சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸ் பெருந்தலைகள் எல்லாருமே கிழவர்கள்தான். காந்திக்கு கிட்டத்தட்ட 80, ராஜாஜி, படேல் எழுபதுகளில், நேரு, ஆசாத் கிட்டத்தட்ட அறுபது. நேதாஜி, ஜின்னா இல்லை. காந்தி மறைந்த பின் நேருவுக்கு ஈடான தலைவர்கள் படேல், ராஜாஜி, ஆசாத் மட்டுமே. படேலுக்கு பாகிஸ்தான், முஸ்லீம் லீக் ஆகியவற்றின் மீது கசப்பு இருந்தது. அவருக்கு முஸ்லிம்கள் மீதே கசப்பு இருந்ததோ என்று சிலர் சந்தேகிக்கிறார்கள்.

நேரு இந்தியா சோஷலிச பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்பினார். படேல், ராஜாஜி போன்றவர்கள் காபிடலிஸ்ட்கள். நேருவுக்கு அவர்கள் இருவரும் மாற்று கருத்துகளை தயக்கம் இன்றி தெரிவித்தார்கள். நேருவின் லட்சியவாதம், படேலின் practicalness இரண்டும் சேர்ந்தது ஒரு நல்ல காம்பினேஷன். இந்த காலத்திலும் அவர்களும் தவறு செய்தார்கள்தான் – நேரு காஷ்மீர் விஷயத்தில் அனாவசியமாக குழப்பினார். அவர் திபெத்தை பற்றி கூக்குரல் இட்டிருக்கவேண்டும். படேல் கம்யூனிஸ்ட்களை ஹைதராபாத் விஷயத்தில் பயன்படுத்திக்கொண்டார். ஹைதராபாத் கைக்கு வந்ததும் கம்யூனிஸ்ட்களை வேட்டை ஆடினார்.

படேல் மறைந்ததும் ராஜாஜி அந்த இடத்தில் அமர்ந்தார். படேல் நேருவுக்குள் இருந்த போட்டி ராஜாஜி நேருவுக்குள் இல்லை. நேரு ராஜாஜியின் புத்தி கூர்மையை பெரிதும் மதித்தார். ராஜாஜியும் நேருவிடம் உரிமையுடன் மறுத்து பேசக்கூடியவர். அவர்கள் காம்பினேஷனும் நன்றாக செயல்பட்டிருக்கும். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவர் அன்றைய மெட்ராஸ் மாநிலத்துக்கு முதலமைச்சராக வந்தது துரதிருஷ்டமே. அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் என்றால் காங்கிரசாருக்கு பயம்தான். தெலிங்கானா புரட்சிக்கு பிறகு அது தவறு என்றும் சொல்ல முடியாது. கம்யூனிஸ்ட்கள் பயத்தால்தான் நேரு ராஜாஜியை மெட்ராசுக்கு முதலமைச்சராக போக சொன்னார்.

அவர் முதலமைச்சரான விதமும் சரியில்லை. முதலில் மேலவைக்கு நியமன உறுப்பினர் ஆகி முதலமைச்சராக ஆனார். தமிழ் நாடு காங்கிரஸில் அவருக்கு இருந்த எதிர்ப்பு அவருக்கு அச்சம் தந்ததா? நேருவின் வார்த்தையை மீறி காமராஜ் அவருக்கு விரோதமாக தேர்தலில் செயல்பட்டிருக்கமாட்டார். ஒரு வேளை கம்யூனிஸ்ட்கள் அவரை தேர்தலில் தோற்கடித்துவிடுவார்கள் என்று பயப்பட்டாரா? தெரியவில்லை.

