முருகுசுந்தரம்

முருகுசுந்தரம்

சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

முருகுசுந்தரத்தின் இலக்கிய பங்களிப்பை பற்றி ஒரு சிறந்த ஆய்வை இங்கே காணலாம்.

இற்றைக் கவியுலகில், ஏற்றமும் தோற்றமும், சிறப்பும், செல்வாக்கும் மிக்கவர். பீடும் பெருமிதமும் கொண்டவர். தொடக்கத்தில் பாவேந்தர் பாணி, பின் சுரதா பாங்கு, வளர்ச்சிக் காலத்தில். இப்போது தனக்கென ஒரு தனிப் பாணி உருவாக்கிக் கொண்டுள்ளார். மரபு – புதுக் கவிதைகள் இரண்டுமே இவருக்குப் பிடிக்கும், இவர் பிடியுள் அகப்படும். (தமிழ் இலக்கிய வரலாறு, விமலானந்தம் – 1987)

கவிஞர் முருகுசுந்தரம், திருச்செங்கோடு என்ற ஊரில், ஒரு நெசவாளர் குடும்பத்தில், 1929ம் வருடம், டிசம்பர் மாதம் 26ம் தேதி, திரு முருகேசன், பாவாயி அம்மாள் தம்பதிகளுக்குத் தலை மகனாகப் பிறந்தார். இவரது இளவல்கள் – முனைவர் முருகுரத்தினம் (ஓய்வு பெற்ற முது நிலைப் பேராசிரியர் -மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்) — டாக்டர் மு.இளங்கோவன் (ஓய்வு பெற்ற சென்னை அரசினர் மருத்துவக் கல்லூரி E.N.T. பேராசிரியர்)

ஒரு திண்ணைப் பள்ளியில் சுப்பராயப் பிள்ளையிடம் தொடக்கக் கல்வி – தந்தை முருகேசன் வருவாய்த் துறையிற் பணியாற்றிவராதலால், பணி நிமித்தம், திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம், இடைப்பாடி ஆகிய ஊர்களில் கல்வி பயின்றார். பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்காக, மேட்டுர் அணைக்கும் சென்றார். கவிஞரின் தந்தை சுயமரியாதைக்காரர் – இதன் தாக்கம் இளமையிலேயே குடியரசு, திராவிட நாடு ஆகிய பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கியதுடனல்லாமல், அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோருடைய மேடைப் பேச்சுக்களால் பெரிதும் கவரப்பட்டு, தீவிர திராவிடக் கழகப் பற்றாளராகவும் மாறினார். மேட்டூர் அணையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முடிந்ததும், சேலம் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக் கழக வித்துவான், எம்.ஏ (தமிழ் இலக்கியம்), ஆகிய பட்டங்களைத் தனித் தேர்வராகப் படித்து வெற்றி பெற்றார். பின்னர் சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1949ம் ஆண்டு சிவகாமி அம்மையாரை மணமுடித்தார். இவரது மகள் வனிதா அம்பலவாணன், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் (நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருப்பது அவர் எழுதியளித்த வாழ்க்கைக் குறிப்புகளே!!) — மகன் பாவேந்தன் சேலத்தில் மருத்துவராகப் பணி புரிகிறார்.

தனது முப்பத்தியொன்றாவது வயதில் கவிஞ்ர் இலக்கியப் பணிகளில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது, பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளாகும். இதை நினைவு கூறும் கவிஞர், ” சைதையில் நான் படிக்கும்போது பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன், இப்பழக்கம் இரண்டாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. சென்னையில் பழகிய காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பாவேந்தர் நினைவுகள் என்ற தலைப்பில் நாட்குறிப்பாக எழுதினேன். தமிழகம் முழுதும் சென்று அவரோடு பழகிய நண்பர்களைப் பேட்டி கண்டு அவரைப் பற்றி நான்கு நூல் தொகுப்புகள் வெளியிட்டேன். இதுவே அவரது நூற்றாண்டு விழாவின் போது பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம் என்ற பெயரில் பெரு நூலாக வெளி வந்தது” என்கிறார்.

