இன்று ஸ்பெக்ட்ரம் ராசா கைது செய்யப்பட்டார்.

ஒரு லெவலைத் தாண்டிவிட்டால் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. எந்த முதலமைச்சரும் ஜெயிலுக்கு போனதில்லை. ஆதாரங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் சரி, அப்படித்தான். எனக்கு அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பியவர் யாரென்று தெரியாது, ஆனால் பணத்தை பாங்கில் போட்டுக் கொண்டேன் என்று சொன்னவர் கூட தப்பிவிடுகிறார். ராசாவும் அந்த லெவலைத் தாண்டிவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். அவர் தண்டிக்கப்பட்டால்தான் ஆச்சரியம். ஆனால் இவ்வளவு தூரம் வந்ததே எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நாட்டில் இன்னும் கொஞ்சம் நீதி இருக்கிறது என்று தோன்றுகிறது.

சுப்ரமணிய சாமிக்கும், ரிபோர்டர் கோபிக்கும் நன்றி!

Advertisements

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நண்பர் திருமலை ராஜனும் நண்பர் பாலாஜியும் நடத்திய ஒரு ப்ரோக்ராமைப் பற்றி எழுதி இருந்தோம். இப்போது அந்த ப்ரோக்ராமை இன்டர்நெட்டில் கேட்கலாம். இரண்டு பகுதிகளாக இருக்கிறது. பகுதி ஒன்று இங்கே, பகுதி இரண்டு இங்கே.


(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)

பேச ஆரம்பித்து ஒரு கால் மணி நேரம் சலசலப்பு. வருகிற அனைவரையும் உட்காரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார் உமா ஷங்கர்.  தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் எச்சமாக ரெவின்யூ அதிகாரிகளுக்கு இருக்கும் பந்தாவும், அதிகாரமும், எடுபிடிகளும், ப்ரோட்டாக்கால்களும் ஐ ஏ எஸ் களுடன் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் பழகியவர்களுக்கும் அதிகாரிகளின் பந்தாக்களை நேரில் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அரசு அதிகாரிகள் அதிலும் குறிப்பாக போலீஸ், ரெவின்யூ அதிகாரிகளுக்கு நம் நாட்டில் பொது இடங்களிலும் அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களிலும் தேவையில்லாமல் பெரும் மரியாதையும் சிறப்பு உபசரிப்புகளும் சலுகைகளும், ராஜ மரியாதைகளும் சாதாரண மக்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையில், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் எப்பொழுதுமே அளிக்கப் பட்டு வருகின்றன.  இவர்களுக்கு எப்பொழுதுமே இரண்டு கொம்புகள். இவர்கள் எப்பொழுதுமே பூமியில் இருந்து ஒரு அடி உயரத்திலேயே பறக்கும் வர்க்கத்தினர். அவர்கள் நினைப்பதற்கு முன்னாலேயே அவர்கள் விருப்பம் நிறைவேற்றி விட ஏராளமான உதவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கண்கள் கரும்பைப் பார்த்தாலே உதவியாளர்கள் சர்க்கரையுடன் வந்து நிற்பார்கள். ஒரு மைல் நீளத்திற்கு கைகளில் மாலைகளுடனும், பழங்களுடனும் இவர்கள் வீடுகள் முன்னால் அதிகாலையில் இருந்தே இவர்களுக்குக் கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள் க்யூவில் காத்து நிற்கும் கண்றாவிக் காட்சியை ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியிலும் தவறாமல் காணலாம். விழா ஒன்றில்  கலந்து கொண்டிருந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி சட்டைப் பையில் இருந்து பேனாவை பின்னால் நின்ற தனது உதவியாளரிடம் கொடுக்க அவர் அதன் மூடியைத் திறந்து கொடுத்தவுடன் பேனாவில் எழுதி விட்டு மீண்டும் பேனாவை உதவியாளரிடம் கொடுக்க அவர் அதை மூடித் தர தன் சட்டைப் பையில் சொருகிக் கொண்ட வைபவத்தை ”பேனாவின் மூடியக் கழற்றவே ஒரு எடுபிடி தேவையென்றால் ஒரு வேளை “மற்றதையும்”  போட்டு விடவும், கழட்டி எடுக்கவும் இவருக்கு எடுபிடிகள் இருப்பார்களோ?” என்று தனக்கேயுரிய நக்கலுடன் ஐயம் தெரிவித்திருந்தார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அப்படியாகப் பட்ட பேனாவின் மூடியைத் திறந்து கொடுக்கக் கூட எடுபிடிகளை வைத்துக் கொள்ளும் நம் இந்திய அதிகார வர்க்கத்தில் இருந்து, ஆணவமும் அதிகாரமும் நிரம்பிய பாபுக்களின் முகாமில் இருந்து வந்திருக்கும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி, கூட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொருவரையும் உபசரித்து உட்கார சொல்லுவதில் மும்முரமாக இருந்த பணிவையும் கரிசனத்தையும் கண்ட பொழுது எனக்கு  நிஜமாகவே இந்த உமா ஷங்கர் ஒரு இந்திய அரசு அதிகாரிதானா என்ற சந்தேகமே வந்து விட்டது.
வருகிறவர்களுக்கு எல்லாம் சேர் போட்டு உட்காரச் சொல்லி உபசரிப்பதிலேயே முதல் கால் மணி கழிந்து விட்டது. ஒரு வழியாக பேச ஆரம்பித்த பொழுது 4 மணி தாண்டியிருந்தது. உமா ஷங்கர் பேசியதின் சாரம் :

