சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

வட ஆற்காடு மாவட்டம் கடப்பேரி கிராமத்தில், 1903ம் வருடம் ஏப்ரில் 12ம் தேதி, இராகவன், முனியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இளமை முதலே காந்திய நெறியில் ஈடுபட்டவர். காந்திய இயக்கங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு, தம் மாவட்டத்தில் முன்னணியில் நின்று ஒன்பது ஆண்டுகள் சிறை சென்றவர்.

இண்டர் படித்து முடித்த பின் ஆறு மாதம் பள்ளி ஆசிரியராக இருந்து, காங்கிரசில் சேர்ந்து பொதுத் தொண்டிற்குத் தன்னை அர்ப்பணித்தவர். கனல் தெரிக்க ஆவேசமாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். இவர் மகாகவி பாரதியின் பக்தர். தமிழை உயிரினும் இனியதாகக் கொண்டவர்.

இவரது வாழ்க்கைத் துணைவியார் லீலாவதி அம்மாளும் தியாகக் குடும்பத்தில் பிறந்தவர். காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அஞ்சலையம்மாள் மகள் லீலாவதி. அஞ்சலை அம்மாள் பின்னாளில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவராம். (தன் கொள்ளுப்பாட்டி பற்றிய சுட்டியை கொடுத்த சந்தனமுல்லைக்கு நன்றி!)

ஜமதக்னியின் மகளான சாந்தி 2004-இலிருந்து தமிழ் நாடு திட்ட கமிஷன் துணைத் தலைவராக இருக்கும் நாகநாதன் அவர்களின் மனைவி. ஜமதக்னியின் மனைவி லீலாவதியின் தங்கை கல்யாணியின் மகள் மங்கையும், மங்கையின் மகள் சந்தனமுல்லையும் பல விவரங்களை கொடுத்து உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி! சந்தனமுல்லையின் தளத்தை இங்கே காணலாம். அவரே தன் பெரிய தாத்தா ஜமதக்னி பற்றி ஒரு பதிவும் எழுதி இருக்கிறார்.

ஜமதக்னி தேசபக்தர் மட்டுமல்லர். சிறந்த இலக்கிய அறிஞர். தமிழ், வடமொழி, இந்தி, ஆங்கில மொழிகளில் வல்லவர். கம்பனில் ஊறியவர். மார்க்சிய சிந்தனையாளர். கார்ல் மார்க்சின் படைப்பை மூலதனம் – மிகை மதிப்புக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் தமிழில் முதன் முதலாக மொழி பெயர்த்தவர். (இப்புத்தகம் 1998ல் பதிப்பிக்கப் பெற்றது என்று வலைச் செய்தி கூறுகிறது) கம்யூனிசத்தில் இவருக்கு ஆர்வம் வர சிறை சென்றபோது சிங்காரவேலரோடு ஏற்பட்ட பழக்கம் ஒரு முக்கிய காரணம் என்று இந்தப் பதிவில் படித்தேன். ராஜாஜி சிங்காரவேலர் பழக்கம் வேண்டாம் என்று தடுத்தும் இது நடந்ததாம்.

இந்தி மொழியில் மாகாவியமான, திரு.ஜெய சங்கர் பிரசாதின் காமாயனியைச் செந்தமிழ்க் கவிதையில் காமன் மகள் என வடித்தவர். காளிதாசனின் ரகுவம்சத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் (1969)

இவரது மற்ற நூல்கள்:
1. கனிந்த காதல்
2. தேசிய கீதம்
3. சோசலிஸ்ட் கீதங்கள்
4. பக்த விஜயம்
5. மார்க்சீயம்
6. பூமி வரலாறு
7. உயிர்களின் தோற்றம்
8. லெனின்

இவர் விரிவுரை எழுதிய நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை
2. கந்தரலங்காரம்
3. கந்தரனுபூதி
4. குமரேச சதகம்

தகவல் ஆதாரம்:
1. மது.ச.விமலானந்தம் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” 1987
2. வலைத்தளத்திலிருந்து அமுதம் ராமசாமி ஹிந்துவில் எழுதிய கட்டுரை
3. தமிழக அரசு ப்ளானிங் கமிஷன் வலைத்தளம்