(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)

பேச ஆரம்பித்து ஒரு கால் மணி நேரம் சலசலப்பு. வருகிற அனைவரையும் உட்காரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார் உமா ஷங்கர்.  தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் எச்சமாக ரெவின்யூ அதிகாரிகளுக்கு இருக்கும் பந்தாவும், அதிகாரமும், எடுபிடிகளும், ப்ரோட்டாக்கால்களும் ஐ ஏ எஸ் களுடன் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் பழகியவர்களுக்கும் அதிகாரிகளின் பந்தாக்களை நேரில் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அரசு அதிகாரிகள் அதிலும் குறிப்பாக போலீஸ், ரெவின்யூ அதிகாரிகளுக்கு நம் நாட்டில் பொது இடங்களிலும் அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களிலும் தேவையில்லாமல் பெரும் மரியாதையும் சிறப்பு உபசரிப்புகளும் சலுகைகளும், ராஜ மரியாதைகளும் சாதாரண மக்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையில், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் எப்பொழுதுமே அளிக்கப் பட்டு வருகின்றன.  இவர்களுக்கு எப்பொழுதுமே இரண்டு கொம்புகள். இவர்கள் எப்பொழுதுமே பூமியில் இருந்து ஒரு அடி உயரத்திலேயே பறக்கும் வர்க்கத்தினர். அவர்கள் நினைப்பதற்கு முன்னாலேயே அவர்கள் விருப்பம் நிறைவேற்றி விட ஏராளமான உதவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கண்கள் கரும்பைப் பார்த்தாலே உதவியாளர்கள் சர்க்கரையுடன் வந்து நிற்பார்கள். ஒரு மைல் நீளத்திற்கு கைகளில் மாலைகளுடனும், பழங்களுடனும் இவர்கள் வீடுகள் முன்னால் அதிகாலையில் இருந்தே இவர்களுக்குக் கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள் க்யூவில் காத்து நிற்கும் கண்றாவிக் காட்சியை ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியிலும் தவறாமல் காணலாம். விழா ஒன்றில்  கலந்து கொண்டிருந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி சட்டைப் பையில் இருந்து பேனாவை பின்னால் நின்ற தனது உதவியாளரிடம் கொடுக்க அவர் அதன் மூடியைத் திறந்து கொடுத்தவுடன் பேனாவில் எழுதி விட்டு மீண்டும் பேனாவை உதவியாளரிடம் கொடுக்க அவர் அதை மூடித் தர தன் சட்டைப் பையில் சொருகிக் கொண்ட வைபவத்தை ”பேனாவின் மூடியக் கழற்றவே ஒரு எடுபிடி தேவையென்றால் ஒரு வேளை “மற்றதையும்”  போட்டு விடவும், கழட்டி எடுக்கவும் இவருக்கு எடுபிடிகள் இருப்பார்களோ?” என்று தனக்கேயுரிய நக்கலுடன் ஐயம் தெரிவித்திருந்தார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அப்படியாகப் பட்ட பேனாவின் மூடியைத் திறந்து கொடுக்கக் கூட எடுபிடிகளை வைத்துக் கொள்ளும் நம் இந்திய அதிகார வர்க்கத்தில் இருந்து, ஆணவமும் அதிகாரமும் நிரம்பிய பாபுக்களின் முகாமில் இருந்து வந்திருக்கும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி, கூட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொருவரையும் உபசரித்து உட்கார சொல்லுவதில் மும்முரமாக இருந்த பணிவையும் கரிசனத்தையும் கண்ட பொழுது எனக்கு  நிஜமாகவே இந்த உமா ஷங்கர் ஒரு இந்திய அரசு அதிகாரிதானா என்ற சந்தேகமே வந்து விட்டது.
வருகிறவர்களுக்கு எல்லாம் சேர் போட்டு உட்காரச் சொல்லி உபசரிப்பதிலேயே முதல் கால் மணி கழிந்து விட்டது. ஒரு வழியாக பேச ஆரம்பித்த பொழுது 4 மணி தாண்டியிருந்தது. உமா ஷங்கர் பேசியதின் சாரம் :

1. தான் இன்னமும் ஒரு அரசு அதிகாரி எந்தவிதமான அரசியல், பண ஆதாயத்திற்காகவும் தான் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை என்றும் தனக்கு  அரசியலுக்கு வரும் நோக்கம் கிடையவே கிடையாது  அரசியலுக்கு வரவே மாட்டேன் என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்தார். ”நீங்கள் மூன்று முறை அரசியலுக்கு வரவே மாட்டேன் சொன்னபடியால் நீங்கள் நிச்சயம் வருவீர்கள் அதுதான் தமிழ் நாட்டு குழுவூக் குறி” என்று ஒருவர் சத்தமாகச் சொல்ல, அதை மறுத்து தான் அரசியலுக்கு வரப் போவதேயில்லை என்று மீண்டும் உறுதியளித்தார்.

