நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

இது வேண்டாம் என்று சொல்லிவிட்டவர்கள், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது, ராஜம் கிருஷ்ணனை புதிதாக லிஸ்டில் சேர்த்தது என்று விவரங்களை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதை பற்றி சேதுராமனும் ஒரு மறுமொழியில் குறிப்பிட்டிருந்தார்.

23 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களது மரபுரிமையாளர்களுக்கு ரூ.84 லட்சம் பரிவுத்தொகை வழங்க முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அரசின் செய்தி குறிப்பு கீழே:

4.86 கோடி பரிவுத்தொகை
சிறந்த தமிழறிஞர்களின் நூல்கள் அனைவரையும் சென்றடைதல் வேண்டும் எனும் சீரிய நோக்கில் அந்நூல்களை நாட்டுடைமையாக்கி, அவற்றை படைத்த தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்குப் பரிவுத் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2006-ல் இந்த அரசு பொறுப்பேற்றபின் பரிதிமாற் கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முதலான 65 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு ரூ.4 கோடியே 86 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2009-2010-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரூ.5/3 லட்சம் பரிவுத்தொகை
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வண்ணம் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், ராய. சொக்கலிங்கனார், ச. அகத்தியலிங்கம், பாவலர் நா.ரா. நாச்சியப்பன், புலியூர் கேசிகன், சின்ன அண்ணாமலை, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பேராசிரியர் மு. ராகவையங்கார் ஆகிய 9 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.5 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்படும் என்றும்;

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், மு.சு. பூர்ணலிங்கம் பிள்ளை, தொ.மு. பாஸ்கர தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், வை.மு. கோதை நாயகி, பூவை எஸ். ஆறுமுகம், என்.வி. கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த. கோவேந்தன், திருக்குறள் மணி அ.க.நவநீதகிருட்டிணன் ஆகிய தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கப்படும் என்றும், முதல் அமைச்சர் கருணாநிதி இன்று (நேற்று) ஆணையிட்டுள்ளார்.

எஞ்சிய தமிழறிஞர்கள்
இந்த ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் படைப்புகள் அரசுடைமையாக்கப்படுமென அறிவிக்கப்பட்ட 28 தமிழறிஞர்களில் எஞ்சிய 7 தமிழறிஞர்களில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு. வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் இசைவு அளிக்கவில்லை. ஜே.ஆர்.ரங்கராஜூ, கே.ஆர்.ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜம் கிருஷ்ணன்
மேலும், சாகித்ய அகாடமி விருது மற்றும் தமிழக அரசின் விருது ஆகியவற்றை பெற்றுள்ள சிறந்த தமிழ் எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வேண்டுகோளை ஏற்று, தனி நேர்வாக கருதி அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத, காரணத்தால் அவருக்கு 3 லட்சம் பரிவுத் தொகை வழங்கிடவும் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணைகளின் பயனாக மொத்தம் 23 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு மொத்தம் 84 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது.

Advertisements

இதுவும் சேதுராமன் எழுதிய guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

திருநெல்வேலி மாவட்டத்திலே, அம்பாசமுத்திரத்துக்கு அருகிலுள்ள ஊர்க்காடு என்னும் சிற்றூரில் பிறந்தவர் நவநீத கிருஷ்ணன். இவர் தந்தையார் அங்குள்ள குறுநிலமன்னரின் அவைக்களப் புலவராக விளங்கியிருந்த ‘அரசவரகவி’ அங்கப்ப பிள்ளையென்பவர். அவருடைய மக்கள் மூவரில், நடுவர் தான் கங்காதர நவநீத கிருஷ்ணன்.

