சுஜாதா கூறுகிறார்……

தேவன் அறக்கட்டளையினர் எதிர்பாராத ஒரு காலையில் என்னை விளித்து இந்த வருஷம் தேவன் நினைவாக உங்களை கௌரவிக்க விரும்புகிறோம்,  சம்மதமா’  எனக் கேட்டனர்.  எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் ?  என்று வினவியபோது  தற்கால எழுத்தாளர்களில் நீங்கள் ஒருவர்தான் இன்னும் தேவனை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,  என்று சாருகேசி சொன்ன காரணத்துடன்,  முழுவதும் சம்மதமில்லை எனினும் தேவன் நினைவாக ஒரு பாராட்டைப் பெறுவது எனக்குச் சம்மதமே.

மாணவப் பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் தேவன் முக்கியமானவர்.  அவருடைய ஸ்ரீமான் சுதர்சனம் ஆனந்த விகடனில் தொடர் கதையாக வந்தபோது ஏகப்பட்ட பணமுடையால் அலுவலகத்தில் பணம் கையாடிவிட்டு எப்போது மாட்டிக் கொள்வோமோ என்கிற பரிதாபத்துடன் நகைச்சுவையையும் கலந்து தரும் அவருடைய நடையின் எளிமையையும் சரளத்தையும் வியந்திருக்கிறேன்.  இறுதியில் ஆபீசில் தீ விபத்தில் வவுச்சர்கள் எல்லாம் எரிந்துவிட தண்டனையிலிருந்து சுதர்சன் தப்பித்தான் என்று நாம் பெருமூச்சு விடும்போது முதலாளிக்கு அவன் பணம் எடுத்தது முதலிலிருந்தே தெரியும் என்று ஒரு அதிர்ச்சி தந்து முடிப்பார்.

தேவன் ஒரு கால கட்டத்தில் வெகுஜன எழுத்துக்கு முக்கியமான முன்னோடி.  கல்கி அளவுக்கு அவருடைய பலதிறமை இருந்திருக்கிறது.  அவரும் கல்கியைப் போல ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளைவிட்டு  வெளியே வந்து தனியே ஒரு பத்திரிகை துவங்கியிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.

இந்தக் காலத்து எழுத்தாளர்களுக்கு தேவன் எழுத்துக்கு ஒரு அறிமுகம் செய்ய என் பட்டியலில் ஸ்ரீமான் சுதர்சனம்,  மிஸ்டர் வேதாந்தம்,  ஜஸ்டிஸ் ஜகந்நாதன்,  சின்னக் கண்ணன் கதைகள், ராஜத்தின் மனோரதம்,  துப்பறியும் சாம்புவின் சில கதைகள்,  கோமதியின் காதலன்,  ஆரம்ப நாட்களில் அவர் ஆனந்தவிகடன் தீபாவளி மலர்களில் எழுதிய மல்லாரி ராவ் கதைகள் முக்கியம்.  தேவன் அவர்களை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன்.  எம்.ஐ.டியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் தமிழ்ச் சங்கத்தின் கூட்டத்திற்கு வந்திருந்தார்.  என்னை அறிமுக உரை பேச வைத்தார்கள்.  சுத்தத் தமிழில் அவையோர்களே, மாணவப் பெருந்தகைகளே என்று ஆரம்பித்தபோது ‘இந்தப் பையன் ஏன் இப்படி கஷ்டப்படறான் ? தினப்படி உங்க ஹாஸ்டல்ல பேசறமாதிரி பேசிட்டுப் போயேன்’  என்றார்.  கேள்வி நேரத்தில் சின்னக் கண்ணன் பற்றி ஒருவர் கேட்டபோது தனக்குக் குழந்தையே இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.  பிற்காலத்தில் தேவன் அதிகம் பிரபலமாகாததற்குக் காரணம் அவர் சீக்கிரமே இறந்த பின் பல வருடங்கள் அவர் நூல்கள் புத்தகமாக வெளிவராததுதான்.  இப்போது அறக்கட்டளையினர் அனைத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இளம் தலைமுறையினருக்கு தேவன் ஒரு புதிய அறிமுகமாகக் கிடைக்கட்டும்.  நூற்றாண்டின் இறுதியில் அவர் கதைகள் முழுதும் தமிழ் தகவல் தளத்தில் உள்ளிடப்பட்டு செவ்விலக்கியமாகக் கருதப்படும்போது நகைச்சுவை வறண்டுவிட்ட நாட்களில்  வுட்ஹவுசுக்கு  ஈடாக தமிழில் நகைச்சுவை எழுதியவர் என்கிற தகுதியில் இலக்கிய வரலாற்றில் அவருக்கு இடம் நிச்சயம் உண்டு.  மற்றொரு தேவன் வருவாரா என்று காத்திருப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:
எழுத்தாளர் கடுகு என்கிற அகஸ்தியன் எழுத்தாளர் தேவன் பற்றி

வி. திவாகர்  

வே.சபாநாயகம்   ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்….(1)’தேவன்’