ஆலயப் பிரவேசப் புகழ் வைத்யநாத ஐயர் பற்றி முன்னாள் அமைச்சர் கக்கன் எழுதியதை எங்கே பார்த்தேன் என்று கூட நினைவில்லை. ஆனால் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
வைத்யநாத ஐயர் அந்தக் கால காங்கிரஸ்காரர். 1939-இல் அவர் ஆறு “தாழ்ந்த” ஜாதிக்காரர்களை அழைத்துக்கொண்டு போய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்தார். அந்த ஆறு பேரில் கக்கனும் ஒருவர். ஆறு பேரில் ஐந்து பேர் தலித்கள், ஒருவர் சாணார். (சாணாரும் நாடாரும் ஒன்றுதானா?) வைத்யநாத ஐயருக்கு இதனால் கடும் எதிர்ப்பு. அடி உதை கூட விழுந்ததோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சண்டாளர்களை கோவிலுக்கு கூட்டிப் போய் கோவிலின் புனிததத்தை கெடுத்தானே பாவி என்று கும்மிப்பாட்டு எல்லாம் எழுதி அமோகமாக விற்றிருக்கிறதாம். இன்றைக்கு ஃப்ளெக்ஸ் போர்டு மாதிரி அன்றைக்கு கும்மிப்பாட்டு போலிருக்கிறது!
ஐயர் 1890-இல் பிறந்தவர். உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு ஜெயிலுக்கு போனவர். உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் போலீஸ் அவரை அடித்து துவைத்துவிட்டார்களாம். குடுமி, பூணூல், பஞ்சகச்சம் என்று இருப்பாராம். காமராஜ்-ராஜாஜி கோஷ்டிகள் என்று தமிழக காங்கிரஸ் இருந்தபோது இவர் ராஜாஜி கோஷ்டி. காங்கிரசிலிருந்து விலகி இருந்த ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வர விரும்பியபோது அதற்காக தீவிரமாக பாடுபட்டு காமராஜோடு சண்டை போட்டு இதை சாதித்தவர்களில் இவரும் ம.பொ.சி.யும் முக்கியமானவர்கள்.
எந்தப் பதவியும் – எம்.எல்.ஏ., எம்.பி. என்று – வகித்த மாதிரி தெரியவில்லை. கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளை கக்கனுக்கு விட்டுக் கொடுத்தாரோ என்னவோ. கக்கனுக்கும் இவருக்கும் அப்பா-பிள்ளை போன்ற உறவு இருந்திருக்கிறது. ஹரிஜன ஜாதியில் பிறந்த கக்கன்தான் இவருக்கு இறுதி சடங்குகளையே செய்தாராம்!
உண்மையிலேயே ஜாதி பார்க்காதவர் போலிருக்கிறது. முப்பதுகளிலேயே வீட்டு சமையல் அறையில் ஹரிஜன்கள் சாதாரணமாக புழங்கினார்கள் என்று கக்கன் சொல்கிறார். ஆச்சரியமான விஷயம். எழுபதுகளில் கூட சமையல் அறை மடி ஆசாரம், அங்கே பிற ஜாதியினர் வரக்கூடாது என்று சொல்லும் பிராமணக் குடும்பங்களை பார்த்திருக்கிறேன்.
ஓவர் டு கக்கன்!
அரிஜனங்களின் தந்தை
பி.கக்கன்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம். பெரியவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். மதுரையின் வீதிதோறும் கூட்டம் போட்டு, அரிஜன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசினார்கள். ”அரிஜனங்கள் ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டால் இந்து மத தர்மமே சீர்குலைந்து போய்விடும்; அதனால் அவர்களை ஆலயப் பிரவேசம் செய்ய அனுமதிக்கக்கூடாது; அதுவும், வைத்தியநாதய்யர் போன்ற ஒரு ஜாதி இந்துவின் தலைமையில் அந்தக் காரியம் நடக்க அனுமதிக்கவே கூடாது” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்கெல்லாம் உள்ளூர சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆலயப் பிரவேச தினத்தன்று எங்கே பெரிய சச்சரவும், தகராறும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் வைத்தியநாதய்யரோ, அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.
குறிப்பிட்ட தினத்தன்று ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்தது.
தெய்வாதீனமாக எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை. ஆலயப் பிரவேசம் முடிந்து அனைவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது, வழியில் நின்றிருந்த ஒரு பெரியவர் வைத்தியநாதய்யரைப் பார்த்து, ”நீர்தான் அரிஜனாகிவிட்டீரே! உமக்குப் பூணூல் எதற்கு?” என்று சத்தம் போட்டுக் கோபமாகக் கூறினார்.
