
லக்ஷ்மி
சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.
சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ் நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”. அப்படி என்றால் இப்போது 28 பேரில் கண்ணதாசன், சுந்தர ராமசாமி, லக்ஷ்மி ஆகியோர் இப்போது நாட்டுடமை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள்.
சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திருபுரசுந்தரி (மது.ச.விமலானந்தம்)
சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச்சு மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.
தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, ஹாஸ்டல் வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் வெய்டிங் லிஸ்டில் இருந்த போதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.
முதல் ஆறுமாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மெடிகல் காலேஜில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுய சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார் லக்ஷ்மி. அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில் தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூறுகிறார் – ***ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்.” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.
டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்து கொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.
1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.
பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி. பெண் மனம், மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது “வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.” சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.
லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் -உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது
கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் –முருகன் சிரித்தான் — மோகத்திரை
ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி
தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்
ஆர்வி: லக்ஷ்மி நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எழுத்தாளர் இல்லை. அவர் எழுதிய மிக சிறந்த நாவல்களாக கருதப்படும் மிதிலா விலாஸ், பெண் மனம் போன்ற அத்தனையும் வீண். அவருக்கு ஒரு சிம்பிள் ஃபார்முலா இருந்தது. “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். ஆனால் ஒரு கால கட்டத்தில் அவர் ஒரு ஸ்டார் எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது. சேதுராமனின் உதவியால் இங்கே நான் தெரிந்து கொண்ட சிலரை விட நல்ல தேர்வு என்று வேண்டுமானால் சொல்லலாம். (அவர் ஒரு காலத்திய ஸ்டார் என்பதாலும், மேலும் ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார் என்பதாலும்.)
மே 18, 2009 at 5:13 பிற்பகல்
நானும் லக்ஷ்மி அவர்கள் கதையை எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் படித்து இருக்கிறேன் .அவருடைய கதைகல் ரொம்ப உணர்ச்சி பூர்வமாகவும் படிக்க தரமானதாகவும் இருக்கும் .
நல்ல நினைவுறுத்தல் .
மே 19, 2009 at 5:46 மு.பகல்
நிறைய தகவல்களுடன் பதிவு அருமை.
நல்ல நினைவு கூறல்.
வாழ்த்துகள்.
பல்லாண்டு வாழ்க…வுடன் நிற்கிறது..
அந்த பக்கமும் கொஞ்சம் வாருமய்யா..
மே 19, 2009 at 8:37 மு.பகல்
லக்ஷ்மியின் எழுத்துக்கள் மனதில் ஆழப்பதிந்தவைகள். பவானியில் ஆரம்பித்து விகடனில் வந்த எல்லா லக்ஷ்மியின் தொடரகளையு்ம் கிராமத்தில் யாவருக்கும் படித்துக் காட்ட வேண்டியது என் வேலை.சந்திரா B.A.L.T. டாகடர் ஸுந்தரவதநம், மனதில் மறக்க முடியவில்லை.திரும்பப் படிக்க வேண்டும் போலுள்ளது.
மே 20, 2009 at 5:51 மு.பகல்
மலர், சொல்லுகிறேன், சூர்யா,
லக்ஷ்மிக்கு இன்னும் இத்தனை விசிறிகள் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை எல்லாரும் மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைத்தேன்! உங்களுக்கு பிடித்த நாவல் எது என்று எழுதுங்களேன்!
மே 20, 2009 at 12:23 பிற்பகல்
எதைச்சொல்வது, எதை விடுவது. கிடைத்தால் எல்லாமே பொக்கிஷம்.நினைவலைகள்.ஞாபகம்வருதே ஞாபகம் வருதே.அவ்வளவுதான். நன்றி.
மே 20, 2009 at 4:41 பிற்பகல்
சொல்லுகிறேன்,
இப்படி சொன்னால் விட முடியாது.
உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்களேன்!
மே 24, 2009 at 8:26 மு.பகல்
You Are Posting Really Great Articles… Keep It Up…
We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல…
- நம் குரல்
மே 25, 2009 at 6:37 மு.பகல்
அண்மையில் “லக்ஷ்மி”யின் சகோதரர் திரு.
ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும்
பேசினேன்.. ‘லக்ஷ்மி”யின் வாரிசுகள் தமிழ் நாடு
அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்து
விட்டதாகத் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 26, 2009 at 11:23 மு.பகல்
i want the famous writter Dr.S.Thiriburasundari avarkalin story books please
அக்டோபர் 6, 2009 at 1:09 மு.பகல்
Ms. Vidya
Lakshmi’s books are available at the following address:
Poonkodi Pathippagam:
14, Chithiraikkulam West Street
Mylapore, Chennai 600004
(phone: 24643074)
ஜூலை 9, 2010 at 5:54 மு.பகல்
நான் சிறு வயதிலிருந்தே லக்ஷ்மி அவர்களின் படைப்புகளை விரும்பி வாசித்திருக்கிறேன் .குறிப்பாக மிதிலா விலாஸ் ,பெண் மனம் போன்ற நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்தன அவர் ஒரு பெண்ணானதால் பெண் மனதையும் மெல்லிய உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார் .நடுவில் பல வருடங்கள் எழுதவதை நிறுத்திவிட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுதத் தொடங்கினார் .அவரின் படைப்புகள் வெளி வந்த சமயத்தில் பலராலும் விரும்பி . படிக்கப்பட்டன .அவர் சற்று மிகைப்படுத்தி எழுதி இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக விளங்கின .இன்றும் விரும்பிப் படிக்கலாம் .
பெரும்பாலான கதைகளில் பெண்கள் எண்ணற்ற இன்னல்களை சமாளித்து போராடி இறுதியில் சுகம் அடைவார்கள்
December 7, 2010 at 9:25 பிற்பகல்
லக்ஷ்மியின் படைப்புகள் பலவற்றைப் படித்திருந்தாலும் அத்தை நதிமூலம் பெண்மனம் போன்றவை மறக்கமுடியாதவை. அவரைப்பற்றி எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அவரின் எழுத்துக்கள் காத்திரமானவை என்பதை யாரும் மறுக்கமுடியாது.
December 7, 2010 at 10:47 பிற்பகல்
என்னங்க செல்வி, நான்தான் பதிவிலேயே ஒரு பிற்சேர்க்கை போட்டு என் கருத்தில் லக்ஷ்மியின் படைப்புகள் காத்திரம் இல்லாதவை என்று சொல்லி இருக்கிறேனே!
December 8, 2010 at 8:37 மு.பகல்
அதுதாங்க RV, அதை ஏற்றுக்கொள்ள முடியாததால்தான் அந்தவரியை சேர்த்துக்கொண்டிருக்கிறேன். சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களைக் கொண்ட நாவல்கள், அழகாக கதை சொல்லும் விதம், பல ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருப்பவர் (தமிழ்நாடு தாண்டியும்), தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரின் நாவலுக்கென்று ஓர் இடம் இவை தவிர என்ன வேண்டும் அவரின் நாவல்கள் காத்திரமானவை என்று சொல்ல. எனக்குப் புரிகிறது. நீங்கள் எங்கள் மூலம் அவரின் தனித்துவத்தை வெளிக்கொணர்வதற்காகவே பிற்சேர்க்கை சேர்த்துள்ளீர்கள் என்பது. நான் சொல்வது சரிதானே.
அவரின் காலத்தில் பெண்களுக்கு அவ்வாறான பிரச்சனைகள் அதிகமாக இருந்தது. அதை எழுதினார். இன்று இருந்திருந்தால் சிலவேளைகளில் ஆண்கள் அநுபவிக்கும் சில இன்னல்களையும் எழுதியிருப்பார். பவளமல்லி, கடைசி வரை, ஸ்ரீமதி மைதிலி, கழுத்தில் விழுந்த மாலை போன்ற நாவல்களும் படித்திருக்கிறேன்.எல்லாமே தரமானவை.
லக்ஷ்மி அவர்களின் எழுத்துக்கள் மனதை நெகிழவைப்பவை சிந்திக்கவைத்து மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டுபவை பண்பாட்டுக்கு ஊறுதராதவை.
நான் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு படித்ததை வைத்துத்தான் சொன்னேன். இப்போது சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இல்லாவிடில் ஆதாரங்களுடன் அவரது நாவல்களின் காத்திரத்தை விளக்கமுடியும். ஆனாலும் இப்படியாவது சொல்வதற்கு சந்தர்ப்பம் அளித்தமைக்கு உங்களுக்கு நன்றிகள். மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
December 10, 2010 at 4:15 மு.பகல்
செல்வி, லக்ஷ்மியைப் பொறுத்த வரை நமக்குள் இசைவில்லை என்றாலும் பொறுமையாக பதில் எழுதியதற்கு நன்றி!
April 2, 2011 at 6:13 பிற்பகல்
[...] லக்ஷ்மி, பெண் மனம், இருவர் உள்ளம் [...]
மே 1, 2011 at 7:45 பிற்பகல்
[...] லக்ஷ்மி ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளார். அவரும் ஒரு சிம்பிள் ஃபார்முலாவை பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். ஆனால் அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எழுத்தாளர் இல்லை. அவர் எழுதிய மிக சிறந்த நாவல்களாக கருதப்படும் மிதிலா விலாஸ், பெண் மனம் போன்ற அத்தனையும் என் கண்ணோட்டத்தில் வெறும் fluff. அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!) [...]
மே 11, 2011 at 10:08 மு.பகல்
நண்பர் RV
பின் 70s இல் வெளி வந்த லக்ஷமி கதைகளில் “உப்புமாவை மிடறி விழுங்கினாள்” என்ற வரிகள் அடிக்கடி வரும் . நானும் cupertino வில் உள்ள cousin பப்புவும் வாராவாரம் அந்த வரிகள் வருகிறதா என்று விளையாட்டாக பார்போம்.பழைய ஞாபகத்தை கிளறி விட்டமைக்கு நன்றி.
ராஜு-துபாய்
நவம்பர் 24, 2011 at 4:35 பிற்பகல்
lakshmi is my favorite author, oru kaveriya pola is an excellent novel.
December 15, 2011 at 3:41 பிற்பகல்
நான் சிறு வயதிலிருந்தே லக்ஷ்மி அவர்களின் படைப்புகளை விரும்பி வாசித்திருக்கிறேன் .குறிப்பாக மிதிலா விலாஸ் ,பெண் மனம் போன்ற நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்தன அவர் ஒரு பெண்ணானதால் பெண் மனதையும் மெல்லிய உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார் .நடுவில் பல வருடங்கள் எழுதவதை நிறுத்திவிட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுதத் தொடங்கினார் .அவரின் படைப்புகள் வெளி வந்த சமயத்தில் பலராலும் விரும்பி . படிக்கப்பட்டன .அவர் சற்று மிகைப்படுத்தி எழுதி இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக விளங்கின .இன்றும் விரும்பிப் படிக்கலாம் .
பெரும்பாலான கதைகளில் பெண்கள் எண்ணற்ற இன்னல்களை சமாளித்து போராடி இறுதியில் சுகம் அடைவார்கள்
December 15, 2011 at 3:44 பிற்பகல்
arumaiyana eluthaalar. en paatikku kan operation. padikka mudiyathu. appothu 4 m vakuppu padikkum ennai alaiththu kathaiyai vaasikka solli keetppar. appdi vaasithu kaatti enakkum kadhai padikkum aaval eerpattathu. parisum kidaithathu 5 paisaa.athu oru porkaalam.
April 22, 2012 at 4:38 பிற்பகல்
i know of lakshmi from arakku maaligai. even though i was a youngster then of about 7 or 8, i remember my mother eagerly waiting every week for its next chapter. the tamil brahmin community ‘forgot’ about lakshmi with her marriage to an african (atleast that is how it was told to me). it was only much later, that i found out, that lakshmi had indeed married a south african of tamil heritage. living in durban of apartheid south africa must have been a novel experience for an indian who had lived under the british and tasted the smell of freedom. sadly, lakshmi did not, afaik, produce any works or biograpahical experiences about her life in south africa. i remember only brief article in a vikatan deepavali malar, with lakshmi in a rickshaw of some sort.