ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த புத்தகம். ஒன்றுக்கு இரண்டு காப்பி வேறு கை வசம். இன்று தூக்கம் வராமல் புரட்டினேன்.

மனிதர் ஜீனியஸ். சந்தேகமே இல்லை.

அயோவா பல்கலைகழகம் உலக எழுத்தாளர்களை ஒரு ஆறேழு மாத காலம் செமினார் மாதிரி ஏதோ ஒன்றுக்கு அழைத்திருக்கிறது. தமிழுக்கு அசோகமித்திரன் என்ற தியாகராஜன் – டகரஜான் என்று ஜப்பானிய பெண் எழுத்தாளர் கஜுகோவால் அழைக்கப்படுபவர். சைவ உணவு கிடைக்காமல், சரியாக சமைக்கவும் தெரியாமல், காப்பி (அதுவும் அமெரிக்க காப்பி), கார்ன் ஃப்ளேக்ஸ், சீரியல், பாதி வெந்த சாதம் இவற்றை வைத்து காலம் தள்ளுபவர். அவரது அனுபவங்கள்தான் இந்த கதை.

கிண்டலும் நகைச்சுவையும் புத்தகம் பூராவும் இழைந்தோடுகிறது. நாலு வரிக்கு ஒரு முறையாவது புன்னகையாவது வந்தே தீரும். ஷூவில் இருக்கும் அட்டையை எடுக்காமல் ஷூ கடித்துவிடுகிறது. யாரோ ஒரு நண்பன் வீட்டுக்கு போனால் நண்பனின் காதலியின் கணவன் இவரை தன் மனைவியின் காதலன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட வருகிறான். பெருவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு கதை எழுத திட்டம் இடுகிறார். எதியோப்பியாவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் இவரை உடும்பு பிடியாக பிடித்துக் கொள்கிறார்.

பி.ஜி. வுட்ஹவுசுக்கு இணையான நகைச்சுவை உணர்வு கொண்ட எழுத்தாளர் தமிழில் கிடையாது என்று நினைத்திருந்தேன். அவரை விட மென்மையான, subtle, மேன்மையான நகைச்சுவை.

எண்பதுகளில் என் படிப்பு என்ற பதிவில் ஒரு அசோகமித்திரன் கதையை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது இந்த நாவலின் ஒரு பகுதி என்று தெரிந்து கொண்டேன். அதிசயமான தற்செயல்!

தொடர்புடைய பிற பதிவுகள்
எண்பதுகளில் என் படிப்பு
அசோகமித்ரனின் சில கதைகள்

பின் குறிப்பு: ஒற்றன் எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இடம் பெறுகிறது. ஆனால் ஆச்சரியம், ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இல்லை.