கவிஞர் முருகு பேச்சாற்றல் மிக்க நல்லாசிரியர்.. 1962ம் ஆண்டு மு.க.வின் தலைமையில் திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் பங்கேற்றவர், தொடர்ந்து நூற்றுக் கணக்கான கவியரங்கங்களில் பங்கேற்றுக் கவி பாடியுள்ளார். இவரது சமகாலக் கவிஞர்கள் – அப்துல் ரகுமான், சுரதா, வாணிதாசன், முடியரசன், தமிழன்பன், சிற்பி, புவியரசு, சேலம் தமிழ் நாடன் ஆகியோர்.

இருபது உரை நடை நூல்களையும், ஒன்பது மிகச் சிறந்த கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறுகதைகள் எழுதுவதில் நாட்டமில்லாதவர், சில நாடகங்களையும், புதினங்களையும் படைத்துள்ளார்.

கவிஞரின் படைப்புகள் வருமாறு:
கவிதை நூல்கள் : கடை திறப்பு (1969 – உலகின் தலை சிறந்த பேச்சு – கடிதங்களின் கவிதை வடிவம்) – பனித்துளிகள் (1974) – 1982ல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது) – சந்தனப் பேழை (1975 – கழக இதழ்களில் அணி செய்த மணிகளின் தொகுப்பு) – தீர்த்தக் கரையினிலே (1983) – எரி நட்சத்திரம் (1993) – வெள்ளையானை (1998)

இளைஞர் இலக்கியம் – பாட்டும் கதையும் (1965) – அண்ணல் இயேசு (1985) – பாரதி பிறந்தார் (1993)

உரைநடை நூல்கள் – மறத்தகை மகளிர் (1956) – பாரும் போரும் (1958) – வள்ளுவர் வழியில் காந்தியம் (1960) – மானமாட்சி (1962) – காந்தியின் வாழ்க்கையிலே (1963) – கென்னடி வீர வரலாறு (1965) – தமிழகத்தில் குறிஞ்சி வளம் (1964) – நாட்டுக்கொரு நல்லவர் (1966) – பாவேந்தர் நினைவுகள் (1979) – அரும்புகள், மொட்டுகள், மலர்கள் (1981) – குயில் கூவிக் கொண்டிருக்கும் ( (1985) – புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் (1985) – மலரும் மஞ்சமும் (1985) – பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம் (1990) – புகழ் பெற்ற புதுக் கவிஞர்கள் (1993) – சுரதா ஒரு ஒப்பாய்வு ( 1999) – பாவேந்தர் படைப்பில் அங்கதம் (2001) – முருகுசுந்தரம் கவிதைகள் (2003)  – பாவேந்தர் ( 2007 – monographs)

பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் – முக்கியமாக 1976ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது. 1994 – ஈரோடு ஜேசிஸ் மன்றத்தால் OUTSTANDING CITIZEN விருது. 1990ல் தமிழக அரசின் பாரதிதாசன் விருது.

ஓய்வுக்குப் பின்னர் சேலம் தமிழ்ச் சங்கப் பொறுப்பில் இருந்தார். சொற்பொழிவு,கவியரங்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றதுடன்,கவிதை கட்டுரை, மானிடவியல் பற்றிய ஆய்வுகள் செய்து வந்தார். 2007ம் வருடம் ஜனவரி 12ம் தேதி, தம் பூத உடல் நீக்கிப் புகழுடம்பெய்தினார்.

தகவல் ஆதாரம்:
1. முனைவர் வனிதா அம்பலவாணன் எழுதியுள்ள ‘ கவிஞர் முருகு சுந்தரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
2. மது ச.விமலானந்தம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு 1987 பதிப்பு
3. காலச்சுவடு வலைத்தளக் கட்டுரை
4. புகைப்படம் நன்றி – முனைவர் வனிதா அம்பலவாணன்

ஆர்வி: எனக்கும் கவிதைக்கும் காத தூரம். கவிதைகளை பற்றி நான் நல்லபடியாக சொன்னால்தான் அதிசயம். ஆனால் பாரதிதாசனை பற்றி இவர் எழுதி இருப்பவை முக்கியமான ஆவணங்கள் என்று தோன்றுகிறது. பாரதிதாசனின் தாக்கம் இன்று தமிழ்நாட்டில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது தாக்கம் இருந்த காலம் ஒரு முக்கியமான கால கட்டம். அதற்காகவேனும் இவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்கியது சரி என்றுதான் தோன்றுகிறது.