ஐயர் அவர்கள் ஒன்றுமே பேசாமல் சிரித்துக்கொண்டார்.
முப்பது, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, ஜாதிக் கொடுமை தீவிரமாக இருந்த நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே வைத்தியநாதய்யர் வீட்டுக்குள் அரிஜனங்கள் சர்வ சுதந்திரமாகப் போய் வரமுடியும். வீட்டுச் சமையலறை வரையில் கூட சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.
அவரைப் போல்தான் அவரது மனைவியாரும், அரிஜன மக்களின் நன்மைக்காக உழைத்தவர்.
அய்யரிடம் பண உதவியும், மற்ற உதவிகளும் பெற்றுப் படித்த அரிஜன மக்களில் பலர் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள். நான் பொதுப் பணியில் ஈடுபட்டு, பிற்பாடு அரசியல் உலகத்துக்கு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரே வைத்தியநாதய்யர் அவர்கள்தான்.
அரிஜன சேவையை விட வைத்தியநாதய்யருக்குப் பிடித்த பொதுச் சேவை வேறு எதுவும் இல்லை. அதனால்தான் அவரை ‘அரிஜனங்களின் தந்தை’ என்று போற்றுகிறார் கள்.
அவர் மறைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்யக்கூடிய இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.
கக்கன் இன்றும் நேர்மையான அரசியல்வாதிக்கு உதாரணமாகச் சொல்லப்படுபவர். காங்கிரஸ் காலத்தில் மந்திரியாக இருந்தவர். இறக்கும்போது வசதிக் குறைவினால் அரசு மருத்துவமனையில்தான் அட்மிட் செய்தார்கள். எம்.பி., மந்திரி, எதிர்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ. என்று பல பதவிகள் வகித்த பின்னும் இந்த நிலை!
இது கக்கனின் நூற்றாண்டு. இவர், ஐயர் போன்றவர்களுக்கு ஒரு unbiased biography வந்தால் நன்றாக இருக்கும். unbiased ஆக இருப்பது முக்கியம். உதாரணமாக கக்கன் நேர்மையான அரசியல்வாதி, சரி. நல்ல நிர்வாகியா? அவரை ஒரு டோக்கன் ஹரிஜனாக காங்கிரசில் வைத்திருந்தார்களா? இதற்கெல்லாம் உண்மையான பதில் அதில் இருப்பது அவசியம். நம்மூரில் biography என்றால் புகழ்ந்து எழுத வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது!
கக்கன், ஐயர் இருவருக்கும் அரசு தபால் தலை வெளியிட்டிருக்கிறது.
பிற்சேர்க்கை: எழுத்தாளர் இரா. முருகன் தந்த தகவல் – திரு வைத்தியநாதய்யரின் மகளும் மருமகன் திரு ஸ்தாணுநாதனும் சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் எங்கள் பலமாடிக் குடியிருப்பில் இருந்தார்கள். எளிமையான நல்ல மனதுக்காரர்கள். திரு.ஸ்தாணுநாதன் ரயில்வே போர்ட் அங்கத்தினராகவும் அதற்கு முன் மத்திய ரயில்வேயில் உயர்ந்த பதவியிலும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் இவர்கள் சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்தியாலத்தை நிர்வகித்து வருகிறார்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய சுட்டிகள்:
வைத்யநாத ஐயர் பற்றிய விக்கி குறிப்பு
கக்கன் பற்றிய விக்கி குறிப்பு
ஜூன் 19, 2010 at 1:28 மு.பகல்
அவர் வகித்தது உள்துறை.CS ,பக்தவத்சலம்,RV போன்றவர்களுக்கு கிடைக்காத துறை,மது விலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை சிறப்பாக கையாண்டார். உறுதியாக சொல்வேன் அவர் dummy அல்ல.1967 க்கு அப்புறம் முதல்வர் தான் உள்துறை (போலீஸ்) அமைச்சர் என்பது எழுதப்படாத சட்டம்.
ஜூன் 19, 2010 at 1:46 மு.பகல்
நல்ல பதிவு. திரு வைத்தியநாதய்யரின் மகளும் மருமகன் திரு ஸ்தாணுநாதனும் சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் எங்கள் பலமாடிக் குடியிருப்பில் இருந்தார்கள். எளிமையான நல்ல மனதுக்காரர்கள். திரு.ஸ்தாணுநாதன் ரயில்வே போர்ட் அங்கத்தினராகவும் அதற்கு முன் மத்திய ரயில்வேயில் உயர்ந்த பதவியிலும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் இவர்கள் சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்தியாலத்தை நிர்வகித்து வருகிறார்கள்.