1. தான் இன்னமும் ஒரு அரசு அதிகாரி எந்தவிதமான அரசியல், பண ஆதாயத்திற்காகவும் தான் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை என்றும் தனக்கு  அரசியலுக்கு வரும் நோக்கம் கிடையவே கிடையாது  அரசியலுக்கு வரவே மாட்டேன் என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்தார். ”நீங்கள் மூன்று முறை அரசியலுக்கு வரவே மாட்டேன் சொன்னபடியால் நீங்கள் நிச்சயம் வருவீர்கள் அதுதான் தமிழ் நாட்டு குழுவூக் குறி” என்று ஒருவர் சத்தமாகச் சொல்ல, அதை மறுத்து தான் அரசியலுக்கு வரப் போவதேயில்லை என்று மீண்டும் உறுதியளித்தார்.

2. இன்றைய தமிழக அரசில் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்தவர்களின் வரிசையில் கருணாநிதி, அழகிரிக்கு அடுத்ததாக தன் நேர்மையின், திறமையின், கடமையின் காரணமாக மட்டுமே தனக்கென்று ஒரு சக்தி வாய்ந்த இடம் இருப்பதாகவும், அரசியலில் சேர்ந்து அதிகார அடுக்கில் தனக்கு இருக்கும் அந்த உயர்ந்த இடத்தில் இருந்து  தன்னை கீழே தள்ளிக் கொள்ளப் போவதில்லை என்றும் அதிகார அமைப்பின் உள்ளே இருந்து கொண்டே ஊழலை எதிர்க்கும் இயக்கங்களுக்கு தன் ஆதரவையும், ஆலோசனைகளையும், உந்துதலையும் கொடுக்கப் போவதாகவும் அதற்காகவே இந்தக் கூட்டத்தில் பேச வந்திருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார்.

3. தான் எல்காட் என்ற அரசு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த பொழுது, எல்காட்டின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப் பட்ட ஒரு நிறுவனம், எல்காட்டின் போர்டுக்குத் தெரியாமலேயே ரகசியமாக தனியார் ஒருவருக்கு மாற்றப் பட்டு பல நூறு கோடி ரூபாய்களுடன் ஒரு அரசு நிறுவனமே மாயமாக மறைந்து போய் தனியார் நிறுவனமாக மாறிய மர்மத்தைத் தோண்ட ஆரம்பித்தவுடன், தியாகராஜ செட்டியார் என்ற ஒருவர் சர்வ வல்லமை வாய்ந்த மதுரை அழகிரியிடம் முறையிட்டவுடன் உடனுக்குடன் தான் மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டதாகக் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு இல்லாவிட்டாலும் கூட இந்த ஊழலும் பல நூறு கோடி ரூபாய்கள் மதிப்புள்ளது. எல்காட்டில் இருந்து மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருந்த நிலையில் கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில்  பிரிவு வந்தவுடன், மாறன் சகோதரர்களின் சுமங்கிலி கேபிள் என்ற நிறுவனத்தின் ஊடுருவலை எதிர்த்து அரசாங்கமே  ஒரு அரசு கேபிள் நிறுவனம் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் நிர்வாக இயக்குனராகச் செயல் படும் படி தன்னை கருணாநிதி கேட்டுக் கொண்டததினால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். ஊழல்வாதியான எல்காட்டின் சேர்மனின் கீழ் தன்னால் வேலை செய்ய முடியாது என்ற நிபந்தனையில் பேரில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். பதவியேற்றவுடன் தயாநிதி மாறனை சந்தித்து இது போட்டி நிறுவனம் அல்ல ஒரு அரசு நிறுவனம் மட்டுமே என்று விளக்கியதாகத் தெரிவித்தார் (எதற்காக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியான உமா ஷங்கர் தனியார் கேபிள் உரிமையாளாரான ஒரு தயாநிதி மாறனை சந்தித்து அரசு முடிவு குறித்து விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு வந்தது, கேள்வி கேட்டு அவரது பேச்சை துண்டிக்க வேண்டாம் இறுதியில் கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன், பின்னால் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய் விட்டது)

