மன்மோகன் அடுத்த பிரதமர் என்பது நிச்சயம் ஆகிவிட்டது. அவரது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும்?

நான் அமெரிக்காவில் வாழ்பவன். என் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. அமெரிக்க அரசியலை விட இந்திய அரசியலைத்தான் நான் கவனிக்கிறேன். ஆனாலும் தூரம் அதிகம். இந்தியாவில் இருந்தால் நேரடியான பாதிப்பு, நண்பர்கள், டீக்கடை பேச்சு, செய்தித்தாள்கள், டிவி என்று பலதரப்பட்ட விதத்தில் என் கருத்துகள் முழுமை அடையும். இப்போதோ இணையத்தில் நுனிப்புல் மேய்வதுதான் எனக்கு செய்திகளின் ஆதாரம். அதனால் இமேஜை மட்டும் வைத்து இதை எழுதுகிறேன்.

மனித வள மேம்பாடு அல்லது கல்வி அல்லது கிராம மேம்பாடு: ராகுல் காந்தி. ராகுல் மந்திரி சபையில் பொறுப்பேற்றே ஆக வேண்டும். அவரது கவனம் இந்த துறைகளில் இருக்கிற மாதிரி தோன்றுகிறது. அதனால் இதில் ஏதோ ஒரு துறை கொடுக்கலாம்.

கபில் சிபல்: முன்னாள் சாலிசிடர் ஜெனரல். திறமையாளர். இவருக்கு சட்டம் மாதிரி எதையாவது கொடுத்து மூலையில் உட்கார வைக்காமல் நல்ல துறையாக கொடுக்கலாம். உள்துறை?

நிதி: மாண்டெக் சிங் ஆலுவாலியா. முன்னாள் நிதித்துறை செயலாளர். திட்டக் கமிஷன் துணைத் தலைவர். முன்பு மன்மோகன் நரசிம்ம ராவ் அரசில் செயல்பட்ட மாதிரி செயல்படுவார்.

வெளியுறவுத் துறை: சஷி தரூர். தரூர் ஐ.நா.வில் பெரிய பொறுப்பில் இருந்தவர். செக்ரடரி ஜெனரல் பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனாலும் அவருக்கு இருக்கும் அனுபவம், தொடர்புகள் ஆகியவை இந்த பதவிக்கு பெரும் உதவியாக இருக்கும். அவருக்கு அனேகமாக ஒரு உதவி அமைச்சர் பதவியாவது கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் காபினெட் அமைச்சர் பதவிதான் சரி.

ரயில்வே: லாலு யாதவ். போன முறை சிறப்பாக செயல்பட்டார். அந்த ஒரு காரணத்துக்காவே அவரை இப்போதும் மந்திரி சபையில் சேர்த்து அதே துறை வழங்கப் பட வேண்டும்.

தகவல் துறை: தயாநிதி மாறன். தயாநிதி ஊழல் பேர்வழி என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றபடி சாதாரண மக்களுக்கும் நன்மை விளைந்திருக்கிறது.

இந்த ஆறு பேருக்கு சீட் கொடுக்க வேண்டும். இவர்கள் முதல் லிஸ்ட்.

இரண்டாவது லிஸ்டில் சீனியர்கள், தோழமைக் கட்சியினர், “இளைஞர்கள்” எல்லாம் வருவார்கள். பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஷரத் பவார் போன்ற மூத்தவர்களுக்கு எப்படியும் சீட் கொடுக்க வேண்டும். பிரனாபுக்கு ராணுவம், சிதம்பரத்துக்கு உள்துறை (இல்லை என்றால் சிதம்பரத்துக்கு ராணுவம், பிரனாபுக்கு உள்துறை), பவாருக்கு விவசாயம் ஆகியவற்றை கொடுக்கலாம். “இளைஞர்களான” சச்சின் பைலட், ஜோதி சிந்தியா ஆகியவர்களுக்கு விமானத்துறை, கல்வி, பெட்ரோலியம், சாலைகள், வணிகம் என்று முக்கியமான infrastructure துறை கொடுப்பது நல்லது. குலாம் நபி ஆசாத், கமல்நாத், பிரஃபுல் படேல், ஜெயராம் ரமேஷ், சல்மான் குர்ஷீத் போன்றவர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள். மம்தா பானர்ஜிக்கு ராகுலுக்கு எதையாவது கொடுத்த பிறகு மிச்சம் இருப்பவற்றில் மனித வள மேம்பாடு அல்லது கல்வி என்று எதையாவது கொடுக்கலாம். தி.மு.க. எப்படியும் அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, ராசா, பழனிமாணிக்கம் ஆகியோருக்கு பதவி கேட்கும். எதையாவது கொடுத்து தொலைக்க வேண்டியதுதான்.

அர்ஜுன் சிங், ஷிவ்ராஜ் பாட்டில் போன்றவர்களை மறந்துவிட வேண்டும். இவர்கள் எல்லாம் தண்டம்.