ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன்

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

சேதுராமன் முடித்து வைத்துவிட்டார். ஆனால் ராஜம் கிருஷ்ணன் இப்போது புதிதாக லிஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதனால் நானே எழுதுகிறேன்.

ராஜம் கிருஷ்ணன் 1925-இல் முசிறியில் பிறந்தவர். பதினைந்து வயதில் அவருக்கு கல்யாணம் ஆயிற்று. குழந்தைகள் இல்லை. வயதான காலத்தில் கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறார் என்று அரசு செய்திக் குறிப்பின் மூலம் தெரிகிறது. இப்போது ஒரு ஓல்ட் ஏஜ் ஹோமில் இருக்கிறாராம். அரசு இவருக்கு 3 லட்சம் அளித்திருக்கிறது. Literary quantity and quality-ஐ வைத்து பார்க்கும்போது இது எனக்கு குறைவாக படுகிறது.

நான் ராஜம் கிருஷ்ணனின் புத்தகங்களை அதிகமாக படித்தவன் இல்லை. அவரது சிறப்பு தள ஆய்வு. ஒவ்வொரு புத்தகத்தையும் எழுதுவதற்கு முன்னால் கருப்பொருளை பற்றி தீவிர ஆய்வு மேற்கொள்வார். அவரை பற்றிய விக்கிபீடியா குறிப்பு அவர் பிரபல் சம்பல் கொள்ளைக்காரனான டாகு மான்சிங்கை பேட்டி கண்டு முள்ளும் மலரும் என்ற நாவலை எழுதியதையும், தூத்துக்குடி மீனவர் பற்றி எழுதிய கரிப்பு மணிகள் புத்தகத்துக்கு அவர் மேற்கொண்ட தள ஆய்வையும் குறிப்பிடுகிறது. நான் அவர் நீலகிரி தோடர் படகர் ஆகியோரை பின்புலமாக கொண்டு எழுதிய ஒரு நாவலை படித்திருக்கிறேன். இந்த மாதிரி தள ஆய்வு செய்து எழுதுபவர்கள் தமிழில் மிக குறைவு. ஆய்வு செய்வதே அபூர்வம், அப்படியே ஆய்வு செய்வதாக இருந்தாலும் ஏதாவது புத்தகத்தை reference-க்குகாக பார்ப்பார்கள், அவ்வளவுதான்.

அவர் ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்று பலரும் சொல்கிறார்கள். என் கருத்தில் அவர் பெண்ணியத்தை பற்றியும் எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். இது என்னுடைய impression, நான் அவருடைய படைப்புகளை மிக குறைவாகவே படித்திருக்கிறேன்.

அவர் மணலூர் மணியம்மை பற்றி எழுதிய பாதையில் பதிந்த அடிகள் புத்தகம் படிக்க எனக்கு மிகவும் ஆசை உண்டு, இன்னும் கை கூடவில்லை.

அவருடைய புத்தகங்களில் எஸ். ராமகிருஷ்ணன் சிபாரிசு செய்வது கரிப்பு மணிகள். முன் குறிப்பிட்ட மாதிரி இது தூத்துக்குடி மீனவர் வாழ்க்கையை பின்புலமாக கொண்டது.

ஜெயமோகன் சிபாரிசு செய்யும் அவரது புத்தகம் பாதையில் பதிந்த அடிகள். அதை பற்றி அவர் சொல்வது:

கள ஆய்வு செய்து எழுதுவது ராஜம் கிருஷ்ணனின் பாணி. அவரது பல கதைகளை மேலோட்டமான தகவல்களாக ஆக்குவது இந்த அம்சம். இவ்வம்சமே மணி அம்மாள் என்ற உண்மையான புரட்சிவாதியின் வரலாற்றை புனைவாக ஆக்கும் போது பெரிதும் கை கொடுக்கிறது.

பல விருதுகளை பெற்றவர். வேருக்கு நீர் என்ற புத்தகத்துக்கு 1973-இல் சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்திருக்கிறது. 1950-இல் நியூ யார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் அவருக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறது. 53-இல் கலைமகள் விருது, 75-இல் சோவியத் லாண்ட் விருது, 91-இல் திரு.வி.க. விருது பெற்றிருக்கிறார்.

பிரபல பதிவர் கானாபிரபு அவரிடம் எடுத்த ஒரு பதித்த பேட்டியை இங்கே காணலாம். விகடனில் வந்த பெட்டியை மறு பதிப்பு செய்திருப்பதாக கானா பிரபு தெரிவிக்கிறார், தவறை திருத்திய அவருக்கும், விகடனுக்கும் நன்றி!

மரபூர் ஜெய. சந்திரசேகரன் எடுத்த ஒரு பேட்டியை இங்கே காணலாம்.

அதிகமாக படிக்காவிட்டாலும், இவருக்கு இந்த கவுரவம் கொடுக்கப்பட வேண்டியதுதான் என்று நினைக்கிறேன். செத்த பிறகு சிலை வைப்பதை விட உயிரோடு இருக்கும்போது, தேவைப்படும் போது, பண உதவி செய்வது நல்ல விஷயம். அதற்காக அரசையும் முதலமைச்சர் கலைஞரையும் பாராட்டுகிறேன். ஆனால் கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சேதுராமனின் பின்குறிப்பு: திருமதி ராஜம் கிருஷ்ணன் “முள்ளும் மலர்ந்தது” நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும்? சம்பல் பள்ளத்தாக்குகளுக்குச் சென்று வந்த செலவுகளை அவருக்கு யார் ஈடு கட்டப் போகிறார்கள்? அரசாங்கம் இது பற்றி யோசித்து, எழுத்தாளர்களுக்குப் பல இடங்களுக்கும் போய் நிலைக்களங்களை ஆராய வசதிகள் செய்தளிப்பது நல்லது. ஒருமைப்பாட்டை வளர்க்க இதை விடச் சிறந்த மார்க்கம் வேறு ஏது? (கல்கி கி.ராஜேந்திரன் “எழுதுவது எப்படி?” என்ற கட்டுரையில் – தொகுப்பாசிரியர் மகரம் கே.ஆர்.கல்யாணராமன் -பாகம் இரண்டு -பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பு, 1979)

Advertisements