4. மீண்டும் ஆளும் குடும்பத்திற்குள் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் அரசு சார்பில் துவங்கப் பட்ட கேபிள் நிறுவனத்திற்கு அளிக்கப் பட்ட ஆதரவு குறைந்துள்ளது. கோவை நகரிலும் பிற நகரங்களிலும் அரசு கேபிள் நிறுவனத்தின் கட்டமைப்புகள் உடைக்கப் பட்டு, கேபிள்கள், ஆண்டனாக்கள் முதலிய கட்டுமானங்கள், அரசின் பொதுச் சொத்துக்கள் மாறன் சகோதரர்களின் அடியாட்களினால் அழிக்கப் பட்டதாகவும் அது குறித்து தொடர்ந்து முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும், போலீஸுக்கும் புகார் அனுப்பியும் எவருமே கண்டு கொள்ளாமல் அந்த அழிப்பை தொடர அனுமதித்ததினால் தானே நேரில் சென்று அவற்றை தடுக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். அவ்வாறு தானே நேரில் சென்று அரசாங்கச் சொத்துக்கள் அழிவதைத் தடுக்கத் தலையிட்டவுடனேயே மாறன் சகோதரர்களின் தூதுவர் ஒருவர் கோவை விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள் அதைத் தருகிறோம் எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று பேரம் நடத்தியதாகச் சொன்னார்.  பேரம் நடத்த வந்தவர்களிடம் நீங்கள் அளிக்கும் பணம், பதவி எதுவும்  எனக்குத் தேவையில்லை நான் என் கடமையைச் செய்வேன் என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார். மாறன் சகோதரர்களின் நெருக்குதலுக்குத் தான் பணியாமல் போனபடியால் போலியான ஜாதிச் சான்றிதழை அளித்து ஐ ஏ எஸ் பதவி பெற்ற குற்றத்திற்காகவும் வருமானத்திற்கும் மேலான சொத்து சேர்த்த குற்றத்தின் அடிப்படையிலும் தன்னை அரசாங்கம் தற்காலப் பணி நீக்கம் செய்ததாகக் குறிப்பிட்டார்.

5. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் இருவரும் ரவுடிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் குண்டர்கள் என்றும் சமூக விரோதிகள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார். இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறை வைக்க தான் பரிந்துரைத்தினாலேயே தான் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகக் கூறினார். அழகிரியின் தலையீடு பற்றியும் அதன் மூலம் அரசாஙக்த்திற்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் குறித்தும் தயங்காமல் பேசினார். கருணாநிதி குடும்பத்தார் அரசின் கடமைகளில் குறுக்கிட்டு பல லட்சம் கோடி ஊழல்களைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். லட்சக்கணக்கில் ஊழல் செய்த ஜெயலலிதா அரசின் மீதான தன் எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த தி மு க இன்று பல லட்சம் கோடிகள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்து வருவதாகக் குறிப்பிட்டார். கருணாநிதிக்கும், பிறருக்கும் தனக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்டார்.

