட்டியாருக்கும் நன்றி! விரைவிலேயே சேதுராமன் ராய.சொ. பற்றி ஒரு guest post எழுதி இருக்கிறார். பேரை க்ளிக் செய்தால் அந்த guest post-ஐ படிக்கலாம்.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் – 1920-களின் ராஜேஷ் குமார். மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

திருக்குறள் மணி அ.க. நவநீதகிருஷ்ணன்யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். பட்ஜெட் உரையில் ஒரு கமா தவறாக பிரிண்ட் ஆகிவிட்டது போலிருக்கிறது. அதனால் திருக்குறள் மணி அ.க. நவநீதகிருஷ்ணன் என்று படிக்காமல், திருக்குறள் மணி, நவநீதகிருஷ்ணன் என்று படித்து குழப்பம். திருக்குறள் மணி என்பது இவரது பட்டப் பெயர் போல. திருக்குறளை கரைத்துக் குடித்த மாமணி என்று யாராவது பட்டம் கொடுத்திருப்பார்கள். பட்ஜெட் உரையை படித்தால் திருக்குறள் என்பது மணி என்பவரின் அடைமொழி போல தெரியும். சேதுராமன்தான் முதலில் இதை யூகித்தது. பிறகு தமிழம்.நெட் தளமும் இதை உறுதி செய்வதை பார்த்தேன்.

திருக்குறள் மணி – யாரென்று தெரியாது. இவர்தான் அ.க. நவநீத கிருஷ்ணன் என்று சேதுராமன் நினைக்கிறார். பட்ஜெட்டில் 28 பேர் எழுத்துகளை நாட்டுடமை செய்கிறோம் என்று சொல்லிவிட்டு 29 பேர் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அதனால் திருக்குறள் மணி என்பது பட்டப் பெயராக இருக்கலாமோ என்று சந்தேகம்.

பாவலர் நா.ரா. நாச்சியப்பன் – இவர் பேர் ஊடகங்களில் வந்த லிஸ்டில் விட்டுப் போய்விட்டது. பட்ஜெட் அறிக்கையில் இவர் பேர் இருக்கிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம். நாச்சியப்பனும் கோவேந்தனும் பாரதிதாசன் பரம்பரையை சேர்ந்த கவிஞர்கள். பாரதிதாசன் பரம்பரை பற்றி மு. இளங்கோவன் எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்யாரென்று தெரியாது. இவரும் ஒரு தமிழறிஞர் என்று சேதுராமன் சொல்வதிலிருந்து தெரிகிறது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

மு.சு. பூரணலிங்கம் பிள்ளையாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

கவிஞர் முருகுசுந்தரம்யாரென்று தெரியாது. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி சேதுராமன் எழுதிய போஸ்டை காணலாம். காலச்சுவட்டில் வந்த கட்டுரை ஒன்று இவரது படைப்புகளை பற்றி அருமையாக ஆய்வு செய்கிறது.

ஜே.ஆர். ரங்கராஜு– 1910-களின் ராஜேஷ் குமார். மோசமான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

மு. ராகவையங்கார் – தமிழ் பண்டிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் எழுத்துகளை படித்திருக்காவிட்டாலும் சரியான தெரிவு என்றுதான் நினைக்கிறேன். சேதுராமன் அவர்கள் இவரைப் பற்றி விவரங்கள் சேகரித்து ஒரு guest post எழுதி இருக்கிறார். பேரை க்ளிக் செய்தால் அதை படிக்கலாம். ராகவையங்கார் பற்றிய விக்கி குறிப்பு இங்கே.

லக்ஷ்மி – அந்த கால(1950 onwards), கொஞ்சம் நன்றாக எழுதக் கூடிய ரமணி சந்திரன். தவறான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவர் பற்றி சேதுராமன் எழுதிய guest postஐ காணலாம்.

மு.வ. – மு.வ. தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் ஒரு கால கட்டத்தின் லட்சியங்களை நன்றாக எழுத்தில் கொண்டு வந்தவர். இவர் எழுதிய மொழி நூலோ, மொழி வரலாறோ ஏதோ ஒன்று மிக நல்ல புத்தகம். மொழி எப்படி உருவாகிறது என்பதை மிக அருமையாக ஒரு layman-க்கு விளக்கும். (ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும்.) இந்த தெரிவு சரிதான். பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை காணலாம். விக்கிபீடியா குறிப்பு இங்கே.

அழ. வள்ளியப்பா– குழந்தை கவிஞர். என் சிறு வயதில் இவரது பாட்டுகளை படித்திருக்கிறேன். சிறுவர்களுக்காக எழுதுபவர்கள் குறைவு. அதனால் இது சரியான தெரிவு. பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றிய போஸ்டை காணலாம். இவரை பற்றி விக்கிபீடியாவில் உள்ளது இங்கே.

வையாபுரிப் பிள்ளை – தாமதமான தெரிவு. எப்போதோ செய்திருக்க வேண்டும். பேரை க்ளிக் செய்தால் இவரை பற்றி விக்கிபீடியாவில் உள்ளதை காணலாம். சேதுராமனின் guest post இங்கே. அவரை பற்றிய சில சர்ச்சைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

கே.ஆர். ஜமதக்னியாரென்று தெரியாது. இவரை பற்றி சேதுராமனின் guest postஐ பேரை க்ளிக் செய்தால் படிக்கலாம்.

இங்கே உள்ள அநேக எழுத்தாளர்களை சேதுராமன்தான் அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய concluding remarks.