(இது ஸ்ரீ சேதுராமன் அவர்களின் இடுகை)

FY

சசி தரூர் ஆபத்து விலகியது – சோனியாவைச் சந்தித்து விளக்கம் – இனி கவனமாக இருக்கும்படி கண்டிப்பு (தினமலர் தலையங்கம் – செப்.23,2009)

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து இணைய தளத்தில் கருத்து தெரிவித்த வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் “விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்வது, மாட்டுத் தொழுவத்தில் (cattle class) பயணிப்பது போன்றது என்று கூறியிருந்தார் – இதற்கு எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது — ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சசி தரூர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்றும், செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் தரூருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமுடியாது, அவர் கருத்துக்கள் கண்டனத்திற்குரியன என்றும் கூறினர். பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் ‘சசி தரூர் கூறியது ஒரு ஜோக் தான் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

இந்த விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடந்த போது சசி வெளிநாடுகளில் – லைபீரியா, கானா – சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். விவாதம் முற்றுவது கண்டு அவர் தன் கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்தார்…  பயணத்திலிருந்து திரும்பியவுடன், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை, அவரது இல்லத்தில் இருபது நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்..  சந்திப்பு முடிந்து வெளியே வந்த சசி செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.  (தின மலர் செய்தி)

நமது அரசியல் வாதிகளுக்கு என்றுமே கலா ரசனை கிடையாது என்பது இதிலிருந்து நிதர்சனமாகத் தெரிகிறது..  ட்விட்டரில் ஒரு பட்டாளமே சசியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றது!  ஒரு சாதாரண ‘கடி’  என்ன விளைவை ஏற்படுத்தி விட்டது என்று பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது..  ஏனெனில் இது முதல் தடவையல்ல, பெரிசுகளுக்கு நினைவிருக்கலாம், ஐம்பது வருஷங்களுக்கு முன், இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்து, லோக் சபாவில் விவாதங்களும், பரிமாற்றங்களும் நடந்து ஒரு  சிறு புத்தகம் வாபஸ் பெறப்பட்டது…  அந்தப் புத்தகம் தான் “Foolishly Yours”

ஜே.ஆர்.டி.டாடாவின் “ஏர் இந்தியா” நிறுவனத்தின் கமர்ஷியல் டைரக்டர், எஸ்.கே. (பாபி) கூகாவின் கற்பனையில் உதித்த ஒரு முத்து இந்தப் புத்தகம். எல்லா ஏர் இந்தியா விமானங்களிலும், இருக்கைக்கு முன்னுள்ள பையில், இந்தப் புத்தகம் இருக்கும்.  பயணிகளின் கவனத்திற்கென சில விஷயங்கள் நகைச்சுவையுடனும், சித்திரங்களுடனும் விளக்கப் பட்டிருக்கும்..

இந்தப் புத்தகம் ஏர் இந்தியா நிறுவனத்தினால் 1948 போல் வெளியிடப்பட்டது. படிக்கும் போது நன்றாகவாய் விட்டுச் சிரிக்கலாம் – விமானப் பயணம் அன்று, இப்போதிருப்பது போல் மக்களைக் கவரவில்லை, வெகு சிலரே, நிதி வசதி உள்ளவர்களே விமானங்களில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.  பயணத்தின் போது எப்படி இருக்க வேண்டும், என்னென்ன செய்வது என்றெல்லாம் ‘கடி’யாக விவரித்திருக்கும்  —

உதாரணமாக “நீங்கள் பயணம் முடிந்தபின் கீழே இறங்கும் போது, எங்கள் ஏர் ஹோஸ்டஸ் உங்களைத் தழுவிக்  கொண்டார் என்றால், அது உங்கள் பேரில் அவருக்குள்ள அன்போ, ஆசையோ அல்ல – மறதியாக நீங்கள் உங்கள் பைக்குள் எடுத்துப் போட்டுக் கொண்ட எங்கள் ஸ்பூன், ஃபோர்க்  (cutlery) முதலானவற்றைத் திரும்ப எடுப்பதற்குத்தான்!!

இன்னொன்று — எங்கள் விமானக் கேப்டன் உங்கள் இருக்கையை நோக்கி ஒரு பாய்ச்சலில் வருவது கண்டால், உங்கள் மனைவியையும், பர்சையும் மறு புறம் மாற்றி விடுங்கள்! கூகாவின் கற்பனையிலுதித்த ஏர் இந்தியா போஸ்டர்கள் பிரசித்தி பெற்றவை – பல தேசங்களைச் சேர்ந்த விமானக் கம்பெனிகளின் நானூறு போஸ்டர்கள் கண்காட்சியில் 1959ல் ஏர் இந்தியா போஸ்டர் தான் “அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ட்ராவல் ஏஜண்ட்ஸ்” பரிசைத் தட்டிச் சென்றது… 1960ல் இந்தியாவின் “இண்டியன் சொசைட்டி ஆஃப் அட்வர்டைஸர்ஸ்” ஏர் இந்தியாவின் அக்காலச் சின்னமான “மஹாராஜா’வை உலகிற்கு அறிமுகப் படுத்திய திரு. கூகாவைக் கௌரவித்தது.  ஆனால் அதே வருஷம் தான், இந்தியப் பார்லிமெண்டில் நமது எம்.பி.க்கள் இத்தகைய விளம்பரங்களினால், இந்தியாவின் மானமே பறி போய்விட்டது என்று கூக்குரலிட்டனர்.. இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தது, ஏ.எம்.தாரிக் என்ற எம்.பி.  — கட்லரி ‘கடி’யைச் சுட்டிக்காட்டி இந்தியர்களெல்லாம் திருடர்களா என்ன? என்றார் அவர்.  குறிப்பிட்ட கார்ட்டூன் சித்திரத்தில், பயணிக்கு ஒரு காந்தி குல்லா இருந்ததும் சுட்டிக் காட்டப் பட்டது.

அப்போதைய சபாநாயகர் தன் பங்கிற்கு “விமானத்தில் நானும் கவனித்திருக்கிறேன் – விளக்குகள் அணையும் போது பெண் பயணிகள்  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார்களே என்றார் — அவர் குறிப்பிட்டது மேலே குறிப்பிட்ட இரண்டாவது ‘கடி’  —   இந்த விவாதங்களுக்குப் பிறகு அந்தக் கைப் புத்தகம் விமானக் கம்பெனியால் வாபஸ் பெறப்பட்டது.  அப்போதைய அமைச்சர் எவ்வளவோ முயன்ற போதும், நமது எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை த் திரும்பப் பெற மறுத்தனர்.

வருஷங்கள் ஐம்பது ஆனாலும் எம்.பி.க்கள் மாறவில்லை – அவர்களது நோக்கிலும் முன்னேற்றங்களில்லை..

(செய்திகள் ஆதாரம் – தினமலர், சென்னை  — டைம் பத்திரிகை செப்.1960 – எனது கடந்த கால நினைவலைகள்)


மன்மோகன் அடுத்த பிரதமர் என்பது நிச்சயம் ஆகிவிட்டது. அவரது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும்?

நான் அமெரிக்காவில் வாழ்பவன். என் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. அமெரிக்க அரசியலை விட இந்திய அரசியலைத்தான் நான் கவனிக்கிறேன். ஆனாலும் தூரம் அதிகம். இந்தியாவில் இருந்தால் நேரடியான பாதிப்பு, நண்பர்கள், டீக்கடை பேச்சு, செய்தித்தாள்கள், டிவி என்று பலதரப்பட்ட விதத்தில் என் கருத்துகள் முழுமை அடையும். இப்போதோ இணையத்தில் நுனிப்புல் மேய்வதுதான் எனக்கு செய்திகளின் ஆதாரம். அதனால் இமேஜை மட்டும் வைத்து இதை எழுதுகிறேன்.

மனித வள மேம்பாடு அல்லது கல்வி அல்லது கிராம மேம்பாடு: ராகுல் காந்தி. ராகுல் மந்திரி சபையில் பொறுப்பேற்றே ஆக வேண்டும். அவரது கவனம் இந்த துறைகளில் இருக்கிற மாதிரி தோன்றுகிறது. அதனால் இதில் ஏதோ ஒரு துறை கொடுக்கலாம்.

கபில் சிபல்: முன்னாள் சாலிசிடர் ஜெனரல். திறமையாளர். இவருக்கு சட்டம் மாதிரி எதையாவது கொடுத்து மூலையில் உட்கார வைக்காமல் நல்ல துறையாக கொடுக்கலாம். உள்துறை?

நிதி: மாண்டெக் சிங் ஆலுவாலியா. முன்னாள் நிதித்துறை செயலாளர். திட்டக் கமிஷன் துணைத் தலைவர். முன்பு மன்மோகன் நரசிம்ம ராவ் அரசில் செயல்பட்ட மாதிரி செயல்படுவார்.

வெளியுறவுத் துறை: சஷி தரூர். தரூர் ஐ.நா.வில் பெரிய பொறுப்பில் இருந்தவர். செக்ரடரி ஜெனரல் பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனாலும் அவருக்கு இருக்கும் அனுபவம், தொடர்புகள் ஆகியவை இந்த பதவிக்கு பெரும் உதவியாக இருக்கும். அவருக்கு அனேகமாக ஒரு உதவி அமைச்சர் பதவியாவது கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் காபினெட் அமைச்சர் பதவிதான் சரி.

ரயில்வே: லாலு யாதவ். போன முறை சிறப்பாக செயல்பட்டார். அந்த ஒரு காரணத்துக்காவே அவரை இப்போதும் மந்திரி சபையில் சேர்த்து அதே துறை வழங்கப் பட வேண்டும்.

தகவல் துறை: தயாநிதி மாறன். தயாநிதி ஊழல் பேர்வழி என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றபடி சாதாரண மக்களுக்கும் நன்மை விளைந்திருக்கிறது.

இந்த ஆறு பேருக்கு சீட் கொடுக்க வேண்டும். இவர்கள் முதல் லிஸ்ட்.

இரண்டாவது லிஸ்டில் சீனியர்கள், தோழமைக் கட்சியினர், “இளைஞர்கள்” எல்லாம் வருவார்கள். பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஷரத் பவார் போன்ற மூத்தவர்களுக்கு எப்படியும் சீட் கொடுக்க வேண்டும். பிரனாபுக்கு ராணுவம், சிதம்பரத்துக்கு உள்துறை (இல்லை என்றால் சிதம்பரத்துக்கு ராணுவம், பிரனாபுக்கு உள்துறை), பவாருக்கு விவசாயம் ஆகியவற்றை கொடுக்கலாம். “இளைஞர்களான” சச்சின் பைலட், ஜோதி சிந்தியா ஆகியவர்களுக்கு விமானத்துறை, கல்வி, பெட்ரோலியம், சாலைகள், வணிகம் என்று முக்கியமான infrastructure துறை கொடுப்பது நல்லது. குலாம் நபி ஆசாத், கமல்நாத், பிரஃபுல் படேல், ஜெயராம் ரமேஷ், சல்மான் குர்ஷீத் போன்றவர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள். மம்தா பானர்ஜிக்கு ராகுலுக்கு எதையாவது கொடுத்த பிறகு மிச்சம் இருப்பவற்றில் மனித வள மேம்பாடு அல்லது கல்வி என்று எதையாவது கொடுக்கலாம். தி.மு.க. எப்படியும் அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, ராசா, பழனிமாணிக்கம் ஆகியோருக்கு பதவி கேட்கும். எதையாவது கொடுத்து தொலைக்க வேண்டியதுதான்.

அர்ஜுன் சிங், ஷிவ்ராஜ் பாட்டில் போன்றவர்களை மறந்துவிட வேண்டும். இவர்கள் எல்லாம் தண்டம்.