ஜூன் 19, 2010 at 1:59 மு.பகல்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று அலிப்பூர் சிறையில் கொடும் அடக்குமுறையை அனுபவித்தவர். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர்.
1957-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக, காமராஜர் அமைச்சரவையில் பொறுப்பேற்றார். 1963 முதல் 1967 வரை சென்னை மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர். விவசாயம், ஆதி திராவிடர் நலத்துறை என பல துறைகளின் பொறுப்பு இவர் வசம் இருந்துள்ளது.
வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில் பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமை கக்கனுக்கு உண்டு.
மெரினாவில் இந்துக் கடவுள்களின் சிலைகளை, தனது எச்சரிக்கையையும் மீறி, தந்தை பெரியார் எரித்த போது, சற்றும் தயங்காமல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தவர் கக்கன். தனிப்பட்ட தலைவர்களை விட சட்டம் – ஒழுங்கு முக்கியம் என செயல்பட்ட அவரை பின்னர் அதே பெரியார் பாராட்டியுள்ளார்.
ஜூன் 19, 2010 at 2:41 மு.பகல்
கக்கன் சென்ற ஒரே வெளிநாடு சீனா மட்டுமே. சீனாவிற்குச் சென்றிருந்த சமயம் சூயன்லாய் அவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.
கக்கன், சுதந்திரப் போராட்ட தியாகியான வைத்தியநாதய்யர் வீட்டில் ஊழியராக இருந்து அடுப்படி வரையில் சகல வேலைகளையும் செய்து வந்தார்.
தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவுமிருந்த கக்கன் எந்த விதத்திலும் கறைபடாதவர்.
கக்கனுக்குப் பிறகு எந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகனுக்கும் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய பொறுப்புகள் இன்று வரை வழங்கப்படவில்லை.
1975-இல் காமராஜர் இறந்த பிறகு அரசியலை விட்டு கக்கன் விலகிவிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கிருஷ்ணபுரத்தில் ரூபாய் 110 மாத வாடகையில் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தார். எங்கு சென்றாலும் பேருந்துக்காக கால் கடுக்க நின்றிருப்பார். நான்கு முழம் கதர் வேட்டியும் கதர் சட்டையுமே அணிவார். சாதாரண ஏழை சாப்பிடும் உணவையே அவர் சாப்பிடுவார். அமைச்சராய் இருந்தபோது தன்னுடைய சம்பளம் போதாமல், மாதக் கடைசியில் தன்னிடம் வேலைப் பார்க்கும் செயலாளரிடம் கடன் வாங்குவாராம்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது, தமிழக அரசு கக்கனுக்கு இலவச வீடும் பேருந்தில் செல்ல இலவசப் பயணச் சீட்டும், இலவச மருத்துவச் சலுகையும் மாதம் 500 ரூபாய் ஓய்வு ஊதியமும் கொடுத்தது.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த கக்கனைப் பார்த்து உடல் நலன் விசாரித்தார். உடனே கக்கனுக்கு தனியறை வசதியும், தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பதவியினால் கிடைத்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி எந்தத் தவறும் செய்ததில்லை. தன்னுடைய இனத்தைக்கூட தனக்காக எந்த விதத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை, சுரண்டியதுமில்லை. இப்படி ஒருவர் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தாரா என்று ஆச்சர்யப்பட வைத்த மாமனிதர் அவர்.
ஒருமுறை கக்கனின் சம்பந்தி முதன் முதலில் கக்கனின் வீட்டிற்கு வந்திருக்கிறார். எங்கே இவர் தன்னுடைய வீட்டில் தங்கிவிடுவாரோ என்று அஞ்சி அவரிடம் கக்கன் நான் அமைச்சராக இருப்பதால், அரசாங்கத்தில் எனக்குக் கொடுத்த வீடு இது. எனவே நீங்கள் இங்கு தங்கக் கூடாது. வேறு எங்கேயாவது தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த நேர்மையும் கறைபடாத தன்மையும்தான் அவரை உயர்ந்தோர்க்கெல்லாம் உயர்ந்தவராக்கியது.
ஜூன் 19, 2010 at 2:45 மு.பகல்
விஜயன், தகவலுக்கு நன்றி! பாலஹனுமானும் அவர் பெரியாரின் ஏதோ ஊர்வலத்தில் சிறப்பாக சட்டம் ஒழுங்கை கையாண்டதை குறிப்பிடுகிறார்.
இரா. முருகன், இந்தத் தளம் உங்கள் கண்ணில் பட்டது பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கருத்தில் ஐயர், கக்கன் போன்ற பல “இரண்டாம் நிலை” தலைவர்களின் தியாகங்களை நாம் மறந்தே போய்விட்டோம். அதனால் எங்காவது கண்ணில் படும்போது இரண்டு வார்த்தையாவது எழுதுவது என்று வைத்திருக்கிறேன். உங்களிடம் பர்சனலாக ஒரு கேள்வி. உங்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் ஏனோ கை வரவில்லை. ஒரு வாசகனுக்கு முதல் புத்தகமாக எதை சிபாரிசு செய்வீர்கள்? எதையாவது சிபாரிசு செய்வீர்களா?
அப்புறம் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏதாவது வந்திருக்கிறதா? (இது என் வடநாட்டு நண்பனுக்காக…)
ஜூன் 19, 2010 at 4:39 பிற்பகல்
ஆர் வி
வைத்யநாதைய்யர், கக்கன் ஆகியோர் நினைவுப் பகிர்வுகளுக்கு நன்றி. ஸ்ரீநிவாஸ் கக்கன் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
வரும் சனிக்கிழமை ஜூன் 26 அன்று மாலை 2-5 வரை மில்ப்பிட்டாஸ் ஸ்வாகத் ஹோட்டல் அரங்கில் திரு.கக்கன் அவர்களது சகோதரர் திரு.விஸ்வநாதன் கக்கன் உரையாற்றப் போகிறார். அனைவரும் வந்து அவரது சகோதரர் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம். அதே கூட்டத்தில் டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்களும் கலாச்சாரம், பொருளாதாரம் குறித்த ஒரு சொற்பொழிவாற்றவுள்ளார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து டாக்டர் ஸ்வாமி இந்திய சீனா பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடவுள்ளார்.
விஸ்வநாதன் கக்கனுக்கு சென்னையில் வேலை கிடைத்து வேலைக்குச் சேருவதற்காக அண்ணன் வீட்டிற்குத் தங்கச் சென்றிருக்கிறார். இது அரசு வீடு என் உறவினர்கள் தங்கக் கூடாது இரவு மட்டும் போலீஸ்காரர் தங்கும் அவுட்போஸ்டில் இருந்து விட்டு காலையில் வேறு இடம் பார்த்துக் கொள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் மந்திரி கக்கன். அவர் வாழ்ந்த அதே தமிழ் நாட்டில்தான் நாம் இன்று ஒரு லட்சம் கோடிகள் அடிக்கும் ராஜாக்களும் மந்திரிகளும் கனிவான மொழி பேசுபவர்களும் கக்கூஸ் ஆண் படத்தில் கூட தன் படங்களை ஒட்டி வைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளும் வாழ்கிறார்கள்.
இரா முருகன் சார்பாக அவரது வாசகரான எனது பரிந்துரைகள். என்னிடம் இரா.முருகனின் முழு சிறுகதைத் தொகுப்பு உள்ளது. அதில் இருந்து ஆரம்பிக்கலாம். அவரது நாவல்கள் மூன்று விரல், அரசூர் வம்சம் இரண்டும் வெளி வந்துள்ளன. அரசூர் வம்சத்தை தி கோஸ்ட் ஆஃப் அரசூர் என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அது மாஜிகல் ரியலிசம் கலந்து எழுதப் பட்ட ஒரு தலைமுறைக் கதை. நிறைய ஆராய்ச்சிகள் செய்து ஆழ்ந்த உழைப்பில் எழுதப் பட்டுள்ள ஒரு சுவாரசியமான நாவல். அரசூர் வம்சத்தின் தொடர்ச்சி விஸ்வரூபம் திண்ணை.காமில் வந்து கொண்டிருக்கிறது. இரா முருகனின் கட்டுரைகளும் நகைச்சுவையுணர்வுடன் எழுதப் பட்டுள்ள சுவாரசியமான கட்டுரைகளே. அவசியம் படியுங்கள். என்னிடம் அவரது புத்தகங்கள் உள்ளன.
ராயர் காப்பி கிளப் என்னும் இணையத்தின் ஆரம்ப கால யாகூ க்ரூப்பைத் துவக்கி வைத்து இணையத்தில் நிறைய பேர்களைத் தமிழில் எழுத உற்சாகமூட்டியவர் முருகன்.
அன்புடன்
ராஜன்
ஜூன் 19, 2010 at 8:08 பிற்பகல்
கக்கன் பற்றிய மேல் விவரங்களுக்கு நன்றி, ராஜன்+பாலஹனுமான்!
ஜூன் 21, 2010 at 5:07 மு.பகல்
நல்ல தகவல்கள். இது மாதிரி தொடர்ந்து நல்ல தகவல்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். வெற்றி பெற்றவர்களின் வாழ்கை குறிப்புகள் அதுவும் இது மாதிரி அரிதான விஷயங்கள் படிக்க நல்லா இருக்கு. பயனுள்ளதாவும் இருக்கு.
பாருங்க, நல்லா விஷயங்கள் சொல்லும் போது பின்னூட்டங்களும் எவ்வளவு நல்லா இருக்கு என்று. அறியப்படும் எழுத்தாளர்களின் வருகையும் எங்களை மாதிரி புதியவர்களுக்கு புது அறிமுகங்களும் கூட கிடைக்குது
ஜூன் 21, 2010 at 5:34 மு.பகல்
விருட்சம், வை. ஐயர் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி! நிச்சயமாக நீங்கள் சொல்வது போல எழுத முயற்சி செய்கிறேன்.
ஜூலை 1, 2010 at 6:17 பிற்பகல்
oru mamanithan patriya pathivu. SWAMINATHAN
ஜூலை 1, 2010 at 6:20 பிற்பகல்
KAKKAN avargalin eluthukkal adangia pathivukku nandri. ippadipatta mamanidhargalin varalatru padhivugal ethirkala thalaimuraikku kidaikka vendum.
swaminathan
ஜூலை 1, 2010 at 10:18 பிற்பகல்
பேஷ் பேஷ் ஜாதி ஒழிப்பு பத்தி நல்ல பதிவு. மிகநல்ல பின்னூட்டங்கள்.
ஜூலை 2, 2010 at 5:37 பிற்பகல்
சுவாமிநாதன், அசெட், வைத்யநாத ஐயர் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி!
ஆகஸ்ட் 2, 2010 at 9:46 மு.பகல்
Ask Our Next Gen, Will they be as Mr. Kakkan or as the present ministers?
ஆகஸ்ட் 2, 2010 at 4:03 பிற்பகல்
சுஜாதா பதில்கள்….
ஆ.சக்திவேலன், காசிபாளையம்
அரசியல்வாதிகளில் நல்லவர்களே கிடையாதா ?
கக்கன், காமராஜ் மாதிரி ஓரிருவர் இருந்ததுண்டு. மகாத்மா கூட அரசியல்வாதிதான். ஆனால் பொதுவாக, மக்களை, நல்லவர்கள், அரசியல்வாதிகள் என்று இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவில் உள்ளவர் இன்னொரு பிரிவிலும் இடம் பெறுவது இந்தியாவில் அபூர்வம்.
ஆகஸ்ட் 16, 2010 at 5:04 பிற்பகல்
http://seethaammaa.blogspot.com/2010/08/17.html
இந்த சீதம்மா இந்த நிகழ்ச்சியின் நேரடி சாட்சி என்பதால் இங்கே குறிப்பிடுகிறேன். இவரது பதிவுகள் சுவாரஸ்யமாகவும், அனுபவ பூர்வமாகவும் இருக்கு.
—-
அதாவது தியாகி வைத்தியநாதய்யர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது. அதை எதிர்த்தவர்கள் நடேசய்யர் தலைமையில் அவசரமாக ஒரு கோயிலை உண்டு பண்ணிவிட்டார்கள். ஆனால் அந்த அமைப்பு வந்த வேகத்திலேயே போயும்விட்டது.
ஹரிஜனங்களுக்குத் தலைமை வகித்தவனும் ஒரு பிராமணன்; எதிர்த்தவனும் ஒரு பிராமணன்.
வைத்தியநாத அய்யர் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே சுதந்திரப் போரரட்டத்தில் கலந்து கொண்டது. கையிலிருந்த காலணாவையும் போராட்டத்தில் செலவழித்த மனிதர்;அரசியலை வியாபாரமாக்கி கோடிப் பணம் சேர்த்தவர் இல்லை.
அவருக்குச் சிலை எழுப்பினார்கள். ஆனால் அது காக்காய்க்கு கழிப்பிடமாக மாறியது. வருடத்திற்கு ஒரு நாள் கூட மாலை மரியாதை கிடையாது. தியாகத்திற்கு மனிதனிடம் கிடைக்கும் மதிப்பு இவ்வளவுதான்.
ஆகஸ்ட் 16, 2010 at 10:07 பிற்பகல்
சீதாம்மாவின் ஜெயகாந்தன் பற்றிய கட்டுரைகளை திண்ணை தளத்தில் பார்த்திருக்கிறேன். இந்த சுட்டிக்கு நன்றி, விருட்சம்!