ஜீவா - சுந்தர ராமசாமி

ஜீவா - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி எத்தனையோ புத்தகங்கள் எழுதியிருக்கும் பொழுது தோழர் ஜீவானந்தத்தை பற்றி எழுதிய “நினைவோடை” புத்தகத்தை இங்கே குறிப்பிட்டிருக்கிறானே என நீங்கள் சிந்திக்கலாம். இவன் என்ன கம்யூனிஸ்ட்டா எனறு கூட நினைக்கலாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த புத்தகம் தான் நான் ஆர்.வி.யிடமிருந்து தள்ளிக் கொண்டு வந்தவற்றிலேயே சிறிய புத்தகம். 78 பக்கங்கள். இரண்டு வாரம் ஒன்றும் அதிகம் படிக்க முடியாத அளவிற்கு வேலை. இந்த வார இறுதியில் எதாவது ஒரு புத்தகத்தை முடித்த கணக்காக இருக்கட்டுமே என்று இந்த புத்தகத்தை கையிலெடுத்தேன். ஒரு புதிய எழுத்தாளர் (எனக்கு) அறிமுகம் ஆன கணக்காகவும் இருக்கும். முழு மூச்சாக இதில் படிப்பதற்கு த்ரில் ஒன்றும் இல்லை. சிறிது சிறிதாக படித்து முடித்துவிட்டேன்.

ஜீவாவின் ஆளுமையை பற்றி தெரிந்து கொண்டேன். அவரை பற்றி எனக்கு தெரியாது. சரித்திரத்தில் அவருடைய முக்கியத்துவம் என்ன என்றும் தெரியாது. ஆனால் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது. மேலும் நான் படித்த சுந்தர ராமசாமியின் (அவர் எழுதியது அல்ல, நேர்காணல் போன்ற ஒரு ஸ்டைலில் அவர் கூறியது) முதல் புத்தகம் என்பதால் அவரைப் பற்றியும் ஒரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.

சுந்தர ராமசாமி, ஜீவாவிடமிருந்து கற்று கொண்டதை நான் சுந்தர ராமசாமியிடம் கற்று கொண்டேன். பல நல்ல விஷயங்கள் கூறியிருக்கிறார். ஒன்று இது: ஜீவாவும், சுந்தர ராமசாமியும் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு ட்ரெயினில் போய்க்கொண்டிருந்த பொழுது சில வயதான விவசாயிகள் எதிர் வரிசையில்  அமர்ந்திருந்தனர். அவர்களிடம் நமக்கு பேச என்ன இருக்கப்போகிறது என்று அலட்சியம் ஏற்படும் நமக்கு. சுந்தர ராமசாமிக்கும் கிட்டத்தட்ட அப்படிதான் தோன்றியதாம். ஆனால் ஜீவா பாமரனிடம்கூட தெரிந்துகொள்வதற்கு ஏதாவது ஒன்று இருக்கும் என்னும் மனப்போக்கு கொண்டவர். அதனால் அவர்களிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். ஒரு விவசாயி கூறியதன் சுருக்கம் இது: நாம் ரயிலின் இரண்டு பக்கங்களிலும் வெற்று நிலத்தைப் பார்க்கிறோம். சென்னை வரை இது போல் தானிருக்கிறது. இதில் நிலங்களை தரிசாக போட்டிருக்காமல் ஏதாவது பயிர் செய்யலாம். ஏதாவது ஒரு பயிர் இங்கே நிச்சயமாக வளரும். தரிசு நிலம் என்று ஒன்றுமே கிடையாது. அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மரத்தை (தண்ணீர் தேவைப்படாத – அப்படியும் மரங்கள் இருப்பதாக கூறுகிறார்) வளர்த்தால் ஏழைகளுக்கு இலவசமாகவே எரிபொருள்(விறகு) கொடுக்கமுடியும்.

ஜீவாவும், சுந்தர ராமசாமியும் பிரமித்துப் போய்விட்டார்களாம். பாமரரிடமும் கற்றுகொள்ள வேண்டும் என்று ஜீவா நினைத்தது சரிதானே? இதன் நுணுக்கத்தை அறிந்து கொண்டு, அதன் படி நடந்தால் நமக்கு நம் ஆளுமையை செம்மைபடுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

ஒரு தலைவராக இருப்பதனால் எந்தத் தவறும் செய்யக்கூடாது என்று நாம் எதிர்பார்ப்பது அறியாமை. தலைவரும் ஒரு மனிதர் தானே. தலைவர்கள் எந்தத் தவற்றை செய்யக்கூடாது என்பதில் வேண்டுமானால் மக்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். ஜீவா விஷயத்தில் தவறுகளை பார்த்த சுந்தர ராமசாமி இதைத் தான் வலியுறுத்துகிறார். அது போலவே கட்சி என்றால் தவறுகள், கொள்கை காம்பிரமைஸ் இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமான கருத்து அல்ல என்றும் கருதுகிறார்.

நான் பல வருடங்களுக்கு முன்னர் நர் பகதூர் பண்டாரி என்ற முதலமைச்சரின் போக்கு பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். (சிக்கிமின் முன்னாள் முதலமைச்சர்). மக்களுக்கு அவருடைய போக்கு (நிறைய பெண்கள் தொடர்பு) தெரிந்தும் அவர் ஒரு தேர்தலில் எல்லா தொகுதிகளையும் (குறிப்பாக பெண்கள் ஒட்டுகளை) கைப்பற்றினார். இதிலிருந்து தெரிவதென்ன என்றால் எவரும் அவருடையா சொந்த நடத்தை பற்றி கவலையுறவில்லை. ஆனால் இன்று அவர் இன்னொறு வழக்கில் கைதாகி (4 லட்ச ரூபாய் கையூட்டு வாங்கியதற்க்காக) சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். பொது வாழ்க்கையில் ஈடுபடும் தலைவர்கள் பல தவறுகள் செய்யக்கூடும். நாம் எதைப் பற்றி கவலைப்பட வேண்டுமோ அதைப் பற்றி மட்டுமே கவலை பட வேண்டும். இதைவிட்டு விட்டு எதிர் கட்சிகளும், போட்டிக்கட்சிகளும் குழப்புவதற்கு செவிசாய்க்காமல், பகுத்தறிவு என்பதை சிறிதாவது உபயோகப்படுத்தி முடிவெடுக்கவேண்டும். அதில்லாமல் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கனக்‌ஷன் இருக்கிறதாமே, அதனால் கருணாநிதிக்கு ஓட்டு போடலாம், வாஜ்பாயி மது அருந்துவாராமே அதனால் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவோம் என்ற கும்பல் தான் அதிகமாக இருக்கிறது. இது நம் நாட்டில் மட்டுமில்லை. அர்னால்ட் ஷ்வாஸ்னெக்கர் ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ என்ற ஒரே காரணத்தினால் (எந்த முன் அனுபவமுமின்றி) மட்டுமே அவர் குடியரசு கட்சியின் சார்பாக, ஜனநாயக கட்சியின் கோட்டையான் கலிபோர்னியா மாகானத்தின் ஆளுனராக இருக்கிறார்.

சுந்தர ராமசாமி மேலும் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களின் குறுகிய கண்ணோட்டங்களை பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் நான் படித்ததில்லை. குறிப்பிட்ட வாசக வட்டத்தை அடைவதற்காக ”காலச்சுவடு பதிப்பகம்” வெளியிட்டிருக்கிறார்கள்.

Advertisements