2. இன்றைய தமிழக அரசில் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்தவர்களின் வரிசையில் கருணாநிதி, அழகிரிக்கு அடுத்ததாக தன் நேர்மையின், திறமையின், கடமையின் காரணமாக மட்டுமே தனக்கென்று ஒரு சக்தி வாய்ந்த இடம் இருப்பதாகவும், அரசியலில் சேர்ந்து அதிகார அடுக்கில் தனக்கு இருக்கும் அந்த உயர்ந்த இடத்தில் இருந்து  தன்னை கீழே தள்ளிக் கொள்ளப் போவதில்லை என்றும் அதிகார அமைப்பின் உள்ளே இருந்து கொண்டே ஊழலை எதிர்க்கும் இயக்கங்களுக்கு தன் ஆதரவையும், ஆலோசனைகளையும், உந்துதலையும் கொடுக்கப் போவதாகவும் அதற்காகவே இந்தக் கூட்டத்தில் பேச வந்திருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார்.

3. தான் எல்காட் என்ற அரசு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த பொழுது, எல்காட்டின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப் பட்ட ஒரு நிறுவனம், எல்காட்டின் போர்டுக்குத் தெரியாமலேயே ரகசியமாக தனியார் ஒருவருக்கு மாற்றப் பட்டு பல நூறு கோடி ரூபாய்களுடன் ஒரு அரசு நிறுவனமே மாயமாக மறைந்து போய் தனியார் நிறுவனமாக மாறிய மர்மத்தைத் தோண்ட ஆரம்பித்தவுடன், தியாகராஜ செட்டியார் என்ற ஒருவர் சர்வ வல்லமை வாய்ந்த மதுரை அழகிரியிடம் முறையிட்டவுடன் உடனுக்குடன் தான் மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டதாகக் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு இல்லாவிட்டாலும் கூட இந்த ஊழலும் பல நூறு கோடி ரூபாய்கள் மதிப்புள்ளது. எல்காட்டில் இருந்து மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருந்த நிலையில் கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில்  பிரிவு வந்தவுடன், மாறன் சகோதரர்களின் சுமங்கிலி கேபிள் என்ற நிறுவனத்தின் ஊடுருவலை எதிர்த்து அரசாங்கமே  ஒரு அரசு கேபிள் நிறுவனம் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் நிர்வாக இயக்குனராகச் செயல் படும் படி தன்னை கருணாநிதி கேட்டுக் கொண்டததினால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். ஊழல்வாதியான எல்காட்டின் சேர்மனின் கீழ் தன்னால் வேலை செய்ய முடியாது என்ற நிபந்தனையில் பேரில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். பதவியேற்றவுடன் தயாநிதி மாறனை சந்தித்து இது போட்டி நிறுவனம் அல்ல ஒரு அரசு நிறுவனம் மட்டுமே என்று விளக்கியதாகத் தெரிவித்தார் (எதற்காக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியான உமா ஷங்கர் தனியார் கேபிள் உரிமையாளாரான ஒரு தயாநிதி மாறனை சந்தித்து அரசு முடிவு குறித்து விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு வந்தது, கேள்வி கேட்டு அவரது பேச்சை துண்டிக்க வேண்டாம் இறுதியில் கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன், பின்னால் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய் விட்டது)

4. மீண்டும் ஆளும் குடும்பத்திற்குள் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் அரசு சார்பில் துவங்கப் பட்ட கேபிள் நிறுவனத்திற்கு அளிக்கப் பட்ட ஆதரவு குறைந்துள்ளது. கோவை நகரிலும் பிற நகரங்களிலும் அரசு கேபிள் நிறுவனத்தின் கட்டமைப்புகள் உடைக்கப் பட்டு, கேபிள்கள், ஆண்டனாக்கள் முதலிய கட்டுமானங்கள், அரசின் பொதுச் சொத்துக்கள் மாறன் சகோதரர்களின் அடியாட்களினால் அழிக்கப் பட்டதாகவும் அது குறித்து தொடர்ந்து முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும், போலீஸுக்கும் புகார் அனுப்பியும் எவருமே கண்டு கொள்ளாமல் அந்த அழிப்பை தொடர அனுமதித்ததினால் தானே நேரில் சென்று அவற்றை தடுக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். அவ்வாறு தானே நேரில் சென்று அரசாங்கச் சொத்துக்கள் அழிவதைத் தடுக்கத் தலையிட்டவுடனேயே மாறன் சகோதரர்களின் தூதுவர் ஒருவர் கோவை விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள் அதைத் தருகிறோம் எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று பேரம் நடத்தியதாகச் சொன்னார்.  பேரம் நடத்த வந்தவர்களிடம் நீங்கள் அளிக்கும் பணம், பதவி எதுவும்  எனக்குத் தேவையில்லை நான் என் கடமையைச் செய்வேன் என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார். மாறன் சகோதரர்களின் நெருக்குதலுக்குத் தான் பணியாமல் போனபடியால் போலியான ஜாதிச் சான்றிதழை அளித்து ஐ ஏ எஸ் பதவி பெற்ற குற்றத்திற்காகவும் வருமானத்திற்கும் மேலான சொத்து சேர்த்த குற்றத்தின் அடிப்படையிலும் தன்னை அரசாங்கம் தற்காலப் பணி நீக்கம் செய்ததாகக் குறிப்பிட்டார்.

5. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் இருவரும் ரவுடிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் குண்டர்கள் என்றும் சமூக விரோதிகள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார். இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறை வைக்க தான் பரிந்துரைத்தினாலேயே தான் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகக் கூறினார். அழகிரியின் தலையீடு பற்றியும் அதன் மூலம் அரசாஙக்த்திற்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் குறித்தும் தயங்காமல் பேசினார். கருணாநிதி குடும்பத்தார் அரசின் கடமைகளில் குறுக்கிட்டு பல லட்சம் கோடி ஊழல்களைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். லட்சக்கணக்கில் ஊழல் செய்த ஜெயலலிதா அரசின் மீதான தன் எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த தி மு க இன்று பல லட்சம் கோடிகள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்து வருவதாகக் குறிப்பிட்டார். கருணாநிதிக்கும், பிறருக்கும் தனக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்டார்.

6. தனது முதல் பணியில் இருந்து ஒவ்வொரு பணியிலும் தான் எவ்வாறு அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கும் பேரங்களுக்கும் பணியாமல் ஊழலுக்கு இடம் தராமல் பணியாற்றினேன் என்பதை பல உதாரணங்கள் மூலமாக விளக்கினார். மதுரையில் துணைக் கலெக்டராக இருந்த பொழுது சுடுகாட்டுக்கு கூரை போடும் விஷயத்தில் நடந்த ஊழலை எதிர்த்துப் புகார் செய்தபடியால் அப்பொழுதைய ஜெயலலிதா அரசினால் முக்கியத்துவம் இல்லாத துறையில் பல ஆண்டுகள் வேலை பார்த்தாகவும் கூறினார். அப்பொழுதய ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் கேவலம் பத்து லட்சங்களிலேயே இருந்தது எனவும் இன்றைய அரசின் ஊழல்கள் அனைத்துமே பல்லாயிரக் கணக்கான கோடிகள், லட்சக்கணக்கான கோடிகள் புரளும் பிருமாண்டமான ஊழல்கள் என்று குறிப்பிட்டார். இவர்களுடைய ஊழல்களை ஒப்பிடும் பொழுது ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் தூசு என்றார்.

7. சஸ்பெண்ட் ஆன பின் தனக்கு வந்த மிரட்டல்கள் குடும்பத்தாரின் உதவியுடன் தான் மேற்கொண்ட சட்டபூர்வமான நடவடிக்கைகள் தனக்குக் கிட்டிய ஆதரவுகள் அதனால் அரசு மீண்டும் தன்னை வேலையில் அமர்த்தியது ஆகியவற்றை வேகமாகப் பேசி தான் சஸ்பெண்ட் ஆன விஷயத்தின் பின்ணணியை முழுவதும் சொல்லாமல் அவசரமாகப் பேசி முடித்தார்.

8. தமிழக அரசின் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டில் நிலவும் லஞ்சத்தின் நிலமை அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசினார். ஒரு அரசு அதிகாரியே அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை லஞ்ச லாவண்யங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியது
ஆச்சரியமே. கலெக்டர் ஆஃபீசின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுக்காமல் எதையுமே சாதிக்க முடியாது என்பதை விளக்கினார்.

9. அரசின் ரெவின்யூ துறையில் சாதாரண வி ஏ ஓ, தலையாரியில் இருந்து கலெக்டர் ஆபீஸ் அலுவலர்கள், தாசில்தார்கள், கலெக்டர்கள், செயலர்கள், மந்திரிகள் வரை நடக்கும் ஊழல்களை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் விளக்கினார். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தன் அரசாங்கத்தின் புழுத்து அரித்துப் போன ஊழல்களை இவ்வளவு வெளிப்படையாகப் பேசி நான் கேட்ப்பது இதுவே முதல் முறை. நிலத்திற்கு பட்டா வாங்கப் போனால் நிலத்தின் மதிப்பின் படி ஆயிரம் முதல் லட்சங்கள் வரை கொடுக்காமல் யாராலும் தமிழ் நாட்டில் நிலப் பட்டா வாங்கி விட முடியாது என்ற நிலையை விளக்கினார்.