அ.க.ந. பள்ளிக் கல்வியைக் கற்று முடித்தபின் புலமைக் கல்வியும் கற்றுச் சிறப்படைய விரும்பியதால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். கல்வி கற்கும்போதே செய்யுள் பாடவும், இயற்றவும் கட்டுரைகள் எழுதவும் வல்லவரானார். இவர் கல்வி பயிலும்போது நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும், அண்ணாமலையில் கல்வி பயின்று கொண்டிருந்தனர். அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய நன்மதிப்பையும் பெற்றவர் நவநீத கிருஷ்ணன்.

புலவர் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற பிறகு, திண்டுக்கல் புனித சூசையப்பர் மகளிர் உயர் நிலைப்பள்ளியில் ஈராண்டுகள் பணி புரிந்தார். சிவகாசி மகாராஜ பிள்ளை அவர்களின் ஒரே மகளான பிச்சம்மாள் என்பவரை மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். திருமணமான பிறகு, பாளையங்கோட்டையில் குடியேறி நெல்லையில் பணி புரியலானார். மந்திரமூர்த்தி உயர் நிலைப் பள்ளியில் ஒன்பது ஆண்டுகளும், பின்னர் மதுரை திரவியம் தாயுமானார் இந்து கலாசாலைப் பள்ளியில் பதினைந்து ஆண்டுகளும் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

தமிழ்ப் பணியோடு சிவப் பணியையும் இடையிடையே செய்து வந்ததால், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் இவருடைய புலமையைப் பயன்படுத்தத் தொடங்கினர். காலத்துக்கு வேண்டியவாறு நூல்களை எழுதிப் பொருளும் புகழும் பெற்றார். திருக்குறளைப் பலருக்கும் போதித்ததோடு “வள்ளுவர் சொல்லமுதம்” என்னும் நூலையும் (நான்கு பகுதிகள்) எழுதினார். திருவள்ளுவர் கழகத்திற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் தலைவராக இருந்தவர், நெல்லையப்பர் கோயிலிலும் ஈராண்டுகள் திருக்குறள் விரிவுரையாற்றினார்.

இவரது தமிழ்த் தொண்டையும், சிவத் தொண்டையும் பாராட்டிய மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் இவருக்கு “தமிழ்க் கொண்டல்” என்ற சிறப்புப் பெயரையும், தருமபுரம் ஆதீனம் “செஞ்சொற்புலவர்” என்ற பெயரையும் வழங்கினர்.

1967ம் வருடம் சித்திரை முதல் தேதியன்று, கைத்தொழில் பொருட்காட்சியில் செய்யும் தொழிலின் ஏற்றத்தைப் பற்றி நெசவாளர்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியபின் இல்லத்தை அடைந்தவர் திடீரென்று காலமானார்.

இவர் இயற்றிய நூல்களின் பட்டியல் வருமாறு:
1. காவியம் செய்த மூவர்
2. இலக்கியத் தூதர்
3. கோப்பெருந்தேவியர் மூவர்
4. இலக்கிய அமைச்சர்கள்
5. அறநூல் தந்த அறிவாளர்
6. தமிழ் காத்த தலைவர்கள்
7. முதல் குடியரசுத் தலைவர்
8. முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
9. தமிழ் வளர்ந்த கதை
10. ஔவையார் கதை (வில்லுப் பாட்டு)
11. திருவள்ளுவர் கதை (வில்லுப் பாட்டு)
12. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை
13. டாக்டர் சேதுப் பிள்ளை
14. வள்ளுவர் சொல்லமுதம் (நான்கு பகுதிகள்)
15. அடுக்கு மொழி ஆவுடையப்பர் வரலாறு

(தகவல் நன்றி — தமிழ்ப் புலவர் வரிசை பத்தாம் பகுதி — ஆசிரியர் சு.அ. இராமசாமிப் புலவர் — பதிப்பாளர் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்- சென்னை. 1973)

ஆர்வி: சேதுராமன் இவர்தான் திருக்குறள் மணியோ என்று யூகிக்கிறார். வழக்கம் போல எனக்கு ஒன்றும் பிரமாத விஷயமாக தெரியவில்லை. ஒரு வேளை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் நண்பர் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ?