நாலைந்து நாளைக்கு முன்னால்தான் திரு விஸ்வநாதன் கக்கனை சந்தித்தேன். சுப்ரமணிய சாமியும் அவரும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். சாதாரணமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது.

விஸ்வநாதன் கக்கன் மறைந்த காங்கிரஸ் தலைவரான கக்கனின் தம்பி. சுப்ரமணிய சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சிக்கு இவர்தான் செயலாளராக இருந்தார். சென்னை ஹை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணன் காங்கிரஸ், காமராஜ் என்று போனால் இவர் ஆர்எஸ்எஸ், ஹிந்துத்வா என்று கொஞ்சம் வேறு திசையில் போயிருக்கிறார். ஏதோ ஒரு வாயில் நுழையாத பேர் சொல்வார்களே, சர்சங்க்சாலக் என்ற மாதிரி, அந்த பொறுப்பில் ஆர்எஸ்எஸ் பிரசாரகராக இருந்திருக்கிறார். காஞ்சி சங்கர மடத்திடம் ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதிக்கு கொஞ்சம் நெருக்கமானவர் போலிருக்கிறது. ஜெயேந்திரர் விசிட் அடித்த தலித் கிராமங்கள், கோவில்களில் இவருடைய தும்பைப்பட்டி கிராமமும் ஒன்று, அனேகமாக முதல் கிராமம் இதுதான். ஹிந்துத்வத்தில் ஆழமான நம்பிக்கை உடையவர். ஹிந்து முன்னணி துணைத்தலைவராக எல்லாம் இருந்திருக்கிறார். 2006 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார், வெற்றி பெறவில்லை. அவருடைய குடும்பத்தில் நிறைய கலப்புத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. அவரே அப்படி மணந்துகொண்டவர்தாம். இங்கே தன் மகளையும் மருமகனையும், புதிதாக பிறந்திருக்கும் பேரனையும் பார்க்க வந்தவர் இப்படி இறந்துபோனது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அவருடைய கொள்கைகள் – குறிப்பாக ஹிந்துத்வா ஆதரவு எனக்கு இசைவானதில்லை. ஆனால் அவருக்கு அதில் முழு நம்பிக்கை இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஹிந்து மதத்தின் ஒரு மோசமான கூறை நேரடியாக அனுபவித்தவர் எப்படி ஹிந்துத்வா ஆதரவாளராக மாறினார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் சாவகாசமாக உட்கார்ந்து அவருடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதையும் தள்ளிப் போடாதீர்கள்!

அவருடைய குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.

பிற்சேர்க்கை: ஃபோட்டோ சுட்டி கொடுத்த ரீச்விநோவுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரும் சுப்ரமணிய சாமி
கக்கன்