6. தனது முதல் பணியில் இருந்து ஒவ்வொரு பணியிலும் தான் எவ்வாறு அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கும் பேரங்களுக்கும் பணியாமல் ஊழலுக்கு இடம் தராமல் பணியாற்றினேன் என்பதை பல உதாரணங்கள் மூலமாக விளக்கினார். மதுரையில் துணைக் கலெக்டராக இருந்த பொழுது சுடுகாட்டுக்கு கூரை போடும் விஷயத்தில் நடந்த ஊழலை எதிர்த்துப் புகார் செய்தபடியால் அப்பொழுதைய ஜெயலலிதா அரசினால் முக்கியத்துவம் இல்லாத துறையில் பல ஆண்டுகள் வேலை பார்த்தாகவும் கூறினார். அப்பொழுதய ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் கேவலம் பத்து லட்சங்களிலேயே இருந்தது எனவும் இன்றைய அரசின் ஊழல்கள் அனைத்துமே பல்லாயிரக் கணக்கான கோடிகள், லட்சக்கணக்கான கோடிகள் புரளும் பிருமாண்டமான ஊழல்கள் என்று குறிப்பிட்டார். இவர்களுடைய ஊழல்களை ஒப்பிடும் பொழுது ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் தூசு என்றார்.

7. சஸ்பெண்ட் ஆன பின் தனக்கு வந்த மிரட்டல்கள் குடும்பத்தாரின் உதவியுடன் தான் மேற்கொண்ட சட்டபூர்வமான நடவடிக்கைகள் தனக்குக் கிட்டிய ஆதரவுகள் அதனால் அரசு மீண்டும் தன்னை வேலையில் அமர்த்தியது ஆகியவற்றை வேகமாகப் பேசி தான் சஸ்பெண்ட் ஆன விஷயத்தின் பின்ணணியை முழுவதும் சொல்லாமல் அவசரமாகப் பேசி முடித்தார்.

8. தமிழக அரசின் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டில் நிலவும் லஞ்சத்தின் நிலமை அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசினார். ஒரு அரசு அதிகாரியே அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை லஞ்ச லாவண்யங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியது
ஆச்சரியமே. கலெக்டர் ஆஃபீசின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுக்காமல் எதையுமே சாதிக்க முடியாது என்பதை விளக்கினார்.

9. அரசின் ரெவின்யூ துறையில் சாதாரண வி ஏ ஓ, தலையாரியில் இருந்து கலெக்டர் ஆபீஸ் அலுவலர்கள், தாசில்தார்கள், கலெக்டர்கள், செயலர்கள், மந்திரிகள் வரை நடக்கும் ஊழல்களை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் விளக்கினார். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தன் அரசாங்கத்தின் புழுத்து அரித்துப் போன ஊழல்களை இவ்வளவு வெளிப்படையாகப் பேசி நான் கேட்ப்பது இதுவே முதல் முறை. நிலத்திற்கு பட்டா வாங்கப் போனால் நிலத்தின் மதிப்பின் படி ஆயிரம் முதல் லட்சங்கள் வரை கொடுக்காமல் யாராலும் தமிழ் நாட்டில் நிலப் பட்டா வாங்கி விட முடியாது என்ற நிலையை விளக்கினார்.

10. தனக்கு அமெரிக்க, இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றிலும் சி ஐ ஓ, சி டி ஓ போன்ற பல பதவிகள் காத்திருந்த பொழுதிலும் கூட, தனக்கு கொலை மிரட்டல் வரை இருந்த பொழுதிலும் கூட கடைசி வரை ஐ ஏ எஸ் பதவியில் இருந்து தன்னால் முடிந்த வரை துணிந்து ஊழல்களை எதிர்த்துப் போராட முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு தன் குடும்பத்தாரின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்து அதற்கு உறுதுணையாக இருக்கும் தன் மனைவியையும் அறிமுகப் படுத்தினார்.

11. தனது இருபதாண்டுகளுக்கு மேலான அரசுப் பணியில் பல்வேறு சோதனைகளையும் தடைகளையும் இடையூறுகளையும் மீறி தனது பல்வேறு சாதனைகளை குறும் படங்கள் மூலமாகவும், அட்டவணைகள் மூலமாகவும், புகைப் படங்கள் மூலமாகவும் விளக்கினார். திருவாரூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக மாவட்ட நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கியதன் மூலம் முதன் முதலாக இ-கவர்னன்ஸை அமுல் படுத்தியதைத் தன் பெரும் சாதனையாகக் குறிப்பிட்டார். அதைப் போல ஒரு முழுமையான சிஸ்டத்தை அதன் பிறகு எந்த மாவட்டத்திலும் அமுல் படுத்த இயலவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.  எல்காட்டின் தலைவராக இருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் ஐ டி பார்க்குகளையும் உருவாக்கியது, ரேஷன் கடைகளில் துல்லியமாகவும் கள்ள வியாபாரத்தைத் தடுக்கும் விதமாகவும் கொண்டு வந்த எலக்ட்ரானிக் அளவு மானிகளையும், ரசீது இயந்திரங்களையும் அறிமுகப் படுத்தியது, எல்காட்டிலும், மாவட்ட நிர்வாகங்களிலும் நடந்த பல்வேறு ஊழல்களை வெளிக் கொணர்ந்தது ஆகியவற்றை தனது சாதனைகளாக விளக்கினார்.

12. இந்த ஊழல்களையும், மிரட்டல்களையும், அராஜகங்களையும் நிறுத்த வேண்டுமானால் இந்தியா ஊழலில்லாத தேசமாக மாற வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத தன்னாட்சி அமைப்புகள் உருவாக்குவதே ஒரே வழி என்றார். சட்டமன்றம் சட்டம் இயற்றுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி நீதித் துறை போலவே காவல் துறையும் சிவில் நிர்வாகமும் சுயாட்சி உடைய தனி அமைப்புகளாகச் செயல் படாத வரை ஊழலை ஒழிக்கவே முடியாது என்று குறிப்பிட்டார். போலீஸ், சிவில் நிர்வாகம் தனி அமைப்புகளாக செயல் பட்டால் அரசியல்வாதிகளின் கட்டற்ற சக்தி குறைந்து விடும் என்றும் அவர்களால் அதிகாரிகளை மிரட்ட முடியாது என்றும் அதன் மூலமாக ஊழலற்ற அரசாங்கம் சாத்தியப் படும் என்பதையும் விளக்கினார்.

13. அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும்ம் இந்தியர்களுக்கும் அவர்களின் செல்வாக்கு, அறிவு, அமெரிககவின் மீதான மதிப்பு காரணமாக இந்திய அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஒரு வித மரியாதை நிலவுவதாகவும் ஆகவே இந்திய அரசியல்வாதிகளிடம் உங்களைப் போன்ற என் ஆர் ஐ க்கள் இந்த சீர்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அதை வலியுறுத்தவதற்காகவே தான் இந்தப் பயணத்தை மேற்க் கொண்டதாகவும் தெரிவித்தார். லோக்சத்தாவின் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் கூட்டம் பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அதே பாணியிலேயே அமைப்புச் சீர்த்திருத்தமே ஊழலை ஒழிப்பதின் முதல் படி என்பதை வலியுறுத்தியே உமா ஷங்கரும் வலியுறுத்தினார்.

(தொடரும்)

 

தொடர்புடைய பிற பகுதிகள்

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags


(சமீபத்தில் உமா சங்கர் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வந்திருந்தார்.  ராஜன் அவரை பற்றி இந்த இடுகையை அனுப்பியுள்ளார். ஓவர் டூ ராஜன்…)

 

உமா சங்கர் ஐ ஏ எஸ் பேச இருப்பதாக  பே ஏரியா தமிழ் மன்றத்தில் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. எனக்கோ சில ஆச்சரியங்கள். உமா சங்கர் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி சமீப காலங்களில் ஆளும் குடும்பத்தின் சக்தி வாய்ந்த பிரமுகர்களான மாறன் சகோதரர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் என்று கோரியதாலும், கருணாநிதியின் துணைவி தன்னை அழைத்து தனக்கு வேண்டப் பட்டவருக்கு ஆர்டர் தருமாறு வற்புறுத்தியதாகவும் ஆளும் குடும்பத்தை எதிர்த்துத் துணிந்து நின்றதால், தமிழக அரசினால் குற்றம் சாட்டப் பட்டு, கருணாநிதி அரசாங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப் பட்டு பல்வேறு அமைப்புகளின் போராட்டம் காரணமாக மீண்டும் பதவியில் அமர்த்தப் பட்டவர். அப்படி அரசுக்கு வேண்டப் படாத ஒரு அதிகாரி எப்படி, எதற்காக அமெரிக்கா வருகிறார் என்பது முதல் ஆச்சரியம்? பொதுவாக அரசு செலவில் அதிகாரிகளை அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்புவதில் நிறைய அரசியல் நிலவும். ஆளுக் கட்சிக்கு வேண்டப் பட்ட அதிகாரிகளும் அல்லது ஆளும் கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் அல்லது முறைத்துக் கொள்ளாத அதிகாரிகளைத்தான் வழக்கமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு சலுகையாக அனுப்பி வைப்பார்கள். வேண்டாத அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட் அப்ளை செய்யவே அரசின் தடையில்லாச் சான்றிதழ்/அனுமதி அளிக்க மறுத்து விடுவார்கள். அப்படியாகப் பட்ட ஒரு விசேஷ சலுகையை ஆளும் கட்சியை முறைத்துக் கொண்ட ஒரு ஐ ஏ எஸ் ஸுக்கு தருவது சாத்தியமேயில்லை. ஆகவே அவர் அரசுப் பயணமாக வந்திருக்கச் சாத்தியமில்லை என்பது வெள்ளிடை மலை. ஆக இது ஒரு தனிப் பட்ட விஜயமாகவே இருக்க முடியும். அப்படியே அவர் தனிப் பட்ட முறையில் விஜயம் செய்திருந்தாலும் கூட வெளிநாடு செல்ல வேண்டப்படாத ஒரு அரசு அதிகாரிக்கு அனுமதி அளித்தது மற்றொரு ஆச்சரியம். ஏனென்றால் வேண்டாத அதிகாரி என்றால், அவரது சொந்த வேலையின் காரணமாகக் கூடச் சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்ல வேண்டும் என்றால் கூட ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்ப்பார்கள், அனுமதி கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆகவே உமா ஷங்கர் அமெரிக்கா வருகை தருகிறார் என்ற செய்தி பலத்த ஆச்சரியத்தை அளித்தது.

அடுத்து பே ஏரியா தமிழ் சங்கம்  கருணாநிதிக்கு நடிகர்களுக்குப் போட்டியாக  ஆடல் பாடல்களுடன் டெலிகாம் விழா எடுத்திருந்தார்கள். அப்படியாகப் பட்ட ஒரு கருணாநிதி ஆதரவு தமிழ அமைப்பு எப்படி கருணாநிதி அரசை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரியை வரவேற்று மேடை வழங்குகிறார்கள் என்பது இரண்டாவது ஆச்சரியம். எனக்கு உமா ஷங்கரின் மீது குறிப்பிட சில காரணங்களினால் சில சந்தேகங்கள் இருந்தாலும் கூட நேரில் போய் அவரை யார் அழைத்திருக்கிறார்கள், எதற்காக வந்திருக்கிறார், என்ன பேசப் போகிறார் என்று கேட்டு விடலாம் என்று வழக்கமான சனிக்கிழமை மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு, கூட்டம் நடைபெற இருந்த மில்பிட்டாஸ் ஸ்வாகத் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றிருந்தேன். நம் பாரதப் பண்பாட்டின் படி மூணு மணிக்கு கூட்டம் என்றால் எப்படியும் நான்கு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் பேரில் நான் 3.45க்கு சென்றிருந்தேன். நம் கலாச்சாரம் மீதான என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான்கு மணி அளவில்தான் மில்பிட்டாஸ் ஸ்வாகத் ஹோட்டலில் ஒரு பக்கம் தீபாவளிக்காக நகை விற்கும் நகைக் கடைக்காரர்கள் பளிச்சென்று விளக்கு போட்டு நகைகளை அடுக்கியிருக்க அதன் வெளிச்சத்தின் நடுவே, பொன்னகைகளின் நடுவே புன்னகையோடு உமா ஷங்கர் நின்று பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன்பே வரவேற்பு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்திருந்தன.

வழக்கமாக நான் சந்தித்திருக்கும் பெரும்பாலான ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் போன்ற உயரமோ, கம்பீரமான தோற்றமோ, அர்விந்த் சாமி பள பளப்போ, ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கே இருக்கும் இயல்பான அதிகாரக் களையோ, பயமுறுத்தும் அதிகார முறுக்கோ இல்லாமலும், முக்கியமாக அரசு அதிகாரிகள் கர்ணனின் கவச குண்டலங்கள் போல பிறக்கும் பொழுதே தைத்துப் போட்டுக் கொண்டு வந்தது போன்ற சஃபாரி சூட்டு கோட்டு இல்லாமலும் வெகு சாதாரணமான தோற்றத்தில் நம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் போல, பே ஏரியா டெக்கிகள் வீடுகளில் (இங்கு ஆஃபீசுக்கே அரை டவுசரில்தான் வேலைக்கு வருவார்கள்) அணிவது போன்றே ஒரு காலர் இல்லாத சாதாரண டீ ஷர்ட்டுடன் இயல்பாக எளிமையாகத் தோற்றமளித்தார். இவர் வழக்கமான அரசு அதிகாரி இல்லை என்பதும் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிதானவர், அதிகார பந்தா மிரட்டல் இல்லாத வித்யாசமான ஒரு அரசு அதிகாரி என்ற செய்தியை அவரது பேச்சும், உடல் மொழியும் தோற்றமும் அளித்தன. அவரது பேச்சும் கூட அலங்காரம் இல்லாத ஆடம்பரமில்லாத எளிய தமிங்க்லீஷ் பாணியிலேயே இருந்தது.