முதலமைச்சராக நன்றாகவே செயல்பட்டார். நாட்டில் பஞ்சம் இருந்த சமயம் ரேஷனை ஒழிக்க தைரியம் வேண்டும். அவர் அப்படி செய்தது பதுக்கி இருந்த தானியங்களை வெளி மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தது. போலீஸ் ஸ்ட்ரைக்கை அருமையாக கையாண்டு அடக்கினார். நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். (ம.பொ.சி. இதை பற்றி பேசுகிறார்) ஆனால் அவர் பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணவிரதத்தை சரியாக கையாளவில்லை. ஸ்ரீராமுலுவின் இறப்பை தடுக்க அவர் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

அவரது “குலக் கல்வி” திட்டம் அவருக்கு மிகவும் கெட்ட பெயரை வாங்கி கொடுத்தது. மாணவர்களுக்கு பகுதி நேரக் கல்வி, மிச்ச நேரம் அவர்கள் பெற்றோரின் விருப்பப்படி என்பதுதான் அந்த திட்டம். பெற்றோரின் விருப்பப்படி என்றால் கிராமப்புற குழந்தைகள் அப்பாவின் தச்சுத்தொழிலிலோ, மீன் பிடிப்பதிலோ, வேறு எதிலோதான் உதவி செய்திருப்பார்கள். பிராமணர்களின் குழந்தைகள் எந்த தொழிலையும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் நிறைய மாணவர்கள் படித்திருக்கலாம். இதில் பெரிய தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. எழுபதுகளிலேயே என் நண்பன் தனுஷ் மாடு மேய்த்தவன். பள்ளிக்கு வரமாட்டான். மாலை நேரம் எங்களுடன் ஃபுட்பால் ஆட மட்டும் வருவான். மூன்று மணி நேரம்தான் பள்ளி என்றால் வந்திருக்கலாம். ஆனால் ஏழை மாணவர்களை பள்ளிக்கு வர வைக்க மதிய உணவு இதை விட நல்ல திட்டம் என்பதில் சந்தேகமில்லை. அவன் சாப்பாடு வரும் நாட்களில் காலையில் வந்து சாப்பிட்டுவிட்டு மதியம் போய்விடுவான். எல்லா நாட்களிலும் சாப்பாடு வராது என்று நினைவு. இப்போது யோசித்துப் பார்த்தால் உணவு ஏன் எல்லா நாட்களிலும் வரவில்லை என்று தெரியவில்லை.

ஆனால் ராஜாஜி கிராமப்புறங்களில் ஆறாயிரம் பள்ளிகளை மூடிவிட்டு பிறகு கிராமப்புறங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிக்க இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்தக் கால கட்டங்களில் பள்ளிகளை மூடுவது என்பது பெரும் தவறு. டோண்டு இப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அவரது ஆதாரம் கல்கி பத்திரிகைதான் – கல்கி அப்போதெல்லாம் உயிருடன் இருந்தார். அவர் ராஜாஜியின் கண்மூடித்தனமான ஆதரவாளர். அவர் நடுநிலைமையுடன் இதை பற்றி எழுதி இருப்பாரா என்பது எனக்கு சந்தேகம்தான்.

இதை பற்றி மேலும் விவரமாக படிக்க டோண்டுவின் பதிவு இங்கே

இந்த திட்டமும், காமராஜின் எதிர்ப்பும் அவரது முதலமைச்சர் பதிவுக்கு முடிவு தந்தன. அதற்கு பிறகு அவர் ஒரு பதவியும் ஏற்கவில்லை.

காமராஜின் மதிய உணவு திட்டம் ராஜாஜியின் இந்த “குலக் கல்வி” திட்டத்தை விட சிறந்தது. காமராஜ் கல்வி தருவதை அரசின் கடமையாக கருதி இருக்க வேண்டும். ராஜாஜி இதையும் எப்படி efficient ஆக நடத்துவது என்பதை தனது top priority ஆக கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இதை “குலக் கல்வி” என்று திராவிட இயக்கங்கள் சித்தரித்தது தவறு. இது hindsight. இன்று சொல்வது சுலபம். அன்று அரசு வேலைகளில் பிராமண ஆதிக்கம் அதிகம். பல ஆண்டு காலங்களாக பிராமணர் அல்லாதவர்கள் அரசு வேலைகளை பெறாததை கண்டு வந்த அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அன்று இப்படி தோன்றி இருக்காவிட்டால்தான் ஆச்சரியம். அவர்கள் இதை தச்சன் பிள்ளைகள் தச்சனாகவே இருக்க செய்யும் சதி என்று நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. காமராஜ் போன்றவர்களும் பெரியவரை கழற்றி விட இதுதான் சான்ஸ் என்று நினைத்திருப்பார்கள். காமராஜும் இது ஜாதிகளை perpetuate செய்யும் “குலக் கல்வி” என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை. ராஜாஜியும் இதை விளக்க பெரிதாக முயற்சி செய்திருக்க மாட்டார். முஹமது பின் துக்ளக் படத்தில் ராஜாஜி போன்று வரும் ஒருவர் “உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்கு தெரியாது, எனக்குத்தான் தெரியும்” என்று மக்களிடம் சொல்வார். ராஜாஜியின் பலவீனம் இதுதான் என்று நினைக்கிறேன்.

1955 ஆவடி காங்கிரஸில் சோஷலிசம்தான் தனது பாதை என்று காங்கிரஸ் அறிவித்தது. அந்த கால கட்டத்தில் சோஷலிசம்தான் சரியான பாதை என்றுதான் அநேகம் பேர் நினைத்தார்கள். ராஜாஜி காங்கிரசிலிருந்தும் நேருவிடமிருந்தும் மெதுவாக விலக ஆரம்பித்ததும் இப்போதுதான்.

இந்த கால கட்டத்தில் லைசன்ஸ் கோட்டா பெர்மிட் ராஜ் என்று சொல்ல தைரியம் வேண்டும். இன்று இது சரியாக படலாம் – ஆனால் அன்று பணக்காரர்கள் அயோக்கியர்களாகத்தான் படங்களிலும் கதைகளிலும் சித்தரிக்கப்பட்டார்கள். ஒரு எம்ஜிஆரும் சிவாஜியும் “நீ பணக்காரன், உன்னிடம் பாசம் கிடையாது” என்றுதான் வசனம் பேசுவார்கள். அரசாங்கம் பணக்காரர்களையும், தொழிலதிபர்களையும், நில சுவாந்தார்களையும் கட்டுப்படுத்தாவிட்டால் அவர்கள் எல்லாரையும் ஏமாற்றிவிடுவார்கள் என்று பரவலாக நினைத்த காலம் அது. அவர்களை கட்டுப்படுத்தத்தான் லைசன்ஸ், கோட்டா, பெர்மிட் எல்லாமே. அப்போது இது தவறு என்று சிந்திக்க அறிவு கூர்மை, தான் நினைத்ததை சொல்லும் நேர்மை எல்லாம் வேண்டும். இது ராஜாஜிக்கு இருந்தது. மினு மசானி, ரங்கா போன்றவர்களுடன் சேர்ந்து அவர் சுதந்திரா கட்சியை உருவாக்கினார். அது காங்கிரசுக்கும், சோஷலிசத்துக்கும் நல்ல மாற்றாக உருவாக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.

கட்சி ஆரம்பித்து அவர் பல காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டார். முத்துராமலிங்கத்தேவருடன் கூட்டு, தி.மு.க.வுடன் கூட்டு எல்லாம் அப்படித்தான். என் பெரியப்பா சொல்லுவார் – அவர் மயிலை மாங்கொல்லையில் “நான் என் பூணூலை பிடித்துக்கொண்டு சொல்கிறேன், நீங்கள் எல்லாரும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கோ” என்று பேசினாராம். அவர் தன்னை பிராமண ஜாதியின் தலைவராக குறுக்கிக்கொண்ட செயலாகத்தான் இதை நான் காண்கிறேன். அவர் எப்படி ஒரு ஜாதிக்கு appeal செய்தார்? காங்கிரசை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

அவருடைய மகன் சி.ஆர். நரசிம்மன் எம்.பி. ஆக இருந்தார் போலிருக்கிறது. எனக்கு சி.ஆர். நரசிம்மனை பற்றி ஒன்றுமே தெரியாது. இது nepotismஆ, இல்லையா என்று டோண்டு போன்று தெரிந்தவர்கள் சொல்லலாம். டோண்டு சி.ஆர். நரசிம்மன் திறமை வாய்ந்தவர் என்றும் ராஜாஜி தன் குடும்பத்தவருக்கு உதவி செய்யாத விஷயம் மிகவும் notorious என்றும், இதில் எந்த விதமான nepotismஉம் இல்லை என்றும் சொல்கிறார்.

அவருடைய வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும் அருமையான அறிமுக புத்தகங்கள். சரளமான நடை. ராமனின் தவறுகளுக்கும் கிருஷ்ணனின் தவறுகளுக்கும் எந்த சப்பைக்கட்டும் கிடையாது. (வில்லிபுத்தூரார் பாரதத்தை படித்து பாருங்கள், எவ்வளவு சப்பைக்கட்டுகள் கட்டப்படுகின்றன?) ஆனால் இந்த புத்தகங்களுக்காக அவர் சாகித்ய அகாடெமி பரிசை வாங்கிக்கொண்டது பெரும் தவறு. அது வியாசருக்கும், வால்மீகிக்கும் சொந்தமானது. அதே போல் காங்கிரஸில் இருந்த போதே அவருக்கு பாரத ரத்னா பரிசு விருது வழங்கப்பட்டது. பலருக்கு தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று சொன்னவர் தியாகத்துக்கு பரிசும் விருதும் வாங்கி இருக்கக்கூடாது. (டோண்டு சாவிக்கு அவர் இந்த அறிவுரை கொடுத்ததை குறிப்பிடுகிறார்)

தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது – சமீபத்தில் அவரது கொள்ளுப்பேத்திக்கு கலைஞர் அரசு உதவி வழங்கும் நிலைமை இருந்தது என்று படித்தேன். தன் வீட்டை ராஜாராம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொடுத்தாராம். வானதி திருநாவுக்கரசிடம் தனக்கு ராயல்டி எல்லாம் முக்கியம் இல்லை, ஆனால் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மலிவு விலையில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

மொத்தத்தில் அவரது புத்தி கூர்மை இணையற்றது. சிந்தனையில் நேர்மை உள்ளவர். தனக்கு சரி என்று பட்டதை தனக்கு என்ன நஷ்டம் வருமோ என்று தயங்காமல் சொன்னவர். அருமையான நிர்வாகி. ஆனால் அவர் மாற்று கருத்துகளை அரவணைத்து செல்ல தெரியாதவர், தொண்டர்களுடன் நெருங்கி பழகாதவர், சில பரிசுகளையும் பட்டங்களையும் அவர் ஏற்றது கேள்விக்குரியது, காங்கிரசை வீழ்த்த அவர் சில காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டார் என்று கருதுகிறேன். அவரது நிறைகள் அவரது குறைகளை விட மிக அதிகம், அவர் இந்தியாவின் வரப் பிரசாதம், அவர் சுதந்திர இந்தியாவில் மேலும் பதவிகளை வகிக்காது இந்தியாவின் துரதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.

அவரை பற்றி மேலும் படிக்க விரும்புவர்களுக்கு:
டோண்டுவின் பதிவுகள்
பத்திரிகையாளர் சுதாங்கனின் ஒரு பதிவு
ராஜாஜி மற்றும் காந்தியின் பேரரான ராஜ்மோகன் காந்தி எழுதிய Rajaji: A Life (நான் படித்ததில்லை)

நான் பயன்படுத்திய, சொல்ல மறந்த ஒரு source – திரு.வி.க.வின் வாழ்க்கை குறிப்புகள்

வேறு மதிப்பீடுகள், குறிப்பாக திராவிட இயக்கங்களின் பார்வையில் ராஜாஜியை பற்றி ஏதாவது மதிப்பீடு இருந்தால் அதை படிக்க ஆவலாக இருக்கிறேன்.