10. தனக்கு அமெரிக்க, இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றிலும் சி ஐ ஓ, சி டி ஓ போன்ற பல பதவிகள் காத்திருந்த பொழுதிலும் கூட, தனக்கு கொலை மிரட்டல் வரை இருந்த பொழுதிலும் கூட கடைசி வரை ஐ ஏ எஸ் பதவியில் இருந்து தன்னால் முடிந்த வரை துணிந்து ஊழல்களை எதிர்த்துப் போராட முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு தன் குடும்பத்தாரின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்து அதற்கு உறுதுணையாக இருக்கும் தன் மனைவியையும் அறிமுகப் படுத்தினார்.

11. தனது இருபதாண்டுகளுக்கு மேலான அரசுப் பணியில் பல்வேறு சோதனைகளையும் தடைகளையும் இடையூறுகளையும் மீறி தனது பல்வேறு சாதனைகளை குறும் படங்கள் மூலமாகவும், அட்டவணைகள் மூலமாகவும், புகைப் படங்கள் மூலமாகவும் விளக்கினார். திருவாரூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக மாவட்ட நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கியதன் மூலம் முதன் முதலாக இ-கவர்னன்ஸை அமுல் படுத்தியதைத் தன் பெரும் சாதனையாகக் குறிப்பிட்டார். அதைப் போல ஒரு முழுமையான சிஸ்டத்தை அதன் பிறகு எந்த மாவட்டத்திலும் அமுல் படுத்த இயலவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.  எல்காட்டின் தலைவராக இருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் ஐ டி பார்க்குகளையும் உருவாக்கியது, ரேஷன் கடைகளில் துல்லியமாகவும் கள்ள வியாபாரத்தைத் தடுக்கும் விதமாகவும் கொண்டு வந்த எலக்ட்ரானிக் அளவு மானிகளையும், ரசீது இயந்திரங்களையும் அறிமுகப் படுத்தியது, எல்காட்டிலும், மாவட்ட நிர்வாகங்களிலும் நடந்த பல்வேறு ஊழல்களை வெளிக் கொணர்ந்தது ஆகியவற்றை தனது சாதனைகளாக விளக்கினார்.

12. இந்த ஊழல்களையும், மிரட்டல்களையும், அராஜகங்களையும் நிறுத்த வேண்டுமானால் இந்தியா ஊழலில்லாத தேசமாக மாற வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத தன்னாட்சி அமைப்புகள் உருவாக்குவதே ஒரே வழி என்றார். சட்டமன்றம் சட்டம் இயற்றுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி நீதித் துறை போலவே காவல் துறையும் சிவில் நிர்வாகமும் சுயாட்சி உடைய தனி அமைப்புகளாகச் செயல் படாத வரை ஊழலை ஒழிக்கவே முடியாது என்று குறிப்பிட்டார். போலீஸ், சிவில் நிர்வாகம் தனி அமைப்புகளாக செயல் பட்டால் அரசியல்வாதிகளின் கட்டற்ற சக்தி குறைந்து விடும் என்றும் அவர்களால் அதிகாரிகளை மிரட்ட முடியாது என்றும் அதன் மூலமாக ஊழலற்ற அரசாங்கம் சாத்தியப் படும் என்பதையும் விளக்கினார்.

13. அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும்ம் இந்தியர்களுக்கும் அவர்களின் செல்வாக்கு, அறிவு, அமெரிககவின் மீதான மதிப்பு காரணமாக இந்திய அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஒரு வித மரியாதை நிலவுவதாகவும் ஆகவே இந்திய அரசியல்வாதிகளிடம் உங்களைப் போன்ற என் ஆர் ஐ க்கள் இந்த சீர்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அதை வலியுறுத்தவதற்காகவே தான் இந்தப் பயணத்தை மேற்க் கொண்டதாகவும் தெரிவித்தார். லோக்சத்தாவின் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் கூட்டம் பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அதே பாணியிலேயே அமைப்புச் சீர்த்திருத்தமே ஊழலை ஒழிப்பதின் முதல் படி என்பதை வலியுறுத்தியே உமா ஷங்கரும் வலியுறுத்தினார்.

(தொடரும்)

 

தொடர்புடைய பிற பகுதிகள்

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags