பெரியார் இறந்தபோது நான் ரொம்ப சின்ன பையன். நான் வளர்ந்து வரும்போது பெரியார் ஒரு நிழலான உருவம் – அவர்தான் தி.மு.க. வின் பிதாமகர் என்று தெரியும், அவர் என்ன செய்தார் என்றெல்லாம் தெரியாது. ப்ளஸ் ஒன்னிலோ டூவிலோ அண்ணா அவரை பற்றிய எழுதிய ஒரு கட்டுரை எங்களுக்கு தமிழ் பாடம். ஏழெட்டு பக்கம் இருக்கலாம். அப்போதெல்லாம் புஸ்தகத்தை வாங்கினால் உடனே படித்துவிடுவேன். இந்த பாடத்தை படித்த பிறகும் பெரியார் என்ன செய்தார் என்று புரியவில்லை. பெரியார் சாதனையாளர், சிந்தனை சிற்பி ரேஞ்சுக்கு அண்ணா அழகு தமிழில் நிறைய எழுதி இருந்தார் – அவர் என்ன சாதனை செய்தார், அவரது சிந்தனை என்ன என்பதெல்லாம் பற்றி எதுவும் சொல்லவில்லை.

காலேஜில் எனது உயிர் நண்பன் ஒருவன் தி.க. பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவன். அவனை பார்த்துதான் பெரியார் மாற்றிய மனிதர்கள் கொஞ்சம்தான், ஆனால் அவர்களை முழுமையாக மாற்றி இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். எங்கள் இருவருக்கும் ஜாதி பற்றி ஒரே வேவ்லெங்க்த் – ஜாதி எல்லாம் சும்மா பம்மாத்து வேலை என்று நினைத்தோம். எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது, அவனுக்கு இல்லை. அவன் அம்மா பொட்டு, தாலி எதுவும் அணியாதவர். அது ஐம்பது வருஷங்களுக்கு முன் எப்படிப்பட்ட புரட்சியாக இருந்திருக்கவேண்டும்? அவன் திராவிட கழக வெளியீடுகள் பலவற்றை எனக்கு படிக்க கொடுத்தான். அதில் எனக்கு புதுமையாக ஒன்றும் இல்லை – புராணங்களை நான் விரும்பி படிப்பவன். அதில் உள்ள பல ரசாபாசமான விஷயங்களை பற்றி நானே சொந்தமாக கேள்வி கேட்டு பதிலும் கண்டுபிடித்திருந்தேன். (ராமன் வாலியை கொன்றது சரியா? – இல்லை. அகலிகைக்கு ஒரு நியாயம், சீதைக்கு ஒரு நியாயமா? தவறுதான். கிருஷ்ணன் செய்தது அயோக்யத்தனமா இல்லையா? அயோக்யத்தனம்தான். கிருஷ்ணன் அதை மஹாபாரதத்தில் ஒத்துக்கொள்கிறான். பிறகு அவர்களை எப்படி வழிபடலாம்? மதுரை வீரன் இரண்டு பேரை மணந்து சரியா? ஒரு நிஜ மனிதனை கடவுளாக்கும்போது இப்படித்தான் ஆகும்.) இட ஒதுக்கீடு சரியா? சில சமயங்களில் சரிதான் – என்னுடைய கருத்துப்படி தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அவனுக்கு வேறு கருத்து இருந்தது.

பெரியார் மணியம்மையை மணந்து சரியா? அவரது சொந்த விஷயம். கல்யாணத்தின் போது மணியம்மை பதினாறு வயது இளைஞி அல்ல – முப்பது வயதாவது ஆகி இருக்கும். அது மணியம்மா பாடு, அவர் பாடு.

எனக்கு பெரியார் ஒன்றும் சாதித்த மாதிரி தெரியவில்லை. அவருக்கு பிராமண எதிர்ப்பு ஜாதி ஒழிப்பை விட முக்கியமாக இருந்தது. சில திராவிட கழக வெளியீடுகள் பிராமணர்கள் மீண்டும் மத்திய ஆசியாவுக்கு திரும்ப வேண்டும் என்று எழுதி இருந்தன. நான் அதை பார்த்து சிரிப்பேன் – அவனுக்கும் அது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது.

நான் தமிழ் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒரு விஷயம் புரிந்து கொண்டேன். ஜாதி கண்ணோட்டம் வடக்கில் மிக அதிகம். ஆந்திராவிலும் உண்டு. எனக்கு கர்நாடகம், கேரளம் பற்றி தெரியவில்லை. தமிழ் நாட்டில் இவற்றோடு ஒப்பு நோக்கினால் குறைவுதான். படிப்பறிவு, ஓரளவு சாத்வீகமான ஜாதி கண்ணோட்டம் இவை எல்லாம் தமிழ் நாட்டில் இருந்தன. ஆனால் பெரியாரும், திராவிட இயக்கமும் இதற்கு ஒரு காரணம் என்று தோன்றுகிறது. என்னதான் பிராமண எதிர்ப்பு அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தாலும், ஜாதி இல்லை என்று சொல்லித்தான் அதை பரப்பினார்கள். அதனால்தான் இன்று தமிழ் நாட்டில் ஓரளவு ஜாதி கண்ணோட்டம் குறைவு என்று எனக்கு தோன்றுகிறது. ஹரியானாவும், பிஹாரும் மகா மோசம் இல்லையா?

பெரியார் பெரும் அறிவாளி என்று எனக்கு தோன்றவில்லை. அவரது வாழ்க்கையில் அவர் பிராமணர்களிடம் பட்ட அவமானங்கள் அவரை பிராமண எதிர்ப்பாளர்ராக மாற்றின. ஆனால் அவரிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. மனதில் பட்டதை அது மக்கள் ஒத்துக்கொள்வார்களா மாட்டார்களா என்ற பயம் இல்லாமல் சொன்னார். (கலைஞரோடு ஒப்பிட்டு பாருங்கள்) அவருடைய தாக்கம் தமிழ் நாட்டில் ஜாதி வெறியை குறைத்திருக்கிறது. அவரை போற்ற இது போதும்.