இந்த மூன்று பேரைப் பற்றியும் சமீபத்தில் படித்தேன். படிக்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது. டிராஃபிக் ராமசாமியின் தைரியம், சாரதியின் சேவை மனப்பான்மை, அர்விந்த் கெஜ்ரிவாலின் புதிய தீர்வுகள் எல்லாமே inspiring விஷயங்கள்.

கெஜ்ரிவால் Right to Information Act வருவதில் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார். மக்சேசே விருது பெற்றவர். கரக்பூரில் படித்தவர் என்பது இன்னும் கொஞ்சம் சந்தோசம். நானும் அங்கே எம்.டெக் “படித்தேன்”.

சாரதி ஆலத்தூரில் உதவும் நண்பர்கள் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்த தானம், கம்ப்யூட்டர், தையல் பயிற்சிகள், மருத்துவமனை கட்டுதல் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். கிராமம் மணல் அள்ளுதல், சூளைப் புகை ஆகியவற்றால் பிரச்சினைக்குள்ளானபோது போராடி தன் பொது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.

டிராஃபிக் ராமசாமியைப் பற்றி விகடனில் வந்திருந்தது. அதை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, விகடன்!

ஆள், அம்பு, சேனை தேவையே இல்லை. மனதில் தைரியம் இருந்தால் எவரையும் தனி ஆளாகவே எதிர்க்கலாம் என்கிற தனி மனித ராணுவம் டிராஃபிக் ராமசாமி. பொதுநல வழக்குகளால் பொதுமக்கள் நலன் காக்கும் நீதிமான்!

”ராஜாஜி அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரா இருந்த வெங்கடசாமி நாயுடுவின் தனிச் செயலாளரா இருந்தேன். ஒருநாள் என்னையும் எனது தம்பியையும் அழைத்து ஆசி வழங்கினார் ராஜாஜி. அவரது கையில் வைத்திருந்த ராமாயணத்தை என் தம்பியிடம் கொடுத்தார். மகாபாரதத்தை என்னிடம் கொடுத்தார். என் கண்ணைப் பார்த்தார். ‘உன்னைப் பார்த்தா பிற்காலத்துல போல்டா வருவேன்னு தெரியுது. உன் மனதில் எது சரின்னு படுதோ, அதைத் தைரியமாப் பண்ணு. மற்றவங்க என்ன சொல்வாங்கன்னு பயப்படாதே. உன் மனசாட்சிக்கு சரின்னுபட்டா, யாரையும் துணிச்சலா எதிர்த்துப் பேசு. இதுதான் என்னோட அறிவுரை!’ன்னார்.

சிறு வயதில் அப்படி ஒரு பெரியவர் சொன்னது என் மனசில் தங்கிருச்சு. அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்னதா பகவத் கீதையில் வரும், ‘எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்க வல்லவனே சூரத்தன்மை உடைய வனாகிறான். அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. வீரத்துடன் எதிர்த்து நின்று அடி பட்டுச் சாவதே மேல்’னு வரும். இதுதான் 76 வயசிலேயும் என்னை எனர்ஜியோடு வெச்சிருக்கு.

சாதாரணமா ஆரம்பிச்ச கலாட்டா இவ்வளவு பெரிசாகும்னு நினைக்கலை. அப்போ எனக்கு 15 வயசு இருக்கும். 14 கிலோ அரிசி மூட்டையைத் தூக்கிக்கிட்டுப் போனேன். கோட்டா சிஸ்டம் இருந்த காலம் இது. ‘ஒரே நேரத்துல 14 கிலோ கொண்டுபோகக் கூடாது’ன்னு தாசில்தார் தடுத்தார். ‘அப்படியா, வெச்சுக்கோங்க. ஆனா, உங்களையே கொண்டு வந்து என் வீட்டுல கொடுக்க வெப்பேன்’னு சொன்னேன். புகார்களைத் தட்டினேன். ஒருநாள் காலையில் எங்க வீட்டைத் தேடி வந்து அவரே அரிசியைக் குடுத்துட்டுப் போனார்.

