நான் ப்ளஸ் டூ முடிக்கும்போது எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு வருமான வரம்பு இருந்தால்தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். வெறும் வாயையே மெல்லக் கூடிய கலைஞர் அடித்தது சான்ஸ் என்று “போராடினார்”. எம்ஜிஆர் நமக்கு எதற்கு வம்பு என்று என்று வருமான வரம்பை நீக்கினார். கலைஞரை விட தான்தான் பிற்படுத்தப்பட்டவர்களின் நண்பன் என்று காட்டுவதற்காக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32%இலிருந்து 50%ஆக இட ஒதுக்கீட்டை உயர்த்தினார். மொத்த இட ஒதுக்கீட்டை 50% இலிருந்து 68% சதவிகிதம் ஆக்கினார். கரெக்டாக அந்த வருஷம் ப்ளஸ் டூ முடித்த எனக்கு எஞ்சினியரிங் சீட் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் தனியார் கல்லூரிகள் கிடையாது. இட ஒதுக்கீட்டை பற்றி எனக்கு என்ன கருத்து இருந்திருக்கும் என்று நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்.

என் அதிர்ஷ்டம் அடுத்த வருஷம் ப்ளஸ் டூ பரீட்சை ரொம்ப கஷ்டம். அடுத்த வருஷம் எனக்கு வெயிட்டிங் லிஸ்டில் சீட் கிடைத்தது. ஆனால் போன ஒரு மாதத்தில் நான் ஒரு டாப் மாணவன் என்பதும் இருந்ததில் 90% பேரை விட சிறந்த மாணவன் என்றும் சந்தேகமற தெரிந்தது. என் கணக்கு ஆசிரியர் சீனியர்களிடம் எல்லாம் போய் இந்தப் பையன் ஒரு மகா அறிவாளி என்ற ரேஞ்சுக்கு புகழ்ந்தார். (எல்லாம் முதல் வருஷம் மட்டும்தான், அடுத்த வருஷத்திலிருந்து சராசரிக்கு மேற்பட்ட மாணவன், ஆனால் டாப் மாணவன் எல்லாம் இல்லை. படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டது) ஆனால் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட் – என்ன கொடுமை சரவணன் ரேஞ்சுக்கு இது என்னை யோசிக்க வைத்தது.

எனது ரூம் மேட்கள் நால்வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மூன்று பேர் கவுண்டர்கள். நான்காமவன் தங்கமணிமாறன். தி.க. பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவன். என்ன ஜாதி என்று தெரியாது. உயிர் நண்பன். ஒரே தட்டில் சாப்பிட்டிருக்கிறோம். துணி, செருப்பு, பணம் எல்லாம் அனுமதி கேட்காமல் பகிர்ந்து கொள்ளலாம். “ஏண்டா எடுத்தே” என்று திட்டினால் “போடா மயிரு” என்று சொல்லிவிட்டு போகலாம். அவன் அப்பா அரசு ஊழியர். அதனால் அவனுக்கு சீட் கிடைத்ததே தவிர ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. ஒரு வேளை ஓபன் கோட்டாவிலேயே சீட் கிடைத்ததோ என்னவோ – இப்போது நினைவில்லை.

இன்னொரு நல்ல நண்பனின் அப்பா பெரிய வியாபாரி. அப்போதே கார் எல்லாம் இருந்தது. ஆனால் அவன் “வருமானம்” ஸ்காலர்ஷிப் வாங்கவும் தகுதி உடையது. மாறனோ கஷ்டப்பட்டான். தேவை உள்ளவர்களுக்கு ஸ்காலர்ஷிப் இல்லை, ஒரு தேவையும் இல்லாதவர்கள் சுலபமாக ஸ்காலர்ஷிப் வாங்கலாம் என்ற நிலைய கண்கூடாக பார்த்தேன். இட ஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் எல்லாமே பம்மாத்து வேலை என்ற முடிவுக்கு சுலபமாக வர முடிந்தது. மாறனிடம் இந்த இரண்டு விஷயத்தையுமே வைத்து வாதிடுவேன். இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் திறமை உள்ளவர்களை அமுக்குகிறது, சரியான இடத்தில் உதவி போய் சேருவதில்லை என்று சொல்வேன். அவனாலும் ஒன்றும் சொல்ல முடியாது.

மாறனின் தி.க. தாக்கமோ, இல்லை எனக்கே தோன்றியதோ தெரியாது – பின்னால் எனக்கு இந்த கேள்விகள் தோன்றின.
1. படித்து முடித்து எங்கோ மின் வாரியத்திலோ, இல்லை பொது பணித்துறையிலோ வேலை செய்ய ப்ளஸ் டூவில் எழுபது மார்க் வாங்கினால் என்ன, எண்பது மார்க் வாங்கினால் என்ன?
2. மார்க் திறமையை முடிவு செய்ய சரியான கருவியே இல்லை – நான் வெயிட்டிங் லிஸ்டில் இருந்து வந்தவன், என் காலேஜில் மிக திறமையான மாணவன். ஆனால் ப்ளஸ் டூவில் என் மார்க் பல பிற்படுத்தப்பட்ட மாணவர்களை விட கம்மிதானே? அப்புறம் 98% வாங்கியும் நான் முற்படுத்தப்பட்டவன், எனக்கு சீட் கிடைக்கவில்லை என்று புலம்புவானேன்? 98%க்கும் 92%க்கும் உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா?
3. என் செட்டில் பிராமணர்கள் நிறைய பேர் இருந்தார்கள் – நிச்சயமாக 3% இல்லை. (3% என்றால் ஆறு பேர்தான் இருந்திருக்க வேண்டும்) ஒரு பத்து பதினைந்து % இருந்தார்கள் – அதாவது 32% ஒப்பன் கோட்டாவில் இது கிட்டத்தட்ட 40%. அப்படி என்றால் பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் சரியான வாதமே அல்ல.
4. ஒரு பையன் ரெயில்வே போர்ட்டரின் பையன். இட ஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் இல்லாமல் அவன் படித்திருக்கவே முடியாது. அவனை மாதிரி ஒரு இட ஒதுக்கீடு ஒரு 10% சதவிகிதம் பேருக்கு சரியான முறையில் போய் சேர்ந்திருக்கலாம். 68% ஒதுக்கீட்டில், 10% சரியாக பயன்பட்டது என்றால் low efficiencyதான். ஆனால் ஒரு அரசு செயல்பாட்டில் இதுவே அதிகம் efficient என்று தோன்றுகிறது.

நகர்ப்புறங்களிலிருந்து வருபவர்களுக்கு கிராமப்புற மாணவர்களை விட exposure அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், கிராமப்புறத்தார்களை விட குறைவாகத்தான் discriminationஐ அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு டபிள் அட்வான்டேஜ் ஆக இருக்கிறது. உண்மையில் கிராம மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். ஒரு ஐம்பது வருஷங்களுக்காவது தரப்பட வேண்டும்.

எல்லா பிற்படுத்தப்பட்ட ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டவை அல்ல. கவுண்டர்களை சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதி என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். வன்னியர்கள், முதலியார்கள், தேவர்கள், நாடார்கள், செட்டியார்கள் இவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களா? இவர்கள் ஆதிக்க சாதிகள்; பணக்கார சாதிகள். என் கருத்தில் தலித்களுக்கும், பழங்குடிகளுக்கும் மட்டுமே நீண்ட காலம் இட ஒதுக்கீடு தரவேண்டும். மற்றவர்களுக்கு ஒன்று இரண்டு ஜெநேரஷன்களுக்கு தரலாம். ஆனால் இது அரசியல் ரீதியாக சாத்தியம் அல்ல.

அரசியல் ரீதியாக ஒன்றுதான் சாத்தியம் – எல்லா ஜாதிகளையும் மெதுவாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் சேர்க்க வேண்டும். அதனால் பிள்ளைமார், கோனார், ரெட்டியார், நாயக்கர், யார் யார் எல்லாம் இப்போது பிற்படுத்தப்பட்ட ஜாதி லிஸ்டில் இல்லையோ அவர்கள் எல்லாரையும் சேர்க்கும் முயற்சிய நான் ஆதரிக்கிறேன். அப்புறம் இட ஒதுக்கீட்டுக்கு இரண்டு மூன்று ஜெனரேஷன்களில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்! :-))

பின் குறிப்பு: தமிழ் நாட்டில் 3%தான் பிராமணர்கள் என்பது திராவிட இயக்கங்களின் மதிப்பீடு. திராவிட இயக்கங்கள் பிராமணர்களை பற்றி உண்மைதான் பேசுவார்கள் என்று அவர்களே கூட நம்புவதில்லை. உண்மையில் எத்தனை சதவிகிதம்? யாருக்காவது தெரியுமா? பிராமண சங்கத்தின் மதிப்பீடு என்ன என்று தெரிந்தால் அதற்கும் 3%க்கும் நடுவில் ஒரு சதவிகிதத்தை தேர்ந்தெடுக்கலாம்.