ttநான் பள்ளி மாணவனாக வளர்ந்த காலத்தில் தமிழ் கட்டுரை வகுப்பில் கொடுமையான அனுபவமாக இருந்தது “மரம் தன் வரலாறு கூறுதல்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவது. என்ன எழுதிவிட முடியும் அந்த வயதில்? எழுதுவதற்கு ஒன்றுமே இல்லாதது போல் தெரியும். ஒன்றுமே எழுதாவிட்டால் ஆசிரியரிடம் பிரம்படி படவேண்டுமே, அதற்க்காகவாவது எதையாவது எழுதி வைப்போம் என்று எழுதுவோம். எல்லா மரத்திற்கும ஒரே கதை தான். “நான் செடியாக வைக்கப்ப்ட்டேன், தண்ணீர் ஊற்றப்பட்டேன். சில நாட்கள் எஜமானனின் சோம்பேரி தனத்தால் தண்ணீர் ஊற்றப்படாமல் பட்டினி போடப்பட்டு வதைக்கப் பட்டேன். வெயிலும் மழையும் என் வாழ்நாள் முழுவதும் மாற்றி மாற்றி மீண்டும் மீண்டும் என்னை தாக்கியது. இப்படி சொல்லனா துயரங்களை அனுபவித்த நான் இன்று தலை நிமிர்ந்து நிற்க்கிறேன்” என்றெல்லாம் தத்துப்பித்து என்று உளறிக்கொட்டிக் கொண்டிருப்போம். எல்லோரும் ஆலமரம் அல்லதுவாழைமரம் ஆகியவற்றை அவசர அவசரமாக தேர்வு செய்து எழுதுவோம். ஏனென்றால் அவை இரண்டு பற்றியும் மற்ற மரங்களை காட்டிலும் அதிகமாக எழுதமுடியும் என்ற ஒரு நம்பிக்கை. உதாரணமாக ஆலமரத்திற்கு விழுதுகள் உண்டு. அதில் குழந்தைகள் ஊஞ்சல் கட்டி விளையாடுவார்கள் என்று எக்ஸ்ட்ராவாக எழுதமுடியுமே! இன்னும் ஒரு சில ஞான சிகாமணிக்கள் பசு, எருமை போன்றவற்றை பற்றி நிறைய எழுதிவிட்டு இறுதியில் அப்பேற்பட்ட பசுவை என்னுடன் சேர்த்து கட்டுவார்கள் என்று எழுதி ஆசிரியரின் கோபத்தை பரீட்சித்துப் பார்ப்பார்கள். (இது நகைச்சுவை மட்டும் அன்று. உண்மையில் நடந்திருக்கிறது.) அன்று அவர்களால் சாப்பிடுவதற்க்கு கைகளை உபயோகப்படுத்தமுடியாது.

சுந்தர ராமசாமியின் ”ஒரு புளியமரத்தின் கதை”க்கும் எங்கள் பள்ளிக் கட்டுரைகளுக்கும் பல ஒளி வருடத் தூரம். 1966ல் முதல் பதிப்பு வெளி வந்தது. அப்பொழுது அது தமிழ் இலக்கிய உலகத்தை ஒரு கலக்கு கலக்கி இருக்கவேண்டும். இந்த இலக்கிய படைப்பை வாசித்து உணர்ச்சிப் வசப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களை தன் வரலாறு கூறும் கட்டுரைகளை எழுதச் சொல்லி துன்புறுத்தியிருக்கலாம் என்பது என் கணிப்பு. எல்லாம் ஒரு அனுபவம் தான். 🙂

இரண்டு சிறுதொழில் வியாபாரிகள் தங்கள் போட்டி பொறாமைகளினால் எவ்வளவு தூரம் இன மதப் பிரச்சனைகளை உருவாக்கமுடியும்? அதன் விடை தான் இந்த கதையின் மையக் கரு. அமைதியாக இருக்கும் ஊரில் குழப்பம் உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல், இயற்க்கையை அழிக்கவும் முற்படுகிறார்கள். போராடமுடியாத புளியமரம் தோற்றுவிடுகிறது. ஊரை அனாதையாக்கிவிடுகிறது. செல்லத்தாயின் தற்கொலைக்கு பிறகு புளியமரத்திற்கு தெரிந்தது தன்னுடைய கொலை. கூலி அய்யப்பன் தன் மீது பாதரச லேகியத்துடன் ஏறும் பொழுது வாயில்லாமல், கதறமுடியாமல், படபடக்க முடியாமல், மௌனமாக பரிதவிக்கிறது. யாரேனும் வந்துகாபாற்றிவிட மாட்டார்களா என்று நம்மை துடிதுடிக்கச் செய்கிறார் சுரா. அய்யப்னுக்கு கைமேல் பலன் கிடைத்தும் புளியமரம் சாவிலிருந்து தப்பிக்கமுடியாமல், அதனை எதிநோக்கி இருந்தவாறே தன் கடைசி நாள் நிழலை புளியமர ஜங்ஷனை அண்டவரும் மானிடர்களுக்கு அமைதியான சோகத்துடன் அளிக்கிறது. புற்று நோய் கண்ட மனிதர் மருத்துவர்களும், மருத்துவ உலகமும் தன்னை கைவிட்டு அனாதையாக்கிய பிறகு, தன் ஒவ்வொரு அங்கமும் ஒன்றன் பின் ஒன்றாக தன் கண்முன்னால் செயலிழந்து, வாழ்க்கையிலிருந்து தன் உடலும் உயிரும் நழுவி விழுந்துக் கொண்டிருக்கையில், கையையும் மனதையும் பிசைந்துக் கொண்டு தன்னுள் எழும் மரண ஒலத்தை அடக்கியவாறு பரிதவிப்பது போல், மிக சத்தமான மௌனத்துடன், கண்ணீர் சுரக்க வழியில்லாமல், புளியமரம் மெதுவாக இலைகளை உதிர்க்க ஆரம்பிக்கிறது.

வேப்பமூடு ஜங்ஷன் என்று இன்றும் நாகர்கோவிலில் சொல்லப்படும் இடமே புளியமர ஜங்ஷன். வேப்பமரம் ஏன் புளியமரம் ஆகியது என்று தெரியவில்லை. கதையின் வசதிக்காக – புளியமரக் குத்தகை, தோட்டிகள் கல்லெரிதல் போன்ற வசதிக்காக – சுரா மாற்றி இருக்கலாம். வேப்பம் பழம் குத்தகைக்கு போகாதே!. அப்படி போனாலும் திருட்டுத்தனமாக கல்லெறிந்து பறிக்கும் அளவிற்கு வருபவர்கள் குறைவு.

சுராவின் முதல் இலக்கிய நாவல். 58ல் சரஸ்வதி பத்திரிக்கைகாக தனது 28வ்து வயதில் புளியமரம் என்ற தலைப்பில் தொடராக எழுத ஆரம்பித்தார். சரஸ்வதி 4 அல்லது 5 பிரதிகளுடன் படுத்துக்கொண்டது. சுராவும் கிடப்பில் போட்டுவிட்டு, பின்னர் 1966ல் ஒரு முழு இலக்கிய நாவலாக உலகுக்கு அளித்தார். ஆற்றூர் ரவிவர்மா அவர்களால் மலையாளத்திலும், மீனாட்சி பூரி அவர்களால் இந்தியிலும், பெங்குவின் பதிப்பகத்தில் எஸ்.கிருஷ்ணன் அவர்களால் ஆங்கிலத்திலும்  மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. எபிரேய (Hebrew) மொழியில் ரோனிட் ரிக்கி “Sipuroshel ets Hadalarhindi” என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். ஒரு தமிழ் நாவல் முதன் முதலில் எபிரேய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்ற பெருமை ”ஒரு புளியமரத்தின் கதை”க்கு சேரும். கலாகௌமுதி மலையாள இதழில் தொடராகவும் வந்தது.