அங்கு வைக்கப் பட்டிருந்த விளம்பர பேனர்களைப் பார்த்தவுடன் அவர் யாரால் அழைக்கப் பட்டு இங்கு வந்திருக்கிறார் என்ற விஷயம் புரிந்தது. ஆந்திராவில் லோக்சத்தா அமைப்பின் டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணன் (இவரைப் பற்றியும் இவரது லோக் சத்தா அமைப்பினைப் பற்றியும் இங்கு ஏற்கனவே எழுதியுள்ளேன்) அவர்களால் உந்தப் பட்டு தமிழ் நாட்டில் அது போன்ற ஒரு அமைப்பான மக்கள் சக்தி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய் ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். அதன் அமெரிக்க கிளையுடன் சேர்த்து ஃபிப்த் பில்லர் என்றொரு நான் ப்ராஃபிட் அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது இந்தியாவில் ஊழலை எதிர்க்க ஆரம்பிக்கப் பட்ட ஒரு இயக்கம். லஞ்சம் கேட்டால் மறுக்கவும் பதிலாக பூஜ்ய ரூபாய் நோட்டைக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் ஒரு இயக்கம். லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம் என்பது இந்த அமைப்பின் பிரச்சார கோஷம். ”அன் எரப்ஷன் அகெயின்ஸ்ட் கரப்ஷன்” என்ற கோஷத்தோடு இந்த இயக்கம் ஐந்தாம் தூண் செயல் படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விஜய் ஆனந்த மக்கள் சக்தி கட்சி மக்கள் சக்தி கட்சி என்ற அரசியல் அமைப்பையும் ஆந்திராவில் ஆரம்பிக்கப் பட்டுள்ள லோக் சத்தாவின் தமிழ் நாட்டும் வடிவமாக துவக்கியுள்ளார். ஐந்தாவது தூண் என்ற இவர்களது அமெரிக்க அமைப்பின் மூலமாக  தமிழ் நாட்டில் லஞ்ச ஊழலை எதிர்த்துத் துணிவுடன் போராடும் உமா சங்கர் ஐ ஏ எஸ் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அமெரிக்க வாழ் தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் அழைப்பின் பேரில் உமா ஷங்கர் அமெரிக்கா வந்துள்ளார்.

வந்த இடத்தில், லோக்கல் தமிழ் சங்கத்தின் ஆதரவைக் கோரியும் அவர்களுடன் இணைந்தும் கூட்டம் நடத்துகிறார்கள். உள்ளூர் பே ஏரியா தமிழ் மன்றம் இது நாள் வரை இவரைப் போன்ற ஒரு விஸில் ப்ளோயருக்கு ஆதரவும் மேடையும் அமைத்ததில்லை.  சமீபத்தில் இப்பகுதிக்கு வந்திருந்த இந்தியாவின் மற்றொரு முக்கியமான ஊழல் எதிர்ப்புப் விழிப்புணர்வாளர்களான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, குருமூர்த்தி போன்றவர்களை பே ஏரியா தமிழ் மன்றம் என்றுமே ஆதரித்து வரவேற்றதில்லை. ஆனால் முதன் முறையாக ஒரு அரசு அதிகாரி என்ற முறையில் இல்லாமல்  ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு ஆக்டிவிஸ்ட் என்ற வகையில் உமா ஷங்கர் அவர்களுக்கு பே ஏரியா தமிழ் மன்றம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத் தக்க ஒரு மாற்றமாகும். வருங்காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனி நபராகப் போராடி வரும் டாக்டர் சுவாமிக்கும் இதே ஆதரவை அளித்து அவருக்கும் மேடை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கூட்டத்தில் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற சிறிய சர்ச்சைக்குப் பின்னால் ஆந்திர மாநில லோக்சத்தா அமைப்பினர் சிலரும் கூட்டத்திற்கு வந்திருந்தபடியால் ஆங்கிலத்திலேயே அவர் பேசுவதாக முடிவாகியது.

(தொடரும்)

 

தொடர்புடைய பிற பதிவுகள்

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags


ஒரு வழியாக தி.மு.க.வை சேர்ந்த ராஜாவை மந்திரி பதவியிலிருந்து தூக்கிவிட்டார்கள். இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் ராஜாவை மந்திரி சபையிலிருந்து விலக்க – கவனியுங்கள் விலக்க, அவர் மீது கேஸ் கீஸ் போட இல்லை, just விலக்க – இத்தனை நாளானது கூட்டணி அரசியலின் மிக மோசமான விளைவுகளில் ஒன்று. இத்தனை பணம் நஷ்டமாயிருக்கிறது – நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ஆயிரத்து நானூறு ரூபாய் போச்சு – அந்த ராஜாவுக்கு தண்டனை மந்திரி பதவி போனது மட்டுமே. மொத்த நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய். அதாவது 17,60,00,00,00,000 ரூபாய். கிட்டத்தட்ட நாற்பது நாலு பில்லியன் டாலர்கள். (திருத்திய வீராவுக்கு நன்றி!) கலாநிதி மாறனின் நெட் வொர்த் மூன்று பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இந்த வருஷ பட்ஜெட் deficit-இல் பாதி போல ஐந்து மடங்கு.

இந்த விஷயத்தைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் விஸ்வாமித்ரா மிகச் சிறப்பான ஒரு பதிவை – இந்தியாவின் பிரதமர் மன்மோகன் அல்ல நீரா ராடியா – எழுதி இருக்கிறார். மூன்று பகுதிகளாக வந்திருக்கிறது – பகுதி 1, பகுதி 2, பகுதி 3.

இதை விட சிறந்த, அடர்ந்த ஒரு கட்டுரை இது வரை தமிழில் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. முழுமையான ரிப்போர்ட், எல்லா விஷயங்களையும் கவர் செய்கிறது. இந்த அளவுக்கு விலாவாரியான தமிழ் கட்டுரை எனக்குத் தெரிந்து இது ஒன்றுதான். கட்டாயமாகப் படித்துப் பாருங்கள்!

விஸ்வாமித்ராவின் அலசலே போதவில்லை இன்னும் விவரம் வேண்டும் என்பவர்கள் CAG ரிபோர்ட்டை படிக்கலாம்.

என்னைப் போல சோம்பேறிகளுக்காக ராஜாவின் திருவிளையாடல்கள் சுருக்கமாக:

  • 122 கம்பெனிகளுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. இதில் 85 கம்பெனிகள் பொய்யான விவரங்களைக் கொடுத்திருக்கின்றன. ராஜாவின் டிபார்ட்மென்ட் கண்டுகொள்ளவில்லை.
  • அனுபவம் இல்லாத புதிய கம்பெனிகளுக்கு மலிவான விலையில் லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. (இதற்காகத்தான் First come First Served பாலிசி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் இந்த ராஜா) இதற்காகத்தான் மனு செய்வதற்கான கடைசி தேதி வேண்டுமென்றே ஒரு வாரம் முன்னால் நகர்த்தப்பட்டது. First-come-first-serve என்று ராஜா சொல்கிறாரே தவிர அதை விதிப்படியும் கடைப்பிடிக்கவில்லை, நியாயப்படியும் கடைப்பிடிக்கவில்லை.
  • சொன்னதற்கு மேலான அளவு ஸ்பெக்ட்ரம் 9 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது (பாரதி டெலிகாம், ரிலையன்ஸ், ஏர்செல், வோடஃபோன்…)
  • அனில் அம்பானியின் கம்பெனிக்கு நிறைய சலுகை
  •       அம்பானி கம்பெனிக்கு மலிவு விலையில் லைசன்ஸ்
  •       லைசன்ஸ் கேட்டு மனு செய்த ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனியில் அம்பானி கம்பெனி 10%-க்கு மேல் ஷேர்களை வைத்திருந்தது. இது அரசு விதிகளை மீறிய செயல்.
  •       இப்போது ரிலையன்ஸ் லைசன்ஸ் கொடுக்கப்பட்டபோது 10%-க்கு உட்பட்டுத்தான் ஷேர் இருந்தது என்று சொல்கிறது. மனு செய்தபோது விதி மீறல் என்பதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறது
  •       ஸ்வான் டெலிகாம் கொடுத்த ஈமெயில் ஐடி ரிலையன்ஸ் கம்பெனி அதிகாரியின் ஈமெயில் ஐடி.
  • தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு