நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பதிவில் விவரம் தெரியாது என்று குறிப்பிட்டவர்களில் மு. ராகவையங்காரும் ஒருவர். ராகவையங்கார் பற்றி அவரது கொள்ளுப்பேரனான முரளிதரன் எழுதிய விக்கி குறிப்பு இங்கே. சேதுராமன் கஷ்டப்பட்டு அவரைப் பற்றி விவரங்கள் சேகரித்திருக்கிறார். அவருக்கு நன்றி! சேதுராமன் அவர்களின் guest post கீழே தொடர்கிறது.

மு. ராகவ அய்யங்கார் 1878 ஜூலை மாதம் 26 தேதி ராமநாதபுரத்தில் பிறந்தவர். தந்தையார் சதாவதானம் முத்துஸ்வாமி அய்யங்கார் என்ற தமிழ்ப் புலவர். இளமையில் ராகவ அய்யங்கார் புகழ் பெற்ற பாண்டித்துரைத் தேவரிடம் தமிழ்க் கல்வி பயின்றார்.

படிப்பிற்குப் பிறகு சில காலம் தொல்பொருளாராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டி. ஏ. கோபிநாதராவுடன் தமிழ் நாட்டின் கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார். செந்தமிழ் என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியராக சில காலமும், பின்னர் ஆசிரியராக சில காலமும் பணியாற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகம் ரெவரெண்ட் ஜே.எஸ். சாண்ட்லர் தலைமையில் “தமிழ்ப் பேரகராதி” தயாரிப்பில் 1913 முதல் தமிழ் உதவி ஆசிரியராக இருந்தார். சாண்ட்லர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இம்மாபெரும் முயற்சி, பின்னர் தலைமையேற்ற எஸ்.வையாபுரிப் பிள்ளை காலத்தில் 1936ல் தான் முடிந்தது. இவரது ஆராய்ச்சித்திறனைப் போற்றும் வகையில் இவருக்கு 1939ல் “ராவ் சாஹேப்” என்ற பட்டத்தையும் முன்னாள் அரசு அளித்துக் கௌரவித்தது.

திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில், தலைமைத் தமிழ் ஆராய்ச்சியாளராக 1944 முதல் 1951 வரை பணி புரிந்திருக்கிறார். இதற்கிடையே லயொலா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார். கலைமகள், தமிழ் நேசன் பத்திரிகைகளில் மதிப்பியல் ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

வேளிர் வரலாறு, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ஆழ்வார்கள் கால நிலை முதலான பன்னிரண்டு நூல்கள் படைத்துள்ளார். தவிரவும், நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்), திருக்கலம்பகம், விக்கிரம சோழனுலா, கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை, நிகண்டகராதி முதலான பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

செந்தமிழ், கலைமகள், தமிழர் நேசன், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி முதலான பத்திரிகைகளில் நிறையக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

1954ல் தன் மனைவியையும், இளைய மகனையும் இழந்தவர், தன் மூத்த மகனுடன் மானாமதுரையில் வாழ ஆரம்பித்தார். 1960 பிப்ரவரி இரண்டாம் தேதி மானாமதுரையிலேயே காலமானார்.

(தகவல் உபயம் – “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள்” என்ற புத்தகத்தில் எம்.எஸ்.அறிவுடைநம்பி எழுதிய கட்டுரை – புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்தது – காவ்யா வெளியீடு // வி.சுந்தரம் ஐ.ஏ.எஸ்.எழுதிய ஒரு வலைத்தளக் கட்டுரை)

ஆர்வி:
1. ராகவையங்கார் பாண்டித்துரை தேவரிடம் தமிழ் பயின்றிருக்கிறார். பாண்டித்துரை தேவரோ ராகவையங்காரின் அப்பா முத்துஸ்வாமி ஐயங்காரிடம் தமிழ் பயின்றிருக்கிறார்!
2. தமிழ் பேரகராதி தயாரிக்கும் முயற்சியில் ரெவ். ஜே.எஸ். சாண்ட்லர் சீஃப் எடிட்டர் ஆகவும் ராகவையங்கார் சீஃப் பண்டிட் ஆகவும் பணி புரிந்திருக்கின்றனர். சீஃப் பண்டிட் என்றால் என்ன என்று சரியாக புரியவில்லை.
3. ஏதோ அரசல்புரசலாக கேள்விப்பட்டதை வைத்தே இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டியவை என்றுதான் நினைத்தேன். சேதுராமன் திரட்டிய விவரங்கள் இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

தொடர்புடைய பதிவுகள்:
ராகவையங்கார் பற்றிய விக்கி குறிப்பு