பச்சையப்பன் கல்லூரியில் படிச்சேன். பின்னி மில்லில் அலுவலக உதவியாளராச் சேர்ந்து உயர் அதிகாரி ஆனேன். மில் பிரச்னை வந்த பிறகு, ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் சம்பளம் குடுத்தாங்க. பிறகு அதையும் நிறுத்திட்டாங்க. அலுவலக வேலையில் இருந்த எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. சம்பளம் வந்தது. ஆனா, தொழிலாளர்கள் நிலைமையைப் பார்த்து ‘இங்க வேலை பார்க்கணுமா’ன்னு கவலைப்பட்டு வெளியேறிட்டேன்.

ஊர்க் காவல் படையில் சேர்ந்தேன். அதுக்குத் தலைவரா இருந்தவர் பிரபல வக்கீல் கோவிந்த சாமிநாதன். ‘கௌரவம்’ படத்தில் சிவாஜிக்கு முடி வந்து விழுமே, அது இவரைப் பார்த்துவெச்சதுதான். அந்தக் காலத்தில் நாங்கதான் போலீஸ்காரங்க ஒழுங்கா வேலை பார்க்கிறாங்களான்னு கண்காணிப்போம். போலீஸ் பீட் புக்கைச் சரி பார்த்து கையெழுத்துப் போடுவோம். ரெண்டு ஸ்டார்கள் வாங்கி கூடுதல் சிறப்பு கமாண்டரா ஆனேன். வாகனங்கள் அதிகமாக ஆரம்பிச்ச காலம் அது. யாரெல்லாம் விதிமுறைகளை மீறுறாங்களோ, அவங்களைப் பற்றி புகார் சொல்வது, மேலிடத்துக்கு எழுதிப் போடுவது, தட்டிக் கேட்பதுன்னு கிளம்பினேன். பொய்ப் புகார் அடிப்படையில் கைது செய்து என்னை அடிச்சாங்க. இதை எல்லாம் எதிர்பார்த்துத்தானே இறங்கினேன்! போடப்பட்டது பொய் வழக்குன்னு நீதிமன்றத்தில் நிரூபிச்சு வெளியே வந்தேன். தவறுகளைத் தட்டிக் கேட்பவனுக்கு நீதிமன்றம் பக்கபலமா இருக்கும்னு தெரிஞ்சது.

நான் போட்ட வழக்குகள், தட்டிக்கேட்ட அநியாயங்கள், வாதாடிப் பெற்ற உரிமைகள்னு கணக்குப் பார்த்தா, எண்ண முடியாது. சென்னை உயர்நீதி மன்றத்தைச் சுற்றியுள்ள சாலையை ஒரு வழிப்பாதையா ஆக்கினாங்க. இதனால் குழப்பம்தான் வரும்னு கண்டிச்சேன். யாரும் கேட்கலை. எத்தனையோ பேர் விபத்தில் இறந்ததுதான் மிச்சம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த போலீஸ் அதிகாரியின் உறவினரே பலியானார். இந்த வழக்குக்காக இரண்டு வருஷம் வாதாடினேன். அதே மாதிரி நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி மூணு மேம்பாலங்கள் கட்டத் திட்டமிட்டாங்க. அதையும் நிறுத்தினேன். ‘கொலை பண்ணிடுவோம்’னு மிரட்டினாங்க. சென்னையில் பல விபத்துகளுக்கு மீன்பாடி வண்டிகள்தான் காரணம். லைசென்ஸ் இல்லாத புல்லட் இன்ஜினைப் பொறுத்தி, கண்மண் தெரியாம ஓட்டியதால் எத்தனையோ உயிர்களை இழந்தோம். அதனால் பாதிக்கப்பட்ட ஒருவன் என்னைக் கத்தியால் குத்தினான். அப்போதான் நீதிமன்றம் என் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக்கிட்டது. ஒரு ஹெட்கான்ஸ்டபிள், மூணு கான்ஸ்டபிள் பாதுகாப்பு என் வீட்டுக்கும் எனக்கு ரெண்டு கன்மேன் பாதுகாப்பும் கொடுத்தாங்க. காலப்போக்கில் வீட்டுக்குத் தரப்பட்ட பாதுகாப்பு வேண்டாம்னு நானே மறுத்துட்டேன்.

என் வீட்ல பயப்பட்டாங்க. ‘உங்களுக்கு எதுக்கு இந்த ஊர் வேலையெல்லாம்?’னு என் மனைவியும் மகளும் பயந்தாங்க. நான் எனக்குன்னு ஒரு ரூமை வாடகைக்குப் பிடிச்சு, தனியே வந்து ஆறு வருஷம் ஆச்சு.

கண்ணு முன்னால் நடக்கிற தப்பைப் பார்த்துட்டு, என்னால் கடந்து போக முடியாது. தப்புன்னு அதிகாலையில் நினைச்சா, மத்தியானத்துக்குள் எதிர்ப்பைக் காட்டியாகணும். பணத்துக்கு மயங்கியிருந்தா, கோடீஸ்வர ராமசாமியா உட்கார்ந்திருக்கலாம்.

தி.நகர்ல எந்த விதிமுறைகளையும் பின்பற்றாம எத்தனையோ மெகா மாளிகைகள் எழும்பி வருது. இதை முறைப்படுத்தணும்னு போராட ஆரம்பிச்சப்போ, என்னை விலை பேசினாங்க. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 10 லட்சம் ரூபா வரை தருவதா ஒரு வழக்கில் சொன்னாங்க. பணம், பதவிக்கு மயங்கி இருந்தா, இப்போ உங்கள் முன்னால் பேசியிருக்க முடியுமா?

காலையில் ரெண்டு இட்லி, மத்தியானமும் ராத்திரியும் மோர், பசிச்சா ரெண்டு பிஸ்கட் அல்லது வாழைப்பழம். இதுதான் 40 வருஷமா என் சாப்பாடு. இப்படிப்பட்டவனை யார் என்ன செய்துட முடியும்? தேவைகளைக் குறைச்சுக்கிட்டே போனா, பயமும் குறையும்.

ஏன் பயப்படணும்? தவறு செய்தவன் தைரியமா இருக்கான். கைதாகிப் போறப்போ, கையைக் காட்டி நிமிர்ந்து போறான். ஆனா, எந்தப் பாவமும் செய்யாத அப்பாவி மனுஷன் ஏன் பயந்து சாகணும்? கோழை செத்துச் செத்துப் பிழைப்பான். வீரனுக்குத்தான் மரணமே கிடையாது.

ஏப்ரல் ஒண்ணாம் தேதி பிறந்தேன். அது முட்டாள் தினம்னு எவன் சொன்னான்? என்னை ஒழிக்க நினைச்சவங்கதான் முட்டாள் ஆகியிருக்காங்க. என்னை அடிச்சிருக்கலாம், உதைச்சிருக்கலாம். ஆனா, இன்னும் நான் அப்படியேதான் இருக்கேன்.

தனி மனிதனா இந்தியாவில் இருந்து வெளியேறிய நேதாஜி, மிகப் பெரிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைத் தனது படையால் சாய்க்க முடியும்னு நினைச்சதுக்குக் காரணம், அவரது படை பலமல்ல, மன பலம்.

என்னோடு வர உங்களில் எத்தனை பேர் தயார்?”

தொக்குக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
அர்விந்த் கெஜ்ரிவாலைப் பற்றிய விக்கி குறிப்பு
அர்விந்த் கெஜ்ரிவாலைப் பற்றி இட்லிவடையில்
ஆலத்தூர் சாரதியைப் பற்றி லக்கி லுக்
டிராஃபிக் ராமசாமியை பற்றிய விக்கி குறிப்பு